கோனேரிராவின் தியாகம்
எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன்,
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் பிரதாபசிம்ம மகாராஜாவின் ஆட்சி பொற்காலமாக விளங்கியது. அவரது காலத்தில் தஞ்சாவூர் ராஜ்யம் பல போர்க்களங்களைக் கண்டது. அமைதியான காலங்களில் பல ஆக்க பூர்வமான பணிகளும் நடந்தேறின. மக்கள் யுத்தம் சம்பந்தப்பட்ட பல இடையூறுகளைச் சந்தித்த போதிலும், அமைதியும் மகிழ்ச்சியுமாக வாழ்ந்து வந்தனர்.
பிரதாபசிம்மருக்குப் பிறகு அவருடைய மகன் துளஜேந்திர ராஜா ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். தந்தையைப் போல அவருக்கு அவ்வளவு சோதனைகள் இல்லையென்றாலும் கூட ஓரளவு தந்தையின் வழியில் ராஜ்ய பாரத்தை மிகத் திறமையுடனே நடத்தி வந்தார். அவருக்கு ராஜ்யம் சம்பந்தமான கவலைகளைவிட அவருடைய குடும்பம் சம்பந்தமான கவலைகள் மிக அதிகமாக இருந்தன. அவருடைய பிள்ளைகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மராட்டியப் பிரதேசம் சதாராவிலிருந்து வந்த சில மராத்திய அமைச்சர்கள் அவருக்கு நன்மைகள் செய்வதைவிட அதிகமாகத் தீங்கினை விளைவித்து வந்தனர். இவர்கள் மன்னருக்கோ அல்லது மக்களுக்கோ நல்லவர்களாக இருக்கவில்லை. உயர்ந்த இடத்தில் இருக்கும் இதுபோன்ற கெட்டவர்களால் என்னென்ன தீமைகள் செய்யமுடியுமோ அவ்வளவையும் இந்த அமைச்சரின் கூட்டாளிகள் செய்து வந்தனர். இந்த போன்ஸ்லே அமைச்சரை மக்கள் 'கிளிப்பிள்ளை அண்ணா' என்று அழைத்தனர். (கில்லிபில்லி அண்ணா என்றும் சொல்வார்கள்) எது குறித்து அவருக்கு இந்தப் பெயர் வந்ததோ தெரியவில்லை. ஆனால் அவர் இந்தப் பெயரால்தான் பிரபலமாக அழைக்கப்பட்டு வந்தார்.
துளஜா ராஜாவுக்கு சட்டபூர்வமான பல மனைவிமார்களும், சேர்த்துக் கொள்ளப்பட்ட துணைவிகள் பலரும் அவருடைய அந்தப்புரத்தில் வாழ்ந்துவந்த காலத்தில் அவர்களுக்கிடையே பல பூசல்களும் உரசல்களும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. நாட்டு கவலையை விட அவருடைய குடும்ப கவலையே துளஜா ராஜாவை மிகவும் பாதித்திருந்தது எனலாம். இந்த நிலையில் ஒரு நாள் .....
மக்கள் நடமாட்டம் நிரம்பி வழியும் கீழ ராஜ வீதி வழியாக ஒரு வீரர் தனது குதிரையில் ஆரோகணித்து நிதானமாக வந்து கொண்டிருந்தார். நல்ல உயரமும் அதற்கேற்ற ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்ட அந்த வீரர் நெற்றியில் சந்தனப் பட்டை குங்குமம் அணிந்து, ராஜாங்கப் பணியில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவருக்குரிய உடையும், இடையில் வாளும், உயர்ந்த ஜாதிக் குதிரையில் அவர் வருகின்ற தோற்றமும் மக்களைச் சிறிது நின்று பார்க்கத் தூண்டியது.
