பாட்டி
சொன்ன கதைகள் “சக்திமைந்தன்”
.
ஓரூரில் ஒரு செல்வந்தன்
வாழ்ந்து வந்தான். மிகவும் மோசமான கருமி அவன். ஏழைகளின் ரத்தம் குடித்து மிகுந்த செல்வம்
தேடியவன் அவன். காலப் போக்கில் பெரிய பணக்காரன் ஆனாலும், அவன் போக்கால் சலிப்புற்ற
சொந்த பந்தங்கள் அவனை விட்டு விலகிக் கொண்டனர்.
ஒரே ஒரு விசுவாச
ஊழியன் மட்டுமே அந்தப் பணக்காரனுடன் இருந்தான். லோபி நோயில் வீழ்ந்தான். இனி பிழைக்க
மாட்டோம் என்று அவனுக்குப் புரிந்தது. தன் மரணத்திற்குப் பிறகு நரகம்தான் செல்வோம்
என்று அனுமானித்தான். பயம் தோன்றியது. விசுவாச ஊழியனைக் கூப்பிட்டான்.
“நான் இனி பிழைக்க மாட்டேன். நான்
செய்த பாவங்களின் பலனாக எனக்கு நரகமே கிட்டும். இதிலிருந்து நான் தப்பிக்க ஏதாவது வழி
இருக்கிறதா?” என்று கேட்டான்.
விசுவாச ஊழியனோ, “ஐயா! ஊருக்கு
வெளியே புதிதாக ஒரு யோகி வந்திருக்கிறார். வெவ்வேறு ஊர்களிலேர்ந்தெல்லாம் மக்கள் வந்து
அவுங்கவுங்க பிரச்சனையைச் சொல்லி பரிகாரம் தேடறாங்க. நாமளும் அப்பிடியே செய்யலாம்”
என்றான் எசமான் சாந்தம் அடைந்தவனாய், “வண்டியைக் கட்டு! போய்ப் பார்த்து வரலாம்” என்று
கிளம்பினான்.
வண்டியிலேறி விசுவாச ஊழியனும்
முதலாளியும் யோகியின் வசம் சென்றனர். அவரிடம் செல்வந்தன் “ஐயா! நான் ஏழைகளின் ரத்தம்
குடித்துப் பணம் சம்பாதித்தேன். இப்போது நான்
மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நான் செய்த பாவங்களின் பலனாய் நரகமே கிடைக்கும்னு
சர்வ நிச்சயமாய் நம்பறேன். சாமிதான் என்னைக் காத்தருளணும்” என்று கூறி அடியற்ற மரம்
போல் யோகி காலில் விழுந்தான்.
யோகி அவனை ஆசுவாசப் படுத்தி அமர
வைத்து “நீ கவலைப் பட வேண்டாம். உன் பாவங்களுக்குப் பரிகாரம் உள்ளது. இந்த ஊரில் தண்ணீர்
பிரச்சனை உள்ளது. ஊர் நுழைவாயிலில் ஒரு குளத்தைப் பொது மக்கள் உபயோகத்துக்காக வெட்டு”
என்று உபதேசித்தார்.
செல்வந்தனும் “அப்படியே செய்கிறேன்
ஸ்வாமி” என்று விடைகூற மீண்டும் காலில் விழுந்து விடை பெற்றான்.
ஊருக்குப் போனவன் உடனடியாக குளம்
வெட்டும் பணியில் இறங்கினான். மிகுந்த செல்வம் இருந்ததால் நிறைய செலவு செய்து குளத்தை
நன்கு வெட்டிப் படிகளெல்லாம் அமைத்தான். குளம் பொதுமக்கள் உபயோகத்திற்கு விடப்பட்டது.
மக்கள் மகிழ்ச்சியுடன் செல்வந்தனைப் போற்றிக் கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்..
இதற்கிடையில் செல்வந்தன் இறந்து
போனான்.இறந்தவன் ஆன்மா யமனுலகம் கொண்டு செல்லப்பட்டது. யமனுலகில் அவனுடைய பாவ புண்ணிய
கணக்குகளைப் பார்த்தார்கள். “நிறைய பாவமும், கொஞ்சம் புண்ணியமும் செய்திருக்கிறான்”
என்று சித்ரகுப்தன் கணக்குச் சொன்னார்.
யமன் “மானுடா நீ புண்ணியம் பாவம்
இரண்டும் செய்துள்ளதால் சொர்க்கம், நரகம் இரண்டும் உனக்கு உண்டு. ஆனால் உனக்கு ஒரு
வாய்ப்புத் தருகிறேன். நீ முதலில் அனுபவிப்பது சொர்க்கமா அல்லது நரகமா எனத் தேர்வு
செய்து கொள்ளும் உரிமையைத் தருகிறோம்” என்றார்.
லோபியின் ஆன்மா யோசித்து முடிவெடுத்தது.
பின்னர் சொல்லியது “தேவரீர் நான் நிறைய பாவம் செய்தவன் எனவே நான் நரகத்திற்குப் போனால்
நிரந்தரமாக வாசம் செய்ய நேரிடும். சொர்க்கபுரிக்கு வரமுடியாது. எனவே தேவரீர் அருள்
புரிந்து சொர்க்கத்திற்கு என்னை அனுப்பி வைக்க வேண்டும்” என்று வேண்டினான். யமனும்
ஒப்பினார்.
லோபியை சொர்க்கபுரிக்கு யமகணங்கள்
அழைத்துச் சென்றனர். பூமியில் அவன் வெட்டிய கிணற்றை மக்கள் பல்வேறாகப் பயன்படுத்தினர்.
கால் நடைகளைக் குளிப்பாட்ட, அவர்கள் குளிக்க, துணி துவைக்க என்று அந்த குளம் அவ்வூர்
மக்களுக்கு ஒரு வரமாக அமைந்தது. பொதுமக்கள் உபயோகிக்கும் போது சும்மாவா பயன்படுத்தினர்?
“புண்ணியவான் நல்ல தர்ம காரியம் செய்தான். அவன் நல்லா இருக்கணும்” என்று பலபட வாழ்த்தினார்கள்.
செல்வந்தன் கணக்கில் புண்ணியம் இப்போது ஏறியிருந்தது. அவன் செய்த அறச் செயல் நிரந்தர
பயன் தருவதாக இருந்ததால் அவன் புண்ணியக் கணக்கு ஏறியது. அவன் நிரந்தர ஸ்வர்க்கவாசி
ஆனான்.