ஏழிசை வேந்தர் எம்.கே.தியாகராஜ பாகவதர்
(எம்.கே.தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு இது. அவருடைய விழா சில இடங்களில் கொண்டாடப்பட்டது, என்றாலும் அவருடைய புகழுக்கு அது போதுமானதல்ல. அவருடைய இசை இன்றும் அந்தக்கால பெரியவர்களுடைய மனங்களைக் கவர்ந்தது.)
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டு மக்களைத் தனது இன்னிசையால் வசியம் செய்து வைத்திருந்த ஒருவர்; அன்றைய திரையுலக சூப்பர் ஸ்டாராக சுமார் பத்து ஆண்டுகள் வலம் வந்த நடிகர்; தன்னுடைய இனிய குரலால் பாடி பெண்களை மயங்கடித்த அழகர் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி. அவர்தான் எம்.கே.டி. என்று நாடு அறிந்த மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்.
"மன்மத லீலையை வென்றார் உண்டோ?" எனும் அந்த இனிய குரலைச் சற்று நினைத்துப் பாருங்கள். அவர் பாட அதற்கு டி.ஆர்.ராஜகுமாரி அபினயம் பிடிக்க இன்றைய பெரிசுகள், அன்றைய வாலிபர்கள் மயங்கித்தான் போய்க் கிடந்தனர். "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி", "சிவபெருமான் கிருபை வேண்டும்", "அப்பனை பாடும் வாயால்" இப்படி எத்தனையோ பாடல்கள். அன்று பாகவதர் நடித்தப் படங்களைப் பார்த்து விட்டு இந்தப் பாடல்களை முணுமுணுக்காத வாயே இல்லையெனலாம்.
இப்படிப்பட்ட பல பெருமைகளுக்கெல்லாம் உரியவரான எம்.கே.தியாகராஜ பாகவருடைய நூற்றாண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி நிறைவடைகிறது. பாகவதர் பிறந்தது 3-1-1909 அன்று. பாகவதர் பொற்கொல்லர் வம்சத்தில் வந்தவர். வசதி குறைந்த மிகச் சாதாரண குடும்பம் பாகவதருடைய குடும்பம். பிள்ளை படிக்கட்டுமென்று பெற்றோர் இவரை பள்ளிக்கு அனுப்பினர்; ஆனால் அவருக்கு இசையில் இருந்த ஆர்வம் படிப்பில் இல்லை. இவர் பாடுவதைக் கேட்டவர்கள் திகைத்துப் போய் அவருடைய தந்தையாரிடம் சொல்லி, பையனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுங்கள், நல்ல பாடகனாக வருவான் என்றனர்.
பிள்ளைக்குப் படிப்புதான் ஏறவில்லையே, நகை செய்யும் பட்டறையிலாவது பணிபுரியட்டுமென்று கொண்டு போய் விட்டார். அங்கு ஏராளமான கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. இது என்ன நமது நகை செய்யும் வேலைக்கு இத்தனை கிராக்கியா என்று வியந்து போய்ப் பார்த்தால் அங்கு பையன் பாட, கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது. சரி இவன் படிப்புக்கும் லாயக்கில்லை, குலத்தொழிலுக்கும் லாயக்கில்லை பாட்டுதான் இவனுக்கு என்று அன்றை நாளில் ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டு, அமெச்சூர் நாடகங்களை நடத்திக் கொண்டிருந்த எஃப்.ஜி.நடேச அய்யரிடம் கொண்டு போய் விட்டார். அப்போதெல்லாம் நாடகங்கள் நடிப்பதற்கென்று பல பாய்ஸ் நாடகக் குழுக்கள் இருந்தன. பல பெரிய பெரிய நடிகர்களெல்லாம் அந்த பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர்கள்தான்.
அந்த காலகட்டத்தில்தான் நகரத்தார் குடும்பத்தில் வந்த லட்சுமணன் செட்டியார் என்பவரும் ஆர்.எம்.அழகப்பச் செட்டியார் அவர்களும் பின்னாளில் புகழ்பெற்று விளங்கிய சினிமாப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் அவர்களும் "பவளக்கொடி" என்ற நாடகத்தைப் பார்க்கப் போனார்கள். அந்த நாடகத்தில் அர்ஜுனனாக வேடமிட்டு நடித்த சிறுவனின் பாட்டு இவர்களுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. நாட்டுக்கோட்டையார்களுக்கு இந்தப் பையனை வைத்து ஒரு சினிமாப் படம் எடுத்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. விளைவு பாகவதர் நடித்து வெளியான படம் அவரது முதல் படமான "பவளக்கொடி". இது 1934இல் வெளிவந்தது. அப்போது தொடங்கியதுதான் பாகவதரின் திரையுலகப் பயணம். சுமார் பத்து வருடங்கள் ஒரே ஏறுமுகம் தான்.
பாகவதரின் இரண்டாவது படம் 1935இல் வெளிவந்தது "நவீன சாரங்கதாரா" என்ற பெயரில். இதையும் இயக்கியவர் கே.சுப்பிரமணியம் தான். 1936இல் "சத்தியசீலன்" என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்து பாகவதர் வெளியிட்டார். 1937இல் "சிந்தாமணி" என்ற படம் வெளியானது. தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்த படம் "சிந்தாமணி". இந்தப் படத்தின் "மாயப் பிரபஞ்சத்தில்" பாடலும் "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி" எனும் பாடலும் வெகுவாகப் பிரபலமடைந்து அனைவரும் பாடத் தொடங்கிவிட்டனர். எங்கேயாவது ஒரு திரைப்படத்தைத் தொடர்ந்து பல மாதங்கள் ஓட்டி அதில் கிடைத்த லாபத்தைக் கொண்டு மற்றொரு சினிமா அரங்கம் கட்டியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், அப்படிப்பட்ட நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. ராயல் டாக்கீசில் ஓடி வெற்றிபெற்ற "சிந்தாமணி" படத்தால் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் "சிந்தாமணி" என்றொரு சினிமா அரங்கம் கட்டப்பட்டது வியப்பிற்குரியது.
அதே ஆண்டில் பிரபலமான தமிழ்நாட்டுக் காதல் கதையான அம்பிகாபதி - அமராவதி கதை படமாக்கப்பட்டது. இந்தப் படத்தை இயக்கியவர் ஒரு அமெரிக்கர். தமிழ் தெரியாத ஒருவர் தமிழ்ப் புலவன் ஒருவனுடைய காதல் கதையைப் படமாக்கினார். இந்தப் படமும் ஓகோவென்று ஓடி வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் அம்பிகாபதியாக நடித்த பாகவதரும், அமராவதியாக நடித்த சந்தானலட்சுமியும் மிக நெருக்கமாக காதல் காட்சிகளில் நடித்ததை அந்தக்கால ஆசாரசீலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். பாவம்! அவர்கள் இன்றைய படங்களைப் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்வார்களோ?
முதன்முதலில் பாகவதர் 1934இல் நடிக்கத் தொடங்கிய "பவளக்கொடி”யைத் தொடர்ந்து அவர் மொத்தம் 14 படங்களில் நடித்திருக்கிறார். 1934இல் பவளக்கொடி, 1935இல் சாரங்கதரா,1936இல் சத்தியசீலன், 1937இல் அம்பிகாபதி, சிந்தாமணி, 1939இல் திருநீலகண்டர், 1941இல் அசோக்குமார், 1944இல் ஹரிதாஸ் கடைசியாக அமரகவி, ராஜமுக்தி, சியாமளா, சிவகாமி, சிவகவி ஆகிய படங்கலிலும் நடித்தார். இவற்றில் "ஹரிதாஸ்" படம் சென்னை பிராட்வே சினிமா தியேட்டரில் தொடர்ந்து மூன்று தீபாவளியைத் தாண்டி 114 வாரங்கள் ஓடியது, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் ஒரு வெள்ளைப் புரவியில் பாகவதர் "வாழ்விலோர் திருநாள்" என்று பாடிக்கொண்டு வரும்போது, வழியில் தண்ணீர்க்குடத்துடன் வருகின்ற பெண்கள் குடம் கீழே விழுவதுகூட தெரியாமல் இவரைப் பார்த்துக் காதல்வசப்படும் காட்சிகள் திரையுலகத்துக்கு அப்போது ஒரு புதுமை. அது திரைப்படங்களில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்கூட பாகவதருக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.
பாகவதரின் நாடக காலங்களிலேயே இசையமைப்பாளர் ஜி.ராமநாத ஐயர் இவரோடு நெருக்கமான நட்பு பூண்டிருந்தார். பாபநாசம் சிவன் எனும் பாட்டு வாத்தியார் சென்னையில் குடியேறியிருந்த காலத்தில் மைலாப்பூரில் மார்கழி பஜனைகளைப் பாடிக்கொண்டு மாடவீதிகளில் வலம் வருவது வழக்கம். அவரது பாடல்கள் இயற்றும் திறமை, இசை ஞானம் இவைகளைக் கண்டு பாகவதர் தன்னுடைய படங்களுக்குப் முதலில் பாடல்கள் இயற்றி இசை அமைக்கவும், பின்னர் ஜி.ராமநாத ஐயர், கே.வி.மகாதேவான், சி.என்.பாண்டுரங்கன் ஆகியோர் இசை அமைப்பில் பாடல்களை எழுதவும் ஏற்பாடு செய்து கொண்டார். பாகவதர் பாட்டு என்றால் அதனை எழுதியவர் பாபநாசம் சிவன் என்று ஆயிற்று. அந்த காலகட்டத்தில் இந்த கூட்டணி வெளிக்கொண்டு வந்த பாடல்கள் அனைத்தும் அமரத்துவம் வாய்ந்ததாக இருந்தன.
இயற்கையிலேயே பாகவதருக்கு அமைந்திருந்த இசை ஞானத்தை சாஸ்திரிய வழியில் உயர்த்திக் கொள்வதற்காக அப்போது மிகப் பிரபலமான கர்நாடக இசை மேதைகளாக திருச்சியில் இருந்த ஆலத்தூர் சகோதரர்களிடம் இவர் சங்கீதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இன்னொரு சுவையான செய்தி, பிரபல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் அவர்கள் பாடல்களைப் பாட குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் பாகவதர். அவரைப் போலவே அப்படியே பாடி தன்னை வெளி உலகத்துக்கு அறிமுகம் செய்து கொண்டார் டி.எம்.எஸ்.
டி.எம்.செளந்தரராஜனின் ஆரம்ப காலப் பாடல்கள் அப்படியே பாகவதர் பாடுவது போலவே இருக்கும். அவரே ஒரு பேட்டியில் சொல்லும்போது வீட்டில் உட்கார்ந்துகொண்டு பாகவதரின் பாடல்களை இவர் உரத்த குரலில் பாடும்போது, அக்கம்பக்கத்தார் பாகவதர்தான் பாடுகிறாரோ என்று பார்ப்பார்களாம். அது போலவே பாகவதர் பாடிய அதே பாடல்களின் வரிகளை டி.எம்.எஸ். தன்னுடைய திரைப்படங்கள் சிலவற்றில் அவர் போலவே பாடியிருப்பதை கவனித்திருப்பீர்கள். 'சிந்தாமணி'யில் பாகவதர் பாடியிருக்கிற 'ராதே உனது கோபம் ஆகாதடி" எனும் பாடலை வேறொரு படத்தில் டி.எம்.எஸ்.பாடியிருக்கிறார். தூக்குத்தூக்கி போன்ற படங்களில் டி.எம்.எஸ். பாகவதர் போலவே பாடியிருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.
திருநீலகண்டர் எனும் படமும் பாகவதர் பாடல்களால் சிறப்புப் பெற்றது. அவரது பழைய பாடல்களின் இசைவடிவங்கள் பிற்கால படங்கள் சிலவற்றிலும் பின்பற்றப்பட்டிருப்பதை கவனிக்கலாம். திருநீலகண்டரில் "தீனகருணா கரனே நடராஜா" எனும் பாடல் வடிவில் பின்னாளில் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரனில் "ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா" என்ற பாடலாக வெளிவந்தது. பாகவதரின் "சிவபெருமான் கிருபை வேண்டும்" என்ற பாடல் டி.எம்.எஸ்.குரலில் "மங்களமாய் வாழ வேண்டும்" என்று வெளிவந்தது. கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலர் முதலில் பாகவதரின் பாடல்களை, அவை கர்நாடக இசை ராகங்களில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் வராமல் இருந்தனர். பிறகு மிகப் பிரபலமடைந்த சில பாடல்களைக் கேட்ட பிறகு அவர்கள் கூட பாகவதரின் கர்நாடக இசையை ஏற்றுக் கொண்டார்களாம்.
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் கவர்னர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாகவதர் போருக்கு ஆதரவாக நிதிதேடி பல கச்சேரிகளைச் செய்து பிரிட்டிஷ் அரசுக்கு உதவியிருந்தார். அதனைப் போற்றும் விதத்தில் பிரிட்டிஷ் அரசும், சென்னை ஆங்கில கவர்னராக இருந்த ஜேம்ஸ் ஹோப் என்பவர் இவருக்கு "திவான் பகதூர்" எனும் விருதைக் கொடுக்க விரும்பினார். ஆனால் பாகவதர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
பாகவதர் நல்ல அழகான தோற்றம் கொண்டவர். பொன்னிறம் என்பார்களே அந்த நிறத்தை அவரிடம் பார்க்கலாம். அவரது சிகை அலங்காரம் பார்த்து பலர் அதே போல வைத்துக் கொண்டனர். அதற்கு அந்த நாட்களில் "பாகவதர் கிராப்" என்றே பெயர். பாகவதரின் படங்கள் சிலவற்றில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்தனர். திரையுலகில் இந்தப் பெயர்கள் உச்ச கட்டத்தில் இருந்த நாளில் ஒரு சோக நிகழ்ச்சி பாகவதருக்கும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஏற்பட்டது.
அந்த காலத்தில் பிரபலமானவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பத்திரிகைகளில் பிரசுரித்து அவப்பெயரை ஏற்படுத்தி வர சில பத்திரிகைகள் உருவாகின. அதில் லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திய "இந்துநேசன்" எனும் மஞ்சள் பத்திரிகை பிரபலமானது. இந்தப் பத்திரிகையில் பல பிரபலமானவர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் இவர்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகளைப் பிரசுரிப்பது, அப்படிப் பிரசுரம் செய்யாமலிருக்க இவர்களிடம் பணம் பிடுங்குவது போன்ற செயல்களைச் செய்து வந்தார்கள். அப்படி "இந்துநேசன்" பத்திரிகை திரையுலகில் பிரபலமாக இருந்த பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றவர்களையும் பற்றி கேவலமாக எழுதிவந்தது.
அப்படியொருநாள் சென்னை புரசவாக்கத்தில் தாணா தெருவில் கைரிக்ஷாவில் பயணம் செய்து வந்து லட்சுமிகாந்தனை சிலர் வழிமறித்துக் குத்திக் கொன்றுவிட்டனர். இது அந்த நாளில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த கொலை வழக்கில் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லி பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புகழின் உச்சத்தில் இருந்த இவர்களுக்கு நேர்ந்த இந்த நிலைமையைக் கண்டு தமிழகமே நிலைகுலைந்து போயிற்று.
அப்போது பாகவதருக்குப் பல புதிய படங்கள் ஒப்பந்தமாகியிருந்தன. அவைகள் எல்லாம் நின்று போயின. புதிய படங்களுக்கு முன்பணம் கொடுத்த படமுதலாளிகள் தவித்துப் போயினர். தங்கள் முன்பணத்தைத் திரும்பப் பெருவதில் கவனமாக இருந்தனர். பாகவதர் மொத்தம் 30 மாதங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். அந்த காலகட்டத்தில் அவர் பட்ட மனவேதனை, படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பணத்தை எப்படியும் திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்கிற நாணயம் அதனால் ஏற்பட்ட மனக்கவலை இவற்றால் அவரது உடல்நிலை கெட்டது. நீரிழிவு வியாதியால் அவதிப்படத் தொடங்கினார். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோருக்காக அன்றைய மிகப்பெரிய வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். நாயுடுவுக்காக பிரபலமான கே.எம்.முன்ஷி ஆஜரானார். நாயுடு விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் தண்டிக்கப்பட்டனர். இவர்கள் அப்போது லண்டனில் இருந்த மேல்முறையீட்டு நீதிமன்றமான பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்தனர். இவர்களுக்கு பல பிரபலமானவர்களின் ஆதரவும் கிடைத்தது. இருவரும் இறுதியாக விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையான பிறகு பாகவதரும் என்.எஸ்.கேயும் மறுவாழ்வு பெற முயற்சி செய்தனர். திராவிட இயக்கத்தார் இவர்களைத் தங்கள் பக்கம் அழைத்துக்கொள்ள விரும்பினர். என்.எஸ்.கே ஒப்புக்கொண்டு அவர்கள் இயக்கத்தோடு தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார், மறுவாழ்வும் பெற்றார். ஆனால் பாகவதரோ, தான் இறைபக்தி உள்ளவர் என்றும் தனக்கு இதெல்லாம் சரியாக வராது என்றும் ஒதுங்கிக் கொண்டார்.
விடுதலையான பாகவதர் திரும்ப அதே பழைய நிலைமையை அடையமுடியவில்லை. நாணயமும் நேர்மையும் தனது தர்மமாகக் கடைப்பிடித்த காரணத்தால் அவரது சொத்துக்கள் கரைந்தன. திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் ராணுவ ரெக்ரூட்மெண்ட் அலுவலகத்துக்கு எதிரில் பாகவதர் பங்களா என்ற பேருந்து நிறுத்தம் உண்டு. அங்கு இருந்த அவரது மாளிகை திரைப்படங்களில் வரும் அரண்மனை போல காட்சி தந்தது. பின்னாளில் அந்த மாளிகை இடிக்கப்பட்டு அங்கு இப்போது ஒரு பெரிய ஓட்டல் வந்துவிட்டது. பழைய நினைவுகளோடு அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்குக் கண்களில் நீர் அரும்புவதைத் தடுக்கமுடியாது. அத்தனை சொத்துக்களும் கரைந்ததோடு, பாகவதரின் கண்பார்வையும் குறையத் தொடங்கியது.
எளிமையான வாழ்க்கையைத் தொடங்கி, அவரது தோற்றம், இசைத்திறமை இவற்றால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த பாகவதர் தனது இறுதி நாட்களில் வறுமையின் கோரப்பிடிகளில் சிக்கிக் கொண்டு தவித்தார். தயாள சிந்தையும், பிறருக்கு உதவும் நல்ல குணமும், கடவுள் நம்பிக்கையும் அதிகம் இருந்த பாகவதருக்கு இப்படி ஒரு சோதனை நேரந்ததை தமிழகம் கண்ணீர் சிந்தி கவனித்தது. சமயபுரதுக்கும் தஞ்சை புன்னைநல்லூர் மரியம்மனுக்கும் நேர்த்திக்கடன் செய்து அந்த சந்நிதிகளில் தவம் இருந்தார் பாகவதர். என்ன செய்து என்ன? அவர் செய்த நற்செயல்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை. தனது 50 வயதில் 1959ஆம் வருடம் நவம்பர் முதல் தேதி பாகவதர் இறைவனடி சேர்ந்தார்.