பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 22, 2014

"சேரன் றம்பி சிலம்பை யிசைத்ததும்"

                                        "சேரன் றம்பி சிலம்பை யிசைத்ததும்"



மகாகவி பாரதியாரின் "கனவு" எனும் தலைப்பிலான அவருடைய சுயசரிதை கருத்துக் கருவூலம். அவர் ஆங்கிலம் பயிலும் பள்ளியில் சென்று படித்த செய்தியினைச் சொல்லப் புகுங்கால், அங்கு பயிற்றுவிக்கப் பெறும் கல்வியின் பெருமையைச் சொல்லிக் கொண்டு வரும் பாங்கில் எவைகளையெல்லாம் கற்றுத் தெளிதல் வேண்டுமோ அவைகள் எல்லாம் ஆங்கிலம் பயிலும் கல்வியில் இல்லை என்பதைத் தெளிவு படுத்துகிறார். அப்படி அங்கு கல்வி பயிலும் மாணவர் எவைகளை யெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதைக் குறிக்க "சேரம் றம்பி சிலம்பை யிசைத்ததும்" தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்.

மேலும் மகாகவி பாரதி கம்பன், வள்ளுவன், இளங்கோ என்று இதே வரிசையில் தமிழ்ப் புலவர்களைப் போற்றியிருக்கிறார். அப்படியானால் கம்பனின் இராமகாதையிலும், வள்ளுவனின் திருக்குறளிலும், இளங்கோவின் சிலப்பதிகாரத்திலும் அவர் மனம் ஈடுபட்டிருப்பது புலனாகிறது.

சிலப்பதிகாரம் எனும் மணியாரத்தைப் படைத்தவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னன் செங்குட்டுவனின் இளைய சகோதரர். இவர் படைத்த சிலப்பதிகாரக் காப்பியம் எப்படித் தொடங்குகிறது தெரியுமா? சேர நாட்டின் தலைநகர் வஞ்சிமாநகர். அந்நகரின் புறத்தே அமைந்த குணவாயிற் கோட்டம் எனும் பெளத்த விகாரமொன்றில் துறவறம் மேற்கொண்டு வாழ்ந்தவர் இளங்கோவடிகள். சேர மன்னனும், இளங்கோவடிகளும் அரசரின் பரிவாரங்களோடு மலைவளம் காண காடும் மலையும் சேர்ந்த பகுதிக்கு வந்திருந்தனர். அப்போது அந்தக் குன்றுப் பகுதிவாழ் குறவர்கள் வந்து மன்னனிடம், "மன்னா! ஒரு வியப்பான செய்தி கேள்! எனத் தொடங்கி 'ஒரு முலை இழந்த பத்தினியொருத்தி, வேங்கை மர நிழலில் வந்து நிற்கவும், அங்கு விண்ணுலகத்து தேவர் முதலானோர் வந்து அவளை விண்ணுலகம் அழைத்துச் செல்லக் கண்டோம்" என்கின்றனர்.

அந்த பெண் பற்றிய வரலாற்றைத் தண்டமிழ்ப் புலவர் சாத்தனார் மன்னனுக்குரைக்க, அதனைச் செவிமடுத்த சேரன் சாத்தனாரிடம் 'வினைப் பயன் விளைந்த காலம்" எனக் குறிப்பிட்டீரே, அதன் பொருள் என்ன? என வினவுகிறான். அதற்கு இளங்கோவடிகள் சொல்கிறார்

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணம் ஆகச்
'சிலப்பதிகாரம்' என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்"

எனச் சொல்லி சாத்தனார் சொன்ன கோவலன் கண்ணகி பற்றிய வரலாற்றைக் கவியால் புனைகிறார். அப்படி இளங்கோவால் இயற்றப்பட்ட அந்தக் காப்பிய வரலாற்றின் சுவடுகளைச் சற்று இங்கே காணலாம்.

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்பது வள்ளுவன் வாக்கு. அந்த வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக ஆனவள் கண்ணகி. அவள் கணவன் கோவலன், இவ்விருவர் வரலாற்றைச் சொல்லும் காப்பியம் 'சிலப்பதிகாரம்'.
                           

இராமகாதையில் இறைவன் மனிதனாகப் பிறந்து மானுடத்தின் பெருமையைப் பறைசாற்றினார். இங்கு மானுடப் பெண்ணாய்ப் பிறந்த கண்ணகி இறுதியில் புவியாளும் மன்னரெல்லாம் போற்றி வணங்கும் தெய்வமாக காட்சியளித்ததை இந்தக் காப்பியம் கூறுகிறது.

'சிலப்பதிகாரம்' இறை நம்பிக்கையையும், சமயப் பற்றையும் விரித்துரைக்கும் நூலானாலும், காப்பியத்தின் தொடக்கத்தில் அவர் இயற்கையின் கூறுகளான திங்கள், ஞாயிறு, வான்மழை, புகார் நகரம் என விண்ணையும், மண்ணையும் ஒருசேர வாழ்த்தித் தொடங்குகிறார். பூம்புகார் நகரம் பண்டைய சோழர்களின் தலைநகராய் அமைந்த கடற்கரை நகரம். அந்தப் புகழ்வாய்ந்த நகரத்தில் கடல் வாணிபம் செய்துவந்த மாநாய்கன் என்பவரின் மகள் கண்ணகி. அதே நகரத்தில் செல்வந்தரான வணிகன் மாசாத்துவான் என்பவனின் மகன் பதினாறு வயதுடைய கோவலன்.

புகழ்மிக்கக் குடும்பத்தின் கொழுந்துகளான இவ்விருவருக்கும் பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து, ஊருக்கெல்லாம் முரசறைந்து செய்தி சொல்லி, திருமணத்தில் கண்ணகி அணியப் போகின்ற திருமாங்கல்யம் எனும் புனிதமான சரட்டினை ஊரார் வாழ்த்தும்படி ஊரெல்லாம் பவனிவரச் செய்து ஒரு நல்ல நாளில் திருமணம் நடைபெறுகிறது. வேதங்களை நன்கு பயின்ற வேதியர் நடத்திவைக்க, மணமக்கள் இருவரும் அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

செல்வந்தர்களான வணிகர்களின் பிள்ளைகளான இவர்கள் திருமணமான பின்பு ஏழு அடுக்கு மாளிகையொன்றில் குடிபுகுந்தனர். அங்கு தெய்வத் தச்சன் மயன் செய்ததோ என வியக்கும்படியான நவரத்தினங்கள் பதித்த கட்டிலில் காதலர் அமர்ந்து இல்வாழ்வைத் தொடங்கினர். புதுமணப் பெண்ணான கண்ணகியைக் கணவன் கோவலன் காதல் வயப்பட்டுப் புகழ்கிறான். 'மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே, தேனே, அரும்பெறற் பாவாய், ஆருயிர் மருந்தே' என்றெல்லாம் அவளை வருணிக்கிறான். இப்படி இவர்களது புதுமண வாழ்க்கை இன்ப வெள்ளத்தில் சென்றுகொண்டிருந்த வேளையில்....

பூம்புகார் நகரத்தில் கணிகையர் மரபில் மாதவி எனும் பெயருடைய மங்கை நல்லாள் வாழ்ந்து வந்தாள். நடனமாடி மகிழ்விக்கும் குலப்பெண்ணாதலின் இளம் வயதிலிருந்தே ஆடல் பாடல் அழகு இவற்றில் கலையரசியாக அவள் சிறந்து விளங்கினாள். நாட்டிய சாஸ்திரம் வகுத்தபடி மேடை அமைத்து அதில் ஆடலாசிரியன், இசையாசிரியன், தண்ணுமை (மத்தள) ஆசிரியன், குழலாசிரியன், யாழாசிரியன் என இசைக்குழுவினர் பண்ணிசைக்க மாதவி நாட்டியம் அரங்கேற்றினாள். மன்னனும் மக்களும் மனம்மகிழ் நடனமாடிய மாதவிக்கு பொன்முடிப்பொன்றையும் தலைக்கோல் ஒன்றையும் அரசன் வழங்கினான்.



மன்னன் வழங்கிய மாலையைப் பெற்றுக் கொண்ட மாதவியின் பணிப்பெண் நகரத்தில் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் நடமாடும் வீதியில் நின்று மாலையை விலைகூவினாள். அந்த மாலையை விலைகொடுத்து வாங்கும் இளைஞனுக்கு மாதவியும் உரிமையாவாள் என்று அறிவித்தாள் பணிப்பெண். செல்வந்தனான கோவலன் அந்த மாலையோடு மாதவியையும் பெற்று, கண்ணகியை மறந்து அந்தக் காதல் கிழத்தியோடு வாழத் தொடங்கினான்.

காதல் வசப்பட்டு கோவலனும் மாதவியும் உலகை மறந்து கூடியும் ஊடியும் இன்ப வாழ்க்கை வாழ்கின்றனர். இப்படி இவர்கள் மகிழ்ச்சியில் மிதக்க அங்கே கண்ணகி கணவனைப் பிரிந்துத் துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கிறாள். பூம்புகார் கடற்கரை ஊராதலின் அங்கு கடற்கரையில் சித்திரை மாதத்து முழு நிலவில் இந்திர விழா நடைபெறுகிறது. அவ்விழாவினையொட்டி கோவலனும் மாதவியும் நிலவொளியில் அமர்ந்து யாழிசைத்து 'வரிப்பாட்டு' எனும் அமைப்பில் கடற்கரையில் பாடுவதால் 'கானல்வரி' எனும் பாடலைப் பாடி மகிழ்கின்றனர்.

இந்த இடத்தில் விதி தன் விளையாட்டைத் தொடங்குகிறது. காவிரி நதியை மனதில் வைத்து அந்தக் காவிரிப் பெண் எத்தகையவள் என்பதைக் கற்பனையால் பாடுகிறான் கோவலன். மாதவியிடம் ஊடல் கொண்டிருந்த கோவலன் அவள் தன்னைத்தான் குறிப்பால் பாடுகிறாள் என நினைத்து மாதவியும் தன் பங்குக்கு "மருங்கு வண்டு சிறந்தார்ப்ப" எனத் தொடங்கும் ஆற்றுவரியைப் பாடுகிறாள். அவள் அப்படிப் பாடியது மாதவிக்குத் தன்னையன்றி வேறொரு இளைஞனை எண்ணிப் பாடினாள் என கோவலன் ஐயம் கொண்டு அவளைப் பிரிந்து சென்றுவிடுகிறான்.

விளையாட்டு வினையில் முடிந்ததால் கோவலன் மாதவியைப் பிரிந்து சென்றபின், அவள் அவனுக்கு மடல் எழுதுகிறாள். மாதவியின் மனவருத்தம் புரியாத கோவலன் அவள் மீது ஆத்திரம் மிக தன் மனைவி கண்ணகியை அடைந்து தான் அவளுக்கிழைத்த துரோகத்துக்கு வருந்துகிறான். பின்னர் இருவரும் பிழைப்புக்கு வழிதேடி பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையம்பதிக்குச் செல்லத் திட்டமிட்டு, அங்கு சென்று தன் கால் சிலம்பை விற்று வாணிபம் செய்யலாம் என புறப்பட்டுச் செல்கின்றனர்.

சின்னஞ்சிறு வயதிலேயே திருமணமாகி, வீட்டிற்கு வெளியே அதிகம் சென்றிராத கண்ணகி தன் கணவனுடன் பூம்புகார் நகரைத் தாண்டுமுன்பாகவே 'மதுரை நகர் வந்துவிட்டோமா?' என்றாள் என்றால் அவளது அறியாமையை என்ன சொல்ல? பூம்புகாரிலிருந்து மதுரை செல்ல காவிரியின் வடகரையோடு பல கிராமங்களையும் கடந்து செல்கின்றனர். வழியில் கவுந்தி அடிகள் எனும் துறவியைச் சந்தித்து அவருடைய உதவியையும் பெற்று மதுரை நோக்கிப் பயணமாகின்றனர். கவுந்தி அடிகள் இவர்களைப் பார்த்து 'உயர்குடிப் பிறப்பும் ஒழுக்கமும் உடைய நீவிர் மனை துறந்து, மாநகர் கடப்பதன் காரணம்தான் என்ன?' என்கிறார். அதற்குக் கோவலன் மதுரை சென்று மனைவியின் கால்சிலம்பை விற்கப் போகிறேன் என்று சொல்ல வெட்கி 'பொருள் தேடும் விருப்பத்தோடு மதுரை செல்கிறேன்' என்றான்.



காவிரியின் வடகரையோடு திருவரங்கம் சென்ற இவர்கள் ஒரு படகில் காவிரியைக் கடந்து தென்புறம் செல்கின்றனர். அங்கு ஒரு சோலையில் தங்கியிருக்கும் போது பரத்தை ஒருத்தியும், வெட்டியாய் ஊர் சுற்றும் விடலை ஒருவனும் அங்கு வந்து கவுந்தி அடிகளிடம் "காமனும் ரதியும் போன்ற இவர்கள் யார்?" என்று கேட்கின்றனர். அதற்கு அடிகள் "இவர்கள் என் மக்கள் காணீர்! இவர்கள் காமனும் தேவியும் அல்லர், நும் போல் மானுடர் யாக்கையர்" என்றார். அதற்கு அந்த விடலை சொன்னான், "அறிவில் சிறந்த அம்மையே! ஒரு வயிற்றில் பிறந்தவர்களாயின் இவர்கள் காதலராகி இல்வாழ்வில் ஈடுபடுவது உண்டோ?" என்றான். அந்த தவசி இந்த கேவலப் பிறவிகளைத் தன் தவ வலிமையால் நரிகளாக மாற்றிவிட்டார். பின்னர் அவர்கள் பணிந்து வேண்டிய பின்னர் இன்னும் ஓராண்டில் இந்த இழி பிறவி தீரும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

உறையூரைத் தாண்டி மதுரை செல்லும் வழி எது என்பதை வழிப்போக்கனாக வந்த ஓர் அந்தணனைக் கேட்கின்றனர். அதற்கு அவர் சிவனின் சூலம்போல் மூன்று வழிகள் மதுரைக்குப் போக இருக்கின்றன. அவற்றின் நடு வழியே இடையிடை ஊர்களைக் கொண்ட நல்வழி என்றார். அந்த வழியில் பயணம் செய்த மூவரும் ஐயைக் கோட்டம் எனும் காட்டிடை அமைந்த வேட்டுவர் குடிக்கு உரிமையான இடத்தில் தங்குகின்றனர். அங்கு வேட்டுவர்குலப் பெண்ணுக்கு ஆவேசம் வந்து இவர்களைக் "கொற்றவைக்குச் செலுத்த வேண்டிய கடனைச் செலுத்துக" என்கிறாள். அன்றிரவு அங்கு வேட்டுவர்கள் வேட்டுவ வரி பாடி கொன்றவையை வழிபடுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரை நகரின் மதிலுக்குப் புறத்தே அமைந்திருந்த 'புறஞ்சேரி' எனும் இடம் சென்று அங்கு தங்குகின்றனர். அது கோடை காலமாதலின் பகலில் ஓய்வு கொண்டு இரவில் பயணம் செய்கின்றனர். புறஞ்சேரியில் கவுந்தியடிகளுடன் கண்ணகியை விட்டுவிட்டுக் கோவலன் மட்டும் மதுரை நகருக்குள் சென்று அதன் சிறப்புகளையெல்லாம் கண்டு மகிழ்கிறான். திரும்ப புறஞ்சேரி வந்து கண்ணகியிடம் மதுரை நகரின் பெருமைகளையெல்லாம் எடுத்துரைக்கிறான்.

கோவலன் தான் மதுரை நகருக்குள் சென்று பிழைப்புக்கு பொருள் தேட விரும்பி கண்ணகியை இடைக்குலப் பெண்ணான மாதரி எனும் மாதரசியிடம் அடைக்கலம் தந்து பார்த்துக் கொள்ளும்படி செய்துவிட்டுத் தான் மட்டும் ஊருக்குள் செல்ல முடிவு செய்கிறான். கவுந்தியடிகள் தன் பணி முடிந்தது என்று கண்ணகி கோவலன் இருவரையும் மாதரியிடம் ஒப்படைத்துவிட்டுப் புறப்பட்டு விட்டார். மாதரி இவ்விருவருக்கும் தனி இடம் அமைத்து, உணவுக்குப் பொருட்களும் கொடுத்து உண்ண வகை செய்கிறாள். அங்கு இன்பமாய்த் தங்கி யிருந்துவிட்டு மறுநாள் கோவலன் மதுரை நகருக்குள் சென்று தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்க முயற்சி செய்கையில் அங்கு ஒரு பொய்வினைக் கொல்லனை சந்திக்கிறான். கோவலன் பூம்புகாரிலிருந்து வந்திருப்பவன், தன் மனைவியின் காற்சிலம்பை விற்க வந்திருக்கிறான் என்பதை அந்தப் பொற்கொல்லன் தெரிந்து கொண்டான். இவன் முன்பு பாண்டிய மன்னனின் தேவியில் காற்சிலம்பொன்றைக் கவர்ந்து கொண்டவன், இப்போது வெளியூர்க்காரன் ஒருவன் காற்சிலம்பை விற்க வந்திருப்பதால், தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்கொள்ள நினைத்து, கோவலனிடம் "இங்கே நீ சற்று என் இல்லத்தில் இரு. சிலம்பு குறித்து மன்னரிடம் பேசிவிட்டு வருகிறேன்" என்று அரண்மனை சென்றான்.



அங்கு அரண்மனையில் மன்னன் அரசவையில் ஆடல் பாடல் நடந்து கொண்டிருக்கின்றன. மன்னன் ஆடல் பாடலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அரசமாதேவி தனக்குத் தலைவலி என்று பொய் ச்ந்ல்லி மன்னனிடம் ஊடல் கொண்டு, அரசவையை விட்டு நீங்கி அந்தப்புரம் சென்று விடுகிறாள். மனைவி கோபத்துடன் ஊடல்கொண்டு சென்றுவிட்டதறிந்து அவள் ஊடல் தீர்க்க அந்தப்புறத்துக்கு விரைந்து செல்கிறான். அந்த நேரம் பார்த்து தீயமனம் கொண்ட பொற்கொல்லன் அரசரிடம் வந்து "அரசியின் களவு போன சிலம்புடன் கள்வன் ஒருவன் பிடிபட்டான்" என்று கூறுகிறான்.

மனைவியின் ஊடல் தீர்க்க அவசரம் காட்டிய மன்னன் தீவினை விளைவிக்கும் காலமாதலால், தீர விசாரிக்காமல் காவலர்களிடம் "அரசியின் காற்சிலம்பு அக்கள்வனின் கையகத்தாயின், அக்கள்வனைக் கொன்று சிலம்பினை இங்கு கொணர்க" என்று ஆணையிட்டான்.

"வினைவிளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, 'ஈங்கு என்
தாழ் பூங்கோதை - தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு' எனக்
காவலன் ஏவ ..."

                          


நீதி வழங்கும் முன்பு அரசன் தீர விசாரித்தறிந்து குற்றம் சாட்டப்பட்டவன் குற்றம் செய்தவன்தான் என்பதை உறுதியாக நம்பிய பிறகன்றோ தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். அரசியின் ஊடல் தவிரக்கவென்று அவசரம் காட்டிய தருணத்தைப் பயன்படுத்திக், கயமை குணம் கொண்ட பொற்கொல்லன் பேச்சை நம்பி அரசன் அறத்துக்கு மாறான செயலைச் செய்து, தன் தகுதிக்கு மாறாத களங்கத்தை ஏற்படுத்திவிட்டான்.

உடனே அந்தப் பொற்கொல்லன் காவலர்களை அழைத்துக் கொண்டு கோவலனிடம் சென்றான். மனதுக்குள் தான் கருதிய தீச்செயலை, அதாவது தான் திருடிய பழியை கோவலன் மீது போட்டது பலித்துவிட்டது, தான் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டோம் என்று கருதி மகிழ்ச்சியடைந்தான். அவன் கோவலனிடம் "உன் கைச் சிலம்பினைக் காண மன்னர் அனுப்பினர் இக்காவலர்களை, இவர்களிடம் உன் சிலம்பினைக் காட்டு" என்கிறான் பொற்கொல்லன்.



கோவலனைக் கண்ட காவலர்கள் இவன் தோற்றத்தாலும், நடந்து கொள்ளும் முறையாலும் இவன் கள்வனாகத் தோன்றவில்லையே. கொலை தண்டனைக்கு இவன் உரியவனாகத் தோன்றவில்லையே என்கின்றனர். பொற்கொல்லன் 'களவு நூல்' தந்திரங்களை எடுத்துச் சொல்லி அவர்கள் மனம் மயங்கச் செய்து, அரசர் கட்டளைப்படி இவனைக் கொலைக்களம் கொண்டு சென்று தண்டனை அளிக்காவிடில் மன்னனின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறான். மேலும் பல தந்திரமான சொற்களால் காவலர்களின் மனத்தினை மாற்றியதும், கல்வி அறிவில்லாத அந்த கொலைஞர்களில் ஒருவன் தன் கொடுவாள் கொண்டு கோவலனை வெட்டி வீழ்த்துகிறான்.

"கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுந்தது.
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப
மண்ணக மடந்தை வாந்துயர் கூர
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து"

இப்பிறவியில் செய்த தவறினால் அல்ல, ஊழ்வினை வந்து உறுத்து ஊட்ட இங்கு கோவலன் கொலைக்களப்பட்டான் என்கிறார் இளங்கோவடிகள்.

அங்கு, கண்ணகி தங்கியிருந்த ஆயர் சேரியில் பல்வித தீய நிமித்தங்கள் தோன்றின. இப்படி தீய நிமித்தங்கள் தோன்றினால் அவர்கள் தங்கள் குல ஆசாரப்படி குலதெய்வமான கண்ணனைத் துதித்துப் பாடி ஆடுகின்றனர். அதற்கு 'ஆய்ச்சியர் குரவை' என்று பெயர். ஆய்ச்சியர் ஆடிய குரவைக் கூத்து முடிந்தது. ஆயினும் தீய நிமித்தங்கள் கண்டமையால் மாதரியின் மனதில் அச்சம் எழுந்தது. வைகை நதியில் நீராடித் திருமாலை வழிபட்டு வரச் சென்றாள் மாதரி. அவள் வைகையில் நீராடி திரும்புமுன் கண்ணகியின் வாழ்வில் பேரிடி வீழ்ந்து விட்டது.

"அரசர் வாழும் அரண்மனையிலிருந்த அழகுமிக்கச் சிலம்பினைக் களவினால் கவர்ந்த கள்வன்" என முடிவுகட்டி கோவலன் கொலைஞரின் கரத்தால் வெட்டுண்டான்" என்று ஐயை என்பாள் வந்து கண்ணகியிடம் சொல்கிறாள். அமைதியின் வடிவமாம் கண்ணகி வெகுண்டாள், அழுதாள், அலறினாள்.

" பொங்கு எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த்
திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டெனச்
செங்கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்து, ஏங்கி மாழ்குவாள்".

மயங்கி மண்மேல் விழுந்தாள் கண்ணகி. சற்று நேரம் கழித்துத் தெளிந்து எழுந்தாள் தனக்கு நேர்ந்த கொடிய நிகழ்ச்சியை எண்ணி எண்ணி மருங்கினாள், சோர்ந்தாள், வீழ்ந்தாள், எழுந்தாள். பிச்சி போல எழுந்து ஓடினாள் கதறினாள். "காய்கதிர்ச் செல்வனே! நீ சொல்! என் கணவன் கள்வனா?" என்று சூரியனைப் பார்த்துக் கதறினாள். அப்போது ஓர் எதிர்க்குரல் கேட்டது, "கருங்கயல் மீன் போன்ற கண் படைத்த மாதே! உன் கணவன் கள்வன் அல்ல", அது அசரீரி.

ஆய்ச்சியர்களுக்கு வருத்தம்; இவளையும் இவளுடன் வந்தவனையும் நல்லவன் என்று இருந்தோமே. அவன் கள்வனா? இவள் கள்வனின் மனைவியா? ஆய்ச்சியர்களுக்கு மனத்தில் குழப்பம். தன் கணவனிடம் கொடுத்து அனுப்பிய காற்சிலம்பைத் தவிர மற்றொன்றைத் தன் கையில் ஏந்திய கையளாய் கண்ணகி அவ்வூர் பெண்களை நோக்கிச் சொல்கிறாள் "ஏ பத்தினிப் பெண்களே! படுதுயரம் நான் பட்டேன், கணவன் படுகொலைக்கு ஆளானான். அவன் கை சிலம்பு ஒன்று, இதோ என் கையில் மற்றொரு சிலம்பு, இவை என் காற்சிலம்பு." என்று கதற மதுரை வாழ் பெண்களெல்லாம் அரசன் தீங்கு செய்துவிட்டான் என்று மன்னனைத் தூற்றுவாராயினர்.

கணவன் வெட்டுண்டு கிடந்த கொலைக்களம் நோக்கி விரைந்தாள் கண்ணகி. மக்கட்கூட்டமும் அவளோடு அங்கே சென்றது. தலை வேறு உடல் வேறாகக் கிடந்த கோவலன் உடலைக் கண்டு கண்ணகி பொங்கு அழுகிறாள். " எனக்கேற்பட்ட துயருக்காக வருந்த மாட்டீர்களா? வருந்தாதே என எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டீர்களா? பொன்போன்ற என் கணவன் உடல் மண்ணில் வீழ்ந்து கிடப்பதோ? எனக்கு இப்படியொரு தீமை ஏன் வந்தது என்று சொல்ல மாட்டீர்களா? பாரோர் பழிசுமத்த, பாண்டி மன்னன் தவறு செய்ய, எனக்குற்ற தீவினை இதுதான் பார் என்று ஒரு சொல் சொல்ல மாட்டீர்களோ?" கொலைக்களத்தில் இப்படி அலறுகிறாள் கண்ணகி.

மண்ணில் கிடந்த இரு பகுதிகளான உடலை ஒன்று சேர்த்து அதனை மார்புற தழுவிக் கொண்டாள் கண்ணகி. அப்போது வெட்டுண்ட உடல் உயிர் பெற்றெழுந்தது. கண்ணகியைப் பார்த்து "நிறைமதி போலும் ஒளியினையுடைய நின்முகம் இவ்வாறு துவண்டுவிட்டதே என்று அவள் கண்ணீரை துடைத்தது. கண்ணகி தன்னிரு வளையணிந்த கரங்களால் அவன் கால்களைப் பற்றினாள். அந்தப் பத்தினியின் கரங்கள் தன் கால்களில் பட்டதால் 'கள்வன்' எனும் பழி ஒழிந்து அவளைப் பார்த்து, "மலர்போன்ற கண்ணுடைய கண்ணகி, நீ இங்கே இரு" என்று சொல்லி தேவதைகளோடும் வானகம் புகுந்தது.

அன்றிரவு பாண்டியனின் மனைவியான கோப்பெருந்தேவிக்கு ஒரு கனவு. அதில் மன்னனின் செங்கோலும் வெண்குடையும் செறிந்த நிலத்திலே குப்புற விழுகிறது. அரண்மனை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணி ஒலிக்கிறது. இரவிலே வானத்தில் வானவில் தோன்றுகிறது. பகலில் விண்மீன்கள் வானிலிருந்து உதிர்ந்து விழுகின்றன. இந்தக் கனவுக்கு என்ன விளைவு என வினவுகிறாள் அரசி.

மறுநாள் மன்னன் நெடுஞ்செழியன் அரசவையில் வீற்றிருக்க, அவைக்கு வெளியே ஒரு பெண் தலைவிரி கோலமாய் வந்து நின்று காவலர்களிடம் "வாயிற்காவலனே! அறிவு அழிந்து போய், அரச நீதி பிறழ்ந்த கொடுங்கோலனின் வாயிற் காவலனே! நவரத்னப் பரல்களைக் கொண்ட இணைச் சிலம்புகளில் ஒன்றை கையில் ஏந்தியவளாய், கணவனை இழந்தவள், வாயிலில் வந்து நிற்கிறாள் என்று உன் மன்னனிடம் போய் சொல்!" என்கிறாள். செய்வதறியாது பயத்தால் திகைத்த காவலன் ஓடிப்போய் மன்னிடம் நடந்ததை முறையிடுகிறான்.

அந்தப் பெண்ணை அவைக்குள் வர அனுமதிக்கிறான் மன்னன். காவலன் அழைத்து வந்து மன்னன் முன் நிறுத்திய அந்தப் பத்தினிப் பெண் அழுத கண்களோடு மன்னைப் பார்க்கிறாள். "நீரொழுகும் கண்ணோடு என் முன் நிற்கும் இளம் பெண்ணே! நீ யார்?" என்கிறான். விரிந்த கூந்தல், புழுதி படர்ந்த மேனி, கண்களில் கண்ணீர் இவற்றோடு வந்திருக்கும் என் நிலை புரியாத மன்னவா! சொல்கிறேன், கேள்.

"தேரா மன்னா! செப்புவது உடையேன்
என்னறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு கூட, தான் தன்
அரும் பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ்வூர்
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, ஈங்கு
என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே"

ஒரு பசுவின் கன்றின் மீது தேரை ஏற்றிய தன் மகனையே தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழன் ஆண்ட சிறப்பு மிக்க புகார் எனது ஊர். அங்கு பெருங்குடி வணிகனான மாசாத்துவானின் மகன் வாணிபம் செய்து வாழ்வதற்கு உன் ஊர் புகுந்து அங்கு என் காற்சிலம்பொன்றை விற்று பொருள் தேட முனைந்த போது, நின்பால் கொலைக்களப் பட்டானே கோவலன் அவன் மனைவி நான், என் பெயர் கண்ணகி" என்றாள்.

அதற்கு மன்னன் நெடுஞ்செழியன் சொல்கிறான், "பெண்ணே, கள்வனைக் கொல்வது கொடுங்கோல் அல்ல; அதுதான் செங்கோல் நெறி என்பதைப் புரிந்து கொள்" என்கிறான். இப்படி இருவருக்கும் விவாதம் நடைபெற, கண்ணகி சொல்கிறாள் "என் காற் சிலம்பில் இருப்பது மாணிக்கக் கற்கள்" என்று. அதற்கு மன்னன் "என் மனைவியின் காற்சிலம்பில் இருப்பது முத்துப் பரல்கள்" என்கிறான். உடனே கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பைக் கொண்டுவர ஆணையிடுகிறான். அதைப் பார்த்து, கையில் எடுத்த கண்ணகி ஆவேசம் கொண்டு அதனை அவையில் தரையில் வீசி உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கக் கற்கள் தெறித்து சிதறுகின்றன. மன்னன் உண்மையை உணர்ந்து கொண்டான். உடல் தளர்ந்தது; கைப்பிடித்த செங்கோல் நழுவியது; "பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட நானோ அரசன், நானே கள்வன், தென்புலக் காவல் என்முதல் பிழைத்தது, கெடுக என் ஆயுள்" எனச் சொல்லி கீழே விழுந்தான், அவன் உயிர் பிரிந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி கோப்பெருந்தேவி, தன் கணவனின் திருவடிகளைத் தொட்டுத் தொழுதுப் பின் தன் உயிரும் நீத்தாள்.

கண்ணகி தனக்குத் தீங்கு செய்த இம்மதுரையை அரசுடன் ஒழிப்பேன் என சபதம் பூண்டாள். "நான்மாடக் கூடல் மதுரை மாநகர் மகளிரே! மைந்தர்களே! வானத்தில் உறையும் கடவுள்களே! பெருந்தவம் பூண்ட பெரியோரே! எல்லோரும் கேளுங்கள். என் கணவனைக் கொன்ற அரசனுடைய இந்த நகரின் மீது சீற்றம் கொண்டேன், நான் குற்றமற்றவள் என்பது உண்மையானால் இந்நகர் தீப்பற்றி எரியட்டும் என்று சொல்லி தன் இடப்புற முலையைத் திருகி, மதுரை நகரை மூன்று முறை வலம் வந்து விட்டெறிந்தாள். மதுரை தீப்பிடித்து எரிந்தது. அப்போது ஒரு தெய்வக் குரல் "பத்தினியே, இந்தத் தீயில் யாரெல்லாம் பிழைப்பர்" என்றது. அதற்குக் கண்ணகி சொல்கிறாள்:

"பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்
மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்று காய்த்திய
பொற்றொடி ஏவப் புகை அழல் மண்டிற்றே
நற்றேரான் கூடல் நகர்."

மதுரை தீக்கிரையான பின் பேரியாறு எனப்படும் ஆற்றின் கரை வழியே நெடுந்தூரம் பயணம் செய்து சேரநாட்டைச் சேர்ந்து மலைமீதில் நின்றபோதுதான் தேவலோகத்தேர் வந்து அந்த பத்தினித் தெய்வத்தை ஏற்றிச் சென்றதாக வேட்டுவர்கள் சேரனுக்கு செய்தி சொன்னார்கள் என்று முடிகிறது இந்தக் காப்பியம்.






























No comments: