பப்ளிக் ஆபீஸ் கட்டடங்கள்
புதுக்கோட்டை
தமிழகத்தில் இருந்த சமஸ்தானங்களில் முக்கியமான சமஸ்தானங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியில் இருந்த இங்கு எல்லா வளங்களும் நிரம்பியிருந்தன. சேஷையா சாஸ்திரி எனும் திவான் வடிவமைத்த நகர் அமைப்பும், நீர் நிலைகளும் மிக மேலானவைகளாகப் போற்றப்பட்டவை. நகரின் நடுவில் அரண்மனை, சுற்றிலும் ராஜவீதிகள், ஒவ்வொரு ராஜவீதிக்குப் பின்னர் வரிசையாக மற்ற வீதிகள், ஆங்காங்கே குளங்கள், ஒரு குளம் நிரம்பியதும் நீர் அடுத்த குளம் செல்வதும், பின்னர் ஒவ்வொன்றும் நிரம்பியபின் புதுக்குளம் நிரம்புவதும், அக்குள நீர் குடி நீராகப் பயன்படுவதும் இவ்வூரின் அழகு.
இந்த அருமையான புதுக்கோட்டையைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோமே! புதுக்கோட்டையின் வரலாறு தென்னகத்தின் வரலாற்றின் ஓர் அம்சமாக இருக்கிறது. மிகப் பழமையான வரலாற்றுப் பதிவுகள் கொண்ட பூமி இது. இங்கே மிகப் பழமையான கல்வெட்டுக்களும், சமணர்களின் குகைப் படுக்கைகளும், கிராமதேவதைகளுக்கான புகழ்பெற்ற ஆலயங்களும், தமிழர் பண்டிகைகளாகச் சித்திரை முதல் நாளும் கொண்டாடப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட திருமெய்யம் எனும் ஊர் வரலாற்றுப் பெருமை உடைய ஊர். பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் இவ்வூர் ஒல்லையூர் என புகழுடன் விளங்கியதாகத் தெரிகிறது. பல புலவர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள். இப்பகுதியில் உள்ள கருக்காக்குறிச்சி எனுமிடத்தில் கிடைத்த 500 ரோமானிய பொற்காசுகள் இந்த நாடு ரோமானியர்களுடன் வைத்திருந்த வியாபாரத் தொடர்பு பற்றி தெரியவருகிறது. மீமிசல், தொண்டி துறைமுகங்கள் வியாபார முகத்துவாரங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. இந்த மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை, திருக்கோகர்ணம், சித்தன்னவாசல் ஆகிய பகுதிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். இங்கு ஓடும் வெள்ளாறு சோழ நாட்டின் தென் எல்லையாகவும், பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் விளங்கியிருக்கிறது. வரலாற்றில் போரில் ஈடுபட்டிருந்த பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் அகப்பட்ட நாடாக இந்த புதுக்கோட்டை பகுதி விளங்கியிருக்கிறது.
Thirumayam
தமிழக மன்னர் பரம்பரையினரான முத்தரையர்களும், கொடும்பாளூர் வேளிர்களும் தலை சிறந்தவர்கள். அவர்கள் ஆண்ட பகுதியும் இதுதான். இங்குள்ள சித்தன்னவாசலில் பல்லவ மன்னர்கள் கால கல்வெட்டுகளும், குடுமியான்மலையில் கோச்சடையன் ரணதீரன் என்கிற சடையன் மாறன் காலத்திய கல்வெட்டுகளையும் காணலாம். பல்லவன் ராஜசிம்ஹன் காலத்தில் கொடும்பாளூரில் பல போர்கள் நடந்திருக்கின்றன. திருக்கோகர்ணம், நீர்ப்பழனி ஆகிய இடங்களிலும் பல வரலாற்றுக் கல்வெட்டுகள் இருக்கின்றன. சமண மதம் இந்தப் பகுதிகளில் 11ஆம் நூற்றாண்டு வரை கொடிகட்டிப் பறந்திருக்கிறது. பல சமண தீர்த்தங்கரர் ஆலயங்களும், கல்வெட்டுகளும் காணப் படுகின்றன. பெளத்த மதத்தின் தாக்கமும் இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கோட்டைப்பட்டணத்தில் காணலாம். கடைச்சோழர்கள் எனப்பட்ட விஜயாலயன் சந்ததியினரின் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதிகள் அவர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ஆனால் இந்த சோழ வம்சத்தின் கடைசி மன்னரான ராஜாதிராஜனின் காலத்தில் சோழர்கள் ஆட்சி மங்கத் தொடங்கியது. சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்களின் கை ஓங்கியிருந்தது. அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனாக இருந்த மாலிக்காபூர் என்பவன் தென்னகத்துக்குப் படையெடுத்து வந்தானல்லவா? அப்போது இந்தப் பகுதிகளை அவன் கபளீகரம் செய்து மதுரையில் சுல்தான் ஆட்சியைக் கொண்டு வந்தான். ராங்கியம், பனையூர் ஆகியவிடங்களில் இதற்கான குறிப்புகள் இருக்கின்றன.
