பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 27, 2010

குறிக்கோளை அடைதல்!

கீதாஞ்சலி
கவி ரவீந்திரநாத் தாகூர்

எங்கு மனம் அச்சமற்று தலைநிமிர்ந்து நிற்கிறதோ
எங்கு அறிவு அடிமைத் தளைநீங்கி சுதந்திரமாய் இருக்கிறதோ
எங்கு உலகம் குறுகிய பூசல்களால் பிளவுபடாமல் இருக்கிறதோ
எங்கு சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து எழுகிறதோ
எங்கு விடாமுயற்சி பிரம்மத்தை நோக்கி கரம் நீட்டுகிறதோ
எங்கு பகுத்தறிவு எனும் தெளிந்த நீரோடையானது பழைய
பழக்கவழக்கமெனும் வரண்ட பாலை மணலில் வரண்டு போகவில்லையோ,
எங்கு உனது பேரருள் என் உள்ளத்தைப் பரந்த சிந்தனையிலும்
செயலிலும் ஈடுபடுத்துகிறதோ,
அந்த சுதந்திரமான சொர்க்கத்தில் இறைவா!
எனது நாடு விழித்தெழட்டும்!

குறிக்கோளை அடைதல்!

மகாகவி பாரதியார் அவர்கள், வலிமையற்ற, பொலிவில்லாத, ஒலியிழந்த, கிலிபிடித்த பழைய பாரதத்தைப் போ! போ! என்று துரத்திவிட்டு, ஒளிபடைத்த, உறுதிகொண்ட, களிபடைத்த, கடுமைகொண்ட, தெளிவுபெற்ற பாரதத்தை வா! வா! என்று வரவேற்கும் பாடல்தான் "நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும், வருகின்ற ஹிந்துஸ்தானமும்" எனும் தலைப்பிலான பாடல். புதிய பாரதத்தை வரவேற்கும் மகாகவி ஓரிடத்தில் சொல்கிறார்:--

"விளையு மாண்பு யாவையும் - பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா! வா! வா!"

இந்த வரிகளுக்கு என்ன விளக்கம்? ஒரு கதை; அது மகாபாரதத்தில் வருகின்ற கதை. அதிலும் பார்த்தன் சம்பந்தப்பட்ட கதை. அதை நாம் தெரிந்து கொண்டோமானால், இந்த வரிகளுக்கு விளக்கம் நமக்குச் சுலபமாகக் கிடைக்கும். அதற்கு நாம் "மகாபாரத"க் கதைக்குள் சிறிது போகலாம் வாருங்கள். மகாபாரதம் சமஸ்கிருத மூல நூல் வியாசபகவான் இயற்றியது. அதனைத் தமிழில் வில்லிபுத்தூரார் கவிதையாக வடித்திருக்கிறார். உரைநடையில் அந்த மாக்கதை பலராலும் எழுதப்பட்டிருக்கிறது. நமக்குத் தெரிந்து வியாசரைப் பின்பற்றி சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் "வியாசர் விருந்து" என்று எழுதிய பிரபலமான நூல். மற்றொன்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பெயரால் திருச்சி கரூர் சாலையில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் ஒரு தபோவனம் நிறுவி அதனை ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடத்தி, கல்வித் தாபனங்களை சிறப்பாக நிர்வகித்து வந்த சுவாமி சித்பவானந்தா அவர்கள் ஒரு 'மகாபாரதம்' உரைநடையில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதியை இப்போது எடுத்துப் பார்ப்போம்.

"துரோணாச்சாரியார் கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் வில்வித்தைக் கற்பித்த குரு ஆவார். அவர் ஒரு நாள் தமது சிஷ்யர்கள் வில்வித்தையில் அடைந்திருந்த திறமையைச் சோதித்துப் பார்க்கும் பொருட்டு அம்மாணவர்களுக்கிடையே ஒரு பரீட்சை வைத்தார். அப்பொழுது குருவும் சிஷ்யர்களும் ஒரு மரச் சோலையிலே கூடியிருந்தனர். மரக்கிளைகளுக்கிடையில் அடர்ந்து வளர்ந்திருந்த பச்சிலைகளுக்கிடையில் உலர்ந்து போன இலைகள் சில ஒன்றுபட்டு ஒரு பறவை போன்று தென்பட்டன. அதைத் துரோணாச்சாரியார் தம் சிஷ்யர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய முறையாவது: 'மேலே முக்கோணம் போன்று தென்படுகின்ற மரக்கிளைப் பாருங்கள். அதனுள் சதுரமாத் தென்படுகின்ற கிளைகளைப் பாருங்கள். அதற்குள் ஒரு சிறு கிளையின் மீது பறவை ஒன்று அமர்ந்திருப்பது போன்று தென்படுகிறது பாருங்கள்" என்று இயம்பினார்.

சிஷ்யர்களுக்கு அக்காட்சி நன்கு புலனாயிற்று. பின்பு ஒவ்வொருவனாகத் தரையின் மீதமர்ந்து அப்பறவையின் மீது குறிபார்க்க வேண்டும். அதன் பிறகு தாம் கேட்கின்ற கேள்விகளுக்கு விடை தரவேண்டும். தாம் ஆணையிடுகின்ற போது அக்குருவியின் மீது அம்பு எய்தல் வேண்டும். இங்ஙனம் அவர் வகுத்து வைத்த முறைப்பாடும் மாணவர்களுக்கு விளங்கிற்று. முதலில் ஆச்சாரியார் யுதிஷ்டிரனைக் கூப்பிட்டுக் குறிவைக்கும்படி சொன்னார். "நீ இப்போது என்னென்ன பார்க்கின்றாய்?" என்று ஆச்சாரியார் வினவினார்.

யுதிஷ்டிரன்:- "எனக்குப் பக்கத்தில் தாங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். சுற்றிலும் மரங்கள் இருக்கின்றன. மேலே முக்கோணமாக மூன்று கிளைகள் அதனுள் சதுரங்கக் கிளைகள்," இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே போனான்.

துரோணர்:- "நீ அம்பை எய்ய வேண்டாம், எழுந்து அப்பால் சென்று அமர்வாயாக!"

அடுத்தபடியாகத் துரியோதனன் அழைக்கப்பட்டான். அவன் அதே இடத்தில் அமர்ந்து குறிபார்த்தான்.

துரோணர்:- "நீ இப்போது என்னென்ன பார்க்கிறாய்?"

முதல் மாணாக்கன் சொன்னவைகளையெல்லாம் கிட்டத்தட்ட அதே பாங்கில் துரியோதனும் எடுத்து விளக்கினான்.

துரோணர்:- "நீயும் அம்பு எய்ய வேண்டாம். எழுந்து உன் இடத்துக்குப் போ."

மூன்றாவதாகப் பீமனுடைய முறை வந்தது. இதே கேள்விகளும் விடைகளும் வருவனவாயின. இப்படி இன்னும் மூன்று நான்கு மாணாக்கர்கள் அமர்ந்து குறிபார்த்தார்கள், குருநாதரின் கேள்விகளுக்கு விடையிறுத்தார்கள், அவர்களையெல்லாம் ஆச்சாரியார் எழுந்து போகச்சொல்லிவிட்டார்.

கடைசியாக அர்ஜுனனின் முறை வந்தது.

துரோணர்:- "அர்ஜுனா! நீ இப்போது என்னென்ன பார்க்கிறாய். விளக்கமாகச் சொல்!"

அர்ஜுனன்: "பறவை"

துரோணர்: "நன்கு விளக்கு. நீ இப்போது என்னென்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"

அர்ஜுனனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவன் கவனம் ஆச்சாரியாரின் கேள்வியில் இல்லை. மறுபடியும் துரோணர் அதே கேள்வியைத் திரும்ப கேட்டார், அப்போதும் அர்ஜுனனிடமிருந்து எந்த அசைவும் இல்லை. குறிப்பார்ப்பதிலேயே இருந்தான். அப்போது சொன்னார் துரோணர் "அர்ஜுனா, இலக்கை அடி!" என்றார்.

அர்ஜுனன் விடுத்த அம்பு இலக்கைத் துளைத்துக் கொண்டு சென்றது. மனதைக் குவித்து ஒருமுகப்படுத்துவதில் அர்ஜுனன் தலைசிறந்து விளங்கினான். அப்படி ஒருமுகப்பட்ட மனது செயற்கரிய செயலைச் செய்து காட்டி சாதிக்க வல்லது."

மேலே கண்ட கதையிலிருந்து என்ன தெரிகிறது. மனம் ஒருமுகப்படுத்தப்பட்டு கொண்ட இலக்கை மட்டுமே சிந்தித்துக் கவனத்துடன் செயல்பட்டால் முடியாத காரியமும் உண்டா? யார் ஒருவன் தன் மனதை அடக்கி ஒருமுகப்படுத்துகிறானோ, யார் ஒருவன் ஒருமை மனத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறானோ, அவன் ஆற்றல் மேலோங்குவது மட்டுமல்ல, குவிந்து ஒருமுகப்பட்ட மனதையுடையவன் தரத்தில் மேலோங்கி நிற்பான் என்பது இந்த கதையின் கருப்பொருள். அதைத்தான் பாரதி குறிப்பிட்டு ஒருமுகப்பட்ட மனத்தோடு வெற்றி எனும் இலக்கை நோக்கிச் சாதிக்கத் துடிக்கும் இளைய பாரதனாக வா! வா! வா! என்று அழைக்கிறார்.

No comments:

Post a Comment

You can give your comments here