பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, January 16, 2016

திருவள்ளுவர்


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுஎன்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும்திருக்குறள்என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர்.
உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர்.
இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
திருக்குறளை சிறப்பிக்கும் விதமாகஉலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பொதுவாக, அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பிரிவில் வீடு என்பது மோட்சம். அதை வள்ளூவர் இங்கு அதிகம் தொட்டுக் காட்டாமல், முதல் மூன்று பாலுடன் நிறுத்திக் கொண்டதும் அவரது உள்ளக் கிடக்கம் மானுட வர்க்கத்தை சீர்படுத்தவே என்பது புரிகிறது அல்லவா?
§  அறத்துப்பால்முதல் பிரிவானஅறத்துப்பாலில்மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
§  பொருட்பால்இரண்டாவது பிரிவானபொருட்பாலில்உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
§  இன்பத்துப்பால்மூன்றாவது பிரிவானஇன்பத்துப்பால்அல்லதுகாமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும், இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
திருவள்ளுவர் தினம்: தை மாதம் 2வது நாள் அதாவது ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும்.
ஒன்றரை அடிகளில் வாழ்வியலுக்கு தேவையான வழிகளை போதித்தவர் திருவள்ளுவர். அணுவைத் துளைத்து அதில் ஏழ் கடலை புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று புகழப்பட்டது திருக்குறள்.
133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் வீதம் 1330 குறள்களை எழுதியுள்ளார்

தொடங்கியவுடன் “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்கிறார். தமிழ் “அ” எனும் எழுத்தில் தொடங்குவது போல, இந்த உலகு ஆதி, பகவன் ஆகியோரை வழியொற்றி தொடர்கிறது என்கிறார்.
ஒருவன் கல்வி கற்றவன் என்பதற்கு எது அடையாளம்? ‘வாலறிவன்’ அதாவது மெய்யாய் விளங்குவோன் எனும் இறைவனை வணங்குவதுதான். அந்தக் குறள் “கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாரெனின்?”
இன்ன கடவுள் என்று பிரித்துப் பாராமல், பொதுவான சொல்லினால் இறைவனை முதல் 10 பாடல்களை கடவுள் வாழ்த்து எனும் தலைப்பில் கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து ‘வான் சிறப்பு’ எனும் தலைப்பில் மழையின் சிறப்பைக் கூறுகிறார். வேதங்களில் முதன்மையானது ‘ரிக்’ வேதம். அதில் இறைவன் என்று எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அந்த பழமையான காலத்தில் இடி, மழை, காற்று, மின்னல் போன்ற இயற்கைத் தோற்றங்களை வணங்கினர். இந்திரன் என்பவனே முழு முதல் கடவுள்.
முதலில் “மழையை” வைத்ததால் உயிர்களுக்கு முதல் தேவை மழை என்கிறார். இதில் “தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காதெனின்” இந்தக் குறள் சொல்லும் நீதி, இவ்வுலகில் மழை பெய்யாமல் பொய்த்துப் போனால், தானம் ஏது, தவம் ஏது? என்கிறார்.
“அறன் வலியுறுத்தல் என்றொரு அதிகாரம்”. அதில் சொல்கிறார் “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற”. மனத்தால் ஒருவன் தூயவனாக இருத்தல் வேண்டும், அதைவிட வேறு ஒரு அறம் இல்லை என்கிறார்.
பொதுவாக மக்கள் நமக்கு ஒருவர் செய்த நன்மையை நன்றியோடு நினைப்பது இல்லை. அதனால்தான் அவர் “செய்நன்றி அறிதல்” என்றொரு தலைப்பில் சொல்லும் ஒரு பாட்டில் “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்கிறார். நாம் செய்த நன்மைகளை மறந்து விடுவோம், ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிறர் செய்த தீங்கை மட்டும் காலம் முழுதும் நினைத்திருப்போம். இது தீது என்கிறார் வள்ளுவர்.
ஒழுக்கமுடைமை என்றொரு அதிகாரம். ஒழுக்கம் எத்துணை இன்றியமையாதது. அது உயிரைவிட மேலானது. ஒழுக்கம் தவறியவன் இறந்தவனுக்குச் சமம். இதை வள்ளுவர் சொல்கிறார் “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்”. உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் அவசியம் என்பது அவர் கருத்து.
அழுக்காறு என்றால் பொறாமை. நாம் எதற்கும் எப்போதும் பிறரிடம் பொறாமை கொள்கிறோம் அல்லவா? அப்படி பொறாமை கொண்டவன் உலகில் பெருமை அடைவதில்லையாம். பொறாமை இல்லாமல் இருப்பவன் மேன்மை அடைந்தே தீருவான் என்கிறார். அந்தக் குறள் “அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அஃது இல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.”
தீவினை அச்சம் என்றொரு அதிகாரம். நம்முடைய எந்த செயலிலும் தீய எண்ணம் கூடாது. அப்படி நம் உள்ளத்தில் தீமை இருந்தால் என்ன செய்யுமாம் தெரியுமா? அந்த எண்ணம் நமக்கே தீமை விளவிக்குமாம். ஆகையால் தீமையைக் கண்டு அஞ்சுதல் வேண்டும் என்கிறார். “தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப் படும்”.
மாமிசம் சாப்பிடுவது பற்றியும் வள்ளுவர் கூறுகிறார். மாமிசம், அதாவது புலால் உண்ணாமை என்பது அதிகாரம். அவர் சொல்கிறார், எந்தவொரு உயிரையும் கொன்று மாமிசம் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகிலுள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்குமாம். “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்”. படித்திருக்கிறீர்களா?
இப்படி அறத்துப் பால் நெடுக தர்ம நியாயங்களை வலியுறுத்திச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அந்தக் கருத்துக்கள் அனைத்துமே, எல்லா காலத்துக்கும் ஏற்புடையது என்பது புரிகிறதல்லவா?
அடுத்தது பொருட்பால்.
பொருட்பாலில் இறைமாட்சி எனும் அதிகாரத்துடன் தொடங்குகிறார். ஒரு அரசன் எவ்வாறு இருக்க வேண்டும்? அரசனுக்குரிய குணங்கள் பற்றியெல்லாம் இங்கு வள்ளுவர் சொல்லுகிறார். இதை ஒரு அளவுகோலாக நாம் கொண்டோமானால், இந்த ஜனநாயக யுகத்தில் நம்மை ஆள்வோர் எப்படி இருக்க வேண்டுமென்பதை நாம் முடிவு செய்து கொள்ளலாம், இல்லையா?
ஒரு அரசனுக்குத் தேவை ஆறு அம்சங்கள்: அவை படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் இவைகளாகும்.
அவன் இயல்புகள் நான்கு.  அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை, ஆகிய நான்கும்.
அவனுக்கு வேண்டிய பண்புகள் மூன்று: விரைந்து செயல்படுதல்; கல்வி; துணிவு.
குணங்கள்: அறம் தவறாமை, அறமில்லாதவை நீத்தல், வீரம், மானம்.
செயல்பாடு: பொருள் வரவுக்கான வழிகளை காண்தல்; வந்த பொருளை சேமித்து வைத்தல்; அதை காத்தல்; காத்து வைத்தவற்றை பயனறிந்து செலவழித்தல்.
தோற்றம்: காண்பதற்கு எளியவனாய் இருத்தல்; கடுஞ்சொல் இல்லாதவன்;
புகழ்:  இனிய சொல் உடையவன்; தக்கோருக்கு உதவுபவன்; நீதி தவறாதவன்.குறைகளைக் கேட்டுக் கொள்ளும் நிதானம்; நிதானத்தைக் கடைபிடிப்பவன்.
யார் நல்ல அரசன்?  கொடை குணம் கொண்டோன், செங்கோல் தவறாதவன்; நலிவடைந்த குடிகளைக் காப்பவன் ஆகிய நான்கும் உடையோன்.
கம்ப ராமாயணத்தில் நிறைவாக இராம பட்டாபிஷேகம் நடக்கும் காட்சியை கம்பன் வர்ணிக்கிறார்:
“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த                                            பரதன் வெண்குடை கவிக்க,  இருவரும் கவரி வீச                                           விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை                        மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி.”
இந்தப் பாடலில் அரியணை அனுமன் தாங்க எனும் சொற்கள் சொல்லும் செய்தி என்ன? அனுமன் தாங்காவிட்டால், அந்த அரியணை தரையில் நிற்காதா? நிற்கும். ஆனால், இங்கு சொல்ல வந்த செய்தி என்னவென்றால், ஒரு நாட்டை ஆளும் தகுதிகள் அனைத்தும், மேலே சொன்ன தகுதிகள் அனைத்தும் அனுமனுக்கு இருப்பதால், அவன் இந்த இராம ராஜ்யத்தின் அரியணைக்கு, அதாவது ஆளுகைக்கு உறுதுணையாக இருப்பான் என்பது செய்தி.
இது போல எத்தனையோ செய்திகளைச் சொல்வது திருக்குறள். வாழ்க்கையில் நமக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும், திருக்குறளை எடுத்துத் தேடினால், நமக்கு விடை கிடைக்கும். அதனால்தான் திருக்குறளை பொது மறை என்கின்றனர்.
உலகத்திலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் திருக்குறளும் ஒன்று. திருக்குறள் 1330 பாக்களையும் மனப்பாடம் செய்ய முடியும். அப்படிப்பட்ட வாய்ப்பை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி “ஒரு வார்த்தை ஒரு லட்சம்” எனும் பகுதியில் திருக்குறள் முழுவதையும் படித்தால்தான் கலந்து கொள்ள முடியும். இதுபோன்ற நல்ல நிகழ்ச்சிகளை மட்டும் மாணவர்கள் பார்த்தால் போதும்.









No comments: