பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, November 15, 2015

திருவையாறு தலப் பெருமை.

                                   
திருவையாறு,  தஞ்சாவூருக்கு வடக்கே 15 கி.மீ.தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஒரு சிவத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகி ஆலயம் சிறப்புடையது. இத்தலத்தின் சிறப்பினைப் பெரியோர்கள் மிகவும் பெருமைப்படுத்திப் பாடியிருக்கிறார்கள். திருநாவுக்கரசர் சுவாமிகள் “ஐயாறே ஐயாறே என்பீராகில், அல்லல் தீர்ந்து அமருலகம் ஆளலாமே” என்கிறார். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் “ஐயாறு வாயாறு பாயாமுன் ஐயாறு வாயால் அழை” என்கிறார். ஐயாற்று இறைவனை வாயால் அழைத்துப் போற்றினாலே பெரும் பேறு சித்திக்கும் என்பர் பெரியோர். அப்படியிருக்க அந்தப் பெரும் பதிக்குச் சென்று நேரில் வழிபட்டால் அதன் பெருமையினைச் சொல்லவும் வேண்டுமோ?

திருவையாறு தலத்தின் பெருமைகள் இங்கு மிக சுருக்கமாகப் பார்க்கலாம். இது மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்பும் உடைய தலம். தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 51ஆவது தலம். 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தலம், இவ்வாலயத்தைச் சுற்றியே இவ்வூர் அமைந்திருப்பது சிறப்பு. இவ்வூருக்கு ஐயாறு, பஞ்சநதத்தலம், பூலோக கைலாசம், ஜெப்பேசம், ஜீவன்முக்திபுரம், காவிரிக்கோட்டம் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதன் தலவிருட்சம் வில்வம்.

ஐந்து ஆறுகள் ஓடுவதனால் இந்தப் பெயர் வந்தது சொல்வாரும் உண்டு.

இவ்வூரில் காவிரி ஆற்றில் 23 படித்துறைகள் உண்டு. இவற்றை அச்சுதப்பராயர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் என்பார் முயன்று கட்டியதாக வரலாறு சொல்கிறது.  அவை 1. சாமராயர் படித்துறை, 2. பதினைந்து மண்டப படித்துறை 3. சீதாபாயி அம்மை படித்துறை 4. ஓடத்துறை படித்துறை 5. அரண்மனை படித்துறை 6. சகாஜிப் படித்துறை 7. சிங்கப்பூர் சாமி படித்துறை 8. புஷ்யமண்டபப் படித்துறை 9. மோட்சப் படித்துறை 10. கல்யாணமஹால் படித்துறை 11. ராணி கல்யாபாய் படித்துறை 12. கைலாசவாகன படித்துறை 13. திருமஞ்சனப் படித்துறை 14. எசந்தரப்பா படித்துறை 15. முத்துநாயக்கன் படித்துறை 16. ராஜா படித்துறை 17. விட்டோபா கோயில் படித்துறை 18. செவ்வாய்க்கிழமை படித்துறை 19. ராமப்பா அக்ரஹாரம் படித்துறை 20. சேதுபாவா படித்துறை 21. தியாகையர் படித்துறை 22. மயானப் படித்துறை 23. ஐராவணப் படித்துறை.


திருவையாற்றுக்குத் தேவார பதிகங்கள் 18 உண்டு. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள். அப்பர் பெருமான் கயிலை சென்று சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது இறைவனால் தடுத்தாள்கொள்ளப்பட்டு, இப்பூதவுடலோடு கைலாயம் செல்வது இயலாத காரியம், ஆகையால் நீர் இந்த பொய்கையில் மூழ்கி எழுவீராக என்று வழியில் சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து சொல்ல, அப்பரும் அப்படியே மூழ்கி எழும்போது தான் திருவையாற்றில் இருப்பதை உணர்ந்தார். அப்போது ஐயன், அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி, இப்பிரபஞ்சத்தின் இயற்கையை விளக்கிக் காட்சி தருகிறார். அப்போது அப்பர் பெருமான் பாடிய பாடல் தேவாரப் பாடல்களில் இன்றியமையா இடத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் “மாதர்பிறை கண்ணியானை” எனத் தொடங்கும் தேவாரம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கண்டியூர் வந்து அங்கு பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசித்துவிட்டு ஐயாறு வரமுடியாமல் காவிரியில் வெள்ளம் பாய, வருந்திப் பாடியபோது காவிரி வெள்ளம் அவருக்கு வழிவிட்டு நகர்ந்து ஐயாறு சென்று பிரணதார்த்திஹரனை தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தார். அப்போது சுந்தரரை மறுகரையிலிருந்து கூவி அழைத்த விநாயகர் இப்போது “ஓலமிட்ட விநாயகர்” எனும் பெயரோடு ஆட்கொண்டார் சந்நிதிக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார்.

நந்தி தேவர் இங்குதான் சிலாத முனிவரின் மகனாக அவதரித்தார். நந்தியம்பெருமான் சிவகணங்களின் தலைமைப் பதவியைப் பெற்ற தலம். இங்கு சுசரிதன் எனும் சிறுவனை காலன் உயிர் பறித்துச் செல்ல வந்தபோது சிவபெருமான் ஆட்கொண்டாரைக் கொண்டு காலனை உதைத்து சிறுவனைக் காத்த தலம்.

ஐயாற்றில் இறைவனுக்குப் பூஜைகள் செய்துவந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பாதபோது, அவருடைய குடும்பத்தினரைக் காக்கவென்று தானே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தனக்கே பூசனைகள் செய்த ஒப்பற்ற தலம்.

காவிரிப் பெண் சமுத்திர ராஜனைத் தேடி வரும்போது அவளை ஐயாற்றில் நிறுத்தி சமுத்திர ராஜனை அங்கே வரவழைத்து அறம்வளர்த்தநாயகி திருமணம் செய்துவைத்த தலம். அதனை குறிக்க இங்கு சமுத்திர தீர்த்தம் எனும் நீர்நிலை உண்டு. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் “தர்மாம்பாள் குறம்” எனும் குறவஞ்சி இலக்கியமும் உண்டு.

காசிக்குச் சமமான தலங்கள் ஆறு, அதில் திருவையாறு ஒன்று. பதின்மூன்று சித்தர்களில் அகப்பேய்சித்தர் அமர்ந்த இடம் இது. இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் மண் (ப்ருத்வி) ணால் ஆனது. இங்கு லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை, ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. புனுகு சட்டம் லிங்கத்துக்குச் சாத்தப்படும்.

இந்த சுவாமிக்கு எத்தனை பெயர்? ஐயாறப்பர்; செம்பொற்ஜோதியார், பஞ்சநதீசர், பஞ்சாபகேசர்; பிரணதார்த்திஹரர்; ஜெப்பேசர்; திரிசூலி, ஐயாறுடைய அடிகள்; ஐயாற்று மகாதேவர்.
                  தருமையாதீனம் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள்

அன்னை அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தினி). அபிராமி அந்தாதியில் 57ஆவது பாடலில்:

 “ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு இவ்வண்டம் எல்லாம்                                         உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால்                                                   செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும்                                              மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உந்தன் மெய்யருளே!”

இதன்படி ஐயன் சிவபெருமான் இருநாழி நெல்லை அளந்து அம்மையிடம் கொடுத்தார். அதனைக் கொண்டு அம்மை 32 அறங்களைச் செய்து வந்தாராம். இந்த அம்மை அறம்வளர்த்தநாயகி எனப் பெயர் பெற்றாள். இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.

சுருங்கச் சொல்லின் இத்தலத்தில் வழிபட்டால் பெறும் பேறுகள்:--
1.    கல்வி வளம் பெருகும்  2. வேண்டுவோர் வேண்டியபடி அருள் கிடைக்கும் 3. திருமணம் நடக்கும் 4. குழந்தைப் பேறு கிட்டும்  5. நோய்கள் நீங்கிடும்  6. அல்லல் அகலும் 7. குடும்பத்தில் அமைதி நிலவும்  8. பாவங்கள் நீங்கும்  9. எமபயம் தீரும்.

இங்கு வந்து இறைவனையும் அன்னையையும் வழிபட்டுச் செல்வோர் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
             1 comment:

  1. சப்தஸ்தான விழாவின்போது (இரு முறை) திருவையாறு தொடங்கி நடந்துசென்று அனைத்து கோயில்களையும் பார்த்தேன். பதிவைக் கண்டதும் மறுபடியும் ஒரு முறை திருவையாறு சென்றுவந்ததுபோல உள்ளது.

    ReplyDelete

You can give your comments here