பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, November 6, 2010

சக்தி தர்மம்

பாரதி சிந்தனை: 4. சக்தி தர்மம். வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.

"ஆத்மா உணர்வு. சக்தி செய்கை."

உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப் பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்று சொல்லும்.

ஆறு மதங்கள்: ஆதி சங்கராச்சாரியார் பெளத்த மதத்தை எதிர்த்தபோது, தமக்குச் சார்பாக வேதத்தை ஒப்புக்கொள்ளும் எல்லா வகுப்புக்களையும் ஒன்றாக்கிக் கொண்டனர். அக்காலத்தில் பெளத்தம், ஜைனம் என்ற வேத விரோதமான மதங்களில் சேராமல் வேதத்தை ஆதாரமாகக் கொண்டோர் ஆறு மதங்களாகப் பிரிந்து நின்றனர்.

இந்த ஆறு மதங்களில் எதையும் கண்டனம் செய்யாமல் சங்கராச்சார்யார் இவ்வாறும் வெவ்வேறு வகையான வைதிகப்படிகளென்றும், வேதாந்தமே இவையனைத்திற்கும் மேலான ஞானமென்றும் சொன்னார். இது பற்றியே அவருடைய கூட்டத்தார் அவருக்கு "ஷண்மத ஸ்தாபனாசார்யார்" என்று பெயர் சொல்லுகிறார்கள். இது ஆறு மதங்களாவன:

1. ஐந்திரம் - தேவர்களிலே இந்திரன் தலைவன் என்று சொல்லி, பரமாத்மாவை "இந்திரன்" என்று பெயரால் வழிபடுவது.
2. ஆக்னேயம் - அக்னியே முதற் கடவுள் என்பது.
3. காணாபத்தியம் - பரமாத்மாவைக் கணபதி என்ற நாமத்தால் வழிபடுவது.
4. சைவம் - சிவனே தேவர்களில் உயர்ந்தவன் என்பது.
5. வைஷ்ணவம் - விஷ்ணுவே மேலான தெய்வம் என்பது.
6. சாக்தம் - சக்தியே முதல் தெய்வம் என்பது.

வேதம் உபநிஷத் இரண்டையும் இந்த ஆறு மதஸ்தரும் ஒருங்கே அங்கீகாரம் செய்தார்கள். ஆனால் புராணங்கள் வெவ்வேறாக வைத்துக் கொள்ளுதல் அவசியமாயிற்று. திருஷ்டாந்தமாக, வைஷ்ணவர் சிவபுராணங்களையும், சைவர் வைஷ்ணவ புராணங்களையும் உண்மையாக ஒப்புக் கொள்வதில்லை. பொதுக் கதைகளை எல்லாப் புராணங்களிலும் சேர்த்துக் கொண்டார்கள். இதிகாசங்களையும் பொதுவாகக் கருதினர் எனினும் பழைய சாக்த தர்மத்தின் அழுத்தம் பொது ஜனங்களின் சித்தத்தை விட்டுப் பிரியவில்லை. மதுரை சுந்தரேசர், காஞ்சி ஏகாம்பர மூர்த்தி என்ற பெயர்களைக் காட்டிலும் மதுரை மீனாக்ஷி, காஞ்சி காமாக்ஷி என்ற பெயர்கள் அதிகப் பெருமை கொண்டு நிற்கின்றன. மாரி, காளி என்ற பெயருடன் சக்தித் தெய்வத்தையே மஹாஜனம் மிகுதியாகக் கொண்டாடி வருகிறது.

நவசக்தி மார்க்கம். சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூல தர்மங்களை ஜனங்கள் தெரிந்து கொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும் கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை. பரமாத்மா வேறாகவும் பராசக்தி வேறாகவும் நினைப்பது பிழை. சர்வ லோகங்களையும் பரமாத்மா சக்தி ரூபமாக நின்று சலிக்கச் செய்வதால், சாக்த மதஸ்தர் நிர்குணமான பிரம்மத்தை ஸகுண நிலையில் ஆண்பாலாக்காமல் பெண்பாலாகக் கருதி "லோக மாதா" என்று போற்றினர். ராமகிருஷ்ண பரமஹம்சர் "என் தாய் காளி" என்றுதான் பெரும்பாலும் பேசுவது வழக்கம். ஜனங்கள் வணங்கும் "லோக மாதா" இன்ன பொருள் என்று நாம் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நவசக்தி என்பது புதிய தெய்வமன்று. அதனைப் பொருள் தெரிந்து போற்றுவது நவசக்தி மார்க்கம். இந்தத் தர்மத்தின் பலன்களைத் தாயுமானவர் பின்வருமாறு சொல்லுகிறார்.

'பதியுண்டு, நிதியுண்டு, புத்திரர்கள் மித்திரர்கள்
பக்கமுண் டெக்காலமும்
பவிசுண்டு, தவசுண்டு, திட்டாந்தமாக யம
படர் எனும் திமிரம் அணுகாக்
கதியுண்டு, ஞானமாங் கதிருண்டு, சதுருண்டு,
காயச் சித்திகளு முண்டு". 'மலைவளர் காதலி' முதற் பாட்டு.

இந்து மதம் ஸந்யாஸத்தை ஆதரிப்பதன்று; இகலோகத்தில் இருந்து தேவ வாழ்க்கை வாழவேண்டும் என்ற நோக்கமுடையது. குருக்களுக்குள்ளே மேற்படி மதவேற்றுமைகள் தீவிரமாக இருந்திருக்கலாமாயினும், பொதுஜனங்கள் எல்லாத் தெய்வங்களையும் தத்தம் மனப்படி வைத்து வணங்கி வந்தனர். சங்கராச்சார்யார் கொள்கையை அனுசரிப்போர், எல்லாத் தெய்வங்களையும் ஒன்று போலவே வணங்கலாம் என்று சொல்லியது பொது ஜனங்களின் வழக்கத்துக்கு நல்ல பலமாயிற்று. மேலும், ஞானிகளும், சித்தர்களும் இடையிடையே தோன்றி, 'ஒரே பரம்பொருளைத்தான் ஆறு மதங்களும் வெவ்வேறு பெயர் கூறிப் புகழ்கின்றன'. என்ற ஞாபகத்தை ஜனங்களுக்குள்ளே உறுதிப்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

மேற்கூறப்பட்ட ஆறு மதங்களில் இப்போது வைஷ்ணவம், சைவம் என்ற இரண்டுமே ஓங்கி நிற்கின்றன. மற்ற நான்கும் ஒருவாறு க்ஷீணமடைந்து போனதாகக் கூறலாம். 'ஒருவாறு' என்றேன். ஏனெனில் ஐந்திரம் ஒன்றைத் தவிர மற்றவை முழுவதும் க்ஷீணமடையவில்லை. ஐந்திர மதமொன்றுதான் இருந்த சுவடே தெரியாதபடி மங்கிப் போய்விட்டது. நாடு முழுவதிலும் கணபதி பூஜை உண்டு. ஆனால் கணபதியே முதற்கடவுளென்று பாராட்டும் காணாபத்ய மதம் பரவி நிற்கவில்லை. மஹாராட்டிரத்தில் இக் கொள்கையுடையோர் சிலர் இப்போதும் இருப்பதாகக் கேள்வி. நிச்சயமாகத் தெரியாது. அக்னி பூஜை பிராமணர்க்குள் இருக்கிறது. ஆனால் ஆக்னேய மதம் இல்லை.

சாக்தம்: இப்போது சாக்த மதம் வங்காளத்தில் உயிர் கொண்டு வலிமை பெற்று நிற்கிறது. மற்ற இடங்களில் பொது ஜனங்கள் எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை. பூர்வீக ஹிந்து ராஜாக்கள் காலத்தில் சாக்த மதம் மிகவும் உயர்வு பெற்றிருந்தது. ஹூணர்களை எல்லாம் துரத்தி, மஹா கீர்த்தியுடன் விளங்கி, தனது பெயரடித் தழுவி ஒரு சகாப்தக் கணக்கு வரும்படி செய்த விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன் சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.

(தென்னாட்டிலே இப்போதும் சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு, ஜாதியாரின் பழிப்புக்கு அஞ்சி ரகசியமாகப் பூஜை செய்து வருகிறார்கள். எனவே, சில இடங்களில் 'சாக்தன்' என்றால் ரகசியமாகக் குடிப்பவன் என்ற அர்த்தம் உண்டாய் விட்டது. காலத்தின் விந்தை!)

(பாரதியார் கட்டுரைகள்)

No comments:

Post a Comment

You can give your comments here