பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, April 27, 2011

எத்தனை ஆசைகள்?


எத்தனை ஆசைகள்?

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் மனதில் தோன்றும் உணர்வு ஆசை. குழந்தை முதல் முதியவர் வரை எதிலாவது அல்லது எவற்றிலாவது ஆசை கொள்ளாதவர்கள் இருக்கிறார்களா? சின்னஞ் சிறு குழந்தைக்கு பசி வந்த போது பால் பருக ஆசை. வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு விளையாட்டுப் பொருட்களின் மீது ஆசை. கட்டிளங்காளைகளுக்கு காதல் கொண்ட பெண்களின் மீது ஆசை. வளர்ந்த மக்களுக்கோ, சொத்து, சுகம், பணம், வசதிகள் என்று அனைத்தின் மீதும் ஆசை. முதியவர்களுக்கோ இறைவன் திருவடிகளை அடையவேண்டுமே என்ற ஆசை. வாழ்க்கை என்பது சாஸ்வதம் என்று எண்ணிக் கொண்டு எப்போதும் எல்லாமும் தனக்கே வேண்டுமென்று சிலர் எண்ணுவதும் உண்டு.

மனித மனத்தின் எல்லையற்ற பெருவெளியில் உண்டாகும் வளமான எண்ணங்களே ஆசை. இந்த ஆசைகள் நிறைவேறினால் மனம் திருப்தியுறுகிறது. ஆசை நிராசையாக ஆகும்போது வாழ்க்கையில் வெறுப்பே விளைகிறது. "ஆசையே துன்பங்களுக்குக் காரணம்" என்று கெளதம புத்தர் சொல்லியருளியதாக படிக்கிறோம். ஆனால் அதை மனதில் வாங்கிக் கொள்ளவில்லையே. ஆசையினால் தூண்டப்பட்டுதான் மனிதனின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தாயுமானவ சுவாமிகள் மனதை இலவம் பஞ்சாகவும் ஆசையைப் பெருங் காற்றாகவும் ஒப்பிடுகிறார்.

"ஆசை எனும் பெருங்காற்றுடு இலவம் பஞ்சு
எனவும் மனது அலையும் காலம்"

அப்படி மனம் ஆசையால் அலைக்கழிக்கப்படுவதால் ஏற்படும் துன்பத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

"மோசம் வரும்; இதனாலே கற்றதும்
கேட்டதும் தூர்ந்து முக்திக்கு ஆன
நேசமும் நல்வாசமும் போய்ப், புலனாய் இல்
கொடுமை பற்றி நிற்பர், அந்தோ
தேசு பழுத்து அருள் பழுத்த பராபரமே!
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?"

மனம் தன்வசமின்றி ஆசையின் பின் சென்று அலைக்கழிக்கப்பட்டால் மோசம் வந்து சேரும், நாம் கற்றதும், கேட்டதும் வீணாகிவிடும். முக்தி பெறுவதற்கான வழிகளும், புண்ணியங்களும் நம்மை விட்டுப் போய்விடும் என்கிறார் தாயுமானவர்.

இன்னொரு பாட்டில் அவர் கூறும் செய்திகளையும் பார்க்கலாம்.

"ஆசைக்கு ஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி ஆளினும் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்; நெடுநாள் இருந்த பேரும்
நிலையாகவே இன்னும் காயகற்பம் தேடி நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர் உண்பதும், உறங்குவதும் ஆக முடியும்
உள்ளதே போதும் நான் நான் எனக் குளறியே ஒன்றைவிட்டு ஒன்று பற்றிப்
பாசக் கடலுக்குளே வீழாமல் மனது அற்ற பரிசுத்த நிலையை அருள்வாய்;
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே!"

இந்த பாடலுக்கு விளக்கமும் தேவையா என்ன? உலகம் முழுவதையும் கட்டி ஆண்டாலும் திருப்தி ஏற்படுவதில்லை. அந்த கடலையும் ஆள வேண்டுமென்கிற ஆசை வருமாம். குபேரன் போல செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும் தாமிரத்தைத் தங்கமாக்கும் ரசவாத வித்தை தெரிந்தால் நன்றாக இருக்குமே என்பராம். நூறு வயது வாழ்ந்த பின்னும் சாவா வரம் பெற காயகற்பம் தேடி அலைவராம். இப்படி இருப்பதை விட்டு இல்லாததற்குத் தேடி அலைதல் வேண்டாம். உள்ளது போதும் என்று பரிசுத்த நிலையை இறைவனிடம் மன்றாடிப் பெறுவோம் என்கிறார் தாயுமானவர். ஆசைக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இந்தப் பாடல் சரியான எடுத்துக்காட்டு.

திருமூலர் இன்னும் ஒரு படி மேலே போகிறார். அவர் சொல்லுகிறார்

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே!"

இதைவிட ஆசையினால் விளைகின்ற துன்பத்தை வேறு யாரும் விவரித்திட முடியுமா சொல்லுங்கள். ஆசை அதிகரிக்க அதிகரிக்கத் துன்பங்கள்தான் பெருகுமாம். ஆசையை விட விட ஆனந்தம் பெருகுமாம். இறைவனிடத்தில் கூட உங்கள் ஆசை ஒரு அளவோடுதான் இருக்க வேண்டுமாம். ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் என்பதிலிருந்து அதிலும் ஒரு கட்டுப்பாடோடு இருப்பதே நன்று என்பது திருமூலர் தரும் அறிவுரை.

மனிதனுக்கு ஏற்படும் ஆசைகளை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று வகைப்படுத்திருக்கிறார்கள். இந்த ஆசைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்று சின்ன வயதிலேயே நமக்குப் பாடத்தில் கதைகள் மூலம் சொல்லி வைத்தார்கள். மைதாசுக்கு பேராசை வந்து தான் தொட்டதெல்லாம் பொன்னாக மாற வேண்டுமென்று வரம் கேட்டான். வரமும் கிடைத்தது. வயிற்றுப் பசிக்கு
உண்ண கையால் தொட்ட உணவும் பொன்னாகிப் போனபின் எதை உண்பான், எப்படி உயிர் வாழ்வான்? இந்தக் கதைகளெல்லாம் எதற்காகப் பாடங்களில் ஆரம்ப கட்டத்திலேயே போதிக்கப் படுகின்றன?

பண ஆசை, சொத்து ஆசை இவைகள் ஏற்பட்டுவிட்டால் போதும். அவன் ஆசைக்கு எல்லை என்பதே இருக்காது. வழியில் எந்தக் கார், பங்களா அல்லது எஸ்டேட் எதைப் பார்த்தாலும் அது தனக்குச் சொந்தமாக இருக்கக்கூடாதா என்று எண்ணத் தொடங்கி விடுகிறான். தேவைக்கு மேலாகவும், நியாயமற்ற வழிகளிலும் பொருளீட்டி வைத்துக் கொண்டு தான தர்மங்கள் செய்யாமலும், அதர்ம வழிகளில் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பவர்கள் ஆசைக்கு ஒரு முடிவே கிடையாது. இவர்களால் இந்த சமூகம் நாசமடைகிறது. அளவுக்கதிகமான வசதிகளும் செல்வமும், ஆசையும் நிரம்பிக் கிடப்பவர்கள் நல்வழிச் செல்வோராக இல்லையென்றால் சுற்றியிருப்பவர்களுக்கு நரகம்தான்.

ஆசைப்பட்டு, தவறான வழியில் செல்வம் சேர்ப்பவனால்தான் சமூகத்துக்குக் கேடு. நல்வழியில் செல்வம் சேர்ந்திருந்தால், நற்குடிப் பிறந்திருந்தால், மனதில் இரக்கமும், தயா சிந்தனையும் இருப்பவர்களுக்கு ஆசைகள் இருக்கும். அவர்கள் ஆசை மக்கள் இன்புற்றிருக்க வேண்டும். தேவைகள் உள்ளவர்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டுமென்கிற நல்ல ஆசைகள் இருக்கும். அதைத்தான் திருவள்ளுவரும்

"ஊருணி நீர் நிறைந் தற்றே; உலகவாம்
பேரறிவாளன் திரு" என்று கூறுகிறார்.

