பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, August 6, 2017

லக்ஷ்மி ராமாயணம் பகுதி X

 லக்ஷ்மி ராமாயணம்.


(பெயரே புதிதாக இருக்கிறதே, இப்படியொரு ராமாயணமா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இது கம்பர் இயற்றிய ராமாயணமேதான், ஆனால் அவரெழுதிய கவிதை வடிவில் இல்லாமல் அவர் கவிதைகளின் சாரத்தை எடுத்து திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் தன் சொல் நடையில் (கவிதை வடிவில்) வடித்திருக்கும் ராமகாதை. புதிய முயற்சி, ராமகாதையின் மீதுள்ள காதலால் உருவெடுத்த வரிகள் இதில். திருமதி லக்ஷ்மிரவி அவர்களின் புது முயற்சி என்பதால் பிழைகள் இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டி, நிறைகளைப் போற்றி வாழ்த்திப் பாராட்டி ஊக்கமளிக்க வேண்டுகிறேன். திருமதி லக்ஷ்மிரவி கல்லூரி நாட்களில் கவி அரங்கங்களைக் கண்டவர். திருச்சி வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவரது குரல் பலருக்குப் பரிச்சயமானது.

நெடுங்காலம் இத்துறையினை மறந்திருந்த அவர் இப்போது கம்பனின் காவியத்தைப் படித்துவிட்டுத் தன் சொல்லால் ராமாயணம் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். எளிய நடை, கதைப்போக்கு மாறாமல் கம்பன் சொற்களால் அடுக்கப்பட்ட வரிகள், படியுங்கள், கருத்துக்களைச் சொல்லுங்கள். எழுதிய திருமதி லக்ஷ்மிரவியை ஊக்கப்படுத்தி எழுதத் தூண்டுங்கள். --  வெ.கோபாலன்Blogger. )


                                எதிர் கொள் படலம்
              (சக்ரவர்த்தி பரிவாரங்களுடன் மிதிலையை அணுகுதல்)

‘வந்தனன் அரசன்’ கேட்டதும் சனகன்,
பொங்கிடும் உவகையுடன், களிறும்தேரும், பரியும்சூழ
சந்திரன் சார்ந்திடும் சூரியன் போலவே
இந்திர னொத்திடும் தசரதன் காணப் புறப்பட்டான்.                        339

கடல்போன்ற திரட்சியான தசரதபடை ஆறுடனும்,
இலைவடிவ வேலேந்திய சனகனின்படை சேர்ந்ததும்,
ஏழுகடலும் அலைகளுடன் ஆர்ப்பரித்தாற் போலவே
சதுரங்க சேனைகளாய் எங்கும் பரவிற்றாம்.                              340

               சனகன் தேரில் தனியே வருதல்

சொல்ல வொண்ணா பெருமைகொண்ட சனகனும்
எல்லையில்லா பெருமகிழ்ச்சி பொங்கிவர
தந்தையினை யொத்தவனாம் தசரதனை தரிசிக்க
சிந்தையொத்த வேகம்கொண்ட தேரினில் வந்தெய்தினான்.                341

அணுகினான். அணுகியதும் தேரினின் றிறங்கினான்.
சேனையினைப் பின்னிறுத்தி தான்முன்னம் சென்றான்.
முகம்மலர்ந்த ஐயனும் ‘தன்தேரிலேறுக’வெனக் கையசைத்து
அகமுற தழுவி, மார்போடணைத்தான் சனகனை.                        342

புலிகளுக் கெதிரில் சிங்கம் போன்றவன்
எவரினும் உயர்ந்தவன் தசரத வேந்தன்
சனகனின் சுற்றம்நட்பின் சேமம் அளாவி,
இனிதென நகரினுள் உகந்து சேர்ந்தனன்.                                343

தம்பியுந் தானுமாய் பெரும்படை சூழ
வந் தெய்திய தன்னுயிர்க் குமரனை
முன்பிரிந்த ஆவிவந்து சேர்ந்ததுபோல்
ஆராமை மீதூர முகம்வருடித் தழுவினன்.                               344

பெற்றதாய் மூவரையும் தொழுதெழுந்த இராமபிரான்
உற்றஉறவு, சேனையுடன் உவகையுடன் கூடினான்.
மட்டற்ற அன்புடைய தம்பிமார்கள் பின்தொடர
முரசுடனும், சங்குடனும், நகரத்துள் செல்லலானான்.                     345

                          உலாவியற் படலம்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை
அரிவை, தெரிவை, பேரிளம் பெண்ணென
பருவ நிலையுடை பெண்களும் இராமன்பால்
அரும்பிய காதலால் வீதியில்முந்தி வந்துநின்றார்.                       346

தோள் கண்டவரெல்லாம், தோளே கண்டிருந்தார். - அவன்
தாள் கண்டவரெல்லாம் தாளே கண்டிருந்தார்.
நீள்கை கண்டோரும் அஃதே கண்டிருந்தார்.
கொள்கையிலே முதிர்ந்தோரோ பரம்பொருளைக் கண்டிருந்தார்.           347

அமிர்த மொய்க்கும் ஈ யெனவும்
மலர்கள் சுற்றும் வண்டெனவும்,
மாதர்கள் மொய்க்க மண்டப மடைந்தவன்
மாதவ முனிகளின் பாதங்கள் பணிந்தான்.                               348

கோமகன்சூழ்ந்த மற்றைய பலரையும்,
முகமன் செய்தான் சனக மன்னன்.
அகமும், முகமும் மலர்ந்திடவே
அசதியைப் போக்கிட உபசரித்தான்.                                     349

                          கோலங்கண் படலம்

‘பெண்களுக் கரசியாம் நும் திருமகளை
ஈண்டு தருமின்’ உரைத்திட்டான் முனிவசிட்டன்
வெண்கொற்றக் குடை யுடைய சனகனும்
அவ்வண்ணம் ஆணையிட்டான் தாதியிடம்.                             350.  

பொங்கிய களிப்புடன் ஓடினள் தாதியும்.
மங்கையாம் சீதையிடம் நிகழ்ந்ததை யுரைத்தனள்.
அமுதுக்கே சுவையூட்டும் வண்ணமாய்
அழகுக்கே அழகு செய்ய முனைந்தனள்.                                 351

நெற்றியில் சுட்டியும், செவிகளில் குண்டலமும்,
சங்கனைய கழுத்தினிலே முத்துமணி மாலையும்,
கங் கணங்களை அவள் கரங் களிலும்,
மேகலையை அவள் இடையினிலும் சாற்றி,                             352

பாதங்களில் சிலம்பினைப் பூட்டி,
பட்டு ஆடைதனை இடையினில் உடுத்தி,
கண்களுக்கு மைதீற்றி, நெற்றித் திலகமிட்டு
கொண்டையிலே பூசூட்டி, கன்னத்தில் பொற்பொடியப்பி,                  353

திருட்டி கழித்து, உச்சி முகர்ந்து.
அரம்பையர்சூழ் இந் திரா ணி போல்
விண்மீன்சூழ் இளஞ் சந்திரன் போல்
அழைத்து வந்தனர் மண்டபம் பால்.                                     354

நிலமடந்தை உயிர்த்த அக்கோல மயிலுக்கு
உடல்நோவு வாரா வண்ணம் வழியெங்கும்
மலர்களும், தளிர்களும் பரந் திருக்க,
இளவரசி அரசவையை ஒயிலாக அணைந்தாளாம்.                       355


பேரெழில் பிராட்டியைப் பார்த்ததும் தசரதனும்,
அவதார உண்மையறிந்த வசிட்டனும் பேரானந்தப்பட
இமைத்திலர் மண்டபத் திருந்த எண்ணற்றோர்..
உயிர்த்திலர் பலர் இது சித்திரமென,                                     356

இவளோ? அல்லளோ? மாடத்திலே கண்டவள்!
இவ்வாறு ஐயங்கொண்டான் ஐய்யன் – பின்
அவளேதான் இவளென்று ஐயந்தெளிந்து
தேவாமிர்தம் பெற்ற தேவேந்திரன் போலானான்.                         357

மாதவமுனிகளை முறைப்படி தொழுதவள்.
தந்தையை யடுத்த இருக்கையில் அமர்ந்ததும்,
கோமகன் தசரதன், கௌசிக முனியிடம்
‘மணமுகூர்த்த நாள் என்றைக்கு?’யென கோரினான்                      358

‘உற்ற திருமண நன்னாள் நாளை’ யென்ற
முற்றும் துறந்த கௌசிகமுனியுடன் வசிட்டரையும்
வணங்கிய இரு பெரும் மன்னர்களும்
மனமகிழ் வுடன்தம் மிடம் சென்றார்.                                   359


                                
(தொடர்ந்து வரும்)


No comments:

Post a Comment

You can give your comments here