பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 9, 2014

ஒரு ஈஸ்வரன் கோயில்

 


Inbox
x

Srinivasan. V.


இந்த கோயிலை பற்றி படிக்க ஆசிர்வதித்த இறைவா உனக்கு எங்கள் நன்றி.........

இந்த கோயில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும்...

வீட்டு விசேஷத்திற்காக கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தேன்...விழா
முடிந்ததும், வீட்டில் வெறுமனே உட்கார்ந்து டி.வி. பார்க்க மனம் ஒப்பாமல்,
வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணனுடன் வெளியே புறப்பட்டேன்.   25 கிலோமீட்டர்
பயணித்து "களக்காட்டூர்" என்ற ஊரை வந்தடைந்ததும், வண்டியை ஓரம்
நிறுத்திவிட்டு, அந்த ஊரில் இருந்த டீ கடையில் விசாரித்தேன்.    அண்ணே.. இங்க
ஒரு ஈஸ்வரன் கோயில் இருக்காமே வழி  ?   என்றதும்.. பைக்ல வந்தீங்களா? கார்ல
வந்தீங்களா? என்று மறுமுனையில் இருந்து கேள்வி வந்தது.   பைக் தாண்ணே என்றதும்
" இப்படியே மேற்கால ஊருக்குள்ள போங்க தம்பி, ஊர தாண்டினதும் ஏரி ஒண்ணு வரும்,
அந்த ஏரிக்கரை மேலயே ஒரு ஒன்றரை கிலோமீட்டர் போனா, வழி எங்க முடியுதோ அங்க
தான் இருக்கு நீங்க தேடி வந்த கோயில்".

வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணப்பட்டேன்.

ஊர் எல்லையை தாண்டியதும் அவர் சொன்ன அந்த ஏரி கண்ணில் தென்பட்டது. அங்கு வந்த
பெரியவர் ஒருவரிடம் மீண்டும் வழிகேட்டதில் கரையை கைகாட்டினார் .  "  இதோ இது
மேல தான் போகணும்".   அப்போது தான் அந்த டீ கடைகாரர் "பைக்ல வந்தீங்களா? கார்ல
வந்தீங்களா?" என்ற கேள்வியை ஏன் எழுப்பினார் என்பது புரிந்தது.   அந்த
பாதையில் ஒன்று நடந்து செல்ல முடியும் அல்லது இரு சக்கர வாகனம் இருந்தால்
மட்டுமே செல்லமுடியும்.   கைகாட்டிய திசையில் பயணித்தேன்.    கரை மீது ஒரு
ஒற்றையடிப் பாதை -  பாதையை மறைத்தவாறு இருபக்கமும் கருவேல மரங்கள் -  வண்டி
ஓட்டிக்கொண்டே செல்லும் போது சுரீல் -  சுரீல் என கருவேல மரத்தின் முட்கள்
முகத்தை பதம் பார்த்தது.    முள்ளுக்கு பயந்து கையை குறுக்கில் வைத்து
தடுத்தவாறு வண்டியை கொஞ்சம் கவனக்குறைவாக ஓட்டினால் ஏரிக்குள் விழவேண்டியது
தான்.   அனைத்தையும் கடந்து சென்றுகொண்டே இருக்கையில் ஒரு இடத்தில பாதை
முடிவுற்றது.   இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன்,   ஹா..நான் தேடி வந்த
செல்வம் கைவிடப்பட்ட குழந்தையை போன்று தன்னந்தனியாய் ஒரு முட்புதருக்கருகில்
 !!.

இதோ வந்துவிட்டேன் என்று வண்டியை கரை மீது விட்டுவிட்டு கோயிலை நோக்கி
ஓடினேன்.   1100 வருடங்கள் கடந்த கோயில் -  விரிசல் விட்ட சுவர் -  விமானம்
இடிந்து மொட்டையான கருவறை -  கல்வெட்டுகளை மறைத்து சுவர் முழுக்க சுண்ணம்.
யாரும் வராத இடத்துக்கு இவன் யார் புதுசா ஒருத்தன் வந்திருக்கான் என்பதைப்
போன்று அங்கு ஆடு மேக்கும் பெண்மணி வந்து எட்டிப் பார்த்தார்.

கோயில் பூட்டி இருக்கே தொறக்கமாட்டாங்களா  ?

அய்யர் காலையில் மட்டும் தான் வருவாரு, வேணும்னா ஊருக்குள்ள போய் கூட்டி வாங்க
என்றார். வார்த்தைகளை காதில் போட்டுகொண்டு கோயிலை சுற்றி சுற்றி வந்தேன்.   கோயில்
சுவர்களை தடவிக்கொண்டே கல்வெட்டுகளில் அந்த பெயர் தென்படுகிறதா என்று தேடத்
துவங்கினேன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்து ஒருவர் தஞ்சை செல்ல
விழைகிறார்.   அவர் இந்த கிராமத்தின் அதிகாரி.    பெயர் " காடன் மைந்தன் " .
அவர் செல்வதற்கு காரணம் இருந்தது..... தன்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் தன்
மன்னர் பெயரால் அவர் நலத்திற்காக விளக்கொன்று ஏற்ற அவருக்கு ஆசை. மன்னரை
நேரில் சந்தித்து தன் விருப்பம் கூறி அதற்கு அனுமதி பெற விரும்பி காஞ்சிபுரம்
அருகே இருக்கும் "களக்காட்டூர்" என்ற இந்த ஊரில் இருந்து தஞ்சை பயணப்பட்டார்..

யார் அந்த அரசன்?

வேறு யார் நம் ராஜ ராஜன் தான்!.

அரண்மனையில் அரசனை சந்தித்த அந்த அதிகாரி அரசே "தங்கள் நலம் வேண்டி என்னுடைய
ஊரில் இருக்கும் கோயிலில் விளக்கேற்ற வேண்டும்" அதற்கு நீங்கள் அனுமதிக்க
வேண்டும் என்று காடன் மைந்தன் ராஜ ராஜனை பார்த்து கேட்க, அதற்கு ராஜ ராஜன்    “
ஒரு அரசனான எனக்கு பொதுமக்களாகிய உங்கள் நலம் தான் முக்கியம். எனவே, என்
ஒருவன் நலனிற்காக விளக்கேற்றுவதைக்காட்டிலும் ஊர் மக்களின் நலனுக்காகவும்,
நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்த உலக மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு
வைப்பதே சிறந்தது ”    என்று அவரை சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பி
இருக்கிறார் !!.

அன்றைக்கு ஒரு சாதாரண கிராம அதிகாரியால் தென் இந்தியா முழுவதையும் ஒரு
குடையின் கீழ் ஆட்சி செய்து வந்த பேரரசனை நேரில் சந்தித்து
பேசமுடிந்திருக்கின்றது ! அதுமட்டுமல்லாமல்,   "  தன் நலனை இரண்டாம் பட்சமாக
நினைத்து, உங்கள் நலனுக்காகவும், உங்கள் ஊர் மக்களின் நலனுக்காகவும், இந்த உலக
மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு வைக்கவும் ”    என்று தன் நாட்டு மக்களின்
நலத்தின் மீது எத்தனை அக்கறை கொண்டிருந்திருக்கிறான் ஒரு பேரரசன் ?

என்ன ஒரு பண்பு!! தன் மக்கள் மீது என்ன ஒரு மதிப்பு! பாசம்!!

தஞ்சையில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த அதிகாரி என்ன செய்தார்
தெரியுமா?   தன் மன்னன் ஆசையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாட்டு மக்களின்
நலனுக்காக தினமும் இறைவன் முன் ஒரு விளக்கு ஏற்ற வாய்பாய் கொடை
அளித்துள்ளார்!!   அதுமட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களின் மீது இத்தனை அன்பு
வைத்திருக்கும் தன் மன்னன் எந்த குறையுமின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று
இன்னொரு விளக்கு ஏற்றவும் வழி செய்துள்ளார் அந்த அதிகாரி"!!

மன்னன் மக்களை விட்டுக்கொடுக்கவில்லை, மக்கள் மன்னனை விட்டுக்கொடுக்கவில்லை!!.

சுண்ணாம்பு பூச்சுகளுக்கிடயே இருந்த அந்த கல்வெட்டை பார்த்ததும் மனம் கனத்தது.
  கூடுதலாக ராஜ ராஜனின் இயற் பெயரான "அருமொழி வர்மன்" என்ற பெயரை முதன் முதலாக
கல்வெட்டில் கண்டேன், வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த முள்
வேலிகளுக்குள் புகுந்து அந்த ஒற்றை அடிப் பாதையில் பயணித்து ஊரை அடைந்து,
விளக்கு வைக்க எண்ணெய், திரி எல்லாம் வாங்கிகொண்டு, அய்யர் வீட்டையும் தேடி
கண்டுபிடித்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தேன்.

கோயில் திறக்கப்பட்டது -  இறைவன் பரிதாபமாக இருந்தார்.

"  வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை, வான் மதியும் மீனும் கடல்
காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன்
மாறிவிட்டான்"!!

மிகவும் நல்ல அய்யர் -  வரலாற்று ஆர்வலர் -  தனக்கு முன்பிருந்தவர்கள்
கல்வெட்டில் சுண்ணாம்பு பூசிவிட்டதை நினைத்து பெரிதும் வருத்தப்பட்டார்.   "
50 ரூபா மதிப்புள்ள விளக்கு, தட்டு கூட விட்டு வைக்க மாட்டேங்குறாங்க சார்,
அதனால தான் தினமும் பூஜை புடிஞ்சதும் இது எல்லாத்தையும் கையோட கொண்டு போய்
கொண்டு வறேன்" என்றார்.....

கோயிலின் நிலை குறித்து அவர் பேசும் போது அழக்கூடாது என்பதை மனதில் வைத்து
பேசியதைப் போன்றே இருந்தது.    நீண்ட நேரமாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்,
ஒரு மணி நேரம் கடந்திருக்கும், நல்ல மனிதரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி
ஏற்ப்பட்டது. உங்கள் பெயர் என்ன சார் என்று அவரிடம் கேட்டேன்.
"ராஜேந்திரன்"என்றார் அந்த ஒலி காதில் பாய்ந்ததும் உடல் சிலிர்த்தது!.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் கோயிலுக்குள் ஓடிவந்தார்கள்.
அய்யருக்கு உதவினார்கள். இந்த கோயிலுக்கு தொடர்ந்து வர்றவங்க இவங்க மட்டும்
தான் தம்பி", என்றார்...   இந்த முறை நான் அழக்கூடாது என்று பல்லைக் கடித்துக்
கொண்டேன்.  கல்வெட்டில் "ஊருணி ஆழ்வார்" என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த
இறைவனுக்கு வாங்கிவந்த எண்ணெய்யில் விளக்கு வைக்கும்படி கொடுதேன்.

மூன்று அகல் விளக்குகள் எடுத்தார் , மூன்றும் ஏற்றப்பட்டது, ஒண்ணு கொண்டு போய்
வெளியே இருக்குற துர்கைக்கு வெச்சிட்டு வாங்க தம்பி என்று கொடுத்தார், வைத்து
விட்டு மீண்டும் உள்ளே வந்தேன்.

தீபம் காட்டப்பட்டது.

என்னை சுற்றி
மனதில் எந்த கள்ளம் கபடமும் இல்லாத இருந்த அந்த நான்கு குழந்தைகளும் "ஓம் நம
சிவாய" "ஓம் நம சிவாய" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க,   அந்த சிறிய
கோயிலில் ஒலி வெளியே செல்லமுடியாமல் அங்கேயே வட்டமிட்டு, மீண்டும் மீண்டும்
காதுக்குள் வந்து ஒலித்துகொண்டே இருந்தது.  மீதம் இருந்த இரண்டு விளக்குகள்
கருவறைக்குள் கொண்டு சென்று இறைவன் முன் வைக்கப்பட்டது.

குழந்தைகள் உச்சரித்துகொண்டே இருந்த ஓம் நம சிவாய அதிர்வலைகளுக்கு மத்தியில்
இறைவனை வேண்டிக்கொண்டேன்.  இந்த கோயிலை மிதிக்க ஆசிர்வதித்த இறைவா உனக்கு என்
நன்றி -  இந்த கோயில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் -  இங்கு
மீண்டும் இரண்டு விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது... ஒன்று " மக்கள் நலன் மீது
இத்தனை அன்பு கொண்ட பேரரசன் ராஜ ராஜன் புகழ் சந்திர சூரியன் உள்ளவரை தொடர்ந்து
நிலைத்திருக்க வேண்டும்" என்பதற்காக இருக்கட்டும்  -   மற்றொன்று அவன்
ஆசைப்படி இந்த உலக மக்கள் நலனுக்காக இருக்கட்டும்!!. என்று வேண்டி முடித்தேன்.

அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கண்ணீர் அத்தனையும் மீறி ஏனோ வெளியே
வந்துவிட்டது!.

செல்லும் வழி..
காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் 7வது கிலோமீட்டர்

மெலட்டூர் பாகவத மேளா.



தஞ்சையை அடுத்த மெலட்டூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் நரசிம்ம ஜயந்தியை ஒட்டி நடைபெறும் பாகவத மேளா மே மாதம் 10ஆம் தேதி தொடங்குகிறது.

மே 13: இரவு 8 மணி: நாட்டிய நாடக உத்சவ தொடக்கம்.
                    8.30க்கு பிரஹலாத சரித்திரமு நாட்டிய நாடகம்
மே 14: இரவு   ,,    ஹரிச்சந்திரா நாட்டிய நாடகம்
மே 16: இரவு   ,,    கிருஷ்ண ஜனன லீலா
மே 17: இரவு   ,,    உஷா பரிணயம்
மே 18: இரவு   ,,    ருக்மணி கல்யாணம்

இந்த பாகவத மேளா உருவான வரலாறு குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.                           


மெலட்டூர் பாகவத மேளா.

தமிழகத்தில் தோன்றிய பல அரிய கலைகளுடன், இங்கு ஆட்சி புரிய வந்த பிறமொழி பேசும் மக்களால் நமக்களிக்கப்பட்ட கொடை பல புதிய கலைகள். அப்படி இங்கு புகுந்த பல கலைகளில் ஹரிகதா, லாவணி, பாகவத மேளா, நடன வகைகளில் குச்சிபுடி, மோகினியாட்டம், யக்ஷகானம், ஒடிசி, கதக் போன்றவற்றையும் குறிப்பிடலாம். நம் நாட்டில் காலம் காலமாய் வளர்ந்து வந்த தெருக்கூத்து இந்த கலைகளுக்கெல்லாம் முன்னோடியாக இங்கே திகழ்ந்திருக்கிறது.



தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் அந்தந்த ஊரில் பிரபலமான மாரியம்மன் கோயில்களில் திருவிழாக்களுக்காகக் காப்பு கட்டுதல் என்றொரு நிகழ்ச்சி உண்டு. அப்படி காப்பு கட்டி திருவிழா முடிந்து கொடியிறக்கம் ஆகும் வரை அந்த ஊர்க்காரர்கள் வெளியூர்களுக்குச் செல்வதில்லை. அப்படி வெளியூர் போக வேண்டுமென்று இருப்பவர்கள் காப்பு கட்டும் தினத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு எங்காவது இருந்துவிட்டு மறுநாள் வருவார்கள். அப்படி எங்கும் போக முடியாதவர்கள் அவ்வூர் எல்லைக்கு அப்பால் ஏதாவதொரு திடலிலோ, அல்லது ஆற்றின் மணல் பரப்பிலோ தெருக்கூத்து ஏற்பாடு செய்துவிட்டு விடியவிடிய கூத்து பார்த்துவிட்டு ஊர் திரும்புவார்கள். அப்படிப்பட்ட நிகழ்ச்சி தஞ்சை ஜில்லா குத்தாலம், தேரழந்தூர் அருகிலுள்ள கோமல் எனும் கிராமத்தில் அந்த நாட்களில் நடப்பது வழக்கம். கோமல் மாரியம்மன் ஆலயத்துக்கு அண்டை அயல் கிராமங்களிலிருந்து பதினெட்டு தேர்கள் வரும். ஊரே அல்லோலப் படும். மாரியம்மனுக்குக் காப்பு கட்டும் நாளன்று அங்கு ஓடும் வீரசோழன் நதி வரண்டு கிடக்கும் மணற்பரப்பில் தெருக்கூத்து இரவு தொடங்கி மறுநாள் விடியும் வரை நடக்கும். கோமல் எல்லை அந்த ஆற்றின் கரையோடு முடிவடைந்துவிடுவதால், மணற்பரப்பு தேரழந்தூர் பகுதியாகிவிடும். அதனால் அங்கு இருந்தால் காப்புக் கட்டுக்குள் இருப்பதிலிருந்து விலக்கு கிடைக்குமென்பது எண்ணம்.


                                 நடன மணியாக வேடமிட்ட ஆண். இவர் ஒரு எஞ்ஜினீயர்.


தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதமான "என் சரித்திரம்" நூலில் இந்தத் தெருக்கூத்து பற்றி விவரிக்கிறார். இரவு படுக்கைக்குப் போகும்போது தெருக்கூத்து நடக்கும் சத்தம் காதில் விழுமாம். அப்போது அங்கு பாடுபவன் "டிங்கினானே....." என்ற சொல்லை தொடர்ந்து பல மணி நேரம் ஸ்வரம் மாற்றி மாற்றி பாடிக் கொண்டிருப்பானாம். இவர் ஒரு தூக்கம் போட்டு எழுந்தால் அந்தப் பாட்டு சற்று விரிவடைந்து "புடிங்கினானே....." என்று பாடிக் கொண்டிருப்பானாம். விடியும்போது அந்த பாடல் வரி ஒரு முழு வடிவைப் பெறுமாம். எப்படி? "மரத்தைப் புடிங்கினானே...." "பீமசேன மகாராஜா மரத்தைப் புடிங்கினானே....." என்று. இப்படி ஒரு பாட்டை நாட்கணக்கில்கூட பாட வசதியுள்ளது தெருக்கூத்து.



தெருக்கூத்தில் கதா பாத்திரங்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பாங்கே சிறப்பாக இருக்கும். முதலில் விதூஷகன் எனும் கோமாளி வந்து அன்று என்ன கூத்து என்பதை ஆடிப் பாடி விளக்குவான். ஜனங்கள் அவனை உள்ளே போகச்சொல்லி கூச்சலிடுவார்கள். பின்னர் கதாபாத்திரங்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் தங்களை அறிமுகம் செய்து கொண்டபின் கதை ஆரம்பமாகும். புராணத்தில் வரும் ஒரு சிறிய கதை எடுத்துக் கொள்ளப்பட்டு நடிக்கப்படும். ஏராளமான ஒப்பனையுடன் பாத்திரங்கள் அபஸ்வரத்தில் பாடி ஆடி நடிப்பது கண்கொள்ளா காட்சி. போதாதற்கு ஒரு ஆண் பெண் வேடம் போட்டுக்கொண்டு முடிந்தவரை பெண்மை சாயலைக் கொண்டுவர முயற்சித்தாலும், அவனுடைய கரகரத்த ஆண் குரல் காட்டிக் கொடுத்துவிடும். இப்படிப்பட்ட தெருக்கூத்துதான் நமது நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் முன்னோடியாக இருந்திருக்கிறது.


நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் கூட்டத்தின் ஒரு பகுதி


இப்படி தெருக்கூத்தில் ஊறியிருந்த தமிழகத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த சமயம் நாயக்க மன்னர்கள் தென் தமிழ்நாடு முழுவதையும் ஆங்காங்கே தங்கள் ராஜாங்கத்தை ஸ்தாபித்து அரசாட்சி செய்யத் தொடங்கினார்கள். அப்படி தஞ்சையை ஆண்டு நாயக்க மன்னர்கள் சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நால்வர் இங்கு ஆட்சி புரிந்திருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் சேவப்ப நாயக்கர் ஆட்சியின் கடைசி காலகட்டம் தொடங்கி ரகுநாத நாயக்கர் காலம் வரையிலான பொற்காலத்தில் இங்கு கோவிந்த தீக்ஷதர் என்பவர் அமைச்சராக இருந்தார். இவர் நான்கு வேதங்களையும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் படித்துப் பாண்டித்யம் பெற்றவர். இவரது காலத்தில் இவர் செய்த அரிய பணிகள் இன்றும் போற்றிப் பாராட்டப் படுகிறது.

காவிரி நதியில் பல ஊர்களில் படித்துறை அமைத்தது, வேத பாடசாலைகள் அமைத்தது, கலைகளுக்கு முதன்மைத் தகுதி அளித்து கலைஞர்களைப் போற்றியது. கல்விச்சாலைகளை அமைத்தது, நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகப்படுத்தியது, ஆலயங்களைப் புனரமைத்தும் புதிய ஆலயங்களை எழுப்பியும் இவர் செய்த தொண்டு போற்றத் தக்கது. திருவரங்கம் ஆலயத்துக்குப் பல கோபுரங்களையும் பிரகாரங்களையும் அமைத்த அச்சுதப்ப நாயக்கருக்கு ஊக்கசக்தியாக விளங்கியவர் இந்த கோவிந்த தீக்ஷதர். இவர்கள் காலத்தில் ஆந்திர தேசத்திலிருந்து இங்கு வந்ததுதான் பாகவத மேளா எனும் அரிய கலை. இது நரசிம்ஹ ஜெயந்தி எனும் விழாவையொட்டி நாட்டிய நாடகமாக நடிப்பார்கள். ஆண்களே பெண் வேடம் அணிந்து முழுக்க முழுக்க தெலுங்கில் பேசியும் பாடியும் நடிப்பது பாகவத மேளா. இந்த அரிய கலையைப் பற்றிய சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.




நாயக்க மன்னர்கள் தஞ்சைக்குக் கொணர்ந்த இந்த அரிய கலை இப்போதும் தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திட்டை எனும் ஊருக்குத் திரும்பும் சாலையிலிருந்து சுமார் ஐந்து கல் தொலைவில் அமைந்துள்ள மெலட்டூர் எனும் ஊரில் உயிர்ப்போடு நடைபெற்று வருகிறது. மெலட்டூர் எனும் வளமான கிராமத்துக்கு திட்டையைத் தாண்டி செல்ல வேண்டும் மெலட்டூரில் வரதராஜ சுவாமி எனும் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி இவ்விழா நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு, குறிப்பாக வைணவர்களுக்கு நரசிம்ஹ ஜெயந்தி சிறப்பான பண்டிகை. அந்த நரசிம்ஹ ஜெயந்தியன்று மெலட்டூர் கிராமமே களைகட்டிவிடும். காரணம் அன்றிரவுதான் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் "பிரஹலாத சரித்திரமு" எனும் தெலுங்கு மொழியிலான இசை நாடகம் நடத்தப்பெறும். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நான்காவது அவதாரம் நரசிம்ஹாவதாரம். உடல் மனித வடிவிலும் தலை சிம்ஹ வடிவிலும் இருக்கும். கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்வை சித்தரிக்கும் ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து மேலும் சில பகுதிகள் நாடகங்களாக நடத்துவார்கள்.

இந்த விசேஷத்துக்காக இவ்வூரிலிருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பணி நிமித்தமாகக் குடிபெயர்ந்த பலரும் நரசிம்ஹ ஜெயந்தி சமயத்தில் ஊர் திரும்பிவிடுவார்கள். அப்படி ஊர் திரும்புவர்களில் பலர் இந்த பாகவத மேளா நாடகங்களில் வேடமிட்டு நடிப்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு முன்பு இவர்களுடைய அப்பா, பாட்டனார் என்று வழிவழியாக நடிப்பவர்கள் அந்தந்த பாத்திரங்களைத் தாங்களே ஏற்று தொடர்ந்து இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏதோ பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அல்லது தங்கள் திறமையைக் காட்டுவதற்கு என்றுமட்டுமில்லாமல் ஆத்மார்த்தமாக ஈடுபாட்டோடு பக்தி சிரத்தையாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக விரதமிருந்து தன்னை அந்தந்த பாத்திரங்களுக்கு அருகதையாக்கிக் கொள்ளும் அந்த ஈடுபாடு பாராட்டுப் போற்றத்தக்கதாக இருக்கும். 


இரண்யனை வதம் செய்த தூணிலிருந்து வெளிப்படும் நரசிம்மமூர்த்தி


ஊர் வந்து சேர்ந்த விநாடி முதல் தங்கள் வேடத்துக்கான வசனம் பாடல்களை ஒத்திகைகளைப் பலமுறை பார்த்து எந்த தவறும் ஏற்பட்டுவிடாதபடி கவனத்தோடு மேற்கொள்வார்கள். இந்த அற்புதக் கலையை பல தலைமுறைகளுக்கு முன்பாக இங்கு கொண்டு வந்து இன்று வரை நடைபெறும்படியான பலமான அஸ்திவாரத்தை அமைத்துத் தந்த பிரம்மஸ்ரீ வேங்கட்டராம சாஸ்திரி என்பவரை இவர்கள் இன்றளவும் மனத்தில் நிறுத்தி போற்றி வழிபட்டு வருகிறார்கள். இவருடைய படைப்புகள் பல கதைகள் இருந்தாலும் இந்த நரசிம்ஹ ஜெயந்தியை யொட்டி நடைபெறும் பிரஹலாத சரித்திரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது. நாடக பாத்திரங்கள் அந்த பாத்திரமாகவே மாறிவிட முடியுமா. உணர்வால் அப்படி ஆகிவிடுகிறார்கள் நரசிம்ஹம் இரணியனை மடியில் வைத்துக் கிழிக்கும் கட்டத்தில். அந்த நேரத்தில் ஏற்படும் உக்கிரத்தைத் தணிக்க அடடா, நிர்வாகிகள் என்ன பாடு படுகிறார்கள். நரசிம்ஹமாக வேடமிட்டவர் நிஜத்தில் நரசிம்ஹமாக ஆகிவிடும் காட்சி அற்புதம். காண வேண்டிய காட்சி.

இந்த மெலட்டூரோ, அல்லது இங்கு நடக்கும் பாகவத மேளாவோ, தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் விளம்பரப்படுத்தப்பட்டு அதற்காக இங்கு ஆர்வலர்களை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் நாட்டியக் கலையில் ஆர்வமுடைய கலைஞர்கள் பலரும் இங்கு நடைபெறும் பாகவதமேளாவை கவனிக்கிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இந்நிகழ்ச்சி பெற்று வரும் முக்கியத்துவம் மக்களால் உணரப்படுகிறது. இந்தக் கலை எத்தனை காலத்துக்கு முந்தையது, யார் இந்தக் கலையை வளர்த்தது, அல்லது இங்கு அறிமுகம் செய்தது போன்ற ஆராச்சியில் யாரும் ஈடுபடுவதில்லை. இங்கு மக்களோடு ஒருங்கிணைந்து இந்த மண்ணின் கலையாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருப்பது பாகவத மேளா.

14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் விரிவு படுத்தப்பட்டு தென்னாடு முழுவதும் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் வந்தபோது பழைய சோழ சாம்ராஜ்யத்தின் பகுதிகளும் அவர்களது ஆளுமையின் கீழ் வந்தது. விஜயநகர சாம்ராஜ்யம் ஹிந்து சாம்ராஜ்யம் என்று புகழ் பெற்றதற்கிணங்க இந்து கோயில்கள் புத்துணர்வு பெற்றன. இடிபாடுகள் சரிசெய்யப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டன. அழிந்தவை பலவாக இருந்தால் ஒன்றையாவது சரி செய்து மீண்டும் தலையெடுக்கச் செய்தனர் நாயக்க மன்னர்கள். அப்படி பல சைவ வைணவ ஆலய இடிபாடுகளிலிருந்து மீட்டெடுப்பு செய்யப்பட்ட பல கோயில்களில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள செந்தலையும் ஒன்று என்று ஆய்வறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதுகிறார்.

இப்படி புகழ் பரப்பி உருவான விஜயநகர சாம்ராஜ்யத்தை தக்ஷிண சுல்தான்கள் விட்டு வைப்பார்களா? அவர்கள் மீது போர் நடத்தி 1565இல் தலைக்கோட்டை யுத்தத்தில் வென்று விஜயநகர சாம்ராஜ்யத்தின் அழிவினைத் தொடங்கி வைத்தார்கள். விஜயநகரத்தின் ஆட்சியில் பெருமைக்குரியவர்களாக விளங்கிய பல பண்டிதர்கள், கவிஞர்கள், வேத விற்பன்னர்கள், கலைஞர்கள் என்று பலரும் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் ராஜ்யத்தில் வந்து குடியேறினார்கள். இங்கு அப்போது (1560 முதல் 1600) வரையிலான நாற்பதாண்டு கால ஆட்சியில் அப்போதைய தஞ்சாவூர் நாயக்க மன்னரான அச்சுதப்ப நாயக்கர் அப்படி ஓடிவந்த கலைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து இங்கு குடி அமர்த்தினார். எந்தவொரு சாம்ராஜ்யத்தின் தலைநகர் ஒரு ஆற்றங்கரையில்தான் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சாவூர் காவிரி ஆற்றிலிருந்து பல கல் தொலைவில் இருந்ததால் இங்கு வந்தேறிய கலைஞர்கள் தஞ்சையைச் சுற்றி ஆற்றங்கரை உள்ள ஊர்களில் குடியேறி வசிக்கத் தொடங்கினார்கள்.

1125 முதல் 1150 வரை சோழ நாட்டை ஆண்ட விக்கிரம சோழன் என்பான் பூமியில் புதையுண்டிருந்த ஒரு பெரிய லிங்கத்தை தோண்டியெடுத்து அங்கு ஒரு ஆலயத்தை நிறுவி அந்த இடத்துக்கு உன்னதபுரி என்றும், அங்கு குடிகொண்டி ஈசருக்கு 'உன்னதபுரீஸ்வரர்' என்றும் பெயர் சூட்டியிருந்தான். ஆக 12ஆம் நூற்றாண்டில் உருவாகியிருந்த இந்த உன்னதபுரியில்தான் இப்போது குடிபெயர்ந்து வந்த கலைஞர்களை நாயக்க மன்னரின் அமைச்சராக விளங்கிய கோவிந்த தீக்ஷிதரின் ஆலோசனையின் பேரில் குடியேறினார்கள். அப்படி இங்கு குடியேறிய குடும்பங்கள் 510 என்கிறது ஆதாரங்கள். இங்கு குடி அமர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வீடு, அந்த வீட்டுக்குத் தனியாக ஒரு கிணறு, விவசாயம் செய்ய நிலம், கன்றோடு கூடிய ஒரு கறவை பசு ஆகியவை கொடுக்கப்பட்டன. இவர்கள் தவிர கைத்தொழில்களில் திறமை படைத்தவர்கள் பலரும் இவர்களைப் போலவே இங்கு குடியமர்த்தப்பட்டனர்.


அரசர் அச்சுதப்ப நாயக்கர் தன்னுடைய அமைச்சர் கோவிந்த தீக்ஷிதர் சொல்லை வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படுபவர். நாயக்க மன்னருடைய பல பெருமைகளுக்கு இந்த அமைச்சரே காரணமாக இருந்தார் என்றால் மிகையல்ல. இப்படி தெலுங்கு நாட்டிலிருந்து வந்த பிராமணர்களை அவ்வூரில் இருந்த உன்னதபுரீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி குடியமர்த்தி அக்ரகாரத்தை உருவாக்கினார். கோயிலை மேலும் விரிவுபடுத்திக் கட்டி அதற்கு குடமுழுக்கையும் செய்வித்தார். ஆலயத்துக்கு முன்புறமாகஒரு திருக்குளத்தையும் தென்மேற்கில் ஒரு குளத்தையும் அமைத்துக் கொடுத்தார். கோயிலுக்கு முன்புள்ள குளம் "சிவகங்கை தீர்த்தம்" எனவும், மற்றது அமைச்சர் தீக்ஷிதர் பெயரால் "ஐயன் குளம்" என்றும் வழங்கப்படுகிறது. இங்கு குடியேறிய பிராமணர்கள் அனைவரும் தெலுங்கு மொழி பேசுபவர்கள் என்பது சொல்லாமலேயே விளங்கும் அல்லவா? 

இப்படி நாயக்க மன்னருடைய ஆதரவும், அமைச்சர் கோவிந்த தீக்ஷிதரின் ஒத்துழைப்போடும் குடியேறியவர்கள் உன்னதபுரத்தை கலைகளில் சிறந்து விளங்கும் உன்னதமான புரமாக ஆக்கிவிட்டனர். நாயக்க மன்னர்கள் வைணவர்கள் எனும் முறையில் இங்கு வைணவத்தோடு அவர்கள் சுமந்து வந்த கலைகளும் வைணவ புராணங்களைச் சொல்பவைகளாகவும், இசை, நாட்டியம் ஆகிய கலைகளையும் இங்கு வளம்பெற செய்து வந்தார்கள். ஆக, இவர்களால் தெலுங்கு பிரதேசத்துக் கலைகளை இவர்கள் இங்கு கொண்டு வந்து கண்ணும் கருத்துமாக வளர்க்கத் தொடங்கினார்கள்.

இப்படி உன்னதபுரியாக இருந்த சோழ நாட்டு ஊர் அச்சுதப்ப நாயக்கரின் கருணையால் பற்பல கலைகளும் தழைத்தோங்கிய காரணத்தால் இவ்வூரை அச்சுதபுரம், அச்சுதபுரி, அச்சுதாப்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கத் தொடங்கினர். அச்சுதப்ப நாயக்கர் காலத்தில் இவ்வூர் பெயர் மாற்றம் பெற்றது. இந்த அச்சுதபுரியே இன்றைய மெலட்டூர் கிராமம்.

இங்கு குடியேறியவர்கள் மூச்சிலும் பேச்சிலும் இசையும் நடனமும் இருந்த காரணத்தால் இவர்களில் பலர் இசைக் கலைஞர்களாகவும், பாடல்களை இயற்றியும் பாடவும் கூடிய வாக்யேயக் காரர்களாய், நடன மணிகளாய் விளங்கினர். இப்படி அச்சுதபுரி எனும் மெலட்டூர் கலைகட்கு புகலிடமாக இருப்பதறிந்து தெலுங்கு பேசும் நாட்டிலிருந்து குடிபெயர்ந்து வேறு சில இடங்களில் குறிப்பாக பரவாக்கரை, மாணாங்கோரை, பள்ளியகரம் ஆகிய ஊர்களிலிருந்தும் கலைஞர்கள் இவ்வூருக்குக் குடிபெயர்ந்தார்கள். இப்படி நாளுக்கு நாள் கலைகளில் ஆர்வமுடையோர் வந்து குவியவும் இவ்வூர் ஜனத்தொகை மிக்கதோர் கலைநகர் ஆகியது.

இப்படி இருந்து வரும் போது, அச்சுதப்பருக்குப் பிறகு ரகுநாத நாயக்கர், அதன்பின் அவர் மகன் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் காலத்தில் இங்கு குடியேறிய வம்சங்கள் மேலும் பெருகித் தழைத்தன. தஞ்சையின் கடைசி நாயக்க அரசர் விஜயராகவ நாயக்கரும் அவர் மகன் மன்னாருவும் போர்க்களத்தில் மதுரை சொக்கநாத நாயக்கரால் விஜயராகவரின் முதுமைப் பருவத்தில் கொல்லப்பட்டு விட்டதால், மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையில் மலர்ந்தது. ஏகோஜி எனும் சத்ரபதி சிவாஜியின் சகோதரர்தான் தஞ்சையின் முதல் மராத்திய மன்னர். பின்னர் அவர்கள் வம்சம் தஞ்சையை ஆண்டு கொண்டு வந்த நேரத்தில் 18ஆம் நூற்றாண்டில் தஞ்சையை துளஜேந்திர ராஜா (1728 முதல் 1735வரை) ஆண்டு கொண்டிருந்த நேரத்தில் காஞ்சிபுரம் பக்கத்திலிருந்து ஒரு பெரும் கூட்டம் குடிபெயர்ந்து மெலட்டூர் வந்து குடியேறினர். இவர்கள் மன்னர் துளஜாவின் ஆதரவைப் பெற்றிருந்த காரணத்தால், இங்கு ஊரின் வடமேற்கில் வரதராஜ பெருமாளுக்கு ஒரு கோயிலை எழுப்பினர். அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாள் சிலையை அவர்கல் காஞ்சியிலிருந்து கொண்டு வந்திருந்தனர். அப்போது காஞ்சி மீது படையெடுத்து வந்த முஸ்லீம் படையெடுப்பாளர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தெய்வ மூர்த்தம் இங்கு கொண்டு வரப்பட்டதாக வரலாறு உண்டு.

இப்படி ஊர் வளர்ச்சியடைய அடைய வசதிகளும் தேவைப்பட்டன. இதன் பொருட்டு ஊரின் மேற்கி ஒன்றும், வட மேற்கில் ஒன்றுமாக இரண்டு குளங்கள் வெட்டப்பட்டன. இவை நாராயண தீர்த்தம் என்றும் மற்றொன்று கருட தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன. துளஜாவுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்த பிரதாபசிம்ஹ மகாராஜா காலத்தில் ஒரு யோக நரசிம்ஹர் பிம்பம் நாராயண தீர்த்தக் கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் காலத்தில்தான் விருத்த காவேரி என வழங்கப்பட்ட வெட்டாற்றங்கரையில் ஒரு நந்தவனமும் ஒரு படித்துறையும் அமைக்கப்பட்டது.

மெலட்டூரில் பரதம் காசினாதையா எனும் சிறந்த கலைஞர் தோன்றினார். இங்கு நாயக்க மராத்திய மன்னர்களான விஜயராகவ நாயக்கர், ஷாஜி மகாராஜா ஆகியோர் இயற்றிய நாட்டிய நாடகங்களையொட்டி நிருத்திய நாடகங்கள் உருவக்கப்பட்டன. கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவர் இந்தக் காலத்தில் மிகச் சிறந்த கலைஞராகப் போற்றப்பட்டிருக்கிறார். இந்த கோபாலகிருஷ்ண சாஸ்திரி என்பவரின் புதல்வர்தான் வெங்கட்டராம சாஸ்திரி என்பார். இவர்தான் பாகவத மேளா நாடகங்களை ஆக்கித் தந்தவர். இவரது காலம் 1743 முதல் 1809).

இவருடைய தந்தையிடமிருந்து வெங்கட்டராம சாஸ்திரி வேத உபநிஷதங்களைப் பயின்றார். புராணங்களைக் கற்றார். இவருடைய குரு மெலட்டூர் லக்ஷ்மணையா என்பவர். இவர் வீரபத்ரையா என்பவரின் சீடராவார். இவர் காவ்யம், நாடகம் அலங்காரம் ஆகிய துறைகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். தெலுங்கு, சம்ஸ்கிருதம், இசை, நாட்டியம், நாடகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய வெங்கட்டராம சாஸ்திரி மெலட்டூர் பாகவத மேளாவுக்கு சிறந்த அறிமுகத்தைக் கொடுத்தார்.

பனிரெண்டு புதிய நாட்டிய நாடகங்கள் உருவக்கப்பட்டன. இங்கு இயற்றப்பட்ட அனைத்து நாடகங்களையும் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள வரதராஜ பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. இவர் தன்னுடைய நாட்டிய நாடகங்களில் நடிக்க அவ்வூர் அக்ரகாரத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, வரதராஜ பெருமாள் சந்நிதியில் அரங்கேற்றி வந்தார். அப்படி நாடகங்கள் நடக்கும் தினங்களில் உத்சவ விக்கிரகம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும். இவருடைய நாட்டிய மேளா குழுமத்தில் ஆண்களுக்கு மட்டுமே இடம் உண்டு. பெண்கள் பாத்திரங்களையும் ஆண்களே ஏற்று நடிப்பார்கள். இந்த முறை இந்நாள் மட்டும் கண்டிப்பாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு ஏன் "பாகவத மேளா" என்று பெயர் வந்தது? தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆம், அதற்கு விடை: "இதனை நடத்துபவர்கள், நடிப்பவர்கள், பாடுபவர்கள் அனைவருமே பாகவதர்கள், இங்கு நடிக்கப்படும் கதைகள் அனைத்தும் ஸ்ரீமத் பாகவத புராணத்திலிருந்து எடுக்கப்பட்டவை, எனவே இதற்கு பாகவத மேளா என்று பெயர் ஏற்பட்டது." இந்த பாகவத மேளாவில் நடிக்கப்படும் அத்தனை பாகவத கதைகளிலும் நரசிம்ஹ ஜெயந்தி அன்று நடிக்கப்படும் "பிரஹலாத சரித்திரமு" கதைதான் மிக உயர்வானது, பலராலும் பார்த்துப் பாராட்டப்படுவது, உணர்ச்சி பூர்வமானது, நரசிம்ஹ ஜெயந்தியன்று நடிக்கப்படுவதாலும், இதில் நரசிம்ஹரின் உக்ரம் யதார்த்தமாக இருப்பதாலும் இதுவே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வெங்கட்டராம சாஸ்திரி தன்னுடைய நாடகங்களைத் தஞ்சை மராத்திய மன்னர் அவைகளில் நடத்திக் காட்டியிருக்கிறார். இவரது நாட்டிய நாடகங்களைப் பார்த்து ரசித்த பல்லாயிரக் கணக்கானவர்களில் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளும் ஒருவர். இந்தக் கலை மெலட்டூரிலிருந்து மெல்ல நகர்ந்து அருகிலுள்ள ஊர்களுக்கும் செல்லலாயிற்று. அப்படிச் சென்ற ஊர்களில் ஊத்துக்காடு, சூலமங்கலம், தேப்பெருமாநல்லூர் ஆகியவைகளாகும்.

தஞ்சையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில் உள்ள சாலியமங்கலத்திலும் 'பாகவத மேளா' நடத்தப்படுகின்றது. இங்கு மெலட்டூருக்கும் முந்தைய காலகட்டத்திலேயே இந்தக் கலை வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை பஞ்சநத பாகவதர் என்பார் அறிமுகம் செய்ததாகச் சொல்வர். ஆக இந்த பாகவத மேளா, முழுவதும் தஞ்சை ஜில்லாவின் ஒரு சில கிராமங்களில் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு காலகட்டத்தில் தொய்வு ஏற்பட்ட நிலையில் இதனை மீண்டும் தூக்கி நிறுத்திய பெருமை பரதம் நடேச ஐயர் என்பவரைச் சாரும். இவர் மெலட்டூரில் 1865 1935 காலகட்டத்தில் வாழ்ந்தவர். இன்று இந்த பாகவத மேளாவைப் பற்றிய செய்தி கடல் கடந்த நாடுகளுக்கும் சென்றதன் விளைவாக அங்கிருந்தெல்லாம் பலர் தங்களுடைய ஆராய்ச்சிப் படிப்புக்காக இங்கு வந்து பாக்வத மேளா பற்றி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி முனைவர் பட்டம் பெறுகிறார்கள். அப்படியொரு பெண்மணி ஜப்பான் டோக்யோ நகரிலிருந்து இங்கு வந்து குடியிருந்து இந்தக் கலை பற்றிய அரிய செய்திகளைக் கொடுத்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் பெயர் மேடம் தகாதா. இவர் போன்ற பல அயல் நாட்டாரையும் கவர்ந்திழுக்கக் கூடிய கலையாக இந்த அரிய கலை விளங்குகிறது. மன்னர்கள் காலம் போய் இப்போது மக்கள் நாயகம் மலர்ந்துவிட்டதால் இனி இந்தக் கலையை ஆதரிக்க வேண்டிய கடமை மக்களுக்குத்தான் இருக்கிறது. வாழ்க பாகவத மேளா. வாழ்க கலைகள். 

Next Who?

List-of-All-Prime-Ministers-of-India-Infographic

Who will be our Next Prime Minister?


Out of these Six, whom do you prefer? Who stands the bright chance of getting the top seat?


Thursday, May 8, 2014

"சின்ன மேளம்"

     பிரகதீஸ்வரர் ஆலயத்தில் "சின்ன மேளம்" நாட்டிய விழா

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் சித்திரைத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானமும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் கலை மற்றும் கலாசார அகாதமி சார்பில் ஏப்ரல் 25 முதல் மே 12 வரை தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் "சின்ன மேளம்" நாட்டிய விழா நடைபெற்று வருகிறது. இந்து ஆலயங்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகளில் நடன நிகழ்ச்சிகள் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் முக்கிய நிகச்சியாகும். பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் வளர்ச்சி, மாற்றம், நிறைவு அத்தனையும் ஈசன் நடராஜப் பெருமானின் அதிசய விளையாட்டு என்பதால் அந்த நடராஜன் ஆடிய ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக ஆலயங்களில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நமது ஆலயங்களில் நடனங்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே நடைபெற்று வந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலும் ஆலயங்களில் காணப்படும் சிற்பங்களிலும் நடனக் கலையின் தாக்கம் அதிகம் தென்படுவதைக் காண்கிறோம். தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் விமானத்தின் உட்புறம் மேல் அடுக்கில் உள்ள சுற்றுப் பிரகாரத்தில் 108 நடனக் கரணங்களில் ஒருசில பூர்த்தியாகாத சிற்பங்கள் தவிர ஏனைய காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகக் காணக் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஆப்பரா என வழங்கும் முறையில் நம் ஆலயங்களில் ஈசனின் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை நாட்டிய நாடகங்களாக ஆக்கி நடனமாடி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாட்டிய முறையில் கடைபிடிக்கப்படும் முத்திரைகளே கரணங்கள் எனும் பெயரில் கல்லிலும் வடித்திருக்கிறார்கள்.

பக்தி இயக்கம் தமிழகத்தில் பரவிக்கிடந்த காலத்தில் 6ஆம் நூற்றாண்டில் ஆலய வழிபாட்டில் இசையும் நாட்டியமும் முக்கிய அங்கம் வகிக்கத் தொடங்கின. அப்போதைய மன்னராட்சியில் மன்னனை மக்கள் வணங்கி வழிபடுவதற்கும் மேலாக இறைவன் திருவுருவங்களையும் அன்போடும் பாசத்தோடும் வணங்கி மகிழ மக்கள் இசையையும் நாட்டியத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். கோயிலிகளில் இறைவனைத் திருப்பள்ளி எழுச்சி பாடி எழுப்புவதும், நீராட்டுதல், அழகுபடுத்துதல், ஊஞ்சல் ஆடுதல், வீதிவலம் வருதல், இரவில் பள்ளியறை செல்லுதல் என இப்படி பல நிகழ்ச்சிகளுக்கும் ஆடலும் பாடலும் பயன்பட்டன. இந்த இசை, நடனப் பணிகளைக் கவனித்துக் கொள்ள தேவதாசி எனும் பெண்டிர் இருந்தனர். தஞ்சை பெருவுடையார் ஆலயத்துக்கு ராஜராஜன் காலத்தில் 400க்கும் அதிகமான தளிச்சேரி பெண்டிர் என வழங்கப்பட்ட ஆடல்மகளிர் இருந்தனர். இந்த நடன மங்கையருக்குப் பயிற்றுவிப்போர் நட்டுவனார் என வழங்கப்பட்டனர். ஆக, இந்த அரிய கலைக்கு நடனம் ஆடுவோர், நடனம் பயிற்றுவிப்போர், பக்க வாத்தியங்கள் வாசிப்போர், பாடல்கள் புனைவோர், நடன சித்திரம் வரைவோர், கல்லில் சிலை வடிப்போர் ஆகியோர் தங்கள் வாழ்வை அற்பனித்து வந்தனர். 

ஆலயங்களில் உற்சவ மூர்த்தியரை ஆலயத்துள்ளும், வெளியிலும், வீதி உலாவிற்கும் எடுத்துச் செல்லும் காலங்களில் இந்த நடனமணிகள் சதிர் என வழங்கும் ஆடலை ஆடுவர். அதற்குப் பக்க வாத்தியங்களாக, அமைந்த கருவிகளே சின்னமேளம் என வழங்கப் பெற்றது. தஞ்சை நால்வர் என வழங்கப் பெற்ற புகழ்பெற்ற நாட்டிய, இசை ஆசான்களே இந்தக் கலை வளர அரும்பாடுபட்டவர்கள். அந்த நால்வர் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு எனும் பெயருடைய தஞ்சையின் மாமணிகள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த நடனக் கலை சங்க காலத்திலும், அதன் பிறகும், பக்தி இயக்கம் வளர்ந்த காலத்திலும், சோழர்கள் காலத்திலும், விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும், நாயக்கர், மராத்திய மன்னர்கள் ஆட்சியிலும் மறுமலர்ச்சி பெற்று வளர்ந்த கலையாகும். ஆலயங்களிலிருந்து சுவாமி புறப்பாடு ஆகி தெருக்களின் வழியாக வீதிவலம் வரும்போது ஆடல்கலை வல்லவர்கள் தெருக்களில் பக்க வாத்தியங்களோடு நடனமாடுவது வழக்கம். இரவில் ஆலயத்தில் சுவாமி விக்கிரகங்களை பள்ளியறைக்குக் கொண்டு சேர்க்கும் வரை ஆடியபின் வீடுசெல்வது என்பது வழக்கம். அப்படி இவர்கள் நடனம் ஆடும்போது பக்க வாத்தியங்களாகப் பயன்படுத்தப்பட்ட பல வாத்தியங்களில் தம்பூரா, முகவீணை, ஒத்து, தாளம், மத்தளம், புள்ளாங்குழல் ஆகியவை குறிப்பிடத்தக்கவைகளாகும். இவை அத்தனையும் சேர்ந்ததே 'சின்ன மேளம்".

தஞ்சை பெரிய கோயிலில் நெடுநாட்கள் ஆலய வழிபாட்டில் சின்ன மேளம் நிகழ்ச்சிகள் நடந்து வந்திருக்கின்றன. 1855இல் மராத்திய மன்னர் இரண்டாம் சிவாஜி காலமான பிறகு ஆங்கிலேயர்கள் கோயிலையும் நாட்டையும் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர். அப்போதுவரை வழக்கத்தில் இருந்துவந்த சின்ன மேளம் நிகழ்ச்சி பின்னர் நடக்காமல் போனது.

தஞ்சை நால்வர் சிஷ்ய பரம்பரையினர் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா காலத்தில் இந்த 'சின்ன மேளம்' நாட்டிய நிகழ்ச்சியை நடத்த முற்பட்டனர். அதற்காக ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சின்ன மேளம் நிகழ்ச்சி மீண்டும் நடக்கத் தொடங்கியிருக்கிறது. தஞ்சை அரண்மனை தேவஸ்தான அறங்காவலரும், தஞ்சை மூத்த இளவரசருமான பாபாஜிராஜா பான்ஸ்லே பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தஞ்சை கலை பண்பாட்டு அமைப்பின் உதவியோடு இந்த சின்ன மேளத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வரும் பொறுப்பு தஞ்சை பரதநாட்டிய ஆசிரியரும், சிறந்த நட்டுவனாருமான கலைமாமணி பி.ஹேரம்பநாதன் அவர்களிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சின்ன மேளம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று தமிழகம் தவிர, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களிலிருந்தும் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

இந்த ஆண்டு புது டெல்லி சங்கீத நாடக அகாதமியின் தலைவர் திருமதி லீலா சாம்சன் அவர்கள் கடந்த 25ஆம் தேதி துவக்கி வைத்து, அவரே முதல் நிகழ்ச்சியில் நடனமாடினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரு நிகழ்ச்சிகள் என்று மே 12 வரை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன. அந்த ஆண்டு மொத்தமாக 31 கலைக் குழுக்கள் வந்து பங்கேற்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.