அவருக்குப் பாதையை விட்டு ஓரத்தில் ஒதுங்கிய மக்கள் அவருக்குத் தலை வணங்கி மரியாதை செய்தனர். ஒருவருக்கொருவர் குசுகுசுவென்று இவர்தான் கோனேரிராவ். மராட்டியப் படையில் கிழக்குப் பிரதேசத்தின் தளபதியாக இருப்பவர். கும்பகோணத்தை அடுத்த திருநல்லத்தில் வசிக்கிறார். ராஜ்யத்தின் கிழக்குப் பிரதேசத்தின் பாதுகாப்பு இவரது பொறுப்பில் இருக்கிறது. இப்போது தனியாக இவர் மட்டும் அரண்மனைக்கு வருகிறாரே என்ன விசேஷமோ என்று பேசிக் கொண்டார்கள்.
உயர்ந்த வெள்ளைப் புரவியில் வந்த கோனேரிராவ் தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாசல் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு காவலுக்கு இருந்த வீரர்கள் அவருக்கு அணிவகுத்து மரியாதை செய்தனர். அவற்றை ஏற்றுக் கொண்ட கோனேரிராவ் நேராக அரண்மனை நோக்கிச் சென்றார். அரண்மனை வாயிலில் காவல் புரிந்து வந்த வீரர்கள் அவரது புரவியைப் பிடித்து அருகிலிருந்த கொட்டடியில் கொண்டு போய் கட்டினர். ராவ் மட்டும் நடந்து அரண்மனைக்குள் புகுந்தார்.
அப்போது அரசவையில் துளஜா ராஜா இல்லை. அவரது மகனுக்கு வைத்தியம் நடந்து கொண்டிருந்ததால் அவர் மகனுக்கு அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவையில் கிளிப்பிள்ளை அண்ணாவும், அவரது அதிகாரிகளும் மட்டும் இருந்தனர். அவைக்குள் வந்த கோனேரி ராவைப் பார்த்து கிளிப்பிள்ளை அண்ணா, "என்ன விசேஷம் கோனேரிராவ்! இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ராவ், "ராஜாவைப் பார்த்து ஓர் விண்ணப்பம் செய்து கொள்ள வந்திருக்கிறேன்" என்றார்.
அமைச்சர் சொன்னார், "ராவ்! ராஜா இப்போது அவைக்கு வரமாட்டார். அவரது மகனுக்குச் சில நாட்களாக கடுமையான நோய் வந்து சிரமப்பட்டுக் கொண்டிருப்பதனால், அவருக்கு வைத்தியம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ராஜ்யத்தின் பிரபலமான வைத்தியர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களோடு ராஜாவும் அங்கே இருப்பதால் அவர் இங்கு வருவதற்கில்லை. விஷயம் இன்னதென்று என்னிடம் சொல்லுங்கள், நான் சென்று மன்னரிடம் சொல்லி ஆவன செய்கிறேன்" என்றார் கிளிப்பிள்ளை அண்ணா.
உண்மையிலேயே அப்போது அந்த அரண்மனையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜோசியர்களும், வைத்தியர்களும்தான் நிரம்பி வழிந்தனர்.
ராவ் சொன்னார், "உங்களுக்கே தெரியாதா! என்னுடைய அதிகாரத்துக்குட்பட்ட ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி படைவீரர்களுக்கு, கடந்த ஆறு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று. அதற்காக பலமுறை நான் ராஜ்யத்தின் தனாதிகாரிக்குக் கடிதங்கள் எழுதியும் இதுவரை எங்களது ஊதியம் வழங்கப்படாமலிருக்கிறது. பல்வேறு ஊர்களிலும் பணியாற்றி வரும் நமது படைவீரர்கள் ஊதியமில்லாததால் வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனை உடனடியாக வாங்கிச் செல்வதற்காகத்தான் நான் நேரில் வந்தேன்" என்றார் கோனேரிராவ்.
"இப்போது ராஜ்யம் இருக்கும் நிலையில் நிதி நெறுக்கடி மிகவும் அதிகமாயிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாதா. மேலும் அரண்மனையில் நடக்கும் குழப்பத்தினாலும் இதுபோன்ற விஷயங்களில் சிறிது காலதாமதம் ஆகலாம். நான் மன்னரிடம் சொல்லி உங்களுக்குச் சேரவேண்டிய ஊதியம் கிடைக்க ஆவன செய்கிறேன். இப்போது ராஜாவைச் சந்தித்து எதுவும் சொல்ல வேண்டாம். நான் சமயம் பார்த்துச் சொல்லி, தனாதிகாரியை உங்களுக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்" என்றார் கிளிப்பிள்ளை.
இந்த பதிலில் சமாதானம் ஆகாத கோனேரிராவ் கோபத்துடன், "இந்த பதிலைக் கேட்டுக் கொண்டு போவதற்காக நான் வரவில்லை. நான் பணத்தோடு வருவேன், தங்கள் கடன்களை அடைத்து குடும்பத்தோடு வயிறாற சாப்பிடலாம் என்று காத்துக் கிடக்கும் எனது படை வீரர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. எவ்வளவு நாளானாலும் நான் பணத்தோடுதான் திருநல்லத்துக்குத் திரும்புவேன்" என்றார் கோனேரிராவ்.
கெட்ட சகவாசங்களும், கெட்ட புத்தியும், முன்கோபமும் கொண்ட துன்மந்திரியான கிளிப்பிள்ளை அண்ணா இந்த பதிலால் ஆத்திரம் அடைந்து தனது உடைவாளை உருவிக்கொண்டு மகாவீரரான கோனேரி ராவ் மீது பாய்ந்தான். கோனேரி ராவும் தனது வாளை உருவிக்கொண்டு அவனோடு போரிட்டார். சிறிது நேரம் நடந்த போரில் கோனேரிராவின் கை ஓங்கியதைக் கண்ட கிளிப்பிள்ளையின் உதவியாளர்கள் அனைவரும் ஒருசேர கோனேரிராவ் மீது விழுந்து தாக்கத் தொடங்கினர். அவர்களோடு கடுமையாக போராடியும் கூட பலரைத் தாக்குப் பிடிக்கமுடியாமல் சிறிது திணறிய வேளையில் எதிரி ஒருவனின் வாள் கோனேரிராவின் விலாவில் பாய்ந்தது. இரத்தம் பீரிட்டெழ ராவ் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த ராவை மேலும் அவர்கள் தாக்கத் தொடங்கினர். கிளிப்பிள்ளை அண்ணா உடனே தலையிட்டு, "வேண்டாம், நிறுத்துங்கள். செய்தி மன்னரின் காதுகளுக்குப் போனால் நமக்குத்தான் ஆபத்து. நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய்விடுங்கள்" என்று அனைவரையும் போகச் சொல்லிவிட்டு அவசரமாக மன்னரைப் பார்த்து செய்தியைச் சொல்ல உள்ளே ஓடினான்.
அங்கு மகனின் உடல் நிலை குறித்த கவலையில் உட்கார்ந்திருந்த துளஜா ராஜாவிடம் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லி, "கோனேரிராவ் தனக்கும் தன் படைவீரர்களுக்கும் ஊதியம் வழங்காத ஆத்திரத்தில் எங்களைத் தாக்கத் துணிந்தார் அதனால் நம் வீரர்கள் அவரோடு போரிட நேர்ந்தது. அதில் அவர் காயம்பட்டு கீழே விழுந்து கிடக்கிறார், என்ன செய்யலாம்" என்றார் கிளிப்பிள்ளை அண்ணா.
நடந்தவற்றை தீர விசாரிக்காமல், அமைச்சர் சொன்ன செய்தியை அப்படியே நம்பி ஆத்திரத்துடன் அவரிடம் "அவன் கால்களைக் கயிற்றால் கட்டி தெருவோடு இழுத்துச் சென்று கோட்டைக்கு வெளியே வீசுங்கள்" என்று சொல்லிவிட்டார்.
நல்ல காலம் நாம் பிழைத்தோம் என்ற மகிழ்ச்சியோடு அமைச்சர் கிளிப்பிள்ளை அண்ணா, ஓடிப்போய் அரண்மனையைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் ஊழியர்களை அழைத்து இவருடைய கால்களைக் கயிற்றால் கட்டி தெருவோடு இழுத்துச் சென்று கோட்டைக்கு வெளியே தூக்கி எறியச் சொல்லி அரசர் உத்தரவு. உடனே நிறைவேற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.
அன்று, இலங்கையில் இராவணன் உத்தரவின்பேரில் அனுமனின் வாலில் துணியைச் சுற்றி தீயிட்டு விரட்டியதைப் போல இங்கு ஒரு துன்மந்திரியின் கெட்ட புத்தியால் ஒரு நல்ல வீரனின் கால்கள் கயிறுகளால் பிணைக்கப்பட்டு, குற்றுயிரும் குலை உயிருமாக தெருவோடு இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டு மக்கள் வருந்தினர். வழிநெடுக பார்த்த மக்கள் என்ன கொடுமை இது இவ்வளவு உயர்ந்த அதிகாரி, பிரதாபசிம்ம ராஜா காலத்திலிருந்து பல போர்களில் தனது வீரத்தால் பெரும் புகழ் படைத்த இந்த முதிய வீரனை இப்படி கேவலமாகத் தெருவோடு இழுத்துச் செல்கிறார்களே என்று துடித்துப்போய் மக்களும் கூட்டமாக உடன் சென்றனர். பாதி வழியிலேயே கோனேரிராவின் உயிர் உடலினின்றும் வெளியேறிப் போய்விட்டது. பல போர்களில் வெற்றி பெற்று மகாவீரனாக வரவேற்பு கிடைத்த இதே ராஜவீதிகளின் வழியாக தனது உடல் இழுத்துச் செல்லப்படும் அவமானம் தாங்காமல் அவர் உயிர் பிரிந்தது. மக்கள் இன்னது செய்வதென்று தெரியாத நிலையில், கோட்டைக்கு வெளியே தூக்கி எறியப்பட்ட அவரது உயிரற்ற உடலைக் கைப்பற்றி, அவருக்குரிய மரியாதையுடன் எடுத்துச் சென்று ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி திருநல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
நோய்வாய்ப்பட்ட தனது மகன் இறந்து போவான் என்பதை மன்னன் அறியவில்லை. முன்பின் யோசியாமல் மதுரை பாண்டிய மன்னன் கண்ணகிக்கு இழைத்த தீமைபோல தானும் வழக்கு என்ன என்பதை விசாரிக்காமல் ஓர் உயர்ந்த வீரனுக்கு இப்படிப்பட்ட கீழ்மையான தண்டனையை வழங்கியதை அறியாமல் மன்னன் மனம் குழம்பி உட்கார்ந்திருந்தான். அப்போது விவரமறிந்த சில அரண்மனை பெரியோர்கள் மன்னனிடம் வந்து அவன் செய்த மாபெரும் குற்றத்தை எடுத்துச் சொன்னார்கள். கிளிப்பிள்ளை அண்ணாவின் அட்டகாசம் அரண்மனையில் அதிகமாகிவிட்டது, அதன் காரணமாக இங்கு நடைபெறும் குற்றங்கள் இறுதியாக அரசனின் தலையில்தான் வந்து விடியும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். மனம் குழம்பியிருந்த மன்னனுக்கு இந்த புத்திமதிகள் புரிந்தாலும், என்ன செய்வதென்றறியாமல் திணறினான்.
தஞ்சை நகரம் மட்டுமல்லாமல் தஞ்சை மராட்டியப் பிரதேசம் முழுவதும் இந்த கொடுமையைப் பற்றியே மக்கள் பேசினார்கள். திருநல்லத்தைத் தலைமை இடமாகக் கொண்ட கீழத்தஞ்சைப் பிராந்தியத்தின் மராத்திய ராஜ்ய படைவீரர்கள் அனைவரும் தங்கள் தலைவர் இப்படி கேவலமாகக் கொலை செய்யப்பட்டதைக் கண்டு நெஞ்சம் பதறினர். சமயம் பார்த்து இந்த மன்னனுக்கும் அந்த துன்மந்திரிகளுக்கும் தக்க பாடம் புகட்டக் காத்திருந்தார்கள்.
அப்போது தஞ்சை மன்னருக்கு ஒரு செய்தி வந்தது. ஆற்காட்டு நவாப் முகமது அலிகான் சாஹிப் தனது பிரதிநிதியாகத் தனது மகனை ஓர் படையுடன் தஞ்சாவூருக்கு அனுப்பியிருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. தஞ்சாவூர் மன்னர் தங்களுக்குச் செலுத்த வேண்டிய கிஸ்தி விட்டுப்போன முந்தைய ஆண்டுகளுக்கும் சேர்த்து உடனடியாகச் செலுத்த வேண்டும், இல்லையேல் மன்னர் சிறை பிடிக்கப்பட்டு ராஜ்யாதிகாரத்தைத் தாங்களே எடுத்துக் கொள்வோம் என்பதுதான் ஆற்காட்டு நவாபின் செய்தி. தஞ்சை மன்னர் முன்பு செய்த உதவிக்காக இனி கிஸ்தி செலுத்த வேண்டாம் என்று சொன்னீர்களே என்றதற்கு, அது அப்போது சொன்னது. இப்போது எங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது, ஆகையால் முழுத்தொகையையும் இப்போதே தரவேண்டுமென்று வீம்பு பிடித்தனர். கொடுப்பதற்கு வழியில்லாததால் துளஜா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். தஞ்சை ராஜ்யத்தை ஆற்காட்டு நவாப் எடுத்துக் கொண்டார்.
முன்பு ஆற்காடு ராஜ்யத்தில் முகமது அலியைத் துரத்திவிட்டு சந்தா சாகேப் பிரெஞ்சுக் காரர்களின் துணையோடு, ஆக்கிரமிப்பு செய்து கொண்ட போது, முகமது அலி நாகப் பட்டினத்துக்கு ஓடிவந்து தஞ்சை மராட்டிய மன்னரான பிரதாபசிம்ம மகாராவுக்கு செய்தி அனுப்பித் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். இரக்க குணமும், பெருந்தன்மையும் கொண்ட பிரதாபசிம்மர் முகமது அலிக்கு உதவி செய்வதாக ஒப்புக் கொண்டார்.
முகமது அலியை வரவழைத்து அவருக்குத் துணையாக மானோஜிராவ் எனும் வீரம்செறிந்த தளபதியின் தலைமையில் ஓர் பெரும்படையை அனுப்பி திருச்சியில் இருந்த சந்தாசகேபோடு போரிட்டு ஆற்காடு ராஜ்யத்தை மீட்டுக் கொடுக்க உத்தரவிட்டார். திருச்சிராப்பள்ளியில் திருவரங்கத்தில் முகாமிட்டுப் போரிட்டுக் கொண்டிருந்த சந்தாசாகேபுக்கு நான்கு புறத்திலிருந்தும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேற்கிலிருந்து மைசூர் படையும், தெற்கில் ஆங்கிலேயர்களின் படையும், கிழக்கிலிருந்து தஞ்சை மராட்டியப் படையும் அந்த சந்தாசாகேபை எதிர்த்தன. இடையில் மாட்டிக் கொண்ட சந்தாசாகேப் தப்ப வழியின்றி மராட்டியர்களிடம் சரணடைய முடிவெடுத்தான்.
திருவரங்கத்தில் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியில் முகாமிட்டிருந்த சந்தாசாகேபின் கூடாரத்திலிருந்து நள்ளிரவில் வெளியே வந்தான். துணைக்கு ஒரு வீரனை அழைத்துக் கொண்டு தீவட்டி வெளிச்சத்தில் மராட்டியப் படை முகாமிட்டிருந்த கோவிலடி எனுமிடத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு கூடாரங்களில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தாசாகேப் தனது வீரனை அனுப்பி மானோஜி ராவை எழுப்பித் தான் சரணடைய வந்திருப்பதாகச் சொல்லி அனுப்பினான். திடுக்கிட்டு எழுந்து வந்த மானோஜிராவ், "இது என்ன, இந்த நேரத்தில் நீ என்னிடம் வந்திருப்பது. உன்னை எதிர்பார்த்து ஆங்கிலேயர் படையும், முகமது அலியும் திருச்சிராப்பள்ளியில் காத்திருக்கிறார்கள். நீ அங்கே போ" என்றார்.
அதற்கு சந்தாசாகேப், "நான் உங்களைத்தான் நம்புகிறேன். அவர்களிடம் சரணடைந்தால் அவர்கள் என்னைச் சித்திரவதை செய்து கொன்றுவிடுவார்கள். எனக்கு ஒரே நம்பிக்கை நீங்கள்தான். அப்படி என் உயிரை இழப்பதானாலும், உங்கள் கைகளால் என்னைக் கொன்று விடுங்கள். தயவு செய்து அந்து கொடுமைக்காரர்கள் கையில் என்னை ஒப்படைத்து விடாதீர்கள்" என்றான் சந்தாசாகேப்.
உடனடியாக தூதனை தஞ்சாவூருக்கு அனுப்பி என்ன செய்வது என்று பிரதாபசிம்மரிடம் கேட்டார் மானோஜி ராவ். அதற்கு அவர், "அந்த அயோக்கியன் சந்தாசாகேப் நமக்குச் செய்திருக்கும் தீமைகளுக்கும், தஞ்சாவூரைக் கொள்ளை அடித்ததற்கும் அவனுக்கு இரக்கப்படவே கூடாது. ஆனால் நம்மையே சரணம் என்று அடைந்தவனுக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது நமது ராஜநீதி. நீங்கள் அவனை பாதுகாப்போடு இங்கு தஞ்சைக்கு அனுப்பிவிடுங்கள்" என்று உத்தரவிட்டான் மன்னன். சந்தாசாகேப் தஞ்சாவூருக்குக் கொண்டு சென்று (இப்போது தஞ்சை கீழ ராஜ வீதியில் அமைந்திருக்கும் பெண்கள் பயிற்சிப் பள்ளி வளாகத்தில்) பாதுகாப்போடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டான்.
சந்தாசாகேப் போர்க்களத்திலிருந்து தப்பிவிட்ட செய்தி முகமது அலிக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. அவன் பாதுகாப்பாக தஞ்சாவூரில் வைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தி அறிந்ததும், முகமது அலி பிரதாபசிம்ம ராஜாவை நெறுக்குதலுக்கு ஆளாக்கி, அவனை எப்படியும் எங்களிடம் உயிரோடு ஒப்படையுங்கள் என்று கேட்டுக் கொண்டான். வேறு வழியின்றி அவனை முகமது அலியிடம் அனுப்ப முயன்றபோது சந்தாசாகேப் மானோஜி ராவிடம், "தாங்கள் முன்பு எனக்கு அளித்த வாக்குறுதிப்படி என்னை அவர்களிடம் அனுப்பி விடாதீர்கள்; வேண்டுமானால் உங்கள் கரங்களால் நான் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்" என்றான்.
அவன் வேண்டுகோளின்படி சந்தாசாகேப் மானோஜி ராவால் தஞ்சாவூரில் கொல்லப்பட்டு அவனது தலையைத் துண்டித்து முகமது அலிக்கு அனுப்பி வைத்தார்கள். ஆற்காடு ராஜ்யம் பழையபடி ஆங்கிலேயர் உதவியால் முகமது அலிக்குச் சொந்தமானது. இந்தப் போராட்டத்தில் தனக்கு உதவி செய்த மராட்டிய தஞ்சாவூர் ராஜ்யம் ஆற்காட்டுக்கு செலுத்த வேண்டிய கிஸ்தியை ரத்து செய்வதாகவும், இனி ஆற்காட்டுக்கு கிஸ்தி எதுவும் செலுத்தாமல் சுதந்திர ராஜ்யமாக தஞ்சாவூர் இயங்கலாம் என்றும் முகமது அலி அறிவித்தார்.
இப்போது அந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுவிட்டு, முகமது அலி தனது மகனை ஒரு படையுடன் தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தான். அந்த படை தஞ்சாவூருக்கு வந்த நேரத்தில் துளஜா ராஜாவைச் சந்தித்து முன்பு விட்டுப்போன ஆண்டுகளுக்கும் சேர்த்து பழைய பாக்கியோடு கிஸ்தியை வசூலித்துக்கொண்டு வரும்படி தனக்கு உத்தரவு என்று சொன்னார்கள். அவ்வளவு பணத்துக்கு இப்போது வழியில்லை, ராஜ்யத்தின் சில பகுதிகளை வரிவசூல் செய்து கொள்ளும் உரிமையை அளித்து மொத்தமாக சில லட்சம் வராகன்களையும் கொடுத்து, மீதியைச் சிறிது சிறிதாகக் கொடுத்து விடுவதாக ராஜா சொல்லியும் கேட்காமல் ஆற்காடு நாவாபின் பிரதிநிதிகள் துளஜா ராஜாவை அரச பதவியிலிருந்து நீக்கி அவரைச் சிறைப்பிடித்து வீட்டுக் காவலில் வைத்துவிட்டுத் தாங்களே ராஜ்ய நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
இப்படி ராஜ்யம் இரண்டாண்டு காலம் மராட்டிய ராஜாக்கள் கைகளிலிருந்து விலகி ஆற்காடு நவாப் வசம் போய்விட்டது. அந்த காலகட்டத்தில் தஞ்சாவூர் ராஜ்யத்தில் மழையில்லாமல் வரண்டு போய் நீர்நிலைகள் காய்ந்து கிடந்தன. பயிரிட முடியாமையால் வயல்கள் வரண்டு போயின. குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. விளைச்சல் இல்லாமையால் மக்கள் வரி செலுத்த முடியவில்லை. பஞ்சமும், பட்டினியுமாக மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்தனர். இவ்வளவுக்கும் துளஜா ராஜா செய்த பாபம்தான் காரணம் கோனேரிராவ் என்ற மகாவீரனைக் கொடுமையாகக் கொன்று கீழ்த்தரமாக சாலையில் இழுத்துச் சென்ற பிரம்மஹத்தி தோஷம்தான் இன்று மன்னனுக்கு இவ்வளவு கஷ்டங்களுக்கும் காரணம் என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.
அன்று பட்டப்பகலில் கோனேரி ராயரை உயிரோடு கட்டி இழுத்துச் சென்று கொன்று போட்ட பாவம் இந்த மன்னனை இப்படி வதைக்கிறது. ராஜா ராஜ்யத்தை இழந்தான். வீட்டுக் கைதியாக வைக்கப்பட்டான். நாடு மழையில்லாமையால் வரண்டு போய்விட்டது. இனி மக்கள் எப்படி வாழ்வது, ராஜா என்ன பரிகாரம் செய்யப் போகிறான் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்டார்கள்.
வீட்டுக் கைதியாக வைக்கப்பட்டிருந்த துளஜாவுக்கும் தான் செய்த தவறுகள் புரிந்தன. கிளிப்பிள்ளை அண்ணா போன்றவர்களின் கேட்பார் பேச்சைக் கேட்டுத் தான் செய்த தவறுக்கு ராஜ்யத்தை இழந்தேன். சிறைக்கைதியாக ஆனேன். நாட்டு மக்கள் வரட்சி, பஞ்சம், வறுமை, நோய்கள் இவற்றால் மாண்டுபோவதற்குக் காரணமாக இருந்தேன். இனி இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்று உறுதி பூண்டான். சென்னையில் இருந்த ஆங்கில அதிகாரிகளுக்குத் தன் நிலைமையையும், ஆற்காட்டு நவாப் நன்றி மறந்து தனக்கு இழைத்த தீமைகளையும் பட்டியலிட்டு ஓர் வேண்டுகோளை அனுப்பி வைத்தான்.
சென்னை ஆங்கிலேய அதிகாரிகள் இங்கிலாந்துக்குத் தகவல் கொடுத்து அவர்கள் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆற்காடு நவாப் உடனடியாக துளஜா ராஜாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிட்டதற்கிணங்க, ராஜ்யம் துளஜா வசம் வந்தது. பழைய தவறுகள் நடக்கா வண்ணம், துன்மந்திரிகள் தன்னை அடைந்துவிடா வண்ணம் மிகவும் ஜாக்கிரதையாக ஆட்சி புரிய வேண்டுமென்று முடிவு செய்தார் துளஜா மன்னர்.
பழைய துன்மந்திரிகள் துரத்தப்பட்டனர். நன்கு கற்ற நேர்மையான பண்டிதர்கள் அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர். இவர்கள் தெய்வ பக்தியும், தேசபக்தியும் இரு கண்களாகக் கருதி, நாட்டு மக்கள் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்தனர். இவரைப்போன்ற உலக நன்மைக்காக நாளெல்லாம் பாடுபடும் அந்தணர்களுக்கு புதிய அக்கிரகாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இவரது காலத்தில் பல குளங்கள், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்பட்டன. பல வேதபண்டிதர்கள் போற்றப்பட்டு அவர்களுக்கு தானங்களும், சர்வமான்யங்களும் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு புதிய ஊர்கள் அமைக்கப்பட்டு தானமாக வழங்கப்பட்டன. உயர்ந்த கல்வி மான்கள், நேர்மையாளர்கள் அமைச்சர்களாக ஆக்கப்பட்டனர். அது தொடங்கி தஞ்சாவூர் மராட்டிய ராஜ்யம் இழந்துபோன பழைய பெருமையைச் சிறிது சிறிதாக மீட்டுக் கொண்டது. மக்களும் துன்பங்கள் நீங்கி இனிதே வாழத்தொடங்கினர்.
இவ்வளவு நடந்தும், துளஜாவுக்குப் பின் அவரது மகன் இரண்டாம் சிவாஜி ராஜாவும் நாட்டை நல்ல முறையில் ஆண்டபோதும், அவனது மரணத்துக்குப் பின் நேரடி வாரிசுகள் இல்லாமையால் 1857க்குப் பிறகு தஞ்சாவூர் ராஜ்யம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு நேரடியாகக் கொண்டு வரப்பட்டது. இப்படி சில நூறு ஆண்டுகள் தமிழ் மண்ணில் ஆண்ட மராட்டிய சாம்ராஜ்யம் பிரிட்டிஷாரால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இவர்களுடைய காலத்தில் இவர்கள் செய்த நல்ல காரியங்களும், கட்டிய புதிய கோயில்களும், புதுப்பித்து புனருத்தாரணம் செய்த பழங்கால கோயில்களும் ஏராளம். நீர்நிலைகள், ஏரி குளங்கள், தர்ம சத்திரங்கள் போன்றவை இவர்களது சாதனைகளாகும். கொலையுண்டு இறந்து போன கோனேரிராவின் நினைவாக அவர் வாழ்ந்த கிராமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. திருநல்லம் எனும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் கோனேரிராவுடைய நினைவாக கோனேரிராயபுரம் என பெயரிடப்பட்டு அன்று முதல் அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment