பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, September 10, 2018

தொண்டைமான் மன்னர்களின் வரலாறு


               புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களின் வரலாறு                                                  தஞ்சை வெ.கோபாலன்                      
தென்னாட்டின் புகழ்மிக்க மறவர் ராஜ்யமான இராமநாதபுரம் சமஸ்தானத்தை கி.பி. 1673 தொடங்கி 1708 வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆண்டு, வரலாற்றில் புகழ்மிக்க மறவர்குல மன்னனாக அறியப்பட்டவர் ரகுநாத கிழவன் சேதுபதி. அவருடைய இரண்டாவது மனைவியான காதலி நாச்சியாரின் சகோதரர் ரகுநாத தொண்டைமான். கிழவன் சேதுபதி தனது மைத்துனரான ரகுநாத தொண்டைமானை புதுக்கோட்டை பகுதிகளை சுயேச்சையாக ஆண்டு கொள்ள அனுமதி கொடுத்தார். இதற்கு முன்பு ரகுநாத தொண்டைமான் திருமெய்யம் பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தார். இவர் இராமநாதபுரம் கிழவன் சேதுபதிக்கு உண்மை விஸ்வாசத்துடன் பணியாற்றி உதவியமைக்காக அவரது அர்ப்பணிப்பு சேவையைப் பாராட்டி பரிசாக புதுக்கோட்டையை ஆளும் உரிமையைக் கொடுத்தார். இப்படி உருவானதுதான் புதுக்கோட்டை சமஸ்தானம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களுக்கு இந்திய குடியரசுடன் இணைய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் தான் முதன் முதலில் 1948 மார்ச் மாதம் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இணைந்தது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலை நேரில் சந்தித்து இந்த இணைப்பைச் செய்துவிட்டுத் திரும்பியவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னர் ஹிஸ் ஹைனஸ் பிரஹதாம்பாள்தாஸ் ராஜகோபால தொண்டைமான் அவர்கள்.
இராமநாதபுரம் சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசராக இருந்த புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் பிற்காலத்தில் சுயேச்சையாக தாங்களே ராஜ்யத்தை ஆளத் தொடங்கினார்கள். கிழவன் சேதுபதி காலமானவுடன் புதுக்கோட்டை ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையின் சுயேச்சையான மன்னராக அறிவித்துக் கொண்டார். அவருடைய சகோதரி காதலி நாச்சியார் கிழவன் சேதுபதி காலமானவுடன் அவருடன் உடன்கட்டை ஏறி உயிர்நீத்தார் என்கிறது வரலாறு.                           
புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களின் முன்னோர்கள் வடக்கே தொண்டை மண்டலம் என வழங்கப்பெற்ற திருப்பதி அதன் சுற்றுப்புறப் பகுதியிலிருந்து வந்தவர்கள். 17ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சார்பில் எதிரிகளோடு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். அந்த போர்களில் உதவியாக ஈடுபட்டமைக்காக பரிசாக அளிக்கப்பட்ட ஊர்களாக கறம்பக்குடியும், அம்புக்கோயிலும் இருக்க வேண்டும். அதனால் அங்கு வந்து குடியேறினார்கள் இவர்கள். தாங்கள் குடியேறிய பகுதியில் மாவீரர்களாக இருந்தமையால் அப்பகுதிகளுக்குத் தலைமை தாங்கும் பணியை ஏற்றிருக்க வேண்டும், அதன் மூலம் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்கள் செல்வாக்குடையவர்களாக ஆகியிருக்க முடியும். தெலுங்கில் “தொண்டைமான் வம்சாவளி” எனும் ஒரு நூல் உண்டு. அதில் இவர்கள் இந்திரவம்சத்தினர் என்றும் முதலாம் தலைமை பச்சை தொண்டைமான் என்பவரிடம் இருந்தது என்கிறது. இவருடைய மகன்தான் ரகுநாத ராய தொண்டைமான். இவர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரிடமும் திருச்சியை ஆண்ட ரங்ககிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கரிடமும் நெருக்கமாக இருந்ததாகத் தெரிகிறது. திருச்சிராப்பள்ளியில் இவர் அரசாங்கக் காவல் பணியிலும் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் இவருடைய தங்கையான காதலி நாச்சியாரை ராமநாதபுரம் மன்னரான ரகுநாத கிழவன் சேதுபதி (1673 – 1710) என்பார் திருமணம் செய்து கொள்கிறார். இந்தத் திருமணம் மூலம் இவ்விருவர் நட்பும், உறவும் வலுப்படுகிறது.
இந்த உறவு ஏற்பட்ட பின்னர் கிழவன் சேதுபதி தன் மைத்துனருக்கு அங்கு ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றுக்குத் தென்புறமுள்ள தன் ராஜ்யத்தின் சில பகுதிகளை தொண்டைமானுக்கு அளிக்கிறார். தாங்கள் இருந்த கறம்பக்குடி பகுதியோடு சேதுபதி கொடுத்த பகுதிகளையும் சேர்த்து இவர்களுக்கு உரிமையான இடம் பெரிதாகிவிடுகிறது. இப்படித்தான் கிழவன் சேதுபதியின் உதவியினால் இங்கு தொண்டைமான் ஆட்சி துவங்குகிறது.
இப்படி ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை பகுதிக்கு உரியவராக ஆன சமயத்தில், இவருடைய சகோதரர் நமன தொண்டைமான் குளத்தூர்பாளையம் எனும் பகுதிக்கு உரியவராகிறார். இவருக்கு திருச்சி முத்துவீரப்ப நாயக்கரின் ஆசியும் கிடைக்கிறது. எனவே ரகுநாத ராய தொண்டைமானை புதுக்கோட்டை தொண்டைமான் என்றும், நமன தொண்டைமானை குளத்தூர் தொண்டைமான் என்றும் அழைத்தனர். இந்த நிலைமை 1750ஆம் ஆண்டில் இவ்விரு பகுதிகளும் இணைக்கப்படும் வரை இதே பெயர்களில் இருந்தன. மேலும் சில போர்கள் மூலமும் ரகுநாத ராய தொண்டைமான் வேறு சில பகுதிகளையும் தன் ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். அவை இப்போது குளத்தூர், ஆலங்குடி, திருமெய்யம் தாலுகாக்கள் என வழங்கப்படுகின்றன. இவை அத்தனையும் ஒருங்கிணைந்த பகுதிதான் புதுக்கோட்டை சமஸ்தானம்.
ரகுநாதன், நமனன் ஆகியோர் ராமநாதபுரம் சேதுபதிக்குப் போரில் உதவி செய்ததோடு, போரில் மதம் கொண்டு ஓடுகின்ற யானைகளை அடக்கியும் உதவி புரிந்தனராம். அந்த வீரச் செயலுக்காக இராமநாத புரம் சேதுபதி இவர்களுக்கு பல நிலப்பகுதிகளை பரிசாக அளித்து பாராட்டினராம். அதையொட்டியே ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டையின் முதல் மன்னராக முடிசூட்டிக் கொண்டார் என்கிறது வரலாறு.
ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னராக ஆன சமயம் தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். தஞ்சையை சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நான்கு அரசர்கள் மட்டுமே சுமார் 130 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். புதுக்கோட்டையை ஆண்ட ரகுநாத தொண்டைமான் மதுரையில் ஆட்சி புரிந்து வந்த நாயக்க மன்னர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்ததோடு, அவர்களுக்கும் தஞ்சையை ஆண்ட நாயக்கர்களுக்குமிடையே நடந்த போர்களில் மதுரையின் பக்கம் சேர்ந்து கொண்டு போராடினார்கள். அப்படி நடந்த போரில் இவர்கள் திருக்காட்டுப்பள்ளிப் பகுதியை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து பிடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மதுரை தஞ்சை நாயக்கர்களுக்கிடையே நடந்த யுத்தம் தஞ்சை நாயக்கர்களுக்கும் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கும் இடையேயான யுத்தமாக மாறியது. இந்த யுத்தத்தில் தொண்டைமான் படையினர் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் பிடித்துக் கொண்டார்கள்.ரகுநாத தொண்டைமானை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் ராஜா விஜயரகுநாத ராய தொண்டைமான். இவர் மைசூரை ஆண்டு கொண்டிருந்த ஹைதர் அலிக்கு போரில் உதவி புரிந்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தனர். சில காலம் கழிந்தபின் பிரிட்டிஷாரின் எதிர்களாகவே இருந்து வந்த ஹைதர் அலியின் படைகள் புதுக்கோட்டை மீது படையெடுத்து உட்புக முயன்றது. இந்த படையெடுப்பில் புதுக்கோட்டை படைகள் ஹைதர் அலியுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்து விட்டது. புதுக்கோட்டை தொண்டைமானின் படைகள் கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டது. ஹைதரின் புதல்வன் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தார். அந்த போர்களில் புதுக்கோட்டை படைகள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக திப்பு சுல்தானை எதிர்த்துப் போராடினார்கள். இதுபோன்ற உதவிகளால் பிரிட்டிஷார் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தொடங்கினார்கள். புதுக்கோட்டை தொண்டைமான்கள் இப்படி சுதேச மன்னர்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டிஷ் பக்கம் சேர்ந்தது ஒரு வழியில் பார்த்தால் நியாயமான, தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கைதான் என்றாலும், மற்றொரு புறம் மைசூரில் ஆண்டுவந்த இவ்விருவரும் சுதேச சமஸ்தானாதிபதிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர் என்பது தெரிகிறது.    
 தென் இந்தியாவில் பிரிட்டிஷார் ஒரு புறமும், பிரெஞ்சுக்காரர்கள் மறுபுறமும் இருந்து கொண்டு இந்திய பகுதிகளை வேட்டையாட முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்து வந்தார்கள்; ஆனால் மைசூரில் ஆட்சி புரிந்த ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை இந்த மண்ணில் காலூன்ற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை தொண்டைமான்கள் அருகிலிருந்த தஞ்சாவூர், திருவாங்கூர் ஆகிய சமஸ்தானங்களைப் போல பிரிட்டிஷ் ஆதரவு நிலையையே எடுத்தனர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1686இல் முதன் முதலாக கிழவன் சேதுபதி காலத்தில் ஆளத்தொடங்கிய முதல் தொண்டைமான் அரசனான ரகுநாத தொண்டைமான் காலம் தொடங்கி, கடைசி ஒன்பதாவது தொண்டைமானான இராஜகோபால தொண்டைமான் தன் சமஸ்தானத்தை சுதந்திர இந்திய மைய அரசிடம் ஒப்படைத்த 1948 மார்ச் 4ஆம் நாள் வரை பிரிட்டிஷ் விசுவாசிகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். எட்டாவது தொண்டைமான் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்து கொண்டு இவர்களுக்குப் பிறந்த மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் எனும் சிறுவனுடன் சமஸ்தானத்துக்கு வந்து அந்த சிறுவனுக்கு இளவரசு பட்டம் சூட்ட நினைத்த போது சமஸ்தானம் அதற்கு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானும் மோலி எனும் அவர் மனைவியும் மகன் சிட்னி தொண்டைமானுடன் இங்கிலாந்து சென்று மன்னரை சந்தித்த பின்னரும், பிரிட்டிஷ் அரசு இவர்களது திருமணத்தை ஏற்கவில்லை. அதனால் அவர் பதவி நீங்கி பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று விட்டார். அப்போது அடுத்த ராஜாவாக ராஜகோபால தொண்டைமானைத் தேர்ந்தெடுக்க பிரிட்டிஷாரே முழு முயற்சி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது ராஜகோபால தொண்டைமானுக்கு வயது ஆறு.
              
1947இல் இந்தியா பிரிட்டிஷ் அடிமைத் தளையிலிருந்து விடுதலையாகி சுதந்திர நாடாக ஆனபின்பு 1948இல் ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய மைய அரசுடன் இணைத்து விட்ட பின்பு, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக சிலகாலம் விளங்கியது. 1686இல் ஆரம்பமான புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சி 1948 மார்ச் 4ஆம் நாளுடன் ஒரு முடிவுக்கு வந்தது. ஆக மொத்தம் ஒன்பது தொண்டைமான்கள் அரசு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் முறையே
    ரகுநாத ராய தொண்டைமான் 1686 முதல் 1730
    விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1730 முதல் 1769
    ராய ரகுநாத தொண்டைமான் 1769 முதல் டிசம்பர் 1789
    விஜய ரகுநாத தொண்டைமான் டிசம்பர் 1789 பிப்.1, 1807
    விஜய ரகுநாத ராய தொண்டைமான், பிப்1, 1807 முதல் ஜுன் 1825
    ரகுநாத தொண்டைமான், ஜூன் 1825 முதல் ஜூலை 13, 1839
    ராமச்சந்திர தொண்டைமான், ஜூலை 13, 1839 முதல் ஏப்ரல் 15, 1886
    மார்த்தாண்டை பைரவ தொண்டைமான், ஏப்.15 1886 முதல் மே 25, 1928
    ராஜகோபால தொண்டைமான் அக்.28, 1928 முதல் மார்ச் 4, 1948
பாரத நாட்டினுள் பிரிட்டிஷார் புகுவதற்கு முன்பு இங்கு ஏராளமான சுயேச்சை சமஸ்தானங்கள் இருந்தன. இங்கிருந்த ராஜ்யங்கள் சிறிதும் பெரிதுமாக பல ராஜ்யங்கள் இருந்தனவற்றுள் சிலர் தங்களுக்கென்று தனியாக உலோகத்தால் ஆன நாணயங்களை அச்சிடமும், தபால் அஞ்சல் முத்திரைகளை அச்சிடுவதும் சுயேச்சையாக செய்து வந்திருக்கின்றனர். அப்படித் தங்களுக்கென நாணயங்கள், தபால் முத்திரைகள் ஆகியனவற்றை வெளியிடும் உரிமை பெற்றிருந்தனர் இந்த புதுக்கோட்டை சமஸ்தானாதிபதிகள். புதுக்கோட்டை சமஸ்தானம் சுமார் 2000 சதுர மைல்கள் பரப்பு கொண்டது. சென்னை மாகாணத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்தது இந்த சமஸ்தானம். புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் புகழ் பெற்றது “அம்மன் காசு” என்பது.                                      
 
புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களுக்குக் குலதெய்வமாக விளங்குபவர் பிரஹதாம்பாள் அம்பாள் என்கிற பெரிய நாச்சியார். புதுக்கோட்டை திருச்சி சாலையில் புதுக்கோட்டையை யொட்டி வெகு அருகில் அமைந்துள்ள இடம் திருக்கோகர்ணம் என்பது. இங்குள்ள பல்லவர் காலத்து ஆலயமான கோகர்ணீஸ்வரர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள அம்மனே பிரஹதாம்பாள் அம்பாள். இவர் பெயரால்தான் அந்த அம்மன் காசு வெளியிடப் பட்டது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் அம்மனின் உருவமும், மறுபக்கம் தெலுங்கில் ஸ்ரீவிஜய எனும் எழுத்தும் பொறிக்கப்பட்டிருக்கும்.

        புதுக்கோட்டை மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கீழ் இருந்த சமஸ்தானம். தெற்கே இருந்த அனைத்து நாயக்க மன்னர்களுமே விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது துவங்கப்பட்டவைகள் தான். இவர்கள் ஆட்சிபுரிந்த இடத்தில் அவர்களுக்குக் உட்பட்டதாக இருந்ததால் இவர்கள் நாணயத்தில் தெலுங்கு எழுத்து காணப்படுகிறது. முதல் அம்மன் காசு 1738ஆம் ஆண்டில்தான் அச்சிடப்பட்டது. தொடக்க காலத்தில் இந்தக் காசு புதுக்கோட்டையிலேயே வடிவமைக்கப்பட்டு கைத்தொழிலாக உருவாக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற காசுகள் உருவாக்க லண்டனிலிருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு புதுக்கோட்டையில் நிறுவப்பட்டது.
அம்மன் காசு உருவில் சிறிதாக இருந்த போதும் அதன் மதிப்பு அதிகமாக இருந்தது. ஒரு அம்மன் காசைக் கொண்டு உணவு வகைகள், சிற்றுண்டிகள், பழங்கள் வாங்க முடிந்தது அந்த நாட்களில். புதுக்கோட்டை அம்மன் காசு என்றால் அந்த காலத்தில் மதிப்பு அதிகம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் காலணாவுக்கு பன்னிரெண்டு அம்மன் காசுகள். நான்கு காலணா ஒரு அணா. அப்போது 16 அணா என்பது ஒரு ரூபாய். இந்தக் காசுகள் நல்ல செம்பினால் ஆனது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த போது ஏராளமான அம்மன் காசுகள் கொட்டிக் கிடந்தன. அவைகளைப் பொற்கொல்லர்களும், செப்பு உலை வைத்திருப்போரும் வாங்கிச் சென்றனர். அவர்கள் அதை உருக்கி செப்புப் பாத்திரங்கள் செய்தனர்.
புதுக்கோட்டை மன்னர்கள் பிரஹதாம்பாள் அம்மன் உருவத்தைத் தங்கள் காசுகளில் பதிப்பதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? பிரஹதாம்பாள் அம்பாளைத்தான் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்கள் வம்சத்தைக் காக்கும் தெய்வமாக வணங்கி வந்தார்கள். மன்னர் குடும்பத்தார் அனைவரும் இந்த ஆலயத்தில் தான் இறைவனை வணங்கி வந்தார்கள். அரசர் சம்பந்தப்பட்ட முடிசூட்டுதல் முதல் அனைத்து விழாக்களும் பிரஹதாம்பாள் சந்நிதியில் தான் நடத்துவார்கள்.                               
ஒரு முறை புதுக்கோட்டையில் மன்னருக்கு எதிராக ஒரு கலகம் ஏற்பட்டதாம். ஆளும் உரிமை பெற்ற தொண்டைமான் மன்னருக்கு எதிராக அவருடைய உறவினர்களும், குடும்பத்துக்கு வேண்டியவர்களுமே இந்தக் கலகத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்குத் தாங்களே மன்னராக ஆகிவிட வேண்டுமென்கிற பேராசை, கலகம் செய்யத் தூண்டியிருக்கிறது. இந்த சிக்கலை விடுவிக்க அப்போதைய சமஸ்தானத்து திவானாக இருந்த சேஷையா சாஸ்திரி என்பார் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.
அந்தத் திட்டத்தின்படி மன்னர் ஒரு பிரகடனம் வெளியிட்டார். அதன்படி இனி புதுக்கோட்டை சமஸ்தானம் பிரஹதாம்பாள் அம்பாளின் சொத்து என்று அறிவித்தார். தொண்டைமான் மன்னர்கள் பிரஹதாம்பாள் அன்னையின் பிரதிநிதிகளாக இருந்து இந்த சமஸ்தானத்தை நிர்வகிப்பார்கள் என்கிறது அந்தப் பிரகடனம். இந்த சமஸ்தானத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அது அன்னை பிரஹதாம்பாள் அம்பாளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்பாக ஒரு அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்கள். அது “ஸ்ரீ பிரஹதாம்பாள் அம்பாள் தாசன்” என்பது.
எங்குமில்லாத வழக்கமாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் நவராத்திரி காலங்களில் தங்கள் அரண்மனையில் நடைபெறும் கொலுவுக்கு வரும் பெண்களுக்கு ஒரு பை நிறைய அரிசி, இதர பரிசுப் பொருட்கள் இவைகளுடன் ஒரு அம்மன் காசும் கொடுக்கத் தொடங்கினர். இந்த வழக்கம் தொண்டைமான் ஆட்சி புதுக்கோட்டையில் 1948 மார்ச் வரை தொடர்ந்த காலம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.
இராமநாதபுரம் மறவர் சமஸ்தானம் ரகுனாத கிழவன் சேதுபதி (1673 – 1708) என்பவரால் ஆளப்பட்டு வந்தது. அப்போது அவர் தொண்டைமானின் சகோதரியான காதலி நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதைப் பார்த்தோமல்லவா? இந்தத் திருமணத்துக்குப் பிறகு கிழவன் சேதுபதி தன் மைத்துனரான திருமெய்யத்துக்குப் பொறுப்பாளராக இருந்த ரகுநாத தொண்டைமானை புதுக்கோட்டைக்கு சுதந்திரமான மன்னராக நியமனம் செய்தார் என்பதை முன்பே பார்த்தோம். தொண்டைமானுடைய சேவையைப் பாராட்டி அவர் புதுக்கோட்டை மன்னராக முடிசூட்டிக் கொள்ள, சேதுபதி மன்னர் அனுமதி அளித்தார்.
அதுமுதலாக புதுக்கோட்டை ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு சிற்றரசாகவே விளங்கி வந்தது. ஆனால் புதுக்கோட்டை சமஸ்தானம், தங்களுக்கென்று வெளியுறவு போன்ற நிர்வாக விஷயங்களை அமைத்துக் கொண்டது.                         
1680இல் புதுக்கோட்டை சமஸ்தானம் உருவானது. பிறகு அருகில் அமைந்திருந்த தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களிலிருந்து சில பகுதிகளைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர். தொடக்க காலத்தில் இருந்தே புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. அந்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கும் மைசூர் ஹைதர், திப்பு ஆகியோருடனான போரில் ஆங்கிலேயர் பக்கம் இருந்து போரிட்டனர். இப்படி ஆங்கிலேயர்களுக்குச் செய்த சேவைகளின் காரணமாக புதுக்கோட்டை சமஸ்தானம் 1800இல் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனியாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்து வந்தது.
அப்போது கிழக்கிந்திய கம்பெனியார் வசம் இருந்த சென்னை மாகாணத்தின் அதிகார எல்லைக்குள் புதுக்கோட்டை சமஸ்தானமும் இருந்தது. இந்த நிலைமை 1800ஆம் ஆண்டு தொடங்கி 1923 வரை நீடித்தது. அப்போது அரசியல் நிர்வாக மாற்றம் நிகழ்ந்த போது இது இந்திய மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்து அதுவும் 1948 வரை நீடித்திருந்தது.
அப்போதைய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மக்கட்தொகை 1941 கணக்கெடுப்பின்படி 4,38,648. இப்போதைய புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லா பகுதிகளும், அறந்தாங்கி தாலுகா தவிர மற்ற பகுதிகள் சமஸ்தானத்துக்குட்பட்டு இருந்தது. புதுக்கோட்டை நகரமே இந்த சமஸ்தானத்தின் தலைநகரம். அரசாங்க வழக்கப்படி புதுக்கோட்டை மன்னருக்கு 17 பீரங்கி குண்டுகள் வெடித்து மரியாதை செய்யும் வழக்கம் இருந்து வந்தது.
18ஆம் நூற்றாண்டு வரையிலும், இந்த சமஸ்தான பகுதிகள் தொண்டைமான் நாடு என்றும், தொண்டைமான் காடுகள் என்றும்தான் அழைக்கப்பட்டு வந்தன. 19ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகள் சர்வே செய்யப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன. 1974இல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது தஞ்சை மாவட்டத்தில் இருந்த அறந்தாங்கி பிரிக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
சமஸ்தானத்துக்கு மன்னரே தலைவர். இவருடைய ஒப்புதலின்றி அங்கு எதுவும் சட்டமாகாது. மன்னருக்கு முதன்மை அமைச்சர் ஒருவர் உதவியாக இருப்பார். 1885 ஜூலை 1 வரை இந்த அமைச்சர் “சர்க்கேல்” என்று அழைக்கப்பட்டார். அதன் பின்னர் 1931 நவம்பர் 17 வரை அவர் “திவான்” என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு சமஸ்தானம் இந்திய யூனியனில் இணைக்கப்படும் வரை அவர் நிர்வாகி (Administrator) என்றழைக்கப்பட்டார். இந்த திவானுக்கு கவுன்சிலர் எனும் அதிகாரி உதவி புரிவார்.
1902ஆம் ஆண்டில் முப்பது பேர் கொண்ட சமஸ்தான பிரதிநிதிகள் சபையொன்று அமைக்கப்பட்டது. இந்த முப்பது பேரும் ஏதாவதொரு பிரிவிலிருந்து முன்மொழியப்பட்டவர்கள். ஆனால் 1907க்குப் பிறகு இவர்களில் 18 பேர் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 1913இல் இப்படி தேர்வாகி வருவோரின் எண்ணிக்கை 13ஆகக் குறைக்கப்பட்டது. மறுபடியும் 1916இல் இது 25ஆக அதிகரிக்கப்பட்டது. ஆக, இந்தப் பிரதிநிதி சபையின் உறுப்பினர்கள் தேர்வு அல்லது நியமனம் மாறுதலுக்கு உட்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது.
1924ஆம் ஆண்டில் இந்த பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக புதுக்கோட்டை சட்டமன்றமொன்று உருவாக்கப்பட்டது. இந்த சட்டமன்றம் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சி.டபிள்யு.இ. காட்டன் என்பவரால் 1924 செப்டம்பர் 29இல் தொடங்கி வைக்கப்பட்டது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் சுதேச சமஸ்தானங்கள் இந்திய யூனியனுடன் இணைந்தன. அதன்படி முதன் முதலில் இணைந்த சமஸ்தானம் புதுக்கோட்டை. அப்படி இணைகின்ற காலகட்டத்தில் இங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐம்பதாக இருந்தது. இந்த ஐம்பதில் முப்பத்தைந்து தேர்வாகி வந்தவர்கள், ஏனையோர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு இப்படியொரு சட்டமன்றம் செயல்பட்டாலும், இந்த மன்றம் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தின்படி, இந்த மன்றம் மன்னர்களுக்கு சட்டமியற்றும் உரிமையில் எந்த விதத்திலும் தடையாக இருக்காது, மன்னர் பிறப்பிக்கும் சட்டத்தைப் பற்றி இந்த மன்றம் விவாதிக்கவும் முடியாது. மன்னரைப் பற்றியோ, மன்னர் குடும்பத்தைப் பற்றியோ இந்த மன்றம் விவாதிக்க முடியாது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் அரசியல் நிர்வாகம் பற்றி உடனிருந்து அறிந்து கொண்டு சென்னையில் இருக்கும் கவர்னருக்குத் தகவல் கொடுக்க வென்று இங்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். இந்தப் பதவி 1800ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1840வரை தஞ்சாவூர் கலெக்டரே இந்தப் பணியையும் கவனிக்கும்படி நியமிக்கப்பட்டார். 1840 முதல் 1865 வரை மதுரை கலெக்டர் இந்தப் பணியைச் செய்து வந்தார். 1865 முதல் 1947 வரை திருச்சினாப்பள்ளி கலெக்டருக்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டது. திவான் எடுக்கும் முடிவுகள் அவ்வப்போது சென்னை மாகாண அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாக அறிமுகமானது. 1936 ஏப்ரல் முதல் தேதியன்று புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 27 கம்பெனிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
       இனி புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி புரிந்த ஒன்பது சமஸ்தானாதிபதிகளைப் பற்றிய சுருக்கமான விவரங்களைப் பார்க்கலாம்.
1.ரகுநாத ராய தொண்டைமான் (1641 – 1730)
இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனரான இவர் திருமெய்யம் பகுதிகளுக்கு பொறுப்பாளராக இருந்தார். இவருடைய தங்கை காதலி நாச்சியாரைத்தான் கிழவன் சேதுபதி திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் சேதுபதிக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் இவரை 1686 இல் புதுக்கோட்டை மன்னராக நியமனம் செய்தார் கிழவன் சேதுபதி.
ரகுநாத ராய தொண்டைமான் 1641ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தந்தை ஆவடை ரகுநாத தொண்டைமான். கள்ளர் இனத்துத் தலைவராக இருந்த இவர் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மூன்றாம் ஸ்ரீரங்காவிடம் தளபதியாக இருந்தார். விஜயநகர மன்னராக ஆவதற்காகக் காத்திருந்தவர்களில் இவரும் ஒருவர். அவரிடம் பணிபுரிந்த இந்த ஆவடை ரகுநாத தொண்டைமானின் வீரத்தைப் பாராட்டி இவருக்கு “ராய ராகுத்த ராய வஜ்ரிடு ராய மன்னித ராயா” எனும் விருதை 1639இல் வழங்கி அவருக்கு நிலங்களையும் மான்யமாகக் கொடுத்துப் பாராட்டினார்.
ரகுநாத ராய தொண்டைமான் தனியாக ஆசிரியர் வைத்துக் கல்வி கற்றவர். இவரது தந்தையார் 1661இல் காலமான பின்னர் இவரே புதுக்கோட்டையின் மன்னராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1675இல் இவரது ஆட்சியை ராமநாதபுரம் சேதுபதி ஏற்றுக் கொண்டார். சேதுபதிக்கு உதவியாக இவர் போர்களில் கலந்து கொண்டார் என்பதற்காக சேதுபதி இவருக்கு திருமயம் கோட்டையை அன்பளிப்பாகக் கொடுத்தார். 1686இல் தொடங்கி இவர் “புதுக்கோட்டை மன்னர்” எனும் விருதினை ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கினார்.
புதுக்கோட்டையின் சுதந்திர மன்னராக ரகுநாத ராய தொண்டைமான் 1686 தொடங்கி 1730 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை உயர்ந்த நிலைக்கு மாற்றினார். எப்போதும் இவர் சேதுபதி மன்னருக்கு உற்ற துணையாகவே இருந்து வந்தார். 1720இல் கிழவன் சேதுபதி காலமான பின்னர் இவர் ராமநாதபுரம் ஆட்சிக்கு தாண்ட தேவனை ஆதரித்தார். இவரை எதிர்த்து பவானி சங்கர் என்பார் தஞ்சாவூர் சரபோஜி மன்னர் ஆதரவுடன் போட்டியில் இருந்தார். முதலில் சரபோஜி மன்னரின் ஆதரவுடன் பவானி சங்கர் தாண்ட தேவனைத் தோற்கடித்துவிட்டுப் ராமநாதபுரம் சிம்மாசனத்தைப் பிடித்துக் கொண்ட போதிலும், பின்னர் சரபோஜி மன்னர் ராமநாதபுரம் மீது 1723இல் படையெடுத்து வந்து வென்றார். புதுக்கோட்டை ரகுநாத ராய தொண்டைமான் தாண்ட தேவனை ஆதரித்தார். அவர் ஆதரித்தபடி பின்னர் அவரே ராமநாதபுரம் அரியணை யேறினார். 1730இல் சரபோஜி மன்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு கீழாநிலை எனும் ஊரைத் தருவதாகச் சொன்னாலும், பின்னர் அவர் அப்படிச் செய்யவில்லை. ரகுநாத ராய தொண்டைமான் 1730 ஏப்ரலில் இறந்தார். அவருக்குப் பிறகு அவருடைய பேரன் முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை ஆட்சிக் கட்டிலில் ஏறினார்.
ரகுநாத ராய தொண்டைமானுக்கு மொத்தம் ஆறு மனைவிகள். அவருடைய சில பிள்ளைகளின் பெயர்கள் பெரிய ராய தொண்டைமான், சின்ன ராய தொண்டைமான், திருமலை ராய தொண்டைமான், முத்து விஜய தொண்டைமான், விஜய தொண்டைமான், ராஜகுமாரி பெரியநாயகி அம்மாள் பாயி சாஹேப்.
2.முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் (25-8-1713 – 28-12 1769)
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இரண்டாவது சுதந்திரமான அரசர் இந்த முதல் விஜயரகுநாத ராய தொண்டைமான். 1730இல் பதவிக்கு வந்த இவர் 1769 வரையில் ஆட்சி புரிந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் வடக்கே முகலாய வம்சத்து சக்கரவர்த்திகள் ஆண்டு கொண்டிருந்தனர். இந்த முகலாய சக்கரவர்த்திகளின் ஆளுகைக்குட்பட்டதாக தெற்கே நிஜாமும், அவருக்குக் கீழ் ஆற்காடு நவாபும், அவர் கட்டுப்பாட்டின்கீழ் நாயக்கர்கள் ஆண்ட செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய சின்னஞ்சிறு ராஜ்யங்களும் இருந்து வந்தன. இவைகள் தவிர வரிவசூல் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு பாளையக்காரர்களும் இவர்களைப் போலவே ஆற்காடு நவாப், நிஜாம், முகலாய மன்னர்கள் என்று வரிசையில் ஆட்சி புரிந்தார்கள். இந்த சின்னஞ்சிறு ராஜ்யங்கள் கர்நாடிக் நவாப் எனப்படும் ஆற்காடு நவாபுக்குக் கப்பம் கட்டி வந்தனர். இடையிடையே இவர்கள் கப்பம் கட்ட தவறும் போது, கர்நாடக நவாப் இவர்கள் மீது படையெடுப்பதும், அதற்கு ஆங்கில கம்பெனியார் உதவி செய்வதும் வழக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட படையெடுப்புகளுக்கு ஏனைய ராஜ்யங்கள் பலியான போதும் புதுக்கோட்டை சமஸ்தானம் மட்டும் இதுபோன்ற படையெடுப்புகளில் இருந்து தப்பித்து வந்தது. ஆனாலும் புதுக்கோட்டையில் தொண்டைமான்கள் ஆண்ட போது இவர்களுக்குள் நடந்த போர்களில் கலந்து கொள்ள நேர்ந்தது. இவருடன் போரிட்டவர்கள் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னர்களும், ஆற்காடு நாவாபுடன் மோதிக்கொண்டிருந்த சந்தா சாஹேபும் அவனுக்கு உதவியாக வந்த பிரெஞ்சுப் படைகளும் தான். புதுக்கோட்டை மன்னர்கள் எப்போதும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாருக்கு ஆதரவு நிலை எடுத்திருந்ததால், தென்னகத்தில் அப்போது குடியேறியிருந்த கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் நேர்ந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி, புதுக்கோட்டை மன்னர்களும் தங்களுடன் உறவு பூண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சுக் காரர்களிடமும், சந்தா சஹேபிடமும் விரோதம் கொண்டு போராட வேண்டியிருந்தது.
       ஆற்காடு நவாப் பதவிக்கு அங்கு பங்காளிச் சண்டை நடந்து கொண்டிருந்த சமயம். நவாப் முகமது அலிக்கும் சந்தா சாஹேபுக்குமிடையில் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. முகமது அலிக்கு ஆங்கிலேயர் கிழக்கிந்திய கம்பெனியாரும், சந்தா சாஹேபுக்கு பிரெஞ்சுக்காரர்களும் ஆதரவு தந்தனர். தென் இந்தியாவில் தாங்கள் காலூன்ற வேண்டுமென்று இவ்விரு ஐரோப்பிய நாட்டவர்களும் முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் ஆளுக்கு ஒரு சிற்றரசனைக் கையில் போட்டுக்கொண்டு அவர்களையும் மோதவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த யுத்தங்கள் ஒருநாள் இரண்டு நாட்கள் நடந்தவை அல்ல. இது ஒரு தொடர்கதையைப் போல நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்தன. அதிலும் திருச்சியை மையமாகக் கொண்டு இவர்களது போராட்டம் அமைந்திருந்தது. புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அசைக்கமுடியாத உறுதுணையாக இருந்து வந்தது. தஞ்சை மராத்தியர்கள் அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டு, ஒரு முறை முகமது அலிக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தும், சந்தா சாஹேபு படையெடுத்து வந்தால் அவனுக்கு ஏராளமான பொருட்களைக் கொடுத்து சமாதனம் செய்து கொண்டும் இருந்துவிட்டு, இறுதியில் சந்தா சாஹேப் வசமாக மாட்டிக் கொண்ட சமயம் அவனைப் பிடித்து சிறைவைத்து, முகமது அலியின் விருப்பப்படி அவன் தலையை வெட்டி திருச்சிக்கு அனுப்பியும் வைத்தனர். இந்த யுத்த அரசியலின் காரணமாக தெற்கே ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் ஆதிக்கத்தை மிகவும் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டனர்.
       இப்படி புதுக்கோட்டை தொண்டைமான்களும், தஞ்சை மராத்தியர்களும் ஆங்கில கம்பெனிக்குச் செய்த உதவி காரணமாக ஆற்காட்டு நவாபுக்கு இவர்கள் கப்பம் கட்டுவது தள்ளுபடி செய்யப்பட்டது. இது புதுக்கோட்டைக்கு நிரந்தரமான சலுகை என்றாலும், தஞ்சையைப் பொறுத்த மட்டில், கர்நாடக நவாப் ஆங்கிலேயர்களிடம் வாங்கிய கடனை திரும்ப அடைக்க முடியாமல் தஞ்சைக்குக் கொடுத்த சலுகையை நீக்கிக் கொண்டு, மீண்டும் கப்பம் கேட்டு தஞ்சையை துளஜேந்திர ராஜாவிடமிருந்து இரு ஆண்டுகள் பிடித்து வைத்திருந்தனர்.
       புதுக்கோட்டைக்கும் ஆங்கில கம்பெனியாருக்குமிடையே இருந்த இந்த உறவு இவருக்கு அடுத்த அரசரான ராய ரகுநாத தொண்டைமான் காலத்திலும் நீடித்தது. காரணம் மைசூரின் ஹைதர் அலியின் அச்சுறுத்தல் புதுக்கோட்டைக்கு எப்போதும் இருந்ததால், ஆங்கில கம்பெனியாரின் உதவி தேவைப்பட்டது.
       முதலாம் விஜயரகுநாத ராய தொண்டைமான் 1713ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25இல் பிறந்தவர். தந்தையார் திருமலை ராய தொண்டைமான், தாய் நல்லாயி ஆயி சாஹேப். இவரும் தனி ஆசிரியரை அமர்த்திக் கொண்டு கல்வி கற்றார். 1729இல் இவரது தந்தை காலமானதும் இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய பாட்டனாரான முதல் புதுக்கோட்டை மன்னர் ரகுநாத ராய தொண்டைமான் இவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார். ஆக பாட்டனுக்குப் பிறகு பேரன் அரசு கட்டிலில் ஏறிய நிகழ்ச்சி நடைபெற்றது.
       முதல் விஜய ரகுநாத ராய தொண்டைமானுடைய முடிசூட்டு விழா குடுமியான் மலை ஆலயத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மன்னர்களுடைய விழாக்கள் அனைத்தும் அந்த ஆலயப் பிரகாரத்தில் அமைந்துள்ள அறுகோண வடிவில் அமைந்த ஒரு பெரிய பாறையைத் தளமாகக் கொண்ட மண்டபத்தில் நடத்துவதுதான் வழக்கம். அதன்படி இவருடைய முடிசூட்டு விழா குடுமியான் மலையில் கோலாகலமாக நடைபெற்றது.  தாத்தாவுக்குப் பிறகு பதவி கிடைத்த இவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்படியான நிலைமை தோன்றியது. அப்படி அவர் போரிட்டது வேறு எந்த எதிரிகளுடனுமல்ல, அவருடைய சொந்த சித்தப்பாக்களுடன் தான். ரகுநாத ராய தொண்டைமானுக்குப் பிறகு அவர்களுடைய புதல்வர்கள் பதவிக்குக் காத்திருக்க பேரனுக்குக் கிடைத்ததில் அவர்களுக்கு கோபம். உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. அப்போது தஞ்சாவூர் மராத்திய படைகளின் தளபதி ஆனந்த ராவ் என்பார் புதுக்கோட்டையின் மீது படையெடுத்து வந்து விஜயரகுநாத ராய தொண்டைமானைத் தோற்கடித்து அவரை திருமயம் கோட்டையில் சிறை வைத்தார். அடுத்த ஓராண்டு காலம் அவர் புதுக்கோட்டையின் பாதுகாப்பு அரண்களையெல்லாம் தகர்த்துவிட்டு தலைநகரத்தையும் சூறையாடிவிட்டுச் சென்றார்.
       இந்த சூழ்நிலையில் 1750இல் இரண்டாம் கர்நாடிக் யுத்தம் தொடங்கியது. இது ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனிக்கும், பிரெஞ்சுக் காரர்களுக்குமிடையே நடந்தது. இந்த யுத்தத்தில் சந்தா சாஹேப் பிரெஞ்சுக்காரர்கள் பக்கம் இருந்து போரிட்டார்.  கிழக்கிந்திய கம்பெனிக்கு தஞ்சை மராட்டியர்கள் ஆதரவு கொடுத்துப் போரிட்டனர். அப்போது திருச்சிராப்பள்ளி கோட்டையை பிரெஞ்சுக் காரர்கள் முற்றுகையிட்டனர். அந்த முற்றுகையின் போது பிரிட்டிஷாரின் கிழக்கிந்தியப் படைகளுக்கு புதுக்கோட்டை எல்லா உதவிகளையும் அனுப்பி உதவி செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரெஞ்சுப் படைகள் 1754 மே மாதத்தில் புதுக்கோட்டையைக் குறி வைத்துத் தாக்கி புதுக்கோட்டையை துவம்சம் செய்தது. ஆக விஜய ரகுநாத ராய தொண்டைமான் ஆட்சி போர், தோல்வி, இழப்பு என்றே போய் முடிவடைந்து விட்டது. இவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான்.
3.ராஜா ஸ்ரீ ராய ரகுநாத தொண்டைமான் (1738 மே – 1789 டிசம்பர் 30)
       தொண்டைமான் அரசர்களில் புதுக்கோட்டையை ஆண்ட மூன்றாவது மன்னரான ராஜா ஸ்ரீராய ரகுநாத தொண்டைமான் 1769 டிசம்பர் 28 முதல் 1789 டிசம்பர் 30 வரை இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் 1738ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். தந்தையார் முதலாம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் மன்னராவார். தாயார் ராணி நல்லகட்டி ஆயி சாஹிப். இந்த தம்பதியினருக்கு இவர் மட்டுமே ஒரே புதல்வர். இவரும் அவர்கள் குடும்ப வழக்கப்படி வீட்டிலேயே தனி ஆசிரியரை அமர்த்திக் கல்வி கற்றவர்.
       ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1769 டிசம்பர் 28இல் காலமான போது இவர் ஆட்சிக்கு வந்தார். இவருடைய காலத்தில் இவர் தந்தையார் காலம் போல போர்களும், குழப்பங்களும் இல்லாத சாராரண நிலைமையே நிலவி வந்தது. இவர் தெலுங்கில் “பார்வதி பரிணயமு” எனும் நூலை இயற்றியிருக்கிறார். முன்பே சொன்னது போல இவருடைய ஆட்சிக் காலத்தில் சொல்லும்படியான பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. நாடு எப்போதும் போல அமைதியாகவே இருந்து வந்தது. இருபது ஆண்டுகள் இவர் ஆட்சி முடிந்த நிலையில் இவர் 1789 டிசம்பர் 30 இல் காலமானார். இவர் இறந்த போது இவருக்கு ஆண் மக்கள் எவரும் இல்லாத நிலையில் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் உறவினரான “விஜய ரகுநாத தொண்டைமான்” அரச பதவியைப் பெற்றார்.
       ராய ரகுநாத தொண்டைமானுக்கு பதினொரு ராணிகள். இவருக்கு ஒரேயொரு மகள் மட்டும் இருந்தார். அவர் பெயர் ராஜகுமாரி பெருந்தேவி அம்மாள் ஆயி சாஹேப்.
4.ராஜா ஸ்ரீ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் (மே 1759 – 1807 பிப்ரவரி 1.)
        ராய ரகுநாத தொண்டைமான் மன்னருக்கு ஒரேயொரு பெண் வாரிசு மட்டுமே இருந்ததால், அவர் காலமான பின்பு அவருடைய சகோதரர் முறையிலான இந்த ஸ்ரீவிஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் என்பார் ஆட்சிக்கு வந்தார். 1789 டிசம்பர் 30இல் ஆட்சிப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட இவர் 1807 பிப்ரவரி 1 வரை ஆட்சியில் இருந்தார். இவருடைய காலத்தில் தான் கிழக்கிந்திய கம்பெனியார் மிக விரைவாக தென்னகத்தைத் தங்கள் வசப்படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு, தெற்கே இருந்த பல பாளையக்காரர்களை போரில் வீழ்த்தித் தங்கள் ஆட்சியை இங்கே காலூன்றச் செய்து கொண்டனர். இவர் ஆங்கில கம்பெனியாருக்கும், ஆற்காட்டு நவாபுக்கும் மிக உதவிகரமாக இருந்தார்.
       தெற்கில் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு நாயக்கர் ஆங்கில கம்பெனியாருக்கு கப்பம் கட்ட மறுத்தார். ஆற்காடு நவாப் தான் கம்பெனியாரிடம் வாங்கிய கடனை வசூல் செய்து கொள்ள பாளையக்காரர்களிடம் வரிவசூலைச் செய்து கொள்ளும்படி அனுமதி கொடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ளாத கட்டபொம்மு நாயக்கர், உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் உனக்கு எதற்காக கப்பம் செலுத்த வேண்டும் என்று எதிர்த்து நின்றார். அப்போது ராணுவ பலம் கொண்ட கிழக்கிந்திய கம்பெனியார் தங்களுக்கு இந்த உரிமையை ஆற்காடு நவாப் கொடுத்திருப்பதாகவும், ஆகவே பாளையக்காரர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று வாதிட்டனர். இதனால் இவ்விருவருக்குள்ளும் தகராறு மூண்டது. கம்பெனியார் படை கட்டபொம்மு நாயக்கரின் பாளையத்தை வலிய அபகரித்துக் கொண்டனர். இவ்விரு படைகளுக்கும் நடந்த சண்டையில் தப்பிப் பிழைத்த கட்டபொம்மு தப்பி சிவகங்கை காடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அது தொண்டைமான் ராஜ்யத்திற்குட்பட்ட பகுதி. ஆங்கில கம்பெனியார் புதுக்கோட்டை தொண்டைமான் அரசருக்கு செய்தி அனுப்பி தங்கள் எதிரியான பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லைக்குட்பட்ட காட்டில் ஒளிந்திருப்பதாகவும், அவரைப் பிடித்துக் கொடுக்கவும் வேண்டிக் கொண்டனர். அதன்படி கம்பெனியாரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விஜயரகுநாத தொண்டைமான் தனது படையை அனுப்பி காட்டில் தங்கியிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்துக் கொண்டு போய் மதுரையில் கம்பெனியார் வசம் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவரைக் கொண்டு போய் விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி கயத்தாறு எனும் ஊரில் ஒரு புளிய மரத்தில் கட்டபொம்மு நாயக்கர் தூக்கிலிடப்பட்டார். காலப்போக்கில் வரலாறு தெரிந்து மக்கள் கட்டபொம்மனின் வீரத்தைப் பாராட்டத் தொடங்கினர். காலப்போக்கில் கட்டபொம்மன் வரலாற்றில் வீரம் செறிந்த பகுதி மக்களை மிகவும் கவர்ந்த அதே நேரம் புதுக்கோட்டை தொண்டைமான் அவருக்கிழைத்த அநீதி குறித்து மனவருத்தமும் தொண்டைமான் மீது அதிருப்தியும் கொண்டனர்.  தொண்டைமானின் இந்த நடவடிக்கை துரோகம் என்று மக்கள் கருதினர். எனினும் இப்படியொரு கருத்து இருந்த போதும் வேறொரு கருத்தும் நிலவுகிறது. அப்போது இருந்த சூழ்நிலையில் கம்பெனியாருக்கும் பாளையக்காரர் கட்டபொம்முவுக்கும் கப்பம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டு யுத்தம் நடந்து கட்டபொம்மன் தப்பி வந்து புதுக்கோட்டை காட்டுக்குள் பதுங்கிக் கொண்ட சூழ்நிலையில் அவர் தொண்டைமானிடம் அடைக்கலம் என்று கேட்கவும் இல்லை, அவர் வந்தது மன்னருக்குத் தெரியவும் இல்லை. அப்படியிருக்க தன் நாட்டிற்குள் வந்து புகுந்து கொண்டவரை, தங்களிடம் நட்பு பாராட்டும் கம்பெனியார் பிடித்துக் கொடுக்கும்படி கேட்டதிலோ, அவர்களுக்கு உடன்பட்டு நடந்து கொள்வதற்காக அவரைப் பிடித்துக் கொடுத்ததிலோ தார்மீக தவறு எதுவும் இல்லை என்றும் சிலர் எண்ணினார்கள். எது எப்படியாயினும் நம்மை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேயருடன் நட்பு பூண்டு, சொந்த நாட்டானையே பிடித்துக் கொடுத்தது துரோகம் தான் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. போன்றவர்கள் வரலாற்றில் எழுதுகிறார்கள்.
       அந்த காலகட்டம் ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக இருந்த காலம். தெற்கில் பாளையக்காரர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கி தங்கள் ஆளுமையை அங்கே நிலை நாட்டிய பிறகு மீதமிருந்த ஒருசிலர் அடங்கிப் போய் விட்டதாலும், மீதமிருந்த எதிரிகள் மிகச் சிலரே. அவர்களை அடக்கி ஒடுக்குவது ஒன்றும் ஆங்கில கம்பெனியாருக்கு அரிதான காரியமாக இருக்கவில்லை. ஆகவே தென் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட பிரிட்டிஷாரின் கைக்குப் போய்விட்டதாகவே சொல்லலாம். 1800ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் இந்தியாவின் தென் பகுதியைத் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
       முன்பே குறிப்பிட்டபடி தஞ்சை ராஜ்யம் கபளீகரம் செய்யப்பட்டு விட்டது. தெற்கே ராமநாதபுரம் ஜமீன்தாரியாக தரம் குறைக்கப்பட்டது. ஆனால், புதுக்கோட்டை மட்டும் சம்ஸ்தானமாகவே அங்கீகரிக்கபப்ட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சுயேச்சையான சமஸ்தானமாக விளங்கியது புதுக்கோட்டை சமஸ்தானம்.
1759 மே மாதத்தில் திருமலை ராய தொண்டைமான் சாஹேபுக்கு மகனாகப் பிறந்தவர் விஜயரகுநாத தொண்டைமான். இவரும் தனி ஆசிரியரை வைத்துக் கொண்டு கல்வி பயின்றவர்.
       இவருக்கு முன்பு இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த ராய ரகுநாத தொண்டைமான் காலம் அமைதியாக கடந்தது போலின்றி, இந்த விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் காலம் தென்னகம் போர்க்களமாகி இருந்தது. வழக்கம் போல புதுக்கோட்டை தொண்டைமான்கள் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு நெருக்கமாக, நட்புடன் இருந்தது போலவே இவரும் அவர்களுடன் தோளோடு தோள் நின்று உதவி புரிந்தார். கம்பெனியார் நடத்திய போர்களில் இவர் படையும் பிரிட்டிஷாருக்கு மிகவும் உதவியாக இருந்து வந்திருக்கிறது. அதன் நன்றிக் கடனாக இவருக்கு “ராஜா பகதூர்” எனும் விருதை கர்நாடக நவாப் முகமது அலிகான் வாலாஜா (ஆற்காடு நவாப்) அளித்து கெளரவித்தார். 1796 அக்டோபர் 17ஆம் நாள் இவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
       தெற்கே திருநெல்வேலிக்கு அருகிலுள்ள பாஞ்சாலங்குறிஞ்சி பாளையக் காரரான கட்டபொம்மு நாயக்கர் பிரிட்டிஷ் கம்பெனியாருடன் போரில் ஈடுபட்டார். அந்தப் போரில் விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக பாளையக்காரர் கட்டபொம்முவுக்கு எதிராகப் போராடினார். அதுமட்டுமல்லாமல் கட்டபொம்மு நாயக்கர் போரில் தோற்று புதுக்கோட்டை சமஸ்தான காடுகளில் வந்து ஒளிந்து கொண்ட போது அவரையும், அவருடைய தம்பியான ஊமைத்துரையையும் 1800இல் பிரிட்டிஷாரிடம் பிடித்துக் கொடுத்தவர் இந்த விஜயரகுநாத தொண்டைமான். இந்த சாதனைக்காக அவரைப் பாராட்டி பிரிட்டிஷ் கம்பெனியார் இவருக்கு 1803இல் கீழாநிலை எனும் ஊரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும்  பரிசாக அளித்தனர்.
       மராத்திய மன்னர்களால் ஆண்டு வரப்பட்ட தஞ்சாவூர் ராஜ்யத்தை 1799இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அங்கு ஒரு ஆங்கில ரெசிடெண்டை பணியமர்த்தி மராத்தியர்களின் செயல்பாட்டை மேற்பார்வை பார்த்து வந்தனர். அப்போது அங்கு ஆண்டு வந்த 2ஆம் சரபோஜி மன்னரை தலைநகருக்கு மட்டும் ஆட்சி புரிய விட்டு, மற்ற பகுதிகளின் நிர்வாகத்தை கம்பெனியே மேற்கொண்டது. 1836 முதல் 1855 வரை ஆட்சி புரிந்த இரண்டாம் சிவாஜி இறந்த பின்னர் தஞ்சை முழுவதையும் பிரிட்டிஷார் நேரடியாகவே எடுத்துக் கொண்டனர்.
       தஞ்சாவூர் தவிர ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளும் கிழக்கிந்திய கம்பெனியார் வசம் போய்விட்டது. அரசர் என்ற நிலை மாறி அவர்கள் “ஜமீன்தார்கள்” என்ற அளவில் தகுதி குறைக்கப்பட்டது. இப்படி தென்னகம் முழுவதையும் கபளீகரம் செய்த கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டின் ஒரே ஆட்சியாளராக ஆகிவிட்டனர். ஆனால் புதுக்கோட்டை மட்டும் சுதந்திர ராஜ்யமாக இருக்க அனுமதிக்கப்பட்டனர்; காரணம் அவர்கள் கம்பெனிக்குச் சாதகமாகச் செய்த சேவைகளே காரணம்.
       விஜய ரகுநாத தொண்டைமான் ராணி பிரஹன்நாயகி ஆயி சாஹேபை மணந்து கொண்டார். பிறகு ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேபையும் திருமணம் புரிந்தார். மன்னருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள், இவர்களில் இருவர் மட்டும் மன்னர் இறக்கும் போது உயிரோடிருந்தனர். அவர்கள் 2ஆம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1797-1825)  2ஆம் ரகுநாத தொண்டைமான் (1798 – 1839).
       ராஜா விஜயரகுநாத தொண்டைமான் 1807 பிப்ரவரி 1ஆம் தேதி மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 47. இவருடன் இவரது இளைய ராணியான ஆயி அம்மணி ஆயி சாஹேப் (சதி எனும்) உடன்கட்டை ஏறி உயிர்த்தியாகம் செய்தார்.
5. விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1797 – 4 ஜூன் 1825).
        ராஜா விஜயரகுநாத தொண்டைமானின் இறப்பை யடுத்து அவருடைய மகனான விஜய ரகுநாத ராய தொண்டைமான் புதுக்கோட்டை அரசராக வந்தார். விஜயரகுநாத ராய தொண்டைமான் 1797இல் பிறந்தவர். முந்தைய மன்னரின் இரண்டாவது மனைவியும், மன்னருடன் உடன்கட்டை ஏறியவருமான ராணி ஆயி அம்மணி ஆயி சாஹேப் அவர்களுடைய மகன். தனி ஆசிரியரை நியமித்து இவர் அரண்மனையிலேயே கல்வி கற்றவர். இவர் தந்தை காலமானபோது இவரும், இவருக்கு இளையவர் ஒருவரும் மட்டுமே உயிரோடு இருந்தனர்.
       இவருடைய தந்தையார் காலமான 1807 பிப்ரவரி 1ஆம் தேதி இவர் பதவிக்கு வந்தார். அப்போது இவருக்கு பதினெட்டு வயது ஆகவில்லை. இவர் மேஜர் ஆகும் வரையில் ஆட்சிப் பொறுப்பு அப்போது தஞ்சாவூரில் ரெசிடெண்ட் பதவியில் இருந்த ஆங்கிலேயர் மேஜர் வில்லியம் பிளாக்பர்ன் என்பவர் தலைமையில் இயங்கிய ஒரு மேலாண்மை அவையிடம் இருந்தது.
       மன்னர் பதவிக்கு வந்து பதினெட்டு வயது ஆகும் வரை பொறுப்பு வகித்த வில்லியம் பிளாக்பர்ன் காலத்தில் புதுக்கோட்டை புதுப்பொலிவு கண்டது. பழமைக் கோலம் பூண்டிருந்த புதுக்கோட்டை புதுத் தோற்றத்தைக் கொடுத்தார் இவர். சாலைகள் அனைத்தும் அகலப்படுத்தப்பட்டு போக்கு வரத்துக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. வீடுகள் அனைத்தும் ஓட்டு வீடுகளாக மாறியது. பொது அலுவலகங்களுக்கென்று புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. 1825ஆம் ஆண்டில் புது அரண்மனையொன்று திருக்கோகர்ணத்தில் கட்டப்பட்டது. பிளாக் பர்ன் தஞ்சையில் ரெசிடெண்டாக இருந்ததால் அங்கு ஆண்டு வந்த மராத்திய மன்னர்கள் ஆட்சி மராத்தி மொழியில் இருந்தது. அதே மராத்திய மொழியையும் இங்கு அவர் அறிமுகப் படுத்தினார். அரசின் நிர்வாக மொழியாக மராத்தி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலைமை அடுத்த எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு நீடித்திருந்தது. உள்ளாட்சித் துறையும், நீதித் துறையும் ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்து பிற இடங்களில் நடப்பதைப் போல புதுக்கோட்டையிலும் அறிமுகம் செய்தார் இவர். நகரின் மையப் பகுதியில் அழகு மிளிரும் வகையில் ஒரு கோட்டையையும் அதனைச் சுற்றிலும் அகழியும் அமைத்து புதிதாக உருவாக்கினார். நகரமைப்பில் புதுமை செய்து ஒவ்வொரு திசையிலும் ஒரு முக்கிய வீதி, அதன் பின்னால் ஒவ்வொரு வீதியும் 1,2,3 என்று பெயரிடப்பட்டு அழகாக வடிவமைக்கப்பட்டது. புதிய புதுக்கோட்டைக்கு மேஜர் பிளாக் பர்ன் அஸ்திவாரமிட்டார். அப்போது எழுப்பப்பட்ட அந்த அரண்மனை காலவோட்டத்தில் இப்போது அழிந்து ஆங்காங்கே ஒருசில சுவர்கள் மாத்திரமே மிஞ்சியிருக்கிறது. அவைகளை இப்போதும் மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி பகுதிகளில் காணலாம்.
       இந்த விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1825 ஜூன் 4இல் மர்மமான வியாதியால் இறந்து போனார். இவருக்குப் பிறகு இவரது இளைய சகோதரரான 2ஆம் ரகுநாத தொண்டைமான் பதவிக்கு வந்தார்.
       காலம் சென்ற விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1812ஆம் வருஷம் புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த சிங்கப்புலி ஐயர் என்பவரின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு திருமலை பன்றிகொன்றான் என்பவரின் மகளையும் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். விஜய ரகுநாத ராய தொண்டைமானுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. மகன் பெயர் விஜய ரகுநாத ராய தொண்டைமான், இவர் 1823 டிசம்பரில் இறந்து போனார். மகள் ராஜகுமாரி ராஜாமணி பாயி சாஹேப்.
6.ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர் (1798 – 1839 ஜூலை 13)
        முந்தைய மன்னர் காலமான பிறகு 1825 ஜூன் 4இல் பதவிக்கு வந்தவர் இந்த ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர். இவருடைய ஆட்சி 1839 ஜூலை 13 வரை நீடித்திருந்தது.
       ராஜா ஸ்ரீ ரகுநாத தொண்டைமான் பகதூர் 1798இல் பிறந்தவர். இவருடைய தந்தையார் விஜய ரகுநாத தொண்டைமான். தாயார் ராணி ஆயி அம்மனி ஆயி சாஹேப் அவர்கள். விஜயரகுநாத தொண்டைமானின் இரு மகன்களில் இவர் இளையவர். இவர் அண்ணன் 2ஆம் விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1825இல் மர்மமான முறையில் காலமானதையொட்டி இவர் பதவிக்கு வந்தார் என்பதை முன்னர் பார்த்தோம்.
       ரகுநாத தொண்டைமான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவருடைய மகுடாபிஷேகம் 1825 ஜூலை 20இல் நடந்தது. இவரது ஆட்சி காலம் பெரும்பாலும் எந்தவிதமான குறிப்பிடத் தக்க நிகழ்ச்சிகள் இன்றியே நடந்து முடிந்தது. 1837ஆம் ஆண்டில் ரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்குவதற்கென்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்தார். திருச்சிக்கு அருகிலிருந்து காவிரி நீரை புதுக்கோட்டைக்குக் கொண்டு வரும் திட்டம் அது. ஆனால் அப்போதைய சமஸ்தானத்தின் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்காத காரணத்தால் அந்தத் திட்டம் நிறைவேற்றப் படவில்லை. ரகுநாத தொண்டைமான் மன்னரை அழைக்கவோ, பெயரைக் குறிப்பிடவோ அவர் பெயருக்கு முன்னால் “ஹிஸ் எக்செலன்சி” என்று குறிப்பிட வேண்டும் எனும் உத்தரவையும், இவருக்கு 17 பீரங்கி குண்டு வெடித்து மரியாதை செய்ய வேண்டுமென்றும் 1830ஆம் வருஷம் உத்தரவு பிறப்பித்தார்.
       இவர் இரு மனைவியரைத் திருமணம் செய்து கொண்டார். முதலில் 1812ஆம் வருஷம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சூரியமூர்த்தி பன்றிகொன்றான் என்பவருடைய மகளையும், பிறகு ராணி கமலாம்பால் ஆயி சாஹேப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு மகன்கள் இரு மகள்கள் பிறந்தனர்.
       இவர்களில் ராஜகுமாரி பெரிய ராஜாமணி பாயி சாஹேப் 1836இல் காலமாகி விட்டார். ராஜகுமாரி சின்ன ராஜாமணி பாயி சஹேப் 1840இல் காலமானார். மகன்கள் ராமச்சந்திர தொண்டைமான் (1829 – 1886), திருமலை தொண்டைமான் (1831 – 1871).
8.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர்     (1829 அக்டோபர் 20 – 1886 ஏப்ரல் 15).
        அடுத்ததாக புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு அரசராக வந்தவர் இந்த ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாசர் ராமச்சந்திர தொண்டைமான் பகதூர். புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் தங்களைத் தங்கள் குலதெய்வமான பிரஹதாம்பாள் அம்பாள் பெயரால் அவருடைய தாசர்கள் என்று அழைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி இவர் பெயரோடு பிரஹதாம்பாள் தாஸ் என்று சேர்க்கப்பட்டிருக்கிறது.                 
       முந்தைய அரசரான ரகுநாத தொண்டைமானுக்கு இந்த ராமச்சந்திர தொண்டைமான் 1829 அக்டோபர் 20இல் பிறந்தார். இவர் தாயார் ராணி கமலாம்பாள் ஆயி சாஹேப். அரண்மனையிலேயே தனி ஆசிரியர்களிடம் கல்வி பயின்ற இவர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் தன் தந்தை இறந்தவுடன் பிரிட்டிஷ் ரெசிடெண்டின் ஆதரவோடும் வழிகாட்டுதலோடும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டார்.
       ராஜா ராமச்சந்திர தொண்டைமான் மேஜராகும் வரை இவர் சார்பில் புதுக்கோட்டையில் இருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் ரெசிடெண்ட் ஆட்சியைக் கவனித்து வந்தார். இவருக்கு பதினெட்டு வயது அடைந்த பின் இவரை அரசராக அறிவித்து, “ஹிஸ் எக்செலன்சி” என்ற அடைமொழியோடு அழைக்கப்பட வேண்டுமென்று பிரிட்டிஷார் அறிவிப்பு செய்தனர். 1844ஆம் வருஷம் இந்த ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை அரசாட்சியை நேரடியாக ஏற்று நிர்வகிக்கத் தொடங்கினார்.
       ராமச்சந்திர தொண்டைமான் ஆட்சியில் சமஸ்தானத்தின் நிதிநிலை நன்றாக இல்லை. மேலும் நிர்வாகத்தில் பல ஊதாரிச் செலவுகளும், நிர்வாக சீர்கேடுகளும் நடப்பதாகவும் கண்டறியப்பட்டது. இப்படிப்பட்ட நிர்வாக சீர்கேட்டின் காரணமாக இவருக்கு பிரிட்டிஷ் கம்பெனியார் ரெசிடெண்ட் மூலம் இவருடைய விருதான “ஹிஸ் எக்செலன்சி”யை பயன்படுத்த 1859ஆம் ஆண்டில் ஒரு முறையும்,1873இல் ஒரு முறையும் தடை விதித்தது. 1878ஆம் ஆண்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை நிர்வகிக்க “திவான்” எனும் முதல் அமைச்சர் போன்ற பதவிக்கு திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த திவான் ஏ.சேஷையா சாஸ்திரி என்பாரை சென்னை சர்க்கார் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர்.
       புதுக்கோட்டை வரலாற்றில் இந்த சேஷையா சாஸ்திரி என்பார் தன் திறமையாலும், சாதனைகளாலும் போற்றப் படுகிறார். இவர் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் புதுக்கோட்டை நிர்வாகத்தில் ஏராளமான சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். புதுக்கோட்டை நகரை சீரமைத்து புதுப்பொலிவூட்டினார். இன்றைய நவீன காலகட்டத்தில் நகரமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்கிற பாதையில் அன்றைக்கே புதுக்கோட்டையை ஒரு மாதிரி நகரமாக உருவாக்கினார் சேஷையா சாஸ்திரி. புதுக்கோட்டைக்குச் சிறப்பு செய்கின்ற புதுக்குளத்தையும், நகரத்தின் மத்தியில் சாந்தாரம்மன் கோயிலையொட்டி அமைந்திருக்கும் பல்லவன் குளத்தையும் சீர்படுத்தி புதுப்பித்தார். 1884இல் புதுக்கோட்டைக்கு தபால், தந்தி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. பழமையிலிருந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் புதுமைக்குக் கொண்டு வரும் பணிகள் அனைத்தையும் சேஷையா சாஸ்திரி செய்தார்.
       புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட பல ஊர்களில், சின்னஞ்சிறு கிராமங்களில் அமைந்துள்ள பல ஹிந்து ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. இவர் காலத்தில் தான் புதுக்கோட்டை மன்னர்களுக்கேயுரிய “பிரஹதாம்பாள் தாஸ்’ எனும் விருதினை ராமச்சந்திர தொண்டைமான் சேஷையா சாஸ்திரியின் சம்மதத்தோடு, தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.
       ராமச்சந்திர தொண்டைமானுக்கு “ஹிஸ் எக்செலன்சி” விருதும் 11 பீரங்கி குண்டு மரியாதையும் 1885இல் வழங்கப்பட்டது. 1875இல் இவருக்கு இங்கிலாந்தின் இளவரசரான “பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்” பெயரால் வழங்கப்பட்ட விருது கிடைத்தது.  1877இல் இவருக்கு “எம்பரஸ் ஆஃப் இந்தியா” எனும் தங்க மெடல் வழங்கப்பட்டது.
       ராமச்சந்திர தொண்டைமான் ராணி பிரஹாதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் என்பவரை 1845 ஜூன் 13இல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் 1. கமலாம்பாள் ராஜாமனி பாயி சாஹேப் (இறப்பு: 1903 ஜனவரி 24). மங்களாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (இறப்பு. 1873). ராமச்சந்திர தொண்டைமான் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொண்டார். அவர் ஜானகி சுப்பம்மாள் என்பவர். இவர் நெடுவாசல் ஜமீன்தாரின் மூத்த மகள். இந்தத் திருமணம் 1848 ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்தது. இந்த திருமணத்தின் மூலம் இவருக்கு இரு குழந்தைகள் ஒரு பையன் ஒரு மகள் பிறந்தனர். அவர்கள் சிவராம ரகுநாத தொண்டைமான் (இறப்பு 1867), பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேப் (1852 – 1903).
       ராமச்சந்திர தொண்டைமான் காலத்திலேயே அவருடைய மகனான சிவராம ரகுநாத தொண்டைமான் காலமாகிவிட்டார். அதனால் மகனை இழந்த மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் என்பவரை சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் பேரன். அதாவது மகள் பிரஹதாம்பாள் ராஜாமணி பாயி சாஹேபின் மகன். அவரை அடுத்த மன்னராகத் தேர்வு செய்தனர்.
       ராமச்சந்திர தொண்டைமானுக்கு இசையில் ஆர்வம் அதிகம். கர்நாடக சங்கீதத்துக்கு அதிக ஆதரவு கொடுத்தார். அரண்மனையில் அடிக்கடி கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடைபெறலாயின. ராமச்சந்திர தொண்டைமானே ஒரு சிறந்த பாடலாசிரியர், கவிஞர். இவர் இயற்றிய குறவஞ்சி நாடகத்துக்கு இவரே இசை அமைத்து அரங்கேற்றினார். அந்த குறவஞ்சி அரங்கேறிய இடம் விராலிமலை முருகன் ஆலயம்.                                 
8.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் ராஜா சர் மார்தாண்ட பைரவ தொண்டைமான், (1875 நவம்பர் 26 – 1928 மே 28)
        முந்தைய ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்றுப் பேரனான இந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் 1875 நவம்பர் 26இல் பிறந்தார். தாயார் பிரஹதாம்பாள் ராஜாமனி சாஹேப். இவருடைய கணவர் கொழந்தைசாமி பல்லவராயர் சாஹேப் அவர்கள். ராமச்சந்திர தொண்டைமானின் மூத்த மகளான இந்த பிரஹதாம்பாள் பாயி சாஹேபின் மூன்றாவது மகன் இப்போது அரச பதவிக்கு வந்திருக்கும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். ராமச்சந்திர தொண்டைமான் தனக்கு ஆண் வாரிசு இல்லாமையால், இந்த மார்த்தாண்ட பைரவரை இளம் வயதாக இருக்கும்போதே சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் பதவிக்கு வந்தபோது இவருடைய வயது 11.                                      
       மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் கேம்பிரிட்ஜ் கல்வியாளரான ப்ரெடரிக் ஃபீல்டன் கிராஸ்லி என்பவரிடம் அரண்மனையிலேயே கல்வி கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய மார்த்தாண்ட பைரவர் விளையாட்டுத் துறையிலும் தலை சிறந்த வீரராகத் திகழ்ந்தார். தமிழகத்தின் இதயத்தானத்திலுள்ள புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் என்றாலும், இவருக்கு மேல்நாட்டு கலாச்சாரம் பழக்க வழக்கம் இவைகளில் அதிகம் நாட்டம் இருந்தது.
       இவரது பாட்டனாரும் முந்தைய மன்னருமான இராமச்சந்திர தொண்டைமான் 1886 ஏப்ரல் 15இல் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின் இறந்து போனார். அப்போது பதினோரு வயதே ஆன மார்த்தாண்ட பைரவருக்கு மன்னராகப் பட்டம் சூட்டி, அவர் சார்பில் ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள திவான் ஏ.சேஷயா சாஸ்திரி தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மார்த்தாண்ட பைரவர் மேஜர் ஆகும் வரை ஆட்சியை கவனித்து வந்து அவருக்கு வயது வந்தவுடன் ஆட்சிப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தது. அப்படி மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தினம் 1894 நவம்பர் 27ஆம் தேதி. அவருக்கு ஆங்கிலேயர்கள் சார்பில் சென்னை கவர்னராக இருந்த லார்டு வென்லாக் என்பவர் முழு அதிகாரத்தையும் அளித்தார்.
       மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவிக்கு வந்தவுடன் மனோவர்த்தி நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று மனுச்செய்தார். மனோவர்த்தி நிலங்கம் என்பது நான்கு கிராமங்களை உள்ளடக்கியது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் இந்த நிலங்களைத் தன்னுடைய ராணிகளில் மூவரின் தனிப்பட்ட சொத்தாக அறிவித்திருந்தார். மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை, ஆகையால் மனைவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த மனோவர்த்தி நிலங்கள் எனப்படும் நான்கு கிராமங்களும் அவருக்கு மனைவிகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் போயிருக்கும், ஆனால் அவர் திருமணமாகாதவராயிருந்த படியால் அந்த கிராமங்கள் தன் பெயருக்கு வந்து விடவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கையை ஆங்கில கம்பெனி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.                      
       இவருடைய ஆட்சி காலத்தில் டெல்லி மா நகரில் 1903ஆம் வருஷத்தில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கும், பின்னர் 1911இல் லண்டன் மாநகர் வெஸ்ட்மினிஸ்டர் அப்பே எனும் அரண்மனை மாளிகையில் நடந்த அவரது முடிசூட்டுதலுக்கும் மார்த்தாண்ட பைரவ ராஜா சென்று வந்தார். மைசூர் சமஸ்தானத்தில் இருப்பது போன்ற முப்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தை அவர் உருவாக்கினார். இந்த அவையின் உறுப்பினர்களை அரசாங்க இலகாக்களின் தலைவர்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தேர்ந்தெடுத்து அனுப்பினர். திவானுக்கு உதவியாக கவுன்சிலர் எனும் பதவி உருவாக்கப்பட்டது. அந்த கவுன்சிலரின் உதவியுடன் செயல்படுகின்ற திவானுக்கு “திவான் இன் கவுன்சில்” என்று நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது.
       பிரிட்டிஷ் அரசு ஒவ்வோராண்டும் புத்தாண்டு தினத்தில் அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து சேவை செய்தவர்களுக்குப் பற்பல விருதுகளை அளித்து கவுரவிக்கும். அப்படி 1913ஆம் ஆண்டு புத்தாண்டு விருது பட்டியலில் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் அந்த விருது “Knight Grand Commander of the Order of the Indian Empire” என்பதாகும்.
       எல்லா சாதாரண மக்களுக்கும் திருமணம் வரை மனம்போல வாழ்க்கையும், திருமணம் எனும் கால்கட்டு ஏற்பட்டபின் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படுவது சகஜம் தானே. அப்படிப்பட்ட மாற்றம் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கும் ஏற்பட்டது.
1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்த்தாண்ட பைரவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அந்த நாட்டின் ஒரு பெரிய இடத்துப் பெண்ணான மோலி ஃபிங்க் என்பாரை மெல்போர்னில் உள்ள மெஜஸ்டிக் மேன்ஷன் எனும் ஓட்டலில் சந்தித்தார். கண்டவுடன் காதல் மலர்ந்தது. மோலியை மார்த்தாண்ட பைரவர் உயிருக்குயிராகக் காதலிக்கத் தொடங்கினார். அந்த மாதைத் தொடர்ந்து அவரும் சிட்னி நகருக்குச் சென்றார். அங்கு 1915 ஆகஸ்டில் மோலியிடம் மன்னர் தன் காதலை வெளிப்படுத்தினார். இந்திய சுதேச மன்னரான மார்த்தாண்ட பைரவரின் காதலை அந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பெண் ஏற்றுக் கொண்டு தன் சம்மதத்தையும் தெரிவித்தார். ரிஷி கர்ப்பம் இராத் தங்காது என்பர். இவர்களுடைய காதல் இனியும் காத்திருக்க விரும்பவில்லை. 1915 ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் இவ்விருவருக்கும் மெல்போர்ன் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதியருக்கு ஆஸ்திரேலியாவிலேயே 1916ஆம் ஆண்டு ஜுலை 22இல் ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுடைய பெயர் மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் என்பது. இதில் இன்னொரு ரகசியம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் மோலி எனும் ஆஸ்திரேலிய மாதைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு அமெரிக்க மாதைக் காதலித்ததாகத் தெரிகிறது. 
இந்தியாவில், குறிப்பாக சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள் இந்த திருமணம்த்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆகவே அவர்கள் மோலி ஃபிங்கை ராணிக்கு உரிய மரியாதை தருவதையோ அல்லது அவர் நாடு திரும்பிய போது “மகாராணி” என்று அங்கீகரிக்கவோ இல்லை. இந்த நிலையில் 1915 அக்டோபரில் இந்தியா வந்து புதுக்கோட்டையை அடைந்த மோலி வெறும் ஐந்து மாதங்களே தாக்குப்பிடிக்க முடிந்தது, அத்தனை எதிர்ப்பு அவருக்கு அங்கே. சொந்த ஊரில் தான் விரும்பி மணம் புரிந்து வந்த மங்கைக்கு உரிய மரியாதை இல்லை என்பதை உணர்ந்த ராஜா மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிச் சென்றார். அங்கே அவர் 1916 முதல் 1919வரையிலும் இருந்து விட்டுப் பிறகு லண்டன் சென்றார். பிறகு கேன்ஸ் எனும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு வீட்டை வாங்கி வசிக்கத் தொடங்கினர். 1921இல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் எனும் உரிமையைக் கைவிட்டார். தன்னுடைய சகோதரரான ரகுநாத பல்லவராயர் என்பவரை தனக்குப் பதிலாக ராஜாவாக இருப்பார் என்று அறிவித்தார். மார்த்தாண்டர் பிரான்ஸ் நாட்டில் தன் மனைவி மோலியுடனும் மகன் சிட்னி தொண்டைமானுடனும் தங்கிவிட்டார். இவர் 1928ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் தேதி தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல மோலி அனுமதி கேட்டதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. ஆகவே அவர் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பல் லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் வைக்கப்பட்டது.                
       மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை மன்னர் எனும் தகுதி மறுக்கப்பட்ட காரணத்தால் அவருடைய உறவினர் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் ராஜகுமாரனாகவும், அவருக்கு ரெஜண்ட் எனும் அமைச்சர் பதவியில் ரகுநாத பல்லவராயரும் இருந்து நிர்வாகம் செய்தனர்.                              
9.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் ராஜா ஸ்ரீ ராஜகோபால தொண்டைமான் பகதூர். (23 ஜுன் 1922 – 16-1-1997)
        புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னராக ராஜகோபால தொண்டைமான் பதவியேற்றார். இவரே புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி தொண்டைமான் மன்னராக விளங்கினார்.      இவர் ராமசந்திர தொண்டைமானுக்கும் அவருடைய இரண்டாவது மனைவி மாதுஸ்ரீ ராஜா ஸ்ரீமதி ராணி ஜானகி ஆயி சாஹேபுக்கும் 1922 ஜூன் 23இல் பிறந்தவர்.
       1928 நவம்பர் 19இல் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னராக நியமனம் பெற்றார். இவருக்கு ரகுநாத பல்லவராயர் ரெஜண்டாக1929 பிப்ரவரி வரை பணிபுரிந்தார். 1929 பிப்ரவரி முதல் 1944 ஜனவரி 17 வரை புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாகத்தை ஆங்கிலேய அதிகாரி அலெக்சாண்டர் தோடென்ஹாம் என்பார் கவனித்துக் கொண்டார்.
பிரிட்டிஷ் அரசு நியமித்த ஒரு குழுவால் நிர்வாகம் செய்யப்பட்டது. ராஜகோபால தொண்டைமான் 1944 ஜனவரி 17இல் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவருடைய காலத்து சாதனையாக சமஸ்தானத்துக்கு ஒரு புதிய அரண்மனை கட்டப்பட்டது. 1930இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை கட்டடக் கலையில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அழகிய ஆடம்பர அரண்மனையில் தான் இப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தது. மத்திய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல், எல்லா சுதேச சமஸ்தானங்களையும் இந்திய அரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, புதுக்கோட்டை சமஸ்தானத்தை முதல் சமஸ்தானமாக இந்திய அரசுடன் 1948 மார்ச் 3இல் ராஜகோபால தொண்டைமான் இணைத்துவிட்டு திருச்சியில் தங்கிவிட்டார். இந்த சமஸ்தானம் அப்போதிருந்த திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.                        
       ராஜகோபால தொண்டைமான் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் புதுக்கோட்டை மனமகிழ் மன்றத்தின் தலைவராகவும், கொடைக்கானல் போட் சவாரி கிளப்புக்குத் தலைவரகவும் இருந்தார். பிரிட்டிஷ் அரசு இவருக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் விருதை 1935லும் ஆறாம் ஜார்ஜ் மன்னர் பட்டமளிப்பு விழா மெடலை 1937ஆம் ஆண்டிலும், இந்திய சுதந்திர தின மெடலை 1948லும் பெற்றார்.
       புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில் அமைச்சர்களாக, திவான்களாக இப்படி வேறு சில பதவிப் பெயர்களோடு பலர் இருந்திருக்கின்றனர். இவர்களுடைய பங்கு ஆட்சியின் முதுகெலும்பாக இருந்திருக்கிறது. திவான் அல்லது அமைச்சரின் திறமைதான் சமஸ்தானங்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது.
                                         ooOoo