பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, October 28, 2010

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா ஓர் ஆய்வு

                                                        தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா
ஓர் ஆய்வு
தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் 22ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த ஓரிரு மாதங்களாகவே தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதற்காக தமிழக அரசு 26 கோடி ரூபாயும் மத்திய அரசு 25 கோடி ரூபாயும் தருவதாக அறிவிக்கப்பட்டன. தஞ்சை நகராட்சி நகரின் பல பாகங்களையும் விழாவுக்குத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியது. முக்கிய சாலைகளில் ஒளி விளக்குகள் புதிதாக அமைக்கப்பட்டன. சாதாரண தார்ச்சாலைகள் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டன. நகரத்தின் கரந்தை தமிழ்ச்சங்கம், மணிமண்டபம், அரண்மனை வளாகம், திலகர் திடல், பெரிய கோயில் போன்ற பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் பெரிய கோயிலின் மாடலில் ஒரு மேடை அமைத்து நிறைவு விழாவில் முதலமைச்சர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

விழாவின் சிறப்பு அம்சமாக கோயிலின் நந்தி மண்டபத்தைச் சுற்றிலுமுள்ள இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் பத்மஸ்ரீ கலைமாமணி பத்மா சுப்ரமணியன் தலைமையில் 'ராஜராஜேச்சரத்தைப்' போற்றி நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நிறைவு நாளில் கோயில் குறித்த ஒரு தபால் தலை வெளியீடும், புதிய நாணயம் வெளியீடும் ஏற்பாடாயிருந்தன. தஞ்சை மாவட்ட நிர்வாகம் முழுவதும் இந்த மாநாட்டுப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டது. அரண்மனை திடலில் அமைந்திருந்த கண்காட்சியை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக ஏற்பாடு நடந்தது. இதில் அரிய வகை சிலைகள், ஆயுதங்கள், சிற்பங்கள் இவையெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டன. இங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 23, 24, 27 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணைய தள முகவரியில் நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஆலயத்திற்குள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பதால் நுழைவு வாயிலுக்கு அடுத்துள்ள புல்வெளியிலும் வெளியே அகழிக்கருகிலும், வாகனங்கள் நிறுத்துமிடத்திலும் எல்சிடி திரைகள் அமைக்கப்பட்டு மக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இத்தனை தயாரிப்புக்கிடையில் ஐந்து நாள் விழா செப். 22ம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் தொடக்கமாக மங்கள இசையுடனும், மாலையில் அமைச்சர் கோ.சி.மணி, மத்திய நிதித்துறை அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்களும் முரசு கொட்டி விழாவைத் துவக்கி வைத்தனர். மாலை பெரிய கோயில் வளாகத்தில் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பந்தலில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமதி சுதா ரகுநாதனின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. 'சங்கமம்' கலைவிழா நிகழ்ச்சிகள் நடந்த இடங்களிலெல்லாம் கிராமிய கலைகள் என்ற பெயரில் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற வகைவகையான ஆட்டங்கள் நடந்தன. இவற்றை கனிமொழியின் தலைமையிலான குழு ஏற்பாடு செய்து நடத்தினர். சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறை செயலர் வெ. இறையன்பு, சுற்றுலாத் துறை இயக்குனர் மோகந்தாஸ், கலை பண்பாட்டுத் துறை ஆணையர் மணி, மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.சண்முகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.ஏ.செந்தில்வேலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரடியாக கவனம் செலுத்தி விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து கலந்து கொண்டனர்.


விழாவின் இரண்டாம் நாளான 23ஆம் தேதி எல்லா இடங்களிலும் கிராம கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரிய கோயிலில் டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரியும், ஜாகீர் உசேனின் நடனமும் நடைபெற்றன.

மூன்றாம் நாளாகிய செப். 24 அன்று காலை அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கண்காட்சியைத் துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அன்று காலை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல ஆய்வரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெற்றன. இதில் பற்பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். அன்று மாலை ஆலய வளாகத்தில் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் தாளவாத்தியக் கச்சேரியும் தொடர்ந்து அருணா சாயிராமின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. பாடல்களுக்கிடையே இவர் முதல்வரின் புகழ்பாடி கச்சேரி செய்தார். கருத்தரங்கங்களிலும் அறிஞர்களும் முதல்வரைப் பற்றி புகழுரைகளை நிகழ்த்தினர்.

நான்காம் நாள் செப். 24 அன்று காலை பெரிய கோயிலில் நிதி அமைச்சர் க.அன்பழகன் தலைமையில் ஒளவை நடராஜன், குடவாயில் பாலசுப்பிரமணியன், நடனகாசிநாதன், சாரத நம்பி ஆரூரன் ஆகியோர் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது. மாலையில் திருக்குவளை சகோதரிகளின் நாதஸ்வரம் அதனைத் தொடர்ந்து பத்மஸ்ரீ பத்மா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் கலந்து கொண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. வரலாற்றில் இதுபோன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடந்திருக்குமா என்ற எண்ணம் அனைவருக்குமே ஏற்படும் வகையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை திலகர் திடலில் அமைக்கப்பட்டிருந்த எழில்மிகு அரங்கில் 'ராஜராஜ சோழன்' எனும் வரலாற்று நாடகம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு 'காதல்' பத்திரிகை ஆசிரியர் அரு.ராமநாதன் எழுதிய இந்தக் கதையை அன்றைய பழம்பெரும் நாடகக் கலைஞர்களான டி.கே.சண்முகம், டி.கே.பகவதி ஆகியோர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்தனர் டி.கே.சண்முகம் அவர்களின் குமாரர்கள் டி.கே.எஸ்.கலைவாணன், டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இம்முறை நாடகத்தை அரங்கேற்றினர். அன்றைய நாளில் டி.கே.பகவதி தனக்கே உரித்தான கம்பீரத்தோடு ராஜராஜனாக நடித்த காட்சியை அன்று பார்த்தவர்கள் எவரும் மறந்துவிட முடியாது. அவர் ராஜராஜனாகவே மாறியிருந்தார் என்று சொல்லலாம். அதே கம்பீரத்தோடும், சிறப்பாகவும் இந்த நாடகத்தை டி.கே.எஸ்.கலைவாணன் சகோதரர்கள் நடத்திக் காட்டியது சிறப்பாக இருந்தது. இந்தக் கதை ராஜராஜனின் முழு வரலாறாக இல்லாமல் அவன் வாழ்க்கையில் நடந்த குடும்பம் சம்பந்தப்பட்ட சிறு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. மாமன்னனின் வரலாறு முழுமையையும் கூட நாடகமாக ஆக்கினால் நிச்சயம் அது சிறப்பாக இருந்திருக்கும்.

25ம் தேதி காலையில் பல ஊர்களிலுமிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும், அயல் நாடுகளிலிருந்தும் வந்திருந்த நடனக் கலைஞர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அவர்களோடு வந்த உறவினர்கள், குருமார்கள் என்று கூட்டம் கூட்டமாகத் தஞ்சையில் நெருக்கடி ஏற்படும் வகையில் வந்து குவிந்தார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஓரியண்டல் டவர்ஸ், கமலா சுப்பிரமணியம் பள்ளி, கந்த சரஸ் மகால் ஆகிய இடங்களில் தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் பத்மா சுப்பிரமணியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். மாலை 6.45க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சிக்காக அனைத்து கலைஞர்களும் நடன உடை அணிந்துகொண்டு ஆலயத்துக்குள் மாலை 5க்குள் வந்து விட்டனர். அவர்கள் வரிசையாக ஆயிரம் பேருக்குமேல் நின்று கொண்டு ஆடத் தயாராகினர்.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் ஆடுவதற்காகவும், வரலாற்றில் இடம்பெற வேண்டிய இந்த அரிய நிகழ்ச்சியில் தங்களுக்கும் பங்கு உண்டு என்ற பெருமிதத்திலும் அத்தனைக் கலைஞர்களும் ஆர்வத்தோடும், அவர்களுக்கு பயணத்திலும், நகருக்குள் நுழைந்து வருவதிலும், தங்குவதிலும், பல இடையூறுகளும் இன்னல்களும் இருந்தபோதும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டு சென்றது அனைவரையும் பாராட்ட வைத்தது.

தேவார இசையை ஓதுவார்கள் பாடிக்கொண்டிருந்தார்கள். முதல்வர் வருகைக்காக நிகழ்ச்சி தாமதமாகிக் கொண்டிருந்தது. சுமார் 7.30 மணிக்கு முதல்வர் பேட்டரியில் இயங்கும் மோட்டாரில் சிவகங்கை தோட்டம் வழியாக வந்து, தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்த பிறகு நடனம் தொடங்கியது. முதல்வர் அவர்கள் நாட்டியம் தொடங்குமுன் மற்றொரு தேவாரம் பாடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஓதுவார்களும் பாடினார்கள். தேவாரப் பாடலோ என்று கவனித்தால் இல்லை. அது அருணகிரிநாதர் தஞ்சை கோபுரத்தில் அமைந்த முருகப் பெருமான் குறித்துப் பாடிய திருப்புகழ் பாடல்.

பத்மா சுப்பிரமணியமும் மற்ற நடனக் கலைஞர்களும் சுமார் முக்கால் மணிநேரம் ஆடினர். முன்னதாகவே தயார் செய்யப்பட்ட டிவிடி யைப் போட்டுப் பார்த்து ரிகர்சல் பார்த்துவிட்டு வந்ததால் நடனம் ஒரே மாதிரியாக ஆடமுடிந்தது. சிறிதுகூட பிசிறு காணப்படவில்லை. இதில் பிரபல நடிகர் வினீத், நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா போன்ற பிரபலங்களும், மும்பை, சிங்கப்பூர் முதலான இடங்களிலிருந்தும் வந்திருந்த நடனக் கலைஞர்கள் மகிழ்ச்சியோடு ஆடினர். கணபதி கவுத்துவம், தொடர்ந்து கருவூரார் இயற்றிய திருவிசைப்பாவில் ராஜராஜேச்சரத்தைப் பற்றிய பத்து பாடல்களுக்கும் ஆடினர். இறுதியில் ஆதிசங்கரரின் சிவஸ்துதி பாடி நிறைவு செய்தனர். முதல்வரை பத்மா சுப்பிரமணியம் சென்று மேடையில் வணங்கி ஆசி பெற்றார். அப்போது பேசிய முதல்வர், அவர்கள் பாடியது எதுவானாலும், அவர்கள் நடனம் நன்றாக இருந்தது. பத்மாவின் தலைமையில் ஒரு படையே ஆடியது என்று வாழ்த்தினார். முதல்வர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களை மனதாரப் பாராட்டி பொன்முடிப்பு வழங்கினார். டாக்டர் பத்மா சுப்பிரமணியம் போல மற்றொரு கலைஞர் உருவாக வேண்டுமே என்ற கவலை பலருக்கும் உண்டு. இன்று இந்தக் கலையில் பலரும் அந்த அளவுக்குத் திறமையோடு ஆடிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. டாக்டர் பத்மா சுப்பிரமணியம் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறை வாரிசு ஒன்றும் உருவாகிவிட்டது. அன்று ஆடிய நடிகர் வினீத்தின் பின்னால் ஆடிய சின்னஞ்சிறு சிறுமி, டாக்டர் பத்மாவின் சகோதரரின் பேத்தி. துறுதுறுப்பும் உத்சாகமும் கொண்டு அவர் ஆடியது மகிழ்ச்சியளித்தது. இந்த ஆயிரம் கலைஞர்களில் சின்னஞ்சிறு குழந்தைகள், வயதானவர்கள், ஆண்கள் என்று பலரும் ஆடியது உண்மையிலேயே மயிர்கூச்செரிய வைத்தது. உலகில் வேறு எங்குமே நடைபெற்றிருக்குமா என்ற அளவுக்கு மிக பிரமாண்டமாக ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கு கொண்டு ஒரே மாதிரி ஆடியது பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம்தான் பெரும்பாலானவர்கள் கருவூர்த் தேவர் இயற்றிய திருவிசைப்பா பற்றி தெரிந்து கொண்டனர். அதிலுள்ள பத்துப் பாடல்களும் மிகச் சிறப்பாகப் பாடி அபிநயம் செய்த காட்சி மனதை நெகிழச் செய்வதாக அமைந்தது. பொதிகை தொலைக் காட்சி உட்பட பல உள்ளூர் தொலைக் காட்சிகளும் இந்த அபூர்வ நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. டிவி கேமரா கலைஞர்களைக் காட்டிக் கொண்டே செல்லும் போது பல அறிமுகமான முகங்கள் தென்பட்டன. அவர்கள் அத்தனை பேரும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சொந்த செலவில் வந்து போனது அவர்கள் கலையின் மீது வைத்திருக்கும் பக்தியையும், தஞ்சை பெருவுடையார் ஆலயம் கலைகளின் பிறப்பிடம் அங்கு வந்து ஆடுவது இந்த ஜன்மம் எடுத்ததின் பலன் என்று நினைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்று முதன்முதலாக முடிவு செய்தது தஞ்சை பிரஹன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை. டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து இவர்கள் இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்த பிறகு தமிழக அரசு இவ்விழாவைத் தன் பொறுப்பில் செய்வதாக முடிவு செய்தது. என்றாலும் உள்ளூரில் இது குறித்த எல்லா ஏற்பாடுகளையும் டாக்டர் வி.வரதராஜன் தலைமையில் செயல்படும் பிரஹன் நாட்டியாஞ்சலி, செயலர் முத்துக்குமார் ஆகியோர்தான் தங்களது கட்டுக்கோப்பான உற்ப்பினர்களோடு மிகச் சிறப்பாகச் செய்தனர். ஆனால் இந்த விழா குறித்து நன்றி சொல்லியவர்கள் எவரும் பிரஹன் நாட்டியாஞ்சலிக்கோ, டாக்டர் வரதராஜனுக்கோ அல்லது முத்துக்குமாருக்கோ நன்றி சொல்லவில்லை. எனினும் கூடியிருந்த மக்களுக்கும் பங்கு கொண்ட பெரும்பாலான கலைஞர்களுக்கும் இந்த விழாவின் சிறப்புக்கு மேற்சொன்னவர்களே காரணம் என்பது நன்கு தெரியும். அது போதும்.

செப். 26 விழாவின் நிறைவு நாளில் காலையில் திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை ஆயுதப்படை மைதானத்தில் முதலில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் முதல்வர் அவர்கள் வந்த பிறகு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் அவர்கள் ராஜராஜ சோழன் காலத்தில் குடவோலை முறையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தை மிக விரிவாக எடுத்துரைத்து, மன்னராட்சி நடைபெற்ற போதும் மக்கள் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்த செயல் உலகில் வேறு எங்கும் கிடையாது என்றார். அது போதாது என்று ராஜராஜன் ஆட்சியைப் போலவே தனது ஆட்சியும் ஜனநாயகத்தைப் பேணி, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று சொன்னார்.

முதல்வர் தனது உரையின் முடிவில் இந்த விழாவையொட்டி தஞ்சை நகருக்குச் செயல்படுத்தியிருக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். விழாவில் தஞ்சை ராஜராஜேச்சரம் குறித்த தபால் தலை வெளியிடப்பட்டது. அதன் முதல் தபால் தலையை முதல்வர் வெளியிட மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். விசேஷ 10 ரூபாய் நாணயத்தை முதல்வர் வெளியிட அதன் முதல் காசை மத்திய அமைச்சரும் புதுச்சேரி காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி பெற்றுக் கொண்டார்.

இங்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, தான் ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலின் 1000ஆவது ஆண்டு நிறைவு விழா என்பதை மறந்து விட்டார் போல இருக்கிறது. அவர் வழக்கம்போல அரசியல் மேடையில் பேசுவது போல கூட்டணி பற்றியும், ராஜராஜனைப் போலவே தமிழக முதல்வரின் ஆட்சி அமைந்திருப்பது பற்றியும், தமிழ் நாட்டு மக்கள் ராஜராஜன் காலத்து மக்களைப் போல் மகிழ்ச்சியோடும், நிறைவோடும் இருக்கிறார்கள் என்று பேசினார். யாராவது அவரிடம் மன்னன் ராஜராஜன் பற்றியும், பெரிய கோயில் பற்றியும் பேசச் சொல்லியிருக்கலாம். பாவம் அவர் என்ன செய்வார்.

நகரின் பல்வேறு இடங்களிலும் நடைபெற்ற தமிழக நாட்டுப்புற கலை விழாவில் பெரும்பாலும் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்றவைகள்தான் நடைபெற்றன. சோழ வளநாட்டில் அன்று வழக்கத்தில் இருந்த பல கலைகளும், பல வாத்தியக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு மக்களுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். மாறாக மேற்சொன்ன ஆட்டங்களை மட்டும் காட்டினாலும், மக்கள் கூட்டம் இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அலை மோதியது. சோழர் காலத்துக்குப் பிறகு இங்கு நாயக்க மன்னர்களும், மராத்திய மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். நாயக்கர்களில் ரகுநாத நாயக்கர் ஒரு கலை மேதை. இசை, வாத்தியக் கருவிகள் வாசித்தல் போன்றவற்றில் நிபுணனாக இருந்திருக்கிறான். போரிலும் வல்லவன். இவன் "ஜெயந்தசேனா" எனும் புதிய ராகத்தையும் "ராமானந்தா" எனும் தாளத்தையும் கண்டுபிடித்தான். இவன் "விபஞ்சி வீணை" எனும் புதிய வகை வீணையைக் கண்டுபிடித்து வாசித்துக் காட்டினான். இவன் காலத்தில் வீணை வாத்தியத்தில் செய்த மாற்றங்கள்தான் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. "தஞ்சை வீணை" என்று பிரபலமாக இருக்கும் வீணை இவன் உருவாக்கியதே. இப்படிப் பல இசைக்கருவிகளும், பல கலை வடிவங்களும் பழைய காலம் முதல் இருந்தாலும், இப்போது நாட்டுப்புறக் கலை என்றதும் மேலே சொன்னது போன்ற ஒருசிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை ஒதுக்கிவிடுகிறார்கள். ஒருக்கால் மக்கள் இந்த வகையான கலைச்சுவைக்குப் பழகிவிட்டார்கள் போலும்.

தஞ்சையில் நடந்த இந்த கலாச்சார விழா உலகம் முழுவதும் வியப்போடு பார்த்து மகிழும்படி அமைந்திருந்தது. தமிழக அரசு ஏற்பாடு செய்து நடத்திய இந்த விழாவில் திருமுறை ஓதுகின்ற ஓதுவார்களில் தலை சிறந்தவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து பாராட்டியிருக்கலாம். காரணம் மன்னன் ராஜராஜன் திருமுறைக்கும் அதை ஓதுவோர்க்கும் சிறப்பிடம் கொடுத்து வைத்திருந்தான். மற்றொரு குறை இப்படிப்பட்ட பெரிய கோயிலைக் கட்டி அதில் பதினெட்டு அடி உயரமுள்ள சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த பின் ஆகம முறைப்படி மூலவராக விளங்கும் இறைவனின் விக்கிரகத்தின் அளவையொட்டி தினப்படி நெய்வேத்தியத்துக்கென்று அரசன் பல நிவந்தங்களை இட்டு வைத்தான் அல்லவா. அவைகளின் இன்றைய நிலைமை என்ன, மாலிக்காபூர் படையெடுப்பின் போது சூறையாடிச் சென்றவை எவ்வளவு என்பது போன்ற விவரங்களையும் விரிவாகக் கொடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் தமிழர்கள் பெருமை கொள்ளும் அளவுக்குச் சிறப்பாக நடந்த விழா. தஞ்சை நகரம் புத்துணர்வு பெற்றிருக்கிறது, புதிய வசதிகள் கிடைத்திருக்கின்றன. அந்த அளவில் பெரிய கோயில் 1000ஆவது ஆண்டு விழா
மாபெரும் வெற்றிதான்.

1 comment:

Govindarajan said...

very good account on thefetival.