பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 5, 2018

கொன்றைவேந்தன்


                                                                                                                                                                 இயற்றியவர்: ஒளவையார்.
                   (விளக்கவுரை: தஞ்சை வெ.கோபாலன்)
கொன்றைவேந்தன் எனும் இந்நூலுக்கு, இதன் கடவுள் வாழ்த்து “கொன்றைவேந்தன்” எனும் சொல்லோடு தொடங்குவதால் அந்தப் பெயர் பெற்றது. கொன்றையை அணிந்தவன் சிவபெருமான், அவருடைய செல்வன் கணபதி, அந்த விநாயகப் பெருமானை வணங்கித் தொடங்குகிறது இந்நூல். இதனை இயற்றியவர் ஒளவையார். இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 91 வரிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வரியும் சுருக்கமாகச் சில நீதிகளைப் போதிக்கின்றன. இந்த வரிகள் அகரவரிசையில் தொடங்குவதைக் காணலாம். உயிரெழுத்து அனைத்தையும் முதலெழுத்தாகக் கொண்டும், பின் பெரும்பாலான உயிர்மெய் எழுத்துக்களை முதலெழுத்தாகக் கொண்டு இயற்றப்பட்டிருக்கிறது. இளம் பருவத்தினர் முதலில் இதுபோன்ற எளிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தால், பிறகு தொடர்ந்து இதுபோன்ற நீதி நூல்களைக் கற்க விரும்புவார்கள். தொடக்கக் கல்வி பயிலும் மாணவர்கள் படிக்க வேண்டிய நூல் கொன்றைவேந்தன். இதில் வரும் வரிகளைப் பழமொழியாகவும் பயன்படுத்துவார்கள். இனி நூலுக்குள் செல்லலாம்.

  கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை                     என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. 
          
        கொன்றைமலர் மாலையை அணிந்த பரமேஸ்வரனின் செல்வனாகிய விநாயகப் பெருமானின் பாதாரவிந்தங்களை ஏத்தித் தொழுது பணிகின்றோம்.               
--000--
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
        நம்மைப் பெற்ற தாயும் தந்தையுமே நாம் கண்ணால் காணுகின்ற தெய்வங்கள்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
      கோயில்களுக்குச் சென்று இறைவனை வணங்குவதே மிகவும் நல்லது.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
      மனைவி மக்களோடு இணந்து இனிதாக வாழ்வதே நல்ல அறமாகும். மற்றவை நல்ல அறங்கள் ஆகாது.
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
      வறியவர்க்கு ஈயாமல் கஞ்சத்தனம் செய்பவர்களது செல்வத்தைத் தீயோர்கள் கவர்ந்து கொள்வார்கள். 
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
      அளவோடு உண்ணுதல் பெண்களுக்கு ஆரோக்கியமும் அழகும் தரும்.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
      ஊராருடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்டால் அவன் குடி அடியோடு அழிந்து போகும்.
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
      ஒருவனுக்கு நல்ல கல்வியும், கணக்கிடும் அறிவும் இரு கண்களைப்போலப் பயன்படக் கூடியவை.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
      பிறர் ஏவாமுன்னம் தாங்களாகவே குறிப்பால் அறிந்து செயலாற்றும் பிள்ளைகளே நல்ல மருந்து         போன்றவர்கள்.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
      இரந்துண்ணும் நிலை வந்தால்கூட மனந்தளராமல் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு
      காதலொருவனைக் கைப்பிடித்து அவனொடு ஒன்றி இருந்து இனிது வாழவேண்டும்.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
      வேதியர்களுக்கு நன்கு கற்று வேதம் ஓதுவதினும் நல்லொழுக்கம் பெருமை தரும்.
12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
      பிறரது செல்வம், கல்வி மீது பொறாமை கொண்டு ஆத்திரமுற்று பேசினால், பேசுபவனின் செல்வமும்          பெருமையும் முற்றும் அழிந்து போகும்.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
      பயிர்த்தொழில் செய்ய நல்ல நிலத்தையும், பணத்தையும் விரைந்து உழைத்துப் பெறு.
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை
      சொன்ன சொல் தவறாமல் இருப்பதே “கற்பு” எனப்படுகிறது.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு
      தன் கெளரவம், கற்பு, பெருமை இவைகளைத் தற்காத்துக் கொள்வதே பெண்ணுக்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
      நாம் விரும்பியது எதுவும் நமக்குக் கிடைக்காது என்பது உறுதியானால் அதை அறவே மறந்துவிடு.
17. கீழோராயினும் தாழ உரை.
      நம்மைவிட கீழோராக இருந்தாலும் அவர்களிடம் உரையாடும் போது பணிவாகப் பேசு.
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
      எல்லோரிடமும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இருந்தால் நமக்கு சுற்றத்தார் எவருமே இருக்கமாட்டார்கள்.
19. கூரம் பாயினும் வீரியம் பேசேல்.
      கூர்மையான ஆயுதம் நம் கையில் இருந்தாலும் கூட அகம்பாவத்தோடு வீரம் பேசுதல் கூடாது.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
      நமக்குக் கெடுதலை யாரேனும் செய்தால் அவர்களின் தொடர்பை உடனடியாக விட்டுவிட வேண்டும்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
      செல்வங்களை இழந்து வறுமையடைந்தாலும், உறுதியோடு முயன்று உழைத்து மீண்டும் செல்வத்தைச்         சேர்த்துக் கொள்ள வேண்டும்.
22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
      நம்மிடம் ஏராளமான செல்வம் குவிந்திருந்தாலும் நாம் கற்ற கல்வியே அதனினும் பெரிய செல்வம்.
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி.
      தன்னை நம்பி வாழும் மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஓடிவந்து உதவி செய்வதே ஒரு அரசன்         செய்யவேண்டிய கடமை என்பதை உணரவேன்டும்.
24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
      ஊர்வம்புக்கு அலையும் கோள்சொல்லியிடம் சென்று ஒருவன் மேலும் கோள் மூட்டுவானாயின் அச் செயல்         எரியும் தீயை மேலும் தூண்டிடும் காற்று போல ஆகும்.
25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை.
      பிறரிடம் குற்றம் கண்டு அதை ஊரறியச் சொல்லித் திரிபவன் எல்லோருக்கும் பகைவன் ஆவான்.
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை.
      வம்சம் செழிக்க காலாகாலத்தில் வாரிசுகளை உருவாக்கக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மலடி   என்று பெயரெடுக்காமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.
27. சான்றோன் என்கை ஈன்றோட் கழகு.
      ஒரு தாய்க்குத் தான் பெற்ற மகனை எல்லோரும் சான்றோன் என்று போற்றுவதுதான் சிறப்பைத் தரும்.
28. சிவத்தைப் பேணல் தவத்திற்கு அழகு.
      ஒருவன் செய்கின்ற தவத்துக்குப் பெருமை அவன் சிவபெருமானைப் பேணித் துதிப்பதே.
29. சீரத் தேடின் ஏரைத் தேடு.
      சிறப்பினைத் தரும் நல்ல வாழ்க்கையை விரும்பினால் பயிர்த்தொழிலை விரும்பிச் செய்.
30. சுற்றத்திற்கு அழகு சூழ விருத்தல்.
      சுற்றத்தார்க்கு அழகு ஒருவருக்கொருவர் நன்மையிலும், கேட்டிலும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
      சூது, வஞ்சகம், தேவையற்ற வீண்வாதங்கள் இவைகள் மனதுக்கு வேதனையை விளைவிக்கும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆகும்.
      தர்மத்தின் அடிப்படையில் ஒருவன் செய்கின்ற தவத்தை மறந்து தீயவழியில் நடந்தால் அனைத்துப்         பழிபாவங்களும் அவனைச் சென்றடையும்.
33. சேமம் புகினும் யாமத் துறங்கு.
      காவல் தொழிலைச் செய்த போதிலும் ஒருவன் இரவில் ஒரு ஜாமம் தூங்க வேண்டும். ஜாமம் என்பது ஏழரை நாழிகை, மூன்று மணி நேரம்.
34. சையொத் திருந்தால் ஐயமிட்டு உண்.
      உன் தேவைக்கும் மிகுந்து செல்வம் சேர்ந்திருந்தால், பசியால் வாடும் பிறருக்கு உணவு கொடுத்து              நீயும் உண்பாயாக.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
      அறவழியில் பாடுபட்டுப் பொருள் சேர்ப்பவர் எல்லா செல்வங்களையும் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.
      சோம்பித் திரியும் மக்கள் உணவுக்கும், உடைக்கும், குடிக்கும் நீருக்குமே அலையவேண்டியிருக்கும்.
37. தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை.
      ஒரு மகனுக்கு அவனுடைய தந்தை சொல்லும் அறிவுரைகளை மிஞ்சிய மந்திரம் எதுவும் கிடையாது.
38. தாய்சொல் துறந்தால் வாசகம் இல்லை.
      தாயின் சொல்லை மதிக்காவிட்டால் மக்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
      செல்வத்தைச் சேர்க்க வேண்டுமானால், கடல் தாண்டி பிற நாடுகளுக்குச் சென்றாவது தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
      கோபத்தை வளர்த்துக் கொண்டே போனால், அது இறுதியில் பெரும் சண்டையில் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
      கணவனுக்கு நேரிடும் சிறு துன்பமாயினும் மனைவி துடிதுடித்துப் போவாள். அப்படிப் போகவில்லையானால்         அவள் மடியில் கட்டிக்கொண்ட நெருப்புக்குச் சமம். எந்த சமயமும் அது கணவனைச் சுட்டெரிக்கும்.
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.
      கணவனோடு அன்புடன் இணைந்து வாழாமல் அவனைத் தூற்றித் திரியும் மனைவி அவனுக்கு எமன்         போன்றவளாவாள்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்.
      குற்றங்களைச் செய்து தெய்வத்தின் கோபத்துக்கு ஆளானால், அவன் அதுநாள் வரை செய்த தவங்கள்   அனைத்தும் அழிந்து போகும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
      முன்னோர்கள் தேடிவைத்த சொத்தை மேலும் சேர்க்காமல் அழிப்பவன் வாழ்க்கை வறுமையிலும்         துன்பத்திலும் முடியும்.
45. தையும் மாசியும் வையகத் துறங்கு.
      தை, மாசி மாதங்களில் குளிர் அதிகமாக இருக்குமாதலால், கூரையில் வைக்கோல் வேயப்பட்ட         இல்லங்களில் படுத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
      பிறரிடம் மண்டியிட்டுத் தொழுது பிச்சைபெற்று உண்ணும் உணவினும், தானே நிலத்தை உழுது        பயிரிட்டு அதில் கிடைக்கும் தானியத்தைச் சோறாக்கி உண்பது இனிமை பயக்கும்.
47. தோழனோடும் ஏழமைப் பேசேல்.
      தனக்கு நெருங்கிய நண்பனாயிருந்த போதிலும் அவனிடம் தன் வறுமை நிலைமையைப் பேசாதே.
48. நல்லிணக்கம் அல்லது அல்லற் படுத்தும்.
      நல்லவர் அல்லாதவர்களோடு நமக்கு ஏற்படும் தோழமை நமக்குத் துன்பத்தையே கொடுக்கும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
      நாடு வளம் பெற்று நன்கு செழித்திருக்குமானால், நம் வாழ்வுக்கும் ஒரு தீங்கும் வராது.
50. நிற்கக் கற்றல் சொற்றிறம்பாமை.
      சொன்ன சொல்லைக் காப்பாற்றும் திறன் இருக்குமானால் நம் வாழ்க்கைச் சிறப்பாக இருக்கும்.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
      நீர் ஆதாரமுள்ள நல்ல நீர்நிலைகள் இருக்கின்ற இடங்களில் அமைந்த ஊரில்தான் குடியிருக்க வேண்டும்.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
      சாதாரணமானதாக இருந்தாலும் செய்ய வேண்டிய செயல்களை நன்கு ஆராய்ந்து, சாதக பாதகங்களைக்         கணக்கில் கொண்டு துணிந்து செயல்படுத்த வேண்டும்.
53. நூல்முறை தெரிந்து சீலத் தொழுகு.
      மனிதன் எப்படி வாழவேண்டுமென்று பல நீதிநூல்கள் சொல்கின்றன. அவற்றை நன்கு கற்றறிந்து அதன்         வழியில் ஒழுக்கத்தோடு வாழவேண்டும்.
54. நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை.
      நம் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் இருக்குமானால் அது நமக்கு நன்றாகத் தெரியும்.
55. நேரா நோன்பு சீராகாது.
      நோன்பை எப்படிக் கடைபிடிக்கவேண்டுமென்ற முறை தெரியாமல் செய்தால் அது நன்றாக அமையாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
      நம்மிடம் அடங்கி நடப்பவராயினும் அவர்கள் மனம் வருந்தும்படி பேசக் கூடாது.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
      ஏழ்மை நிலையில் இருப்பவராயிருந்தாலும், பிறரது நட்புக்கு உகந்தவராக இருக்க வேண்டும்.
58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.
      ஓர் உயிரைக் கொன்று அதன் இறைச்சியைத் தின்னாதிருத்தலே சிறந்த நோன்பு.
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
      விளைவித்த பயிரின் விளைச்சலைக் கண்டே அவன் புண்ணியம் செய்தவனா என்பது தெரிந்துவிடும்.
60. பாலோடாயினும் காலம் அறிந்துண்.
      பாலும், பருப்புமிட்டு உண்ண வசதியுள்ளவனாயினும் உரிய நேரத்தில் உணவை உண்ணவேண்டும்.
61. பிறன்மனை புகாமை அறமெனத் தகும்.
      பிறன்மனை நோக்கா பேராண்மையே உலகம் போற்றும் அறம்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
      குழந்தைப் பருவத்தில் தாய்ப்பாலை அதிகம் அருந்தியவன் பலசாலியாக இருப்பான்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
      புலால் உண்பது, பாதகக் கொலை புரிவது, பிறர் பொருளைக் கவர்வது இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
      பண்பாடு இல்லாதவர்கள் நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். 
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
      ஞானமும், பண்பாடும் கைவரப்பெற்றவர்கள் சுற்றம் அல்லது நட்பாக இருந்தாலும் அவர்கள்            செய்யும் தவறுகளைக் கண்டு வெகுண்டெழுவார்கள்.   
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
      அடங்காமையும், அகந்தையும் இல்லாத மகளிர்க்கு
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
      எந்தச் செயலையும் ஆழ்ந்து ஆலோசித்து நிதானமாகச் செய்தால் உலகையே தாங்கும் வலிமை                உடையதாக இருக்கும்.
68. பொல்லாங் கென்பவை எல்லாந் தவிர்.
      துன்பத்தைக் தரக்கூடிய தீய செயல், எண்ணம் அல்லது சொற்களைத் தவிர்த்துவிட வேண்டும்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.
      சிறந்த உணவு என்பது தானே உழைத்துப் பயிரிட்டு அதன் பலனை உண்பது.
70. மருந்தே யாயினும் விருந்தொடு உண்.
      நாம் உண்பது உயர்ந்த உணவாக இருந்தாலும் சரி அல்லது மருந்தாயிருந்தாலும் சரி, மனத்துக்கு               உகந்த விருந்தினர்க்ளோடு உண்ண வேண்டும்.
71. மாரியல்லது காரியம் இல்லை.
      நாட்டில் நடக்கும் அத்தனை காரியங்களுக்கும் மழையே அடிப்படை ஆதாரம், மழைபெய்வதை யொட்டியே         நடவடிக்கைகள் எல்லாம் நன்கு நடைபெறும்.
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
      மேகம் மண்டிய வானத்தில் மின்னல் தோன்றுமானால் அது தொடர்ந்து நல்ல மழைபெய்யும் என்பதற்கான         அடையாளம்.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
      கடலில் கப்பலைச் செலுத்த வேண்டுமானால் ஒரு தேர்ந்த மாலுமி இருக்க வேண்டும்.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
      வாழ்வின் இளமையில் ஒருவன் செய்யும் வினைகளுக்கேற்ப, நன்மையோ, தீமையோ, அவன் வாழ்வின்         பிற்பகுதியில் அவனுக்கே விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
      வாழ்க்கை அனுபவமிக்கப் பெரியோர்கள் சொல்லும் அறிவுரை அமிழ்தம் போன்று நன்மை பயக்கும்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
      படுத்து உறங்குவதற்கு இலவம் பஞ்சு மெத்தையே சிறந்தது.
77. மேழிச் செல்வம் கோழைபடாது.
      வயலில் உழுது பயிரிட்டுப் பயிர்த்தொழில் செய்து உழைத்த செல்வம் பாழ்பட்டுப் போகாது.
78. மைவிழியார் தம்மனை அகன்று ஒழுகு.
      கண்களில் மைபூசி மேனிமினுக்கும் வேசியர் இல்லங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும்.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
      சான்றோர் சொல்லும் அறிவுரைகளை ஏற்க மறுத்தால் அவன் செயல்கள் அனைத்தும் பாழாகும்.     
80. மோனம் என்பது ஞான வரம்பு.
      மோன நிலை என்பது ஞானங்கள் கைவரப் பெற்றவர்கள் அடையும் நிறைவு நிலை.
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
      சோழமன்னனாயினும் அளவறிந்து செலவிட்டு வாழவேண்டும், இல்லையேல் வறுமை விஞ்சும்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
      வானம் பொய்த்து மழையின்றி வறண்டு பூமி வறண்டுவிட்டால் தானம் என்பது இல்லாமல் போகும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
      வீட்டுக்கு வந்த விருந்தினர்களை நன்கு உபசரித்து போற்றாதவர்கள் நல்லொழுக்கமும், இல்லற                தர்மமும் அற்றவராகக் கருதப்படுவர். 
84. வீரன் கேண்மை கூர் அம்பு ஆகும்.
      நல்ல வீரன் ஒருவன் நட்பு நம்மிடம் கூரிய அம்பு இருந்தால் எப்படி பாதுகாப்போ அப்படி                பாதுகாப்பாகக் கருதலாம்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
      மனத்திட்பமும் உறுதியும் உடையோர் வறுமை வந்தெய்திய போதும் பிறரிடம் கையேந்த மாட்டார்கள்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
      தளராத ஊக்கமே ஒருவன் செல்வச் செழிப்புக்குக் காரணமாக இருக்கும்.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
      மாசற்ற நல்ல வெள்ளையுள்ளம் படைத்தவர்களிடம் கள்ளத் தனங்களோ கபடமோ இருக்காது.
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை.
      அரசன் அல்லது ஆட்சியாளன் வெகுண்டெழுந்து சீறுவானாயின் அப்போது நமக்குத் துணை இருப்பார்   எவரும் இருக்க மாட்டார்கள்.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
      (இந்த வரியை சில நூல்களில் “வையம் தோறும் தெய்வம் தொழு” என்று குறிப்பிடுகிறார்கள். இங்கு            வைகல் தோறும் என்றே கொண்டு தினம் காலையில் தெய்வத்தைத் தொழ வேண்டுமென்று பொருள்         கொள்வோம். வையம் தோறும் என்றால் உலகிலுள்ள எல்லாவிடத்தும் சென்று தொழவேண்டும்.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
ஒத்த இடம் என்பதை சிலர் மேடு பள்ளமில்லாத இடம் என்று உரை சொல்கின்றனர். இங்கு ஒத்த எனும் சொல்லுக்கு தூங்குவதற்குத் தகுதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து உறங்க வேண்டும் என்றே பொருள் கொள்வோம்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
      சிறந்த நூல்களைக் கற்றுச் சான்றோனாக விளங்குபவன் தான் நல்லொழுக்கமும், நற்செயல்களும்         கொண்டவனாக இருக்க முடியும்.
                              (கொன்றைவேந்தன் உரை நிறைவடைந்தது)

      உரை: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,                    28/13 எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007. # 9486741885

No comments: