பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 3, 2013

பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர்

"உதிரிப்பூ" எனும் பெயரில் ஒரு வலைப்பூவை இயக்கி வரும் திரு A.இராஜகோபாலன் அவர்கள் "மின் தமிழ்" குழுமத்தில் வெளியிட்டிருந்த ஒரு தமிழ் அறிஞருடைய வாழ்க்கை வரலாறு இது. எத்தனையோ தமிழறிஞர்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம். சிலர் குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை அதனால் இளைஞர்கள், ஏன் முதியவர்கள்கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை. இதோ ஒரு தமிழறிஞர். தமிழகம் தந்த கொடையாக வந்து தோன்றியவர்கள். இப்படி பலர் உண்டு. இப்போது இவரைத் தெரிந்து கொள்வோம்.

இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்துகொள்ள அனுமதியளித்த திரு A.இராஜகோபாலன் அவர்களுக்கு நன்றி. 
                       Courtesy: Mintamil group.


                  பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர்
சுதேசமித்திரனில் எனக்குத் துணை செய்ய நல்ல தமிழ் எழுதக்கூடிய உணர்வு பெற்ற வாலிபர் ஒருவர் தேவை என்று ஜி.சுப்பிரமணிய ஐயர் கேட்ட போது அத்தகைய ஒருவரை நான் அறிவேன் என்று கூறிபாரதியாரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் பண்டித மா. கோபாலகிருஷ்ண ஐயர். இவர் தமிழ்ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றிருந்தவர். பேராசிரியர்பத்திரிகையாளர்கவிஞர்,மொழிபெயர்ப்பாளர்நிர்வாகி என்று பன்முகத் திறமை கொண்டிருந்தவர். நல்லதமிழ்ப் ற்றாளராகவும்,தேசாபிமானியாகவும்நல்ல ஆன்மிக வாதியாகவும் வாழ்ந்து மறைந்த பெரியார்.
1878ம் ஆண்டு திருச்சி அருகே லால்குடியில்திரு மகாதேவன்,   ப்ரவர்த்த ஸ்ரீமதி தம்பதியர்க்கு மகவாகப் பிறந்தவர். அந்தக்காலத்திலேயே F.A  தேர்வில் தேறி  ஆங்கிலப் புலமை பெற்றதோடு,  தொல்காப்பியப் பாயிர விருத்தி ஆசிரியர்,சோழவந்தான் வித்வான் அ.சண்முகம் பிள்ளையிடம் தமிழையும் பழுதறக்கற்றுப் புலமை மிகப் பெற்றார்.
சுவாமி விவேகானந்தரோடு கொண்ட தொடர்பால் இராமகிருஷ்ணர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். விவேகானந்தரைப் பாம்பனில் வரவேற்றபோதுராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதியோடுகோபாலகிருஷ்ண ஐயரும் உடனிருந்ததாகத் தமது கவிக்குயில் பாரதியார் என்ற நூலில் கவியோகி சுத்தானந்த பாரதியார் குறிப்பிட்டிருக்கிறார் . விவேகானந்தர் ஆங்கிலத்தில் இயற்றிய 'Song of sanyasin  என்ற 13கவிதைகள் அடங்கிய தொகுதி முழுவதையும் கோபாலகிருஷ்ண ஐயர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதும்அது 'விவேக சிந்தாமணி' 1904 ஜூலை இதழில் வெளிவந்தது என்பதும்அறிஞர் பெ.சு. மணி அவர்கள் மூலம் தெரிய வருகின்றன.
இவரது நண்பர் மு.ரா. கந்தசாமிக் கவிராயர் 1909 ல் மதுரையில் தொடங்கிய 'வித்யா பாநுஎன்ற மாத இதழில், இவர் அதன் துணையாசிரியராகப் பணியாற்றினார். 1916 ல் மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் தலைவராயிருந்தபோது அந்த அமைப்பின் சார்பிலேயே, 'விவேகோதயம்என்னும் இதழைத் தானே தொடங்கி நடத்தினார். பெரும் தமிழறிஞர்களாகப் போற்றப்பட்ட ந.மு. வேங்கடசாமி நாட்டார்,அரசஞ்சண்முகனார் போன்றோர் எழுதிய அரிய கருத்துக்களடங்கிய கட்டுரைகளைத் தாங்கி விவேகோதயம் வெளிவந்தது. பின்னர், 1923 ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகவும்தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றிய காலத்தில் ஆரம்பித்த  'நச்சினார்க்கினியர்'என்னும் இலக்கிய இதழைத் தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து நடத்தினார்.
                             கவிதா ரசனை மிகுந்த இவர்தமிழில் கவிதை இயற்றுகிற வல்லமை பெற்றவராகவும் இருந்தார். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வருகிற பாடல்கள் சிலவற்றையும்,  ஷெல்லிடென்னிசன்,  எஸ்.டி.கொலெரிட்ஜ்அலெக்சான்டர் போப்சர் வால்டர் ஸ்காட்,  தாமஸ் க்ரே,  வில்லியம் கௌபர் போன்ற பிற ஆங்கிலக் கவிஞர்களின் பாடல்களில் தாம் பெரிதும் ரசித்தவற்றையும் தமிழில் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பொருள் சிறிதும் சிதைவுறாவண்ணம் செய்யுள் நடையிலே மொழி பெயர்த்திருப்பது வியக்கத்தக்கது.
                       வில்லியம் கௌபெர்ன் 'தி டாஸ்க்என்ற பாடலின் ஒரு பகுதியை, 'ராஜபக்தி (யதார்த்தமும் போலியும்)என்று தலைப்பிட்டு இவர் மொழிபெயர்த்திருந்தது 1907 ல் 'இந்தியா'இதழில் பிரசுரமானது. அதைப்பற்றி பாரதி, "இதை நாம் முதலில் வாசித்தவுடன் மொழிபெயர்ப்பு என்றே நினைக்கவில்லை. சாதாரணமாய் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் விசேஷமாய்ச் செய்யுள்கள், பாறைக்காட்டில் குதிரைவண்டி போவதுபோலக் கட புட என்று ஒலிக்கும். ஆனால் ஐயர் செய்திருக்கும் மொழிபெயர்ப்பானதுதெரிந்தவர்க்கன்றி மற்றவர்க்கு மொழிபெயர்ப்பெனவே தோன்றாது." "இச் செய்யுளில் விளங்கும் சொற்பொலிவும்பொருட்சிறப்பும்நடையின் தெளிவும் ஸ்ரீ ஐயரின் தமிழறிவையும்யாப்புத்திறனையும் நன்கு விளக்குகின்றன" என்று பாராட்டி எழுதி இருப்பதைபாரதி அன்பர் சீனி. விஸ்வநாதன் குறிப்பிடுகிறார்.
              சர் வால்டர் ஸ்காட் எழுதிய பாடல் ஒன்றின் இவருடைய மொழிபெயர்ப்பைப் படித்த போப் ஐயர், "ஸ்காட்டின் மூலப்பாடலை நான் அறிந்திராது போயிருப்பேனாயின்இவர் பாடலே மூலப்பாடல் என்று கருதியிருப்பேன்" என்று கூறியதாகச் சேக்கிழார் அடிப்பொடி பேரா. தி.ந. இராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.
           அறிஞர் பெ.சு மணி அவர்களின் அரிய முயற்சியால் கிடைத்த கவிதை ஒன்றின் பிரதியிலிருந்து, 1919 ல் கவி ரவீந்திரநாத் தாகூர் மதுரை வந்திருந்த போது ம.கோ அவர்கள்அவரை வாழ்த்தி வரவேற்றுக் கவிதை எழுதியிருந்ததை அறிய முடிகிறது.  புதல்வர் கடமைவிஸ்வநாதன் (அ) கடமை முரண்,அரும்பொருட்டிரட்டுசாணக்கிய சாகஸம் ஆகியவை இவர் எழுதிய  நூல்களில் சிலவாகும். அவற்றில் விஸ்வநாதன் (அ) கடமை முரண் ஒரு நாடக நூல். புதல்வர் கடமை நூலும்விஸ்வநாதன் (அ) கடமை முரண் நூலும், 1921ம் ஆண்டில் அரசால் பாடப்புத்தகங்களாக அங்கீகரிக்கப்பட்டிருந்தன. அரும்பொருட்டிரட்டின் ஒரு பகுதி தற்போது  தனி நூலாகமறுபடியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
            கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகவும்மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும்மதுரை தமிழ்ச் சங்கத்தின் பரீக்ஷாதிகாரிகளில் ஒருவராகவும் இவர் ஆற்றிய பணிகள் அளவிடற்கரியன. இத்தகைய பெருந்தகை 1927 லேயே இயற்கை எய்தியது தமிழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு.
குறிப்பு: தகவல்கள் 'அரும்பொருட்டிரட்டுநுலிலிருந்து தொகுக்கப் பட்டவை.
அ. இராஜகோபாலன்.

-- 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Maa.Ki Ra said...

தமிழுக்கு நல்ல தொண்டு! பாராட்டு! முனைவர் மா.கி.இரமணன்