பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, November 13, 2019

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல் சதுரங்கம்.


                              
மகாராஷ்டிர மாநிலம் அதன் தொழில், வர்த்தகம் போன்றவற்றால் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக இருந்ததால், அங்கு பிழைப்புக்காக பல மாநிலங்களிலிருந்தும், பற்பல மொழிகள் பேசுவோர் பிழைப்புக்காகச் சென்றடைந்தனர். குறிப்பாக தென் மாநிலங் களிலிருந்து அங்கு சென்றவர்கள் அதிகம். அதிலும், மும்பை வியாபாரிகள், முதலாளிகளாக இருந்த குஜராத்தி, சிந்தி, மார்வாரி பொன்றவர்கள் தங்கள் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள மிகுந்த நாணயமாகவும், பணியில் அதிக அக்கறையுள்ளவர்களாகவும் இருந்த இங்கிருந்து பிழைக்கப் போன தமிழ் நாட்டு மக்களுக்கு வேலை கொடுத்தனர். உடல் உழைப்புக்காக சென்று அங்கு போய் தாராவி எனும் ஒரு குப்பத்தையே உருவாக்கிய பெருமையும் நம்மவர்க்கு உண்டு. இப்படி பம்பாய் நகரம் ஒரு காஸ்மாபாலிடன் நகரமாக ஆகியிருந்த நிலையில் சுதந்திரத்துக்குப் பிறகு மராட்டியர்களில் சிலருக்கு இவர்களெல்லாம் வெளிமாநிலத்தவர், இவர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கிறார்கள், ஆகையால் இவர்களை இங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் உருவானது. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை அங்கு தொடங்கியவர் ஒரு கார்ட்டூனிஸ்ட், பெயர் பால் தாக்கரே.

            யார் இந்த பால் தாக்கரே? இந்திய சுதந்திரத்தின் போது மாகாணங்கள் என்று வழங்கப்பட்டவைகளுள் பம்பாய் மாகாணமும் ஒன்று. அது 50களில் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பொது மகாராஷ்டிரம், குஜராத் என்று இரண்டாகப் பிரிந்தது. 1950 காலகட்டத்தில் பம்பாய் நகரம் மராட்டியர்களுக்கா, குஜராத்தியர்களுக்கா என்றவொரு போராட்டம், சென்னை ஆந்திரருக்கா தமிழருக்கா என்ற போராட்டம் போல ஒன்று அங்கு உருவானது. அப்போது பம்பாய் மராத்தியர்களுக்கே என்ற கோஷத்தோடு சம்யுக்த மகாராஷ்டிர இயக்கமொன்று போராட்டம் நடத்தியது. அதில் முக்கியமான தலைவராக இருந்தவர் எழுத்தாளராக இருந்த கேசவ் சீதாராம் தாக்கரே என்பவர், இவருடைய மகன் தான் சிவசேனா தொடங்கிய பால் தக்கரே. ஆக, இந்த குறுகிய இனம் சார்ந்த குணம் இவர் குடும்பச் சொத்தாக இருந்திருக்கிறது.

            பால் தாக்கரே பத்திரிகைகளில் கார்ட்டூன் வரைபவராக பணியாற்றி வந்தார். அவர் அந்த வேலையை உதறிவிட்டு “மார்மிக்” (Marmik) எனும் வார இதழைத் தொடங்கினார். அந்த பத்திரிகையின் கார்ட்டூன்கள் பிரபலமடையத் தொடங்கின.

            அந்த சமயத்தில் 1961இல் பத்தாண்டுகளுக்கொரு முறை நடத்தப்படும் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அந்த கணக்கெடுப்பின்படி பம்பாய் நகரத்தில் மராத்தியர்கள் பெரும்பான்மையினராக இல்லை என்பது தெரிய வந்தது. இந்த நிலைமை பெரும்பாலும் இந்திய பெருநகரங்களில் ஏற்படத்தான் செய்தன. சென்னை நகரில் ஆந்திரர்கள் அதிகமா, தமிழர் அதிகமா என்ற உரசல் ஏற்பட்டபோது ஆந்திரர்கள் சென்னை நகரைத் தங்கள் தலை நகரமாக ஆக்கிக் கொள்ள போராட்டம் நடத்திய போது, தனியொரு மனிதராக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் தமிழகத்தின் தலைநகர் சென்னைதான், அதை தலைகொடுத்தேனும் காப்பேன் என்று போராடினார். அவர் பொராட்டத்துக்கு ராஜாஜி, மேயர் செங்கல்வராயன் உள்ளிட்ட பெரும் தலைவர்கள் ஆதரவு இருந்தது. அதுபோல பம்பாய் நகரம் மராத்தியருக்கே என்ற உணர்வை பால் தக்கரேயும் தட்டியெழுப்பினார்.  பொதுவாக பம்பாயில் வேலைதேடி குடியேறியிருந்தவர்களில் தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகமிருந்தனர். பிஹார் வாசிகளும் குடியேறியிருந்தனர்.  எனவே பம்பாயில் குடியேறியிருந்த பிற மாகாண மக்களுக்கு எதிராக குறிப்பாக அதிகம் குடியேறியிருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக போராட்டங்கள் துவங்கின.

            அப்படி நடந்த போராட்டங்களுக்கு பால் தாக்கரே பத்திரிகை ஆதரவு இருந்தது. அந்த போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் “பஜாவ் புங்கி, ஹடாவ் லுங்கி” (Bajao Pungi, Hatao Lungi”) தமிழில் “மகுடி ஊது, லுங்கியை விரட்டு” இந்த கோஷம் எங்கும் எழுந்து தமிழர் அணியும் வேட்டியை அவர்கள் லுங்கி என்பதால் அவர்கள் எதிர்த்தது வேட்டி கட்டிய தமிழ் மக்களைத்தான்.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இவர்கள் எழுப்பிய கோஷமொன்று தமிழர்களை நேரடியாகக் குற்றம் சாட்டியது. அது!  “Kalcha Madras, Thodyach Divsat tupashi” இதன் பொருள் “நேற்று வந்த மதராசி, உடனே இங்கே பணக்காரன் ஆகிறான்” என்பது. எங்கு திரும்பினும் தமிழருக்கு எதிரான கோஷம் வானைப் பிளந்தது, தமிழர் அச்சத்துடன் வாழும் நிலைமை பம்பாயில் உருவானது.

            பம்பாயில் வாழும் தமிழர்கள் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு பால் தாக்கரே வார இதழ் வெளியிட்டு அதில் மராத்தி மொழியில் “இதைப் படித்துவிட்டு அமைதியாக இரு” என்பது போல எழுதப்பட்டிருந்தாலும் அது மராத்திய மக்களை உசுப்பி விட்டு “விழித்தெழு பிழைக்க வந்த இந்த வேட்டி கட்டிய தமிழர்களை விரட்டிவிடு” என்ற பொருளில் “அண்டுகுண்டு ஹடாவ்” என்றனர். “அண்டுகுண்டு” என்பது நம் தென்னிந்திய மொழிகளைக் குறிக்கும் கேலிக்குரிய சொல்வழக்கு.

            இப்படித் தென்னிந்தியர்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வெறுப்பை உருவாக்கிய பால் தாக்கரே 1966 ஜூன் 19ஆம் தேதி சிவசேனா என்றொரு இயக்கத்தைத் தொடங்கினார். அதே ஆண்டு அக்டோபர் 30இல் அவர் பம்பாயில் ஒரு மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடக்குமென்று அறிவித்தார்.  அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது நடந்த பேரணியில் கடலென மக்கள் திரண்டு வந்திருந்தனர். பொதுவாக சிவசேனை கட்சிக் கூட்டங்கள் நடத்துவதில்லை. ஆனால் தசரா பண்டிகையையொட்டி தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குறிப்பாக தாதரில் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்துவதை வழக்கப்படுத்திக் கொண்டனர். அப்படிப்பட்ட பேரணிகள் இப்போதும் தாதரில் நடைபெறுகின்றன.

            மண்ணின் மைந்தர்கள் எனும் உரிமைக்குரலை பால் தக்கரே எழுப்பியதும் மக்கள் ஆதரவு பெருக்கெடுத்து ஓடியது. இளைஞர்கள், வேலைதேடி அலையும் மராத்தியர்கள் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டவர்கள் என்று பிற மாநில மக்கள் மீது வெறுப்பேற்றிக் கொண்டனர். அதன் விளைவு, உடுப்பி ஓட்டல் நொறுக்கப்பட்டது. தொடர்ந்து பல முறை தென்னிந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. 1967இல் நடந்த காலாசவுக்கி எனும் மத்திய பம்பாயில் தென்னிந்திய ஓட்டல் அடித்து நொறுக்கப்பட்டது. அதில் 32 பேர் கடுமையாக காயமடைந்தனர். ஆனால் சிவசேனை தலைமை வன்முறையில் ஈடுபட்டவர்களை மாவீரர்களாகப் பாராட்டியது மட்டுமல்ல, அதுபொன்ற போராட்டங்களைத் தொடரவும் செய்தன. தென்னிந்தியர்களே தங்கள் முதல் எதிரி என்பதுபோல மக்களிடையே வேற்றுமையை விதைத்தனர்.

            இப்படித் தங்களுக்கு எதிரான உனர்வு ஊட்டப்படுவதை அறிந்து தென்னிந்தியர்கள் தாங்கள் தனித்தனியாகப் பிரிந்து வாழ்வதினும், ஓரிடத்தில் கூட்டமாக வாழ்வதை விரும்பினர். பம்பாயில் தாதாக்கள் அதிகம், அதிலும் நம்மவர்கள் சிலர் இருந்தார்கள், குறிப்பாக வரதாபாய் (கமலஹாசன் வேலு நாயக்கர் படமே எடுத்தார்) ஹாஜி மஸ்தான் ஆகியோர் தமிழர்கள், இவர்கள் தமிழர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் பணியையும் மேற்கொண்டார்கள்.

            தமிழர்களில் உழைக்கும் வர்க்கம் அதிகமாக தாராவி எனும் குடிசைப் பகுதியில் வாழ்ந்தார்கள். இங்குள்ள தமிழர்கள் தங்களுக்கெதிரான வன்முறைகளை எதிர்த்துக் களம் இறங்கினார்கள். தாராவியும், பால் தாக்கரே வாழ்ந்த பந்திரா பகுதியும் அருகருகில் இருந்ததால் இங்கு அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன.

            பம்பாயில் மிடில் கிளாஸ் எனும் தமிழ் நடுத்தர மக்கள் வாழும் பகுதி மட்டுங்கா. இங்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். இதைக் கொண்டாடுபவர் வரதராஜ முதலியார் (சினிமாவில் வேலு நாயக்கர்). சதுர்த்தி விழாவுக்காக ஆண்டுதோறும் மாபெரும் பந்தல் அமைக்கப்படும், செய்பவர் வரதராஜ முதலியார். ஒரு முறை அந்தப் பந்தல் தீக்கு இரையாக்கப்பட்டு விட்டது. உடனே முதலியார் பால் தாக்கரேயைப் போய் அவர் வீட்டில் சந்தித்தார், என்ன நடந்ததோ அந்த பந்தல் மீண்டும் அவர்களால் பொட்டுக் கொடுக்கப்பட்டது. இந்த வாழ்வா சாவா போராட்டம் பல ஆன்டுகள் பம்பாயில் நடந்தேறின.

            அந்த காலகட்டத்தில் பம்பாயில் தென்னிந்தியர்கள் தவிர குஜராத்தியர்களும் அதிகம் இருந்தனர். மதராசி எனப்படுவோர் (தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசுவோர் அனைவருமே அவர்கள் மொழியில் “மதராசி”) வெறும் 8.4% வீதம் தான். குஜராத்தி மக்கள் தொகை பம்பாயில்  14%. குஜராத்தியர்களை எதிர்க்காமல் ஏன் தென்னிந்தியர்களை எதிர்க்க வேண்டுமென்று கெட்டதற்கு தாக்கரே சொன்ன பதில் குஜராத்தியர்கள் வேலைகளை உருவாக்கித் தருகிறார்கள், நீங்கள் அனுபவிக்கிறீர்கள், எங்களுக்கு வாழ்வளிக்கும் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்” என்பது அவர் பதில்.

            1964-65 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியது. அப்போது தமிழ் நாட்டில் இந்தி படங்கள் வெளியிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதைக் காரணம் காட்டி மும்பையில் தமிழ் சினிமா முதலாளிகள் எடுக்கும் இந்திப் படம் திரையிடவும் கூட எதிர்ப்பு கிளம்பியது. சிவசேனா கம்யூனிஸ்ட்டுகள், தொழிற்சங்கங்கள் இவற்றுக்கு எதிரான போக்கைக் கடைபிடித்தது. மெல்ல மெல்ல தென்னிந்திய எதிர்ப்பைப் போலவே பிகார் போன்ற வட இந்தியர் குடியேற்றத்தையும் எதிர்த்தனர்.

            சிவசேனா தொடங்கிய பொது மிகக் குறைந்த கிளைகளோடு இருந்த கட்சி, 1988இன் இறுதியில் நாற்பதாயிரம் கிளைகளுடன் மாபெரும் வளர்ச்சி பெற்றிருந்தது. சிவசேனை கட்சியின் துணை இயக்கங்களாக “பாரதிய காம்கர் சேனா”, “சர்மிக் சேனா”, “காட்டன் கர்மச்சாரி சேனா”, போன்ற பல புதிய சேனாக்களை உருவாக்கி வைத்திருந்தது.  இவர்களின் இந்த வளர்ச்சியினால் இடதுசாரி தொழிற்சங்கங்கள் குறைந்து போயின.

            ஒரு கட்டத்தில் “லுங்கி ஹடாவ்” கோஷமும் “யண்டுகுண்டு ஹடாவ்” கோஷமும் மட்டும் காரியத்துக்கு ஆகாது என்று புரிந்து கொண்டு இந்து தேசியம் பேசினால் தான் வளர முடியும் என்பதைப் புரிந்து கொண்டு இந்துத்துவ அடையாளத்தை உருவாக்கிக் கொண்டனர்.

            அவர்களிடம் நல்ல விஷயங்களே இல்லையா என்ற ஐயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக இன்னொரு நல்ல விஷயம். எல்லா மராட்டிய ஏழைகளுக்கும் அவர்கள் குழந்தைகள் படிக்க, பள்ளிக்கட்டணம், புத்தகம், நோட்டு பொன்ற கல்விச் செலவினங்களை தருகிறார்கள். இது குறித்து வரலாற்றை எழுதியவர் சொல்கிறார் இந்த உதவிகளைக் கேட்போர் சிவசேனா கட்சியினராக இருக்கத் தேவையில்லை, எல்லா மாராட்டியர்களுக்கும் உண்டு என்கிறார்.

            காலமாற்றத்தினால் தாராவியில் சிவசேனாவில் தமிழர்களும் அங்கம் வகிக்கிறார்களாம். சிவசேனாவில் தமிழர் பிரிவு உருவாகிவிட்டதாம். 

            1970க்குப் பிறகு சிவசேனா இந்துத்வா அரசியலில் ஈடுபட்டது. 1989லிருந்து அது பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டிருந்தது. 1995-99 காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் இவர்கள் கூட்டணி அரசு செயல்பட்டது. 1999-2014 காலகட்டத்தில் இந்தக் கூட்டணி மஹாராஷ்டிராவில் காங்கிரசுக்கு எதிரணியாக இருந்து வந்தது. 2014 மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இரண்டுக்கும் முட்டு மோதல் ஏற்பட்டுப் பிரிந்தது. 2018இல் சிவசேனா பாஜகவுடனான உடன்படிக்கையை நீக்கிக் கொன்டது. ஆனால் மறுபடி 2019 பொதுத்தேர்தல் சமயம் இரன்டும் உடன்பாடு செய்துகொண்டது அதன்படி இப்போதைய மகாராஷ்டிரா அசெம்பிளியில் கூட்டணியாகப் பொட்டியிட்டு பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 54 இடங்களிலும் வெற்றி பெற்றது. 288 உறுப்பினர் சபையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பதால் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.

            பால் தாக்கரே தன் வாழ்நாளில் தன் தம்பி மகனான ராஜ் தாக்கரேயைத்தான் தனது வாரிசாக முன்னிறுத்தி வந்தார். அவர் திறமையாகவும், அரசியல் சாணக்கியத்தனம் உடைய வராகவும் இருந்ததால் அவர்தான் பால் தாக்கரேக்கு வாரிசு என்று மக்கள் நினைத்தனர். ஆனால் பால் தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரேவை ஓரங்கட்டிவிட்டார். அதன் பயன் அவர் தனியாக ஒரு மராத்திய சேனா தொடங்கி ஒதுங்கிவிட்டார். இப்போது பாஜகவின் 105 இடம், தன்னுடைய 54 இடமும் இருந்தால் 288 உறுப்பினர் அவையில் அமைச்சரவை கூட்டணி அரசு அமைத்திருக்கலாம். ஆனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மகன் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்கிற ஆசையால் தங்கள் கட்சிதான் முதலமைச்சராக ஆகவேண்டுமென்று பிடிவாதம் பிடித்ததோடு, தங்கள் பரம வைரியாகக் கருதிக் கொன்டிருந்த காங்கிரஸ் கட்சியின் துணையை நாடினார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இவை மூன்றும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் தங்கள் கூட்டணியைத் தன்னிச்சையாக முறித்துக் கொண்ட உத்தவ் தாக்கரே தங்களுக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக பாஜகவுக்கு துணை போகாமல், காங்கிரசையும், தேசியவாத காங்கிரசையும் நம்பி இருக்கிறது. இத்தனை காலம் கடும் எதிரியாக இருந்த சிவசேனாவை அவ்விரு கட்சிகளும் நம்ப மறுக்கின்றன. மிக ஜாக்கிரதையாக சிவசேனையின்  கோரிக்கையைப் பரிசீலித்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டணியில் இருந்து இத்தனை இடங்களை வெற்றி பெற்றுவிட்டு, அவர்களை உதறிவிட்டு எதிரிகளாகப் போட்டியிட்ட நம்மிடம் வந்திருக்கும் இவர்கள் நம்மை என்ன செய்வார்கள் என்கிற ஐயம் காங்கிரசுக்கு ஏற்பட்டிருப்பது மிகவும் நியாயமானது. ஆனால் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்று ஒரு கோஷத்தையும் இவர்கள் முன் வைத்து மறுபடியும் அவரவர் நிலைப்பாட்டினையும் மாற்றிக் கொள்வார்கள். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

            அப்படியில்லையென்றால் அங்கு மறுதேர்தல் வருமானால் பாஜக உத்தவ் தாக்கரேவை கைகழுவி விட்டு முன்பு பால் தாக்கரேயின் அரசியல் வாரிசாக விளங்கிய ராஜ் தாக்கரேயை மீண்டும் முன்னிறுத்தி அரசியல் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. இதில் எதுவும் நடக்கலாம், அவற்றை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

            அரசியல் என்பது சூதாட்டம் போலத்தான் என்ன நடக்கிறதோ, ஆனால் முடிவில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

கட்டுரை ஆக்கம்:
தஞ்சை வெ.கோபாலன், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613007.  # 9486741885