டில்லி அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின் சிறிது காலம் சுமார் 75 ஆண்டுகள் தென்னகம் முஸ்லீம் ஆட்சியில் இருந்த போது புதுக்கோட்டை பகுதிகளும் தப்பவில்லை. ராஜ்யம் சின்னஞ்சிறு பகுதிகளாகச் சிதறுண்டு போயிற்று. அதன் பின்னர் விஜய நகர சாம்ராஜ்யம் தோன்றியதும் மதுரை முதலான தென்னகப் பகுதிகள் நாயக்கர் வம்சத்தாரின் ஆட்சிக்குள் வந்தது. ஹம்பி விஜய நகரத்தில் தோன்றிய சாம்ராஜ்யம் இங்கெல்லாம் ஆட்சி புரிந்ததற்கான சின்னங்கள் இப்போதும் இப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதே புதுக்கோட்டை பகுதிகள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் வம்ச ஆட்சியின் கீழ் சிறிது காலம் வந்தது. 17ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்கள் ஆட்சி புதுக்கோட்டையில் தொடங்கியது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் அரசர்கள் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்து வந்தார்கள். தொடர்ந்து இவர்கள் ஆட்சி நடந்த காலத்தில் தஞ்சையில் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து மராத்தியர் ஆட்சி வந்தது. பின்னர் 1885இல் கடைசி மராத்திய மன்னன் இரண்டாம் சிவாஜிக்குப் பிறகு டல்ஹவுசியின் நாடு அபகரிக்கும் திட்டத்தின்படி தஞ்சை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நேரடியாக வந்து சேர்ந்தது. ஆனால் புதுக்கோட்டை சுதந்திரத்துக்குப் பின் டில்லி சென்று மன்னர் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலிடம் சென்று இந்த ராஜ்யத்தை இந்திய குடியரசோடு இணைக்க ஒப்புதல் அளித்துவிட்டு வந்தார்.
மகாராஜாவின் அரசவைக் கூட்டம்
புதுக்கோட்டை தொண்டைமான்களின் பூர்வீகம் வடக்கே தொண்டைமண்டலத்தில் இருந்த திருப்பதி பகுதியாகும். விஜய நகர சாம்ராஜ்யத்தின் படைகளுடன் தெற்கே படையெடுத்து வந்த இந்த வீரர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் இருந்த கறம்பக்குடி எனும் பகுதியிலும் அம்புக்கோயில் எனும் பகுதியிலும் குடியேறினார்கள். பின்னர் அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.
இப்படியொரு மாற்றங்கள் தென் தமிழகத்தில் ஏற்பட்ட காலத்தில் இவர்கள் புதுக்கோட்டை பகுதியின் ஆட்சிக் கட்டிலில் ஏறினார்கள். தெலுங்கில் காணப்படும் "தொண்டைமான் வம்சாவளி" எனும் கவிதைத் தொகுதியில் இவர்கள் இந்திர வம்சத்தார் என்று குறிப்பிடுவதோடு, இவர்களில் முதல் மன்னன் பச்சை தொண்டைமான் என்றும் தெரிகிறது.
ஆவடிராய தொண்டைமான் என்பவர் அடுத்ததாகப் பதவிக்கு வந்திருக்கிறார். அப்போது விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட வெங்கடராயர் (1630 முதல் 1642 வரை) காலத்தில் அவருடைய உதவியுடன் இந்தத் தொண்டைமான் தனது ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார். விஜய நகர சாம்ராஜ்யம் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவெடுத்த காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானமும் தொண்டைமான்கள் தலைமையில் ஒரு பலம் பொருந்திய இந்து சாம்ராஜ்யமாக உருவாகியது. விஜய நகர ராயர்களுடனான தொடர்பால் தொண்டைமான் மன்னர்களும் தங்கள் பெயரோடு ராய எனும் சொல்லை ஏற்றுக் கொண்டனர்.
விக்டோரியா மகாராணியார் நினைவு வளைவு
ரகுனாத ராய தொண்டைமான் எனும் புதுக்கோட்டை மன்னன் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களுடனும், திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் என்பவருடனும் நட்பு பூண்டிருந்தார். திருச்சி ராஜ்யத்தின் காவலராகவும் இந்தத் தொண்டைமான் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அப்போது இராம நாதபுரத்தை ஆண்ட மறவர் மன்னர் விஜய ரகு நாத கிழவன் சேதுபதி (1673 முதல் 1710) இவர்களுக்கு நெருக்கமாக ஆனார். இவரைக் கிழவன் சேதுபதி என்றே அழைப்பர். வரலாற்றில் புகழ்மிக்க இடத்தைப் பிடித்துவிட்டவர் இந்தக் கிழவன் சேதுபதி. இவருக்கு அனேகம் மனைவியர். அப்படி இவருக்கு வாய்த்த ஒரு இளம் மனைவி காதலி நாச்சியார் என்பவர். இவர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் சகோதரி ஆவார்.
கிழவன் சேதுபதி தொண்டைமானின் சகோதரி காதலி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, வெள்ளாற்றுக்குத் தெற்கேயுள்ள நிலப்பகுதிகளை தொண்டைமான் வசம் கொடுத்தார் கிழவன் சேதுபதி. அந்தப் பகுதியைத் தான் விரிவுபடுத்தப்பட்ட புதுக்கோட்டை ராஜ்யமாக ஏற்றுக்கொண்டு தொண்டைமான் ஆட்சி நடைபெற்றது. சேதுபதிகளின் வரலாறும் தொண்டைமான் ஆட்சியும் எனும் வரலாற்று ஏடுகள் இந்தத் தகவல்களையெல்லாம் கொடுக்கின்றன. வெள்ளாறு வரலாற்றில் பதிய காரணமாக இருந்தது தொண்டமானின் ஆட்சிக்கு எல்லைக்கோடாக இந்த ஆறு அமைந்த காரணத்தால்தான் என்பதையும் அறிய முடிகிறது. சோழ நாட்டின் எல்லை குறித்த ஒரு தமிழ்ப் பாடலும் இந்த ஆற்றை சோழ மண்டலத்தின் தெற்கெல்லையாகக் குறிப்பிடுவதை நினைவு படுத்திக் கொள்ளலாம். ரகுநாதராய தொண்டைமான் இப்படித் தன்னுடைய ராஜ்யத்தை விஸ்தரித்த காலமான 1686 முதல் அவர் ஆட்சி முடிந்த 1730 வரையில் மிக மகோன்னதமான நிலையில் இந்த ராஜ்யம் இருந்திருக்கிறது.
சித்தன்ன வாசல் குகை
தொண்டைமான் ஆட்சிக்குப் புகழ் சேர்த்து ராஜ்யத்தை விரிவு படுத்திய ரகுநாத ராய தொண்டைமானின் காலத்தில் அவருடைய சகோதரர் நமன தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த குளத்தூர் எனும் பகுதிக்குத் தலைவர் ஆனார். இவருக்கு திருச்சிராப்பள்ளியை ஆண்ட நாயக்க மன்னரான ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரின் ஆசி கிடைத்தது. இவர் காலத்திலிருந்து குளத்தூர் தனி ராஜ்யமாக விளங்கி இங்கு ஆட்சி புரிந்தவர் குளத்தூர் தொண்டைமான் எனவும் அழைக்கப்பட்டார். இந்த நிலை 1750 வரை நீடித்தது. ஏனென்றால் 1750இல் இந்த குளத்தூர் பகுதி புதுக்கோட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. ரகு நாத ராய தொண்டைமான் தன்னுடைய புதுக்கோட்டையுடன் குளத்தூர் மட்டுமல்லாமல் ஆலங்குடி, திருமெய்யம் ஆகிய பகுதிகளையும் இணைத்து ஒரு பேரரசாகப் பெருமையோடு ஆட்சியைத் துவக்கினார். இந்த ஒருங்கிணைந்த பகுதிதான் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் எனப் புகழுடன் விளங்கியது.
சித்தன்னவாசல் ஓவியங்கள்
தொண்டைமான் வம்சத்தில் இரண்டாவது மன்னராக விளங்கிய (1730 முதல் 1769) விஜய ரகுனாத ராய தொண்டைமான் காலம் மிகவும் சிறந்த காலகட்டமாக இருந்திருக்கிறது. புதுக்கோட்டையை இவர் ஆண்ட காலத்தில் வடக்கே டில்லி முகலாயர்களின் ஆட்சி இந்திய நாடு முழுவதும் விஸ்தரித்திருந்தது. தெற்கே ஆண்டுவந்த நாயக்கர் மன்னர்களான செஞ்சி, தஞ்சாவூர், மதுரை, திருச்சி ஆகிய அரசர்கள் முகலாய சாம்ராஜ்யத்துக்கு ஆற்காட்டு நவாப், நிஜாம் ஆகியோர் மூலமாக கப்பம் கட்டும் சிற்றரசர்களாக ஆகினர். இவர்கள் தவிர தெற்கே இருந்த சின்னஞ்சிறு பாளையக்காரர்களும் ஆற்காட்டு நவாப் மூலம் முகலாய மன்னர்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக ஆகினர். டில்லி முகலாயர்கள் நிஜாமைத் தங்களது தென்னிந்திய பிரதி நிதியாகவும், அந்த நிஜாம் ஆற்காட்டு நவாபைத் தன் பிரதி நிதியாகவும் நியமித்தனர். ஆற்காட்டாரின் ஆளுமையில் அடங்கிய பிரதேசம் தமிழ் நாட்டின் பகுதிகள்; இவை கர்னாடகப் பிரதேசம் என வழங்கப் பட்டது. அரசியலில் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டு இந்தியாவின் கடைக்கோடிப் பிரதேசத்தில் இருந்த பாளையக்காரர்கள் முதல் பெரிய சமஸ்தானாதிபதிகள் வரை அனைவரும் டில்லி பாதுஷாவுக்குக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டதும்; ஆற்காட்டு நவாப் இவர்களது எஜமானர்கள் போலத் தங்களை நியமித்துக் கொண்டு நாட்டாமை செய்ததும் ஒரு புதிய சூழ் நிலையை இங்கு ஏற்படுத்தியது. இதன் விளைவாக தென்னக பாளையக்காரர்கள் ஆற்காட்டாருக்கு கப்பம் செலுத்த மறுத்தனர். அதன் விளைவாக ஆங்காங்கே பூசல்கள் ஏற்பட்டன. ஆற்காட்டு நவாபின் படைகள் நிஜாமினால் வலுப்படுத்தப் பட்டது. டில்லி சுல்தான் ஆதரவும், நிஜாமின் பக்க பலமும் சேர்ந்து ஆற்காட்டு நவாபின் கைகளை ஓங்கச் செய்தன. இவரும் தனது படைகளைக் கொண்டு தங்களுக்கு அடங்க மறுக்கும் சிற்றரசர்கள், பாளையக்காரர்கள் மீது போர் தொடுக்க படையெடுப்பதுமென நாட்டின் சூழ் நிலை மாறத் தொடங்கியது. இந்த சூழ் நிலையில் பற்றி எரிந்த இலங்கைக்கு நடுவில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த அசோகவனம் மட்டும் எரிதழலின் கரங்கள் தீண்டப்படாமல் பசுமையாக இருந்தது போல புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் எந்தவித சேதத்துக்கும் ஆட்படாமல் தப்பி இருந்தது.
திருமெய்யம் ஆலயம்
இப்படி ஊரை அடக்கி உலையிலிடும் தண்டல்காரனாக மாறியிருந்த ஆற்காட்டு நவாப் ஆட்சிக்கு ஒரு சவால்; வெளியில் இருந்து அல்ல. உள்ளுக்குள்ளேயே பங்காளிச் சண்டை ஏற்பட்டுவிட்டது. அதுதான் நாடறிந்த வரலாறு ஆயிற்றே! முகமது அலிக்கும் சந்தா சாகேபுக்கும் ஏற்பட்ட பூசல்தான் அது. இருவரில் யார் அரசுக்கு உரியவர் என்பதுதான் போட்டி. இதில் அன்னிய தலையீடு தங்கள் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, ஆங்கிலேயர் முகமது அலியையும், ஃபிரெஞ்சுக்காரர்கள் சந்தா சாஹேபையும் ஆதரிக்கத் தொடங்கினர். தத்தமது படைகளையும் இவர்களுக்குக் கொடுத்துத் தாங்களும் போரில் நேரிடையாக ஈடுபட்டனர். எங்கோ ஐரோப்பாவிலிருந்து வியாபாரம் செய்து பொருட்களை விற்க வந்தவர்கள் இங்கு நடக்கும் ஆட்சிக்காக புருஷர்கள் நடத்தும் போட்டியில் ஆளுக்கொரு கட்சியில் சேர்ந்து கொண்டு காய் உருட்டலானார்கள். ஓராண்டல்ல, ஈறாண்டல்ல, பல ஆண்டுகள் தென்னகத்து மண் இவர்களுடைய போரினால், உயிர் சேதமும், உடமைகள் சேதமும், விவசாய நாசமும் ஏற்படக் காரணமாயின. இப்படி நாடு முழுவதும் போரும் அமைதியுமான மாற்றங்களில் தவித்துக் கொண்டிருந்த காலத்தில் புதுக்கோட்டை மன்னர்கள் மட்டும் பிரிட்டிஷ் பக்கத்தில் உறுதியாக நிலைகொண்டிருந்தனர்; தஞ்சை மராட்டிய மன்னர்களோ இங்கும் அங்குமாக ஊசலாடிக் கொண்டிருந்தனர். தமிழர் பூமியில் ஐரோப்பிய ஆதிக்க யுத்தம் இப்படி குழுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஃப்ரென்சு அடக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆதிக்கம் தலையெடுத்தது. இரு ஐரோப்பிய ஆதிக்கச் சக்திகளுக்கிடையே நடந்த போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக புதுக்கோட்டை சமஸ்தானம் நடந்து கொண்டதற்குப் பரிசாக இனி புதுக்கோட்டை சமஸ்தானம் ஆற்காட்டு நவாபுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்குக் கப்பம் கட்ட வேண்டாம் என முடிவாகியது.
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
ஆஸ்திரேலிய மனைவியுடன்
புதுக்கோட்டை மன்னர்கள் ஆங்கிலேயர்களைத் தீவிரமாக ஆதரிக்க மற்றொரு முக்கியமான காரணமும் இருந்தது. அப்போது புதுக்கோட்டைக்கு சவாலாக விளங்கிய மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியின் அச்சுறுத்தல் இவர்களுக்கு இருந்துவந்ததும் ஒரு காரணம். விஜயரகு நாத தொண்டைமான் (1789 முதல் 1807) ஆற்காட்டு நவாபுக்கும் பிரிட்டிஷாருக்கும் ஆதரவாக விளங்கக் காரணமாக இருந்ததும் இந்த மைசூரின் அச்சுறுத்தல்தான். ஆற்காட்டாரின் நன்றி விசுவாசம் அவர்கள் புதுக்கோட்டை மன்னருக்கு "ராஜா பஹதூர்" எனும் விருதினை வழங்கிக் கெளரவித்ததிலிருந்து தெரிந்து கொள்ளலாமே! அப்போது காற்று ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக வீசிக் கொண்டிருந்தது. எதிர்க் குரல் கிளப்பிய பல பாளையக்காரர்கள் வீழ்த்தப் பட்டனர். எங்கும் ஆதரவுக் கரம் நீட்டப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் எதிர்ப்போர் யாருமின்றி தாந்தோன்றிகளாகத் திகழ்ந்தனர். 1800ஆம் ஆண்டு வாக்கில் தென்னகம் முழுவதும் ஆங்கிலேயர்களின் ஏகோபித்த ஆட்சி நிலவத் தொடங்கிவிட்டது. தஞ்சாவூரில் துளஜேந்திர ராஜாவுக்குப் பின் சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்த போதே ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷ் ஏற்றுக் கொண்டு அவரை பொம்மை ராஜாவாகத்தான் அங்கீகரித்திருந்தார்கள். ஆனால் 1855இல் தஞ்சை ராஜ்யமும் இரண்டாம் சிவாஜிக்கு வாரிசு இல்லை என்று காரணம் காட்டி முழுமையாக எடுத்துக் கொள்ளப் பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த இராம நாதபுரம் மறவர் பூமியில் ஆண்டுவந்த சேதுபதிகள் வெறும் ஜமீன் தார்களாக ஆக்கப் பட்டார்கள். ஆனால் இத்தனை புயல் அடித்தபோதும் புதுக்கோட்டையில் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது ஒரு தனி ராஜ்யமாக இயங்க அனுமதிக்கப் பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குட்பட்டதாகக்கூட கருதப் படவில்லை. தனி சமஸ்தான அந்தஸ்து புதுக்கோட்டைக்கு மட்டும் கிடைத்தது.
புதுக்கோட்டையின் புகழ்பெற்ற அம்மன் காசு
இந்த விஜயரகு நாத தொண்டைமான் காலத்தில்தான் தெற்கே பல பாளையக்காரர்களுடன் வெள்ளையர்களுக்கு மோதல் ஏற்பட்டது; குறிப்பாக பாஞ்சாலங்குறிஞ்சி கட்டபொம்மு நாயக்கர் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல். எங்கிருந்தோ வந்த அன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தன் கப்பம் கட்டவில்லை என்பதற்காக அந்தச் சின்னஞ்சிறு பாளையக்காரர் மீது கோட்டையை முற்றுகையிட்டுப் போரிட்டனர். அந்த வீரம் செறிந்த பாளையக்காரர் அங்கிருந்து தப்பி தலைமறைவானார். மீண்டும் அவர் தொண்டைமானின் ஆளுகைக்குட்பட்ட கானகப் பாதை வழியாகச் சிவகங்கை செல்ல முயன்றார். ஆங்கில ஆதிக்கத்தினர் விடுத்த வேண்டுகோளின்படி கட்டபொம்மு நாயக்கர் திருமெய்யம் அருகே தொண்டைமான் படை வீரர்களால் பிடிக்கப்பட்டு மதுரையில் இருந்த ஆங்கில கம்பெனியார் வசம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் விசாரணை என்ற பெயரால் ஒரு நாடகம் நடத்தப்பட்டு அந்த வீரன் கயத்தாறு எனுமிடத்தில் தூக்கிலிடப்பட்டார். அந்த மாவீரனின் மரணம் இந்திய சுதந்திர ஆர்வம் கொண்டவர்களால் பின்னர் போற்றிப் பாராட்டப்பட்டது. அவனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.
திருமெய்யம் குகைக் கோயில்
பின்புலத்தில் கோட்டை
கட்டபொம்மு நாயக்கரைக் கைது செய்து பிரிட்டிஷார் வசம் ஒப்படைத்த நிகழ்ச்சியானது தொண்டைமானுக்கு வரலாற்றில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்த செயலை தேசபக்தியற்ற செயலாகவும், துரோகமாகவும் சித்தரிக்கத் தொடங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு இன்னொரு பக்கமும் உண்டு. பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி ஓடிவந்த கட்டபொம்மு நாயக்கர் சிவகங்கை மருதுவிடம் செல்லத்தான் வந்தார்; செல்லும் வழியில் தொண்டைமானின் பிரதேசத்தின் காட்டு வழிப் பாதையைப் பயன்படுத்தினார். ஆனால் அவர் தொண்டைமானிடம் அடைக்கலம் என்று வந்து சேரவில்லை. நம்பி வந்தவனைப் பிடித்துக் கொடுத்தால்தான் அது நம்பிக்கைத் துரோகம்; ஆனால் தன்னிடம் அடைக்கலம் என்று வராத நிலையில் தன் ராஜ்யத்தின் எல்லையில் தங்களது நண்பர்களான பிரிட்டிஷாருக்கு எதிரானவர் வந்தபோது அவரைப் பிடித்துக் கொடுப்பது ராஜத் துரோகமோ, காட்டிக் கொடுத்தலோ அல்ல என்றும் ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. அவரவர்களுடைய நிலைக்குத் தகுந்ததுபோலத்தான் இந்த நிகழ்ச்சியை எடைபோடவேண்டுமே தவிர இன்றைய தேசிய எழுச்சியையும், பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வையே எடைக்கல்லாகக் கொண்டும் பார்க்கும்போது இது ஒரு துரோகமாகப் பட்டாலும், அன்றைய நிலையில் பிரிட்டிஷாருக்கும் புதுக்கோட்டை மன்னர்களுக்கும் இருந்த உறவில், முன்னவர்களுக்கு எதிர்களானவர்களைப் பிடித்துக் கொடுத்தால் துரோகமல்ல என்பதும் அன்றைய சூழலில் புதுக்கோட்டையின் பார்வையில் பார்ப்பவர்களுக்குத் தெரிவதில் வியப்பு ஒன்றும் இல்லை.
திருக்கோகர்ணம் அருங்காட்சியகம்
அடுத்த மன்னர் ராஜா விஜயரகுனாத ராய தொண்டைமான் (1807 முதல் 1825) பதவிக்கு வந்தபோது பதினெட்டு வயது பூர்த்தியாகததால் பிரிட்டிஷ் அரசாங்கம் அரசு நிர்வாகத்தைக் கவனிப்பதற்கென்று மேஜர் பிளாக் பர்ன் என்பவரை நியமித்தனர். இவர் ஏற்கனவே தஞ்சாவூரில் 'ரெசிடெண்ட்' எனும் பதவியில் இருந்த காரணத்தால் அங்கு அமலாகியிருந்த நிர்வாக வழிமுறைகளை இங்கும் கொண்டு வந்து நடத்தினார். அதுமட்டுமல்லாமல் தஞ்சாவூர் மன்னர்களின் மொழியான மராத்தி மொழியை புதுக்கோட்டையிலும் கொண்டு வந்து நிர்வாக மொழியாக சுமார் 75 ஆண்டுகள் வரை இருக்க வழி செய்துவிட்டார். தஞ்சையில் கையாண்ட அதே நில அளவை முறைகள், நிலவரி விதிப்பு போன்றவைகளையும் அவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அமல் செய்தார். தொண்டைமான் மன்னர்கள் நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் ஆலயத்தையொட்டி அமைந்திருந்த அரண்மனையில் வாழ்ந்திருந்தார்கள். அது பழமையானதால் புதிதாக அரண்மனையொன்றை கட்டினார். நிர்வாகத் திறமை, நகரமைப்பில் அழகு இவைகளையெல்லாம் கொண்டு புதுக்கோட்டை மிக எழில் கொஞ்சும் நகரமாக விளங்கத் தொடங்கியது. நாங்கு ராஜ வீதிகள், அவற்றுக்குப் பின்னால் வரிசையில் பல அடுக்கு அடுக்கானத் தெருக்கள். இவற்றை இணைக்கும் குறுக்குச் சாலைகள், ஆங்காங்கே நீர் நிலைகள், குடி நீர்த்தேக்கங்கள் என்று நகரம் புதுப்பொலிவுடன் திகழ்ந்தது. ஐயன்குளம், பல்லவன் குளம், ராஜா குளம் என்றெல்லாம் பெயர்களில் ஊர் முழுவதும் ஏராளமான நீர் நிலைகள் பசுமையூட்டப் பயன்பட்டன.
இவருக்குப் பின்னர் வந்த ரகுநாத தொண்டைமானுக்கு (1825 முதல் 1839) ஆங்கில ஆதிக்க அதிகாரிகளை அழைப்பது போன்று "ஹிஸ் எக்செலன்சி" என்று விருதினை ஆங்கில அரசு கொடுத்து கெளரவித்தது. 1830இல் இவர் காவிரி நதியிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குக் குடி நீர் கொண்டு வர ஏற்பாடுகளைத் தொடங்கினார். அதற்காக ஒரு புதிய வாய்க்கால் வெட்டவும் ஏற்பாடுகளைச் செய்தார்; ஆனால் அது அப்போது நிதி நெருக்கடி காரணமாக நிறைவேறவில்லை. இவருக்குப் பின் இராமச்சந்திர தொண்டைமான் பதவிக்கு வந்தார். அவரது காலம் (1839 முதல் 1886).
இந்த இராமச்சந்திர தொண்டைமானுடைய ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை என்பது தெரிகிறது. சரியான ஆட்சிமுறை, நிதி நிர்வாகம் போன்ற நல்ல ஆட்சிக்குரிய அம்சங்கள் குறைந்து காணப்பட்டன. திவான் சேஷையா சாஸ்திரி என்பவர் 1878இல் பதவியேற்றுக் கொண்டார். அவருடைய வருகைக்குப் பிறகு பற்பல முன்னேற்ற நடவடிக்கைகள் நடைபெறலாயின. இவருடைய காலத்தில்தான் புதுக்கோட்டை நகரம் புது வடிவம் பெற்றது. நேர் நேரான சாலைகள், குளங்கள், அந்தக் குளங்களுக்கு நீர் வரும் வசதியான பாதைகள், துளி நீர்கூட வீணாகாமல் சேமிக்கும் அருமையான அமைப்புகள் என்று புதுக்கோட்டை புதுவடிவம் பெற்றது. இன்றை நகரமைப்புத் திட்டங்களை அன்றே மிக அருமைகாகத் திறமையாகக் கொணர்ந்தவர் சேஷையா சாஸ்திரி. அரசாங்க அலுவலகங்களுக்காக ஒரு புதிய செந்நிற செங்கல் நிற கட்டடம் இவர் காலத்தில் எழுப்பப்பட்டது. நாட்டில் மழையின்று வறுமை தாண்டவமாடிய சமயத்தில் விவசாயிகளுக்கு வேலை கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் விதமாக புதுக்குளம் எனும் குடி நீர் குளத்தை உருவாக்கியவர் சேஷையா சாஸ்திரி. ராமச்சந்திர தொண்டைமான் பற்பல பழமை வாய்ந்த ஆலயங்களைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்வித்தார். நிர்வாகத் திறமையின்மை வெளிப்பட்ட ஆரம்ப நிலை மாறி, இவரது ஆட்சியின் கடைசிக் காலத்தில் மிகவும் பயனுள்ள பல திட்டங்களை நிர்மாணித்த பெருமையோடு முடிவடைந்தது. இவற்றுக்கெல்லாம் சேஷையா சாஸ்திரியின் அனுபவமும், திறமையும் கைகொடுத்தது என்பது மிகையல்ல.
ராஜாங்க சின்னம்
இவரையடுத்து மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886 முதல் 1928) பதவிக்கு வந்தார். இவர் வந்த காலம் இந்திய அரசியலில் பெரும் மாற்றங்க்களைக் கண்ட காலம். விக்டோரியா மகாராணியார் கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு இங்கிலாந்து மன்னரின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியாவைக் கொண்டு வந்திருந்த காலம். மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவி ஏற்றபோது அவருக்கு வயது 11. ஆட்சி நிர்வாகத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மேற்பார்வையோடு ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது.
இவர் ஐரோப்பிய யாத்திரை சென்று அயல் நாடுகளை விரிவாகக் கண்டு ஆராய்ந்து வந்தவர். இவர் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணான மேரி எஸ்மி சோரெட் ஃபிங்க் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவ்வளவு நீளமான பெயரை சுருக்கி மோலி என்று அழைத்தார்கள். இந்தத் திருமணம் 1915இல் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அந்த மகன் பெயர் என்ன தெரியுமா சிட்னி மார்த்தாண்டன். நம் மன்னருக்கும் ஒரு அயல் நாட்டு மாதுவுக்கும் பிறந்த இந்த சிட்னி மார்த்தாண்டன் பதவிக்கு வருவதற்கு பலத்த எதிர்ப்பு மக்களிடமிருந்து ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமும் இவருடைய இந்தத் திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது. ஆகையால் ராஜா பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறிவிட்டார். பிரிட்டிஷ் இளவரசர் ஒருவர் தன் காதலிக்காகப் பதவியைத் துறந்தார் அல்லவா? அதைப்போல நமது புதுக்கோட்டை இளவரசரும் பதவியைத் துறந்து பிரான்சில் குடியேறி அங்கு 1928இல் இறந்து போனார். அவர் இங்கிலாந்தில் லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் கடைசி ராஜாவாக, அந்த வரிசையில் ஒன்பதாவதாக ராஜா ராஜகோபால தொண்டைமான் (1928 முதல் 1948) பதவிக்கு வந்தார். இவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு அரசபதவி கிடைத்த பொது இவரது வயது 6. இவர் பதவியேற்ற பின் ஆட்சி நிர்வாகத்தை ஒரு நிர்வாகக் குழு கவனித்து வந்தது. அந்தக் குழுவில் இருந்த அலெக்சாண்டர் டோடென்ஹாம் என்பவர் குறிப்பிடத் தகுந்தவர். புதிய அரண்மனையின் கட்டுமான அழகு 1930இல் இவரால் எழிலூட்டப்பட்டது. கிரானைட்டால் கட்டப்பட்ட இந்த அழகு மாளிகையில்தான் இப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.
1947 - இந்தியா பிரிட்டிஷாரின் அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு. புதிய இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் அனைத்து சமஸ்தானாதிபதிகளுக்கும் தெரிவித்துக் கொண்டது, அவர்கள் சமஸ்தானம் இந்திய அரசாங்கத்தோடு இணைந்துவிட வேண்டுமென்பது. அதன்படி முதன் முதலாக ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்கள் டில்லி சென்று வல்லபாய் படேலிடம் 4-3-1948 அன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்தோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க இந்த இணைப்பு, எந்தவித கசப்போ, அச்சுறுத்தலோ இன்றி, மனப்பூர்வமாக நடந்தது. மகாராஜா ராஜகோபால தொண்டைமானின் இந்த தேசபக்தி மற்ற சுதேச சமஸ்தானங்களுக்கும் இருந்திருக்குமானால் பல கசப்பான நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் நடந்திருக்காது. இதனால்தான் புதுக்கோட்டை ராஜவம்சத்தாருக்கு இன்றுவரை மக்கள் தலை வணங்கவும், உளமாற நேசிக்கவும், அவர்களைப் போற்றி வாழ்த்தவும் காரணமாக அமைந்தது, ராஜா ராஜகோபால தொண்டைமான் அவர்களின் பெருந்தன்மை என்றால் மிகையல்ல.வாழ்க இராஜகோபால தொண்டைமான் புகழ்!
புதுக்கோட்டை பகுதிகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது அல்லவா? இது 1974 ஜனவரி 14ஆம் தேதியன்று பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாகத் தோற்றுவிக்கப்பட்டது. இதில் முன்னாள் புதுக்கோட்டை சமஸ்தானப் பகுதிகளோடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்தும் சில பகுதிகள் இணைக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியது. தற்போது புதுக்கோட்டை, அறந்தாங்கி என இரு ரெவின்யூ பிரிவுகள் உள்ளடக்கிய பத்து தாலுகாக்கள் குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகொட்டை, திருமெய்யம், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, பொன்னமராவதி ஆகிய பதிகள் உள்ளடக்கியதாக இருக்கிறது. 765 ரெவின்யூ கிராமங்கள் உள்ளன. 4664 சதுர கி.கீ. பரப்பளவு உள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜனத்தொகை. பருவ மழையை நம்பியுள்ள வானம் பார்த்த பூமியாகத்தான் இப்போதும் இப்பகுதிகள் இருக்கின்றன.
இவை தவிர பழைய நடிகர் பி.யு.சின்னப்பாவும், இடைக்கால காதல் மன்னன் ஜெமினி கணேசனும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற இசை மேதைகளும் இங்கு இருந்திருக்கின்றனர். புதுக்கோட்டை அசல் தமிழ் மண்ணின் ஒரு உதாரணப் பகுதி.