பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, June 11, 2019

ஜஸ்டிஸ் கட்சியும், திராவிட இயக்கங்களும்.


            ஜஸ்டிஸ் கட்சியும், திராவிட இயக்கங்களும்.

        (தமிழகத்தில் பிராமணர் அல்லாதோர் இயக்கம் தொடங்கி, நீதிக் கட்சியாகி பிறகு திராவிடர் கழகமாகி,  அதிலிருந்து தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. போன்ற பல கிளைக் கட்சிகள் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத்   தந்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)

                                      தஞ்சை வெ.கோபாலன்

ஜஸ்டிஸ் கட்சியென்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி உருவாகக் காரணம், தமிழ் நாட்டில் பிராமணர்களுடைய ஆதிக்கம் அரசாங்கத்திலும் சரி, சமூகத்திலும் சரி அதிகமாக இருக்கிறது என்ற எண்ணம் ஒருசாராரிடம் ஏற்பட்ட காரணத்தால், பிராமண ஆதிக்கத்தை எதிர்க்கவும், இதர மக்களின் நலன்களைப் பேணிக் காக்கவும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற ஒரு அமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது.   இது 1916ஆம் ஆண்டு டாக்டர் டி.எம்.நாயர் என்ற மலையாளம் பேசுபவராலும்,   தியாகராய செட்டி எனும் தெலுங்கு பேசுபவராலும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.  இந்த அமைப்பு தோன்றுவதற்கு முன்பு ஆங்காங்கே பிராமணரல்லாதார் கூடி அன்றைய சமூக நிலைமைகளை விவாதித்து, இப்படியொரு அமைப்பு இருக்குமானால், அரசில் பிராமண ஆதிக்கத்தை நீக்கவும், சமூகத்தில் தங்கள் உயர்வினை நிலைப்படுத்தவும் உதவும் எனும் நோக்கில் இந்த நலவுரிமைச் சங்கம் துவக்கப்பட்டது.

சமூகத்திலும், பிரிட்டிஷ் அரசாங்கத்திலும் பிராமணர்கள் அதிகம்பேர் இருந்தற்கான காரணங்களை ஆராய்ந்தால் ஏன் அப்படி இருந்தது என்பதன் உண்மையைப் புரிந்து கொள்ள முடியும். பிரிட்டிஷ்  இந்த நாட்டினுள் அடியெடுத்து வைத்து, வர்த்தகம் செய்ய வந்தவர்கள் சிறிது சிறிதாக நம்மவர்களின் ஒற்றுமையின்மை, பிரிவினைகள், ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால், இவர்களுக்குள் புகுந்து இவர்களை ஒடுக்கி அடக்கி வைத்துத் தாங்கள் இந்த நாட்டை கபளீகரம் செய்துவிடலாம் என்ற நோக்கம் அந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பு வரை நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே சமூகம் நான்காகப் பிரிந்து ஒவ்வொரு பிரிவினரும் இன்னென்ன பணிகளைச் செய்ய வேண்டுமென்கிற அமைப்பு இருந்தது. அதன்படி ஒரு பிரிவினர் மக்கள் நலனுக்காக யாகங்கள் புரிவது, இறைப் பணி செய்வது, வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் செய்ய வேண்டிய கருமங்கள் இவை பற்றியெல்லாம் செய்ய வேதம் படித்து மேற்படி பணிகளைக் கவனித்துக் கொள்ள பிராமணர் எனும் பிரிவும், நாட்டை ஆள்வது, எதிரிகளிடமிருந்து மக்களை பாதுகாப்பது, நிர்வாகங்களை ஒழுங்குமுறையாக நடத்துவது என்பது போன்ற பணிகளைச் செய்ய க்ஷத்திரியர்களும், மனித வாழ்வுக்குத் தேவையான பண்டங்களை வாங்கி, விற்று வாணிபம் செய்ய வைசியர்கள் எனும் பிரிவும், நாட்டில் உணவு உற்பத்தி, பாதுகாப்பு,  இதர மனித தெவைகளுக்கான பணிகளைச் செய்வதற்கென்று சூத்திரர் எனும் ஒரு பிரிவும் ஏற்பட்டது. இப்போது சூத்திரர் எனும் இந்தச் சொல் ஒரு தவறான சொல்போலவும், அது இழிவான சொல் என்றும் நினைப்பது போல ஒரு நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. அந்தச் சொல்லுக்கு “மூல காரணமாகச் செயல்படுவோர்” “காரணமானவர்என்பது பொருள். இந்த ஒவ்வொரு பிரிவினரும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அவரவர்களுக்குரிய தங்கள் பணிகளைச் செய்துகொண்டு, ஒருவருக்கொருவர் நல்லுறவுடன் வாழ்ந்து வந்தனர். அந்தணர், நாவிதர், வண்ணார் போன்ற பொதுவான தொழில் செய்வோருக்கெல்லாம் அந்த நாளில் ஆண்டுதோறூம் அறுவடை நேரத்தில் இவர்களுக்கு இத்தனை மூட்டை நெல் கொடுப்பது என்பது வழக்கத்தில் இருந்தது. அவ்வப்போது கணக்கு பார்த்துக் கொடுப்பது அல்ல. அதுபோலவே ஒருவர் தொழிலுக்கு இதரர் மதிப்பு கொடுத்து, ஒருவர் தொழிலில் மற்றவர் தலையிடாமல், ஏற்றத் தாழ்வு பார்க்காமல் வாழ்க்கை நடத்தினர். பல்லாயிரம் ஆண்டுகளாக இவர்கள் நான்கு பிரிவினரும் தனித்தனியாகத் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை முறை, திருமண உறவுகள், பழக்க வழக்கங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏற்படுத்திக் கொண்டிருந்ததால், இந்த பிரிவினர்களை ஜாதி என்ற பெயரால் பிரித்துப் பார்க்கத் தொடங்கினர். ஜாதி என்பது பிறப்பாம் வருவதல்ல, அவரவர் செய்யும் தொழிலால் வந்தது என்பதுதான் நம் வரலாறு சொல்லும் செய்தி. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவரவர் குலத் தொழிலைச் செய்யாதவர் தாங்கள் எந்த குலம் என்று கூறிக் கொள்வதில் பெருமை இல்லை. பிராமண ஜாதியில் பிறந்த ஒருவன் வேதம் ஒதி, யாகங்கள் செய்து, இறைப்பணியாற்றி, உலகோர் நல்வாழ்க்கைக்காக வாழாமல், பாட்டா கடையில் “ஷு” விற்கும் பணியில் இருந்தால் அவனை பிராமணத் தொழில் செய்பவன் என்று சொல்ல முடியுமா? வியாபாரம் செய்வானானால் அவன் வைசியன்.  வேறு ஜாதியில் பிறந்து புதுச்சேரி உப்பளம் முத்துமாரியம்மன் கோயிலில் மிகச் சிறப்பாக பூஜைகள் செய்துவந்த வேறு ஜாதிப் பையனைப் பார்த்து பாரதியார் தன் மகளிடம் “பாப்பா! பார்! அந்தப் பையன் அந்தணத் தொழிலை எத்துணை அழகாகச் செய்கிறான் பார்!” என்று சொல்லி வியந்து அவனுக்கும் பூணூல் அணிவித்து, அவன் செய்யும் தொழிலுக்கு அது தேவை என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார்.

            பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இங்கே வந்து நாடுபிடிக்கத் தொடங்கிய காலத்தில் இந்த சீரான சமூக அமைப்பு அழியத் தொடக்கக் காரணம் 1885இல் நடந்த சிப்பாய் கலவரம். இந்தியர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள், இனி முன்போல நாம் இவர்களை ஆடு மாடுகளைப் போல அடைத்து வைத்துப் பிழைக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள இந்த கலவரம் காரணமானது. அதுவரை அவர்கள் காலடி எடுத்துவைத்த 17ஆம் நூற்றாண்டு தொடங்கி, இந்தியர்களைக் கல்வி அறிவில்லாமல், பணிசெய்யும் கூலிகளாகவே அவர்கள் நடத்தி வந்தார்கள். 1885 சிப்பாய் கலவரம் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாக ஆனது. நமது பாரம்பரிய கல்வி முறைகளையெல்லாம் ஆங்கிலேயர்கள் தகர்த்து விட்டதோடு, இந்தியன் என்றால் கூலி என்றே எண்ணத் தொடங்கினார்கள். காரணம் இவர்கள் ஆக்கிரமித்த இதர நாடுகளில் எல்லாம் அவர்கள் கால்வைத்த 50 ஆண்டுகளுக்குள் மதமாற்றம் மூலம் எல்லா நாடுகளையும் கிறிஸ்தவ நாடுகளாக மாற்ற முடிந்தது. ஆனால் உலகில் கிரேக்கம், சீனம், எகிப்து, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே எல்லா விதங்களிலும் மேலோங்கியிருந்தது. அப்படி இருந்ததால் இந்தியாவை அத்தனை சீக்கிரம் தங்கள் வசம் கொண்டு வர முடியவில்லை. இங்கு மக்கள் பிரிந்திருந்தாலும் அவரவர் பணிகளில் அக்கறையும் ஒற்றுமையும் கொண்டு இருந்தனர். இதில் கை வைத்தால்தான் தாங்கள் கால் ஊன்ற முடியும் என்ற எண்ணம் காரணமாக இந்தியாவின் பாரம்பரிய குருகுல கல்வி முறையை ஒழித்துக் கட்டிவிட்டு லார்டு மெக்காலே என்பவரைக் கொண்டு ஒரு புதிய கல்வி முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். 18ஆம் நூற்றாண்டில் உருவான இந்த கல்வி முறை முதலில் பெரு நகரங்களிலும், பின்னர் சிறிது சிறிதாக இதர இடங்களுக்கும் பரவத் தொடங்கியதன் விளைவு, ஆங்கிலக் கல்வி இங்கே நம் பண்பாட்டுக் கல்வியை ஒழித்து விட்டது. இந்திய கல்வி முறை மிகச் சிறப்பானதாக இருந்த போதிலும் எல்லா துறைகளையும் புரிந்துகொள்ளக் கூடிய குருகுல அமைப்பாக இருந்த போதும், புதிதாக புகுத்தப்பட்ட மெக்காலே கல்வித் திட்டம் இங்கே வேகமாகப் பரவியது. நூறாண்டு காலம் என் கல்வி முறை இந்த நாட்டில் நிலைநிறுத்திவிட்டால், இந்த நாட்டையே கிறிஸ்தவ நாடாக மாற்றிக் காட்டுவேன் என்று மார்தட்டினான் மெக்காலே. அப்படி மெக்காலேயின் கல்வித் திட்டம் இங்கே வந்ததன் விளைவாக, ஏற்கனவே கற்றலும், கற்பித்தலும் போன்ற பணிகளை மேற்கொண்டிருந்த பிராமணர்கள் அந்த மெக்காலே கல்வித் திட்ட்த்தை முதலில் ஏற்றுப் படித்துத் தங்களை அவர்கள் வழியில் பயணிக்கத் தயார் செய்து கொண்டனர். 1885 சிப்பாய் கலகத்துக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை இங்கிலாந்து அரசியான ராணி விக்டோரியா நேரடியாக ஏற்றுக் கொண்டார். இனி சிப்பாய்கள் கலவரம் போல எதுவும் நேராமல் இருக்க மெக்காலே கல்வியைக் கற்றவர்களை அரசாங்கத்தில் தங்களுக்குப் பணிபுரிய நியமனம் செய்து கொண்டனர். பிராமணர்கள் தங்கள் பாரம்பரிய கல்வி முறையைக் கற்றிருந்ததால் மெக்காலே கல்வியை உடனடியாக படித்து மேற்சொன்ன பணிகளை யெல்லாம் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். எண்ணிக்கையில் குறைவான இவர்கள் மிக அதிகமான பங்கினை அரசாங்க வேலைகளில் இருக்க முடியக் காரணம் இதுவே. அந்த கால நிலைமை அத்தகைய சூழ்நிலையை உருவாக்கியதே தவிர ஒரு குறிப்பிட்ட ஜாதியாரை பதவிகளில் உட்கார வைத்தது வேண்டுமென்று நடந்ததல்ல, சூழ்நிலை காரணமாகவும் தேவைகளின் காரணமாகவும் நடந்தவை.

            இந்தக் காரணம் கொண்டு நமது பழைய பண்பாட்டு பிரிவுகள், நான்கு வர்ணங்களாக இருந்து வாழ்ந்த வாழ்க்கை கலைந்து யாரும் எதையும் செய்யலாம் என்று ஆனபோது, க்ஷத்திரியன் சூத்திரன் பணியை ஏற்கவும், பிராமணன் வைசிய அல்லது சூத்திரன் பணியைச் செய்யவும், எந்த பிரிவினரும் வைசியனாகலாம் என ஒரு சமூகக் குழப்பம் ஏற்பட்டு வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை உருவானது. ஆங்கிலத்தில் First come First served என்பார்களே அதுபோல அவரவர் ஆங்கிலக் கல்வியைப் படித்தவர்கள் பிரிட்டிஷாரிடம் பணிபுரிய நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வரவே நம் சமுகத்தின் கட்டுக் கோப்பு உடைந்து அவன் விரும்பியபடி இந்தியர்கள் பிரிவினைக்கு வழிகோலி நானா, நீயா என்ற போட்டியை இங்கே உருவாக்கி விட்டார்கள். ஆங்கிலேயர்களுக்குச் சேவை புரிய எல்லா பிரிவினரும் போட்டியிட்டாலும், கற்பது, கற்பிப்பது எனும் தொழிலில் இருந்த பிராமணர் முந்திக் கொண்டு அரசாங்கப் பணிகளைப் பெரிதும் ஆக்கிரமித்துக் கொண்டனர். இன்னொரு பகுதி பிராமணர்கள் வெள்ளைக்காரன் மிலேச்சன் அவனிடம் ஊழியம் பார்ப்பது பாபம் எனக் கருதி தேசபக்த இயக்கமான காங்கிரசில் சேர்ந்தனர். மாற்று இயக்கங்கள் பிராமண எதிர்ப்பு நிலை எடுத்ததால் அவர்கள் ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அதனால் காங்கிரஸ் கட்சியில் பிராமணர்கள் அதிகம் இருக்கக் காரணமாகிவிட்டது. காங்கிரசின் தொடக்கக் காலத்தில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்ற பிரிவுகள் உண்டான போது இவ்விரு பிரிவினரும் இரு பிரிவுகளிலும் இருந்தனர். மிதவாத காங்கிரசார் பலர் பிராமண வழக்கறிஞர்கள். தீவிரவாதப் பிரிவில் வ.வெ.சு.ஐயர், சுப்ரமணிய சிவா, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மகாகவி பாரதியார் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

சென்னை மாகாணச் சமூகத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூறாண்டின் முற்பகுதியிலும் பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோருக்கிடையே வகுப்புவாரியாகப் பிரிவினை ஏற்பட்டிருந்தது. பிராமணர்கள், அன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மொத்த மக்கள் தொகையில் தங்கள் சதவிகிதத்தை விட அதிக அளவில் அரசு பணிகளில் இடம் பெற்றிருந்ததும், பிற சாதியினரிடம் பேதம் காட்டிய விதமும் இப்பிரிவினைக்கு முக்கிய காரணங்கள். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிராமணரல்லாதோருக்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க நடந்த பல முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. நீதிக்கட்சியின் உருவாக்கம் இத்தேவையைப் பூர்த்தி செய்தது. இக்கட்சி தன் ஆரம்ப ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டமன்றங்களிலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமும் முறையிட்டு அரசு பணிகள் மற்றும் சட்டமன்றங்களில் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற முயற்சி செய்தது.
மாண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம் 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.   இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் மகாத்மா காந்தியடிகளால் செல்வாக்குப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியடைந்தது.  இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938இல் ஈ.வே.ராமசாமி நாயக்கர்  நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய ஈ. வே. ராமசாமி நாயக்கர், கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் நீதிக்கட்சிஎன்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பின்னால் அப்பிரிவு அடியோடு செயலிழந்து விட்டது.
            பிரிட்டிஷ் இந்திய அரசியலில் நீதிக்கட்சி மத்திய  நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்தே செயல்பட்டது. பிராமண எதிர்ப்பே இக்கட்சியின் கொள்கைகளின் மையக்கருத்தாக இருந்தது. அன்னிபெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் பிராமணர்களின் ஆதிக்கம் அதிகரிக்குமென நீதிக்கட்சி கருதியதால் அதனையும் எதிர்த்தது; காங்கிரசின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டது. மகாத்மா காந்தி வர்ணாசிரமத்தைப் புகழ்ந்ததால் அவரையும் கடுமையாக எதிர்த்தது. தேசியவாதத்தை முன்னிறுத்திய காங்கிரசில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால், காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் அது ஆதரிக்கவில்லை. பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனுக்காகச் செயல்படுவதாக நீதிக்கட்சி கூறினாலும், விரைவில் அது முஸ்லிம்கள் மற்றும் பட்டியல் பிரிவு மக்களின் ஆதரவை இழந்து விட்டது. பிராமணரல்லாத வெள்ளாள சாதியினரான முதலியார்கள் மற்றும் பிள்ளைமார்கள், பலிஜா நாயுடுகள், பெரி செட்டிகள், காப்புகள், கம்மாக்கள் ஆகிய ஜாதிப் பிரிவினர்களின் நலனுக்காக அது செயல்படுவதாக முஸ்லிம்களும் பட்டியல் பிரிவு மக்களும் குற்றம் சாட்டினர்.
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது, கல்வி மற்றும் சமய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது ஆகியவை நீதிக்கட்சி அரசுகளின் சாதனைகள் எனலாம். நீதிக்கட்சி ஆட்சிகாலத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டன. சென்னை நகரின் தற்கால தி.நகர்ப் பகுதி நீதிக்கட்சி அரசுகளால் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்தபோது 1937–40  காலகட்டத்தில் நடைபெற்ற இந்தி எதிர்புப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது. 1967 இலிருந்து தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பிராமணர் அல்லாதாருடைய திராவிடக்  கட்சிகளான திமுக  மற்றும் அதிமுக ஆகியவற்றுக்கு நீதிகட்சியும் திராவிடர் கழகமும் கொள்கை மற்றும் அரசியல் ரீதியாக முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
            இந்திய சமூக அமைப்பில் வட இந்திய பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் சென்னை மாகாணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 3.2 விழுக்காடு இருந்த தமிழ் பிராமணர்கள் 1850களில் இந்தியர்கள் வகிக்கக்கூடிய அரசு பதவிகளில் பெருமளவில் இடம்பெற்றிருந்தனர். இதன் மூலம் அவர்களது அரசியல் செல்வாக்குப் பெருகியது.
             19ம் நூற்றாண்டிலும் 20ம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இந்திய நிர்வாகப் பணிகள் மற்றும் நகர்ப்புறங்களில் புதிதாக உருவான தொழில்களிலும் பிராமணர்கள் அதிகமாக பணியில் இருந்தனர். பிராமணர் சாதியில் கல்வியறிவும் ஆங்கில அறிவும் அதிகமாக இருந்ததே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம். இதனால் பிராமணரல்லா தோருக்கும் பிராமணருக்குமிடையே இருந்த அரசியல், சமூக, மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாயின. அன்னி பெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்தால் இந்தப் பாகுபாடு மேலும் அதிகரித்தது என்ற கருத்தும் இருந்தது.
          பிராமணர்கள் சென்னை மாகாண சட்டமன்றத்திலும் அதிகமாகக்  காணப்பட்டனர். 1910–20 காலகட்டத்தில் ஆளுனரால் சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது நிர்வாக உறுப்பினர்களில் எட்டு பேர் பிராமணர்கள்.   நியமிக்கப்பட்டவர்களில் மட்டுமல்லாது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினர் பிராமணர்கள். இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாகாணக் குழுவிலும்  இவர்கள்தான் அதிகம் இடம் பெற்றிருந்தனர். சென்னை மாகாணத்தில் அப்போது வெளி வந்து கொண்டிருந்த 11 முக்கிய இதழ்களில் நான்கு (தி இந்து, “இந்தியன் ரெவியூ, “சுதேசமித்திரன் மற்றும் “ஆந்திரப் பத்திரிக்கா) ஆகிய இதழ்கள் பிராமணர்களுடையவை. மேலும், அன்னி பெசண்டின் நியூ இந்தியா பத்திரிகையும் பிராமணர்களுக்கு ஆதரவு நிலை எடுத்தது.   மீதமிருந்த ஆறில் இரண்டு பிரிட்டிஷாருக்கு ஆதரவு இதழ்கள் (மெட்ராஸ் மெயில், “மெட்ராஸ் டைம்ஸ்); மேலும் நான்கு எவாஞ்செலிக்கக் கிறித்தவ மதப் பிரச்சார இதழ்கள். இந்த ஆதிக்கம் சரியானதல்ல  எனப் பிராமணரல்லாத தலைவர்கள் துண்டறிக்கைகளிலும் சென்னை ஆளுனருக்கு எழுதிய திறந்த கடிதங்களிலும் தெரிவித்து வந்தனர்.
            20ம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் சென்னை மாகாணத்தில் பிராமணர்கள் தங்களுக்குள் பல குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  இவைகளுக்கிடையே இன்னொன்று பிராமணரல்லாதோர் குழு என்ற பெயரில் தோன்றி பிறகு நீதிக்கட்சியாக உருவெடுத்தது.
            பிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்கு குறித்து வரலாற்றாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியில் பிரிட்டிஷாருக்குப் பங்கிருந்தாலும் அது தனிப்பட்ட முறையில் தென்னிந்தியாவில் செல்வாக்கு கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பிராமணரல்லாதோர் இயக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தாலும், அவ்வளர்ச்சி அவர்களது செயல்களால் மட்டும் நிகழவில்லை. பிராமணரல்லாதோர் இயக்கம் என்பது இந்தியாவில் அப்போது எழுச்சி பெற்றிருந்த இந்திய தேசியவாத காங்கிரசுக்கு எதிர்ப்பு இயக்கமாகவே செயல்பட்டது, பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளால் தான் அது அப்படி உருவாக்கப்பட்டது . பிராமணர் மற்றும் பிராமணரல்லாதோர் இடையே நிலவிய சமூகப் பிளவே நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணம் என்கிறார்கள் சிலர். ஆனால் அப்போது இந்தியாவில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உருவான தேசிய காங்கிரஸ் இயக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் பிரிட்டிஷாரே தொடர்ந்து இந்தியாவை ஆளவேண்டுமென்கிற கோரிக்கையுடன் இந்த நீதிக் கட்சி தொடர்ந்து இயங்கி வந்தது.
                 நீதிக்கட்சியின் வளர்ச்சியில் பிரிட்டிஷ் அரசின் பங்கு குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும், அது சிறிய அளவிலோ அல்லது முழுவதுமோ இருந்திருக்க வேண்டுமென்று பெரும்பாலான வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
                    20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வலுப்பெற்ற பிராமணர் குழுவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பிராமணரல்லாதோர் பலரை அரசு பணிகளில் நியமிக்கத் தொடங்கினர். 1903ம் ஆண்டு சென்னை ஆளுனர் சி.சங்கரன் நாயரை உயர் நீதிமன்ற  நீதிபதியாக நியமித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு . இவர் தமிழரல்ல, மலையாளி. (பாஷ்யம் அய்யங்கார் என்பவர் ஓய்வு பெற்றதால் அக்காலியிடம் உருவாகியிருந்தது). 1912 இல் சர் அலெக்சாந்தர் கார்டியூவின் முயற்சியால் சென்னை அரசுச் செயலகம், அரசுப் பணி நியமனங்களில் பிராமணரல்லாதோர் என்றொரு தனிப்பிரிவை உருவாக்கியது. 1918 இல் இரு பிரிவினருக்கும் தனித்தனியே பட்டியல்கள் உருவாக்கப்பட்டு நியமனங்களில் பிராமணரல்லாதோருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாயிற்று.
                   பிரிட்டிஷ் இந்தியாவில் மொழிக் குழுக்கள் அரசியலில் ஈடுபடுவது பரவலாக இருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸ் தலைமையில் சுதந்திரம் பெறவேண்டுமென்கிற வேகம் இருந்தும், சுதந்திர  இந்திய அரசை விடப் பிரிட்டிஷ் ஆட்சியே மேலெனக் கருதிய குழுக்களும் இங்கே இருந்தன.
              1909 இல் பி. சுப்ரமணியம், எம். புருஷோத்தம் நாயுடு எனும் இரு வழக்கறிஞர்கள் சென்னை பிராமணரல்லாதோர் சங்கம்என்ற அமைப்பை உருவாக்கி அக்டோபர் 1909 க்கு முன்னர் ஆயிரம் பிராமணரல்லாத உறுப்பினர்களைச் சேர்க்கப் போவதாக அறிவித்தனர். ஆனால் பிராமணரல்லாத மக்களிடையே இந்த முயற்சி எவ்விதத்  தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை;  இந்த அமைப்பும் நீர்த்துப் போனது. 1912 இல் சரவணப் பிள்ளை,  ஜி. வீராசாமி நாயுடு, துரைசாமி நாயுடு, எஸ். நாராயணசாமி நாயுடு போன்ற பிராமணரல்லாதோர் தலைவர்கள் சென்னை ஐக்கிய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நடேச முதலியார் என்பவர் இதன் செயலாளராக இருந்தார். இவ்வமைப்பு அரசியலைத் தவிர்த்துச் சமூகப் பணிகளில் மட்டும் ஈடுபட்டது.   அக்டோபர் 1, 1912 இல் இவ்வமைப்பு புனரமைக்கப்பட்டு சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்டது. சென்னை நகரத்தில் பல கிளைகளைத் தொடங்கிய இச்சங்கத்தின் முக்கிய சாதனை பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நிறுவியது.   மேலும் இது ஆண்டுதோறும் பிராமணரல்லாத பட்டதாரிகளுக்காக விழாக்களை நடத்தியதுடன், அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கும் நூல்களையும் வெளியிட்டது.
           இந்திய சட்டமன்றத்துக்கு நடந்த 1916 தேர்தலில் பிராமணரல்லாத வேட்பாளர்களான டி. எம். நாயர் (தெற்கு மாவட்டங்கள் தொகுதி- இவர் மலையாளி) மற்றும் பனகல் அரசர் (ஜமீன்தார்கள் தொகுதி- இவர் தெலுங்கர்), தமிழ் பிராமண வேட்பாளர்களான ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீநிவாச சாஸ்த்திரி மற்றும் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் ஆகியோரால் தோற்கடிக்கப்பட்டனர். அதே ஆண்டு உள்ளாட்சி அமைப்புகள் தேர்தலில் தியாகராய செட்டியும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவும் ஹோம் ரூல் இயக்க ஆதரவு பிராமண வேட்பாளர்களால் தோற்கடிக்கப் பட்டனர். இந்தத் தோல்விகள் இரு குழுவினருக்கிடையேயான பகையுணர்வை அதிகரித்து, பிராமணரல்லாதோருக்காகத் தனியே ஒரு அரசியல் அமைப்பு உருவாக உடனடிக் காரணமாக அமைந்தன.   நவம்பர் 20, 1916 இல் பிராமணரல்லாதோரின் 30 முக்கிய தலைவர்கள் தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயரின் தலைமையில் சென்னை விக்டோரியா ஹாலில் சந்தித்தனர். அக்கூட்டத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிராமணர் அல்லாதார் இயக்கம் உருவானது. பிராமணரல்லாதோரின் குற்றச்சாட்டுகளை முன் வைக்க ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் செய்தித்தாள்களை நடத்துவது இவ்வமைப்பின் குறிக்கோள் என்று அறிவிக்கப்பட்டது. தியாகராய செட்டியாரும், டாக்டர் நாயரும், சென்னை நகரசபை அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரணியில் இருந்தவர்கள் ஆனால் நடேச முதலியாரின்  முயற்சியால் ஓரணியில் ஒருங்கிணைந்தனர். இதுவே பின்னாளில் நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) என்று பரவலாக அழைக்கப்படலாயிற்று. ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழை அது வெளியிட்டதால் இப்பெயர் ஏற்பட்டது. டிசம்பர் 1916 இல் இவ்வமைப்பு பிராமணரல்லாதோர் கொள்கை அறிக்கைஒன்றை வெளியிட்டது. அதில் பிரிட்டிஷ் அரசுக்குத் தங்கள் உண்மையான விசுவாசத்தையும், சுதந்திரம் வேண்டி போராடிக் கொண்டிருந்த காங்கிரசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தும் அறிவித்த அதேவேளை, நிர்வாகத்தில் பிராமணர் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைக்கவும் முடிந்தது.   இந்த அறிக்கையைத் தேசியவாத நாளிதழான “தி இந்து   (20 டிசம்பர் 1916): “தி இந்து
பின்வருமாறு  விமர்சித்தது
         இந்த அறிக்கை எமக்கு மிகுந்த வியப்பினையும் வேதனையையும் அளிக்கிறது. இவ்வறிக்கை அது பேசும் பொருளைப் பற்றித் தவறான, வெகுவாகத் திரிக்கப்பட்ட கண்ணோட்டதை முன் வைக்கிறது. பெரும் பாரத சமூகத்தினிடையே பகையுணர்வை வளர்ப்பது மட்டுமே இதன் நோக்கமாகக் கொள்ள முடியும்.
         இந்து நேசன் இதழ் இப்போது இந்தப் புதிய அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியமென்ன?” என்று வினவியது. ஹோம் ரூல் இயக்கத்தின் “நியூ ஏஜ் இதழ், இப்புதிய அமைப்பை நிராகரித்ததுடன் அது விரைவில் அழிந்து விடும் என்றும் கருத்து தெரிவித்தது. பெப்ரவரி 1917ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், கூட்டுப்பங்கு நிறுவனம் தலா 100 ரூபாய் மதிப்புள்ள 640 பங்குகளை விற்று முதலீடு திரட்டியது.  இப்பணத்தைக் கொண்டு ஒரு அச்சுக் கூடத்தை வாங்கி  “ஜஸ்டிஸ் “ என்ற பெயரில் ஓர் இதழை வெளியிட முயன்றது. முதலில் சி. கருணாகர மேனன் (இவரும் ஒரு மலையாளி)  இதழாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார்.   ஆனால் அவருடனான பேச்சுவார்த்தைகள் முறிந்து நாயரே அவ்விதழின் கௌரவ ஆசிரியரானார். பி. என். ராமன் பிள்ளையும், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையும், துணை ஆசிரியர்களாகப் பணியாற்றினர். இதன் முதல் பதிப்பு பெப்ரவரி 26, 1917 இல் வெளியானது. ஜூன் 1917 இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்ட “திராவிடன் என்ற தமிழ் இதழையும் வெளியிடத் தொடங்கியது. பின்னர் ஏ. சி. பார்த்தசாரதி நாயுடு ஆசிரியராக இருந்த “ஆந்திர பிரகாசிக்கா  என்ற தெலுங்கு நாளிதழையும் நீதிக்கட்சி வாங்கியது. ஆனால் 1919 ம் ஆண்டு நிதிப்பற்றாக் குறையினால் இவ்விரு நாளிதழ்களும் வார இதழ்களாக மாற்றப்பட்டன.
                 ஆகஸ்ட் 19, 1917 இல் கோயம்புத்தூரில் பனகல் அரசர் தலைமையில் முதல் பிராமணரல்லாதோர் மாநாடு நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் இதுபோலப் பல மாநாடுகள் கூட்டப்பட்டன. அக்டோபர் 18 இல் டி. எம். நாயரால் எழுதப்பட்ட கட்சிக் குறிக்கோள்கள் எனும் அறிக்கை “தி இந்து “நாளிதழில் வெளியாகின:
1. தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினர்களையும் கல்வி, சமூகம்,                பொருளாதாரம், அரசியல், பொருள் மற்றும் அற வழியில்ன்னேற்றுவது.                              2. பிராமணரல்லாத அனைத்து சமூகத்தினரின் நலனைப் பாதுகாக்க  தென்னிந்திய               மக்களின் கோரிக்கைகளையும் கருத்துகளையும் தக்க வகையில் உரிய காலத்தில் அரசின் முன் வைப்பது; பொதுக் கேள்விகளை விவாதிப்பது.                                                               3. பொதுக் கருத்து தொடர்புடைய கொள்கைகளைக் கருத்தரங்குகள், அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பிற வழிகள் மூலமாகப் பரப்புவது.
                 ஆகஸ்ட்-டிசம்பர் 1917 காலகட்டத்தில் சென்னை மாகாணம் முழுவதும் மாநாடுகள் நடத்தப்பட்டன. பெவாடா, சேலம், திருநல்வேலி, கோவை, புலிவெந்தலா, பிக்கவோல் ஆகியவை மாநாடுகள் நடத்தப்பட்ட ஊர்களுள் சில. இந்த மாநாடுகளும் பிற கூட்டங்களும் அரசியல் களத்தில் நீதிக்கட்சியின் நுழைவைப் பறைசாற்றின.
              1916–20 காலகட்டத்தில் நீதிக்கட்சி காங்கிரசின் இரு வேறு குழுக்களுடன் அரசியல் களத்தில் மோதியது. (அவை பிராமணர் ஆதிக்கம் மிகுந்த மிதவாத காங்கிரஸ், இன்னொன்று தீவிர அரசியலைப் பின்பற்றிய தீவிரவாத காங்கிரஸ்)  பிராமணரல்லாதோருக்கு அரசு அதிகாரத்தில் இட ஒதுக்கீடு தேவையெனப் பிரித்தானிய அரசிடமும் பொது மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. காங்கிரசின் மூன்றாவது குழு,  அணி பிரிட்டிஷ்  அரசை எதிர்த்து ஒத்துழையாமைக் கொள்கையை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது.
                1916ம் ஆண்டு பிரம்ம ஞான (தியோசோபிகல்) சங்கத்தின் தலைவியான அன்னிபெசண்ட், ஹோம் ரூல் லீகினை உருவாக்கி இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடலானார். அவரது தலைமையகம் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த்து.  அவருடைய அரசியல் ஆதரவாளர்களில் பலர் பிராமணர்களாக இருந்தனர், காரணம் அப்போது காங்கிரஸ் இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்த்து. அன்னிபெசண்டின் இந்தியப் பண்பாடு குறித்து கருத்துக்கள் பிராமணரல்லாத இயக்கத்துக்கு ஏற்புடையதாக இல்லை.  இவற்றைக் கல்வி கற்ற பிராமணரல்லாதோர் கேள்விக்குட் படுத்தத் தொடங்கி யிருந்தமையால் சென்னை மாகாணத்தில் ஹோம் ரூல் இயக்கத்துக்கும் பிராமணரல்லாதோர் இயக்கத்துக்கும் மோதல் உருவானது.
             ஹோம் ரூல் இயக்கம் துவக்கப்படும் முன்னரே டி. எம். நாயருக்கும் அன்னி பெசண்ட்டுக்குமிடையே உரசல் ஏற்பட்டிருந்தது. நாயர் தனது மருத்துவ ஆய்விதழில்  பிரம்மஞானத் தலைவரின் பழக்கங்களைத் தாக்கி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனைக் கண்டித்து நாயருக்கு எதிராகப் பெசண்ட் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தோல்வியடைந்திருந்தது.
            பெசண்ட் பிராமணர்களுடன் கொண்டிருந்த நட்புறவும், அவரது இந்தியா குறித்த பார்வை பிராமணர் கருத்துகளின் அடிப்படையில் அமைந்திருந்ததும் அவருக்கும் நீதிக்கட்சிக்குமிடையே மோதலை உருவாக்கியது. டிசம்பர் 1916 இல் வெளியான நீதிக்கட்சி கொள்கை அறிக்கையில் அன்னிபெசண்டின் ஹோம் ரூல் இயக்கத்திற்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருந்தன. பெசண்டின் “நியூ இந்தியா இதழ் அந்த அறிக்கையை விமர்சித்தது. ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி, தங்கள் வழக்கப்படி தனக்கெதிரான கொள்கை உடையவர்களைச் சொல்வது போல் , தனது இதழ்களில் பெசண்ட்டை ஐயர்லாந்து பாப்பாத்திஎன்று வருணித்தது. தினமும் பெசண்ட்டையும் அவரது இயக்கத்தையும் தாக்கி நீதிக்கட்சி இதழ்கள் செய்திகள் வெளியிட்டன. திராவிடன் இதழில் ஹோம் ரூல் என்பது பிராமணர்களின் ஆட்சிஎன்ற தலைப்பில் செய்தி வெளியானது. ஹோம் ரூல் இயக்கமானது அரசின் கெடுபிடிகளின் பாதிப்பில்லாத வெள்ளைப் பெண்மணியால் நடத்தப்படும் அரசியல் இயக்கம் என்றும் அதன் விளைவுகள் பிராமணர்களுக்கே சாதகமாக அமையும் என்றும் நாயர் விமர்சித்தார்.
                  ஆகஸ்ட் 20, 1917 இல் பிரிட்டிஷ் அரசின் இந்தியச் செயலர் எட்வின் மாண்டேகு இந்தியாவின் நிர்வாகத்தில் இந்தியரின் பங்கை அதிகரிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளை வளர்க்கவும் சில அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்தார். இவ்வறிவிப்பு சென்னை மாகாணத்தின் பிராமணரல்லாத தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் இறுதியில் நீதிக்கட்சி தனது கோரிக்கைகளை முன்வைத்துப் பல மாநாடுகளை நடத்தியது. 1909 இல் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது போலவே பிராமணரல்லா தோருக்கும் மாகாண சட்டமன்றங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும்படி தியாகராய செட்டி மாண்டேகுவுக்கு தந்தி அனுப்பினார். காங்கிரசின் பிராமணரல்லாத தலைவர்கள் நீதிக்கட்சிக்குப் போட்டியாகச் சென்னை மாகாண சங்கம் ஒன்றை உருவாக்கினர். பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர், கல்யாணசுந்தர முதலியார், பி.வரதராஜுலு நாயுடு, கூட்டி கேசவ பிள்ளை ஆகியோர் இச்சங்கத்தின் தலைவர்கள். தங்கள் கோரிக்கையினை பலவீனப்படுத்த பிராமணர்களின் சார்பாக இச்சங்கம் செயல்படுவதாக நீதிக்கட்சி குற்றம் சாட்டியது.
                   டிசம்பர் 14, 1917 இல் மாண்டேகு அரசியல் சீர்திருத்தங்கள்குறித்து பலதரப்பினரின் கருத்தறிய சென்னை வந்தார். ஓ. கந்தசாமி செட்டி தலைமையில் நீதிக்கட்சி தூதுக்குழுவும், கேசவ பிள்ளை தலைமையில் சென்னை மாநில சங்க தூதுக்குழுவும் வேறு இரு பிராமணரல்லாதோர் தூதுக்குழுக்களும் அவரைச் சந்தித்து தங்கள் தரப்பினை முன் வைத்தன. இரு தரப்பினரும் பலிஜா நாயுடுகள், பிள்ளைகள், முதலியார்கள், செட்டிகள், பஞ்சமர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வேண்டின. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும், “மெட்ராஸ் மெயில்போன்ற அரசு ஆதரவு இதழ்களும் இந்நிலைப்பாட்டை ஆதரித்தன. ஆனால் மாண்டேகு ஜாதிகளுக்குள் பிரிவினை ஏற்படுத்தி,  சில சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை விரும்பவில்லை. ஜூலை 2, 1918 இல் வெளியான அவரது அதிகாரப்பூர்வ அறிக்கை அதைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டது.
                     தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் டி. எம். நாயரை லண்டனுக்கு அனுப்பி இடஒதுக்கீடு கோர நீதிக்கட்சி முடிவெடுத்தது. ஜூன் 1918 இல் லண்டனில் இவர் பல முயற்சிகளில் ஈடுபட்டார். அறிக்கைகள், கட்டுரைகள் எழுதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியும் நீதிக்கட்சியின் நிலைபாட்டினை வெளிப்படுத்தினார். ஆனால் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவுடன் ஒத்துழைக்க நீதிக்கட்சி மறுத்து விட்ட்து. இந்திய ஆட்சிப்பணியின் இரு பிராமண உறுப்பினர்கள் (ரைட் ஆனரபிள் வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி மற்றும் சுரேந்திரநாத் பானர்ஜீ)  இதில் இடம்பெற்றிருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட்து. ஆனால் இந்தக் குழுவின் இந்தியரல்லா உறுப்பினர்களின் ஆதரவை நீதிக்கட்சி பெற்றிருந்தது
              1919–20 காலகட்டத்தில் இந்திய அரசுச் சட்டம் 1919 க்கு இறுதி வடிவம் கொடுக்கப் பிரிட்டிஷ் நாடாளுமன்ற குழு, கூட்டங்களைக் கூட்டியது.  ஆற்காடு ஏ.ராமசாமி முதலியார், வெங்கட ரெட்டி நாயுடு, எல். கே. துளசிராம், கோக்க அப்பராவ் நாயுடு ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு ஐக்கிய மாகாணத்தில் நடைபெற்ற இக்கூட்டங்களில் கலந்து கொண்டது. பனகல் அரசர் ராமராயநிங்கார் அனைத்திந்திய நிலச்சுவான்தார்கள் சங்கம் மற்றும் சென்னை ஜமீந்தார் சங்கங்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். ரெட்டி நாயுடு, ராமசாமி முதலியார் மற்றும் ராமராயநிங்கார் ஆகியோர் பெரிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்களில் பேசி, உள்ளூர் இதழ்களில் எழுதித் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவு திரட்டினர். டி. எம். நாயர் ஜூலை 17, 1919 இல் மரணமடைந்தார்.  நாயரின் மரணத்துக்குப் பின்னர் ரெட்டி நாயுடு நீதிக்கட்சியின் செய்தித் தொடர்பாளரானார். ஆகஸ்ட் 22 இல் நாடாளுமன்றக்குழு முன் தோன்றி நீதிக்கட்சியின் கருத்தினை முன்வைத்தார். நீதிக்கட்சியின் தரப்புக்கு குழுவில் இடம்பெற்ற கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிற் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியது. நவம்பர் 17, 1919 இல் வெளியான நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப் பரிந்துரைத்தது. எத்தனை இடங்கள் ஒதுக்கவேண்டு மென்பதை அந்தந்தப் பகுதியின் அரசும், அரசியல் கட்சிகளும், தீர்மானித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறியது. நீதிக்கட்சி, சென்னை மாகாண சங்கம், மற்றும் பிரிட்டிஷ் அரசுக்கிடையே ஒரு நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இறுதியில் மார்ச் 1920 இல் இடங்கள்  குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மெஸ்டன் உடன்படிக்கை என்றழைக்கப்பட்ட இதன் மூலம் சென்னை சட்டமன்றத்தின் 63 பொது இடங்களில் 28     (3 நகர்ப்புற மற்றும் 25 ஊர்ப்புற இடங்கள்) பிராமணரல்லாதோருக்காக ஒதுக்கப்பட்டன.
            மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் வழங்கிய அரசியல் அதிகாரங்கள் போதாதென மகாத்மா காந்தி கருதினார்.  காங்கிரஸ் கட்சி  மார்ச் 1919 இல் இயற்றப்பட்ட ரவுலட் சட்டங்களின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கியது. கல்வி நிறுவனங்கள், சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொது நிகழ்வுகளைப் புறக்கணிக்கும்படி காங்கிரஸ்காரர்களைக் கேட்டுக் கொண்டார்கள்.  ஆனால் நீதிக்கட்சி ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்கவில்லை. புதிய அரசியல் சூழலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசின் மூலம் தன் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவே அது விரும்பியது. காந்தியைப் பற்றிய இவர்கள் பார்வை    அவரை சமூக அமைப்பினை சீர்குலைக்க விரும்புகின்ற ஒரு அரசியல் வாதியெனக் கருதியது.  காந்தியின் சுதேசித் தொழில் வளர்ச்சிக் கொள்கை என்பது, தொழில்மயமாவதற்கு எதிரானது என்று அதைக் கண்டித்தது நீதிக்கட்சி . எனவே நீதிக் கட்சி காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் தொடங்கியது.
                ஒத்துழையாமைக் கொள்கையைப் பெரும்பாலான அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரித்ததால் நீதிக்கட்சி தனிமைப்படுத்தப்பட்டது. காந்தி பிராமணரல்ல என்றாலும் அவர் பிராமணர்களோடு மட்டுமே நட்புறவு கொண்டவர் என்று நீதிக்கட்சி குற்றம் சாட்டியது. மேலும் காந்தியின் சுதேசித் தொழில் கொள்கையை எதிர்த்தது. ஏப்ரல் 1921 இல் காந்தி சென்னை வந்தபோது இந்தியப் பண்பாட்டுக்குப் பிராமணர்களின் பங்களிப்பு குறித்து அவர் பெருமைப்படுத்தி உரையாற்றியது நீதிக்கட்சியின் காந்தி எதிர்ப்பை வலுப்படுத்தியது.  காந்தியின் பேச்சுக்கு ஜஸ்டிஸ் இதழ் கண்டனம் தெரிவித்தது.           
           காந்தி நடத்திய “யங் இந்தியா வுக்கு  எழுதிய கடிதத்தில் கந்தசாமி செட்டி, பிராமணர்-பிராமணரல்லாதோர் விஷயங்களில் தலையிடாமல் இருக்கும்படி காந்திக்கு அறிவுரை கூறியிருந்தார். அதற்குக் காந்தி அளித்த பதிலில் மீண்டும் இந்து சமயத்துக்குப் பிராமணர்களின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டிய காந்தி வாசகர்கள் தென் திராவிடத்தை, வட நாட்டிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டாமென எச்சரிக்கிறேன் என்றும், இன்றைய இந்தியா இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்ட பல பண்பாடுகளின் கலவையாகும்என்றும் கூறியிருந்தார். சவுரி சாவ்ரா நிகழ்வின் காரணமாகக் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொண்ட பிறகும் நீதிக்கட்சி அவரைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தது. அவர் கைது செய்யப்பட்ட பிறகே தனது கடுமையான எதிர்ப்பைச் சற்று தணித்துக் கொண்டது.
            மாண்டேகு-கெம்ஸ்ஃபோர்ட் சீருதிருத்தங்கள், இந்திய அரசுச் சட்டம் 1919 இன் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1920 முதல் 37 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தது. இந்தப் பதினேழு ஆண்டுகளில் 13 இல் (1926–30 தவிர) நீதிக்கட்சியே சென்னை மாகாணத்தை ஆண்டது.
1920–26
           ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1920-ஆம் ஆண்டு தேர்தலைப் புறக்கணித்தது. இந்தியா முழுவதும் பெரிதும் பரவியிருந்த காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணித்து விட்ட படியால், போட்டியிட்ட நீதிக்கட்சி 98 இடங்களில் 63 இல் வென்றது. அக்கட்சியின் ஏ.சுப்பராயலு செட்டியார்  சென்னையின் முதல் முதலமைச்சரானார். ஆனால் விரைவில் உடல்நிலைக் குறைவினால் அவர் பதவி விலகிப் பனகர் அரசர் முதல்வரானார். இரட்டை ஆட்சி முறை நீதிக்கட்சிக்கு முழுமையாக ஏற்புடையதாக இல்லை .
          தியாகராய செட்டியின் அதிகாரப்போக்காலும் தமிழ் உறுப்பினர்களைக் கண்டுகொள்ளாமல் தெலுங்கு உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளித்ததாலும் நீதிக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. 1923 இல் சி.ஆர்.ரெட்டி விலகித் தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த சுயராஜ்யக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. 1923இல் நடந்த இரண்டாவது தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்றாலும் அதன் பெரும்பான்மை குறைந்து போனது. இரண்டாவது சட்டமன்றத்தின் முதல் நாளன்றே எதிர்க்கட்சிகள் பனகல் அரசர் அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்  கொண்டுவந்தன. 65-44 என்ற வாக்கு கணக்கில் அத்தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பனகல் அரசர் நவம்பர் 1926 வரை முதல்வராக நீடித்தார். 1926 தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்யக் கட்சியிடம் தோல்வியடைந்தது. ஆனால் வெற்றி பெற்ற சுயராஜ்யக் கட்சியினர் ஆட்சியமைக்க மறுத்து விட்டதால் பி.சுப்பராயன் தலைமையில் சுயேச்சைகளைக் கொண்டு சென்னை ஆளுனர் ஒரு அரசினை உருவாக்கினார்.
எதிர்கட்சி வரிசையில்.
1926–30
          1926 சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சியே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை ஆட்சி முறையை அது எதிர்த்ததால் ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. சென்னை ஆளுனர் நீதிக்கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசமைக்க விருப்பமில்லாததாலும் ஆளுனருடன் கருத்து வேறுபாடு நிலவியதாலும் பனகல் அரசர் ஆட்சியமைக்க மறுத்து விட்டார். இதனால் கவர்னர் தேசியவாத சுயேட்சை உறுப்பினர்களைக் கொண்டு பி.சுப்பராயன் தலைமையில் ஒரு சுயேச்சை அரசினை உருவாக்கினார். இவ்வரசுக்கு ஆதரவளிக்க 34 உறுப்பினர்களைச் சட்டமன்றத்துக்கு நியமித்தார். இவ்வரசை ஆளுனரின் கைப்பாவை என்று வர்ணித்த நீதிக்கட்சி அதற்கு ஆதரவளிக்க மறுத்து விட்டது. சுயராஜ்யக் கட்சியும் நீதிக்கட்சியும் எதிர்க்கட்சிகளாகச் செயல்பட்டன. 1927 இல் இவை இணைந்து சுப்பராயனுக்கு எதிராகக் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் துணையால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் சுப்பராயன் அரசு பாதிப் பதவிக்காலத்தைத் தாண்டும் முன்னர் சுப்பாராயன் அரசுக்கு நீதிக்கட்சியின் எதிர்ப்பு ஆதரவாக மாறி விட்டது. சைமன் குழு சென்னைக்கு வருகை தந்தபோது அதனை எதிர்ப்பது குறித்து எழுந்த அரசியல் மாற்றங்களால் நீதிக்கட்சியின் அரசு எதிர்ப்பு, ஆதரவாக மாறியது. பனகல் அரசர் டிசம்பர் 1928 இல் மரணமடைந்த பின்னர் நீதிக்கட்சி இரு குழுக்களாகப் பிரிந்தது. அவர்களில் என்.ஜி.ரங்கா  (இவர் பின்னாளில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சி என்று ஒன்றைத் தோற்றுவித்தவர், டெல்லி பாராளுமன்ற உறுப்பினர்.) அவர் தலைமையிலான அமைச்சர் ஆதரவாளர்கள், (Ministerialists), பிராமணர்கள் கட்சியில் உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையினை நீக்கக் கோரினர். கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் இரு குழுக்களிடையே உடன்படிக்கை ஏற்பட்டு முனுசாமி நாயுடு கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1930–37
           நான்கு ஆண்டுகள் எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட பின்னர் 1930 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது நீதிக்கட்சி. முனிசாமி நாயுடு  முதல்வரானார். ஆனால் அவரது பதவிக்காலத்தில் கட்சியில் உட்பூசலும் சர்ச்சைகளும் மலிந்தன.
                    பெரும் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் அப்போது உச்சத்தில் இருந்ததால் சென்னை மாகாணத்தின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. தென் மாவட்டங்களில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. வருவாய் குறைபாட்டை ஈடுகட்ட அரசு நிலவரியை அதிகரித்தது. இதனாலும் பொப்பிலி அரசர் மற்றும் வெங்கடகிரி குமாரராஜா இருவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதாலும் நீதிக்கட்சியின் ஜமீன்தார் குழு அதிருப்தி யடைந்தது. 1930 இல் பி.டி.ராஜன் மற்றும் முனிசாமி நாயுடு ஆகியோரிடையே கட்சி தலைவராவதில் போட்டியேற்பட்டது. தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நாயுடு மூன்றாண்டுகளாகக் கட்சியின் வருடாந்திர மாநாட்டை நடத்தாமல் தவிர்த்தார்.   நவம்பர் 1930 இல் எம்.ஏ.முத்தையா செட்டியார் தலைமையில் ஜமீன்தார்கள் ”ஜிஞ்சர்” குழு என்ற போட்டிக்குழுவை உருவாக்கினர். அக்டோபர் 10-11, 1932 இல் நடைபெற்ற கட்சியின் 12வது வருடாந்திர மாநாட்டில் ஜமீன்தார் குழு நாயுடுவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறக்கி பொப்பிலி அரசரை அவருக்குப் பதில் தலைவராக்கியது. சொந்தக் கட்சியினரே தனக்கு எதிராகச் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து விடுவார்கள் என்றஞ்சிய நாயுடு நவம்பர் 1932 இல் பதவி விலகினார்; பொப்பிலி அரசர் முதல்வரானார். நாயுடுவின் ஆதரவாளர்கள் ஜனநாயக நீதிக்கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினர். 1935 இல் நாயுடுவின் இறப்புக்குக் பின்னர் மீண்டும் நீதிக்கட்சியில் இணைந்தனர். இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியின் எல்.ஸ்ரீராமுலு நாயுடு சென்னை நகரின் மேயராகப் பணியாற்றினார்.
           மாகாண மக்களிடையே வேகமாகப் பரவி வந்த காங்கிரஸின் தேசியவாத உணர்வும், பொப்பிலி அரசரின் ஊழல் மலிந்த திறமையற்ற நிருவாகமும் நீதிக்கட்சியின் நற்பெயரை அறவே அழித்து விட்டன. உட்கட்சிப் பூசல்கள் 1930களின் முற்பகுதியில் கட்சியை வெகுவாக வலுவிழக்கச் செய்தன. பொப்பிலி அரசர் கட்சிக்காரர்களைக் கலந்தாலோசிக்காமல் செயல்பட்டதுடன் கட்சியின் முதுகெலும்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புத் தலைவர்களை ஓரம் கட்ட முயற்சித்தார். பிரிட்டிஷ் அரசின் கடுமையான நடவடிக்கைகளைப் பொப்பிலி அரசர் ஆதரித்ததால், அவரை மக்கள் பிரிட்டிஷ் காரர்களின் ஏஜெண்ட்டாகக் கருதினர். நீதிக்கட்சி அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் மக்களின் கோபத்தை சம்பாதித்தன. ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களில் நில வரியை 12.5% குறைக்க பொப்பிலி அரசர் மறுத்தது, இதனை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஜமீன்தாராகிய அவர் கடுமையாக ஒடுக்கியது போன்ற நிகழ்வுகள் நீதிக்கட்சியின் செல்வாக்கு மேலும் சரியக் காரணமாக அமைந்தது.   1934 சட்டமன்ற தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றாலும் வெற்றி பெற்ற சுயராஜ்யக் கட்சி (காங்கிரசின் தேர்தல் பிரிவு) அரசமைக்க மறுத்து விட்டதால், நீதிக்கட்சி சிறுபான்மை அரசமைத்தது.
           நீதிக்கட்சி ஆட்சியில் இருந்த இறுதி ஆண்டுகளிலும் மக்களிடையே அதன் ஆதரவு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தது. அக்கட்சி அமைச்சர்கள் மாதச் சம்பளமாகப் பெருந்தொகை பெற்று வந்தனர் . இதர மாகாணங்களில் அமைச்சர்கள் ரூ.2250 பெற்று வந்த நிலையில் இவர்கள் மாதம் ரூ.4333 பெற்றனர். இது சென்னை மாகாண பத்திரிகைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பொதுவாக நீதிக்கட்சிக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் ஆதரவு “மெட்ராஸ் மெயில் “ இதழ் கூடப் பொப்பிலி அரசின் ஊழலையும் கையாலாகாத்தனத்தையும் சாடியது.
          இந்த மாகாணத்தின் மக்களைப் பீடித்த பிளேக் நோய்போல் நீதிக்கட்சி செயல்படுகிறது; அதன்பால் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தர வெறுப்பு உருவாகிவிட்டது. சர்வாதிகார நீதிக்கட்சி அரசு எப்போது ஒழியும் சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் அரசு எப்போது ஆட்சிக்கு வரும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிராமங்களில் வாழும் மக்கள் கூடப் பொப்பிலி அரசரின் ஆட்சி எப்போது முடியும் என்று கேட்கத் தொடங்கினார்கள்.
          சென்னையின் ஆளுனர் எர்ஸ்கின் பிரபு (Lord Erskin), இந்தியாவுக்கான செயலர் செட்லாந்து பிரபுவுக்கு பெப்ரவரி 1937 இல் எழுதிய கடிதத்தில் “கடந்த பதினைந்தாண்டுகளில் நடந்துள்ள அனைத்து தவறுகளுக்கும் மக்கள் பொப்பிலி அரசே காரணம் என்று கருதுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். 1937 தேர்தலில் புது வேகத்துடன் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியிடம் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது. 1937க்குப் பின் சென்னை மாகாண அரசியல் களத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் முற்றிலுமாக அற்றுப்போனது.
         நீதிக்கட்சியின் இறுதி வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன: கட்சி பிரிட்டிஷ் அரசின் ஆதரவாளராகச் செயல்பட்டது, கட்சி உறுப்பினர்களின் உயர்வு மனப்பான்மை, பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் ஆதரவை இழந்தது மற்றும் சமூக சீருத்திருத்தவாதிகள் கட்சியை விட்டு விலகிச் சுய மரியாதை இயக்கத்தில் சேர்ந்தது. “உட்கட்சிப் பூசல்கள், திறமையற்ற ஒருங்கமைப்பு, மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் இன்மை மற்றும் செயலிழந்த நிலையே” கட்சி அழியக் காரணங்கள்.
1936–44
           நீதிக்கட்சி, 1926–30 காலகட்டத்திலும், 1937 முதல் 1944 இல் திராவிடர் கழகமாக மாறும் வரை எதிர்க்கட்சியாகச் செயல்பட்டது.1937 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பின்னால் நீதிக்கட்சி தன் அரசியல் செல்வாக்கை முற்றிலும் இழந்து விட்டது. அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகிய பொப்பிலி அரசர் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று விட்டார்.  சக்ரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியின் (ராஜாஜி) தலைமையில் அமைந்த புதிய காங்கிரஸ் அரசு பள்ளிகளில் இந்தியைக் கற்க வேண்டுமென்ற நிலையை எடுத்தது,. சர் ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமையில் நீதிக்கட்சி, பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்து இம்முயற்சியை எதிர்த்தது. பன்னீர்செல்வம் 1937 தேர்தலில் வெற்றிபெற்ற வெகுசில நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக நீதிக்கட்சி ஈ. வே. ராமசாமி நாயக்கரின் கட்டுப்பாட்டில் வந்தது. பொப்பிலி அரசரின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் ஈ. வே. ராமசாமி நாயக்கர் டிசம்பர் 29, 1938 இல் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த இவர் பல ஆண்டுகளாக நீதிக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். 1925 இல் காங்கிரஸ் பிராமணர்களுக்கு ஆதரவான கட்சி என்று குற்றம் சாட்டி அதிலிருந்து வெளியேறி “சுயமரியாதை இயக்கம்” என்று ஒன்றைத் தொடங்கினார். அவ்வியக்கம் பெரும்பாலும் காங்கிரசையும் சுயராஜ்யக் கட்சியினையும் எதிர்த்து நீதிக்கட்சிக்கு ஆதரவாகப் செயல்பட்டது. 1926 மற்றும் 30 தேர்தல்களில் நீதிக்கட்சி வேட்பாளர்களுக்காக நாயக்கர் பிரச்சாரம் மேற்கொண்டார். 1930களின் ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்தார். ஜூலை 1934 இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டது; இதன் பின்னால் மீண்டும் நீதிக்கட்சியின் ஆதரவாளரானார். சரிந்திருந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் மீண்டது. அக்டோபர் 29, 1939 அன்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் காங்கிரஸ் அரசு பதவி விலகியது. இந்திய மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை இரண்டாம் உலகப் போரில்  ஈடுபடுத்தியதை எதிர்த்து அகில இந்திய காங்கிரஸ் எடுத்த முடிவின்படி இந்தப் பதவி விலகல். சென்னை மாகாணம் ஆளுனரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய இந்திக் கல்வி ஆணையைத் திரும்பப்பெற்றார்.
         ஈ. வே. ராமசாமி நாயக்கரின் தலைமையின் கீழ் நீதிக்கட்சி திராவிட நாடு கோரும் பிரிவினைக் கொள்கையினை முன் வைத்தது. கட்சியின் 14வது வருடாந்திர மாநாட்டில் இந்தியாவிலிருந்து தமிழர்களுக்குத் தனிநாட்டை, பிரிட்டிஷ் அரசின் இந்தியச் செயலரின் நேரடி மேற்பார்வையின் கீழ் தனி நாடு உருவாக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 1939 இல் பெரியார் “தனி இறையாண்மையுடைய கூட்டாட்சிக் குடியரசாக” திராவிட நாடு உருவாக வேண்டுமென்று திராவிட நாடு மாநாடொன்றைக் கூட்டினார். 1938 முதல் “தமிழருக்கெனத் தனித் தமிழ்நாடு” கோரி வந்த அவர், டிசம்பர் 17, 1939 இல் “திராவிடருக்கெனத் தனி திராவிட நாடு” என்ற முழக்கத்தை முன்வைத்தார். ஆகஸ்ட் 1940 இல் நடைபெற்ற கட்சியின் 15வது வருடாந்திர மாநாட்டிலும் தனி திராவிட நாடுக் கொள்கை முன்வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் போர் முயற்சிகளுக்கு முழு ஆதரவு கொடுத்து, அந்த ஆதரவைத் தெரிவித்து ஆகஸ்ட் 10, 1941 இல் ஈ. வே. ராமசாமி நாயக்கர் திராவிடநாடு போராட்டத்தைக் கைவிட்டார். கிரிப்சின் தூதுக்குழு இந்தியா வந்தபோது, ஈ.வே.ராமசாமி நாயக்கர், டபிள்யு பி.ஏ.செளந்திரபான்டிய நாடார், என். ஆர். சாமியப்ப முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோர் அடங்கிய நீதிக்கட்சி தூதுக்குழு மார்ச் 30, 1942 இல் கிரிப்சை சந்தித்து இந்தியாவைப் பிரித்து திராவிடர்களுக்கென்று ஒரு தனி திராவிட நாடு அமைக்கக் கோரியது. ஆனால் கிரிப்சு ஒரு சட்டமன்றத் தீர்மானம் அல்லது பொது வாக்கெடுப்பின் மூலமாக மட்டுமே அன்றி சுயேச்சையாக இப்படியொரு பிரிவினை சாத்தியம் இல்லை என்று கூறி விட்டார். இக்காலகட்டத்தில் இரு முறை (1940 மற்றும் 42 இல்) ஈ. வே. ராமசாமி நாயக்கர் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் நீதிக்கட்சி அரசு அமைய வாய்ப்பு உருவானது. ஆனால் இரு முறையும் அவர் அரசமைக்க மறுத்துவிட்டார்.
திராவிடர் கழகத்தின் தோற்றம்.
           பெரியார் ஈ. வே. ராமசாமி நாயக்கர் நீதிக்கட்சியினைத் தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிக் கொண்டார். அவரது தலைமையில் அது சமூக சீர்திருத்த அமைப்பாக மட்டும் செயல்பட்டது. “சமூக சுயமரியாதையை அடைந்து விட்டால், அரசியல் சுய மரியாதைத் தானாகக் கிட்டி விடும்” என்பது அவரது வாதமாக இருந்தது. பெரியாரின் ஆதிக்கத்தால் நீதிக்கட்சி பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு  மற்றும்  இறைமறுப்பு கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. 1942–44 காலகட்டத்தில் இந்து சமய நூல்களான பெரிய புராணம் மற்றும் கம்பராமாயணம் இரண்டையும் நீதிக்கட்சியினர் கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்தனர்.. இதனால் இந்தி எதிர்ப்புக்காக நீதிக்கட்சியுடன் கைகோர்த்திருந்த சைவத் தமிழறிஞர்களும், ஆன்மீக வாதிகளும்  இவர் கட்சிக்குத் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். அதுவரை மாணவர்களிடையே பெரிதாகச் செல்வாக்கு பெற்றிராத  நீதிக்கட்சி  சி.என்.அண்ணாதுரையின்   முயற்சிகளால் மாணவர் ஆதரவைப் பெறலாயிற்று.
    ஆனால் ஈ. வே. ராமசாமி நாயக்கரின் தலைமையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத சில தலைவர்கள் கட்சியில் ஒரு போட்டிக் குழுவை உருவாக்கி அவரைத் தலைவர் பதவியிலிருந்து இறக்க முயன்றனர்.   இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் சிலர்    பி. பாலசுப்பிரமணியன் (சண்டே அப்சேர்வர் இதழின் ஆசிரியர்), ஆர்.கே.சண்முகம் செட்டியார்,  பி.டி.ராஜன்,  ஏ.பி.பாட்ரோ,  சி. எல். நரசிம்ம முதலியார், தாமோதரன் நாயுடு மற்றும் கே. சி. சுப்ரமணிய செட்டியார்). பெரியார் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே பலப்பரீட்சை மூண்டது. டிசம்பர் 27, 1943 இல் கட்சியின் செயற்குழுவைக் கூட்டிய பெரியார் எதிர்ப்பு குழு 1940 க்குப் பின் அவர் கட்சி மாநாட்டை நடத்துவதில்லையென்று குற்றம் சாட்டியது. அவர்களது விமர்சனத்தை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்சியின் வருடாந்திர மாநாட்டைக் கூட்டினார்.
         ஆகஸ்ட் 27, 1944 அன்று சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் பதினாறாவது வருடாந்திர மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டி வெற்றி பெற்றது. இதற்கு ஒரு வாரம் முன்னர் (ஆகஸ்ட் 20 இல்) பெரியார் எதிர்ப்பு கோஷ்டியினர் ஒரு கூட்டத்தைக் கூட்டி சேலம் மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாதவை என்றும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் அறிவித்தனர். இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஈ. வே. ராமசாமி நாயக்கர் கட்சியின் விதிமுறைப்படி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்ல; அதனால் அவருக்குத் தீர்மானங்களை நிறைவேற்ற அதிகாரமில்லை என்பதே. ஆனால் சேலம் மாநாட்டில் பெரியார் ஆதரவு கோஷ்டியினருக்கு அதிக ஆதரவு கிடைத்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர். அம்மாநாட்டில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
·         கட்சி உறுப்பினர்கள் பிரிட்டிஷ் அரசு அளித்த விருதுகளையும், பதவிகளையும் ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்கள் அனைத்தையும் துறக்க வேண்டும்
·         அவர்கள் தங்களது அரசு பதவிகளிலிருந்து விலக வேண்டும்
·         அவர்கள் தங்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை எடுத்துவிட வேண்டும்
·         நீதிக்கட்சி இனி திராவிடர் கழகம் என்ற பெயரால் அழைக்கப்படும்.
         இத்தீர்மானங்கள் நிறைவேற முக்கியக் காரணமாக இருந்த அண்ணாதுரை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளரானார். நீதிக்கட்சியின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலானோர் திராவிடர் கழகத்தில் இணைந்து விட்டனர். பி.டி ராஜன், மணப்பாறை திருமலைசாமி, பி. பாலசுப்பிரமணியன் போன்றோர் இம்மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் முதலில் பி.ராமச்சந்திர ரெட்டி, தலைமையிலும் பின்     பி.டி ராஜன் தலைமையிலும் செயல்பட்டனர். உண்மையான “நீதிக்கட்சி” தாங்கள் தான் என்றும் அறிவித்தனர். 1952 சட்டமன்ற தேர்தலில் ஒன்பது இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் அமைச்சரவை உருவாக்கியது. அதில் சில எதிர்கட்சிகளையும் ராஜாஜி இணைத்துக் கொண்டு ஆட்சியை வலுவானதாக ஆக்கினார். அப்படி வந்த தலைவர்கள் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி, மாணிக்கவேலு நாயக்கர், பி.பக்தவத்சலு நாயுடு ஆகியோருக்குப் பதவிகள் தரப்பட்டன. நீதிக்கட்சி வேட்பாளர்களில் பி. டி. இராஜன் மட்டும் வெற்றி பெற்றார். இந்தக் கட்சி அதன் பின்னால் எந்தத் தேர்தல்களிலும் அதிகாரப்பூர்வமாகப் போட்டியிடவில்லை. 1968 இல் தனது பொன்விழா ஆண்டைச் சென்னையில் கொண்டாடிய இக்கட்சி பி. டி. ராஜனின் மரணத்துக்குப் பின்னர் முற்றிலும் செயலற்றுப் போய்விட்டது.
கட்சி அமைப்பு.
         நீதிக்கட்சி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு முறையான சட்ட அமைப்பின்றி செயல்பட்டது. அக்டோபர் 18, 1917 இல் தி இந்து   நாளிதழில் வெளியான அதன் கொள்கை அறிக்கையே கட்சியின் சட்டதிட்டங்களைப் பட்டியிலிட்ட ஒரே ஆவணம். அக்டோபர் 1917 இல் கட்சியின் நிர்வாகிகள் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆற்காடு ஏ.ராமசாமி முதலியார் கட்சியின் முதல் பொதுச்செயலராகப் பணியாற்றினார். 1920 இல் கட்சியின் சட்ட அமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. டிசம்பர் 19, 1925 இல் கட்சியின் 9வது வருடாந்திர மாநாட்டின்போது அதிகாரப்பூர்வமாக அதன் சட்ட அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
        சென்னை நகரம் நீதிக்கட்சியின் செயல்பாடுகளின் மையமாக இருந்தது. மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த கட்சியின் தலைமையகத்தில் கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. இவ்வலுவலகத்தைத் தவிர சென்னையில் வேறுபல கிளை அலுவலகங்களும் திறக்கப்பட்டன. 1917 இல் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. சென்னையைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் அவற்றுக்கு அவ்வப்போது போய் வந்தனர். நீதிக்கட்சிக்கு ஒரு தலைவர், நான்கு துணைத் தலைவர்கள், ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் 25 செயற்குழு உறுப்பினர்கள் இருந்தனர். 1920 தேர்தலுக்குப் பின்னர் ஐரோப்பிய அரசியல் கட்சிகளைப் போன்று செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு தலைமைக் குறடா நியமிக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்சி சட்ட அமைப்பின் 6வது பிரிவின் படி கட்சித் தலைவரே அனைத்து பிராமணரல்லாதோர் அமைப்புகள் மற்றும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தன்னிகரற்ற தலைவராக இருந்தார். பிரிவு 14, உறுப்பினர்கள் மற்றும் செயற்குழுவின் பொறுப்புகளை வரையறுத்ததோடு செயற்குழு முடிவுகளைச் செயலாக்கும் பொறுப்பைப் பொதுச் செயலாளருக்கு அளித்தது. 21வது பிரிவு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாநில மாநாடு கூட்டப்பட வேண்டுமென்றது. ஆனால் கட்சி செயல்பட்ட 27 ஆண்டுகளில் 16 வருடாந்திர மாநாடுகளே கூட்டப்பட்டன.
             மதுவிலக்கு, ஆந்திரப் பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திட்டங்கள், தொழில் துறை வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை அதிகரித்தல் ஆகியவை மக்களின் நிறைவேறாத எதிர்பார்ப்புகள். நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தபோது நிறைவேற்றிய பல சட்டங்கள் நீடித்த தாக்கம் கொண்டிருந்தன. அவற்றுள் சில தற்காலம் வரை நடைமுறையில் உள்ளன. செப்டம்பர் 16, 1921 இல் நீதிக்கட்சி அரசு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை வெளியிட்டதன் மூலம் இந்திய சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இதன் பின்னர் சாதிவாரியான இட ஒதுக்கீடு பொதுவான ஒன்றாகிவிட்டது.
         டிசம்பர் 18, 1922 இல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்ட சென்னை இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பல இந்துக் கோவில்களை மாகாண அரசின் கட்டுப்பாட்டில் ஒரு தனி அமைப்பின் கீழ் கொண்டு வந்தது. இச்சட்டமே சென்னை மாநிலத்திலும்,  இயற்றப்பட்டுள்ள பல இந்து அறநிலைய மற்றும் அறக்கட்டளை சட்டங்களுக்கு முன்னோடியாகும்.. 1919 இந்திய அரசுச் சட்டம், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. முதல் நீதிக்கட்சி அரசு ஏப்ரல் 1, 1921 இல் இத்தடையை விலக்கியது. தேர்தலில் வாக்களிக்கவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பாலின அடிப்படையில் அமைந்த தகுதிகள் நீக்கப்பட்டன. இதன் மூலம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1926 இல் சென்னை சட்டமன்றத்துக்கு நியமனம் செய்யப்படுவதற்கு வழி வகுத்தது. இந்திய சட்டமன்றங்களில் ஒரு பெண் உறுப்பினராவது இதுவே முதல் முறை. இவை தவிர 1922 இல் சட்டமன்றத்தில் பட்டியல் பிரிவினரைக் குறிக்க “பஞ்சமர்” மற்றும் “பறையர்” போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாதென்றும் ”ஆதி திராவிடர்” என்ற பெயரையே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் நீதிக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது.
            நீதிக்கட்சி கொண்டு வந்த சென்னை தொடக்கக் கல்வி சட்டம், 1920 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியது; தொடக்கக் கல்விக்கு நிதி ஒதுக்கீட்டையும் அதிகரித்தது. குழந்தைகளைப் பள்ளிகளிலிருந்து விலக்கிக் கொள்ளும் பெற்றோரைத் தண்டிக்கவும் வழிவகுத்தது. 1934 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளில் இச்சட்டம் திருத்தப்பட்டது. சென்னைப் பலகலைக்கழகச் சட்டம், 1923 சென்னைப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் குழுவை விரிவு படுத்தியதுடன் அதில் பல்வேறு தரப்பினர் இடம்பெறவும் வழிவகுத்தது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ராமச்சந்திரனால்  1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். 1922 இல் இயற்றப்பட்டு 1935 இல் திருத்தப்பட்ட, தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிச் சட்டம், தொழிற்சாலைகளைத் தொடங்க கடனுதவி வழங்கியது. மலபார் குத்தகைச் சட்டம், 1931 குத்தகைக்காரர்களின் உரிமைகளை வலுப்படுத்தியது.
பல்கலைக்கழகங்கள்
         நீதிக்கட்சியின் தமிழ் மற்றும் தெலுங்கு உறுப்பினர்களிடையே நிலவிய போட்டி இரு பல்கலைக்கழகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. கட்சி துவக்கப்பட்ட நாட்களிலிருந்து நிலவிய இப்போட்டி முதல் நீதிக்கட்சி அரசில் தெலுங்கு உறுப்பினர்கள் மட்டும் அமைச்சர்களானதால் மேலும் அதிகமானது. ஆந்திரப் பல்கலைக் கழகம் அமைக்க நீண்ட நாட்களாகத் தெலுங்கு தலைவர்கள் கொண்டா வெங்கடபய்யா மற்றும் பட்டாபி சீத்தாராமையா ஆகியோர் வேண்டி வந்தனர். 1921 இல் நீதிக்கட்சி அரசு இக்கோரிக்கையை நிறைவேற்ற ஒரு முன்மொழிவைத் தயார் செய்தது. சி. நடேச முதலியார் இதனை எதிர்த்தார். ஆந்திரம் / ஆந்திரப் பலகலைக்கழகம் ஆகியவற்றை வரையறுப்பது கடினமெனத் தமிழ் உறுப்பினர் வாதிட்டனர். அதிருப்தி கொண்டிருந்த ஜே. என். ராமநாதன், ராமநாதபுர அரசர் ராஜேசுவர சேதுபதி ஆகியோரை திருப்திப்படுத்த தியாகராய செட்டி தமிழரான டி.என்.சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். இதற்குப் பிரதிபலனாக ஆந்திரப் பல்கலைக்கழக சட்டம் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் நவம்பர் 6, 1925 இல் நிறைவேற்றப்பட்டது. 1926 இல் ஆந்திரப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு சி. ஆர். ரெட்டி அதன் முதல் துணை வேந்தரானார். இதனால் தமிழர்களுக்காகத் தனியாக ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென்று கோரிக்கைகள் எழுந்தன. சென்னை பல்கலைக் கழகத்தில் பிராமணர்  அதிகம் இருப்பதால் பிராமணரல்லாதோருக்கு அங்கு வாய்ப்புகள் இல்லை என்று சொல்லப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மார்ச் 22, 1926 இல் சிவஞானம் பிள்ளையின் தலைமையில் தமிழ் பல்கலைக்கழகக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் பலனாக 1929 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்துக்குப் பெரிய தொகை ஒன்றை உதவித்தொகையாக வழங்கிய  செட்டிநாட்டரசர் அண்ணாமலை செட்டியாரின் பெயர் அதற்கு இடப்பட்டது.
         நீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் பனகல் அரசரின் ஆட்சி காலத்தில் சென்னை நகரின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டன. குறிப்பாகத் தற்போதைய தியாகராய நகர் பகுதி உருவாக்கப்பட்டது. பனகல் அரசரின் அரசு நகரின் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்குப் போதிய குடியிருப்பு வசதிகள் செய்து தரச் செப்டம்பர் 7, 1920 அன்று சென்னை நகரத் திட்டச் சட்டத்தை நிறைவேற்றியது.  5 கிமீ நீளமும் 2 கிமீ அகலமும் உடைய நெடுங்குளம் என்ற நீர்நிலை அக்காலத்தில் நகரத்தின் மேற்கு எல்லையில் நுங்கம்பாக்கம் முதல் சைதாப்பேட்டை வரை நீண்டிருந்தது. 1923 இல் இந்நீர்நிலை நீரகற்றப்பட்டு மேடாக்கப்பட்டது. 1911 இல் நெடுங்குளத்துக்கு மேற்கே பிரிட்டிஷ் அரசு மாம்பலம்  கிராமத்தில் ஒரு  பஸ் நிலையத்தைக் கட்டியிருந்தது. பனகல் அரசர் 1923 இல் அதன் அருகே ஒரு குடியிருப்புப் பகுதியை உருவாக்கினார். அதற்குத் தியாகராய செட்டியின் நினைவாக “தியாகராய நகர்” (அல்லது தி. நகர்) என்று பெயரிட்டார். பனகல் பார்க் என்ற பூங்காவைச் சுற்றி தி. நகர் அமைக்கப்பட்டது. இப்புதிய பகுதியின் சாலைகளுக்கும் பிற பகுதிகளுக்கும் நீதிக்கட்சி பிரமுகர்களின் பெயர்கள் இடப்பட்டன. (கான் பகதூர் மகமது உஸ்மான், முகமது ஹபிபுல்லா, ஓ.தணிகாசலம் செட்டியார், நடேச முதலியார், டபிள்யு பி.ஏ.செளந்தரபாண்டிய நாடார் ஆகியோர் இதில் அடக்கம்) இவர்கள் பெயரிலுள்ள தெருக்கள் இப்போதும் இருக்கின்றன. அவை உஸ்மான் ரோடு, ஹபிபுல்லா ரோடு, தணிகாசலம் தெரு, நடேசன் தெரு ஆகியவை.
         நீதிக்கட்சி அரசுகள் பல குடிசை மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளையும். பொதுக் குளியலிடங்களையும் கட்டின. 1924 இல் ஆயுர்வேதம், சித்த, யுனானி மருத்தவ முறைகளை ஆராய்ந்து பரப்ப இந்திய மருத்தவப் பள்ளியை நீதிக்கட்சி அரசு நிறுவியது.
அரசியல்
         நீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் முன்னணி பிராமணரல்லாதோர் அரசியல் அமைப்பாகச் செயல்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி முதலே பிராமணரல்லாதோர் இயக்கங்கள் செயல்பட்டு வந்தாலும் நீதிக்கட்சியே முதல் பிராமணரல்லாதோர் அரசியல் இயக்கமாகும். இரட்டை ஆட்சி முறையின்போது அது நிர்வாகத்தில் பங்கேற்றமை சென்னை மாகாணத்தின் படித்த மேல் ஜாதி மக்களுக்கு அரசுடன் ஒத்துழைப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நீதிக்கட்சியும் திராவிடர் கழகமும் 1967 முதல் தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டை ஆட்சி புரிந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தற்கால திராவிட கட்சிகளின் அரசியல் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன.
பிராமணர் குறித்த நிலைப்பாடு
        பிராமணரல்லாதோருக்கான அரசியல் அமைப்பாகவே நீதிக்கட்சி தொடங்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் அது பிராமணர்கள் உறுப்பினர்களாவதைத் தடை செய்திருந்தது. ஆனால் ஐரோப்பியர் போன்ற பிற வகுப்பினர்களைப் போலவே பிராமணர்களும் பார்வையாளர்களாகக் கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். 1926 தேர்தல் தோல்விக்குப் பின்னர் இக்கொள்கையைக் கைவிட்டு அனைத்து தரப்பினரையும் கட்சி அனுமதிக்க வேண்டும் என்றும் தேசியவாத நிலையை எடுக்க வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன. ஆனால் இக்கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு (குறிப்பாக ஈ. வே. ராமசாமியின் ஆதரவாளர்களிடமிருந்து) இருந்தது. 1929 இல் நடைபெற்ற ஒரு மும்முனைக் கூட்டத்தில் (நீதிக்கட்சி தவிர மேலும் இரு காங்கிரசல்லாத குழுக்கள்) பிராமணர்கள் கட்சி உறுப்பினர்களாவதற்கு இருந்த தடையை நீக்க ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது. அக்டோபர் 1929 இல் நெல்லூரில் நடைபெற்ற கட்சியின் பதினோராவது வருடாந்திர மாநாட்டில் கட்சி செயற்குழு இதற்காக ஒரு தீர்மானத்தை முன்வைத்தது  அதனை ஆதரித்து முனுசாமி நாயுடு பின்வருமாறு பேசினார்:
           ஒரு குறிப்பிட்ட சாதியினரை நாம் தடை செய்யும் வரை, மாகாணத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளாக நாம் நம்மைக் கருத முடியாது. நாம் எதிர்பார்ப்பது போல அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு மாகாணங்களுக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டால், நாம் அனைத்து சாதிகளுக்காகப் பேசும் அமைப்பாக மாறும் நிலையில் இருக்க வேண்டும். நமது அமைப்பின் கொள்கைகளையும் குறிக்கோள்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் பிராமணர்களை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்?. ஒரு வேளை நாம் தடையை நீக்கினாலும் கூடப் பிராமணர்கள் நம் அமைப்பில் சேராது போகலாம். ஆனால் அதற்குபின் நாம் அவர்களைச் சேர விடாது செய்கிறோம் என்ற குற்றச்சாட்டு இராது.
         முன்னாள் கல்வி அமைச்சர் ஏ.பி.பாட்ரோ நாயுடுவின் கருத்தை ஆதரித்தார். ஆனால் இத்தீர்மானம் ஈ. வே. ராமசாமியாலும் ஆர்.கே.சண்முகம் செட்டியாராலும் கடுமையாக எதிர்க்கப்பட்டதால் தோல்வியடைந்தது. பிராமணர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பதை எதிர்த்துப் பேசிய ராமசாமி:  “பிராமணர்களது செயல்பாட்டால் கோபம் கொண்ட பிராமணரல்லாதோர் அதிக அளவில் மெல்ல நீதிக்கட்சியின் பக்கம் திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் பிராமணர்களைக் கட்சி உறுப்பினர்களாக அனுமதிப்பது முட்டாள்தனம்” என்றார்.  அக்டோபர் 1934 வரை நீதிக்கட்சியில் பிராமணர் உறுப்பினராக இருந்த தடை நீடித்தது. . நீதிக்கட்சியின் செயல்பாடுகள் நடப்பில் இருந்த சமூக அடுக்கமைப்பைக் குலைத்ததுடன் பிராமணர் - பிராமணரல்லாதோர் இடையே நிலவிய வெறுப்பினை அதிகரித்தது.
தேசியவாதம்
        நீதிக்கட்சி பிரிட்டிஷ் பேரரசுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது. தனது ஆரம்ப நாட்களில் ஹோம் ரூல் இயக்கத்தை எதிர்த்தது. இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்துக்கும் உறுப்பினர்களை அனுப்பவில்லை. 1916–20 காலகட்டத்தில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு பெற்று அரசியல் முறையில் பங்கேற்பதில் தனது கவனத்தை செலுத்தியது. ஒத்துழையாமை இயக்கத்தின்போது மெட்ராஸ் மெயில் போன்ற ஐரோப்பிய ஆதரவு இதழ்களுடன் இணைந்து காந்தியடிகளையும் தேசியவாதிகளையும் கடுமையாக எதிர்த்தும் சாடியும் வந்தது.
        ஆனால 1920 களின் நடுப்பகுதியில் தேசியவாதக் கொள்கைகளைத் தனதாக்கத் தொடங்கியது. காதி மற்றும் சுதேசி இயக்கங்களுக்குத் தாங்கள் காட்டிய எதிர்ப்பைக் கைவிட்டு ஆதரவளிக்கத் தொடங்கியது. 1925 இல் கட்சி வருடாந்திர மாநாட்டில் உள்ளூர் தொழிற் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த மாற்றம் சென்னை மாகாணத்தில் அதிகரித்து வந்த சுயாட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செல்வாக்குடன் போட்டி போட நீதிக்கட்சிக்கு உதவியது. ”சுயாட்சி” என்ற சொல் நீதிக்கட்சியின் சட்ட அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. கட்சியின் சென்னைப் பிரிவு சி. ஆர். ரெட்டியால் இம்மாற்றம் ஏற்பட்டது. நீதிக்கட்சியைப் பொறுத்தவரை சுயாட்சி என்பது முழு விடுதலை அல்ல; பிரிட்டிஷ் அரசின் மேற்பார்வையின் கீழ் பகுதி தன்னாட்சி உரிமை பெறுவதே. அதன் சட்ட அமைப்பில் “ அமைதியான சட்டத்துக்கு உட்பட்ட முறையில் முயன்று விரைவில் பிரிட்டிஷ் பேரரசின் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு தன்னாட்சி பெற முயல வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
               ஜாலியன்வாலாபாக் படுகொலையை நீதிக்கட்சி கண்டித்ததா என்பது பற்றித் தெளிவான வரலாற்றுப் பதிவுகள் இல்லை. வரலாற்றாளர்களிடையே இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. தேசியவாதக் கொள்கையை நோக்கி 1920 களில் தொடங்கிய கட்சியின் பயணம் 1930 களில் முனுசாமி நாயுடு மற்றும் பொபிலி அரசரின் தலைமையில் தடைபட்டது. சட்டமறுப்பு இயக்கத்தின் போது பிரிட்டிஷ் அரசின் கடுமையான நடவடிக்கைகளை நீதிக்கட்சி அரசுகள் கண்டிக்கவில்லை. ஆனால் நாடெங்கும் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிப் பெறுவதைக் கண்டபின்னால் 1934 இல் மீண்டும் நீதிக்கட்சி தேசியவாதக் கொள்கைகளைக் கையில் எடுத்தது. காங்கிரசின் செல்வாக்கை எதிர்கொள்ள ஈ. வே. ராமசாமி மற்றும் அவரது சுயமரியாதை இயக்கத்தின் உதவியை நாடியது. 1930களில் நீதிக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற  ஈ.வே.ராமசாமி நாயக்கர், அக்கட்சி தனது சோசலிசக் கருத்துகள் நிறைந்த ஈரோட்டுச் செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டவுடன் மீண்டும் அதனுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார். இப்புதிய திட்டத்தில் மதுவிலக்கு போன்ற காங்கிரசின் கொள்கைகளும் இடம் பெற்றிருந்தன.
பட்டியல் பிரிவினர் (Scheduled castes)  மற்றும் முஸ்லிம்களின் ஆதரவிழப்பு
1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி பிராமணரல்லாத அனைத்து பிரிவினரின் நலனிற்காகச் செயல்படுவதாகக் கூறினாலும் மெல்ல பல சமூகத்தினரின் ஆதரவை இழந்தது. தியாகராய செட்டி மற்றும் பனகல் அரசரின் தலைமையின் கீழ் பிராமணரல்லாத சில உயர் சாதியினரின் கட்சியாக மாறியது; பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம்கள் கட்சியை விட்டு விலகினர். முதல் நீதிக்கட்சி அரசினை முசஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலில் ஆதரித்தனர் ஆனால் பதவி வழங்கல்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பின் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். முஸ்லிம்களின் அதிருப்தி முசுலிம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அலி கானின் பின்வரும் கூற்றால் (1923) விளங்கும்:
       எனது அனுபவத்தில் பதவி வழங்கும் தருணங்களில் எல்லாம் அவர்கள் [நீதிக்கட்சியினர்] ஒரு முதலியார், நாயுடு, செட்டியார் அல்லது பிள்ளை சமூகத்தினரையே தெரிவு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமியரைத் தேர்வு செய்வதில்லை.
       இழந்த முஸ்லிம் ஆதரவை நீதிக்கட்சியால் பின் எப்போதும் திரும்பப் பெற இயலவில்லை. வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் கிட்டிய இடங்களில் பெரும்பான்மையை உயர் சாதி இந்துக்களே பிடித்துக் கொண்டதே இதற்குக் காரணம்
       பட்டியல் மக்களுடனான பிரிவும் இக்காலகட்டத்தில் தான் நடந்தது. டி. எம். நாயரின் மரணத்துக்குக் பின் பட்டியல் பிரிவினர்  நீதிக்கட்சியில் ஓரங்கட்டப்பட்டனர். நடந்த சில நிகழ்வுகளின் காரணமாக பிராமணரல்லாத சாதிகளான வெள்ளாளர்கள், பெரி செட்டியார்கள், பலிஜா நாயுடுகள் கம்மா மற்றும் காப்புகள் ஆகியோருக்கும் ஆதி திராவிடர்களுக்கும் இடையேயான உறவு கசக்கக் காரணமாக அமைந்து விட்டன. மே 11, 1921 இல் பி அன்ட் சி ஆலையில் வேலை செய்து வந்த ஆதி திராவிடர்களும் சாதி இந்துகளும் வேலை நிறுத்ததைத் தொடங்கினர். ஜூன் 20 ம் தேதி பங்கிங்காம் ஆலை தொழிலாளர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். ஆனால் நிர்வாகம் ஆதி திராவிட தொழிலாளர்களை விரைவில் சமாதானப் படுத்தியதால் அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.சாதி இந்துக்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் இரு பிரிவினர் இடையே பகை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சாதி இந்துக்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். நீதிக்கட்சித் தலைவர்கள் பிரிட்டிஷ் அரசு ஆதி திராவிடர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினர். ஜஸ்டிஸ் இதழ் பின்வருமாறு எழுதியது:
இவ்வளவு மோசமான நிலை உருவாகக் காரணம் தொழில் துறை அரசு அலுவலர்கள் ஆதி திராவிடர்களுக்கு அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்ததும் சில காவல்துறை அதிகாரிகள் தங்களை அறியாமலே ஆதி திராவிடர்களை ஊக்குவிப்பதும் தான் எனப் பொது மக்கள் கருதுகின்றனர்.
     அக்டோபர் 12 இல் ஓ. தணிகாசல செட்டி இந்தப் பிரச்சனையைச் சென்னை சட்டமன்றத்தில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து நீதிக்கட்சி உறுப்பினர்களுக்கும் சென்னை ஆளுனரின் நிருவாகக் குழுவின் சட்டத் துறை உறுப்பினரான எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் என்ற பிராமணர் மற்றும் உள்துறை உறுப்பினரான லயனல் டேவிட்சன் என்ற ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு காரசாரமான விவாதம் நடந்தது. டேவிட்சன் இவ்விவகாரத்துக்கான மொத்த பொறுப்பும் தொழில் துறை அமைச்சகத்தையே சாரும் என்று குற்றம் சாட்டினார். “இது வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்குமிடையே நடக்கும் ஒரு தொழிற் பிரச்சனை மட்டுமல்ல. இரு கோஷ்டிகளுக்கிடையே சாதிக் காழ்ப்புணர்வால் நடந்த மோதல்” என்று டேவிட்சன் கூறினார். சட்டமன்றத்தில் ஆதி திராவிடர்களின் பிரதிநிதியான எம்.சி.ராஜா டேவிட்சனின் கூற்றை ஆமோதித்தார். மெட்ராஸ் மெயில் இதழில் ஒரு ஆதி திராவிட வாசகர் முன்பு டி. எம். நாயர் பிராமணர்களைக் கண்டித்த அதே பாணியில் நீதிக்கட்சியைக் கண்டித்தார். சில காலத்தில் ராஜாவும் ஆதி திராவிடர்களும் நீதிக்கட்சியை விட்டு விலகினர்.                                                        
          திராவிட இயக்கம் என்பது கி.பி 19 ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டில்  தமிழ்ச் சமுதாயத்தில் உருவாகிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல்  இயக்கமாகும். இக் காலகட்டத்தில் சாதாரண மக்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புக்கள் அவர்களிடையே சமூக உணர்வுகளைத் தட்டி எழுப்பியிருந்தன. இவ்வாறானவர்களிற் சிலர் சாதாரண மக்களில் உரிமைகளுக்காக வாதிட்டதுடன், அக்காலத்தில் இருந்த பிராமணஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தனர். நாட்டுக்கு விடுதலை வரும்போது அது பிராமண ஆதிக்கத்தின் கீழ் வருமே ஒழிய அதன் பயன்கள் இதர மக்களுக்குக் கிட்டாது என அவர்கள் நம்பினர். இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துப் போராடியோரில் அயோத்திதாசர்,  ரெட்டைமலை சீனிவாசன் போன்றோர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டில் டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டியார், கேசவப் பிள்ளை, நடேச முதலியார் போன்றோர் முன்னணியில் இருந்தனர்.
திராவிட இயக்கம் தோற்றம்:
            திராவிட மகாஜன சபை என்பது அயோத்தி தாசர் என்பவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் எனப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிடம் எனும் சித்தாந்தத்தின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.
          1912 ஆம் ஆண்டில் திராவிடர் நலனை முன்வைத்து  ஒரு இயக்கம் சென்னையில்  தொடங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இதன் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என மாற்றப்பட்டது. பொதுவாகவே வைதீக எதிர்ப்பாளர்கள், தமிழர் மத்தியில் நிலவிய சாதிக் கொடுமை முதலியவற்றுக்கு, வைதீகத்தையும், பிராமணரையுமே குற்றஞ்சாட்டினர். வைதீகத்துக்கு முந்திய பண்டைத் தமிழகம் சாதிப் பாகுபாடற்ற சமூகமாக இருந்ததை எடுத்துக்காட்டிய அவர்கள், இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி மக்களை அணிதிரட்டினர்.
             1930 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி மீண்டும் ஆட்சி அமைத்ததுடன் தொடர்ந்து வந்த தேர்தல்களிலும் வென்று 1937 ஆம் ஆண்டுவரை நீதிக்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது. எனினும், 1926 ஆம் ஆண்டு முதலே நீதிக்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தே வந்தது. 1937 ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த நீதிக்கட்சி முற்றாகவே சிதையத் தொடங்கியது. 1937 க்குப் பின்னர் தலைமைப் பதவியைப் பெரியார் என அழைக்கப்பட்ட   ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஏற்றுக்கொண்டார். திராவிட இனக் கொள்கையை மேற் கொண்டிருந்த இவர், தனது தன்மான இயக்கத்தின் (சுயமரியாதை இயக்கம் என்பது அவர்கள் சொன்ன பெயர்) மூலம் புகழ் பெற்றிருந்தார். இதனால், நீதிக் கட்சியின் வீழ்ச்சியையும் கடந்து திராவிட இயக்கம் நிலைக்க முடிந்தது.
ஈ.வே.ராமசாமி நாயக்கர்.
          தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசில் ஈடுபாடு காட்டிய ஈ.வே.ராமசாமி நாயக்கர், அடிமட்ட மக்கள் நலன், சாதிப்பாகுபாட்டு ஒழிப்பு முதலிய விஷயங்களில் காங்கிரஸ் காட்டிய மெத்தனப் போக்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி மக்கள் மத்தியில் சமூகச் சீர்கேடுகள், அறியாமை, மூடநம்பிக்கை என்பவற்றை எதிர்த்துப் போராடினார். 1935 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தலைமையில் அமைந்த காங்கிரஸ் அரசின் இந்தி மொழியை சென்னை மாகாணத்திலும் படிக்க வேண்டுமென்று கொண்டு வந்த கொள்கையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார். அதில்  ஈ. வெ. ரா. சிறை சென்றார். இவர்சிறையில் இருந்தபோதே நீதிக் கட்சியின் தலைமைப் பதவி இவரைத் தேடி வந்தது.
திராவிட நாடு கோரிக்கை.
            ராஜாஜி அரசின் இந்தி கற்க வேண்டுமென்கிற கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர். 1940 களின் முதல் பாதியில் உருவான இக் கொள்கை 1944 ஆம் ஆண்டில் இறுதி வடிவம் பெற்றது. ஈ.வே.ரா. தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்றதும் இந்த காலகட்டத்தில் தான். இவ்வாண்டில் சேலத்தில்  நடைபெற்ற கழக மாநாட்டில் வேறு பல தீர்மானங்களுடன் திராவிட நாடு என்ற பெயரில் இந்தியாவில் தென்பகுதியைப் பிரித்துத் தனிநாடாக அறிவிக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முழுத் தன்னாட்சி கொண்ட திராவிட நாடு, மத்தியில் கூட்டாட்சி  என்பதே இக் கொள்கையின் முக்கிய அம்சமாக இருந்தது.  இளைஞர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு திராவிடர் கழகம் வளர்ந்து வந்தது. திராவிடர் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக  சி.என்.அண்ணாதுரை  திகழ்ந்தார். திராவிடர் கழகத்தின் செயற்பாடுகள் சமுதாய மட்டத்திலேயே முனைப்புப் பெற்றிருந்தது. சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெண்களின் உரிமைகள் ஆகியவை தொடர்பான விஷயங்களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்தினர். ஒரு கட்டத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுப்பதென்று ஆட்லி தலைமையிலான பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தபோது இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் தாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருக்க விரும்புவதாகவும் அவர் அறிவித்தார்.
            1940கள் தொடங்கி திராவிடர் கழகம் பிராமணர்களை எதிர்த்தும், இந்து கடவுள்களையும் மதத்தையும் இழிவு படுத்திப் பல போராட்டங்களைச் செய்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் படத்துக்கு செறுப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தியது, திருச்சி காவிரிக் கரையில் ஆவணி அவிட்டம் பூணூல் போட்டுக் கொண்டிருந்த பிராமணர்களின் பூணூலை அறுத்தது, நாத்திக வாதம் பேசி மக்களிடையே பிளவை உண்டு பண்ணியது போல பல நிகழ்வுகள் 1940 முதல் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த நிலையில் அந்தக் கட்சி பலம் பெருகிக் கொண்டிருந்தது.            
இந்தி எதிர்ப்புப் போராட்டம்.
          1937 இல் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் ஈ.வே.ரா. ஆகியோர் இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கமும் இவர்கள் எழுப்பினார்கள். ஈ.வே.ரா. பள்ளிகளில் இந்தி மொழி ஒரு பாடமாக ஆக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று ஈ.வே.ரா. வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு.

                1949 இல் ஈ.வே.ரா. வின் தலைமைத் தளபதியான சி.என்.அண்ணாதுரை    ஈ.வே.ரா. விடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவுக்கு ஈ.வே.ரா. மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.  ஈ.வே.ரா. தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். ஈ.வே.ரா. விடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் போல ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது. சமூக சீர்திருத்தங்கள் பலவற்றை வலியுறுத்தி வந்த ஈ.வே.ரா. ஜூலை 9, 1948 அன்று தன்னை விட 40 வயது இளையவரான தனக்கு ஊழியம் செய்து கொண்டிருந்த மணியம்மை என்பவரை திருமணம் புரிந்து கொண்டார். இந்த பொருந்தாத் திருமணத்தைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து சி.என்.அண்ணாதுரை அவர்களின் தலைமையில் பலரும் விலகினர்.
                   அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று தனிக் கட்சி ஆரம்பித்த காரணத்தினாலும், அவர்கள் கண்ணீருடன் பிரிகிறோம் என்ற சொல்லை வைத்தே அவர்களை  ஈ.வே.ரா. “கண்ணீர்த்துளிகள்” என்றே பெயரிட்டு அழைக்கவும் எழுதவும் தொடங்கினார். அவர்களின் திமுக  கட்சியையும் கண்ணீர்த்துளி கட்சி  என்று வர்ணிக்கலானார்.

கழகம் உடைந்தது! தி.மு.க. பிறந்தது.
           திராவிடர் கழகத்திலிருந்து, சி.என்.அண்ணாதுரையும் வேறு சில தலைவர்களும்  கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 7, பவளக்காரத் தெரு, ஜார்ஜ் டவுன், சென்னையில்   செப்டம்பர்   17, 1949இல் கூடி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 18 மாலை 4 மணிக்கு ராயபுரம்  ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தி கட்சியின் தொடக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது. அக்கட்சியின் முதல் பொதுச்செயலராக திரு.சி.என்.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது.                                                                                                                                                                        
         1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிக்கிறது என்று சொல்லி அதன் அறிகுறியாக இந்திய பொதுத் தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும்  "ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு சுயேச்சையான தனியாட்சி பெற்ற திராவிட நாடு” வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது.
          1953 ஜூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த புதிய கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. ராஜாஜி முதல்வராக இருந்தபோது கிராமப் புற மாணவர்கள் அதிகம் பேர் படிக்கவேண்டுமென்கிற நோக்கத்தில் எல்லோரையும் படிக்க வைக்க பள்ளிக்கூட இடப் பற்றாக் குறை காரணமாக ஒரு பள்ளியில் காலையில் ஒரு பகுதியினர், மாலையில் ஒரு பகுதியினர் என்று இரண்டு வேளை கல்வி கற்கவும், இது போதுமான கட்டடங்கள் கட்டும் வரை தொடரும் என்றும் ஒரு மசோதா கொன்டு வந்தார். அப்போது ஒருவேளை மட்டும் படிக்கும் மாணவர்கள் மறுவேளையில் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ராஜாஜி சொன்னார், அவரவர் பகுதியில் ஏதேனும் தொழில் நடக்குமல்லவா, அங்கு சென்று அந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளட்டும் என்றார். அவரை மறுபடி மறித்து கேள்வி கேட்டனர். அப்படி எந்த தொழிலும் மாணவர்கள் இருக்கும் பகுதியில் இல்லை யென்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டதற்கு, அவரவர்கள் பெற்றோர்கள் என்ன வேலை செய்கிறார்களோ அந்த வேலையைக் கற்றுக் கொள்ளட்டும் என்றார். இதை வெகுவாகத் திரித்து அப்பன் வேலையை மகன் செய்ய வேண்டுமாம், உயர்ந்த குடி பிள்ளைகள் உயர்வான தொழிலும் தாழ்ந்த குடிப் பையன்கள் தாழ்ந்த வேலையும் செய்ய வேண்டுமென்கிறார், இது குலத் தொழில் கல்வி என்று பெயரிட்டு மூச்சு விடாமல் கதறி உண்மையை மறைத்து ஊரை போராட்ட களமாக ஆக்கிய பின் ராஜாஜி தன் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.
              1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில்நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா, வேண்டாமா என்று மாநாடு வாயிலில் இரண்டு பெட்டிகளை வைத்து அதில் வாக்களிக்க வைத்து மக்கள் (தி.மு.க.தொண்டர்கள்) முடிவுக்கேற்ப தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்புச் சட்டத்தைத் “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. தமிழ்நாட்டில் மொத்தம் 112 இடங்களில் தி.மு.க. போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கு  “உதயசூரியன்” தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வெற்றி பெற்று  தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது.
              ஏப்ரல் 19, 1961இல் கட்சியில் மற்றும்  ஒரு பிளவு ஏற்பட்டது.    ஈ.வே.கி.சம்பத்  கட்சியிலிருந்து  வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை  உருவாக்கினார். இந்த பிளவின் காரணமாக ஈ.வி.கே.சம்பத் (இவர் ஈ.வே.ரா.வின் அண்ணன் மகன்) பெரிதும் இன்னல்களுக்கு ஆளானார். இவருடன் கவிஞர் கண்ணதாசன் போன்றவர்களும் கட்சியில் இருந்து வெளியேறினர். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு.  1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “தனித் திராவிட நாடு” கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. ராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக்  ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின்  பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் நடேச முதலியார் எனும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.
            1963இல் “தேசப் பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து 1963    ஜூன் 8, 9, 10  தேதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “சுதந்திரமான தனித் திராவிட நாடு” கோரிக்கையை கைவிட்டது. அப்படி கைவிட்ட காரணங்களை விளக்கி “திராவிட நாடு” பத்திரிகையில் “சூட்சுமம் புரிகிறதா தம்பி!” என்று சி.என்.அண்ணாதுரை ஒரு கட்டுரையும் எழுதினார்.
           “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் மேற்படி மொழி பேசும் மாநிலங்கள் இவர்கள் சொன்ன அந்த “அகண்ட திராவிட நாடு” கோரிக்கையை ஆதரிக்காததோடு எதிர்ப்பும் தெரிவித்தனர். அதே ஆண்டில் நவம்பர் 17இல் , இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 ஜனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து  ஜனவரி 26-இந்திய குடியரசு நாளைத் துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க.

தி.மு.க. ஆட்சி கால சில நிகழ்வுகள்:
          1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.
         அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது ;  சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார். சி.என்.அண்ணாதுரை மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதுவரையிலும் தலைவர் பதவி ஈ.வே.ரா.வுக்காகக் காலியாக வைக்கப்பட்டிருந்தது.

சி.என்.ஏ. காலத்திற்குப் பிறகு

                சி.என்.அண்ணாதுரை ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் நோயுற்று அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவர் உடல் நலம் மோசமாகி இறந்தார். அவர் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டு சமாதியொன்று உருவானது.  அவர் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சராக இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார்.  மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
            1969- ஜூன் மாதத்தில் மு.கருணாநிதி,  தி.மு.க. தலைவராகவும், நாவலர் நெடுஞ்செழியன் கட்சியின் பொதுச்செயலாளராகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.
            1971இல் தி.மு.க. ஆட்சி ஒருசில குற்றச்சாட்டின் மீது கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த வெற்றியை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.  மு. கருணாநிதி,  இரண்டாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார்.
           தி.மு.க.வில் நடிகர்கள் பலர் உறுப்பினராக இருந்தனர். கே.ஆர்.ராமசாமி, எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் முதலியோர். அதில் சிவாஜி திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழவே அவர் கட்சியை விட்டு நீங்கினார். பின்னர் எம்.ஜி.ஆர். முடிசூடா மன்னனாக கட்சியில் கூட்டம் சேர்க்கும் சக்தியாக விளங்கினார். கட்சியில் பொருளாளராக இருந்த அவருக்கும் தலைமைக்கும் இடையே பிளவு ஏற்பட்டு அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 1972 அக்டோபர் 14இல் அவர் புதிதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
           1975 ஜூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் ,அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் ,ஆகியவை முக்கியமானவையாகும்.
           48 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. 1976 அவசரநிலை காலத்தில் தி.மு.கவினர் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகை தணிக்கை கடுமையாக இருந்தது. சில பத்திரிகைகள் தணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு வண்ணம் பூசி வெறும் பக்கத்தை வெளியிட்டன. நெருக்கடி நிலை காலத்தில் நாடு முழுவதும் ஜெயப்பிரகாஷ், மொரார்ஜி உட்பட பல பெரிய தலைவர்கள் சிறை சென்றார்கள்.  நெருக்கடி நிலை நீக்கப்பட்ட பிறகு நடந்த இந்திய பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து பல மாற்றங்களைச் செய்தது. எனினும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மாறி மாறி பிரதமர்கள் வந்தார்கள்.
        மூன்றாண்டு காலத்திற்குள் மீண்டுமொரு பொதுத் தேர்தல் 1980இல் இந்திரா மறுபடி வென்றார். சென்னைக்கு வந்த இந்திரா நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது.
       1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
         1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 ஜனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
         இந்திய அரசின் ரகசியங்களை தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு,  திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் மத்தியில் இருந்த சந்திரசேகர் பிரதமராக இருந்த போது பதவி நீக்கம் செய்யப்பட்டது.
         1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசச் சென்றபோது ஒரு இலங்கை பொராளியால் வெடி வைத்து இறந்தார். அந்த சோக நிகழ்ச்சி நடந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது.
 மாநில மாநாடுகள்
திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை:
1.   முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில்  சி.என். அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
2.   இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி ஸ்டேடியம் இருக்கும் இடத்தில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது
3.   பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது
          தொடக்கத்தில் சமூக இயக்கமாகவே இருந்த திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. 1957இல் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க.மாநில மாநாட்டில் கட்சி தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற ஓட்டெடுப்பு நடந்து, போட்டியிடலாம் என்று மக்கள் தீர்ப்பு கிடைத்ததால் போட்டியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், பிற நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான போராட்டங்களை திமுக நடத்தியது. காங்கிரஸ் எதிர்ப்பு, தேசிய எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு இவைகளே முக்கிய கொள்கைகளாக விளங்கின. இவற்றின் விளைவாகத் திமுக பெற்ற செல்வாக்கு, 1967 ஆம் ஆண்டில் காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சிபீடம் ஏற அவர்களுக்கு உதவியது. தேர்தலைத் தொடர்ந்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார். தமிழ் உணர்வை வெளிக்காட்டும் ஒரு குறியீடாக மாநிலத்தின் பெயரும் தமிழ் நாடு என மாற்றப்பட்டது.அண்ணா துறைக்கு பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.அவர் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சர் பதவி வகித்தார். 2016ம் ஆண்டு வரை நடைபெற்ற 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெவ்வேறு ஊர்களில் வெற்றி பெற்றவர்.
            இந்தக் கட்சியில் சினிமா நடிகர்கள் அதிகம் ஆதிக்கம் செய்தனர். அவர்களில் எம்.ஜி.ராமச்சந்திரன், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற கதாநாயகர்களும் உண்டு. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும், மாநாடுகள், கூட்டங்களில் இவரைக் கண்டதும் மக்கள் ஆரவாரமிடுவதும் இதர கட்சித் தலைவர்களுக்குக் குறிப்பாக மு.கருணாநிதிக்கு எரிச்சலை உண்டாக்கியது. மேலும் இந்த கட்சியில் ஆதரவு காட்டிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன் கருணாநிதி எழுதிய பராசக்தி மூலம் தான் பிரபலமானார். அவர் ஒரு முறை திருப்பதி சென்று வந்ததைப் பிரச்சனையாக்கி அவரை ஒதுக்கத் தொடங்கிய பின், அவர் காமராஜ் அவர்கள் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சிக்குச் சென்று விட்டார். பின் எம்.ஜி.ஆர். ஒரு மக்கள் தலைவராக பாராட்டப்பட்டதால் அரசியலில் அவர் கை ஓங்கிவிடுமென்று அவரையும் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். அப்படி நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாலும் அவருடைய ஆதரவாளர்களின் ஆர்வம் காரணமாக அவர் ஒரு புதிய கட்சியைத் தோற்றுவித்து அதற்கு அண்ணா தி.மு.க. என்று பெயரிட்டார். பிறகு அதை அகில இந்திய கட்சியாக அறிமுகம் செய்ய வேண்டி அதன் பெயரை அகில இந்திய அண்ணா தி.மு.க.என்று மாற்றினார். அவருடன் பல தி.மு.க. தலைவர்களும் அவர் கட்சிக்குச் சென்றுவிட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
             மிக விரைவிலேயே அண்ணாதுரை காலமானார். தலைமைப் பொறுப்பேற்ற கருணாநிதிக்கும், கட்சிப் பொருளாளராக இருந்த முன்னணி நடிகரான எம்.ஜி.ராமச் சந்திரனுக்கும்  (எம். ஜி. ஆர்) ஏற்பட்ட பிணக்கினால் கட்சி உடைந்து இரண்டானது. எம். ஜி. ஆர். தலைமையில்  அண்ணா தி.மு.க. (அதிமுக) என்னும் அரசியல் கட்சி உருவானது. அடுத்து நடந்த தேர்தலிலேயே அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எம். ஜி. ஆர் தமிழகத்தின் முதல்வர் ஆனார். இதன் பின்னர், மாறிமாறி ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தைச் சார்ந்த கட்சியே தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 
                தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. தி.மு.க.விலிருந்து விலகிய பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா  ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
வரலாறு.
          சி.என்.அண்ணாதுரையின் மறைவுக்குப்பின் மு.கருணாந்தி தி.மு.கவின் தலைவராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் ஆனார். அக்காலத்தில் கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர் அப்போது அனகாபுத்தூர் இராமலிங்கம் என்பவர், ‘அதிமுக’ என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார். அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ என அறிவித்ததுடன் இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியும் அளித்தார்.  இக்கட்சி பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
             எம்.ஜி.ஆரால் 1972இல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. தனது முதல் தேர்தலை 1973இல் திண்டுக்கல்  நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது சந்தித்தது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து 1977-ல் நடைபெற்ற தமிழகச் சட்டப் பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பெரும்பாலான இடங்களில் வெற்றி கண்டது.  நான்குமுனைப் போட்டியில் தி.மு.க. மொத்தமிருந்த 234 இடங்களில் வெறும் 48 இடங்களை மட்டுமே பெற்றது. எம்.ஜி.ஆர்-ஐப் போலவே என்.டி. ராமராவும் திரைப்பட உலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் ஒருமுறை மருத்துவமனையில் இருந்த போது பிரசாரத்திற்கே செல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றார்.
            அதிமுகவின் துவக்க கால கொடியாக தாமரையும் அதன் பின்னால் கருப்பு சிவப்பு இருந்தது. மதுரையில் ஜான்சி ராணி பூங்காவில் எம்.ஜி.ஆர்.அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஏற்றப்பட்டது.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்தியை அறிந்த எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்  தாமரை படமிட்ட கொடியை கட்சி கொடியாக தங்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் ஏற்றினார்கள். அதன் பிறகு எம்.ஜி.ஆர், அண்ணாவின் புகைப்படங்களை ஆய்வு செய்து அதில் சிறப்பாக இருந்த அண்ணாவின் படமொன்றினை தேர்வு செய்தார். அதில் அண்ணா ஆணையிடுவதைப் போல தோற்றமளிப்பார். இந்தப் படத்தினை அண்ணா தோற்றுவித்த தி.மு.கவின் சிகப்பு கருப்பு கொடியோடு இணைத்து அண்ணா தி.மு.கவின் தற்போதைய கொடியமைப்பினை எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
               அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று எம்.ஜி.ஆர் மாற்றினார். இதற்கு கட்சிக்குள் சிலர் ஏற்கவில்லை என்றாலும், பின் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தப் பின் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
எம்.ஜி.ஆர். மறைவும் ஜெயலலிதா வரவும்.
           தமிழக முதல்வராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரன் டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். எட்டாவது சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார்.
          புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி இராமச்சந்திரன் அதில் வெற்றி பெற்றார். ஆனால் சட்டசபையில் நடந்த கலவரம் காரணமாக ஜனவரி 30, 1988 ஆம் ஆண்டு ஜானகி ஆட்சியைக் கலைத்தது மத்திய அரசு.
                 ஜனவரி 21, 1989 இல் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 69.69 % வாக்குகள் பதிவாகின. மருங்காபுரி மற்றும் மதுரை கிழக்கு ஆகிய இரு தொகுதிகளுக்கு நிர்வாக காரணங்களால் தேர்தல் நடைபெறவில்லை; இருமாதங்கள் கழித்து மார்ச்சு 11 ஆம் நாள் நடைபெற்றது. இதற்குள் அதிமுக கட்சி ஒண்றிணைந்து விட்டதால், மீண்டும் அதற்கு “இரட்டை இலை” சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அக்கட்சியே இரு தொகுதிகளிலும் வென்றது. பின்பு ஜெயலலிதா தலைமையில் 1991, 2002, 2011, 2016 தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 2014 மக்களவை தேர்தலையும் 2016 சட்டம்ன்ற தேர்தலையும் கூட்டணி இல்லாமல் சந்தித்து வெற்றி கண்டது.
                அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியிலிருக்கும்போது    5 டிசம்பர் 2016 அன்று காலமானார். ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, 6 டிசம்பர் 2016 அன்று அதிகாலைமணிவாக்கில்   பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது . அதற்குப் பின்னர் 29 டிசம்பர் 2016 அன்று அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக வி. கே. சசிகலாவை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.
              5 பிப்ரவரி 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த ஏற்பாடுகள் முடிவடையும்வரை பன்னீர்செல்வமே முதல்வராக தொடர்வார் என்று அறிவித்தார்.
              7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். இதனால் பன்னீர்செல்வம், சசிகலா என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன், மாஃபா பாண்டியராஜன், பொன்னையன், செம்மலை ஆகியோர் இணைந்தனர். இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் சசிகலா நீக்கினார்.
             பிறகு சசிகலா தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அணி மாறாமல் இருப்பதற்காக அவர்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தன்னிடம் போதிய ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆனால் அவர் மீது உச்சநீதிமன்றத்தல் சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் ஆளுநர் தொடர்ந்து அமைதி காத்து வந்தார். பிறகு அந்த வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் அவர் சிறை செல்ல நேர்ந்தது. அவர் சிறை செல்லும் முன்பு ஆலோசனை கூட்டம் நடத்தி எடப்பாடி க. பழனிசாமியை சட்டமன்றக் குழுத்தலைவராகவும் டி.டி.வி. தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். பிறகு 124 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றார்.
மறுமலர்ச்சி தி.மு.க.
            1993 காலக் கட்டத்தில் திமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அன்று தலைவராக இருந்த மு.கருணாநிதிக்குப் பின் கட்சியின் தலைமைக்கான போட்டியில் அன்று பாராளுமன்ற உறுப்பினராகவும், நல்ல பேச்சாளராகவும் இருந்த திமுகவின் பலம் பொருந்திய திராவிடப் தலைவராக விளங்கிய வை.கோபால்சாமி தலைமையைக் கைப்பற்றி விடுவார் என்று கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தலைவர் கருணாநிதியின் உயிருக்கு அவரால் ஆபத்து என்று ஒரு காரணமும் கூறப்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டார். அதன் காரணமாக, அவருடன் திமுகவிலிருந்து வெளியேறிய வை.கோபால்சாமியின் ஆதரவாளர்களால் மறுமலர்ச்சி திமுக என்ற தனிக் கட்சி உருவானது. முதலில் சில பிரபலங்கள் அவருடன் போனாலும், நாளடைவில் அவருடைய போக்கு சரியில்லை என்று பலரும் திரும்பவும் தி.மு.க.வுக்கே திரும்பிவிட்டனர். அவர் இப்போதும் கட்சி நடத்திக் கொண்டிருப்பதோடு, யாரை எதிர்த்து தி.மு.க.வை விட்டு வெளியேறினாரோ அந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக வலிமை மிக்க பேச்சாளராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் அனுபவமிக்க தலைவர் என்பதாலும், உலக வரலாறு நன்கு தெரிந்தவர் என்பதாலும், தமிழக அரசியலில் பலருடனும் நன்கு பழகி பல அனுபவங்களைப் பெற்றவர் என்ற முறையிலும் அவரிடம் பல ஆக்க பூர்வமான செயல்பாடுகளை மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் இன்றும் கூட இத்துணை அனுபவத்துக்குப் பின்னரும் கூட உணர்ச்சிவசப்பட்டு அரசியல் நடத்துவதாலோ அல்லது நிலையான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்காததாலோ அவர் மிக உயர்ந்த நிலையை தமிழக அரசியலில் பெற முடியவில்லை. சில நேரங்களில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான எந்தத் திட்டத்தையும் உடனடியாக எதிர்த்து உரத்த குரலில் பேசுவதால் மக்கள் அவருடைய பேச்சை அதிகம் பொருட்படுத்துவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரை மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு தலைவராகப் பார்க்கத் தயங்குகிறார்கள்.
            இவர் தவிர நடிகர் டி.ராஜேந்தர், நடிகர் பாக்யராஜ் போன்றவர்களும் புது கட்சி தொடங்கி முடங்கிப் போய்விட்டார்கள். எனினும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமண எதிர்ப்புக்காக உருவான “பிராமணரல்லாதோர் இயக்கம்” பல உருமாறி நீதிக் கட்சி, திராவிடர் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. இன்னபல பெயர்களோடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இன்றைய வரலாறு. இந்த இயக்கங்களால் தமிழ்நாடும், தமிழ் நாடும் எந்தெந்த வகைகளில் முன்னேறியிருக்கிறது, தமிழர்கள் எந்தெந்த வகைகளில் உயர்வடைந்திருக்கிறார்கள் என்பதை யெல்லாம் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
            எந்தவொரு இயக்கமும் ஆக்க பூர்வமாக ஒரு காரியத்தை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்த முனைந்தால் அது நன்மையில் முடியும். எதிர்ப்பு அரசியலும், வெறுப்பு அரசியலும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகம் பயன் அளித்ததாக வரலாறு இல்லை. நூற்றாண்டு கடந்த காங்கிரஸ் பேரியக்கம், தாதாபாய் நெளரோஜி, லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரி, காமராஜர்,  டி.பிரகாசம் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட காங்கிரஸ் இன்று ஆக்கபூர்வமாகச் செயல்படுவதை விட்டு, ஒரு பிரதம மந்திரியை எதிர்க்கலாம் ஆனால் கொச்சைப் படுத்தக் கூடாதல்லவா, அவரை “சோர்” என்றெல்லாம் பேசி ஒரு இமாலயக் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது சரித்திரத்தில் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். அன்பும், அரவணைப்பும், மக்கள் நலனும், ஆக்க பூர்வமான செயல்பாடுகளும் தான் வெற்றிகளை ஈட்டித் தரும். வெறுப்புணர்வு, கோபம், தவறான சொற்களால் வசை பாடுதல் இவை தோல்வியைத் தவிர வேறெதையும் தராது என்பதை இன்றல்ல ஆதிநாள் தொட்டு வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த நல்ல பண்பாட்டை என்று நம் மக்கள் உணர்ந்து செயல்படுகிறார்களோ அன்றுதான் மக்கள் வாழ்க்கை வளம்பெறும், அமைதியும் நிலவும்.
            வாழ்க பாரதம்! வாழ்க மக்கள் ஒற்றுமை!! வாழ்க ஆக்கபூர்வமான அரசியல்.!!!
                                                           ஜெய் ஹிந்த்!!