உலகம் நன்றாக இருக்க விரும்புவன் ஆசைப் பட்டால் மற்றவர்கள் நலம் பெற்று வாழ்வார்கள். தீய வழியில் பேராசை கொண்டு ஈட்டிய செல்வம் படைத்தோரால் இந்த உலக மக்களுக்குத் தீங்குகள்தான் அதிகம். ஆகையால் ஆசை என்பது அளவோடு இருத்தல் அவசியம். ஆசைப் படுவது நல்ல நோக்கத்துக்காக இருத்தல் அவசியம். ஆசை சரிதான், ஆனால் பேராசை பெரு ஆபத்து என்பதை உணர்தலே நன்று.


எது ஆனந்தம்?

மனிதன் ஒவ்வொரு நாளும் பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாகிறான். குடும்ப வாழ்க்கையில் மனம் லயித்திருக்கும்போது அவன் மனத்தில் சாந்தம் அல்லது ஆனந்தம் நிலவுகிறது. வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது பூசல் எழுமானால் அப்போது அவன் கோபத்தை அடைகிறான். சில விஷயங்களைப் பார்த்தோ கேட்டோ வியப்பினை அடைகிறான். தனக்கு ஆபத்து வருகிறது என்றால் பயம் ஏற்படுகிறது. சில செயல்கள் அவனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றன. துன்பப் படுவோரைக் காணும் போது கருணை பிறக்கிறது. காதல் மனைவி அன்போடு செயல்படுவாளானால் மனத்தில் ஆசை அல்லது காமம் உண்டாகிறது. அவ்வப்போது பிறர் வியக்கும் வண்ணம் வீரதீர சாகசங்களைச் செய்யவும் அவன் முயற்சி செய்கிறான்.

இந்த உணர்ச்சிகளைத்தான் நம் பெரியவர்கள் நவரஸம் என்று குறிப்பிடுகிறார்கள். அவை சாந்தம், அத்புதம், ரெளத்ரம், பயாநகம், பீபத்ஸம், ஹாஸ்யம், கருணை, சிருங்காரம், வீரம். இவைகளே நவரஸங்களாகும். இந்த நவரஸத்துக்குள் ஏதாவது ஒரு உணர்வுக்கு மனிதன் ஆட்பட்டே தீர வேண்டும். இவற்றில் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சி என்றால் என்ன அது எப்போது ஏற்படுகிறது, அந்த ஆனந்தம் எந்தெந்த செயல்களில் நமக்குக் கிடைக்கிறது என்பதைச் சற்று சிந்திக்கலாம்.

மனிதன் எவ்வெப்போது ஆனந்த உணர்வினை எய்துகிறான். அவன் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தாலே அவன் ஆனந்தமாக இருக்க முடிகிறது. நினைத்த காரியம் முடிதல் போன்றவற்றால் ஏற்படும் உணர்வினை திருப்தி, மனநிறைவு என்கிறோம். அதுவும் ஆனந்தத்தின் பிரதிபலிப்புதான். நல்ல விருந்து உண்ட பிறகு விருந்தளித்தவர் உணவு அருந்தியவரிடம் சாப்பாடு எப்படி இருந்தது என்று கேட்கிறார். அவர் சொல்லுகிறார் "பிரம்மானந்தமாக" இருந்தது என்று.

ஆனந்தம் எப்படியெல்லாம் மனிதனுக்குக் கிட்டுகிறது. முதலில் உடலுக்குக் கிடைக்கும் ஆனந்தம். நல்ல வெயிலில் வெகு தூரம் நடந்து ஒரு நிழலுக்கு வந்து உட்கார்ந்து சிறிது குளிர்ந்த நீரைப் பருகும்போது, ஆனந்த மடைகிறான். ஆலயத்துக்குச் சென்று தரிசிப்பதில் சிலருக்கு அளவிடற்கரிய ஆனந்தம் கிடைக்கிறது. நல்ல உணவுகளை உண்ணும்போது அளவற்ற ஆனந்தத்தை அடைகிறான். நல்ல கவிதைகளைப் படிப்பதில் சிலருக்கு ஆனந்தம். நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆனந்தம். நல்ல இசையை ரசிப்பதில் ஆனந்தம்.. ஆனால் அந்த ஆனந்தம் எத்தனை நேரம் நீடிக்கும். இவை எல்லாவற்றிலும் நிறைவான, நித்தியமான ஆனந்தம் எங்கு கிடைக்கிறது? வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்படியான ஆனந்தம் எப்போது கிடைக்கும்.

தன் மனத்துக்கும், பிறருக்கும், நாம் செய்கின்ற காரியத்தினால் ஏற்படும் ஆனந்தம் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கக்கூடிய ஆனந்தம். இல்லையா?

அவசியத் தேவை ஏற்படும்போது "காலத்தால் செய்த உதவியாக" எந்த கைமாறும் கருதாது நாம் பிறருக்குச் செய்யும் உதவியில்தான் உண்மையான ஆனந்தம் கிடைக்கிறது. கவிதை படிப்பதில், திரைப்படம் பார்ப்பதில், நல்ல உணவு உண்பதில் உள்ள ஆனந்தம் தற்காலிகமானது. ஆனால் எந்தக் கைமாறும் கருதாமல் ஒருவனுக்குச் செய்கிற உதவியில்தான் நிரந்தரமான ஆனந்தம் உண்டாகிறது. அப்படி நாம் பிறருக்குச் செய்த உதவியை உடனே மறந்துவிட வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் தரித்திர நாராயணர்களுக்கு செய்யும் சேவையே பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்யும் சேவை என்று. அதில் பொதிந்து கிடக்கும் உண்மையை நாம் உணர்ந்தால் போதும். வாழ்க்கையில் எதில் ஆனந்தம் ஏற்படுகிறது என்கிற வினாவுக்கு விடை கிடைத்துவிடும்.

ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு ஆற்றில் சலசலத்து ஓடும் நீரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அந்த இடத்தில் ஓடிய நீர் அதே இடத்தில் அடுத்த விநாடியில் இல்லை. உலகம் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலை வந்தால் மாலையும் இரவும் வந்து விடுகிறது. ஆனால் மனிதனுக்குக் கிடைக்கும் ஆனந்தம் மட்டும் எப்போதும் நிலைத்திருக்குமா? இந்த கேள்விக்கு விடை தெரிய வேண்டுமானால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நொடிப் பொழுதில் மாறிக் கொண்டே இருக்கும் இவ்வுலக வாழ்வில் நாம் காணும் பொருள்களில் ஆனந்தத்தை, இன்பத்தைக் காண முயற்சி செய்ய வேண்டாம். நிரந்தரமான ஆனந்தம் தருவது எது? நமது பெரியோர்கள், மகான்கள் அதற்கான விடையை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இருப்பவர் எவரோ, உலகத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும் சாட்சியாக இருக்கும் சக்தி எதுவோ, முனிவர்களும், பெரியோர்களும் அந்த சக்தியை என்ன பெயர் கொண்டு அழைத்தார்களோ அந்த இறையருள் தான் நிரந்தரமான ஆனந்தத்தைக் கொடுக்கும் சக்தி. இறைவனுக்கு உருவமென்று எதுவும் இல்லை. அனைத்து ஜீவராசிகளிடமும் இறைவன் நீக்கமறை நிறைந்திருக்கிறான். "அஹம் பிரம்மாஸ்மி" என்று நம் பெரியவர்கள் சொன்னதையும் நாம் நினைவு கூருதல் அவசியம். அடிபட்டு தெருவில் அனாதையாகக் கிடந்து தவிக்கும் ஒரு பிராணியை நாம் எடுத்துச் சென்று சிகிச்சை செய்து அது குணமாவதைக் காண்பதில் அடையும் ஆனந்தம் வேறு எதில் இருக்கிறது. ஒரு காட்டு யானை
தான் ஈன்ற குட்டியை அனாதையாக விட்டுவிட்டுக் காட்டுக்குள் சென்றுவிட்டது என்ற செய்தியைச் சமீபத்தில் படித்தோம் அந்த குட்டி யானையைக் கொண்டு வந்து அதற்கு பால் ஊட்டி குழந்தையைப் போல் வளர்த்து வரும் ஒருவருக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை வேறு எதற்கும் ஈடாகச் சொல்ல முடியுமா?

இறைவனுக்குச் செய்யும் சேவை மட்டுமே மனிதனுக்கு நிலையான மன ஆனந்தத்தைத் தருவது. சுகத்தைத் தருவது. இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நிரம்பியிருக்கிறான். அந்த இறைவனுக்கு உருவம் இல்லை. நாம் காணும் எந்தப் பொருளிலும் இருப்பவன் இறைவனே என்ற எண்ணத்தோடு பிறருக்கு உதவி செய்வதில்தான் உண்மையான ஆனந்தம் இருக்கிறது. இந்தக் கருத்தையே மகாகவி பாரதியும் தனது "பாரதி அறுபத்தாறு" எனும் பகுதியில் சிறப்பாகக் குறிப்பிடுகிறான்.

"உயிர்களெலாம் தெய்வ மன்றிப் பிற வொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்!
பயிலும் உயிர் வகை மட்டுமன்றி இங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலும் இங்கு பலப் பலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்" என்கிறான்.

"ஊருக்குழைத்திடல் யோகம்" "பிறர் துன்பத்தைக் காணப் பொறாதவன் புண்ணியமூர்த்தி" என்று பாரதி சொன்ன செயல்களெல்லாம் உண்மையான ஆனந்தத்தைக் கொடுக்க வல்லது. இந்த ஞானம் வந்தால் நமக்கு வேறென்ன வேண்டும்?


எளிமையில் நிறைவு.

மனிதரில் பலர் எளிமையாகவும், சிலர் ஆடம்பரத்தோடும் வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். வசதிகள் இல்லாதவன் எளிமையாக இருப்பதில் ஒன்றும் வியப்பு இல்லை. எல்லா வசதிகளும் இருந்தும் எவனொருவன் எளிமையாக வாழ்ந்து காட்டுகிறானோ அவன் தான் பாராட்டுக்குரியவனாகிறான். மனதில் அடக்கம், ஆணவமின்மை, பிறர் துன்பம் கண்டு இரங்கும் குணம் இவைகள் இருந்தால் எளிமை தானாகவே வந்து சேரும். பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காக வெளியில் எளிமை போல காட்டிக் கொண்டு, மனத்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஆடம்பரத்தைக் கடைப்பிடித்தால் அது எளிமையாக ஆகாது. இந்தப் பின்னணியில்தான் எளிமையில் நிறைவு குறித்து இப்போது பார்க்கப் போகிறோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் இந்தியா ஹவுஸ் எனும் இடம், இந்திய தேசபக்தர்களின் தங்கும் விடுதியாக இருந்து வந்தது. ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் வீர சவார்க்கர், வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் தங்கியிருந்தனர். பண்டிகை காலங்களில் இங்குள்ள இந்தியர்கள் ஒன்றுகூடி அந்தப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒரு முறை விஜயதசமியைக் கொண்டாட முடிவு செய்தனர். அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்த மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி லண்டனுக்கு வந்திருந்தார். இந்தியா ஹவுசில் இருந்த தேசபக்தர்கள் தங்களது விஜயதசமி விழாவுக்கு காந்தியை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்தனர். காந்தியும் சம்மதித்தார்.

விழா நாளும் வந்தது. விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன. அன்று மாலை சிறப்பு விருந்தினர் காந்திக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விருந்துக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவதற்காக சாவர்க்காரும், வ.வெ.சு.ஐயரும் வெளியில் சென்றிருந்தனர். விருந்து தயாரிப்பில் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனும் வேறு சில இளைஞர்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் ஒரு இந்தியர் அங்கு வந்து சேர்ந்தார். அன்றைய விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் யாரோ ஒரு இந்தியர் அவர் என்று நினைத்து டி.எஸ்.எஸ்.ராஜன் அவரை வரவேற்றார். அப்போது அவர் நானும் உங்களோடு ஏதாவது வேலையைச் செய்யட்டுமா என்று கேட்டார். அதற்கு டாக்டர் ராஜன், சரி நீங்கள் இந்தக் காய்கறிகளை நறுக்கிக் கொடுங்கள் என்றார். வந்த புதியவரும் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டு நறுக்கத் தொடங்கினார்.

அப்போது வெளியில் சென்றிருந்த சவார்க்கரும், ஐயரும் வந்து சேர்ந்தார்கள். வந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கும் புதியவரைப் பார்த்து அதிர்ந்து போனார்கள். அடடா! மிஸ்டர் காந்தி, நீங்கள் ஏன் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்றனர். அப்போதுதான் புதிதாக அங்கு வந்தவர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்பது டாக்டர் ராஜனுக்குப் புரிந்தது. சிறப்பு விருந்தினரிடம் வேலை வாங்கிவிட்டோமே என்று அவர் வெட்கினார். ஆனால் காந்தி சொன்னார், இதில் என்ன தாழ்வு இருக்கிறது. நாம் எல்லோரும் ஒன்றுகூடி விருந்து தயாரித்து விழா கொண்டாடுகிறோம், அதில் நான் என் பங்குக்கு சின்ன வேலையைச் செய்கிறேன். செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு கிடையாது என்றார். இத்தனை பெரிய மனிதரின் எளிமை அங்கிருந்தோரை வியப்படைய வைத்தது. அதனால்தான் அவர் பின்னாளில் மகாத்மா என்று பெருமை பெற்று விளங்கினார்.

எளிமை என்பது பிறப்பின்போது உடன் பிறந்த குணம் என்பதோடு, ஒருவன் வளர்ந்து வரும் சூழலையொட்டியும் அமைகிறது. 1962இல் கேரள மாநிலத்தில் முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டது. முதலமைச்சர் பதவியை ஏற்றவர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அவர்கள். பதவி ஏற்றவுடன் அவர் தனது காரியாலயம் செல்வதற்கு மிதிவண்டி யொன்றில்தான் செல்லத் தொடங்கினார். இது பிறர் பார்த்து வியந்து பாராட்ட வேண்டுமென்பதற்காக அல்ல. இயற்கையிலேயே அவரிடமிருந்த எளிமை அவரை அப்படி மிதிவண்டியில் செல்லத் தூண்டியது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் விடுவார்களா. Protocol என்று சொல்லி அவரை காரில் வரும்படி செய்து விட்டனர்.

பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில் அலுவல் காரணமாகப் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்பாக காவல் துறையின் கார் சங்கொலி எழுப்பிக் கொண்டு சென்றது. அப்போது தலைவர் காமராஜ் அவர்கள் அது என்ன சத்தம் என்று கேட்டார். அருகிலிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அது முதலமைச்சர் பாதுகாப்புக்காக செல்லும் கார் எழுப்பும் சங்கு ஒலி என்றார். இது என்னண்ணேன், யாருக்கு முன்னால சங்கு ஊதிட்டு போவாங்க? எனக்கு எதுக்கு சங்கு. முதலிலே அவங்களைப் போகச் சொல்லுங்க என்றார். இல்லைங்க அது உங்க பாதுகாப்புக்கு காவல்துறை செய்ய வேண்டியது என்றார். அதெல்லாம் எனக்கு வேண்டாம்ணேன். என் மக்கள் கிட்டேயிருந்து எனக்கு பாதுகாப்பா, என்று அந்த அதிகப்படியான பாதுகாப்பு ஆடம்பரங்களுக்கு காமராஜ் முற்றுப் புள்ளி வைத்தார்.

1952இல் ராஜாஜி மந்திரிசபை அமைந்தது. அப்போது ராஜாஜி சில எதிர்கட்சிக்காரர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு மந்திரிசபை அமைத்தார். அதன் காரணமாக சில எதிர் கட்சிகள் அந்த மந்திரிசபையில் இருந்த அமைச்சர்கள் செல்லுமிடங்களில் கருப்புக் கொடி காட்டினார்கள். அப்படி ஒரு முறை எம்.பக்தவத்சலம் சென்ற இடத்தில் அவ்வூர் பிரமுகர்கள் சிலர் அவருக்குக் கருப்புக் கொடி காட்ட அவர் பேசவிருந்த டவுன்ஹால் முன்பாக நின்று கொண்டிருந்தனர். அங்கு வந்த பக்தவத்சலம் அவர்கள் யார் எதற்காக கருப்புக் கொடி ஏந்தி நிற்கிறார்கள் என்றார். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்கள் என்றனர் அதிகாரிகள்.
அதற்கு அமைச்சர் பக்தவத்சலம் அவர்களை ஹாலுக்கு உள்ளே வரச் சொல்லுங்கள், அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கட்டும் என்றார். அமைச்சர் போய் உட்கார்ந்ததும் கருப்புக் கொடி காட்டியவர்கள் வரிசையில் உள்ளே வந்ததும் அவர்கள் கையில் இருந்த கருப்புத் துணியை தான் வாங்கிக் கொண்டு மேஜை மீது வைத்தபடி அவர்களை வணங்கி நின்றார் பக்தவத்சலம். இறுதியாக அவர்களது தலைவர் ஒருவர் தங்கள் எதிர்ப்பைச் சொன்னார். அமைதியாக அவர் பேசுவதை கேட்டுக் கொண்டார். எதிர்ப்பாளர்களும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை. போலீஸ் தடியடி செய்து கலைக்கவுமில்லை. அமைச்சரோ, தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கருத்தை அமைதியாகக் கேட்டுக் கொண்டு அவர்களை மரியாதையோடு வழியனுப்பி வைத்த எளிமை, இனி எந்தக் காலத்திலும் நடக்குமா தெரியவில்லை.

ஒரு ஊரில் சிலர் ஒன்று சேர்ந்து கட்டிய சினிமா தியேட்டர் ஒன்று, பங்குதாரர்களிடையே ஏற்பட்ட பூசல் காரணமாக உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி ஏலத்திற்கு வந்தது. அந்த தியேட்டர் வளாகத்திலேயே நீதிமன்ற அதிகாரிகள் ஏலம் விட ஏற்பாடு செய்தனர். ஏலம் நடந்து கொண்டிருந்தது. ஏலம் கேட்டவர்களில் ஒருவர் முழங்கால் வரை வேட்டி கட்டிக் கொண்டு, மேலே சட்டை எதுவும் அணியாமல் ஒரு துண்டால் உடலை மூடிக் கொண்டு ஏலம் கேட்டுக் கொண்டிருந்தார். அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்து அவர் யார், அவரால் பணம் கொடுத்து தியேட்டரை வாங்கும் சக்தி இருக்கிறதா என்று ரகசியமாக விசாரித்தனர். அப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்தி ஆச்சரியமூட்டக் கூடியதாக இருந்தது. அந்த ஊரில் இருந்த மிகப் பெரிய
மண்டியின் அதிபர் அவர். மிளகாய், துவரம்பருப்பு, மஞ்சள் இவைகளின் மொத்த வியாபாரி அவர். மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது தெரிய வந்தது. இறுதியில் அவர்தான் அந்த தியேட்டரை ஏலம் எடுத்து நடத்தினார்.

எளிமை அடக்கத்தின் அடையாளம். எளிமை என்பது மனம் பக்குவமடைந்ததற்கு எடுத்துக் காட்டு. ஆடம்பரம் ஆளை கவிழ்க்கும் தன்மை கொண்டது. எளிமை நிச்சயமாகப் பெருமை அளிக்கும். வீண் ஆடம்பரம் முகத்துக்கு நேராக இல்லா விட்டாலும், பின்னால் கேலி செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்து விடும். எனவே எளிமையே உயர்வு. எளிமையைக் கைக் கொண்டவர் பெருமைக்குரியவர்.








No comments: