பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, August 8, 2017

லக்ஷ்மி ராமாயணம் XI

லக்ஷ்மி ராமாயணம் XI


(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.


நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger.)


கடிமணப் படலம்

‘தேனமர் குழலிக்கு நாளை மணமென
யானை மீதில் மணமுரசறைக’ யென்று
ஆணையை யிட்டான் சனக மன்னன்.
அனைவரும் உயர்ந்தனர் உவகை யினால்                              360

இரவுப் பொழுதை பெருங்கட லெனவே
பெரு மூச்செறிந்தனள் பிராட்டி என்கையில்,
நீட்டிக்கும் இரவினைக் குறித்தே இராமனும்
வாட்டத் துடன்மனம் இரங் கினனாம்.                                   361

அஞ்சன வண்ணனும் அலர்மேல் மங்கையும்
மணஞ்செய விருப்பதை அறிந்து கொண்டு
செஞ்சுடர் விரித்த சூரியக் கதிர்கள்
சஞ் சரித்தனவாம் காணும் பொருட்டு.                                   362

                   திருமணநாளின் மேன்மை

இந்திரன் முடிசூடும் நாளொத்த திருநாளில்,
பொன்பொதிந்த ஆசனத்தில் தசரதன் அமர்ந்திட
மன்னர்களும், முனிவர்களும், முறைப்படி அமர்ந்திட,
சனகனும் அமர்ந்தான் சுற்றமும் சூழ்ந்திட.                               363

கங்கை முதலிய நதிகளின் நீரினால்
மங்கல மஞ்சனம் முறையின் ஆடி,
அரங்கனை வீழ்ந்து வணங்கிய இராமனும்
அணிகலன் பலவும் அணிந் தானாம்.                                    364

‘யாத்ரா தானமாய்’ பசுவும், பொன்னும்
ஈந்தனன் ஏறினான் ஒளிரும் தேரினில்.
அருணனாய் பரதனே தேர் செலுத்த – மற்ற
இளவ லிருவரும் சாமரம் வீசினர்.                                     365.

பாற்கடல் கடைகையில் திருமால் தம்மின்
பொற்கரம் பற்றிய திருமக ளின்று
அலைகடல் பிறந்துபின் அவனியில் உதித்தவள்.
மலைபோலிருந்த மண்டபம் அடைந்தனள்.                              366

வேதமோத வேதியரும், அறம் வளர்க்க அந்தணரும்,
மாதவத்தோன் வசிட்டரும், முடிதரித்த முனிகௌசிகனும்,
சசியோடு இந்திரனும், சக்தியோடு உருத்திரனும்,
வாணியுடன் நான்முகனும், மண்டபத்தில் குழுமினராம்.                  367

வெற்றிப் பெருந்தகை இராம பிரானும்
வேல்விழி நங்கை சீதாப் பிராட்டியும்,
வேதமுறைப்படி, ஹோமங்கள் நடந்த
மன்றலில் வந்து அமர்ந் தனராம்.                                      368

                                  
                    சீதா பிராட்டியை சனகன் தாரைவார்த்தல்

பூமகள் சீதையின் கரம் பற்றி,
கோமகன் ராமனின் வசம் சேர்த்து,
‘திருமால், திருமகள் போல் வாழ்க!’ வென
நீரினை வார்த்தான் சனக மன்னன்.                                      369

வானவர் பொழிந்தனர் பூ மழையை!
மன்னவர் சொரிந்தனர் பொன்மலர்களை!
ஏனையோர் தூவினர் நவமணிகளை – இம்
மா நில மானதாம் மீனுடை வானமாய்!                                 370

                       சீதாபிராட்டி பாணிக்கிரணம்

பொரிகொண்டு செய்யும் ‘லாஜ ஹோமமும்’
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
கொற் றவனைக்கழல் கும் பிட்டு,
பொற்றொடி கைபற்றி பொன்மனை புகுந்தான்.                           371

மங்கல நாணின் மகத்துவம் பற்றி
அங்கங்கு சொல்லிய கம்பர் ஏனோ
அணிவிக்கும் செய்தியை கூறவில்லை
அதை விடுத்தது ஏனென்று புரியவில்லை.                               372

தந்தைக்கு மிகவுகந்த கைகேயித்தாய் தாளினையும்,
தமைபயந்த கௌசல்யைத்தாய் தாளினையும் – தூய
சுமித்திரைத்தாய் தாளினையும் பணிந்தெழுந்தனராம். – அவர்களும்
‘மணாளனுக் கேற்ற மணாட்டி’யென மனமகிழ்ந்தனராம்.                  373

முழங்கினவாம் சங்கம்; கொட்டினவாம் பேரிகைகள்
இசைந்தனவாம்  பல்லாண்டு; நிரம்பினவாம் வேதகோஷங்கள்.
ஒலித்ததுவாம் வண்டினம்; அதிர்ந்ததுவாம் அண்டமும்
மகிழ்ந்தனராம் தேவர்கள்; முகிழ்ந்தனவாம் கலைபலவும் .               374                        
                      பரதன் முதலிய மூவர் திருமணம்

தம்மகளாம் ஊர்மிளையை இலக்குவர்க்கும்,
தம்தம்பி குசோத்துவன் ஈன்ற மகள்களுள்
மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும்
மணம்பேசி முடித்தனனாம் சனக மன்னன்.                              375

புதல்வர்கள் நால்வரின் திருமணம் முடித்து
ஈட்டிய மெய்ப்பொருள் அனைத்தையும் தசரதன்
கேட்டவர், கேளார் அனைவருக்கும்
‘போதும், போதும்’ எனும்படி ஈந்தான்.                                    376

                           (மேலும் வளரும்)



No comments: