திருவையாற்றில் சலசலத்து ஓடும் காவிரியாற்றின்
கரையில் ஸ்ரீமதி நாகரத்தினம்மாள் எனும் இசை, நாட்டியத் துறை வல்லவர் ஒருவர் தன் சொந்த
முயற்சியால் எழுப்பி, இப்போது தியாகராஜ சுவாமிகள் ஆராதனைக் கமிட்டியால் நிர்வகிக்கப்படும்
சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சமாதிக்கு எதிரில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பந்தலில்
ஏராளமான இசை ரசிகர்கள் முன்னிலையில் தலைசிறந்த இசைக் கலைஞர்கள் கூடி இன்று பஞ்சரத்ன
கீர்த்தனைகள் பாடி ஆராதனை செய்கின்றனர்.
கர்நாடக சங்கீதம் இன்று வளம் பொங்கி
நிற்பதற்குக் காரணமான கர்நாடக இசை மூவரில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஒருவர்; மற்ற இருவர்
முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி. ராம பக்திக்கு ஆஞ்சநேயனை உதாரணமாகச் சொல்வார்கள்.
அந்த அனுமனைப் போல சதா காலமும் ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டு அவர் மீது பற்பல
சாகித்யங்களை இயற்றிப் பாடி இன்று வரை அந்த கீர்த்தனங்கள் பல்லாயிரம் இசைக் கலைஞர்களால்
பாடப்பட்டு வருகிறது என்பது எத்தகைய சாதனை?
ஸ்ரீதியாகராஜரின் ராமபக்தி, அவர் மீது
இசைத்த சங்கீதம் இவைகளைத்தான் நாதோபாசனா என்கின்றனர். நாதத்தை, இசையை உபாசிப்பது, அதாவது
வழிபடுவது என்பது இதன் பொருள். ஒருவன் தன் இதயத்தின் ஆழத்தில் பரவிக்கிடக்கும் பக்தியைச்
சொற்களால் விளக்க முடியுமா? முடியும் என்பதைத் தன் சாகித்யங்களால் நிரூபித்துக் காட்டியிருப்பவர்
ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். நமது வேதங்களும், உபநிஷதங்களும், புராணங்களும் இந்த பக்தியைத்தான்
திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றன. அதை மிக எளிதாகத் தன் சாகித்தியங்கள் மூலம்
இவ்வுலகுக்குக் கொடையாக அருளிச் செய்திருக்கிறார் தியாகராஜர்.
ஐந்து ஆறுகள் இந்தப் பகுதியில் ஓடுவதால்
இவ்வூர் ஐயாறு எனப்பட்டதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆறு என்பதற்கு மார்க்கம்,
வழி என்றும் பொருள் உண்டு. இறைவனின் பாதாரவிந்தங்களை அடைய பல துறைகள் உண்டு, அவற்றில்
ஐந்து வழிகளைக் காட்டுமிடம் திருவையாறு என்பதால் இந்தப் பெயர் உண்டானதாகவும் சொல்வர்.
புராண வரலாறுகளின்படி திருநாவுக்கரசருக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி தந்தருளிய தலம்
இது. சுந்தரமூர்த்தி சுவாமிக்கு திருக்கண்டியூரிலிருந்து ஐயாற்று ஈசனை தரிசிக்கவென்று
காவிரி வெள்ளம் கடுகி விலகி வழிவிட்டதாகவும் செய்திகள் உண்டு. தனக்குப் பூஜைகள் செய்துவந்தவர்
காசி சென்று திரும்பாததால், சிவனே அந்த வேதியர் வடிவம் தாங்கி தன்னையே பூசித்துக் கொண்ட
நிகழ்ச்சியும் இத்தலத்துக்கு இருக்கிறது. இங்குள்ள அம்மைக்கு அறம்வளர்த்தநாயகி என்று
பெயர். ஐயன் அளந்த இருநாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரெண்டு அறங்களைச் செய்ததால் இந்தப்
பெயர் வந்ததாகக் கூறுவர்.
இப்படிப்பட்ட பெருமைகளை உள்ளடக்கிய திருவையாறு
தலம் பண்டைய நாட்களிலிருந்தே கலைஞர்கள் வசித்து வரும் இடமாக இருந்திருக்கிறது. நாயக்க
மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் வந்த பெரும் கலைஞர்கள் எல்லாம் இங்கே வசித்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு வம்சம் தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறியிருந்தனர்.
அந்த வம்சத்தில் 1767ஆம் வருஷம் மே மாதம் 4ஆம் தேதி சர்வஜித் வருஷம் சைத்ர மாதம் சுக்ல
சப்தமி புஷ்ய நட்சத்திர புண்யகாலத்தில் பிறந்த குழந்தைதான் தியாகராஜர். இவர் வாழ்ந்த
சூழ்நிலை, இராம பக்தி ஆகியவை காரணமாக இவர் சுமார் இருபத்திநாலாயிரம் கீர்த்தனங்களை
இயற்றியுள்ளார். இவருடைய தாய் மொழி தெலுங்கு, ஆகையால் இவரது பெரும்பாலான பாடல்கள் தெலுங்கு
மொழியில் அமைந்துள்ளன. சம்ஸ்கிருத மொழியில் சில பாடல்கள் உண்டு, அவைகளில் பஞ்சரத்ன
கீர்த்தனைகளுள் ஒன்றான “ஜகதானந்ததாரகா” எனும் பாடல் மிகவும் பாராட்டத் தகுந்த பாடல்.
இவருடைய கீர்த்தங்கள்தான் இன்றைக்கும் கர்நாடக இசைக்கு உயிர் மூச்சாக இருந்து வருகிறது
என்பதிலிருந்தே இசையின் மீது இவருடைய தாக்கம் எத்தகையது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஸ்ரீதியாகராஜர் பிரம்மச்சாரியா, கிருஹஸ்தரா,
சந்நியாசியா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் என்பதிலிருந்து
இவர் ஒரு சந்நியாசி என்று நினைப்பர். ஆம் தன் வாழ்வின் கடைசி கட்டத்தில் இவர் துறவறம்
மேற்கொண்டதால் அதுவும் சரியே. தனது 18ஆம் வயதில் இவர் பார்வதி எனும் பெண்ணை மணந்து
கொண்டார், அவர் அடுத்த ஐந்தாம் ஆண்டில் இறந்து போனார். பின்னர் அவருடைய சகோதரியான கமலாம்பா
என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சீதாமகாலட்சுமி எனும் பெண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் திருமணமாகி ஒரு மகனையும் ஈன்றெடுத்திருக்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டம் அந்த
குழந்தையும் இறந்து போனது; ஆகவே ஸ்ரீ தியாகராஜருக்கு நேரடி வாரிசு என்று யாரும் இல்லாமலே
போய்விட்டது.
ஆனால் ஸ்ரீதியாகராஜரின் மூத்த சகோதரர்
ஜல்பேசன் என்பவருக்கு வாரிசுகள் உண்டு, இன்றும் கூட அந்த வாரிசுகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
1847 ஜனவரி 6ஆம் தேதி புஷ்ய பகுள பஞ்சமியில் அவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஸ்ரீதியாகராஜரின் இசை புகழ்பெற இரண்டு
காரணங்கள், ஒன்று அவைகளில் நிறைந்திருந்த பக்தி ரசம். மற்றொன்று அவருடைய குருவான சொண்டி
வெங்கடரமணையா என்பவரிடம் அவர் கற்றுக்கொண்ட சுத்தமான இசை. பக்தி எனும் சுவைகலந்த அந்த
புனிதமான இசை ஸ்ரீதியாகராஜரை இவ்வுலகுக்கு அடையாளம் காட்டியது. இவ்வுலக பந்தங்களில்
பற்று இன்றி அந்த இராம பாத சேவையே அளவற்ற செல்வம் என்பதை உணர்ந்திருந்தார் தியாகராஜர்.
அதனால்தான் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர், அவரைத் தன் அவைக்கு அழைத்த போதும் அங்கு
போய் செல்வம் தேட வேண்டுமென்கிற ஆசையை மறுத்துவிட்டு, தசரதராமனின் பாதாரவிந்த சேவையே
நிறைந்த செல்வம் என்று பாடவும் செய்தவர். ஆகவே ஸ்ரீதியாகராஜரின் வாழ்வின் நோக்கம்,
குடும்ப வாழ்வு அல்ல; தேவைக்கு அவசியமான நிதியம் சேர்க்கும் எண்ணம் அல்ல; பின் என்னதான்
அவருடைய ஆவல் என்றால் இசையில் ஈடுபட்ட தூய உள்ளம், அந்த இசையில் ஒன்றரக் கலந்துவிட்ட
பக்தி, இவை இரண்டும் தான் தன் வாழ்வின் குறிக்கோள் என்று வாழ்ந்தவர் அவர்.
இசையை அவர் யோக மார்க்கமாகக் கையாண்டவர்.
சிலர் மூச்சை அடக்கி, மனதை ஒருநிலைப் படுத்தி யோகத்தில் ஈடுபடுவர், ஆனால் இவரோ பக்தி
எனும் பேரருள் கருணையில் மூழ்கி, இசை வெள்ளத்தில் நனைந்து தன்னை மறந்து பாடி இறைவனைக்
காண விழைகின்ற யோகத்தில் ஈடுபட்டவர். இப்புவியில் அவர் யாரை வழிகாட்டிகளாகக் கொண்டார்
என்பதை அறிந்தால் அவர் இருந்த அந்த பக்தியோக நிலைமையைப் புரிந்து கொள்ள முடியும். அவருக்கு
ஆதர்சமாக இருந்தவர்கள் பிரகலாதன், துருவன், அனுமன் ஆகியோர். இவர்கள் அடியொற்றித் தன்னையும்
ஒரு ஆழ்வாராக நிலைநாட்டிக் கொண்டவர் ராமபக்த தியாகராஜர்.
ஸ்ரீதியாகராஜருடைய சில கீர்த்தனங்கள்
எந்த சூழ்நிலையில் பாடப்பட்டன என்பதற்கும் சில வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. ஒரு
சமயம் இவருடைய குரு சொண்டி வெங்கடரமணையா தன் சீடர் தியாகராஜரைத் தஞ்சாவூருக்கு அழைத்துத்
தன் இல்லத்தில் அவரைப் பாடச் சொல்லி கேட்டார். அப்போது பாடியதுதான் பஞ்சரத்ன கீர்த்தனைகளில்
ஒன்றான “எந்தரோ மகானுபாவுலு” எனும் ஸ்ரீராகத்தில் அமைந்தப் பாடல். சுவாமிகள் பாடிய
பஞ்சரத்ன கீர்த்தனைகளில் மிகச் சிறப்பான இடம் பெற்றது இந்தப் பாடல். இதில் அவர் சொல்லும்
கருத்து அவருடைய அடக்கம், பெருந்தன்மை இவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்தது. அவர் சொல்கிறார்
"இந்த பரந்த உலகில் எத்தனை பேரருளாளர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேரையும்
வணங்குகிறேன். நிலவினையொத்த பேரழகு வாய்ந்தவளைத் தன் இதயமெனும் தாமரையில் வைத்து மகிழ்ந்து
வணங்கும் அத்தனை பேரையும் வணங்குகிறேன். சாமகானப் பிரியனே! மன்மதன்போன்ற எழிலுடையாய்!
உலகில் சிறந்த பாக்கியசாலிகள் அனைவரையும் வணங்குகிறேன். மனக்குரங்கின் தாவுதலை நிறுத்தி
உன் எழிலான தோற்றத்தைப் போற்றுகின்ற அனைவரையும் வணங்குகின்றேன்."
அரசவைக் கலைஞரான சொண்டி வெங்கடரமணையா
தன் சீடரும், மாமேதையுமான தியாகராஜரின் பெருமையை மன்னரிடம் சொன்னார். உடனே அவரைத் தன்
அவைக்கு வந்து பாடும்படி மன்னர் கேட்டுக் கொண்டார். இறைவன் சந்நிதியில் ராமனின் புகழை
மனமுருக பாடுவதை விட்டு, பரிசுக்கும் பணத்துக்குமாகத் தான் அரசன் சந்நிதியில் பாட விரும்பாத
தியாகராஜர் “நிதி சால சுகமா, ராம நின் சந்நிதி சேவா சுகமா” என்ற கல்யாணி ராகப் பாடலைப்
பாடினார். இந்தப் பாடலின் உட்கருத்து "செல்வம் முதலானவை மிகுந்த இன்பம் பயக்கக்கூடியவைகளா?
அல்லது இராமபிரானின் திருவடி சேவை இன்பம் பயப்பதா?" என்பதாகும். அதில் மேலும்
அவர் சொல்வதாவது: "தயிர், வெண்ணை, பால் முதலியவை சுவையுடையனவா? அல்லது தசரதன்
மகனை மனதிலிறுத்தி பஜனை செய்வது சுவையானதா?. அடக்கம், அமைதி எனும் கங்கையில் நீராடுவது
சுகமா, அன்றி சேற்றுக் குட்டையில் மூழ்குவது சுகமா? ஆணவம்கொண்ட மனிதரைப் பாடுவது சுகமா?
அல்லது தியாகராஜன் வணங்கும் சுவாமியை வணங்குவது சுகமா? என்று தன் மனத்திடம் கேட்கிறார்.
1810இல் தியாகராஜருடைய பெண் திருமணம்
நடந்தபோது, அவருடைய சீடர் வாலாஜாபேட்டை வெங்கடரமண பாகவதர் அங்கிருந்து நடந்தே திருவையாற்றுக்கு
வந்தாராம். திருமண பரிசாக ஒரு ராம பட்டாபிஷேகப் படத்தை அன்பளிப்பாகத் தந்தாராம். அதை வாங்கிக் கொண்ட தியாகராஜர்
அதைக் கொண்டு போய் தன் பூஜை அறையில் வைத்துவிட்டு “நனுபாலிம்ப” எனும் கீர்த்தனையைப்
பாடி உருகினார். அந்தப் பாடலில் அவர் சொல்லுகின்ற கருத்து, இராமனைப் பார்த்து
"என் பிராணநாதனே! என்னை ரட்சிக்கவென்று இங்கே நடந்து வந்தாயா? சதாகாலமும் நின்
முகத்தைக் கண்டுகொண்டிருப்பதே என் வாழ்வின் லட்சியம் என்பதைத் தெரிந்து கொண்டு நடந்து
வந்தாயா? கருநீலமணியெனும் உடலும், மார்பில் அசைந்தாடும் முத்துமாலைகளும், கையில் கோதண்டமும்
கொண்டு, புவிமகளாம் சீதையுடன் என்னை ரட்சிக்க நடந்து வந்தாயா?" என்கிறார்.
இப்படி சில பாடல்கள் உருவான வரலாறுகள்
இருந்தாலும், அவருடைய பாடல்களில் இருந்த சில வரிகளை வைத்துச் சில கற்பனையான நிகழ்ச்சிகளையும்
சொல்லத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக திருப்பதியில இவர் போயிருந்தபோது பெருமாள் சந்நிதியில்
திரை மறைத்ததாகவும், இவர் “தெர தீயகராதா” என்ற பாடலைப் பாடினதும் திரை அறுந்து விழுந்ததாகவும்
சொல்கிறார்கள். ஒரு இராம பக்தர் பெருமாள் சந்நிதியில் திரை அறுந்து விழும்படி பாடுவாரா?
உண்மையில் அந்தப் பாடலின் சரணங்களில் தத்துவார்த்தமான சில விஷயங்களை எடுத்துச் சொல்லி
என் மனதில் நின்னை அடையமுடியாமல் மறைக்கும் அந்த மாயத் திரை நீங்கியுன்னை தரிசிக்க
வேண்டாமா என்று பாடியிருப்பதைக் காணலாம். இதில்
அவர் சொல்லும் கருத்து "திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் வேங்கடரமணா! என் உள்ளத்திலுள்ள
பொறாமை எனும் திரையை நீ விலக்கிவிடக்கூடாதா? உயர்ந்த தெய்வமே! அந்த மாயத்திரை தர்மம்
போன்ற உயர் நோக்கங்களை என்னால் எட்டமுடியாமல் செய்து விடுகின்றதே. விரும்பி உண்ணும்
உணவில் ஈ விழுதல் போலும், ஹரியை வணங்கும்போது இழிவை நினைப்பது போலவும் என்னுள் தோன்றும்
திரையை விலக்கக்கூடாதா? நீரில் மீன்கள் இறைதின்னும்போது அகப்பட்டுவிடும் வலைபோன்றும்;
ஒளிதரும் விளக்கை மறைப்பது போன்றதுமான திரையை விலக்கிவிடக் கூடாதா? மிருகங்கள் தங்களைப்
பிடிக்க விரித்த வலையில் விழுவதுபோன்று எனக்கு இந்தத் திரை இருக்கிறது. என் உள்ளத்திலிருந்து
பொறாமை எனும் திரையை விலக்கி விடுவாயாக!" என்கிறார்.
ஆராதனையின் போது சங்கீத வித்வான்கள்
ஒன்றுகூடி அவர் சமாதிக்கெதிரில் அமர்ந்து கொண்டு பக்தி சிரத்தையுடன் பாடுகின்ற பஞ்சரத்ன
கிருதிகள் ஐந்து கன ராகங்களில் அமைந்தவை. அவை நாட்டை, கெளளை, ஆரபி, ஸ்ரீ ராகம், வராளி
ஆகியவை. அந்த மகானை நினைவுகூரும் விதமாக ஒவ்வோராண்டும் அவருடைய சமாதியில் ஐந்து நாட்கள்
இசை விழாவும் ஆராதனையும் நடைபெறுகின்றது.
ஸ்ரீதியாகராஜரின் நினைவாக இன்று உலகம்
முழுவதும் பல இடங்களில் அமெரிக்க நாட்டில் கிளீவ்லாந்து, ஒஹையோ போன்ற இடங்களிலும்,
சென்னையில் திருவையாறு என்றும், மும்பை, டெல்லி, கல்கத்தா ஆகிய பெருநகரங்கள் தவிர,
தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் தியாகராஜ உத்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும் அவர் வளர்ந்து, வாழ்ந்து முடிந்த திருவையாற்றில்
சலசலத்தோடும் தெளிந்த நீரோடும் காவிரிக் கரையில் அவருடைய சமாதிக்கெதிரில் நடைபெறும்
ஆராதனைக்கு என்று ஒரு தனிச் சிறப்பு உண்டு அல்லவா?
குழந்தை பூமியில் பிறக்கும் போதே ஓசையெழுப்பிக்
கொண்டு பிறப்பதும், பின்னர் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இசை நம்மோடு பின்னிப்
பிணைந்து இருப்பதையும் பார்க்கும் போது ஒவ்வொருவர் மூச்சுக் காற்றிலும் இசை கலந்து
கிடக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது. இசையப் பற்றி மகாகவி பாரதியார் தன்னுடைய “குயில்
பாட்டில்” மிக அழகாகச் சொல்கிறார்.
இசையை ரசிக்கத் தனி தகுதி தேவையில்லை.
காரணத்தையும் மகாகவி பாரதியார் சொல்கிறார். “காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டில் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்” என்கிறார். காட்டில் வாழும் விலங்குகளும்,
கைக்குழந்தையும், பாம்பும்கூட இசையைக் கேட்டு ரசிக்குமென்றால், ஐந்தறிவு மனிதர்கள்
விரும்ப காரணம் கேட்க வேண்டுமா என்ன?
திருவையாற்றில் தெளிந்த காவிரி நீர்
ஓடுவது போல், ஐயாறப்பர் ஆலயத்தின் கோபுரத்திலிருந்து ஏராளமான புறாக்கள் நாலா திசைகளிலும்
ஒரே நேரத்தில் பறந்து செல்வதைப் போல, காற்றில் மெல்ல இசையின் ஒலி நான்கு திசைகளிலும்
பரவ அதனை பல்லாயிரக்கணக்கானோர் கேட்டு மகிழும் அற்புதமான விழா இதோ திருவையாற்றில் நடந்து
கொண்டிருக்கிறது. கேட்டு இன்புறுங்கள்.
கட்டுரை ஆக்கம்:
தஞ்சை
வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர்
613007. தொலைபேசி எண்: 9486741885.