பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, April 15, 2018

1.சொக்கன் சொக்கப்பிள்ளை ஆன கதை.


பாட்டி சொன்ன கதைகள்.                     எழுதுபவர்: சக்தி மைந்தன்.

(“சக்தி மைந்தன்” பாட்டி சொன்ன கதைகளையெல்லாம் நினைவு படுத்தி இப்போது எழுதத் துவங்கியிருக்கிறார். அதில் முதல் கதை இது. உங்கள் கருத்துக்களை இதில் பதிவிடலாம்)

                  1.சொக்கன் சொக்கப்பிள்ளை ஆன கதை.

     ஓர் ஊரில் சொக்கன் என்றொரு ஆடு மாடு மேய்ப்பவன் வாழ்ந்து வந்தான். தினமும் முதலாளி வீட்டிற்குச் சென்று மாடுகளை மேய்த்துவிட்டுத் திரும்ப அவர் வீட்டில் விட்டுவிட்டு வருவான். அவனுக்கு உணவாக ஒரு மண் கிண்ணியில் வடித்த கஞ்சியை ஊற்றுவார்கள். இது தினசரி நடவடிக்கையாக இருந்து வந்தது.

      மாடுகளை மேய்த்து முதலாளி வீட்டுக் கொட்டிலில் கட்டிவிட்டு உரத்த குரலில் “யம்மா போய் வாறேன்” என்று குரல் கொடுப்பான். பதிலுக்கு முதலாளி அம்மாள் “எலே! சொக்கா! கிண்ணியைக் கொண்டாடா” என்று கூவுவார். இவனும் மண் கிண்ணியைக் கொண்டு போய் அம்மாள் வசம் வைப்பான். அவ்வம்மையும் கிண்ணியிலே வடித்த கஞ்சியை வார்ப்பாள். குடித்துவிட்டுக் கிளம்பி விடுவான்.

      ஒரு நாள் மாடுகளை மேய விட்டுவிட்டு மாடு மேய்க்கின்ற கோலால் ஓரிடத்தில் மண்ணைக் கீறுவதும் தட்டுவதுமாக இருந்தான். அப்போது ஒரு வித்தியாசமான சப்தம் வரவே, அவ்விடத்தைத் தோண்டிப் பார்த்தான். அங்கே ஒரு பானை நிறைய பொற்காசுகள். உடல் சிலிர்த்தான், பூரித்தான், மகிழ்ந்தான். எண்ணிப் பார்த்துவிட்டு மீண்டும் மண்ணுக்குள்ளேயே வைத்து மூடிவிட்டு வீடு திரும்பினான். மாடுகளைக் கொட்டிலில் கட்டினான்.

      முதலாளி அம்மா கூப்பிட்டார்கள். “எலே! சொக்கா! கிண்ணியைக் கொண்டாடா”. சொக்கனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டது. “என்ன சொக்கா? சொக்கப் பிள்ளேன்னு கூப்பிடக் கூடாதா? என்றான்.

      முதலாளி யம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “சரிங்க! சொக்கப்புள்ள, கிண்ணிய எடுத்தாங்க” என்றாள்.

      சொக்கன் கேட்டான் “ஏன் எல போட்டு சோறு போடக் கூடாதா?” என்று.

      “சரிங்க! எல எடுத்தாங்க” என்று முதலாளி அம்மால் மறுமொழி சொல்லவும், சொக்கன் இலையுடன் வந்தான். அன்றைய சுடுசோறும் வெஞ்சனமும் பரிமாறப்பட்டன.

      இந்த சொக்கனின் மாற்றம் முதலாளி அம்மாளால் முதலாளியிடம் சொல்லப்பட்டது. முதலாளி மறுநாள் சொக்கன் மாடு மேய்க்கப் போனபோது பின்னால் அவனறியாமல் சென்று உளவு பார்த்தார். சொக்கன் வழக்கம் போல புதையல் இருந்த இடத்தை அகழ்வதும் பொற்காசுகளை எண்ணூவதும் மீண்டும் மண்ணில் புதைப்பதுமாக தன் தினப்படி வேலையைச் செய்தான்.

      முதலாளி அவனறியாமல் புதையலைத் தோண்டி வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார். மறுநாள் சொக்கன் மாடு மேய்க்கும் போது அகழ்ந்ததில் புதையல் இல்லாததைக் கண்டு மனம் புழுங்கினான். உள்ளுக்குள் அழுதான். வீட்டிற்குத் திரும்பினான்.

      முதலாளி அம்மாள் “சொக்கப்புள்ள! எலை போட்டுக்குங்க! சோறு கொண்டாறேன்” என்றாள். சொக்கனோ “பழைய சொக்கனே சொக்கன், பழைய மண் கிண்ணியே மண்கிண்ணி” என்று விரக்தியாய் விடை தந்தான்.


           

               

No comments: