1953-54இல் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டமும் தலைவர் ம.பொ.சி. பட்ட கல்லடியும்.
சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. ஒரு காந்தியவாதி. தோற்றத்தால், அணியும் வெண்ணிற கதராடையால், இணைந்திருந்த அரசியல் கட்சியால் மட்டுமல்ல, நடத்தையால், நேர்மையால், சிந்தனையால் அவர் ஒரு சுத்த சுயம்பிரகாச காந்தியவாதி. புத்தகங்களில் படித்தோ, பிறர் சொல்லிக் கேட்டோ நான் இந்த முடிவுக்கு வரவில்லை. அந்த மகானை (நான் அப்படித்தான் மதிக்கிறேன்) நேரடியாகப் பார்த்ததாலும், அவர் உரைகளைக் கேட்டதாலும், அவருடைய பத்திரிகைகளுக்கு முகவராக இருந்து நானும் படித்து, கடைகள் மூலமாக பொதுமக்கள் வாங்கும்படி செய்ததாலும், தமிழரசுக்கழகம் சேலம் மகாநாட்டுக்குப் போய் அதன் பின்னர் பல விழாக்கள் பாரதி விழாக்கள் உட்பட பலவற்றில் பங்கு கொண்டதாலும், அவருடன் ஓரளவு பழக்கமிருந்ததாலும், அவரை மிஞ்சிய ஒரு தலைவரை நான் இன்றுவரை காணவில்லை என்றே உறுதி கூறுவேன். அப்படிப்பட்ட பெரும் தலைவர் வாழ்வில் சந்தித்த போராட்டங்கள் பலப்பல. ஆனால் பொது மேடையில் அவர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கொடுமையானது, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அந்த நிகழ்ச்சி பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன்.
ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது 1953-54இல் ஆரம்பக் கல்வியில் பள்ளிக்கூடம் போகாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகளைச் சேர்க்க வேண்டுமென்கிற ஆவலில், போதுமான பள்ளிகள் இல்லாததால் ஷிஃப்ட் முறையில் வகுப்புகளை நடத்தி இரு மடங்கு மாணவர்களைப் படிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு மாற்றுக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார். இந்த கட்டுரையின் நோக்கம் அந்தத் திட்டம் சரியா, தவறா அல்லது தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதா, அல்லது அதனைக் கொண்டுவந்தவர் யார் என்பதால் அப்படிப்பட்ட எண்ணம் பரப்பப்பட்டதா என்ற விவாதத்திற்குள் புகுவதற்காகவோ அல்லது அந்தக் கல்வித் திட்டம் பற்றி அபிப்பிராயம் சொல்லவோ அல்ல. ம.பொ.சி. எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை மட்டும் அவர் எழுதிய கட்டுரையை அடியொற்றி இந்தக் கட்டுரையில் கொடுக்க முயன்றிருக்கிறேன்.
வடவெல்லை, தெற்கெல்லை போராட்டங்களில் ஈடுபட்டிருந்த போதே மற்றொரு போராட்டத்திலும் ஈடுபட வேண்டிய அவசியம் ம.பொ.சிக்கு ஏற்பட்டது. ராஜாஜி கொண்டு வந்த 'ஆரம்பக் கல்வி சீர்திருத்தத் திட்டத்'திற்கு ஏற்பட்ட எதிர்ப்பை முறியடிக்கும் போராட்டமாகும் என்கிறார் அவர்.
அடிப்படையில் காங்கிரஸ்காரனாக இருந்த அவர், காங்கிரஸ் அரசு கொண்டு வரும் எந்தத் திட்டத்தையும் ஆதரிக்கக் கடமைப் பட்டவர். ஆதரிக்க மறுப்பதோ, எதிர்ப்பதோ கட்சிக் கட்டுப்பாட்டைக் குலைக்கும் துரோகச் செயல் என்பது அவர் எண்ணம். முதல்வர் ராஜாஜியிடம் தமிழ்நாடு காங்கிரசுக்கு - அதன் தலைவர் காமராஜருக்கு நல்லெண்ணம் இருக்கவில்லை என்பது ம.பொ.சியின் கருத்து. ஆகையால் ராஜாஜி கொண்டு வந்த ஆரம்பக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து எழுந்த போராட்டத்தை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற தமிழ்நாடு காங்கிரஸ் முன்வரவில்லை என்கிறார். அந்தப் பணியைத் தான் ஏற்றுக் கொண்டு தமிழரசுக் கழகம் சார்பில் போராட வேண்டியிருந்தது என்பது ஐயாவின் கருத்து. அதுமட்டுமல்லாமல் ராஜாஜியுடன் அவருக்கிருந்த நட்பும் மரியாதையும் கூட அவரை இந்தப் பணியில் ஈடுபடத் தூண்டியது என்கிறார்.
இது குறித்து ம.பொ.சி. "எனது போராட்டம்" நூலில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன்.
"ராஜாஜி கல்வித் திட்டம் 1953-54ஆம் கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றத்தின் - சட்டமன்றக் காங்கிரஸ் கட்சியின் - நாட்டிலுள்ள கல்வி நிபுணர்களின் கருத்தை அறியாமலே தமது திட்டத்தைச் செயல்படுத்த ராஜாஜி முயன்றார். இது எதேச்சதிகாரப் போக்காக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த அவருடைய எதிரிகளால் கருதப்பட்டது.
ராஜாஜியின் திட்டத்தில் புதுமையோ, புரட்சியோ ஒன்றுமில்லை. வெறும் 'ஷிஃப்ட் முறை' அவ்வளவுதான். ஆரம்பப் பள்ளிகளில் கல்வி பயிற்றுவிக்கும் நேரம் 6 மணியாக இருந்ததை 3 மணியாகக் குறைத்தார். மீதமுள்ள 3 மணி நேரத்தில் குழந்தைகள் பெற்றோர் செய்யும் தொழிலில் பங்கு கொள்ளவும் அதிலே பயிற்சி பெறவும் வாய்ப்பு தரப்படுவதாக முதல்வரால் சொல்லப்பட்டது.
'ஒருவேளை பள்ளிப் படிப்பு' என்ற ராஜாஜி திட்டத்தால் அதிகப்படியாக 45 லட்சம் குழந்தைகள் கல்வி பயில வசதி கிடைக்குமென்றும் அறிவிக்கப்பட்டது. அது உண்மைதான்.
அரசியல் சட்டத்தில் 1960ஆம் ஆண்டுக்குள் -- அதாவது, சட்டம் நடைமுறைக்கு வந்து பத்து ஆண்டு நிறைவு பெறுவதற்குள் 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவரையும் பள்ளிகளுக்குக் கொண்டு வந்து விடவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றும் பொறுப்பு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் முதல்வர் பதவி ஏற்ற ராஜாஜியுடையதாக இருந்தது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு வரவேண்டிய பருவத்திலுள்ள அவ்வளவு பிள்ளைகளுக்கும் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி தருவதென்பது சாதாரண விஷயமல்ல. பெரும் செலவுக்குரிய பொறுப்பாகும். முழு நேரக் கல்வி முறைப்படி இதனை நிறைவேற்றுவதானால், ஆயிரக்கணக்கில் புதிய பள்ளிகள் நிறுவி, பதினாயிரக்கணக்கில் புதிதாக ஆசிரியர்களை நியமித்தாக வேண்டும். ஏழ்மை மிகுந்த நம் நாட்டில் அது சாத்தியமன்று. அதனால் "அரை நாள் கல்வி" மூலமாகத்தான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி தர முடியும் என்று அரசு கருதியது.
ராஜாஜி புகுதிய கல்வித் திட்டத்தில் அதுவரை போதிக்கப்பட்டு வந்த பாடங்களில் எதுவும் குறைக்கப்படவோ, கைவிடப்படவோ இல்லையென்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, தமது திட்டத்தில் இல்லாத ஒன்றை தமது பேச்சிலே ராஜாஜி வற்புறுத்தி வந்தார். ஆம்! அப்பன் தொழிலை மகன் செய்ய எனது திட்டம் வழி செய்கிறது என்று அவர் பேசி வந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்டு ராஜாஜி திட்டத்திற்குக் "குலக் கல்வித் திட்டம்" என்று பெயர் தந்தது தி.மு.க.
உண்மையிலேயே, சலவைத் தொழிலாளி மகன் சலவைத் தொழில்தான் செய்ய வேண்டும், க்ஷவரத் தொழிலாளி மகன் க்ஷவரத் தொழில்தான் செய்ய வேண்டும்; தோட்டியின் மகன் தோட்டித் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கருத்தை இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்க முடியாதுதானே! அதையும் ஒரு பிராமணர் சொன்னதால் சாதிப் போர் மூண்டது.
"அரை வேளைக் கல்வி" என்பது மலேசியா முழுவதிலும் நடைமுறையிலிருப்பதனை நான் 1964இல் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது நேரில் கண்டேன். கேரளத்திலும் அரை நாள் கல்வி முறை அமலில் இருக்கிறது. தமிழ் நாட்டிலும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் இது கடைப்பிடிக்கப் படுகின்றது.
என்ன செய்யப்படுகிறது என்பதைவிட, யாரல் செய்யப் படுகிறது என்பதற்கே முதன்மை தரப்பட்டது. அதனால், வகுப்புவாத அரசியல் நோக்குடன் ராஜாஜியின் கல்வித் திட்டம் தி.மு.க.வால் எதிர்க்கப்பட்டது. கொஞ்சம் தாமதித்து தி.க.வும் புதிய கல்வித் திட்டத்தை எதிர்க்கத் தொடங்கியது. தி.மு.க. ஜூலை 14இல் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதனால் மாநில முழுவதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலும், டால்மியாபுரத்திலும் ரயில் நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 9 பேர் உயிர் இழந்தனர்.
இந்த நிலையில் கல்வித் திட்ட எதிர்ப்பானது பிராமண எதிர்ப்பாக, காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக மாறியது. ஆரம்ப கட்டத்தில் இவ்வளவையும் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தது தமிழ்நாடு காங்கிரஸ். ஒரு கட்டத்தில் கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசவும் முற்பட்டார் திரு காமராஜ். தூத்துக்குடி, டால்மியாபுரம் துப்பாக்கிச் சூடுகளினால் பொதுமக்கள் அனுதாபம் தி.மு.க. பக்கம் திரும்பியது. அந்த நேரம் பார்த்துப் புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேசினார் காமராஜ்; கல்வித் திட்டம் சரியா தவறா என்பதில் அவருக்குக் கவலையில்லை. ராஜாஜி ஆட்சியை வெளியேற்றி, தான் அதிகாரத்திற்கு வர அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ("எனது போராட்டம்" பக்கம் 392)
ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தமிழரசுக் கழகச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. மாநிலமெங்கணும் மாநாடுகளும் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடத்திக் கல்வித் திட்டத்துக்கு ஆதரவளித்துப் பிரச்சாரப் போர் நிகழ்த்தியது.
மாயவரத்திலே 6-9-1957 அன்று தாலுகா தமிழரசு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின் முடிவில் ராஜாஜியின் கல்வித் திட்டத்தை ஆதரித்துத் தனிச் சொற்பொழிவு நிகழ்த்தினேன். மாநாட்டிலே ஒரு சாரார் திட்டமிட்ட முறையில் எனக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அதனைச் சமாளித்து, மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டு, மாநாட்டுப் பந்தலில் இருந்து வெளியேறினேன்.
நான் தங்கியிருந்த இடத்திற்குக் கழக முன்னணித் தோழர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகரிக்கவே ஊர்வலம் போல் ஆகிவிட்டது. வழியில் இருள் சூழ்ந்த ஒரு சாலை வழியாகச் சென்றபோது ஒரு கும்பல் என் கண்ணில் மண்ணை வாரிக் கொட்டியது. அந்த நேரத்தில் யாரோ ஒருவன் கூர்பொருந்திய இரும்புக் கத்தியொன்றால் எனது நெற்றியின் வலப்புறத்தில் வெட்டினான். உடனே, காயம்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொட்டியது. பின்னர், பெரிய கலவரம் நடந்தது. நான் விரைவாக டாக்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு வெட்டுக் காயத்திற்குக் கட்டுப் போட்டுக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அன்று இரவே ரயில் ஏறிச் சென்னை திரும்பினேன்.
மறுநாள் காலை சென்னை போலீஸ் டெபுடி கமிஷனர் ஒருவர் என்னை அணுகி, "தாங்கள் மயவரத்தில் தாக்கப்பட்டது இரவே முதலமைச்சருக்குத் தெரிந்து விட்டது. தங்களை விசாரித்துவிட்டு தகவல் தரச் சொன்னார்" என்றார். நான், "நல்ல வேளையாக, காயம் சொற்பம்தான், அபாயம் ஒன்றுமில்லை என்று முதல் அமைச்சருக்குச் சொல்லுங்கள்" என்றேன்.
அவர் போன சிறிது நேரத்திற்குள் மற்றொரு போலீஸ் சி.ஐ.டி. அதிகாரி வந்து என்னை அழைத்துக் கொண்டு போய் ராயப்பேட்டை மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு 6 நாட்கள் தங்கிச் சிகிச்சை பெற்றேன். காயம் ஆழமானதுதான். டாக்டர் ஏ.எஸ்.ராமகிருஷ்ணன் காயம்பட்ட இடத்தில் தையல் போட்டார்.
"கிராமணியாருக்கு வயது நூறு" என்று தலைப்பிட்டு "கல்கி" 20-9-1953 இதழில் எழுதப்பட்ட நீண்ட தலையங்கத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:
"தமிழ்மொழி சொல்வளம் மிகுந்த, ஆற்றல் நிறைந்த மொழி. ஆயினும் ஸ்ரீ ம.பொ.சிவஞான கிராமணியாரைத் தாக்கி காயப்படுத்திய கயவர்களின் செயலைக் கண்டிப்பதற்கு வேண்டிய ஆற்றல் உள்ள சொற்கள் தமிழ்லே கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.
திரு ம.பொ.சிவஞானம் பாட்டாளி வர்க்கத்தில் பிறந்து பாட்டாளியாக இருந்து பாடுபட்டு வாழ்ந்தவர். தமது அறிவினாலும், ஆற்றலினாலும், ஒழுக்கத்தினாலும் உறுதியுள்ள உழைப்பினாலும் அரசியல் தலைவராக உயர்ந்தவர். தெய்வத் தமிழ் மொழியைத் தமது சொந்த முயற்சியினால் கற்று வளர்ந்து, பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ச்சி அறிவுடன் கற்றுத் தேர்ந்து, புலவர்களும் பாராட்டக் கூடிய தமிழ்ப் புலமை பெற்றவர். பிரசங்க மேடைகளில் இணையற்ற வன்மையுடன் தமிழைக் கையாளும் திறமை பெற்றவர். அரசியல் வாழ்க்கையில் புகுந்தது முதல் தமக்கென எதையும் வேண்டாது பொதுமக்களுக்கே ஓயாது உழைத்துப் பாடுபட்டு வருகிறவர்.
உழைப்பினாலும் ஊக்கத்தினாலும் தொண்டினாலும் தியாகத்தினாலும் உயர்ந்த ம.பொ.சி.யைப் பற்றித் தமிழ் நாட்டில் தமிழரகப் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொண்டு தோள்கள் பூரிக்க வேண்டும்.
அதற்கு மாறாக, அவரைக் கூட்டத்திலேயிருந்து கோழைத்தனமாகத் தாக்க முற்பட்டவர்களைப் பற்றித் தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இத்தகைய கொடிய தாக்குதலுக்கு உள்ளாகிப் பிழைத்தெழுந்த திரு ம.பொ.சிவஞான கிராமணியார் இறைவன் அருளினால் நூறு ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழ்ந்து தமிழகத்துக்குப் பணி செய்வார் என்று நம்புகிறோம்.
திரு ம.பொ.சியின் நெற்றிக் காயத்திலிருந்து கொட்டிய ஒவ்வொரு இரத்தத் துளியிலிருந்தும் நூறு நூறு இளம் சிவஞானங்கள் தோன்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மாயவரம் நகரமும் அதன் சுற்றுப் புறங்களிலுள்ள கிராமங்களும் தேசபக்திக்கும், தமிழ்ப் பற்றுக்கும் பெயர் போனவை. ஒரு சில கயவர்களின் செயலால் மாயவரத்தின் நற்பெயருக்கு இப்போது மாசு நேர்ந்திருக்கிறது.
மறுமுறை திரு ம.பொ.சி. மாயவரத்திற்கு விஜயம் செய்யும்போது மாயவரம் நகரிலும் சுற்றுப்புற கிராமங்களிலுமுள்ள தமிழ்ப் பெருமக்கள் திரண்டு வந்து அவருக்கு மகத்தான மாபெரும் வரவேற்பு அளித்து மாயவரத்துக்கு நேர்ந்த மாசினைத் துடைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.' (கல்கி 20-9-1953)
மாயவரத்தில் நான் தாக்கப்பட்ட செய்தி மறுநாள் தமிழ் ஆங்கில நாளிதழ்களிலே பிரதான இடத்தில் பெரிய தலைப்புக்களுடன் பிரசுரிக்கப்பட்டது. அந்த வாரத்திலே தமிழ்நாடு முழுவதும் தமிழரசுக் கழகம், காங்கிரஸ் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. சென்னைக் கடற்கரையிலும் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதுரையில் மாணவர் கூட்டம் ஒன்றில் விம்மியழுத வண்ணம் தமது வேதனையை வெளிப்படுத்திப் பேசியது வருமாறு.
"தமிழகத்தின் தந்தை தாக்கப்பட்டிருக்கிறார். தமிழர் தலைவர் தாக்கப்பட்டிருக்கிறார். ஆம், தமிழ் மொழியே தாக்கப்பட்டிருக்கிறது. சொல்லால் ம.பொ.சியை வெல்ல முடியாதவர்கள் கல்லால் வெல்ல கனவு காண்கிறார்கள்."
நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த 'பிரசண்ட விகடன்', தி.க.நாளிதழான 'விடுதலை ஆகியவைகளும் மாயவரம் நிகழ்ச்சி பற்றி எழுதியது. திரு காமராஜ் கோஷ்டியிலிருந்த திரு எஸ்.எஸ்.மாரிசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பேரிகை' வாரைதழிலும், 'விடுதலை' இதழிலும் காங்கிரசில் இருக்கும் ஒரு குழுவினர்தான் இதற்குக் காரணம் என்று எழுதின.
மாயவரம் தாக்குதல் நடந்த ஒரு மாதம் கழிந்த பின் 11-10-1953 அன்று மீண்டும் அதே மாயவரத்தில் தமிழரசுக் கழகம் சார்பில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசினார். இந்தக் கூட்டத்துக்குப் போகவேண்டாமென்று ம.பொ.சியை ராஜாஜி தடுத்தார். அதையும் மீறி ம.பொ.சி. மாயவரம் கூட்டத்துக்கு வந்து பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ஏ.எம்.இஸ்மாயில் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தலைக் காயம் ஆறிவிட்ட போதும், அடிபட்ட தன்மான உணர்ச்சி காரணமாக மாயவரத்தில் திரும்பவும் வந்து பேசினார் ம.பொ.சி. மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.
மாயவரம் திராவிட இயக்கத் தோழர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து மாஜிஸ்டிரேட் முன் நிறுத்தப்பட்டனர். வழக்கில் ம.பொ.சி.யும் ஒரு சாட்சியாக விசாரிக்கப் பட்டார். அப்போது ம.பொ.சி. மாஜிஸ்டிரேட்டிடம் "குற்றவாளிகளை மன்னித்து விடுதலை செய்வதையே நான் விரும்புகிறேன்" என்றார். அதற்கு மாஜிஸ்டிரேட் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டால் தாம் யோசிப்பதாகக் கூறினார். ஆனால் குற்றவாளிகள் மன்னிப்புக் கேட்க மறுத்து எதிர் வழக்காடினர். விசாரணையின் முடிவில் அவர்களில் மூன்று பேருக்கு 6 வாரக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இருவர் விடுதலை பெற்றனர்.
ராஜாஜியின் கல்வித் திட்டத்திற்கு சட்டமன்றக் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. திட்டத்தைக் கைவிடுமாறு அவர் வற்புறுத்தப் பட்டார். அப்படி வற்புறுத்தியவர்களில் ம.பொ.சியும் ஒருவர். ராஜாஜி ஆட்சி நீடிக்க வேண்டுமென்கிற ஆர்வத்தாலேயே தான் அப்படிச் செய்ததாக அவர் கூறினார். ஆனால் ராஜாஜி, கல்வித் திட்டத்தைக் கைவிட மறுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். இதுவும் நம் தமிழ்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட நிகழ்ச்சி, இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதால் இதனை விரிவாக இங்கு கொடுத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment