பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 5, 2018

ஆத்திசூடி


                                                                                                                                                                                       இயற்றியவர்: ஒளவையார்.  

(ஆத்திசூடிக்கு எளிய உரை: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், பாரதி இயக்கம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007. # 9486741885)

                                         ============  
       தமிழ்ப் புலவர் ஒளவையார் இயற்றிய பல நீதி நூல்களில் ஆத்திசூடி என்பது குழந்தைகள் மிக எளிமையாகக் கற்றுப் பயனடைய வேண்டுமென்று இயற்றிய நூல். இதனைச் சின்னஞ்சிறு சொற்றொடர்களால் எளிமையாக இயற்றிக் கொடுத்திருக்கிறார். இதன் காப்புச் செய்யுள் “ஆத்திசூடி அமர்ந்த தேவனை” எனத் தொடங்குவதால் இது “ஆத்திசூடி” என்றே பெயர் பெற்றிருக்கிறது. மகாகவி பாரதியாரும் ஆத்திசூடியின் பெருமையினை உணர்ந்து அவரும்  “புதிய ஆத்திசூடி”யை இயற்றித் தந்திருக்கிறார்.

       இந்த நூலை இயற்றிய ஒளவையார் கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி, போன்ற பல நீதி நூல்களையும் இயற்றியுள்ளார். இந்த நூலைக் குழந்தைகள் முதலில் கற்கத் தொடங்க வேண்டும். இதன் அழகினை உணர்ந்த பின்னர் அவர்களாகவே இதர நீதி நூல்களையும் கற்கத் தொடங்குவார்கள். இளம் உள்ளங்களில் இது போன்ற நீதி நூல்கள் பதியுமானால், அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும். எனவே ஆத்திசூடியைக் கற்க குழந்தைகளுக்கு ஆர்வத்தை உண்டுபண்ண வேண்டும். ஆத்திசூடிக்குப் பலரும் உரை எழுதியிருக்கின்றனர். என்னுடைய இந்த உரை மிக எளிமையாக குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. குழந்தைகள் இதைப் படித்துப் பயன்பெற வேண்டுமென்பதே நோக்கம். இனி நூலினுள் போகலாம்.

                                    இறை வணக்கம்
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை                                                                                                  ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

       ஆத்தி மாலை அணிந்து, கயிலைமலை மேல் அமர்ந்துள்ள பரமேச்வரனைத் துதித்துப் பணிந்து அவரை தொழுகின்றோம்.

                                                        நூல்

 1. அறஞ்செய விரும்பு.

       அறம் எனப்படுவது பிறரது தேவைகளை உணர்ந்து அவர்களுக்கு நாம் செய்யும் உதவி.  தேவைப் படுவோருக்கு அவர் தேவையை அவரால் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் நாமே முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வது அறம். அந்த அறச் செயலை நம்மால் செய்ய முடியாமல் போனாலும், மனத்தளவிலாவது நாம் அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் நமக்கு இருக்கவேண்டும்.
2.  ஆறுவது சினம்.

       சினம் என்பது கோபம். நம் மனம் விரும்பாத செயலை எவரேனும் செய்தாலோ, நம் கண்ணெதிரே தவறு புரிவோரைக் கண்டாலோ நமக்கு ஏற்படும் உணர்வே சினம். இந்த சினம் பலரைத் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தவறுகளைக் காணும்போது அதனைப் புரிவோரிடம் அவர்களுக்குப் புரியும் விதத்தில் சொல்லி அந்தத் தவறுகள் நடக்கா வண்ணம் பார்த்துக் கொள்ள அறிவுரை வழங்குதல் நன்று. அதைவிட்டு அவர் செயலுக்காக நாம் ஆத்திரப் படுதலால் நன்மை விளையப் போவதுமில்லை, அவருடனான நமது நட்பும் கெட்டு விடும். ஆகையால் கோபம் வரத்தான் செய்யும், அப்படி வரும் கோபத்தை அடக்கி நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து.

          3.  இயல்வது கரவேல்.

       பிறருடைய தேவையறிந்து உதவி செய்தல், பொதுக்காரியங்களுக்காக நமது பங்காக, ஏதேனும் சிறிதாவது பொருள் நன்கொடையாக அளித்தல் ஆகியவை மனித நேயத்தின் அடிப்படையிலானது. அப்படி நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்யத் தயங்கத் தேவையில்லை.

4.   ஈவது விலக்கேல்.

       ஈதல் என்றால் உதவி தேவைப்படுவோர்க்கு மனமுவந்து ஒருவன் செய்யும் உதவி. அப்படிப் பிறர் தேவையறிந்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை பிறர் செய்கின்ற போது அப்படி செய்கின்றவர்களைத் தடுக்காமல், பிறர் செய்யும் தர்மத்தில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும்.

5.   உடையது விளம்பேல்.

மனிதனாய்ப் பிறந்தவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையில் எத்தனையோ குறைகள் அல்லது தனிமனித பலகீனங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட குறைகளை பிறரறிய உரக்கச் சொல்லி, அனைவரும் தங்கள் குறைகளை உணர்து கொள்ளும்படியாக நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி நம்மிடகம் இருக்கும் செல்வம், ஆபரணங்கள், சொத்துக்கள் இவை குறித்து தேவையில்லாமல் பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

6.   ஊக்கமது கைவிடேல்.

மனிதன் வாழ்க்கையை முறையோடும், வெற்றிகரமாகவும் நடத்த வேண்டுமானால், அவனுக்கு மனத் துணிவு இருக்க வேண்டும். எந்தக் காரியத்தையும் முன்யோசனையோடு தொடங்கி, அது வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் வேண்டும். துன்பம் வந்து வாட்டும் போதும் அதை எதிர்கொண்டு போராடி வெற்றி பெற வேண்டுமென்கிற மன உறுதி வேண்டும். அதுதான் ஊக்கம், அதனை எப்போதும் கைவிடக்கூடாது. எடுத்த காரியம் யாதிலும் வெற்றி என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும்.

7.   எண் எழுத்து இகழேல்.

ஒருவன் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால், அவனுக்குக் கல்வி அறிவு வேண்டும். கல்வி என்பது உலகத்தில் நல்லவை, கெட்டவைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலையும், பிறரிடம் பண்போடு நடந்து கொள்ளும் முறைகளையும் கற்றுத் தருவது. பொருளீட்டுவது, பங்கீடு செய்துவது, வரவு செலவுகளை நேர்மையாகச் செய்வது ஆகியவற்றுக்கு கணக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆகவே மனிதனின் வெற்றிக்குப் பயன்படக்கூடிய கணக்கு, எழுத்து எனும் படிப்பு, நீதிநூல்களைக் கற்றல் ஆகியவைகளை என்றென்றும் போற்ற வேண்டுமே தவிர அவற்றை இகழக் கூடாது.

8.   ஏற்பது இகழ்ச்சி.

உலகில் மனிதர் அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள். அவரவர் தேவைக்கு உழைத்து உண்டு, பிறருக்கும் உதவி செய்வது என்பது உயர்வான செயல். நம்மைப் போலவே பிறந்த ஒருவன் கடின உழைப்பாலும், நேர்மைத் திறனாலும் நிறைய பொருளீட்டி உயர்நிலையில் இருக்கிறான்; நாம் சோம்பித் திரிந்து, பயனுள்ள கல்வியோ, தொழிலோ கற்றுக் கொள்ளாமல் நாட்களை வீணடித்து விட்டு பொருளீட்ட முடியாமல், வசதி படைத்தவனிடம் போய் ஈயென்று பல்லெல்லாம் தெரியக் காட்டி யாசகம் கேட்பது மிக இழிவானது. அப்படி அவர்களிடம் உதவி பெற்றுக்கொள்வதும் இழிவானது.

9.   ஐயமிட்டு உண்.

இறைவன் அருளால் நமக்கு செல்வமும், பொருளும் சேர்ந்திருக்கிறது. பசித்த போது உணவுக்கு வசதியும், உறவுக்கு நல்ல குடும்பமும் இருக்கிறது. நாம் நம் தேவைகளைப் பார்த்துக் கொண்டு மகிழ்ந்திருப்பது நல்லதுதான், அதே சமயம் அடுத்தவர் ஒருவர் பசியென்று சொல்லி, நம் வீட்டுப் படியேறி வந்து தனக்கு பசிக்கு உணவு தேவையென்று யாசிக்கும் போது அவர் பசியாற உணவு படைத்து உண்க. பண்டைய நாட்களில் கிராமப்புறங்களில் தங்கள் இல்லம் தேடி யாராவது விருந்தினர் வருகிறார்களா என்று பார்த்திருந்து விட்டு யாரும் வரவில்லையென்ற பிறகுதான் உண்பார்கள். பிறர் பசியைப் போக்குவதே அறங்களிலெல்லாம் உயர்ந்த அறம்.

10.  ஒப்புர வொழுகு

நமக்கென்று சில பழக்க வழக்கங்கள் இருக்கலாம். நாம் ஒன்றுகூடி ஓரிடத்தில் வசிக்கின்றபோது நம் பழக்க வழக்கங்கள் பிறரிடமிருந்து மாறுபட்டிருப்பது போல் தோன்றினால், நாமும் ஊரோடு ஒத்துப் போய் அவர்களுடன் நட்புடன் பழகி வாழவேண்டும். ஊராருடன் நட்போடு பழகி அவர்கள் மனதுக்கினியவராக இருந்தால் வாழ்க்கை இனிக்கும். மனமாறுபட்டுப் பிரிந்திருந்தால் துன்பமே மிகும். இதைத்தான் ஊரோடு ஒத்து வாழ் என்பார்கள்.

11.  ஓதுவது ஒழியேல்.

மனிதனாய்ப் பிறந்தது பெரிதல்ல, அப்படிப் பிறந்த பிறகு நல்ல மனிதனாய் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். நல்ல மனிதனாய் இருக்க நல்ல கல்வியறிவு வேண்டும். ஆகவே நமக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் வயதில் கல்வி கற்கத் தொடங்கி தொடர்ந்து வாழ்நாள் முழுதும் நல்லவைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். ஒருவன் நான் படித்து முடித்துவிட்டேன் என்று சொல்வானானால், அவன் கல்வி என்பது என்ன என்பதைப் புரிந்து கொள்ளாதவன். கரையில்லாதது கல்வி, அதைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருத்தல் வேண்டும்.

12.  ஓளவியம் பேசேல்.

நம்மைவிட ஒருவன் கல்வியில் சிறந்து விளங்கினாலோ, அல்லது செல்வத்தால் உயர்ந்து இருந்தாலோ, அல்லது தனித் திறமைகளில் மற்றவன் சிறப்பானவனாக இருந்தாலோ, அவன் மீது பொறாமை ஏற்படுகிறது. நம்மைவிட உயர்ந்தவர்கள் இருப்பது போல நாமும் உயர்ந்திருக்க வேண்டுமென்று முயன்று ஊக்கத்தோடு பாடுபட்டு உயர்வதை விட்டுவிட்டு அவன் மீது பொறாமை கொண்டு அவனைப் பற்றி குறை கூறுவது கூடாது. யாரையும் இகழ்ந்து பேசுவது கூடாது.

13.  அஃகம் சுருக்கேல்.

அஃகம் என்றால் தானியங்களைக் குறிப்பது. விளையும் தானியங்களைப் பிறருக்குக் கொடுக்கும்போது, அல்லது விற்கும் போது அவர் கொடுத்த பணத்துக்குச் சமமாக எந்த அளவு தானியம் கொடுக்க வேண்டுமோ அப்படிச் சரியாக அளந்து கொடுக்க வேண்டும். பேராசை காரணமாக தானியத்தைக் குறைந்து அளந்து கொடுக்கக் கூடாது.

14.  கண்டு ஒன்று சொல்லேல்.

நாம் கண்ணால் கண்டதை, எதைக் கண்டோமோ அதை மாறாமல் உண்மையை உரைக்க வேண்டுமே தவிர நம் கற்பனையைக் கலந்து காணாததைக் கண்டது போல சொல்லக் கூடாது. நமது நன்மைக்காகவோ அல்லது பிறருக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு, காணாததைக் கண்டதுபோல் பொய் சொல்லக் கூடாது. நீதிமன்றங்களில் தனக்கு வேன்டியவர்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக் கொண்டு பொய் சாட்சி சொல்லக் கூடாது. எதைப் பார்த்தோமோ, அதை மட்டுமே உரைக்க வேண்டும்.

15.  “ங”ப்போல் வளை.

தமிழ் எழுத்துக்களில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்தஎழுத்து என்றிருக்கிறது. அதில் மெய்யெழுத்தில் “ங” என்ற எழுத்து உயிர்மெய் எழுத்தாக எழுதும்போது “ங்” “ங” ஆகிய இரு எழுத்துக்களைத் தவிர இதர எழுத்துக்கள் பயன்படுவதில்லை. இவ்விரு எழுத்துக்களும் தனித்துப் பயன்படாது. ஒரு சொல்லில் இணை எழுத்தாக மட்டுமே அது பயன்படுகிறது. இந்த வரிக்கு இன்னொரு பொருளும் சொல்லலாம் இந்த ங எனும் எழுத்தை எழுத ஐந்து இடங்களில் மடக்கி எழுத வேண்டும். அது போல நன்கு வளைந்து கொடுத்து வாழ் என்றுகூட பொருள் கொள்ளலாம்.

16.  சனி நீர் ஆடு.

சனிக்கிழமை தோறும் உடலுக்கு எண்ணெய் பூசி நீராடு என்கிறது இது. நாம் வாழ்வது மிகவும் உஷ்ணப் பிரதேசம். இங்கு உடல் சூட்டை சமனப்படுத்தி வைத்துக் கொள்ள எண்ணெய் தேய்த்து நீராடுதல் உடலுக்கு நன்மை பயக்குமென்பதால் சனிக்கிழமை தோறும் நீராடுதல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சனி நீராடு என்று சொல்லப் படுகிறது.

17.  ஞயம்பட உரை.

நாம் பேசுகிற முறையில் கடுமையையும் வெளிப்படுத்தலாம், அன்பையும் வெளிப்படுத்தலாம், நட்பையும் வெளிப்படுத்தலாம், இவை அனைத்துக்குமே நாம் என்ன தொனியில் பேசுகிறோம் என்பதுதான் முக்கியம். பேசுல் தொனியில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தலாம். அன்போடு அழைக்கும் போது நம் பேச்சு ஒரு மாதிரியாகவும், கோபத்தில் பேசும்போது வேறு மாதிரியும் இருக்கும். ஒரு வேலையைச் செய்யச் சொல்லி ஒருவரிடம் சொல்வதிலும் இந்த மாற்றத்தைக் காண முடியும். நீ இதைச் செய் என்பது அதிகாரக் குரல். உன்னால் இதைச் செய்து தர முடியுமா? என்பது இன்னொரு குரல். ஆக நாம் பேசுவது இனிமையான தொனியில் இருந்தால் அதைக் கேட்பவர்களும் அன்போடு அதைச் செய்வார்கள். ஆணவத் தொனியில் பேசினால் முரண்டு பிடிப்பார்கள், ஆகவே எப்போதும் பிறர் மனதுக்கு இனிமை தருமாறு பேச வேண்டும்.

18.  இடம்பட வீடெடேல்.

நமக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக்கொள்கிறோம் என்று வைத்துக் கொண்டால், நம் குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தேவை இவற்றை மனதில் கொண்டு நமக்குத் தேவையான அளவில் இல்லத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். மிகப் பெரிதான இல்லத்தைக் கட்டிவிட்டு அதில் கணவன் மனைவி இருவர் மட்டும் இருந்தால், மிகுந்த இடம் வீணாகிவிடும். தேவையறிந்து அதற்கேற்ற அளவில் வீட்டைக் கட்டிக் கொள்வது மனிதன் தேவையறிந்து வாழ்வதைக் காட்டும்

19.  இணக்கம் அறிந்து இணங்கு.

நாம் பலரோடு பழகுகின்ற வாய்ப்பு கிட்டுகிறது. அதிலும் இப்போதெல்லாம் முகநூல் நட்பு என்பது முகம் தெரியாத நபர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அவர்கள் யார், அவர்களது பின்புலம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் தெரியாமலே நாம் நமது சொந்த விவரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அப்படிச் செய்வதில் புதைந்திருக்கும் ஆபத்தை நாம் உணருவதில்லை. யாருடன் பழகினாலும், அவர்கள் யார், எப்படிப்பட்டவர், நம்முடைய குணாதிசயங்களுக்கு ஒத்துப் போகிறவரா, நம்முடைய விருப்பு வெறுப்புகள் அவர்களுடைய எண்ணங்களோடு ஒத்துப் போகிறதா என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து எது நமக்கு ஒத்து வருமோ அவர்களுடன் இணக்கம் வைத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.

20.  தந்தை தாய்ப் பேண்.

நம்முடைய தாயும் தந்தையுமே நாம் இந்த பூமியில் பிறக்கக் காரணமாக இருந்திருக்கிறார்கள். நாம் குழந்தையாக இருந்த பருவத்தில் நம்முடைய பசி, தாகம், உடல்நலம் இவற்றைப் பார்த்து கவனித்து நம்மை ஊட்டி வளர்த்தவர்கள் அவர்கள். நாம் விவரம் தெரிந்து பள்ளிக்குச் செல்கையில், நம்மைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, திரும்பக் கூட்டி வந்து அன்பு செலுத்தி வளர்த்தவர்கள் அவர்கள். பின் நமக்கு நல்ல வேலை அல்லது தொழில் செய்ய உதவியாக இருந்து ஊக்குவித்தவர்கள் அவர்கள். நமக்குத் திருமணமான பின்பு தங்களுக்கு அன்பான பேரக் குழந்தைகள் வேண்டுமென்று ஏங்கித் தவித்தவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட தாய் தந்தையர் மூப்படைந்து செயலிழந்து விட்டார்கள் என்பதற்காக அவர்களை அலட்சியம் செய்தோ, கவனிக்காமலோ விட்டுவிடுவது மாபாதகச் செயலாகும். அப்படிச் செய்யாமல் தாய் தந்தையரை நம் இளமையில் அவர்கள் நம்மை எப்படி பாதுகாத்தார்களோ அப்படியே நாமும் அவர்களைப் பாதுகாத்துப் பேணி வரவேண்டும்.

21.  நன்றி மறவேல்.

நாம் பிறந்து வளர்வது ஒரு கூட்டுச் சமுதாயத்தில். இங்கு நாம் மட்டும் தனிக்காட்டு ராஜாவாக நினைத்தைச் செய்து, நினைத்த இடத்துக்குச் சென்று மனம்போல் வாழமுடியாது. சமூகக் கட்டுப்பாடு என்பது நாம் கூடி வாழும் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. அப்படி கூடி வாழுங்காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கி, தேவைப்பட்ட நேரத்தில் யாருக்கு உதவி தேவையோ அதைச் செய்து, நமக்குத் தேவைப்பட்ட காலத்தில் அவர்களிடம் உதவியைப் பெற்று சுமுகமான சூழ்நிலையில் வாழ்தல் வேண்டும். அப்படி நம்முடைய தேவையறிந்து சமயத்தில் நமக்கு உதவி செய்தவர்கள் பால் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். ஒரு சிறு உதவியாயினும் காலத்தால் செய்த உதவி ஞாலத்தின் மாணப் பெரிது என்ற வாக்குக்கேற்ப சிறு உதவியாயினும் அதை மலையளவாக எண்ணி நாம் நன்றியோடு இருக்க வேண்டும்.

22.  பருவத்தே பயிர் செய்.

நம் நாட்டில் பருவங்களை இளவேனிற்காலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்று வகைப்படுத்தி யிருக்கிறார்கள்.. ஒவ்வொரு பருவத்துக்கும் வெப்ப தட்ப நிலை மாறிக் கொண்டிருக்கும். அந்தந்த காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை நாம் செய்து வந்தோமானால் அது நமக்கு நன்மை தரும். மாறாக பருவம் தவறி அந்தப் பருவத்துக்கு ஏற்காத தொழிலைச் செய்தால் அது தீமை தரும். மழைக் காலத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும். அப்போது அந்த நீரை வயலில் பாய்ச்சி உழவுத் தொழிலைத் தொடங்க முடியும். மழைமுடிந்து பனி தொடங்கும் காலத்தில் பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராகும் அப்போது கதிர் அறுத்து தானியங்களை பாதுகாக்க வேண்டும். கோடை காலத்தில் நீர் வற்றி நீர்ப்பாசனம் இயலாமல் போகும், அப்போது வயல்வெளிகள் தரிசாகக் கிடக்கும். ஆகையால் அந்தந்த பருவத்தைப் பார்த்து பயிர்த்தொழில் செய்தால் நன்றாக செழிப்பாக விளையும் என்பது கருத்து.

23.  மன்று (மண்) பறித்து உண்ணேல்.

மன்று என்பதை மன்றம் என்றும் சொல்வார்கள், அங்குதான் மக்கள் தங்கள் பிரச்சினைகளைக் கொண்டு சென்று வழக்குத் தொடுத்து நியாயம் பெறுவார்கள். அப்படி பொதுமக்கள் நியாயம் கேட்டுச் செல்லும் இடத்தில் அவர்களுக்கு நியாயம் கிடைத்திட அவசரத்தில் குறுக்கு வழியில் செல்ல நினைத்தால் அங்கு இருக்கும் இடைத்தரகர்கள் தாங்கள் காரியத்தை முடித்துத் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து உங்களிடம் பணம் பறிக்க முயல்வார்கள். அப்படிக் குறுக்கு வழிகளில் சென்று மக்களிடம் பணம் பறித்து உண்ணும் கேவலத்தைச் செய்ய வேண்டாம்.

இந்த வரிக்கு இன்னொரு பொருளும் கொள்ளலாம். மண் என்பதை மன்று இருப்பதாகக் கருதினால், பிறருக்குச் சொந்தமான நிலத்தைப் பறித்துக் கொண்டு அதில் பயிரிட்டு உண்ண எண்னாதே. பிறர் சொத்துக்கு ஆசைப்படாதே என்றும் பொருள் கொள்லலாம்.

24.  இயல்பு அலாதன செய்யேல்.

மனித இயல்பு என்பது ஒருவருக்கொருவர் மாறுபட்டாலும், பொதுவான மனித இயல்பு என்று ஒன்று உண்டு. அந்த இயல்பு என்ன, தெருவில் போகும்போது ஒருவர் வண்டியில் அடிபட்டு விழுந்து கிடக்கிறார் எனும்போது, ஓடிப்போய் அவருக்கு உதவி செய்வது மனித இயல்பு. கால்நடைகள் மழையில் நனைந்து கொண்டு ஒதுங்க இடமின்றி கொட்டும் மழையில் தவிப்பதைக் கண்டு அதை ஓட்டிச் சென்று ஒரு கூரையின் கீழ் விட்டுவருவது மனித இயல்பு. ஒரு உதவி என்று கேட்டு நம் வாசலில், வந்து நின்று கேட்பவருக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வது மனித இயல்பு. அப்படி இல்லாமல் நமது இயல்புக்கு மாறான செயல்களைச் செய்து மனிதத் தன்மை இல்லாதவர்களாக நம்மை ஆக்கிக் கொள்ள வேண்டாம்.

25.  அரவம் ஆட்டேல்.

அரவு என்றால் பாம்பு. பொதுவாக பாம்புகள் விஷத்தை உடையது. அதனுடன் விளையாடக் கூடாது. அதிலும் நல்ல பாம்பு போன்றவைகள் கொடிய விஷமுள்ள பிராணிகள். அதைப் பிடித்து கூடையில் அடைத்து, அதற்கு மகுடி ஊதி அதை ஆட்டுவிப்பது என்பது நடந்து கொண்டிருந்தது. அந்தக் கலையில் தேர்ந்தவர்கள், ஒருக்கால் பாம்பு அவர்களைக் கொத்தி விட்டால் அந்த விஷத்துக்கு மாற்று மருந்து தெரிந்து உயிர்பிழைக்கக் கூடியவர்கள் அந்தத் தொழிலில் இருக்கலாம். பொதுவாக மக்கள் அப்படிப்பட்ட பயங்கரமான வேலையை, அதாவது பாம்பைப் பிடித்து ஆட்டிவைப்பது எனும் வேலையைச் செய்ய வேண்டாம் செய்யக் கூடாது.. உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்.

26.  இலவம் பஞ்சில் துயில்.

“இலவு காத்த கிளி” என்றொரு சொல்வழக்கு உண்டு. இலவு என்பது இலவம் மரம், அதில் பூக்காமல் காய் காய்க்கும். அந்தக் காய் பசுமையாக இருந்தபடியே காய்ந்து போகும். கிளிகள் அந்த காய் பழுக்கும் அப்போது நாம் அதை உண்ணலாம் என்று காத்திருக்குமாம், அதற்குத் தெரியுமா அது பழுக்காது, காய்ந்து வெடிக்குமென்று. அந்தக் கிளியைத்தான் இலவு காத்த கிளி என்பார்கள். இலவம் காய் காய்ந்தவுடன் வெடித்து, அதிலிருந்து மெல்லிய பட்டுப்போன்ற பஞ்சு வெளிப்படும். அந்த பஞ்சு நூல் நூற்கப் பயன்படாது, எனவே அதன் விதையை நீக்கி வில்லால் அடித்து அந்தப் பஞ்சை மெத்தையில் அடைத்துப் படுக்கப் பயன் படுத்துவார்கள். அப்படிப்பட்ட பஞ்சு மெத்தையில் படுத்தால் மென்மையாக இருக்கும் நன்றாகத் தூங்க முடியும். தரையிலோ அல்லது துணி விரிப்பிலோ படுத்தாலோ அல்லது கோரையினால் முடையப்பட்ட கோரைப் பாயில் படுத்தாலோ உறுத்தும், அப்படியில்லாமல் மென்மையான எலவம் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கு.

27.  வஞ்சகம் பேசேல்.

மனதில் ஒன்றை நினைத்து புறத்தே வேறொன்றைப் பேசுவது வஞ்சகம் பேசுவது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்பதும் வள்ளலாரின் திருவருட்பா. பெரியோர்கள் நமக்குச் சொல்லுவதெல்லாம் உள்ளதை உள்ளபடி பேச வேண்டும், உள்ளத்தில் வஞ்சனையும், வெளியில் நல்லவனாகவும் காட்டிக் கொள்வது வஞ்சனை செய்வது. அப்படிப்பட்ட வஞ்சகத்தைப் பேசவேண்டாம். நாம் எப்படி எண்ணுகிறோமோ, அப்படியே வெளியேயும் பேசினால் கெட்ட எண்ணங்களை ஒழித்து நல்லனவற்றையே பேசும் எண்ணம் உருவாகும். எனவே வஞ்சகம் பேசேல்.

28.  அழகு அலாதன செய்யேல்.

நம் செயல்பாடுகளில் நேர்மையும், சத்தியமும் இருக்குமானால் அது அழகான செயல்பாடு. அல்லது வஞ்சனையும், துரோகமும் மனதில் வைத்துக் கொண்டு நல்லவன் போல் நடித்துச் செயல்பட்டால் அது மோசமான செயல்பாடு. இங்கு அழகு அலாதன செய்யேல் என்று சொல்லுகின்றபோது, எவையெல்லாம் அழகான செயலோ, நேர்மையான செயலோ, தர்மமனான செயலோ அவைகள் அழகான செயல்கள், அவற்றை மட்டுமே செய்ய வேண்டும். மேற்சொன்ன குணாதிசயங்கள் இல்லாத செயல்கள் எல்லாமே அழகு அல்லாதன செயல்களே. அவற்றைச் செய்யாமல் இருத்தல் வேண்டும்.

29.  இளமையிற் கல்.

இளமைப் பருவம் தான் நம்முடைய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள அடித்தளமாக விளங்குவது. அந்த இளமைக் காலத்தை வேடிக்கை, விநோதங்களிலோ, அல்லது பயனற்ற பிற செயல்பாடுகளிலோ மனம் செலுத்தி, இளமையை வீணடித்து விட்டால் நாம் வாழ்நாள் முழுவதும் வருந்த நேரிடும். அப்ப்டியில்லாமல் இளமையில் கற்க வேண்டியவற்றை நல்ல சான்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் பழுதறக் கற்று, கற்ற கல்வியின் படி நடந்து வந்தால் வாழ்க்கையில் உயர்வது உறுதி. ஆகையால் இளமைப் பருவத்தை வீணடிக்காமல் நல்ல கல்வியைப் பெறுதல் அவசியம்.

30.  அறனை மறவேல்.

அறம் என்பதை சாதாரண மொழி நடையில் தர்மம் என்கிறோம். அறவழி என்பது தவறு செய்யாத, நமது நீதி நூல்கள் காண்பிக்கின்ற வழிகளில் நடந்து கொள்வது. நம் மனத்தில் நல்லவைகளையே, நேர்மையான எண்ணங்களையே எப்போதும் எண்ண வேண்டும். நம் பேச்சிலும் நேர்மை இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நேர்மையயே கடைபிடிக்க வேண்டும். இப்படி அறத்தை மறக்காமல் கடைபிடித்தால் வாழ்க்கை உயரும், அமைதி இருக்கும், பெருமைகள் நம்மைத் தேடிவரும்.

31.  அனந்தல் ஆடேல்.

அனந்தல் எனும் சொல் நம்மிடையே புழக்கத்தில் இல்லை. இந்த சொல்லின் பொருள் தூங்குவது என்பது. தூக்கம் ஒவ்வொரு உயிருக்கும் அவசியமானது. தூக்கம் இல்லாமல் போனால் மனமும் உடலும் ஓய்ந்து போகும். நாம் எல்லா காரியங்களிலும் கவனம் சிதறாமல் செய்து முடிக்க வேண்டுமானால் நமக்கு இரவில் நல்ல தூக்கம் வேண்டும். பகல் முழுவதும் உழைக்கும் ஒருவன் இரவில் நன்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொண்டால்தான் மறுநாள் பணிக்குச் சென்று அங்கு கவனத்தோடு பணியாற்ற முடியும். ஆனால் அதே நேரம் சோம்பேரித் தனத்தினால் பொழுதெல்லாம் தூக்கத்தில் கழித்து எதிலும் ஈடுபடாமல் இருந்தால் அவன் வாழ்க்கை எதற்கும் பயனின்றிப் போய்விடும். ஆகையால் உழைக்கும்போது நன்றாக உழைத்து தூங்கும் போது தூங்கி ஓய்வெடுத்துக் கொள்வதைப் பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக தூக்கம் மனிதனின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும்.

32.  கடிவது மற.

கடிந்து கொள்ளுதல் என்றால் ஏதேனும் தவறு செய்தவர்களைக் கண்டித்தல். இந்தக் கண்டிப்பு எப்போது வரும்? நாம் ஒரு செயலைச் சரியாகவும், குறித்த நேரத்திலும் செய்ய வேண்டுமென்று நினைப்போம். அப்படிச் செய்யாதவர்கள் மீது நமக்குக் கோபம் வரும். வந்தால் அவர்களைக் கண்டித்து இப்படிச் செய்வது சரியல்ல என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதை நிதானமாக அவர் மனம் புண்படாமலும், கோபப்படாமல் அமைதியாச் சொல்லி திருத்த வேண்டுமே தவிர, அவர் மீது “சள்”ளென்று விழுந்து கோபப்பட்டால் அந்த காரியமே சிதைந்து போய்விடும். ஆகையால் பிறரிடம் கோபப்பட்டு கண்டிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். குற்றம் கண்டவிடத்தில் கண்டிக்கத்தான் வேண்டும், அந்தக் கண்டிப்பு கனிவாக இருக்க வேண்டும்.

33.  காப்பது விரதம்.

விரதம் என்பது மனதில் ஓர் உறுதியை எடுத்துக் கொண்டு ஏதேனுமொரு நல்ல செயலில் ஈடுபடுவது. இதை நோன்பு என்று வழக்கப்படுத்திச் செய்து வருகிறோம். சனிக்கிழமைகளில் விரதம், சஷ்டி விரதம், ஏகாதசி விரதம் என்றெல்லாம் அன்றைய தினம் உபவாசம் இருப்பது வழக்கம். அரசியல் களத்தில் உண்ணாவிரதம் என்றொரு வழக்கம் உண்டு. இப்படிப்பட்ட விரதங்கள், நோன்புகளைக் கடைபிடிக்கும் போது அந்த உறுதி மாறாமல், அதில் தவறுகள் ஏதும் நேராமல் பார்த்துக் கொள்வது நமது கடமை. காந்திஜி உண்ணா நோன்பிருப்பார். அப்போதெல்லாம் அவர் முதல் நாளே வயிற்றைச் சுத்தம் செய்து கொண்டு உண்ணா நோன்பிருக்கும் நாட்களில் தண்ணீர் மட்டுமே அருந்திக் கொண்டு திடவுணவு எதையும் உண்ணாமல், ஒளிவு மறைவில்லாமல் பலர் பார்வையில் படும்படி இருப்பார்கள். அதுதான் நோன்பினைக் காக்கும் திடசித்தம். அப்படி நாம் நோன்பு இருக்கும்போது அதனின்றும் சற்றும் பிறழாமல் நோன்பினைக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதன் கருத்து.

34.  கிழமைப்பட வாழ்.

கிழமை என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. எனினும் இங்கு கிழமை என்று சொல்வது உரிமை எனும் பொருளில் வருகிறது. உரிமை எனும் சொல்லை இப்போதெல்லாம் தன்னலம் கருதியே பயன் படுத்தப் படுகிறது. ஆனால் மனிதப் பிறவியில் உரிமை என்பது நம்மால் பிறருக்கு ஆற்றவேண்டிய கடமைகள், உதவிகள் இவைகளையே உரிமைகள் எனக் கொள்ள வேண்டும். நாம் ஊருக்குப் பயன்படும்படி வாழ்ந்தால் நம்மை மக்கள் உரிமையோடு ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஊரார் பயன்பெற நாம் வாழ்வதே வாழ்க்கையின் சிறப்பு.

35.  கீழ்மை அகற்று.

கீழ்மை என்பது கீழான எண்னங்கள் என்றும், கீழான குணங்களையுடைவர்களோடான உறவு என்றும் பொருள் கொள்ளலாம். மனிதனுடைய குணங்கள் மேன்மையானவைகளாகவும், சில நேரங்களில் மிகக் கீழ்த்தரமானதாவும் இருக்கும். அதது அந்த நேரத்தின் மன நிலைமையைப் பொறுத்தது. பொதுவாக நம் மனதைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, சுயநலம் நீக்கி கீழான எண்ணங்களை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும். கீழான செயல்களை அறவே துறந்துவிட வேண்டும். இந்தச் சொல்லை பிறருக்குப் பொறுத்திப் பார்க்கும்போது, கீழான குணங்களைக் கொண்டவர்களை, கீழான செயல்களைச் செய்பவர்களை நாம் ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும். அவர்களோடு நெருங்கி உறவு கொள்வது நம்மையும் கீழோனாக ஆக்கிவிடும். கீழ்மை எண்ணங்களையும் செயல்களையும் நாம் விலக்கிவிடுவதோடு, கீழ்மை குணங்களை உடையவர்களையும் நாம் நீக்கிவைக்க வேண்டும்.

36.  குணமது கைவிடேல்.

மனிதரில் நல்ல குணமுடையோர், தீயகுணமுடையோர் என்று தனித்து இனம் காணமுடியும். அதுபோல நமக்குள் மேலோங்கி இருக்கும் குணம் நல்ல குணமா அல்லது தீய குணமா என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேன்டும். தீயகுணம் இருக்குமானால் அதை நீக்கிக் கொண்டு நல்ல குணத்தோடு வாழ வேண்டும். நல்ல குணம் என்பது சுயநலமில்லாமல் பிறருக்கு உதவி செய்து கொண்டு, பிறர் துன்பம் கண்டு மனம் வருந்தி, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பூண்டு, மொத்தத்தில் பிறர் பாராட்டி மெச்சும் குணத்தோடு வாழ வேண்டும். அப்படி நாம் வலிந்து பழகிக் கொண்ட நற்குணத்திலிருந்து மாறாமல் தொடர்ந்து நல்ல குணவானாகவே வாழ்ந்து வரவேண்டும்.

37.  கூடிப் பிரியேல்.

ஒருவரோடு நாம் நட்பு பாராட்டி பழகத் தொடங்குவதற்கு முன்பு அவர்களுடைய குணநலன்களை நன்கு ஆராய்ந்து அவர் நமது நட்புக்கு ஏற்றவர்தானா, நல்ல குணங்கள் உடையவர்கள்தானா என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். அப்படி நண்பர்களாக இணைந்த பிறகு அற்ப விஷயங்களில் மனவேற்றுமை ஏற்பட்டு பிரிந்து விடக் கூடாது. நம்மைப் பிரித்த விஷயம் என்னவென்பதை ஆராய்ந்து அதனைத் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும். நன்கு ஆய்ந்து முடிவு செய்த நட்பு, அற்ப காரணங்களுக்காகப் பிரிவுபடக் கூடாது.

38.  கெடுப்பது ஒழி.

மனிதனுக்கு உள்ள மிக மோசமான குணம் பிறருக்குக் கெடுதல் செய்வதுதான். பிறருக்கு ஏதோவொரு காரணத்தால் கெடுதல் வருவது என்பது வேறு, நாம் வருந்தி அவனுக்குக் கெடுதல் புரிவது என்பது வேறு. அப்படி எந்தக் காரணம் கொண்டும் பிறருக்குக் கெடுதல் செய்வதை அறவே ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் கருத்து. அடுத்தவன் நமக்குக் கெடுதல் புரிந்திருந்தாலும், அதனை மறந்து அவனுக்கும் நல்லது செய்தால் அவனே மனம் மாறி தான் செய்த கெடுதலுக்காக மனம் வருந்துவான். ஆகவே எந்த சூழ்நிலையிலும் எவருக்கும் கெடுதல் செய்வதை ஒழித்துவிட வேண்டும்.

39.  கேள்வி முயல்.

நம் பேச்சு வழக்கில் சொல்லும் கருத்து யாதெனில் “ஒருவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும்” எனும் சொற்றொடர்தான். இதில் கல்வி என்பது நாம் கற்கின்றவைகள் கேள்வி என்பது அறிஞர்கள், பெரியோர்கள் சொல்கின்ற கருத்துக்களைக் கேட்டு நல்லறிவு பெறுவது. கல்வியை நாமே விரும்பி நல்லதொரு ஆசிரியரிடம் சென்று கற்றுக் கொள்ளலாம். அப்படி நாமே படித்து அறிந்து கொள்வதைக் காட்டிலும் நன்கு படித்த பெரியோர்கள் சொல்லக் கேட்டு நாம் பெறும் ஞானமே கேள்வியறிவு. அதுவும் நம்மை வளர்த்துக் கொள்ள அவசியம். ஆகையால் கல்வி கற்பதோடு, நல்ல பல அறிஞர்களிடமும் நேர்முகமாகக் கேட்டு அறியும் அறிவே சிறந்தது. அதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

40.  கைவினை கரவேல்.

கைவினை என்பது கைத்தொழில். இப்போது அனைத்தும் இயந்திர மயமாகிவிட்ட நிலையில் பற்பல கைத்தொழில்கள் அறவே அற்றுப் போய்விட்டன. ஆனால் ஒரு தனிமனிதன் பிழைப்புக்கென்று ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொள்வது அவசியம். அப்படி அந்தக் காலத்தில் பற்பல கைத்தொழில்கள் தழைத்து வளர்ந்திருந்தன. அவை நூல் நூற்றல், கைத்தறியில் ஆடைகள் நெய்தல், மரச்சாமான்கள் செய்தல், கோரைப்பாய் முடைதல் இப்படிப் பல. அப்போதெல்லாம் இளைஞர்கள் கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு அதை பிழைப்பாகவும் நடத்தி வந்தார்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் கம்ப்யூட்டர் போன்ற நவீன கலைகளைக் கற்றுக் கொண்டவர்கள் தாங்கள் கற்ற கலையை பிறருக்கும் கற்றுத் தரவேண்டும். அதிலுள்ள நுட்பங்களை மறைக்காமல் பிறருக்கும் சொல்லித் தரவேண்டும். (கரவுதல் என்பதற்கு மறைத்தல் என்பது பொருள்).

41.  கொள்ளை விரும்பேல்.

நம்மிடம் இல்லாத பொருட்கள் நமக்கு வேண்டுமென்றால் அதற்கான விலையைக் கொடுத்து வாங்க வேண்டும். அதற்கு வசதியிலை எனும்போது அதை மறந்து விட வேண்டும். அதுபோன்ற பொருட்கள் பிறரிடம் இருப்பது கண்டு அதை எப்படியேனும் கவர்ந்து விட வேண்டுமென்று திருடுதல் அல்லது பிறர் பொருட்களை அபகரித்தல் என்பது கொள்ளையடிப்பதாகும். நம் சக்திக்கு எட்டாத பொருட்களை எப்படியாவது குறுக்கு வழியில் பெறுவது கொள்ளையடித்தல், அந்தத் தவறை மனதாலும் விரும்பக் கூடாது. மனது சம்மதித்தால்தான் தவறுகள் நிகழும், மனமே அதை சிந்திக்காவிட்டல் கொள்ளைகள் நடக்காது. ஆகவே பிறர் பொருளை மனதாலும் விரும்பாதே.

42.  கோதாட்டு ஒழி.

கோது + ஆட்டு = கோதாட்டு என்பது குற்றமான விளையாட்டு எனப் பொருள் படும். விளையாட்டு குற்றமாகுமா? ஆகும், சூதாட்டம், சீட்டாட்டம், குதிரைமீது பந்தயம் கட்டி ஆடுதல், சிறிய தொகை கொடுத்தல் பெருந்தொகைக்குப் பொருள் மாற்றித்தரும் சூடாட்டம் இவைகள் குற்றமே. இப்படி ஆதாயம் தேடி ஆடுகின்ற சூதாட்டம் குற்றம் தான். அது போலவே பிறருக்குத் துன்பம் தரக்கூடிய அல்லது மனவருத்தமுண்டாக்கக் கூடிய விளையாட்டுகள் கூட விலக்கவேண்டியவைகளே.

43.  சக்கர நெறி நில்.

சக்கரம் எனும் சொல்லுக்கு இருவித பொருள் உண்டு. சக்கரம் என்பது வண்டிச் சக்கரத்தையும் சொல்லலாம். ஆனால் இங்கு சொல்லப்படும் சக்கரம் என்பது “ஆக்ஞா சக்கரம்” என்பார்கள் அல்லவா, அரசனுடைய ஆணை, அரசாங்கத்தின் ஆணை எப்படி எல்லாவிடத்துக்கும் பொருந்துகிறதோ, அதை சக்கரம் சுழன்று செல்வதுபோலச் சொல்வார்கள். அரசாங்கத்துக்கு என்றில்லை, அறவழி வாழ்க்கைக்கென்று பல தர்மங்கள் நமக்குப் பெரியவர்களால் போதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை முறையொடு பின்பற்றி அந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதுதான் முறை. அப்படிப்பட்ட அறவழியில் நின்று வாழவேண்டுமென்பது இதன் கருத்து.

44.  சான்றோர் இனத்திரு.

நாம் ஏராளமானோரோடு பழகுகிறோம், நட்போடு இருக்கிறோம். நம் குணங்கள், பழக்க வழக்கங்கள் இவைகள் எல்லாம் நாம் சார்ந்திருக்கும் மக்களின் இயல்போடு இணைந்தே இருக்கும். நல்ல மனிதர்களின் நட்பு நமக்கு நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்பாடுகளையும் தரும். தீயவர்கள் இணக்கம் நம்மையும் தீயவனாக ஆக்கிவிடும். வாழப்போவது ஒரு முறை, அந்த வாழ்க்கை நமக்கு நன்மைகளையும், நம்மால் பிறர்க்கு நன்மையும் பெறவும் செய்ய வேண்டும்.,சமூகத்தில் நம்மை எல்லோரும் நல்லவன் என்று போற்றிட நல்ல வழிமுறைகளையே பின்பற்றி நடக்க வேண்டும், ஆகையால் சான்றோர் பெருமக்களை அணுகி அவர்களோடு இணைந்து நாமும் சான்றோனாக வாழ வேண்டும்.

45.  சித்திரம் பேசேல்.

அலங்காரமான மொழி நடையில் பேசிப் பிறரைக் கவர்வது என்பது நம்மில் பலருக்குப் பழக்கம். கற்பனை கலந்தும், வாசாலகமாகப் பேசியும் பிறரைக் கவர முடியும். ஆனால் அதற்காக இல்லாததை இருப்பது போலவும், பொல்லாததை நல்லது போலவும் பேசி பிறரை நமது அலங்கார மொழிகளால் ஏமாற்றி விடக் கூடாது. பேசுவதை பிழையின்றிப் பேசலாம், உள்ளதை உள்ளபடி பேசலாம், பிறருக்குப் புரியும்படி பேசலாம், ஆனால் பேச்சு அலங்காரத்துக்காகக் கற்பனையைக் கலந்து இல்லாததையும் பொல்லாததையும் பேசுவதைத் தவிர்த்திட வேண்டும்.

46.  சீர்மை மறவேல்.

நாம் முறையோடு வாழ்ந்தாலே பிறர் போற்றும்படி வாழ முடியும். நாம் செய்யும் நல்ல செயல்கள், நாம் காலத்தால் பிறர்க்குச் செய்கின்ற உதவிகள் இவைகள்தான் நமக்கு நற்புகழைக் கொடுக்கும். வள்ளல்கள் வறுமையினால் பொருள் தேடி வந்த புலவர்களுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்துப் புகழ் பெற்றார்கள். புகழ் வேண்டுமென்பதற்காக அல்ல, அவர்கள் நற்சிந்தனை, நற்செயல்கள் அவர்களை அப்படிச் செய்ய தூண்டியிருக்கின்றன. ஆகவே எவைகள் நமக்குப் புகழைத் தேடித்தருகின்றனவோ, எவற்றைச் செய்தால் பிறர் நம்மைப் போற்றி பாராட்டுகிறார்களொ, அத்தகைய சீரிய செயல்களை மறக்காமல் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

47.  சுளிக்கச் சொல்லேல்.

நமக்குப் பிடிக்காதவற்றை, அல்லது நாம் மனம் வருந்துமாறு பிறர் பேசும் சொற்களைக் கேட்டதும் நம் முகம் சுளிக்கிறோம். அதுபோலவே நாமும் பிறர் முகம் சுளித்துக்குள்ளுமளவுக்கு அவர்கள் மனம் புண்படும்படியோ, அல்லது அவர்களை அவமரியாதையாகவோ, தவறாகவோ, சொல்லக்கூடாத தீய சொற்களையோ சொல்லக் கூடாது. பிறரது தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியிருந்தாலும் கூட நாம் சொல்லுகின்ற சொற்கள் அவர்கள் மனதை நோக அடிக்கக்கூடியவைகளாக இல்லாமல், கனிவுடன் அவற்றைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வார்கள். மாறாக நாம் கடுமையான சொற்களைப் பயன் படுத்தினால் அவர்கள் மனம் வருந்தும், முகம் சுளிக்கும். அதைத் தவிர்த்திடல் வேண்டும்.

48.  சூது விரும்பேல்.

சூது என்பது மக்கள் பழக்கத்திலுள்ள பல சூதாட்டங்களையே குறிக்கிறது. பொழுது போக்குக்காகக் கூட சூதாட்டங்களான சீட்டாட்டம் முதலியவற்றில் கலந்து கொள்ளக் கூடாது. பொதுவாக சூடாட்டத்தில் பணத்தையோ, பொருளையோ வைத்து ஆடுவார்கள், அதில் வெல்லவும் கூடும் இருப்பதை இழப்பதும் கூடும். மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அனுபவித்த சிரமங்களுக்கெல்லாம் இந்த சூதாட்டம் தான் என்பதை அறிவீர்கள். சூது என்றுமே தீது என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்திட வேண்டும். சூதாட்டம் ஆடினால் நம் செல்வம் அழிந்து போகும், பொய் பேச வைக்கும், பேராசை உண்டாகும், மனம் நேர்மை கெட்டு தீயவழியில் செல்லும், ஆகவே சூதாட்டம் ஆடக்கூடாது என்பது மட்டுமல்ல, அதன் மீது ஆசைப்படவும் கூடாது.

49.  செய்வன திருந்தச் செய்.

நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்குகிறோம் என்றால், அந்தச் செயல் எப்படிப்பட்டது, அதை எப்படி செம்மையாகச் செய்து முடிக்க முடியும், அப்படிச் செய்ய எவைகள் எல்லாம் தேவை என்பதை நன்கு ஆராய்ந்து, தேவைகளை எல்லாம் முறைப்படி சேர்த்துக் கொண்டு பிறகு திட்டமிட்டு அந்தச் செயலை செய்து முடிக்க வேண்டும். ஏனோதானோ வென்று தொடங்கி தவறாகச் செய்து, அந்தச் செயல் கெட்டுப் போகும்படி செய்துவிடக் கூடாது. இதற்கு நல்ல திட்டமிடல், செயல் வன்மை, தேவையான பொருட்கள் இவைகளையும், அதை செய்துமுடிக்கத் தேவையான கால அவகாசம் இவற்றை அட்டவணையிட்டு அதன்படி ஒவ்வொரு செயலையும் செய்தால் அந்த செயல் வெற்றிகரமாக முடியும். செய்யும் காரியத்தில் இவை அத்தனையும் தேவை.

50.  சேரிடம் அறிந்து சேர்.

நாம் ஒருவரிடம் நட்பு பூண்டு பழகுகிறோமென்றால், அவர் நமது சிந்தனை, செயல், பண்பு இவற்றுக்கு ஒத்துப் போகக் கூடியவரா என்பதை நன்கு கவனித்து, நமக்கேற்ற சிந்தனை செயல்பாடு உள்ளவர்தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் நட்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படித் தராதரம் பாராமல் எவருடனும் நட்பு கொண்டால், அவர் குடிகாரராக இருந்தால் நாமும் குடிக்கக் கற்றுக் கொள்வோம், அவர் சூதாடுபவராக இருந்தால் நாமும் அப்படியே இருப்போம். நாம் நல்ல இலக்கியங்களையும் வாழ்வியல் தத்துவங்களையும் கற்க விரும்புவோம், அவரோ மிகவும் மோசமான பொழுது போக்குகளில் ஈடுபடுபவராக இருப்பார், ஒரு மாட்டு வண்டியில் இரண்டு மாடுகளும் இணையாக இருந்தால்தான் வண்டி சரியாக ஓடும். ஆகவே நாம் யாரோடு நட்பு கொள்கிறோமோ, அவர்கள் நம் சிந்தனைக்கு ஒத்துவருபவர்களாகப் பார்த்து நட்பு பூணுதல் நலம்.

51.  “சை” எனத் திரியேல்.

நாம் பலரோடு பழகுகிறோம். நமக்கு அமைந்த நண்பர்களை வைத்துத்தான் நம்மையும் பிறர் எடை போடுவார்கள். நல்ல மனிதர்களின் பழக்கம் இருந்தால் நம்மையும் நல்லவனாக, நம்பத் தகுந்த பண்பாளனாக நினைப்பார்கள். தீயவர் நட்பு நமக்குக் கிடைத்து, நாமும் அவர்களோடு, அவர்கள் போகும் பாதையில், அவர்கள் செய்யும் தீய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், பார்ப்பவர்கள் நம்மையும் தீயவனாக எண்ணி “சே, இவன் என்ன இப்படிக் கேவலமாக நடந்து கொள்கிறான்” என்று நம்மை வெறுப்பார்கள். குடித்துவிட்டு, அல்லது புகை பிடித்துக் கொண்டு பெரியோர் முன்னால் நடந்து வந்தால், அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்குவார்கள். அப்படிப் பிறர் “சை” என்று வெறுக்கும்படியான வாழ்க்கையை நாம் வாழக் கூடாது.

52.  சொற்சோர்வு படேல்.

நாம் எவரிடம் பேசினாலும், அல்லது பொதுவிடங்களில் ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்து வாதிட்டாலும், நாம் பேசுகின்ற சொல் அன்பானதாகவும், மரியாதையுடனும் இருத்தல் அவசியம். சொல்ல வந்த கருத்தில் தடுமாற்றமின்றி சரியான சொற்களைச் சொல்லி நம் வாதத்தை முன்வைக்க வேண்டும். பண்பாடற்ற சொற்களை பெரியோர்கள் உரையாடலில் பயன்படுத்த மாட்டார்கள், அப்படிப்பட்டவர்களோடு நாம் பேசும்போது நாமும் நம் சொற்களை மிகுந்த கவனத்தோடு பயன்படுத்த வேண்டும். ஒரே சொல்லில் வலிமையாக நம் கருத்தைச் சொல்ல வேண்டுமே தவிர சுற்றி வளைத்து நம் பேச்சு, பிறர்க்குச் சோர்வை ஏற்படுத்தி வருந்தச் செய்யுமாறு அமைந்து விடக் கூடாது. ஆகையால் சொல்லில் உயர்வை எப்போதும் கவனித்துப் பேச வேண்டும்.

53.  சோம்பித் திரியேல்.

சோம்பல் என்பது செய்யவேண்டிய ஒரு காரியத்தை அலுத்துக் கொண்டு தள்ளிப் போடுவது. ஒரு காரியத்தை எடுத்தால் அதில் முழு ஈடுபாட்டோடு செய்து முடிக்கும் வரை கண் துஞ்சாமல், கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று செய்ய வேண்டிய காரியத்தை சோம்பல் காரணமாக நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால், அது மறுநாள் செய்ய முடியும் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. “நாளை நாளை என்னாதே, நாளை வீணில் போக்காதே, நாளை செய்யும் காரியத்தை நலமாய் இன்றே முடிப்பாயே” என்று சொல்லியிருப்பதும் நம் தமிழே. ஆகையால் எந்தக் காரியத்தையும் சோம்பல் காரணமாக செய்யாமலோ, அல்லது தள்ளிப் போடுவதோ அது நமக்குத் தோல்வியைத்தான் தரும். சோம்பலே நம் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு செயல் பட வேண்டும்.


54.  தக்கோன் எனத் திரி.

சமுதாயத்தில் நம்மை மற்றவர்கள் மேலானவன், நேர்மையானவன், நல்லவன் என்று மதிக்கும்படியாக நாம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப் பிறர் நம்மை மதிக்க வேண்டுமானால் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? நம்முடைய நடத்தையில் மிக நேர்மையாக இருக்க வேண்டும். சொன்ன சொல்லைக் காப்பாற்றும் உறுதி வேண்டும். நமக்கு உரிமை இல்லாத பொருட்களின் மீது ஆசைப் படக் கூடாது. சொல், செயல் இவைகளில் நாணயமாக நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் பிறருடைய நம்பிக்கையையும், சான்றோன் எனப் பிறர் எண்ணவும் கூடும். அதுதான் நமக்குப் பெருமையே தவிர மோசமான நடத்தையின் காரணமாக நம்மைப் பிறர் வெறுக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது.

55.  தானமது விரும்பு.

தானம் என்பது நம்மிடம் உள்ள பொருளை இல்லாதவர்க்கு ஈதல்.  தானத்தில் பலவகையான தானங்கள் உண்டு. பொருள் இல்லாத ஏழைகளுக்கு நம்மால் இயன்ற பொருளுதவி செய்தல்; பசியோடு இருப்போர்க்கு அன்னதானம் செய்தல்; பசுக்களைத் தானமாகக் கொடுத்தல் கோதானம்; நம் உழைப்பைப் பொதுக் காரியங்களுக்காகக் கொடுப்பதை சிரமதானம் என்பார்கள். பொருளுதவி, உணவு உதவி இவைகள் இல்லாதவர்க்கும், பசு தானம் முதலியவைகள் தகுதியுள்ள மேலோருக்கும், சிரமதானம் பொதுவாக நன்மை பயக்கக் கூடிய காரியங்களுக்கும் செய்தல் வேண்டும். தகுதியற்றோருக்குச் செய்யும் தானம் பாவம். ஆகையால் தகுதியுள்ளோருக்கு ஈந்து நாமும் சிறப்பாக வாழ தானங்களைச் செய்தல் அவசியம்.

56.  திருமாலுக்கு அடிமை செய்.

மும்மூர்த்திகள் என்போர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர். இவர்களில் பிரம்மன் படைக்கும் தொழிலைச் செய்கிறார். உலகத்திலுள்ள ஜீவராசிகளைப் படைப்பது அவர் தொழில். விஷ்ணுவுக்குக் காக்கும் தொழில், பூமியில் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும் பாதுகாப்பது அவரது தொழில். சிவனுக்கு அழிக்கும் தொழில், எல்லா உயிர்களையும் இறுதியில் கொண்டு போவது சிவனுடைய தொழில். இம்மூவரில் திருமாலுக்கு அடிமை செய்யச் சொல்வது ஏன்? மும்மூர்த்திகளில் மகாவிஷ்ணு காக்கும் கடவுள் என்பதால், பூவுலகில் தீமைகள் மண்டி அக்கிரமங்கள் தலைதூக்கும் சமயங்களில் அவதாரமெடுத்து தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவர். மேலும் பூமியில் வாழ்கின்ற உயிர்களையெல்லாம் காக்கும் தெய்வம் என்பதால் நாம் நன்றிக் கடனாகவும், அவருடைய உன்னதமான செயலுக்காக நன்றி செலுத்துவதற்காகவும் அவருக்குத் தொண்டு செய்து வாழ்வது அவசியம்.

57.  தீவினை அகற்று.

வினைகள் என்பது நாம் செய்கின்ற செயல்கள். நாம் நல்ல செயல்களையும் செய்கிறோம், தீய செயல்களையும் செய்கிறோம். தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது குறள் வாக்கு. தீயைப் போல நம்மைச் சுடுகின்ற தீய காரியங்களைச் செய்தால் நமக்குக் கிடைக்கப் பொவதும் தீமையே. இதைத்தான் நமது பண்டைய நூல்கள் சொல்கின்றன. நாம் தெரிந்தோ தெரியாமலோ பற்பல உயிர்களுக்கும் சில சமயங்களில் தீமை இழைத்துக் கொண்டிருக்கிறோம். மிருகங்களை கருணை இல்லாமல் கொடுமை செய்கிறோம். பிறந்த உயிர்களெல்லாம் வாழ்வதற்கே என்ற உண்மையை நிலைநாட்ட அகிம்சையை அனுசரிக்க வேண்டும்.

58.  துன்பத்திற்கு இடம் கொடேல்.

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் இணைந்த வருவதுதான். இதில் இன்பம் மட்டுமே கிடைக்க வேண்டுமென்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் நம்முடைய முற்பிறவிப் பயனால் இரண்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. துன்பம் வரும், வரலாம், ஆனால் அந்தத் துன்பம் நமக்குத் தீராத தொல்லையாக இல்லாமல் இருப்பதற்கான செயல்களை நாம் செய்துகொள்ள வேண்டும். உறவில் யாரேனும் இறந்து விட்டால் துன்பமடைந்து விடுகிறோம். இறப்பது இயற்கையின் நியதி என்பதை உணர்ந்தால் துன்பம் நீங்கிவிடும். வறுமை எய்துகிறது, இது நாம் செய்த பூர்வ புண்ணிய பலன் என்பதைப் புரிந்து கொண்டால் துன்பம் நீங்கிவிடும். உடல் நலம் கெட்டாலோ, வேறு பல செய்கைகளாலோ நமக்குத் துன்பம் நேரத்தான் செய்கிறது. அவற்றைக் காரண காரியங்களோடு எதிர்கொண்டு அதை ஏற்றுக் கொள்ளவோ, மனம் சமாதானமடையவோ நம்மைத் தயார் செய்து கொண்டால் துன்பம் நம்மை ஏதும் செய்யாது. துன்பத்துக்கு இடம் கொடாமல் வாழ்வதே சீர்ய வாழ்க்கை.

59.  தூக்கி வினை செய்.

நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன்பாக, அந்தச் செயலின் தன்மை, அதை நன்கு செய்ய முடியுமா, அதைச் செய்து முடிக்கக்கூடிய தன்மை நம்மிடம் இருக்கிறதா, இதனை நன்கு முடிக்க என்னென்ன தேவை, அவைகளை நாம் சேகரிக்க முடியுமா என்பதையெல்லாம் நன்கு ஆலோசித்து முடிவு செய்த பின்னரே தொடங்க வேண்டும். எந்தக் காரியத்தையும் தொடங்கிய பிறகு சுணக்கமின்றி அதை முடிப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டுமே தவிர, இடையில் சோர்வு வந்துவிடக் கூடாது. செய்து முடித்தபின் பலரும் அதனைப் பாராட்டி நம்மைப் பெருமைப் படுத்தும் விதமாக நாம் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும். தூக்கி என்பதற்கு நன்கு ஆராய்ந்து எனப் பொருள் கொள்ள வேண்டும்.

60.  தெய்வம் இகழேல்

இந்த பூவுலகத்தைப் படைத்துக் காத்து அழித்து, மீண்டும் உருவாக்குவது தெய்வம் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை. அந்த தெய்வத்தை நாம் கண்ணால் காணக்கூடியவாறு நம்முன் தோன்றுவாரா என்றால் இயலாது. தெய்வத்துக்கு உருவம் இல்லை, பின் எப்படி தெய்வத்தை உணர்ந்து கொள்ள முடியும். காற்று நம் கண்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் காற்று இல்லை என்று சொல்ல முடியுமா. மின்சாரத்தைக் கையால் பிடிக்க முடியுமா, கண்ணுக்குத் தெரியுமா, ஆனால் மின்சாரத்தால் எல்லாம் இயங்குவது எப்படி? நம்மைச் சுற்றிலும் காணும் அத்தனையும் அந்த இறைவன் படைப்பே. பாரதி சொன்னதைப் போல, “தூணில் உள்ளான், நாராயணன் துரும்பிலுள்ளான், வல்ல பெரும் கடவுள் இல்லா அணுவொன்றில்லை, கேளப்பா சீடனே! கழுதையொன்றைக் கீழான பன்றியினைத் தேளைக் கண்டு தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பிச் சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்”. இதுதான் அத்வைதக் கோட்பாடு. இப்பூவுலகில் இருக்கும் பொருளெல்லாம் இறைவனின் வடிவமே. இந்த ஆன்மிக உண்மைகளை உள்ளதை உள்ளவாறு புரிந்து கொண்டவர்கள் இறைவன் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். உண்மை புரிந்தவர்கள் தெய்வம் உண்டு என்று நம்புவதோடு, அதனை இகழமாட்டார்கள். நமக்கு நன்மையோ, துன்பமோ அது இறைவன் வகுத்தது என்பதைப் புரிந்து கொண்டால் மனம் இறைவன் மீது பற்று கொள்ளச் செய்யும். அத்தகைய தெய்வத்தை இகழாதே!

61.  தேசத்தோடு ஒத்து வாழ்.

முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். பல ஊர்கள் சேர்ந்ததுதான் நாடு அல்லது தேசம். ஒவ்வொரு ஊரிலும் வாழும் மக்கள் தங்களுக்கு நல்லதோ கெட்டதோ அதை அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்கொள்வார்கள். ஒரு பொதுப்பணி என்றால் எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவார்கள். ஊருக்கோ அல்லது தேசத்துக்கோ ஒரு ஆபத்து என்றால் அனைவரும் உயிரைக் கொடுத்தேனும் அந்த ஆபத்தினின்றும் ஊரையோ, நாட்டயோ காப்பாற்றுவார்கள். “ஒன்றுபட்டல் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு” என்பது பாரதி வாக்கு. நாம் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அமைதியாக வாழலாம், ஒற்றுமை நீங்கினால் தீராத பகையும், போரும், வெறுப்பும், இழப்பும் தான் விஞ்சும். எது தேவை நமக்கு? இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களோடும், இந்த தேசத்தின் எல்லா மக்களோடும் ஒற்றுமையோடு வாழ்வோம்.

62.  தையல் சொல் கேளேல்.

பெண் என்பவள் பேதையர் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பேதையர் எனும் சொல் தவறான சொல் அல்ல. அந்தக் காலத்தில் ஆண்கள் வெளி வேலைகளில் எல்லாம் ஈடுபடுவதைப் போல பெண்கள் அதிகம் ஈடுபடாமல் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருந்ததால் அப்படியொரு சொல் வந்தது. இங்கு தையல் சொல் கேளேல் என்பதற்கு பெண்கள் பேச்சைக் கேட்காதே என்ற பொதுவான கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. முன்பே சொன்ன பேதையராக இருப்போர் சொல்லும் பேச்சு, அனுபவமில்லாதவர்கள் சொல்லும் பேச்சு என்பதால் அதைக் கேட்க வேண்டாமென்றுதான் சொல்லியிருக்க வேண்டும். ஒவ்வொரு காலத்துக்கும் பொருந்தக் கூடிய சில அறிவுரைகள் உண்டு. இது ஒளவையார் காலத்துப் பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்துமே தவிர நவீன யுகத்தில் அதை ஏற்பதற்கில்லை. பேதையர்களாக இருப்போர் பேச்சை வேண்டுமானால் கேட்க வேண்டாமென்று இன்றைய நிலைமைக்கு பொருள் கொள்ளலாம்.

63.  தொன்மை மறவேல்.

தொன்மை எனும் சொல்லுக்கு மிகப் பழமையான காலம் என்பது பொருள். நம்முடைய நாகரிகம் மிகப் பழமையானது. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்திலும், ஆற்றலிலும் நம் தேசம் முன்னணியில் இருந்தது. மகாகவி பாரதி “எங்கள் தாய்” என்றொரு பாடலில் இந்த பாரதத் தாயைப் பற்றிச் சொல்லும்போது “தொன்று நிகழ்ந்தது அனைத்தையும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்கிறான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம்முடைய பழைய பண்பாடு, நாகரிகம் இவற்றை மறந்துவிட்டு எங்கோ உருவான புதிய பழக்க வழக்கங்களை நாகரிகம் எனும் பெயரால் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் தானா? நம் நாட்டைப் பற்றி பாரதி சொன்ன மேலும் சில வரிகளைப் பார்ப்போம். “மா ரத வீரர் மலிந்த நன்னாடு, மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு, நாரத கானம் நலந்திகழ் நாடு, நல்லன யாவையும் நாடுறு நாடு, பூரண ஞானம் பொலிந்த நன்னாடு, புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு, பாரத நாடு, பழம்பெரும் நாடே, பாடுவம் இஃதை எமக்கு இல்லை ஈடே”. இதைவிட வேறு என்ன சொல்ல இருக்கிறது. நமது தொன்மை, நமது பெருமை இதனை எந்த நாளும் மறவாமல் போற்றுவோம்.

64.  தோற்பன தொடரேல்.

எந்தச் செயலையும் செய்யுமுன்பாக அதனை வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியுமா, அதனைச் செய்கின்ற ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா, அதற்கு வேண்டிய பொருட்செல்வம் நம்மிடம் இருக்கிறதா, உடனிருப்போர் நம் பணியில் துணை இருப்பார்களா என்பதையெல்லாம் நன்கு ஆலோசித்துத்தான் தொடரவேண்டும். அப்படியில்லாமல் வந்தது வரட்டும், வெற்றியோ தோல்வியோ எது வரினும் வரட்டுமென்று கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவது கூடாது. வெற்றிபெற்றுவிட்டால் சரி, தோல்வியென்றால் எத்துணை நஷ்டம். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது, நமக்கு அக்கரை சென்றடைய வேண்டும், பாலமும் இல்லை, தோணியும் இல்லை எப்படிப் போவது. சரி நீந்திக் கரை சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில் ஒருவன் ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறான். வெள்ளம் வெகு வேகமாக ஓடிவருகிறது., நீஞ்ச முடியவில்லை, கை சோர்ந்து போகிறது, திரும்பிப் போய் கரையேறி விடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. நட்டாற்றில் மாட்டிக் கொண்டு நீர்ல் மூழ்கி மாள்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியத்தை எடுத்துக் கொள்வதே தவறு. நன்கு ஆலோசித்து முடியக்கூடிய செயலையே செய்ய வேண்டுமே தவிர, தொடங்கிவிட்டு அதைப் பாதியில் விடுவது தற்கொலைக்குச் சமமாகும்.

65.  நன்மை கடைப்பிடி.

நாம் செய்யும் செயல்கள் பெருமாலும் நன்மைகளை வேண்டியே செய்யப்படுகின்றன. அப்படி நன்மை நாடி செய்யும் செயல்கள்கூட சில சமயங்களில் நமக்குத் துன்பங்களைத் தந்துவிடும். செய்யும் செயல் அறத்தின்பாற்பட்டதென்றால் நிச்சயம் அது நன்மைகளை மட்டும்தான் தரும். மாறாக சுயநலம், பிறர் மேல் வெறுப்பு, கோபம் இவற்றால் உந்தப்பட்டு செய்யக்கூடிய காரியங்கள் பெரும்பாலும் நமக்குத் துன்பத்தை மட்டுமே தரும். நன்மை தரும் காரியங்களைச் செய்வதால் நம் மனதுக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகிறது. துன்பம் தரும் செயல்களைச் செய்யும்போதே நம் மனதில் கோபமும் ஆத்திரமும் நிரம்பிவிடுவதால் நம் மனமும் கெட்டுப் போகிறது. ஆகையால் எப்போதும், எவருக்கும் ஏன் நமக்கும்கூட நன்மை பயக்கக் கூடிய செயல்களை மட்டுமே செய்ய வேண்டுமென்கிற கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்.

66.  நாடு ஒப்பன செய்.

பொதுவான காரியங்கள் பலவற்றை நாம் செய்யவேண்டியதிருக்கிறது. நாம் செய்யும் செயல் பரவலாக அனைத்துத் தரத்து மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய செயலாக இருக்க வேண்டும். சுயநலத்தின் காரணமாக நமக்கோ, அல்லது வேறு தனிப்பட்ட ஒருசிலருக்கோ நன்மை செய்யவேண்டும் என்பதற்காக பிறருக்குத் துன்பமோ, இடையூறோ விளைவித்துவிடக் கூடாது. ஆகையால் நாம் எந்த செயலைச் செய்வதாயிருந்தாலும் பொதுவாக ஊரிலுள்ளோர் எல்லோருக்கும் அது சம்மதமுடைய செயலாக இருக்க வேண்டும்.

67.  நிலையில் பிரியேல்.

கல்வி கற்கின்ற காலத்திலாகட்டும், பின்னர் தொழில் செய்யும்போதோ அல்லது வேறொரு இடத்தில் பணியாற்றும் போதோ நல்ல எண்ணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ளவர்களோடு நட்பு பூண்டொழுகினால், நமக்கு நல்ல எண்ணங்களும் உயரிய பண்பாடும் வளரும். அப்படிப் பட்ட உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தீய பழக்க வழக்கங்களை கைக்கொண்டவர்களோடு நட்பு பாராட்டினாலோ, அல்லது அவர்களோடு பழகத் தொடங்கினாலோ, அவர்களும் கீழ்நிலையை அடைவார்கள். பிறரால் இகழப்படுவார்கள். ஆகையால் நாம் எப்போதும் நல்ல சிந்தனையும், மேம்பட்ட செயல்பாடுகளும், உடையவர்களோடு உயர்ந்தே இருக்க வேண்டும்.  அந்த உயர் நிலையிலிருந்து எந்த காலத்திலும் எந்த காரணத்தைக் கொண்டும் தாழ்ந்து போகக் கூடாது.

68.  நீர்விளை யாடேல்.

ஆற்றிலோ, குளத்திலோ அல்லது இதர நீர்நிலைகளிலோ நீரைக் கண்ட மாத்திரத்தில் அதில் இறங்கி நீராடி மகிழவேண்டுமென்கிற எண்ணம் எல்லோருக்குமே உண்டாகும். அப்படி நீரில் இறங்கி நீராட வேண்டுமென்றால் முதலில் அந்த நீர்நிலையின் நிலைமை என்ன, ஆழம் அதிகமாக இருக்குமா, ஆறாக இருந்தால் நீரின் இழுப்பு வேகம் அதிகமா, இறங்கும் இடத்தில் புதைமண்கள் இருந்து கால்பட்டவுடன் உள்வாங்கிக் கொள்ளுமா என்பதையெல்லாம் நன்கு ஆராய்ந்து பார்த்து நீராட வேண்டும். கிணறாக இருக்குமானால் அது பொதுவாக நீர் இறைக்கத்தான் பயன்படுமே தவிர நீராட அல்ல. அதில் போய் இறங்கி குளிக்க விரும்பினால் ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் ஏரி, குளம், ஆறு, கிணறு ஆகியவிடங்களில் நீராடும்போது மேற்சொன்ன அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நன்கு ஆலோசித்து இறங்க வேண்டும். அலட்சியமாக நீர்விளையாட்டில் இறங்கினால் ஆபத்து நம்மைத் தேடி வரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

69.  நுண்மை நுகரேல்.

நுண்மை என்பதற்கு உணவு அல்லாத இதர தின்பண்டங்கள், நுகரேல் என்பதற்கு அவற்றைத் தின்பது. உணவு அந்தந்த நாட்டுக்கும், அந்தந்த பகுதிகளின் வெப்ப தட்ப நிலைமைக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. தென் இந்தியாவில் அரிசி முக்கியமான உணவு தானியம். வடக்கில் குளிர் உள்ள பகுதிகளில் கோதுமை முதன்மையான தானியம். நம் உணவை குளிர் பிரதேசங்களில் உண்பது கடினம். அதுபோல நாமும் உஷ்ணப் பிரதேசத்தில் இருந்து கொண்டு நமக்கு ஒத்துவராத உணவு வகைகளை உண்பது கூடாது. முக்கிய உணவைத் தவிர ஆங்காங்கே விற்கப்படும் சிற்றுண்டிகள் போன்றவை நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியவைகளாகவும் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட சாலையோர சிற்றுண்டிகளையோ, நமது ஆரோக்கியத்துக்கு ஒத்துவராத உணவு வகைகளையோ நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். தீங்கு தரும் சிற்றுண்டிகளைத் தவிர்த்து விடவேண்டும்.

70.  நூல் பல கல்.

நாம் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் பாடங்களைப் படிக்கிறோம். ஒரு பாடத்தில் எதைப் பற்றிப் படிக்கிறோமோ, அதன் ஒரு சிறு பகுதியைத்தான் பாடமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக கம்ப ராமாயணத்தில் வாலிவதைப் படலம் என்பது பாடமாக வந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதைப் படித்து தேர்வும் எழுதி வெற்றியும் பெறுகிறோம். அது கம்ப ராயாமணம் முழுவதையும் படித்துவிட்டதாக ஆகுமா? ஆகாதல்லவா. அதுபோலவே ஒரு தலைப்பில் ஏதொவொரு துளியை மட்டும் பாடமாக வைத்திருப்பார்கள், அதன் முழுப் பரிமாணத்தையும் நாம் படித்துப் புரிந்து கொள்ளுவதுதான் உண்மையான கல்வி. ஆகையால் நாம் முதன்முதலில் எதனைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமோ, அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள அதுசம்பந்தப்பட்ட பல நூல்களையும் படிக்க வேண்டும். அதனால்தான் பள்ளி, கல்லூரி தவிர ஒவ்வொரு ஊரிலும் நூலகம் வைத்திருக்கிறார்கள். அங்கு போய் நாம் எந்த பொருளில் தகவல்கள் சேகரிக்க விரும்புகிறோமோ அந்தத் தலைப்பில் உள்ள நூல்களை வாங்கிப் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் நூல்பயிற்சி தேவைப்படுகிறது. ஆகையால் நூல்பல கற்றல் என்பதை வாணாள் முழுவதற்கும் ஒரு கடமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

71.  நெற்பயிர் விளை.

உழவுத் தொழில் என்பதுதான் நம் நாட்டின் ஆதாரமான தொழில். இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு என்பதை நாம் அறிவோம். இங்கு கிராமங்களில் பயிர்த்தொழில்தான் முக்கியத் தொழில். இப்போது நாட்டில் தொழில் துறை முன்னேறிக் கொண்டிருந்த போதிலும், இன்னமும் கிராமப் புறங்களில் விவசாயிகள் வயலில் பாடுபட்டு தானியங்களை விளைவித்துத் தருவதால் தான் நமக்கு உணவுப் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. மேழி செழித்தால் நாடு செழிக்கும். ஒளவையும் இன்னொரு பாடலில் ஒரு மன்னனை வாழ்த்தும்போது சொல்கிறார் “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர கோல் உயரும்” என்று. நாடு எந்த அளவு நவீன தொழில்களை உருவாக்கி யிருந்தாலும், மனிதர்கள் உணவுக்கு கிராமங்களில் விளையும் நெல்லைத்தான் எதிர்பார்க்க வேண்டும். ஆகையால் நெற்பயிரை நம் உயிர் காக்கும் பயிர், அதனை பெருமளவில் பயிர்செய்து விளைவிக்க வேண்டும். நெற்பயிர் விளைய கிராமங்கள் வேண்டும், கிராமங்களே நம் உயிர்நாடி என்பதை நாம் உணரவேண்டும்.

72.  நேர்பட ஒழுகு.

மனிதர்கள் பலதரப்பட்டவர்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணங்கள் அமைவதில்லை. சிலர் சட்டத்திற்கும், உண்மைக்கும், நீதிக்கும் பயந்து ஒழுங்காக நடந்து கொள்வார்கள். சிலர் இவை எதையும் மதிக்காமல் மனம் போன போக்கில் நல்லன அல்லாதவைகளைச் செய்து பொல்லாங்கு புரிவார்கள். அதிகாரம் படைத்தவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை நீதி தவறாமல் செய்துவரவேண்டும். அப்படி அதிகாரம் உள்ளவர்களிடம் சென்று தங்கள் காரியங்களுக்காக அணுகுபவர்களும் நேர்மையான முறையில் தங்கள் தேவைகளைப் பெற வேண்டும். தகுதியில்லாத நபர்கள் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களைச் சாதிக்க விரும்பினால் தவறான வழிகளைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்குக் காரியங்களைச் செய்து தரவேண்டியவர்களும் குறுக்கு வழியில் சில பலன்களை அடைந்து அவர்கள் காரியங்களை நிறைவேற்றித் தருகிறார்கள். ஒருவன் தனக்கு உள்ள அதிகாரத்தை நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும். பயன்பெற விரும்புவோரும் நேர்மையாக அதனைப் பெற வேண்டும். புகைவண்டி தண்டவாளத்தில் போகும்வரைதான் பயணம் தொடரும், அது பாதை தவறி தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிடுமானால் பெரும் விபத்தில் கொண்டு போய் விடும். ஆகையால் ஒவ்வொருவரும் நேர்மை எனும் நேர்க்கோட்டில் பயணம் செய்தால் வாழ்க்கை செம்மையுறும்.

73.  நைவினை நணுகேல்.

நைவினை என்பதற்கு கேடுவிளைவிக்கும் செயல்கள் என்பது பொருள். நமக்கு ஒருவரைப் பிடிக்க வில்லையென்றால், அவருக்கு நம்மாலான கெடுதல்கள் அதனையும் செய்கிறோம். நாம் பிறருக்கு கேடு நினைத்தால் நமக்குக் கெடுதல்கள் தாமாகவே வந்து சேரும் என்று நீதிநூல்கள் சொல்கின்றன. ஆனால் ஆத்திரக்காரன் புத்திக்கு அந்த நீதிகள் எல்லாம் எட்டுவதில்லை. கோபத்தில் இன்னொருவருக்கு நாம் தீங்கிழைத்து விட்டால், பிறகு நம்மால் நிம்மதியாக உறங்க முடியுமா? நாம் செய்த தீங்கு நமக்குத் திரும்ப வந்துவிடக் கூடாதே எனும் அச்சம் அவனைக் கொன்றுகொண்டே இருக்கும். எவருக்கும் எந்த காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் கெடு நினைக்கவோ, கேடு விளைவிக்கவோ கூடாது. அதுவே மனிதத் தன்மை.

74.  நொய்ய உரையேல்.

உரையாடுவது என்பது ஒரு கலை. பிறருடன் உரையாடும்போது பண்பட்ட சொற்களைத்தான் பயன் படுத்த வேண்டும். நாம் பேசும் போது இனிமையாகப் பேசவேண்டும். கடுஞ்சொற்கள் பிறர் மனங்களைப் புண் படுத்தும். மகாகவி பாரதியார் பாடுகிறார், “மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும், நினைவு நல்லது வேண்டும்” என்று. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நம் வாக்கினில் இனிமை இருக்க வேண்டும். நாம் சொல்கின்ற சொற்கள் பிறர் மனதை வருத்தப்பட செய்யுமனால் அவற்றைச் சொல்லாமல் இருப்பதே நன்று.

75.  நோய்க்கு இடம் கொடேல்.

உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் வரைதான் நாமும் நல்ல சிந்தனை, நல்ல செயல் ஆகியவற்றை கடைபிடிக்க முடியும். உடல்நலம் கெட்டால் எல்லா நலங்களும் நம்மை விட்டுப் போய்விடும். நோய்கள் எப்படி நம்மைத் தொற்றிக் கொள்கின்றன? நம்முடைய தினசரி பழக்க வழக்கங்கள் ஒழுங்கோடும், தேவையில்லாதவற்றை உண்ணாமலும், நன்கு சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகுவதாலும் நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். வேளை தவறாத உணவு, நமக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும். கண்ட இடங்களில் ஈ மொய்க்குமிடங்களில் தரக்குறைவான பொருட்களால் செய்யப்படும் உணவு வகைகளைக் கண்ட இடங்களில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும், அப்படி வாழ்ந்தால் நோய்கள் நம்மை அன்டாது. நோய்கள் நம்மைத் தீண்டாதவாறு நடந்து கொள்வதே நம் நல்வாழ்க்கைக்கு நல்லது.

76.  பழிப்பன பகரேல்.

நாம் ஒரு சமூகத்தின் அங்கம். பலருக்கு மத்தியில் நாம் வாழ்கிறோம். நம்முடைய பேச்சு, செயல், நடவடிக்கைகள் பிறர் முகம் சுளிக்கும் வகையில் இருக்கக் கூடாது. சிலர் பொய்களையே பேசுவார்கள்; சிலர் பேசும்போது கடுமையான சொற்களையே பயன்படுத்துவார்கள்; சிலர் தேவையற்ற வீண் வம்பு விவகாரங்களைப் பேசிக் கொண்டிருப்பார்கள். பெரியோர்கள், சான்றோர்கள் மத்தியில் இருக்கும்போது நாம் அதிகம் பேசாமல் அவர்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். அதிகப் பிரசங்கமாக நாம் சான்றோர்கள் எதிரில் ஏதேனும் தவறாகப் பேசிவிட்டால் அவர்களது பழிப்புக்கு ஆளாக நேரும். ஆகையால் நமக்குப் பேசத் தெரியும் என்று நினைத்து எங்கும், யாவர் முன்னும் தரக்குறைவான சொற்களைப் பேசக் கூடாது. அப்படிப் பேசி பெரியோர்களின் பழிப்புக்கு ஆளாகக் கூடாது.

77.  பாம்பொடு பழகேல்.

நாம் மனிதர்களோடு பழகுவதோடு, வேறு சில செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். பலன்தரும் பசு, ஆடு, மாடு, கோழி போன்றவற்றையும் வளர்க்கிறோம். ஆனால் மனிதனுக்குக் கேடு விளைக்கும் பாம்போடு பழகுவதில்லை. நாம் அன்போடு அதனுடன் பழகுகிறோம் என்று புரிந்து கொள்ளும் அறிவு அதற்கு இல்லாததால், அதன் பொது இயல்பால் பிறரைக் கடித்துவிடும். பாம்பு ஒரு விஷப் பிராணி. அது கடித்தால் மரணம் நிச்சயம். ஆகையால் பாம்பை ஒரு செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது, அதனுடன் பழகவும் கூடாது. பாம்பின் குணம் போன்ற தீய குணங்கொண்ட மனிதர்களும் உண்டு. நீங்கள் நன்மைகளைச் செய்து வந்தாலும் பாம்பைப் போல தீமை பயக்கும் தீயவர்களும் உண்டு. அத்தகைய தீய குணமுடையொருடனும் பழகாமல் இருப்பது நல்லது.

78.  பிழைபடப் பேசேல்

கல்வி ஒரு மனிதனை பண்பாடு உள்ளவனாக ஆக்குகிறது. கற்றவன் என்பதற்கு அடையாளம் அவன் நடந்து கொள்ளும் முறை, பிறரிடம் பேசுகின்ற முறை ஆகியவைகளாகும். பேச்சு ஒரு கலை என்பதை நாமறிவோம். அப்படிப் பேசத் தெரிகிறது என்பதால் மனதில் தோன்றியதையெல்லாம் பேசிவிடலாமா? நம் பேச்சு நன்மை பயக்கக் கூடியதா என்பதறிந்து பேச வேண்டும். தீமை பயக்கும் பேச்சு பேசக் கூடாது. பேசும் மொழியை நன்குணர்ந்து தவறின்றி பேச வேண்டு.ம். இலக்கணப்படி பேச முடியாவிட்டாலும், தவறாகப் பேசக் கூடாது. சில நேரங்களில் நாம் சொல்ல வந்த கருத்தைச் சரியாகச் சொல்ல முடியாமல் தவறாகப் பேசிவிடுவதால் நம் காரியங்கள் கெட்டுவிடுவதோடு, பிறருக்கு வருத்தத்துக்கும் ஆளாகிவிட நேரும். எவரிடம் எவற்றை எப்படிப் பேச வேன்டுமென்பதை நன்கு உணர்ந்து பேச வேண்டும்.

79.  பீடுபெற நில்.

பீடு எனும் சொல்லுக்குப் பெருமை எனப் பொருள். ஒருவன் நல்லவனாக வாழ்ந்து, நல்லவனவற்றைச் செய்து கொண்டு, ஊரார் மெச்சும் உத்தமனாக இருந்தால் அவனை அனைவரும் போற்றுவர். அவன் தலைநிமிர்ந்து பெருமையோடு நடக்க முடியும். சொல், செயல் அனைத்திலும் நேர்மை வேண்டும். நன்கு கற்றறிந்த சான்றோனாகத் திகழ வேண்டும். ஊருக்கு நன்மை செய்து அவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருக்க வேண்டும். எல்லோரும் இவனைப் போல் ஒருவன் உண்டா என்று அதிசயிக்கத் தக்க வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

80.  புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

ஒருவர் புகழ் பெறுவதற்கு அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல வழிகளைக் கடைபிடித்திருக்க வேண்டும். நல்ல குணம், நல்ல கல்வி, நற்செயல்களைச் செய்வது போன்றவற்றால் ஒருவர் புகழ் பெறுவர். அவர்களை நாமும் போற்றி அவர்களைப் போல நாமும் வாழ முயற்சிகள் செய்ய வேண்டும். ஊர் பொற்றி வணங்கும் ஒருவரை நாமும் போற்றி வாழ்வது நமக்கும் புகழைத் தரும். நம்மைப் புகழ்கின்றவர்களை நாம் போற்றி வாழவேண்டும் என்ற பொருளில் இந்த சொற்றொடரை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படியானால் முகஸ்துதி செய்து நம்மிடம் வருகிறவர்களை நாம் போற்ற வேண்டுமென்று ஆகிவிடும்.

81.  பூமி திருத்தி உண்.

நாம் விவசாயம் செய்யும் நிலம் நிலையானது, அந்த நிலத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதில் பயிர்செய்து விவசாயம் செய்து கொண்டிராமல், அவ்வப்போது அந்த நிலத்தை நன்கு உழுது, உரமிட்டு பாதுகாத்து பயிர் செய்ய வெண்டும். மனிதன் தன் உடலை அடிக்கடி நோய் வராமல் பாதுகாத்து வருவது போல நம் நிலத்தையும் நன்கு பாதுகாத்து பயிர்த்தொழில் செய்ய வேண்டும்.

82.  பெரியாரைத் துணைக்கொள்.

பெரியோர்கள் நம்மைவிட மூத்தோர்களாவும், அனுபவம் அதிகம் உடையவர்களாகவும், நல்லவை தீயவைகள் பற்றி நன்கு உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள். இளம் வயதுடையொர் அனுபவம் இன்மையால் உலக நடப்பில் எது சரி எது தவறு என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரங்களில் அனுபமுள்ள பெரியோர்களைத் துணை கொண்டு அவர்களது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்து கொண்டால் நன்மைகளைப் பெற முடியும், வாழ்க்கையும் சீராக இருக்கும். ஆகையால் பெரியோர்கள் துணை வேண்டும்.

83.  பேதைமை அகற்று.

நமக்குள் அறியாமை எனும் நோய் அடங்கிக் கிடக்கிறது. அனைத்தையும் நன்கு அறிந்து கொள்ளும் வரை இந்த அறியாமை நம்மை மாறா இருளில் ஆழ்த்திவிடும். முதலில் நல்ல கல்வியினைக் கற்றுத் தேற வேண்டும். பிறகு நல்லோர் இணக்கம் வேண்டும். வாழும் முறை அறிந்து வாழ வேண்டும். இப்படி நமது நல்ல அனுபவத்தால் நல்லவைகளையும், தீமைகளையும் பேதம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்பொதுதான் நம் வாழ்க்கை செம்மையாக அமையும்.

84.  பையலோடு இணங்கேல்.

இப்போது பையன் எனும் சொல்வழக்கில் அழைக்கப்படும் சிறுவர்கள், அவர்கள் அனுபவமில்லாததாலும் நல்லது தீயது புரியாததாலும் சிறுபிள்ளைத் தனமாக இருப்பார்கள். நன்கு வளர்ந்த பெரியவர்கள் அத்தகைய சிறியவர்களோடு பழகுவதால் இவர்களுடைய செயல்கள் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஆகையால் தகுதியறிந்து விவரம் புரிந்தவர்களோடு இணக்கமாக இருப்பதே நன்மை பயக்கும்.

85.  பொருள்தனைப் போற்றி வாழ்.
நம்மிடம் இருக்கும் எந்தப் பொருளும் யாருடைய உழைப்பினாலோ உருவாக்கப் பட்டது. அந்த பொருள் செல்வமாக இருக்கலாம் அல்லது வேறெந்த விலை மதிப்புள்ள பொருளாகவும் இருக்கலாம். அதை சேர்க்க நாம் என்ன பாடு பட்டிருப்போம். எந்தப் பொருளும் தெவையில்லாதது என்பது அல்ல. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பார்கள். அதுபோல நாம் சேர்த்து வைத்த எந்த பொருளையும் தேவையில்லை என்று தெருவில் தூக்கி எறிந்து விட வேண்டாம். அது வேறு சிலருக்குத் தேவையாக இருக்கலாம் அப்போது அதைப் பிறருக்குக் கொடுக்கவும் செய்யலாம், ஆகையால் அவற்றைப் போற்றிப் பாதுக்காக்க வேண்டும்.

86.  போர்த்தொழில் புரியேல்.

ஒரு போர் என்றால் அந்தக் காலத்தில் இருவேறு மன்னர்கள் பெரும் படைகளைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு சண்டையிடுவார்கள். அதில் ஏராளமான பேர் உயிரை இழந்துவிடுவார்கள். இப்படியே ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டிருந்தால் பூமியில் உயிர்கள் இழப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கும், யார் குடும்பமும் அமைதியோடு வாழமுடியாது. ஒளவையார் வாழ்ந்த காலத்தில் மன்னர்கள் ஆண்டதால், அவர் மன்னர்களுக்கிடையே நடந்த போரை வெறுத்துப் போர்த்தொழில் புரியேல் என்று அறிவுரை கூறியதாகவும் கருதலாம்.

இதையே இன்றைய சூழலில் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டுக்கு நாடு போர் நடப்பதைக் கூட எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய போர் இரு தரப்பாருக்கும் தீங்கையே ஏற்படுத்தும், உயிர் நாசம் ஏற்படும் என்பதால் போர்த்தொழிலைக் கைவிட வேண்டுமென்றும் எடுத்துக் கொள்ளலாம். அது தவிர மக்கள் ஒருவருக்கொருவர் எத்தனையோ பிரிவினைகளால் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு சண்டை சச்சரவு இட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் அமைதியாகத் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டால் மனத்தில் கோபம், எதிர்ப்பு இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் வாழலாம். சண்டை போடுவதை நிறுத்து என்கிறார் ஒளவையார்.

87.  மனம் தடுமாறேல்.

மனம் தடுமாறுவது என்பது சாதாரணமாக எல்லோருக்குமே சில சந்தர்ப்பங்களில் ஏற்படுவதுதான். ஒரு காரியத்தைச் செய்யலாமா, வேண்டாமா என்கிற குழப்பம் ஏற்படுவது இயற்கை. இதனைச் செய்தால் அதன் பயன் வேறு பல தீங்கினை ஏற்படுத்துமே என்று ஐயம் வந்துவிட்டால், அந்தக் காரியத்தைச் செய்யலாமா வேண்டாமா என்கிற குழப்பம் வந்து விடும். தேர்வுக்குப் படிக்கும் மாணவன் அவன் படிக்கும் பாடம் புரியவில்லை என்று மனம் தடுமாறுகிறான், தேர்வில் வெற்றிபெற முடியுமோ முடியாதோ எனும் தயக்கம் தோன்றுகிறது, அந்தத் தயக்கத்தோடு சென்று தேர்வு எழுதினால் அவனுக்குத் தோல்வி வருவதைத் தடுக்க முடியாது. மனத்திண்மை வேண்டும், எதிலும் மன உறுதி வேண்டும். இதனை என்னால் நன்கு முடிக்க முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். தடுமாற்றத்தோடு செய்கின்ற எந்தக் காரியமும் வெற்றியளிக்காது. “துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே” என்ற பழைய பாடல் வரிகளை இந்தத் தலைப்பு நினைவு படுத்துகிறது. மனம் தடுமாறாமல் காரியங்களைச் செய்ய வெண்டும்.

88.  மாற்றானுக்கு இடம் கொடேல்.

அண்ணன் தம்பிக்குள் ஒரு பிரச்சினை தோன்றிவிடுகிறது. சொத்துப் பிரிவினை சம்பந்தமாக அவர் இருவருள் கருத்து வேற்றுமை தோன்றி பெரிதாகி அதில் அன்னியர்கள் வந்து தலையிடுகிறார்கள். அவர்கள் தங்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் இவர்களது வேற்றுமையைப் பெரிதாக்கித் தாங்கள் அதில் ஆதாயம் கிடைக்காதா என்று முயன்று பார்ப்பார்கள். மோதிக் கொள்ளும் இரண்டு காளைகளுக்கும் தான் தெரியும் அதிலுள்ள வலி. அடுத்தவன் இவர்களில் ஒருவனை ஆதரித்து பலனைத் தட்டிக் கொண்டு போனாலும் போய்விடுவான். சின்ன வயதில் நாம் படித்த கதையொன்று நினைவில் கொள்ளல் வேண்டும். இரண்டு பூனைகள் ஒரு ரொட்டியைக் கொண்டு வந்து பாகம் பிரித்துக் கொள்ள முயன்றதாம். அப்போது ஒரு குரங்கு வந்து அவை இரண்டுக்கும் மத்தியஸ்தம் செய்ததாம். அது அந்த ரொட்டித் துண்டை இரண்டாகப் பிரித்து ஒன்றுக்கொன்று அளவில் வித்தியாசம் காட்டி அந்த வித்தியாசத்தைச் சரி செய்வதாகக் கூறிச் சிறிது சிறிதாகத் தானே தின்றுவிட்ட கதையைப் போல ஆகிவிடும். ஆகையால் இருவருக்குள் பிணக்கு என்றால் அதை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, மூன்றாம் மனிதனுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.

89.  மிகைபடப் பேசேல்.

ஏதேனும் ஒரு நிகழ்வைப் பற்றிப் பிறரிடம் பேசும்போது நடந்ததை நடந்தாவாறு சொல்ல வேண்டும். அதில் கற்பனை கலந்து ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பூதமாக்கிப் பேசுதல் நல்லதல்ல. ஒருவன் வாந்தி எடுத்தானாம், அதை இன்னொருவன் சொல்லும்போது கருப்பாக வாந்தி எடுத்தான் என்பானாம், அதை மூன்றாமவன் சொல்லும்போது காக்கா போல கருப்பாக வாந்தி எடுத்தான் என்பானாம் பிறகு இன்னொருவன் காக்காயாக வாந்தி எடுத்தான் என்பான். இப்படி ஒரு செயல் மாறி மாறிச் செல்லும்போது மிகைப்படுத்தப்பட்டு தவறாகவே கொண்டு செல்லப்பட்டு விடும். அதனால் எதையும் உள்ளது உள்ளபடி பேசவேண்டுமே தவிர மிகைப்படுத்தல் தவறு.

90.  மீதூண் விரும்பேல்.

உணவு உண்பது அவரவர் தேவைக்கேற்ப உண்பார்கள். செல்வம் சேரச்சேர இன்னும் இன்னும் என்று விரும்பிச் சேர்க்க முடியும். வசதிகள் இன்னும் வேண்டும் என்று மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள முடியும். கல்வியை மேலும் மேலும் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வயிற்றுக்கு உணவை அளவோடுதான் உண்ண முடியும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்பார்கள். ஓரளவு உணவு உண்டவுடன் வயிறு நிரம்பிவிட்டால் அதற்கு மேல் உண்ண முடியாது. நன்றாக இருக்கிறது என்பதற்காக வயிறு நிரம்பிய பின்னும் உண்ண முடியுமா என்ன? முடியாதல்லவா? அதைத்தான் ஒரு பாடலில் ஒளவையார் சொல்கிறார். “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய், இருநாளைக்கு ஏகென்றால் ஏகாய், ஒருநாளும் என் நோயறியாய், என் வயிரே உன்னோடு வாழ்தல் அரிது” என்று இரண்டு நாள் உணவை இன்றே உண்ணச் சொன்னால் வயிறு கேட்காது. இரண்டு நாள் பட்டினி என்றாலும் கேட்காது என்பது கருத்து. ஆகையால் அதிக உணவு உண்னக் கூடாது, அப்படி அதிகம் உண்டால் சோம்பேரியாகப் படுத்து உறங்குவானே தவிர, செயல்பட மாட்டான்.

91.  முனைமுகத்து நில்லேல்.

இரண்டு பேர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அந்தச் சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் இருவரையும் விலக்கிவிட எண்ணி உள்ளே புகுந்து விலக்குகிறான். ஆனால் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் இவன் குறுக்கிடுவது பிடிக்காமல் இவனைத் தாக்கிவிடுகிறார்கள். இவன் அடிபட்டு காயம்பட்டு மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டி நேரிடுகிறது. நாம் செய்திகளில் பார்க்கிறோம் இரண்டு குடிகாரர்கள் சண்டையிடும்போது ஒருவர் நல்ல எண்ணத்தோடு உட்புகுந்து சண்டையை விலக்கி விடப் போகிறார். ஆனால் அவர்கள் இவரைக் குத்தி கொலை செய்து விடுகிறார்கள். அநாவசியமாக சண்டையை விலக்கப் போனவர் கொலையுண்டார். இப்படிப்பட்ட தெருச் சண்டைகள் நடக்குமிடங்களில் நிற்காதீர்கள், அதில் தலையிடாதீர்கள்.

92.  மூர்க்கரோடு இணங்கேல்.

ஒளவையின் ஒரு பாடல் சொல்கிறது: “கற்றாரைக் கற்றாரே காமுறுவர், கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பார், முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்”. கற்றவர்களைக் கற்றவர்களே விரும்புவார்கள். கல்வி அறிவில்லா மூர்க்கர்கள் அவர்களைப் போன்ற அறிவற்ற மூடர்களையே விரும்புவார்கள். ஆகையால் நாம் மூர்க்கரோடு நட்பு கொண்டு பழகுவோமானால் எந்நேரமும் அவர்கள் கோபத்துக்கு ஆளாகி நாம் துன்பத்தை அனுபவிக்க நேரிடும் என்பதால் மூர்க்கரோடு இணக்கம் வேண்டாம்.

93.  மெல் இல் நல்லாள் தோள் சேர்.

பருவமடைந்த பின் ஒவ்வொருவரும் தகுந்த வயதில் ஒரு நல்ல குணவதியான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, கணவனும் மனைவியும் இல்லறம் நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசி ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு நல்வாழ்க்கை வாழ்வதே நல்ல குடும்பமாகும். அதற்கு நல்ல குணமுள்ளவள் மனைவியாக அமைய வேண்டும். அன்போடு அரவணைத்துப் போகும் நற்குணமுள்ளவன் கணவனாக இருக்க வேண்டும். அப்படி அமையும் குடும்பமே நல்ல குடும்பம். ஆகையால் நல்ல குணங்களையுடைய இருவர் செர்வதே நல்லறமான இல்லறம்.

94.  மேன்மக்கள் சொல் கேள்.

நம்மிலும் மேம்பட்டவர்களான சான்றோர்கள் நமது நன்மைக்காகவே அறிவுரைகள் சொல்வார்கள். நம் நலம் நாடி அவர்கள் சொல்லுகின்றவற்றை நாம் கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். அப்படிக் கேட்டு நடந்து வந்தால் நாமும் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது நல்லெண்ணங்ளுடைய, நற்செயல் செய்பவர்களாகவும் ஆக முடியும். நல்லோர் நட்பு நமக்கு உயர்வைத் தரும், ஆகவே மேன்மக்களுடைய உறவை வளர்த்துக் கொண்டு, அவர்கள் சொற்படி நடந்து கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும்.

95.  மைவிழியார் மனையகல்.

பண்டைய காலத்தில் பரத்தையர்கள் என அழக்கப்பட்ட பெண்கள் பொதுமகளிராக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களைப் பற்றியெல்லாம் பழைய நூல்கள் நமக்குச் சொல்கின்றன. அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள கண்களில் மைதீட்டிக் கொண்டு ஆண்களைக் கவர்வார்கள். அவர்கள் மீது மோகம் கொண்டு ஆண்களும் அவர்கள் வீட்டுகுச் சென்று அவர்களோடு மகிழ்வார்கள். இன்றைய காலகட்டத்தில் அப்படிப்பட்ட சமூகம் இல்லையாயினும் பிறரறியா வண்ணம் ஆண்களின் இச்சைக்கு இறையாகத் தயாராகக் கண்களில் மைதீட்டிய மயக்கும் பெண்கள் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இல்லங்களுக்குச் செல்லக் கூடாது.

96.  மொழிவது அறமொழி.

பிறரோடு உரையாடுவது என்பது ஒரு தனிக்கலை. அது எல்லோருக்கும் வந்துவிடாது. நாம் யாரிடம் உரையாடுகிறோம் என்பதை உணர்ந்து அவர்களுக்கேற்ற வகையில் பெரியோர்களிடம் மரியாதையுடனும் அடக்கத்துடனும், நம் வயதொத்தவர்களுடன் நட்புடனும், வயதில் குறைந்தவர்களுடன் அன்புடனும் உரையாற்ற வேண்டும். நாம் பேசுவதில் நல்ல தெளிவு வேண்டும். நன்மை தரும் விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். தேவையற்ற அன்பை முறிக்கக் கூடிய விவகாரங்களைப் பேசி வளர்த்துக் கொள்ளக் கூடாது. திருவள்ளுவர் சொல்கிறார், “சொல்லுக சொல்லை அச்சொல்லைப் பிரிதோர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து”. நம் பேச்சில் தெளிவும், அன்பும் வெளிப்பட வேண்டும்.

97.  மோகத்தை முனி.

பொதுவாக எந்தவொரு பொருளின் மீது நாம் தீராத ஆசை கொள்கிறோமோ அதை மோகம் என்று சொல்வார்கள். பாரதியார் “மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்திவிடு” என்று மோகம் கொள்வதைக் குறித்துப் பாடுகிறார். பொருள்களின் மீது ஆசை, பிறர் அனுபவிக்கும் வசதிகள் மீது ஆசை, ஆண்களுக்குப் பெண்கள் மீது மோகம் இப்படிப் பல வழிகளிலும் ஆசை நம்மை அலைக்கழிக்கும். அப்படி ஆசை நம்மை ஆளத் தொடங்கினால் நம்மால் எல்லா ஆசைகளுக்கும் தீனி போட முடியாமல் போகலாம். எது நமக்குத் தகுதியோ, எதை நாம் பெறமுடியுமோ அதன் மீது மட்டும் ஆசைப்பட்டால் அது நமக்குக் கிட்டும். ஆனால் தகுதிக்கு மீறி பலவறின் மீது ஆசை கொண்டாலா அது இறுதியில் தீங்கில் போய் முடிந்து விடும். ஆகையால் ஆசையைத் தடுத்து அவற்றின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்.

98.  வல்லமை பேசேல்.

ஒவ்வொருவருக்கும் தங்களால் இயன்ற செயல்களை நன்கு செய்ய முடியும். அவர்களால் செய்ய முடியாத காரியங்களும் உண்டு. நம் திறமை என்ன, நம்மால் எவைகளைச் செய்ய முடியும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு பிறரிடம் பேச வேண்டும். வானத்தை வளைத்துவிடுவேன், மலையேறி தேனெடுத்து வருவேன், கடல்நீரை அகத்திய முனிவர் போல் ஆசமனம் செய்து குடித்துவிடுவேன் என்றெல்லாம் வல்லமை பேசுவோர் உண்டு. அவர்கள் வாய்ச்சொல் வீரர்கள். செய்யக்கூடிய அல்லது செய்யமுடிந்த செயல்களை மட்டுமே பேசுபவன் செயல்வீரன். முடியாத செயலுக்கு வாய்ச்சவடால் பேசுபவன் வெற்று வீரன் என்பதைப் புரிந்து கொண்டு வீணான தற்புகழ்ச்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

99.  வாது முற்கூறேல்.

அறிவிலும் அனுபவத்திலும் மூத்தோர்கள் பொதுவான பிரச்சனைகள் பற்றி விவாதிக்கும்போது, அவர்கள் அளவுக்கு வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்பது போல வாதிடக் கூடாது. சமமான தகுதி படைத்தவர்கள் வாதிடலாம், ஒருவரைவிட இன்னொருவர் குறைந்த அறிவு, ஞானம் உடையவர் என்றால் அவரோடு வாதிடக் கூடாது. வீணான வாதம் வம்பில் முடியும். எதிர் வாதம் செய்வதென்பது சிலருக்கு பழகிப் போய்விடும். அதை உடனடியாகக் கைவிட வெண்டும். பெரியோர்கள் விவாதித்து ஒரு முடிவெடுத்துவிட்டால் அதைப் பற்றி தாங்களும் சிந்தித்து, அவர்கள் முடிவு சரியானதாயிருந்தால் நாமும் ஏற்றுக் கொள்வதே சிறந்தது. தராதரம் இல்லாமல் எல்லோரும் எல்லோரிடமும் வாதிடலாம் என்பது அறியாமையின் விளைவு, அந்தத் தவறை செய்யக் கூடாது.

100. வித்தை விரும்பு.

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பர் பெரியோர். சிலருக்குச் சில கலைகள் விருப்பமாகவும், அவற்றில் ஈடுபாடுகொண்டு நன்கு கற்றும் தேர்ந்து விடுவார்கள். பலர் எந்தக் கலையும் தெரிந்து கொள்ளாமல் வீணாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நம்மைச் சுற்றி எத்தனை யெத்தனை கலைகள். அவற்றில் நமக்கு ஓர் அறிமுகம் நேர்ந்துவிட்டல் போதும் நமக்கும் அதைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் வந்துவிடும். ஒரு கலையென்றில்லை, நம்மால் முடிந்த அளவுக்கு எத்தனைக் கலைகளைக் கற்க முடியுமோ, அவற்றைக் கற்றுக் கொண்டு அவற்றில் நல்ல தேர்ச்சியடைந்து வாழ்ந்தால் நம் வாழ்நாள் முழுவதும், ஏன், அதற்குப் பின்னும் கூட நம்மைப் பற்றி பிறர் நினைவுகூர்வார்கள். பல கலைகளைக் கற்றுப் பண்டிதனாக வேண்டுமென்று எண்ணல் வேண்டும்.

101. வீடுபெற நில்.

மனிதராய் பூமியில் பிறந்து விட்டவர்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. என்றோ ஒரு நாள் அவர்கள் ஆயுள் முடிந்த பின் இறந்து போகிறார்கள் இறந்தவர்கள் என்ன ஆவார்கள் எனும் வாதம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் நல்ல ஜீவன்கள் நற்கதி எனும் மோட்சத்தை அடையும் என்றும், பாவங்களைச் செய்த ஜீவன்கள் நரகத்துக்குப் போகும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். நாம் நம்மைப் பொறுத்தவரை நம் ஆயுளுக்குப் பின் மோட்சத்தை அடைய என்னென்ன வழிகள் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நற்செயல்களைச் செய்து பலனடைய வேண்டும். நமக்கு நம் பெரியொர்கள் காட்டிய வழிதான் சரியென்று புரிந்து கொண்டு அப்படிப்பட்ட நற்கதியடைய வேண்டிய தவம், தானம், நற்செயல் இவைகளைச் செய்து முக்திக்கு வழிதேடிக் கொள்ள வேண்டும்.

102. உத்தமனாய் இரு.

உத்தமன் என்பான் யார்? இந்தக் கேள்விக்கு விடைகாண வேண்டுமானால், எவனொருவன் பிற உயிர்களிடத்தில் அன்பு பாராட்டுகிறானோ, இரக்கம் கொள்கிறானோ, இனிமையான சொற்களால் பேசி அவர்கள் மனங்களைக் கவர்கிறானோ, எவன் தரமறிந்து பிறருக்கு உதவிகளைச் செய்கிறானோ, அனைவரின் போற்றுதலுக்கும் பாராட்டுகளுக்கும் ஆட்படுகிறானோ, அவனே உத்தமன். அப்படியின்றி தீய குணங்கள் கொண்டவனாக, கடுஞ்சொல் பேசுபவனாக, பொய் உரைப்பவனாக, செருக்குடன் பிறரை அலட்சியம் செய்பவனாக இருந்தால் அவனை உத்தமன் என்று சொல்ல முடியாது. ஊரார் நம்மை உத்தமன் என்று பேசும்படி வாழ வேண்டும் அதுதான் வாழ்க்கையின் தத்துவம்.

103. ஊருடன் கூடிவாழ்.

ஏராளமானொர் ஒன்று சேர்ந்து ஒரேயிடத்தில் வசிப்பார்கள், அப்படிப்பட்ட இடத்தை ஊர் என்கின்றனர். ஒரு ஊரில் பலதரப்பட்டவர்கள் இருப்பார்கள். அவர்களில் நல்லவர்களும் உண்டு தீயவர்களும் உண்டு. ஆனால் பொதுவான காரியங்கள் என்று வந்துவிட்டால், அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அந்தப் பொதுக் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். அப்படிப்பட்ட கூட்டு முயற்சியில் ஒவ்வொருவரும் ஒரு திசைக்குப் போய் ஒத்துழைக்காமல் இருக்கக் கூடாது. அனைவரும் தங்களுக்குள் எந்த வித பேதங்கள் இருந்தாலும் பொதுக்காரியம் எனும்போது மற்றவர்களுடன் ஒத்துழைத்து பொதுக் காரியம் நல்லபடி நடந்திட ஒத்துழைப்பை நல்கவேண்டும்.

104. வெட்டெனப் பேசேல்.

வெட்டெனப் பேசுதல் என்றால் நறுக்கென்று கத்தியால் வெட்டிய பொருள் இரண்டாகப் பிளந்து கொள்வது. நம் பேச்சு அதைப்போல் இருக்கக் கூடாது. நாம் பேசுவதை நிதானமாக, நம் நியாயத்தை அவர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும் விதத்தில் பேச வேண்டும். சில நேரங்களில் தணிந்து பேசி பிறகு மற்றவர்களின் கருத்துக்களை விட தான் சொல்வது சரியானது என்பதை உறுதிப்படுத்திப் பேச வேண்டும். பட்டென்று பேசி ஒருவரை மனம் வருத்தப்படச் செய்துவிட்டால் நட்பு முறிந்து போகும், பிறகு நம்மிடம் யாரும் பேச அச்சப்படுவார்கள். ஆகையால் நம் பேச்சு பிறரைக் கவரும் விதத்தில் அன்பும் மரியாதையும் கலந்ததாக இருக்க வேண்டும்.

105. வேண்டி வினைசெயேல்.

பிறருக்கு நன்மை விளைக்கும் காரியங்களைச் செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படிச் செய்யும்போது நாம் இந்த நன்மையை அவர்களுக்குச் செய்வதால், அவர்கள் நமக்குத் திரும்ப என்ன உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்துச் செய்யக் கூடாது. அதே போல பிறரைப் பிடிக்கவில்லை என்பதால் அவர்களுக்குத் தீமை விளைக்கும் காரியங்களைச் செய்யக் கூடாது. பயன் கருதி உதவி செய்யத் தேவையில்லை, கைமாறு கருதாத செயலே நற்செயல். அதுபோல தீமை விளைக்கும் காரியம் என்று தெரிந்தால் அதை யாருக்கும் செய்யாமல் இருக்க வேண்டும்.

106. வைகறைத் துயிர்லெழு.

நம்மில் பலர் காலையில் சூரியோதயத்தையே பார்த்திருக்க மாட்டோம். காரணம் நாம் எழுகின்ற போது சூரியன் உச்சிக்குக் கூட வந்திருக்கலாம், அல்லது சூரியன் உதித்து பல மணி நேரம் கழித்து நாம் எழுந்திருக்கலாம். ஆனால் நாள் முழுவதும் சாம் சுறுசுறுப்பாகப் பணியாற்றவும், மனம் தெளிவாகவும் இருக்க வேண்டுமென்றால் சூரியோதயத்துக்கு முன்னதாக எழுந்திருக்க வேண்டும். அப்போதுதான் நம் மனம் தெளிவாக இருக்கும். நல்ல நூல்களைப் படிக்க புத்துணர்வு ஏற்படும். செய்ய வேண்டிய நற்செயல்களை நன்கு செய்து முடிக்க முடியும். ஆகையால் சூரியன் எழுமுன் நாம் எழுந்திருந்த அவனை எதிர்கொண்டழைத்து நம் செயல்களைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்.

107. ஒன்னாரைத் தேறேல்.

ஒன்னார் என்போர் பகைவர்கள். நாம் பலருடன் பழகுகிறோம். அவர்களில் நல்லவர்கள் யார், பகைவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து நல்லவர்களோடு மட்டுமே நம் பழக்கத்தை, நட்பை வைத்துக் கொள்ள வேண்டும். தீயோர் நட்பு கேடாய் முடியும் என்பதால் தீயோர் நட்பினை விலக்கிவிட வெண்டும். நல்லாரைக் காண்பதுவம் நன்றே, நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே என்கிறது தமிழ். ஆகையால் நல்லவர்களோடு மட்டும் நட்பு கொண்டு தீயோர் நட்பினை விலக்குக.

108. ஓரம் சொல்லேல்.

ஓரம் எனும் சொல்லுக்கு ஒருதலைப் பட்சம் என்று சொல்லலாம். நீதிகேட்டு ஒருவன் நீதிமன்றம் செல்கிறான். அவர்களில் ஒருவன் பக்கம் தான் நியாயம் இருக்க முடியும். அப்படி நியாயத்தின் பக்கம் இருப்பவனுக்கு எதிராக இருப்பவன் உன் நண்பனாக இருந்தாலும் அவனுக்க்காக நீதிக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லக் கூடாது. நீதிமன்றம் இருதரப்பு கட்சியையும் கேட்டபின் பல சாட்சிகளை விசாரித்து இருவர் கட்சியில் எவர் கட்சியில் நியாயம் இருக்கிறது என்பது நன்கு ஆராய்ந்து முடிவு செய்தபின் நல்லவன் பக்கம் தீர்ப்பளிக்க வேண்டும். அப்படிச்செய்வதுதான் தர்மத்தின் வழி. மகாகவி பாரதியார் பாஞ்சாலி சபதம் எனும் நூலில் “ஓரம் செய்திடாமே, தருமத்துறுதி கொன்றிடாமே, சோரஞ் செய்திடாமே, பிறரைத் துயரில் வீழ்த்திடாமே ஊரையாளும் முறைமை உலகில் ஓர் புறத்தும் இல்லை, சாரமற்ற வார்த்தை மேலே சரிதை சொல்லுகின்றோம்” என்று சொல்கிறார். ஓரம் செய்திடாமே என்றால் பொய்க்குத் துணை போகாமல் என்று பொருள், அந்த நீதியைக் கடைப்பிடித்து நல்ல வண்ணம் வாழ்வோம்.


                     (ஆத்திசூடிக்கு எளிய உரை நிறைவடைந்தது)















      









No comments: