பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 26, 2010

"அன்னமிட்ட அன்னையின் கை!"

                                                                   Sri Maha Mariamman

"அன்னமிட்ட அன்னையின் கை!"
(எனக்கு ஏற்பட்ட அனுபவம் www.classroom2007.blogspot.com இல் வெளியிடப்பட்டது)
நன்றி: திரு சுப்பையா அவர்கள்.

மகாத்மா காந்தி முதன் முதலில் காலடி எடுத்து வைத்த தமிழக கிராமம் எது தெரியுமா? தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி எனும் கிராமம். அங்கு அவருக்கு என்ன அப்படி ஆர்வம்? தென்னாப்பிரிக்காவில் மகாத்மா சத்தியாக்கிரகம் செய்தபோது அவரோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், வள்ளியம்மை என்று பெயர், அவர் சிறையில் மாண்டு போனார். அந்த சின்னஞ்சிறு பெண்ணின் தியாகத்தைப் போற்ற மகாத்மா அந்தப் பெண் பிறந்த கிராமமான தில்லையாடிக்கு விஜயம் செய்து அங்கு அவர்கள் நினைவாக ஒரு ஸ்தூபியையும் திறந்து வைத்தார். அந்த தில்லையாடியில்தான் நானும் அவதரித்தேன்.

அப்படிப்பட்ட தியாகி பிறந்த ஊரில் பிறந்ததனால் உனக்கு என்ன பெருமை என்று நீங்கள் கேட்பதும் எனக்குப் புரிகிறது. ஒரு அல்ப ஆசை. அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை. அது போகட்டும். இந்த ஊரில் நாராயணசாமி என்றொரு நெசவாளி. இவரும் மேலும் சிலரும் தென்னாப்பிரிக்கா சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதித்து ஊர் திரும்பலாம் என்று நம்மவர்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் "கங்காணி'களை அணுகினார்கள். அப்போதெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி நடக்கும் எந்த நாட்டுக்கும் நம் இஷ்டத்துக்குச் செல்லலாம். பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை. நேராக நாகப்பட்டினம் போனார்கள், அங்கிருந்து படகில் சென்று கடலில் வெகு தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏறிப் பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் இறங்கினார்கள். அங்கு இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? கூலிகள். ஆம்! காந்தி கூட அங்கு ஒரு வழக்குக்காக சென்றவர் இல்லையா? அதனால் அவருக்கும் 'கூலி வக்கீல்' என்றுதான் பெயர். தானாக வலியச் சென்று அடிமைகளானவர்கள் நமது சகோதரர்கள். ஏற்கனவே அந்த பூமியின் சொந்தக்காரர்களான கருப்பர்கள் அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில் இங்கிருந்தும் மேலும் அடிமைகள். ஆனால் அவர்களும் இவர்களும் கருப்பர்கள் என்றும், அடிமைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டார்கள். அங்கிருந்த நிலைமை குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை"யைப் படியுங்கள்.

அப்படி தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் உதித்த பெண்தான் வள்ளியம்மை. அந்தப் பெண் எங்கள் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு பெருமை சேர்த்து விட்டாள். அந்த கிராமமே 'வள்ளியம்மை நகர்' என்றே அழைக்கப்படலாயிற்று. அந்த புண்ணிய பூமியில் நான் அவதரித்ததாகச் சொன்னேன் அல்லவா? ஆனால் எந்த வகையிலும் வாழ்க்கை சொல்லும்படியாக அமையவில்லை. அந்த ஊரைச்சுற்றி பல அருமையான தலங்கள். மிக அருகில் திருவிடைக்கழி எனும் அருணகிரியால் பாடப்பட்ட திருத்தலம். வடக்குத் திருச்செந்தூர் என வழங்கப்படும் முருகத்தலம். அடுத்தது திருக்கடவூர் எனும் அபிராமியம்மைத் திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள காலசம்ஹாரமூர்த்திதான் மார்கண்டனுக்காக எமனை வதம் செய்தவர். அபிராமி அந்தாதி எனும் மிக உயர்ந்த நூல் சுப்பிரமணிய பட்டர் என்பவரால் எழுதப்பட்டது. பின்னர் இவர் அபிராமி பட்டர் என அழைக்கப்பட்டார். அதற்கடுத்ததாக அனந்தமங்கலம் எனும் சிற்றூர். இங்கு மிக உயரமான ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கிறார். அதையொட்டி எப்போதும் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் இடம், தரங்கம்பாடி. அந்த நாளில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையை இன்றும் காணலாம், அருகில் கடல் எப்போது விழுங்குமோ என்றபடி உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கும் மாசிலாமணிநாதர் ஆலயம். அங்கு போகும் வழியில் ஒழுமங்கலம் என்றொரு ஊர். அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகப் பிரசித்தமானவள். இந்த மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அப்படிப்பட்ட சூழலில் அமைந்த ஊர் தில்லையாடி எனும் வள்ளியம்மை நகர். அது சரி! இதெல்லாம் எதற்கு இப்போது. பூகோள பாடமா? இல்லை, இந்த ஒழுமங்கலம் மாரியம்மனின் திருவிளையாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக இத்தனை பீடிகை போட்டேன். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள், விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

நான் எனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு மயிலாடுதுறை செல்லும்படியாகி விட்டது. அப்போது எங்களுக்கிருந்த வீடு அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் திருவிடைக்கழியில் இருந்த நஞ்சை நிலமும் சில ஆயிரங்களுக்கு விலை போயிற்று. ஒருவழியாகப் படித்து வேலையில் சேர்ந்தது திருச்சியில். அங்கிருந்து கரூர், பின்னர் புதுக்கோட்டை, கடைசியில் தஞ்சாவூர். கரூரில் இருந்த சமயம் திருமணம் ஆயிற்று. முதலில் ஒரு ஆண் குழந்தை. அதன் ஓராண்டு நிறைவுக்கு காது குத்தி, தலைக்கு மொட்டை போட பிறந்த பூமிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வேண்டுதல். ஒழுமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல கரூரிலிருந்து மயிலாடுதுறை வந்து தங்கி மறுநாள் காலையில் கிளம்பி ரயிலில் பயணம் செய்து பொறையாறு என்கிற ரயில் நிலையத்தில் இறங்கி அருகிலுள்ள ஒழுமங்கலம் சென்றோம். அப்போது மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது. வழியில் மாயூரம் டவுன், மன்னம்பந்தல், ஆக்கூர், செம்பொன்னார்கோயில், திருக்கடவூர், தில்லையாடி, பொறையாறு கடைசியில் தரங்கம்பாடி.

ஒழுமங்கலத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து, குளத்தில் மூழ்கி பின்னர் மாரியம்மனுக்கு மாவிளக்கு முதலியன போட்டு தரிசனம் முடிய கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணியாகிவிட்டது. ஒழுமங்கலம் மாரியம்மன் மிக சக்தி வாய்ந்தவள் என்பது பொதுவாக அங்கு நம்பப்படும் செய்தி. எந்தக் குறையுமில்லாமல் எங்கள் நேர்த்திக் கடன் முடிவடைந்தது. நல்ல வெயில். அருகிலுள்ள பொறையாறு ரயில் நிலையம் சென்றோம். குழந்தைக்கு நல்ல பசி. எங்காவது பசும்பால் கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பொறையாறு நிலையத்துக்கு அருகிலும் எந்த ஓட்டலும் இல்லை. எங்களுக்கும் நல்ல பசி. என்ன செய்வது. மாயூரம் செல்ல தரங்கம்பாடியிலிருந்து 12.45க்கு ஒரு ரயில் வரும். அது கிட்டத்தட்ட இரண்டு மணிக்குத்தான் மாயூரம் போகும். அதுவரை பசி தாங்கமுடியுமா? குழந்தையின் அழுகையும் அதிகரித்து வந்தது. ரயில் சரியாக 12.45க்கு வந்தது. இங்கிருந்த அடுத்த நிலையம் தில்லையாடிதான். அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய் நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு ரயில் தில்லையாடி போய்ச் சேர்ந்தது. நாங்கள் துணிந்து இறங்கி விட்டோம்.

கோயிலுக்கு எதிரில் சந்நிதித்தெருவின் முடிவில் ரயில் நிலையம். நான் இருந்தது வடக்கு மடவளாகம் எனும் தெரு. அங்கு போவது மிகவும் சுலபம். அதிகம் நடக்கத் தேவையில்லை. நல்ல வெய்லில் வேகமாக சந்நிதித் தெருவைக் கடந்து வடக்கில் திரும்பி வடக்கு மடவளாகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு சுமார் பதினைந்து இருபது வீடுகள்தான் இருக்கும். அந்தத் தெருமுனையில் நாங்கள் திரும்பிய போது அங்கு ஒருவரையும் காணவில்லை. ஏழெட்டு வீடு தாண்டி ஒரு வீட்டு வாசலில் ஒரு அம்மையார் நிற்பது தெரிந்தது. சரி அங்கு போய்விடுவோம். மொட்டையடித்த கைக்குழந்தை, கணவன் மனைவியாக நாங்கள் இருவர். எங்களுக்கு உணவு இல்லாமலா போய்விடும். ஆபத்துக்குப் பாவமில்லை. பசி என்று கேட்டால் போட மறுக்கப் போகிறார்களா என்ன? துணிந்து நடந்தோம்.

அந்த வீட்டை நெறுங்கிய சமயம் அந்த அம்மையார் எங்களை எதிர்பார்த்து நிற்பது போலத் தெரிந்தது. நாங்கள் நெறுங்கி வந்ததும் "வாருங்கள், வாருங்கள்" என்று தெரிந்த உறவினரை அழைப்பது போல அந்த அம்மையார் எங்களை அழைத்தார்கள். நாங்களும் அப்பாடா என்று வீட்டினுள் நுழைந்தோம். நான் சொன்னேன், இதே தெருவில் இருந்த சுந்தராம்பாள் பாட்டியின் பேரன் நான். என் அப்பா சைகோன் வெங்கட்டராமன் என்பது என்றேன். ஆகா, தெரியுமே, நன்றாகத் தெரியுமே என்று எங்கள் குடும்ப விஷயங்களை விசாரிக்கத் தொடங்கி விட்டாள்.

உள்ளே வாருங்கள், கைகால்களை சுத்தம் செய்துகொண்டு வந்து உட்காருங்கள். சாப்பிடலாம். மணி ஆகிவிட்டது என்றார். என்ன இது ஆச்சரியம். எங்கள் மனவோட்டத்தை இந்த அம்மையார் புரிந்து கொண்டாரா என்ன. குழந்தைக்கு பால் தரட்டுமா, நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா என்றார். பால் முதலில் தருகிறோம். பிறகு சிறிது ரசம் சாதம் கொடுக்கலாம் என்று என் மனைவி சொன்னாள். எங்களுக்கு இன்னமும் ஆச்சரியம் தாங்கவில்லை. நானே கேட்டேன்.

"நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா, அம்மா?" என்று. இன்னும் இல்லை என்றார் அவர். "ஏன், நேரமாகிவிட்டதே" என்றேன். அப்போது அந்த அம்மாள் சொன்ன செய்திதான் எனக்கு இத்தனை ஆண்டுகள் கழித்தும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது. அவர் சொன்னார். நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம் சாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள் வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம் என்றார் அவர்.

அது எப்படி இந்த கிராமத்துக்கு விருந்தாளி தினம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்றேன். அவர் சொன்னார், இங்கு மிக அருகாமையில் இருக்கும் திருவிடைக்கழி, திருக்கடவூர், ஒழுமங்கலம் இவைகளெல்லாம் பிரார்த்தனை தலங்கள். இங்கு வேண்டுதல் உள்ளவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்து, பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு போவார்கள். அப்படி இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் நிச்சயம் இங்கு வந்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அடிக்கடி இங்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் வரும் விருந்தினர்களை உபசரித்து, பசியோடு வரும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டுவிட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவது என்பது நெடுநாட்களாக இருந்து வரும் பழக்கம் என்றார். அப்போது அவரது கணவர் அந்த ஊரின் கணக்குப் பிள்ளை எங்கோ வெளியில் போய்விட்டு குடையோடு வீட்டுக்குத் திரும்பினார்.

எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து முகமன் கூறி, வாருங்கள், கொஞ்சமும் தயக்கமில்லாமல் உங்கள் வீடு போல இங்கு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலில் போகலாம் என்றார். வீட்டில் அவர்கள் இரண்டே பேர்தான் என்றாலும், நாலைந்து பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம். இது என்ன அதிசயம். நாங்கள் வருவதை எப்படி அவ்வளவு நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஒன்றும் புரியவில்லை. அவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து உட்கார அனைவரும் உணவு அருந்தி எழுந்த பின் அந்த வீட்டு அம்மாள் தான் உட்கார்ந்து உணவருந்தினார். அவர் சொன்னது போலவே அன்று பகல் வெயில் நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலேறி ஊர் திரும்பினோம்.

Thirukkadavur temple

Thiruvidaikkazhi (Thirukuravadi)

Thillayadi temple

அந்த அம்மையாரின் பரந்த உள்ளத்தினால் ஏற்பட்டதா, அல்லது ஒழுமங்கலம் மாரியம்மன் எங்களை "பசியாயிருக்கிறது என்று தவிக்கிறீர்களே, போங்கள், அங்கு ஒரு அம்மாள் உங்களுக்காக சாப்பாடு வைத்துக் கொண்டு காத்திருக்கிறாள்" என்று எங்களை இங்கே அனுப்பி வைத்தாளா? தெரியவில்லை. இன்று வரை புரியவில்லை.     .

4 comments:

 1. சார் வணக்கம்,
  படிக்க படிக்க மகிழ்ச்சியாய் உள்ளது.என் அன்னை இப்போது இல்லை.தந்தையார் சென்னையில் உள்ளார்.அவரிடம் காண்பிக்கிறேன்.

  ReplyDelete
 2. The above post was made by the son of the divine lady whom I have mentioned in my article. It is really a miracle that I have found out the persons connected with the incident. Perhaps, this is also the divine wish of Mother Mariamma.

  ReplyDelete
 3. 'அதிதி தேவோ பவ!' என்பது இதுதான்.

  பசி என்பது எலோருக்கும் பொது.பண‌க்காரன், ஏழை என்பது பசி என்ற உணர்ச்சிக்குத் தெரியாது. பையில் காசு இருந்தாலும் நாம் விரும்பும் பொருள் கிடைக்காமல் போனால் அந்தப் பணத்தினால் என்ன பயன்?

  "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
  நல் இருந்து வானத்தவர்க்கு"

  என்பது பொய்யாமொழி.

  நமது வேத மரபில் அன்ன‌தானம் ஏழைக்குச்செய் என்று கூறவில்லை. அதிதி
  என்று திடீர் விருந்தினராக அவர்களைச் சொல்லிவிட்டது.

  இந்தப்பண்பு நமது கிராமங்களில் இன்றும் உள்ளது.உங்கள் அனுபவம் நமது வேத நெறி என்றும் மக்கள் மனதில் வாழும் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு

  ReplyDelete

You can give your comments here