பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, October 22, 2011

ஊத்துக்காடு.

ஊத்துக்காடு.

ஊத்துக்காடு எனும் இந்தத் தலம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து வழிபட வேண்டியத் தலம். சங்கீதம், நாட்டியம் போன்ற கலைகளில் தேர்ந்தவர்கள் தேடிவந்து வணங்கிச் செல்ல வேண்டியத் தலம். இவ்வூர் எங்கே இருக்கிறது?

கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கி.மீ.தூரத்தில் ஊத்துக்காடு எனும் இவ்வூர் இருக்கிறது. வழியெங்கும் பசுமை கொஞ்சும் பச்சை வயல்வெளிகளும், தோப்பும் துரவுகளுமாக இயற்கை எழில் கொஞ்சும் இடமாக அமைந்திருப்பது இந்தத் தலம். இங்கு ஒருகாலத்தில் சந்நிதித் தெருவும், பல வீடுகளும், வேத பண்டிதர்களும், இசை அறிஞர்களும் வாழ்ந்திருக்க வேண்டும். அந்தப் பழமைச் சுவடுகள் நிறைந்த அந்த ஊர் இப்போது....?

போகட்டும், இங்குதான் ஸ்ரீ காளிங்கநர்த்தன கிருஷ்ணனுக்கு ஒரு தனிக் கோயில் அமைந்திருக்கிறது. இதுபோன்றதொரு தனிக் கோயில் வெறெங்கும் இருப்பதாகவும் தெரியவில்லை. இவ்வாலயத்தில் மூலவராக இருந்து சேவை சாதிக்கும் பெருமாள் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள். மூலவர் சரி, உற்சவர்?

ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேதராகக் காட்சிதரும் ஸ்ரீ காளிங்கநர்த்தன பெருமாள்தான் இங்கு உற்சவர். மிகச் சிறிய ஆலயம்தான். முன் கோபுரம் சாதாரணமாகத்தான் காட்சியளிக்கிறது. படத்தில் பாருங்கள். ஆலயத்தில் நுழைந்ததும் ஸ்ரீ ஆனந்த நர்த்தன கணபதி சந்நிதி இருக்கிறது.

காமதேனு, கேட்டதைத் தரும் தெய்வீகப் பசு அல்லவா? அந்த காமதேனுவின் குழந்தைகள் நந்தினி என்றும் பட்டி என்றும் இரு பசுக்கள். இவை இரண்டையும் ஸ்ரீ காளிங்கநர்த்தன கிருஷ்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டு காமதேனு சென்று விட்டாள். இவை இரண்டுக்கும் இங்கு என்ன வேலை? இவைகள் இரண்டும் அருகில் ஆவூர் எனுமிடத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீ கைலாசநாதஸ்வாமியின் அபிஷேகத்திற்கென்று பாலைச் சொரிந்து கொடுத்தன. பூனைகளுக்குரிய மலர்களைக் கொய்து வந்து கொடுத்தன.

இந்த ஆவூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கைலாசநாதரை பசுபதீஸ்வரர் என்று அழைப்பார்கள். இந்த ஊத்துக்காடு எனும் இடம் ஒரு காலத்தில் புஷ்பவனமாக இருந்ததாம். நந்தினியும், பட்டியும் தினமும் வந்து ஈஸ்வர கைங்கர்யத்துக்காக மலர்களைத் தேடிவந்து கொய்து செல்வதாலும், இறைபணியில் இந்த ஊர் வளமுள்ள புஷ்பவனமாகப் பூத்துக் குலுங்கியதாம்.

இப்படி இவ்விரு பசுக்களும் இங்கு வந்து புஷ்பசேகரம் செய்து செல்வதைக் கண்ட நாரத முனிவர் சும்மாயிருப்பாரா? அவரும் இங்கு வந்து உட்கார்ந்துகொண்டு இந்தப் பசுக்கள் செய்யும் பகவத் கைங்கர்யத்தைப் பார்த்துக்கொண்டே, அவைகளுக்குச் சில புராணக் கதைகளைச் சொல்லி வந்தாராம்.

அப்படி அவர் புராணக் கதைகளைச் சொல்லி வருகையில் பாகவதத்தில் வரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கிக் கொண்டு வந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் ஐந்து வயது பாலகனாக இருந்த போது, தன் நண்பர்களுடன் ஆநிறைகளை ஓட்டிக்கொண்டு புல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த ஒரு சுனையில் காளிங்கன் எனும் ஒரு விஷப் பாம்பு இருந்து அந்த ஆநிறைகளுக்குத் தொல்லை கொடுத்து வந்ததாம்.

இதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அந்த காளிங்கனை அடக்கி, அவன் கொட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைத்து அந்தச் சுனையில் குதித்து அவனோடு போராடினாராம். அவனும் தன்னால் இயன்ற வரைப் போராடிப் பார்த்தபின் தன் தலைமீது நர்த்தனமிடும் இந்த பாலகன் யார் எனும் உண்மையைப் புரிந்து கொண்டு அடங்கிவிட, அவனை ஸ்ரீ கிருஷ்ணர் அனுக்ரகம் செய்த கதையைச் சொன்னார்.

நாரத முனிவர் கதையைச் சொல்லிக் கொண்டே வர, நந்தினியும் பட்டியும் கதையைக் கேட்டுக் கொண்டே கண்ணீர் விட்டுத் தேம்பித் தேம்பி அழுதனவாம். இதைக் கண்ட நாரதர் ஏன் இப்படி நீங்கள் இருவரும் அழுகிறீர்கள் என்று கேட்டாரம். அதற்கு அவ்விரு பசுக்களும் கண்ண பரமாத்மா ஐந்து வயது குழந்தை என்கிறீர்கள், இந்த காளிங்கனோ அதீதமான விஷம் கொண்ட பயங்கரமான ஜந்து. இவனோடு போராடும்போது அந்தக் குழந்தை கிருஷ்ணன் என்ன பாடுபட்டாரோ, எத்தனை சிரமங்களை அனுபவித்தாரோ என்பதை நினைத்து அழுகிறோம் என்றதாம். இப்படி நாரதருக்கும், நந்தினி பட்டி பசுக்களுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை தேவலோகத்திலிருந்த காமதேனு ஸ்ரீ கிருஷ்ண பகவானிடம் சென்று முறையிட்டுத் தன் குழந்தைகளின் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லி, அவர்களுடைய மனக்கவலையை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாம்.

இதனைக் கேட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவ்விரு குழந்தைகளுக்கும் ஏற்பட்ட மனவேதனையை உணர்ந்து அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பூலோகத்துக்கு வந்து அவ்விரு பசுக்குழந்தைகளுக்கும் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி தேற்றினாராம். அப்போதும் கவலை படிந்த முகத்துடன் அவ்விரு குழந்தைகளும் ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்க்க, உடனே அவர் அந்த இடத்திலேயே ஒரு ஆழமான நீரூற்றை உண்டாக்கி அதில் காளிங்கனை வரவழைத்து, அவனுடன் போராடி, அவன் தலையில் நர்த்தனமாடி, பாருங்கள், நான் இவனுடன் போராடும்போது சிரமப்படவில்லை என்பதைக் காட்டினாராம். இவ்வளவையும் பார்த்து ரசித்த அவ்விரு குழந்தைகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனவாம். நாரதர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிடம், நீங்கள் இங்கு காளிங்கனோடு மீண்டுமொருமுறை போராடியதால் இந்த இடம் தென் கோகுலமாக விளங்கட்டும் என்று அனுக்கிரகம் செய்யும்படி வேண்டினாராம்.

நாரதர் கேட்டுக் கொண்டபடியே ஸ்ரீ கிருஷ்ணன், இங்கு காளிங்கனுடன் போராடிய நிலையில் விக்கிரகமாக நிலைத்துப் புகழ் விளங்கும்படி இங்கேயே கோயில் கொண்டு விட்டாராம். அப்படிப்பட்ட காளிங்க நர்த்தன கிருஷ்ணன் விக்கிரகமாக விளங்க அவரை நாரத முனிவர் அங்கே ஸ்தாபித்து வைத்தார்.

அதன்படி இன்றும் ஊத்துக்காடு ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் காளிங்க நர்தன பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். அவருக்கு முன்னால் நந்தினியும், பட்டியும் பசுக்களாக இருந்து காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு காளிங்கன் தலைமீது ஒரு காலும், தூக்கிய சேவடியாக மற்றொரு காலுமாக ஸ்ரீ கண்ணபிரான் காட்சி தருகிறார். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், காளிங்கன் தலைக்கும் கண்ணபிரானின் காலுக்கும் இடையே ஒரு நூல் அல்லது காகிதம் நுழையுமளவுக்கு இடைவெளியிருக்கிறது. அவருடைய ஒரு கை அபயஹஸ்தம் காட்டி, மற்றொரு கரம் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி இருக்கிறது என்பது இந்த விக்கிரகத்தின் சிறப்பு.

காளிங்கனின் வாலை கண்ணனின் கட்டைவிரல் மட்டும்தான் தொட்டுக் கொண்டிருக்கும். மற்ற நான்கு விரல்களும் தனித்தே காட்சி தரும். ஆக ஸ்ரீ கண்ணனின் விக்கிரகம் காலும் காளிங்கன் தலையில் படவில்லை, கை விரலும் காளிங்கன் வாலில் பிடிமானம் இல்லை. என்ன அதிசயமான விக்கிரகம் இது?

இந்த அதிசயத்தைக் கண்டு வியந்துதான் நமது இந்திய அரசாங்கம் 1982ஆம் வருஷம் இந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்துக்கு ரூ. 3 மதிப்புள்ள அஞ்சல் தலையொன்றை வெளியிட்டு மரியாதை செய்திருக்கிறது.

ஊத்துக்காடு காளிங்கநர்த்தன கிருஷ்ணன் ஒரு பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு அமையாதவர்கள், திருமணம் தாமதம் ஆகிக் கொண்டிருப்பவர்கள், ராகு, கேது பரிகாரங்கள் செய்பவர்கள், நாகதோஷம், சர்ப்ப தோஷம் இவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பொதுவான பக்தர்களும் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.

ஊத்துக்காட்டுக்கு தஞ்சாவூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உண்டு. தஞ்சையிலிருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாகவும், மற்றொரு வழி தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன்கோயில் வழியாக சாலியமங்கலம், திருக்கருகாவூர் வழியாகவும் போய்வரலாம். 13 கி.மீ. தூரம் இருக்கும். இவ்வூரில் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் என்பவர் அவதரித்து கண்ணன் மீது பற்பல அபூர்வமான பாடல்களை இயற்றியிருக்கிறார். "ஊத்துக்காடு வேங்கடகவி" எனும் தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இதே வலைப்பூவில் இதற்கு முன்பு வெளியாகியிருக்கிறது. இது அந்தத் தலத்தைப் பற்றிய 'தலபுராணம்".

"காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள்முடியைந்திலும்நின்று நடம் செய்து,
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற.
(தூமணி வண்ணனைப் பாடிப்பற. பெரியாழ்வார் ஒன்பதாம் திருமொழி.

கதிரும் மதியும் என, நயன விழிகள் இருநளினமான, சலனத்திலே,
காளிங்க சிரத்திலே, கதித்த பதத்திலே என், மனத்தை இருத்தி
கனவு நினைவினோடு, பிறவி பிறவி தோறும் கனிந்துருக வரந்தருக
(பால்வடியும் முகம்) ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்.


1 comment:

இராஜராஜேஸ்வரி said...

காளிங்கன் தலைக்கும் கண்ணபிரானின் காலுக்கும் இடையே ஒரு நூல் அல்லது காகிதம் நுழையுமளவுக்கு இடைவெளியிருக்கிறது. அவருடைய ஒரு கை அபயஹஸ்தம் காட்டி, மற்றொரு கரம் காளிங்கனின் வாலைப் பிடித்தபடி இருக்கிறது என்பது இந்த விக்கிரகத்தின் சிறப்பு./

very nice sharing..Thank you.