பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, October 28, 2018

நம்பினார் கெடுவதில்லை - சிறுகதை

                                                   



                                                   
                          நம்பினார் கெடுவதில்லை

என்னைப் பார்ப்பதற்காக என் இளமைக்கால நண்பன் கோபி சென்னையிலிருந்து நான் இருக்கும் இந்த கிராமத்துக்கு வந்திருந்தான். அவன் சென்னையில் ஒரு ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருபவன். எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிலிருந்து அருகிலுள்ள மாயவரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரை இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரி படிப்புக்காக அவன் சென்னைக்குச் சென்று விட்டான், பிறகு வேலை கிடைத்து அங்கேயே தங்கிவிட்டான். ஒரே ஊர்க்காரர்கள் என்ற முறையில் அவ்வப்போது எங்கள் கிராமக் கோயில் திருவிழாவுக்கு வந்து போவதோடு சரி. இப்போது திடீரென்று என்னைப் பார்க்க வந்திருந்தான். அவனோடு ஊரின் ஊடே ஓடிக் கொண்டிருக்கும் வீரசோழன் ஆற்றுக்கு இருவரும் சென்று அங்கு மூங்கில் பாலத்தருகில் ஓங்கி வளர்ந்திருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு ஆற்றில் சுழித்து ஓடும் நீரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். முதலில் அவன் தான் பேச்சைத் துவக்கினான்.

“என்ன பாலா? எப்படி இருக்கிறாய், நான் திடீரென்று உன்னைப் பார்க்க வந்தது உனக்கு ஆச்சர்யமாக இருக்கும், இல்லையா?”

      “ஆச்சர்யம் இல்லப்பா, என்னைப் பார்ப்பதற்காக சென்னையிலிருந்து வந்தது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு? இங்கே ஊரிலே வேற ஏதேனும் வேலை இருக்கா இல்லை சும்மா என்னைப் பார்க்க மட்டுமா?”

      “உனக்குத் தெரியாதா பாலா! நான் காலேஜில் படிக்கிற காலம் தொட்டு ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு போற வழக்கம் உண்டுன்னு. இது வரை இருபத்திநான்கு வருஷம் தொடர்ந்து போய் வந்துண்டிருக்கேன். கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை போட்டுக் கொண்டு விரதம் அனுஷ்டிக்க ஆரம்பிச்சா, தை மாதம் முதல் வாரத்தில சபரிமலைக்குப் போய் வந்தாதால் தான் எனக்கு அந்த வருஷம் நல்லவிதமா இருக்கும்.”

      “சரி, கார்த்திகை மாசத்துக்கு இன்னும்தான் ஒண்ணரை மாசம் அவகாசம் இருக்கே. வழக்கம் போல போயிட்டு வரவேண்டியதுதானே”

      “இல்லையப்பா. எனக்கு மனசே சரியில்லை. சபரிமலைக்கு எல்லா வயசுப் பெண்களும் போகலாம்னு கோர்ட்டுல தீர்ப்பு வந்திருச்சில்ல. அதுக்கப்புறம் நான் போறதா வேண்டாமான்னு குழப்பமா போயிட்டுது. என்னோடு குருநாதர் சென்னையில இருக்கார், அவர் சுமார் ஐம்பது வருஷமா மலைக்கு போறவர், அவர் சொன்னார், இந்த வருஷம் போறது கொஞ்சம் சிரமமா இருக்கும்போல இருக்குப்பா, கோர்ட் தீர்ப்பை வச்சு பொம்மனாட்டிகள்ளாம் வர ஆரம்பிச்சுட்டாள்னா நாம காலம் காலமா கடைபிடிக்கிற விரதமும், கோயிலின் புனிதமும் இருக்குமா தெரியாது, அதனால பிறகு யோசிப்போம்னு சொல்லிட்டார்”

      “அப்படியா, யோசிச்சு முடிவு பண்ணிக்கோ. எல்லா கோயில்களும் கோர்ட்டுக்கு ஒரே மாதிரின்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா, நம்ம கிராமத்து கோயிலும் ஐயப்பன் கோயிலும் ஒண்ணாத்தானே இருக்கும், பேசாம நம்ம கோயிலுக்கு வந்து வழிபாடு பண்ணிட்டு போயிடு, அதான் சரியா இருக்கும்”

      “அப்படி இல்லப்பா பாலா, இது விளையாட்டு விஷயமில்ல, எனக்கு என் உயிரோடு, உணர்வோட, நம்பிக்கையோட சம்பந்தப்பட்ட பிரச்சனை. நான் இங்க உன்னைப் பார்க்க வந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.:”

      “அப்படியா? சொல்லு, நான் உனக்கு என்ன செய்யணும்? காத்துண்டிருக்கேன் உனக்கு உதவி செய்யாம வேற யாருக்கு செய்வது?”

      இப்படி எங்கள் உரையாடல் போய்க்கொண்டிருந்த போது அவன் தன் முடிவை, தன் எதிர்பார்ப்பை என்னிடம் சொல்ல தயங்குவது போல் இருந்தது. என் மிகுந்த வற்புறுத்தலையடுத்து அவன் என்னையும் அழைத்துக் கொண்டு இப்போது ஒரு வாரம் சபரிமலை நடை திறக்கிறார்கள் அல்லவா, அப்போது போய் அங்கு எப்படி இருக்கிறது நிலைமை என்பதைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று வந்திருப்பது தெரிந்தது. நானும் சம்மதித்தேன். நான் கன்னி சாமியாக அவனுடன் சேர்ந்து எங்க ஊர் குருசாமியிடம் ஒரு நல்ல நாள் பார்த்து மாலை போட்டுக் கொண்டு இருமுடி கட்டி விரததத்தைத் தொடங்கி தினம் இருவேளை ஸ்நானம், பூஜை, ஐயப்பன் பஜனை என்று ஊரில் பலருடன் சேர்ந்து களை கட்டத் தொடங்கி விட்டது.

      இந்த வருஷம் எங்கள் கிராமத்திலிருந்து மட்டும் பத்து பேர் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டு கிளம்பி ரயிலில் போய் தொடர்ந்து கார் மூலம் எரிமேலிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

      நாங்கள் எரிமேலி போன சமயம் எங்கு பார்த்தாலும் ஐயப்பமார் கூட்டம். சாரிசாரியாக பலரும் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து ஐயப்பமார்கள் கூட்டத்தோடு நாங்களும் போய்க் கொண்டிருந்தோம். எங்கு பார்த்தாலும் போலீஸ்காரர்கள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு தேவையில்லாமல் எங்கள் பயணத்துக்கு இடையூறு செய்துகொண்டு எங்களை சோதனையிட்டுக் கொண்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் என்ன அரசியல் கட்சி மாநாட்டுக்கா போகிறோம், இறைவன் சந்நிதானத்தில் வழிபடத்தானே போகிறோம்.

      நாங்கள் பம்பையாற்றின் கரையை அடைந்த போது அங்கு ஏராளமான கூட்டம். எங்கு திரும்பினாலும் சரண கோஷம் காதைப் பிளந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் பம்பையில் நீராடிவிட்டு ஐயப்பன் படத்தை வைத்து பூஜை செய்துவிட்டு சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் எழுப்பிக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம்.

அப்போது தூரத்தில் ஏதோ கடலில் அலைகள் எழுப்பும் ஓசைபோல அசாதாரணமான ஓசையும், சலசலப்பும் எழுந்தது. நாங்கள் ஒரு ஓரமாக ஒரு மலைச் சரிவில் பாதுகாப்பாக ஏறிநின்றுகொண்டு கவனித்தோம். அப்போது சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் எங்களுக்குப் பின் புறமாக மலை வளைவு ஒன்றில் மக்கள் சிதறி ஓடுவதும், போலீஸ் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடி, அவர்களைத் தடிகொண்டு தாக்குவதையும் பார்த்தோம்.

                       


      “அங்கே என்னப்பா? ஏதோ கலவரம் போலத் தெரிகிறதே. அங்கு ஜனங்களைப் போலீஸ் தடிகொண்டு தாக்கறாங்க, கூட்டம் அலறி அடித்து ஓடுகிறது” என்றான் கோபி.

      “ஆமாம், நாம் எதற்கும் சற்று மலை மேலே முகட்டில் ஏறி உட்கார்ந்து விடலாம். போலீஸ் அடிக்கத் தொடங்கினால் இங்கு ஓடக்கூட இடம் இல்லை. ஒரு புறம் அதளபாதாளம், மறுபக்கம் செங்குத்தான மலை” என்றான் ஒருவன்.

      நாங்கள் சற்று ஒதுங்கி நின்று என்னதான் நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டம் நெருக்கி அடித்துக் கொண்டு ஓடிக்கொண்டும், சரண கோஷம் எழுப்பிக் கொண்டும் ஓடுவதும், மலைமேல் வேகமாக சிலர் ஏறி வருவதும் தெரிந்தது.

      அப்படி வருபவர்கள் சிலர் போலீஸாரால் தடியால் தாக்கப்பட்டு ரத்தம் வழிய வந்து கொண்டிருந்தார்கள்.

      “என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி கலவரம். ஏன் போலீஸ் தாக்குகிறது?”

      “அங்கே போலீஸ்காரர்கள் ஒரு ஐம்பது பேர் கலவரத் தடுப்பு போலீஸ் உடையுடன் நடுவில் ஒரு பெண்ணை போலீஸ் உடை அணிவித்து, அவளுக்கு ஹெல்மெட் அணிவித்து, அவளைச் சுற்றி ஐந்தாறுபேர் இறுக்கமாக நடந்து அவளைப் பாதுகாப்பாக மலைக்கு அழைத்து வராங்க. அவங்களை எதிர்த்து கோஷம் போட்டவங்களை கேரளா போலீஸ் உடையில் இருப்பவர்கள் தடிகொண்டு தாக்கறாங்க.. சிலர் தடிகளில் ஆணிகளை அடித்து வைத்து அதனால் அடிக்கிறார்கள். அதுதான் காயம்” என்றனர்.

      “அடப் பாவமே! சுவாமி தரிசனம் செய்யப் போறவங்களை கிரிமினல்களை அடிப்பது போல அடிக்கிறது எந்த வகையில் நியாயம்?” என்றான் ஒருவன்.

      கோபி சொன்னான் “ அது சரிதாம்பா! போலீஸ் நிஜமான போலீசா இருந்தா பக்தர்களைக் காக்க சமூக விரோதிகளைத் தாக்குவாங்க. இங்கே வர்ரவங்க பொலீஸ் உடையில இருக்கற கிரிமினல்களோ அல்லது அரசாங்க உத்தரவை நிறைவேற்ற அப்படி நடக்கிற போலீசோ, தெரியல.. யாரோ ஒரு கேடுகெட்ட பெண்மணியாம், இந்து கூட இல்லையாம், வேற்று மதத்துக்காரி, அவளை கூட்டிக்கிட்டு எப்படியாவது சந்நிதிக்குப் போய் அந்த புனிதத்தைக் கெடுத்துவிட வேணும்னு கங்கணம் கட்டிகிட்டு இந்த கூட்டம் தவிக்கிறது. அதன் விளைவுதான் இந்த ரத்தக் களரி”

      “அது சரி, ஆயிரக் கணக்குல பக்தர்கள் கவனத்தையெல்லாம் சுவாமி மேல வச்சுகிட்டு விரதம் இருந்து பசியும் பட்டினியுமா வர்ராங்க, அவுங்க மேல அடிதடி செய்ய கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?”

      “அந்த நியாயமெல்லாம் உனக்கும் எனக்கும்தான். பக்தின்னா என்ன விலைனு கேட்கிற நாத்திகர்களுக்கோ, அல்லது நாத்திகக் கட்சிக்காரனுக்கோ, அல்லது அவுங்க போலீசுக்கோ அதெல்லாம் புரியாதப்பா. அவுங்களுக்கு எந்த செயலும் தங்கள் கைப்பிடிக்குள் இல்லைன்னா உடனே வன்முறை, அதுலதானே அவுங்க வளர்ந்து வந்திருக்காங்க அவுங்க புத்தி அப்படித்தான் இருக்கும்” என்றான் இன்னொருவன்.

                              


      அதற்குள் சச்சரவுக்குக் காரணமான அந்த போலீஸ் உடையில் இருந்த  கோஷ்டி அருகில் வந்து கொண்டிருந்தது. ஏதோ உலக யுத்தத்தில் ஜெர்மனியின் நாஜி படை நடைபயின்று வருவது போல தடக் தடக்கென்று பூட்ஸ் கால் ஓசையுடன், கைகளில் தடியுடன் அந்த படை நடந்து வந்து கொண்டிருந்தது. அந்த போலீஸ் ஊர்வலம் நாங்கள் ஒதுங்கியிருந்த மலை முகட்டிலிருந்து கீழே பார்க்க நன்றாகத் தெரிந்தது.

      வந்தவர்கள் சுமார் ஐம்பது பேர் இருக்கும். இவர்கள் யாரையாவது வி.ஐ.பி.யை பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு போகிறார்களோ என்று பார்த்தால் அது ஒரு பெண் அவள் மேல் போலீஸ் உடை, தலையில் ஹெல்மெட், முகம் மட்டும் தெரிந்தது. அந்த முகத்தில் அச்சமோ, வெட்கமோ இல்லை, உலகத்தில் யாரும் சாதிக்கமுடியாத பெரும் சாதனையைச் செய்பவள் போல் இளித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

      ஏன் இவளுக்கு இத்தனை போலீஸ் பந்தோபஸ்து. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பெண்களிலும் பத்து வயதுக்கு உட்பட்டவர்களும், ஐம்பதுக்கு மேற்பட்ட பெண்களும் வருகிறார்கள். இவர்களில் ஐந்து வயது பெண் குழந்தையும் இருக்கிறது, எழுபது வயதுக்கு மேலுள்ள பெண்களும் இருக்காங்க. அவுங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தாலும் அர்த்தம் உண்டு”

      “அந்த நியாயமெல்லாம் நாத்திகக் கூட்டத்தின் போலீஸுக்குத் தெரியாதப்பா. அவுங்க நெனச்சத செய்யணும்னா எந்த வன்முறையில் கூட இறங்குவாங்க.”

      இப்படிப் பேசிக் கொண்டே நாங்கள் இந்த போலீஸ் அணிவகுப்பு வெகு தூரம் போகும் வரையில் பார்த்துக் கொண்டிருந்தோம்.

      மாலை வெகுநேரம் ஆகிவிட்டது. இருட்டத் தொடங்கிவிட்டது. மரங்கள் அடர்ந்த மலைப்பிரதேசம் என்பதால் இருட்டு சீக்கிரம் பரவிக் கொண்டிருந்தது.

      “சரிப்பா, நாமெல்லாம் எங்கேயாவது சற்று பாதுகாப்பாக இன்று இரவைத் தங்கிக் கழித்துவிடலாம். எங்கே என்ன கலவரம் நடக்கும்னு சொல்ல முடியலை. போறபோக்கைப் பார்த்தா இனிமே சபரிமலைக்கு வருவதற்கே பயப்பட வேணும் போல இருக்கே”

      “ஆமாம்பா, இது முதல் முறை அல்லப்பா. 1906இல் ஒரு முறை இந்த ஐயப்பன் கோயில் விஷமிகளால் எரித்து அழிக்கப்பட்டது. அப்புறம் சிலர் முயன்று பந்தளம் அரச பரம்பரையின் முயற்சியால் மீண்டும் உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வந்தது. பிறகு 1950இல் ஒரு முறை மதவெறி கொண்ட ஒரு கும்பலால் சபரிமலை கோயில் எரித்து அழிக்கப்பட்டது. அங்கிருந்த கருங்கல்லால் ஆன ஐயப்பன் சிலை உடைத்தெறியப்பட்டது. அதன் பிறகு பல காலம் ஐயப்பன் ஆலய வழிபாடு இல்லாமல் இருந்தது.”

      “அப்படியா? இதன் வரலாற்றில் இத்தனை சம்பவங்கள் இருக்கா?”

      “ஆமாம், நம்ம தமிழ்நாட்டில கும்பகோணத்துக்காரரான ஒரு நாடக ஆசிரியர், நாடகக் கம்பெனி முதலாளி நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவர் ஒரு சிறந்த ஐயப்ப பக்தர். அவர் ஊர் ஊராகப் போய் சபரிமலை ஐயப்பன் என்று நாடகம் போட்டு அந்த வருமானத்தில் ஐயப்பனுக்கு புதிதாக ஒரு ஐம்பொன் சிலை எடுப்பித்து, அதை ஊர் ஊராகக் ஊர்வலமாக எடுத்துச் சென்று இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்தார். அதற்குப் பிறகு ஐயப்பன் வழிபாடு ரொம்ப சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போ அதுக்கு திருஷ்டி பரிகாரம் போல இப்படியொரு சங்கடம். இதற்கெல்லாம் அந்த கோர்ட் தீர்ப்பு அப்படிங்கறாங்க”

      “கோர்ட் தீர்ப்புக்கும், போலீஸ் தடியடிக்கும் என்ன சம்பந்தம்?”

      “அது இல்லப்பா. எல்லா வயசு பெண்களும் சபரிமலைக்குப் போகலாம்னு தீர்ப்பு வந்திடுத்து இல்லையா. உடனே கேரள அரசு எல்லா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் மரியாதை கொடுத்து, உடனுக்குடனாக எல்லாத்தையும் அமல்படுத்தி வர்ரதப் போல இந்த விஷயத்திலயும் முந்திக்கணும்னு நெனைக்கறாங்க. யாரையாவது ஒரு சின்ன வயது பொண்ணைக் கோயில்குள்ள கூட்டிக்கிட்டுப் போய் கோர்ட் தீர்ப்பை மரியாதை செய்யணும்னு தேடி அலைஞ்சு இரண்டு மூணு பொண்ணுகளைத் தயார் பண்ணி கொண்டு வந்து எப்படியாவது இவுங்களுக்கு ஐயப்பன் தரிசனம் செஞ்சி வைச்சுடணும்னு கங்கணம் கட்டிகிட்டு வேலை பார்க்கிறாங்க”

      “அதுக்கு எதுக்கு வாடகைக்கு பொம்மளைங்களைப் புடிக்கணும். அவுங்கவுங்க வீட்டுப் பொம்பளைங்களை அழைத்துக் கொண்டு வரவேண்டியது தானே?”

      “அதை எப்படிச் செய்வாங்க? குரங்கு வாலைவிட்டுப் பார்த்ததைப் போல, இவுங்களும் யாரையாவது இப்படிப்பட்ட பொண்களைக் கொண்டு வந்து பரீட்சை செய்து பார்த்துவிட்டு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னா அப்புறம் அவுங்க வூட்டு பொண்களை அழைத்து வரலாம். அதுக்கும் அவுங்களுக்கு பக்தி இருக்கணும்ல. இவுங்களைப் போலவே அவுங்களும் நாஸ்திகாள்னா என்ன பண்றது?”

      இப்படிப் பேசிக் கொண்டே தங்கும் முகாம் ஒன்று கண்ணில் பட, அங்கு சென்று அன்றிரவு தங்கிவிட அனைவரும் சென்று வாடகைக்கு ஒரு தாவளம் பிடித்து அங்கு முகாமிட்டுவிட்டனர்.

      இரவு வெகுநேரம் கழித்து மீண்டும் காட்டுப் பாதையில் ஏதோ சலசலப்பு. என்னவென்று கண்விழித்துப் பார்த்தால் அதே போலீஸ் பட்டாளம் அதே பெண்ணை இறுக்கமாகச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். கூட்டமாக வந்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்ததில் அங்கு மேலே செல்ல முடியாதபடி பக்தர்கள் கூட்டம் கீழே உட்கார்ந்து கொண்டு அமைதியாக சரண கோஷம் எழுப்பியபடி எதிர்ப்புக் குரல் கொடுத்ததாகவும், ஒரு போலீஸ் அதிகாரி தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய முயன்றும் முடியாமல் போகவே, அந்தப் பெண் திரும்ப அழைத்துச் செல்லப்படுவதாகச் சொன்னார்கள்.

      “அப்பாடா! ஐயப்பன் எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அநாச்சார நிகழ்ச்சி நடக்காதபடி அவர் எப்படியோ தடுத்து நிறுத்திவிட்டார்” என்றான் கோபி.
                                    

      மறுநாள் நாங்கள் கூட்டத்தோடு எழுந்து சென்று மலையேறி, பதினெட்டாம் படி வழியாக சரண கோஷம் எழுப்பிக் கொண்டு சந்நிதானம் சென்று அங்கு நெய் விளக்கின் வெளிச்சத்தில் புன்னகை தவழும் முகத்தோடு உடலெங்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, நெற்றியில் நெய்யும் சந்தனமும் விளங்க ஐயப்பன் எங்களைப் பார்த்து ஆசீர்வதிப்பது போல உணர்ந்தோம். எனக்கு இது முதல் மலையேற்றம் என்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சியும் புல்லரிப்பைத் தந்தது. ஐயப்பன் தரிசனம் கண்ட பிறகு இங்கு, இந்த பூமியில், பரசுராம க்ஷேத்திரத்தில் அதர்மம் தலைதூக்க முடியாது, தர்மம் நிலைநாட்டப்படும் என்று சொல்வதுபோல எனக்குத் தோன்றியது.

      ஆனால் என்னுடன் வந்திருந்த கோபியின் முகத்தில் மகிழ்ச்சி காணப்படவில்லை. முகம் சோர்ந்தே காணப்பட்டது. சந்நிதானத்தில் அதிக நேரம் தங்க போலீஸ் இடம் தரவில்லை. இடத்தைக் காலி செய்யச் சொல்லி விரட்டிக் கொண்டிருந்தார்கள். சந்நிதானத்தின் பின்புற வழியாகப் படியிறங்கி வந்து கொண்டிருந்த போது ஒரு முதியவர், உடல் சுருக்கத்துடன், முகம் பிரகாசிக்க ஐயப்பன்மார் கூட்டத்துடன் வந்து கொண்டிருந்தார்.

      கோபிக்கு அவரை முன்பே தெரியும் போலிருக்கிறது. அவன் உடனே அவர் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு சாமி சரணம் என்றான். அவரும் அதையே சொல்லி அவனை ஆசீர்வதித்துவிட்டுக் கேட்டார்.

      “என்ன ஐயப்பா, இந்த வருஷம் இப்பவே சந்நிதானம் வந்துட்டே, எப்போதும் மகரவிளக்குத்தானே உனக்கு தரிசனம்?”

      “ஆமாம் சாமி, இந்த வருஷம் என் மனசுல ஏதோ துக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஐயப்பனை தரிசனம் செஞ்சா அமைதி அடையும்னு இப்பவே எங்க ஊர் நண்பர்களோடு வந்துட்டேன்”
      கோபி தொடர்ந்து அந்த சாமியிடம் பேசினான். “சாமி! உங்க நேரத்தை வீணடிக்க விரும்பலை. இந்த வருஷம் எப்போதுமில்லாம இப்படி ஏதோ சொல்லவே கூசக்கூடிய விஷயங்கள் எல்லாம் மலையில் நடக்கிறதே இதுக்கெல்லாம் முடிவே இல்லையா? ஐயப்பன் கண் திறந்து பார்க்க மாட்டாரா?” என்றான்.

      அந்த குருசாமி சொன்னார் “கோபி! மனசைத் தளர விடாதே. இப்ப நடக்கற விஷயங்கள் எல்லாமே அந்த ஐயப்பனோடு திருவிளையாடல். இதுக்கு முன்னால இரண்டு தடவை 1906ல ஒரு முறை 1950ல ஒரு முறை ஐயப்பன் ஆலயத்துக்கு சோதனை வந்தது, தெரியுமில்லையா? அதைப் போல இப்போ ஒரு முறை அவனுக்குச் சோதனை வந்திருக்கு? எங்கியாவது மனுஷ யத்தனம் தெய்வ எத்தனத்துக்கு முன்னால நின்னதாக சரித்திரம் இருக்கா? நாமெல்லாம் சாதாரண மனுஷன்கள், சுவாமி ஐயப்பன் கண்ணைத் திறந்தா குப்பை மேடு கோபுரமாகும், கோபுரங்கள் எல்லாம் சரிந்து தரைமட்டமாகும். இப்போது வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பு முனை நடக்கப் போகிறது. அதற்கான முன் எச்சரிக்கைகள்தான் இதெல்லாம்.”

      “அது என்ன சாமி திருப்பு முனை? எப்போது, எங்கே நடக்கும்கறீங்க?”

      “அதெல்லாம் அந்த ஐயப்பன் திருவுள்ளத்துக்குத்தான் தெரியும். அவனுக்குத் தெரியாததா? தன்னைச் சுற்றி அதர்மம் தழைத்து காடாக வளர்ந்து கிடக்கிறதுன்னு. அந்த அதர்மக் காட்டை, நாத்திகக் கோட்டையை அழித்து ஒழித்து, இனி தலை தூக்க முடியாமல் செய்து மீண்டும் ஒரு கிருத யுகத்தைப் படைக்கும் ஆற்றல் அவனுக்கு உண்டு, செய்வான், நடக்கும், நிச்சயம் நடக்கும் கண்டிப்பா நடக்கும்!”

      இப்படி அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கும் சரண கோஷம் எழ, வாத்தியங்கள் முழங்க, வெடிச் சத்தம் எதிரொலிக்க, எங்களைச் சுற்றி பிரபஞ்சம் அழிந்து புதியதோர் உலகம் வைரத்தின் ஜொலிப்போடு, இறைவனின் சந்நிதிப் பிரகாசமும், அவன் அருட்பார்வையும் எங்கும் நிறைவதைப் போல உணர்ந்தோம். அனைவரும் அந்த குருசாமியின் கால்களில் விழுந்து பணிந்து எழுந்தோம்.

      அவர் ஆசீர்வதித்தார் “குழந்தைகளே, நம்புங்கள், நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு. ஐயப்பன் நல்ல தீர்ப்பு தருவான்” என்று சொல்லிக்கொண்டே அவர் தொடர்ந்து நடக்கலானார். நாங்கள் அவர் செல்லும் திசை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் பார்வையில் அவர் போனது புலியின் மேல் அமர்ந்து ஐயப்பன் பந்தள அரண்மனைக்குச் செல்வதைப் போல இருந்தது.
                                                                             


No comments: