பாரதியார் சிந்தனை: 3. மூட பக்தி. வழங்குவோர்: தஞ்சை வெ.கோபாலன்.
நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிஷம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்குக் கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும் விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.
இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்திகளுக்கும் நாள், நக்ஷத்திரம், லக்னம் முதலிய பார்த்தல். க்ஷவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக்கூட நம்மவர் மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது. க்ஷவரத்துக்குக்கூட இப்படியென்றால், இனிக் கலியாணங்கள், சடங்குகள், வியாபாரம், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய கார்யங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் கார்யங்களுக்குப் பெருந்தடையாக வந்து மூண்டிருக்கிறது. இதில் நேரும் அழிவுகளும், அவற்றால் பொருள் அழிவுகளும் எவ்வளவு உண்டாகின்றன என்பதை நம்மவர் கவனிப்பதே கிடையாது. சகுனம் பார்ப்பதனால் கார்ய நஷ்டம் மாத்திரம் உண்டாகிறது. நாட்பொருத்தம் முதலியன பார்க்குமிடத்தே, கார்ய நஷ்டம் மட்டுமன்றி மேற்படி லக்னம் முதலிய பார்த்துச் சொல்லும் சோதிடருக்கு வேறு பணம் செலவாகிறது.
'காலம் பணவிலை உடையது' என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின், அதனால் பண லாபம் கிடையாமற் போகும். இன்று செய்யக்கூடிய கார்யத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமஸப்படுத்தி வைப்பதனால், அந்தக் கார்யம் பலமான சேதமடைந்து போகும். எதையும் தோன்றிய மாத்திரத்திலே சூட்டோடு செய்யும்போது, அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்டுவிட்ட பிறகு செய்யப் போனால், அதில் ஆரம்பத்தில் இருந்த ரஸம் குறைந்து போகும். அதற்குத் தக்கபடி பயனும் குறைவெய்தும்.
'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையினால் ஏற்பட்டிருக்கின்றன என்றும் ஜனங்களுக்குப் படிப்புக் கற்றுக் கொடுத்தால் இவை அழிந்து போய்விடும்' என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் அது மெய்யென்றே நம்புகிறேன். ஆனால், அதற்குத் தற்காலத்தில் நமது தேசத்துப் பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்படும் இங்கிலீஷ் படிப்பு சுத்தமாகப் பிரயோஜனமில்லை என்பது ஸ்பஷ்டமாக விளங்குகிறது. சென்ற நூறு வருஷங்களாக இந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லக்ஷக்கணக்கான - கோடிக்கணக்கான ஜனங்கள் படித்துத் தேறியிருக்கிறார்கள். இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி நிற்கிறார்களா? இல்லை. நமது தேசத்தில் முப்பத்து மூன்று கோடி ஜனங்கள் இருக்கிறார்கள். இத்தனை ஜனங்களுக்கும் ஒருவர் மிச்சமில்லாமல் உயர்தரக் கல்வி கற்றுக் கொடுத்தபின்புதான் மேற்கூறிய சாமான்ய மூட பக்திகள் விலக வேண்டுமென்பது அவசியமில்லை. ஏற்கனவே இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்துத் தேறியவர்கள் இந்த விஷயத்தில் தமது மனச்சாக்ஷிப்படி யோக்கியமாக நடந்து வந்திருப்பார்களானால், மற்றவர்களிலும் பெரும்பாலோர் நடை திருந்தியிருப்பார்கள். இன்னும் எத்தனையோ விஷயங்களில் நம்மவர் இங்கிலீஷ் படித்தவரின் நடையைப் பின்பற்றித் தங்கள் புராதன வழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கக் காண்கிறோம். அதுபோலவே இந்த விஷயத்திலும் நடந்திருக்கும்.
ஆனால், இங்கிலீஷ் பள்ளிக்கூடத்திற்குப் போய் தேறினவர்களிடம் மனசாக்ஷிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின் விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்யதை மிகமிகக் குறைவாக இருக்கிறது. இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் எத்தனையோ சாஸ்திரங்கள் - நிஜ சாஸ்திரங்கள், பொய் சாஸ்திரங்கள் இரண்டுங் கலந்தன - எத்தனையோ வித சாஸ்திரங்கள் பயிற்றுகிறார்கள்.
ஆனால் ஸ்வதந்திரம் ஆண்மை, நேர்மை, உண்மை, வீர்யம், இவை அத்தனை ஜாக்கிரதையாக கற்றுக் கொடுப்பதில்லை. அதிலும் ஒருவன் தன் மனமறிந்த உண்மையின்படி ஒழுக வேண்டுமென்றும், அங்ஙனம் ஒழுகாதிருத்தல் மிகவும் அவமானமும் பாவமுமாகும் என்றும் கற்றுக் கொடுக்கும் வழக்கமே இல்லை. இந்த விஷயத்தைக் கூட வாய்ப்பாடமாய்ப் படிப்பித்துக் கொடுக்கிறார்கள். ஆனால் ஒழுக்கப் பயிற்சி இல்லை. புஸ்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே லக்ஷம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்கு த்ருஷ்டாந்தம் காட்டப் புகுமிடத்தே, நமது நாட்டில் இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் தேறிவரும் மனிதரைப் போல் இத்தனை சிறந்த திருஷ்டாந்தம் வேறெங்கும் கிடைப்பது மிகவும் துர்லபமென்று தோன்றுகிறது.
"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வே றுடையார் தொடர்பு"
என்று திருவள்ளிவர் பாடியிருக்கிறார். இதன் பொருள்:- வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும் செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையோரின் உறவு கனவிலும் கொள்ளுதல் தீது என்பதேயாகும். பி.ஏ., எம்.ஏ., பரீக்ஷைகள் தேறி வக்கீல்களாகவும், உபாத்தியாயராகவும், எஞினீயர்களாகவும் பிற உத்தியோகஸ்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை, முதலியவர்களில் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா? "பெண் பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூட பக்திகளுக்குக் கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்று சிலர் முறையிடுகிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான, புத்திமான்கள் கண்டு நகைக்கும்படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திரீகள் பலனின்றிப் பிதற்ற்மிடத்தே அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு. மேலும் அது உண்மையான காரணமன்று. போலிக்காரணம். நம்மவர் இத்தகைய சாதாரண மூட பக்திகளை விட்டு விலகத் துணியாமலிருப்பதன் உண்மையான காரணம் 'வைதிகரும் பாமரரும் நம்மை ஒரு வேளை பந்தி போஜனத்துக்கு அழைக்காமல் விலகி விடுவார்கள்' என்பதுதான். இங்கிலீஷ் படித்த மேற்குலத்து இந்துக்கள் கணக்கில்லாத மூட பக்திகளைக் கை விலங்குகளாகவும், கழுத்து விலங்குகளாகவும் பூட்டிக் கொண்டு தத்தளிப்பதன் தலைமைக் காரணம் மேற்படி பந்தி போஜனத்தைப் பற்றிய பயம்தான். அதைத் தவிர வேறொன்றுமில்லை. அந்த மெய்யான காரணத்தை மறைத்துவிட்டு ஸ்திரீகளின் மீது வீண்பழி சுமத்தும் இந்த வீரர்கள் மற்றும் எத்தனையோ விவகாரங்களில் தம்மினத்து மாதரை விலையடிமைகள் போலவும் விலங்குகள் போலவும் நடத்தும் விஷயம் நாம் அறியாததன்று. எண்ணில்லாத பொருள் நஷ்டமும் கால நஷ்டமும் அந்தக் காரணத்தின் இகழ்ச்சியும் உலகத்து அறிஞரின் நகையாடலும் ஸ்த்யதெய்வத்தின் பகைமையும் சிறிதென்று கொண்டீர்! பந்தி போஜன ஸ்வதந்திரம் பெரிதென்று கொண்டீர்! தைரியமாக நீங்கள் உண்மை என்று உணர்ந்தபடி நடவுங்கள். பந்தி போஜனம் சிறிது காலத்துக்குத்தான் உங்களுக்குக் கிடைக்காதிருக்கும். பிறகு உங்கள் கூட்டத் தொகை அதிகமாகும். ஸத்ய பலம் முதலிய பல காரணங்களால் மேற்படி பந்தி போஜனமும் உங்களுக்கு ஸித்தியாகிவிடும். தைர்யமாக வேலை செய்யுங்கள்.
(பாரதியார் கட்டுரைகள்)
No comments:
Post a Comment