பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 26, 2010

தமிழிசை வடிவங்கள்

தஞ்சை பெரிய கோயிலில் - பாடப்பட்ட தமிழிசை வடிவங்கள்
(திருமதி கி.உமாமகேஸ்வரி,  இசை விரிவுரையாளர்)


முகப்புரை.
நமது பாரதத் திருநாட்டில் ஆலயங்கள் நிறைந்த பகுதி தமிழகம்தான். இங்கு திரும்பிய பக்கமெல்லாம் கோபுரங்களும், வானளாவிய விமானங்களும் காணமுடியும். இவையெல்லாம் இப்பகுதிகளை ஆண்ட தமிழ்ப்பேரரசர்களது கலை ஆர்வத்தையும், இறையுணர்வையும், கலைகளுக்கு அவர்கள் செய்த தொண்டுகளையும் பறைசாற்றுவனவாக அமைந்திருக்கின்றன.

தமிழக வரலாற்றில் சோழர்கள் காலம் கலை, இலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. கடைச்சோழ வம்சமான விஜயாலயன் வம்சத்தில் வந்த மாமன்னன் ராஜராஜன் பாரத புண்ணிய பூமியில் மட்டுமல்ல, கடல்கடந்தும் தன் ராஜ்யாதிகாரத்தை விரிவுபடுத்தி நல்லாட்சி வழங்கியிருக்கிறான். அவன் கால்பதித்த இடங்களிலெல்லாம் கலைகள் சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஆன்மீகத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இறையுணர்வு மேலோங்க நல்லாட்சி வழங்கி இப்பூவுலகை சொர்க்க பூமியாக மாற்றியிருந்தான். அவனது இத்தகைய பெருமைகளை இன்றும் மக்கள் உணரும் வகையில் இஞ்சிசூழ் தஞ்சை என்று கருவூர்த்தேவரால் வர்ணிக்கப்படும் தஞ்சை மாநகரத்தில் அவன் அமைத்த பெருவுடையார் ஆலயம் உலகுக்குப் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வாலயம் அமைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் இக்கோயில் இன்றும் பல நுண்கலைகளின் பெட்டகமாகப் பொலிந்து கம்பீரமாக எழும்பி நிற்கிறது.

இத்தகைய புகழ்மிக்க வரலாற்றுத் தலைநகரத்தை "பிரஹதீஸ்வர மகாத்மியம்", "சமீவனக்ஷேத்திர மகாத்மியம்" போன்ற வடமொழி புராணங்களும், "தஞ்சபுரி மகாத்மியம்" எனும் மராட்டிய மொழி நூலும் பெருமையாகப் பேசுகின்றன. தஞ்சை பெருவுடையாரைப் பற்றி எல்லா மொழிகளிலுமுள்ள நூல்களும் பெருமை படுத்திப் பேசினாலும், மிக அதிகமாக இதன் புகழைக் கூறுவது தமிழ்மொழியில் அமைந்த நூல்களும், கல்வெட்டுகளுமே. அத்தகைய சிறப்புமிகு தமிழ் மொழியில் அமைந்த தமிழிசை வடிவங்களைப் பற்றி இக்கட்டுரையில் ஒரு சிறிது காணலாம்.

தமிழ்ப்பற்றாளன்

தஞ்சை பெருவுடையார் ஆலயம் முழுவதும் எங்கு நோக்கினும் பல கல்வெட்டுக்களைக் காணமுடியும். அதில் மன்னன் ராஜராஜன் காலத்திய கல்வெட்டுக்கள் எல்லாம் அன்றைய வழக்குத் தமிழில் வெட்டப்பட்டிருப்பதாக கல்வெட்டுத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அந்த கல்வெட்டுக்களில் எல்லாம் பெரிய கோயில் அமைந்த வரலாறு, அவன் பல்வேறு பணிபுரிவோர்க்குக் கொடுத்த நிவந்தங்கள், யார் யாருக்கு எந்த பணி அந்தப் பணிக்காக அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் முதலியவற்றையும் அருந்தமிழில் வடித்து வைத்திருக்கிறான்.

ஆலயத்தில் வழிபாடு நடத்த தேவாரப் பண்களைப் பாட ஆட்களை நியமித்திருந்தான். தில்லை நடராஜர் ஆலயத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த தேவார ஏடுகளை வெளிக் கொணர்ந்து அவற்றில் செல்லரித்தது போக மீதமுள்ளவற்றை ஒன்று சேர்த்து வரிசைப்படுத்தி நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரு திருமுறைகளை வகுத்து, அந்தத் திருமுறைகள் முறையாக ஆலயங்களில் பாடப்பட ஏற்பாடுகளைச் செய்து வைத்த பணி அவனது தமிழ்மொழிப் பற்றுக்கும், தெய்வ பக்திக்கும் சான்றாக அமைந்திருக்கின்றது. ஆலயம் கலைகளின் இருப்பிடம் என்பதற்குச் செயல் வடிவம் கொடுத்து, ஆடல், பாடல் என்று எங்கும் எதிரொலிக்கச் செய்த அருந்தமிழ் வாணன் ராஜராஜன். அவனது அடியொற்றி, அவனுக்குப் பின் வந்த மன்னர்கள் காலத்திலும் தமிழ் இசை, தேவாரம் முதலியன ஆலயங்களில் முழங்கி வர அவனே வழிகாட்டியாக இருந்திருக்கிறான்.

தமிழிசை வடிவங்கள்

தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் தமிழிசையின் வடிவங்கள் பல்வேறு வகையாக ஒலித்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. சைவத்திருமுறைகளில் திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் இங்கு இருந்து மன்னனுக்கு வழிகாட்டியாக, குருநாதராக இருந்ததோடல்லாமல், அவரது தஞ்சை புகழ்பாடும் திருவிசைப்பா ஆலயத்தில் ஒலித்திடவும் காரணமாக இருந்திருக்கிறார். கருவூர்த்தேவர் தன்னுடைய திருவிசைப்பா பத்து பாடல்களிலும் 'இஞ்சி சூழ் தஞ்சை' என்று தொடங்கி தஞ்சையின் பெருமைகளைச் சொல்லிப் பின் ராஜராஜேச்சரத்துப் பெருவுடையாரின் கருணையை வேண்டி பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். முதன்முதல் ராஜராஜேச்சரம் என்ற இவ்வாலயத்தின் பெயரை மக்கள் உணரக்கூடிய வாய்ப்பினையும் திருவிசைப்பாதான் ஏற்படுத்தியிருந்தது. ஒன்பதாம் திருமுறையில் வரும் கருவூராரின் திருவிசைப்பா அன்று ஆலயங்களில் பாடப்பட்டிருக்க வேண்டும். திருப்புகழ் பாடி குமரன் அருள் பெற்ற அருணகிரிநாதரும் தனது திருப்புகழில் இங்கு தஞ்சையில் ஆலயத்து கோபுரத்தமர்ந்த பெருமானைப் பாடிக் களித்திருக்கிறார். இவர் தனது திருப்புகழ் பதிகங்களில் மூன்று பாடல்களில் இவ்வாலயத்துக் குமரனை மனதாரப் புகழ்ந்து பாடியிருப்பதைக் காணமுடிகிறது. இங்கு இரண்டாம் சரபோஜி காலத்தில் அந்த மன்னரின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பார் "தஞ்சை பெருவுடையார் உலா" எனும் அற்புதமான உலா இலக்கியத்தைப் படைத்திருக்கிறார்.

தஞ்சை இராஜராஜேச்சரத்தில் இயல் இசை நாடகம் எனும் தமிழனின் முத்தமிழ் பிரிவுகள் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. இவை இங்குள்ள கல்வெட்டுகள், சுவடிகள், சிற்பங்கள், ஓவியங்கள் வாயிலாக அறியலாம். பின்னர் வந்த விஜயநகரப் பேரரசுகள், மராத்தியர்கள் ஆகியோர் காலத்திலும் இவை இங்கு சிறப்பாக வளர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஓர் கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.

இசைக்கலையும் ஆடற்கலையும்

இராஜராஜன் தேவார ஏடுகளைச் சிதம்பரம் ஆலயத்திலிருந்து மீட்டான் எனவும், அதனை திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி, அவ்வூர் பொல்லாப் பிள்ளையாரின் அருளால் முறைப்படுத்திக் கொடுத்தார் எனவும் வரலாறு சொல்லுகிறது. நம்பியாண்டார் நம்பி தன் அருள் திறத்தால் திருமுறைகளுக்குரிய இசையத் தெரிந்து இசையோடு இறைவனை வழிபடவேண்டுமென்று எண்ணி, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் உதித்த ஒரு பெண்மணிக்கு இறைவன் வழங்கிய இசைத்திறத்தால் பண்ணடவு வகுத்துக் கொடுக்க தேவாரப் பாடல்கள் அதற்குரிய இசையோடு பாடத்தொடங்கினர். எனினும் இராஜராஜன் காலத்துக்கு முன்பிருந்தே ஆலயங்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இதற்காக பணியாற்றியோர் பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவர் ஒரு கட்டுரையில் குறிப்பிடும் செய்தியை இங்கு பார்க்கலாம். அவர் கூறுகிறார், "இந்திய இசைப் பாடல்களிலேயே முதன் முதலில் தோன்றிய பாடல்கள் தேவாரப் பாடல்களே. தற்போதுள்ள தமிழிசை எனப்படும் கர்நாடக இசையின் தனித் தன்மைக்கு காரணமான ராகம், கமகம், தாளம் போன்றவற்றுக் கெல்லாம் அடிப்படி இலக்கியங்களாக இந்தப் பாடல்கள் திகழ்கின்றன. தற்போதுள்ள ராகங்கள் எல்லாம் தேவாரப் பண்களின் வளர்ச்சி நிலையில் உருவானவையே".

தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் தேவாரத் திருமுறை ஓதுதற்கு 48 பிடாரர்கள் (ஓதுவார்கள்) நியமித்து அவர்களுக்குத் துணையாக ஐம்பது பக்கவாத்தியங்களையும் அமைத்துக் கொடுத்து நிவந்தங்களை ஏற்படுத்தினான். இவ்வாறு தேவாரத் திருமுறைகளும் திருமுறைகளின் பண்ணிசை மரபும் கோயில்களில் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

திருப்பதிகங்கள் அனைத்தும் வாய்ப்பாடலாக இருக்கின்றன. அப்படிப்பாடப்படும் பாடல்களோடு உடன் வாசிக்கப் பல பக்க வாத்தியங்களும் அப்போது பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. இங்கு திருமுறை விண்ணப்பம் பாடுவோர், உடுக்கை வாசிப்போர், மத்தளம் வாசிப்போர் ஆகியோர் இருந்ததற்கான குறிப்புகள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயிலில் நாட்டியக் கலை மிக மேன்மையாக வளர்க்கப்பட்டிருக்கிறது என்பது முக்கிய செய்தி. தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் நாட்டியத்திற்காக நானூற்று ஏழு நாட்டிய மங்கைகளும் ஏழு நட்டுவனார்களும், உடன்பாடுவோர் நான்கு பேரும், மெராவியம் எனும் இசைக்கருவி இசைப்பார் இருவர், கானம் பாடுவோர் இருவர், வங்கியம் இசைப்பார் மூவர், பாடவியம் எனும் இசைக்கருவியை இசைப்போர் நால்வர், உடுக்கை வாசிப்போர் இருவர், வீணை வாசிப்போர் இருவர் ஆரியம் பாடுவார் மூவர் (அதாவது வேதம் ஓதுதல்) தமிழ் பாடுவோர் நால்வர், கொட்டி மத்தளம் வாசிப்போர் இருவர், முத்திரைச் சங்கு ஊதுவோர் மூவர், பக்கவாத்தியம் வாசிப்போர் ஐவர் இப்படிப் பற்பலர் இங்கு பணிபுரிந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உண்டு. திருப்பதியம் விண்ணப்பம் செய்வோருக்கு பிடாரர்கள் என்று பெயர். இந்த செய்திகளிலிருந்து மாமன்னன் ராஜராஜன் இசையின் மீது எந்த அளவு ஆர்வம் கொண்டிருந்தான் என்பது புலப்படுகிறது.

இப்படி ஆலயத்தில் பாடுவதற்கும், உடன் வாத்தியம் வாசிப்பதற்கும், நடனமிடுதற்கும் இந்தக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் இவைகள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நாட்டியமாடும் நங்கையர் நானூற்றி ஏழு பேருக்கும் இரண்டு தளிச்சேரிகள் (குடியிருப்புப் பகுதிகள்) அமைத்து அவரவர்க்குத் தனித்தனியாக வீடுகள் கொடுத்து அவற்றுக்கு இலக்கங்களும் கொடுத்த செய்தி குறித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நங்கையர் அனைவர் பெயர்களும் அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவர், முன்பு பணிபுரிந்த இடம் ஆகிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருப்பதிலிருந்து, அரசன் இசை ஆடற்கலைஞர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்தான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

அருணகிரிநாதரின் திருப்புகழ் இசையில் தஞ்சை

'திருப்புகழ்' எனும் சந்தக்கவிதைகளை இயற்றி அறுமுகனுக்கு இசை மழை பொழிந்தவர் அருணகிரிநாதர். அவர் பாடல்களில் சந்தம் தாளம் தவறாமல் வந்து விழுந்திருப்பதை ரசிக்காதவர் இல்லை. அப்படிப்பட்ட அருணகிரியின் திருப்புகழ் பாடல்கள் சிலவற்றில் தஞ்சை மேவிய பெருமாளே என்று முருகனை அவர் வழிபட்டிருக்கிறார். தஞ்சைக் கோயிலில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஆலயம் நாயக்கர் கால ஆட்சியில் சேவப்ப நாயக்கர் கட்டியதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தின் கோபுரத்தில் காணப்படும் முருகனின் விக்கிரகத்தைப் பார்த்து அருணகிரியார் இந்தப் பாடல்களைப் பாடியிருக்கிறார். அதில்

"அஞ்சன வேல்விழி மடமாதர் அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறு மாவுன தடிசேர விம்பமதாயருள் அருளாயே
நஞ்சமு தாவுணும் அரனார்தம் நன்கும் ராவுமை அருள்பாலா
தஞ்சென வாமடியவர் வாழத் தஞ்சையில் மேவிய பெருமாளே."

இந்தப் பாடலில் அருணகிரியார் ஆலகால விடத்தை அமுதாக உட்கொண்ட பெருமானின் புதல்வா! உமாதேவியாரால் அருளப்பட்ட பாலனே! தம்மைச் சரணடைந்தவர்கள் வாழும் தஞ்சையில் எழுந்தருளியிருக்கும் தலைவனே! யான் இனியும் மைதீட்டிய வேல்போன்ற கண்களுடைய மாதரின் மோகத்தில் மூழ்கித்திரிவேனோ? அடியேன் மேன்மை அடையும்படியாக உன்னுடைய திருவடிகளைச் சேர அருள்புரிவாயாக என்கிறார்.

மற்றொரு பாடலில் பூங்கொம்பு போன்ற இடை, கொவ்வைக்கனி யொத்த அதரங்கள், கருமேகமன்ன கூந்தல், மேருமலையனைய தனங்களையும் உடையவளாகிய குறக்குலப் பெண்ணாம் வள்ளியைத் தலைவியாகக் கொண்ட நற்குணங்களனைத்தையும் உடைய வேலவா! சம்பரனைக் கொன்றவனான காமனை எரித்து அழித்த நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானுக்கு ஆச்சாரியனே! மிக உயர்ந்த கோபுரங்களும், செம்பொன்னாலாகிய மாளிகைகளுமுடைய தஞ்சை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மேலோனே! கடல் மீன்களை வீழ்த்தும்படியான அழகிய நெடிய கண்களையுடைய மாதரின் இன்பக் கடலாகிய தீயில் அழுந்தி மீளமுடியாமல் தவிக்கின்ற நான், என்பிரானாகிய உன்னை நினையாமல் போன இந்திரஜாலம் போன்ற இந்த மயக்கம் தீர இங்கு வாவென்று உன்னை அழைத்தேன். எனக்கு ஞானம் அருள்வாய்! என்கிறார்.

அடுத்தப் பாடலில் கற்பக விருக்ஷத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவனும், பாஞ்சஜன்யம் எனும் சங்கை உடையவனும் எல்லாப் பொருள்களுக்கும் ஆதியாகிய கேசவனும், உலகோர் புகழ்வாழும்படியான 'கவுஸ்துவம்' எனும் மணியை மார்பில் அணிந்தவனாகிய திரிவிக்கிரமாவதாரம் எடுத்த திருமாலின் மருகனே! எண்திசை பூமி இவை முற்றும் நிரம்பப்பெற்ற பலம் பொருந்திய அசுரசேனை சாம்பற்பொடிபோல அழிய வென்று மிக்க ஒளி வீசும் திருமேனியை உடைய வேலவா! சந்திரனைச் சூடியவலும், நாகங்களை ஆபரணமாகப் பூண்டவளும், உலகை உண்ட நாரணி என்ற பெயரை உடையவளும் ஆலகால விஷத்தை உண்டவளும், உலகத்திற்கெல்லாம் தாயுமாகிய உமாதேவியார் பெற்ற ஞானப்புதல்வனே! குறத்தியாகிய வள்ளியம்மை உறங்கும் அழகிய மார்பை உடையவனே, பலமிக்க நீலமயிலாகிய வாகனத்தில் விளங்கி, பிரமனும், திருமாலும், அவரவர் வாழ்கின்ற பதிகள் அனைத்துக்கும் மேன்மை பொருந்திய தஞ்சை மாநகரின் சிறந்த கோயில் ராஜகோபுரத்தில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமானே! மணமிக்க கூந்தலைக் கோதி மாலைகள் தரித்து, மஞ்சளால் மேனியை அழகு செய்துகொண்டு கழுத்தில் உயர்ந்த ஆணிமுத்துக்கள் பொருந்திய மாலைகளை அணிந்து, தெருவின் நடுவில் கண்டபேர்களையெல்லாம் அன்புள்ளவர்கள் போல் அழைத்து வந்து, மேருமலையன்ன தனங்களில் கண்களாகிய கூரிய வேலினை எறிந்து, விலையைக் கூறி வந்தவர்களையெல்லாம் கையினால் அணைத்து, தேனூறும் அதரங்கள் பருகி, மந்தமாருதம் வீசும் பஞ்சணையில் புணர்ந்து, மயக்கம் செய்யும் மங்கையரின் சுகபோகமெனும் தீவினைகள் ஒளிமங்கிக் கெடுமாறு எனக்கு அறிவைப் புகட்டி வண்டுகள் உலவும் கடம்ப மாலை சற்றிலங்க வந்து அருள் புரிவாயே! என்கிறார்.

பெருவுடையார் உலா

இரண்டாம் சரபோஜி மன்னரின் அவைக்களப் புலவராய்த் திகழ்ந்த கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பக்தி உலா பெருவுடையார் உலா. இதில் சிவபெருமானின் திருமேனி எழிலினையும், கோயிலின் சிறப்பையும் பலவாறு சுவைபட பாடியுள்ளார். ஒளிமிக்க பிறைச்சந்திரனைத் தம் சடையில் அணிந்த எங்கள் பெருமான் ஸ்ரீ பிரகதீஸ்வர சுவாமி. அவர் வழிபடுபவர்க்குப் புகழினைக் கொடுப்பார்.. கருணையுடைய அருள்மொழி விநாயகப் பெருமானின் அழகிய மலர் போன்ற இரு திருவடிகளையும் பணிந்து வணங்கி அவர் அருளால் இதை இயம்பலுற்றேன் என்பதாகும்.

இராஜராஜேச்சர நாடகம்.

இராஜராஜன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது பிறந்த நாள் மிகச் சிறப்பாக அந்த நாட்களில் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. "இராஜராஜேச்சர நாடகம்" எனும் கூத்து அத்தகைய விழாக்களில் நடிக்கப்பெறுவது உண்டு. அந்த நாடகத்தை ஆடுபவர்களுக்கு ஆண்டுதோறும் நூற்றியிருபது கல நெல் அளிக்க இராஜேந்திர சோழன் ஏற்பாடு செய்திருந்த செய்தி நமக்குத் தெரியவருகிறது.அக்காலத்தில் நடனங்களும் நாடகங்களும் அனேகமாக ஆலயங்களிலுள்ள அரங்க மண்டபங்களிலேயே நடைபெற்று வந்தது என்று கூறுவதால் நகரில் பல ஆடலரங்குகளும், நாடகச் சாலைகளும் இருந்தன என்று தெரிகிறது. மேலும் இசை நாடகங்களில் வல்ல நாடகமய்யன், சாக்கை, கனபாடி காமரப் பேரரையன், வாத்திய மாராயன் முதலியோரும் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிகிறது. மேற்சொன்ன ராஜராஜேச்சர நாடகம் நெடுங்காலமாக வழக்கில் இல்லாமல் போய்விட்டது.

ஆலயம் வளர்த்த தமிழிசை

இராஜராஜ சோழன் காலத்தில் தேவார மூவரது அருட்பாடல்கள் ஒரு சிலவே திருவாரூர் போன்ற பெருந்தலங்களில் திருமுன்னர் பூஜாகாலங்களி ஓதப்பெற்றன. தஞ்சைப் பெரிய கோயில் எடுப்பிக்கு முன்னர் முதலாம் இராஜராஜன் திருவாரூர் தியாகேசர் சந்நிதியில் தினமும் பாடுகின்ற சில பாடல்களின் அருட்சுவையையும், பொருட்சுவையயும் உணர்ந்து இவை எவ்வகைப் பாடலென கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றில் மற்ற பாடல்களையும் தேடிக் கண்டுபிடிக்க விரும்பி முயற்சி செய்தான். முயற்சி திருவினையாகியது.

சிதம்பரத்துக்குச் சென்ற மன்னனிடம் தீட்சிதர்கள் அந்த ஏடுகளை அங்கு கொண்டு வந்து வைத்த மூவரும் வந்தால் அவற்றை எடுத்துச் செல்லலாம் என இயம்பினர். மன்னனும் அறிஞர் பெருமக்களின் ஆலோசனையின் பேரில் அம்மூவருக்கும் பொன்னால் சிலைகள் செய்து அவற்றைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு போய் தீட்சதரிடம், இதோ அந்த மூவர், ஏடுகளை எடுங்கள் என்று சொல்ல அவர்களும் மறுபேச்சு இன்றி அந்த ஏடுகள் இருந்த அறைகளைத் திறந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுவடிகளில் பல அரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகியிருப்பதையும், மீதமிருந்த சில ஏடுகளை மட்டும் எடுத்துச் சுத்தம் செய்து இறைவன் வாக்குப்படி அவற்றை நம்பியாண்டார் நம்பி மூலம் பன்னிரு திருமுறைகளை வகுத்தான் என்பதை முற்பகுதியில் பார்த்தோம். இவ்வாறு பெருமன்னன் ராஜராஜனின் காலம் தமிழுக்கும், தமிழிசைக்கும் பெருமைக்குரிய காலமாகத் திகழ்ந்தது என்பதை வரலாறு நமக்கு அறிவிக்கிறது.

முடிவுரை.

உலகம் உள்ளவரை, இறைவனும், ஆலயங்களும் வழிபாடுகளும் என்றென்றும் நீடிக்கும் என்று மாமன்னர் உறுதியாக நம்பினார். இந்த இறைவழிபாடு சிறக்கவும், மக்கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபடவும் இந்தத் தேவார இசையை மக்களுக்குக் கொடுத்து அவை உலகம் உள்ளளவும் இருக்க ஏற்பாடு செய்தார். பெரிய கோயிலின் பெருமையும், தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் இந்த அரிய தமிழிசை வடிவங்கள் வழி என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

You can give your comments here