வீரமாங்குடி அரசு
உயர்நிலைப் பள்ளியில் 12—01—2017 வியாழக்கிழமை யன்று நேரு யுவ கேந்திரா, மகாத்மா இளைஞர்
நற்பணி மன்றம், திருவையாறு ரோட்டரி சங்கம், வீரமாங்குடி ரோட்டரி சமுதாயக் குழுமம் ஆகியோர்
இணைந்து நடத்திய “தேசிய இளையோர் வார விழா” நிகழ்ச்சியில் “வீரத்துறவி விவேகானந்தர்”
எனும் தலைப்பில் நான் (தஞ்சை வெ.கோபாலன்) ஆற்றிய உரை இது.
வீரத்துறவி விவேகானந்தர்.
“சுயநலமில்லாத, உண்மையான இளைஞர்கள் சிலரை எனக்குக் கொடுங்கள்,
நான் இந்த உலகையே மாற்றிக் காண்பிக்கிறேன்” இப்படிச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.
Arise, Awake and Stop Not till the goal is reached அதாவது
“விழி, எழு, வெற்றி பெரும் வரை ஓயாதே” இதுவும் அவருடைய அழைப்பு தான்.
இப்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த பெருமகனார் சுவாமி
விவேகானந்தர் பற்றி இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும. யார் இந்த விவேகானந்தர்?
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்றொரு மகான் வங்காளத்தில் இருந்தார்.
அவர் அதிகம் பள்ளிக் கல்வி கற்றவர் அல்ல. ஆனால் இறையருள் பெற்ற மகான். கல்கத்தாவிலுள்ள
காளி கோயிலில் அவர் பூசாரி. அந்த காளியுடன் பேசிக் களித்து மக்கள் நல்வாழ்வுக்காக சதாகாலம்
பேசக்கூடியவர். அன்பு, அன்பு அது ஒன்றுதான் அவரது வாழ்க்கையின் ஒரே தாரக மந்திரம்.
அந்த மகானுக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர், செல்வந்தர்கள், படித்தவர்கள், மேதைகள்,
சாதாரண குடிமக்கள் என்று இவருடைய சீடர்கள் பலர். ஆனாலும் இவர் யாருக்காகவே காத்திருந்தது
போல் இருந்தது. அப்போது கல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் இவரிடம் வந்தனர். அவர்களில்
நரேந்திரன் எனும் இளைஞரும் ஒருவர்.
முதல் முறை ராமகிருஷ்ணரைச் சந்தித்தபோது நரேந்திரனுக்கு அவரைப்
பற்றிய பெரும் அபிப்பிராயம் எதுவும் ஏற்படவில்லை. ஏதோ காளி கோயில் பூசாரி, தன் வசம்
இழந்த மனிதர் போல், அன்பு ஒன்றையே அணிகலனாகக் கொண்டு அனைவரிடமும் அன்பு பாராட்டிக்
கொண்டிருப்பவர், இவரிடம் அப்படி என்ன மகிமை இருக்கிறது என்றுதான் நினைத்தார் நரேந்திரன்.
ஆனால் “நாளாக நாளாக கண்ணனிடத்தே பற்று மிகுந்து வரல் காண்கின்றேன்”
என்று கண்ணன் பாட்டில் பாரதியார் சொல்வது போல நரேந்திரனுக்கு ராமகிருஷ்ணர் மீது ஒரு
பற்று ஏற்படத் தொடங்கியது. இவர்கள் நட்பு ஒரு கால கட்டத்தில் குரு சீடனாக ஆக்கியது.
குருநாதர் காலமானார். தனித்து விடப்பட்ட சுவாமி விவேகானந்தர் குருவை இழந்த வருத்தத்தில்
சில காலம் நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்றி வந்தார். அப்படி அவர் தென்னகம் வந்தபோதுதான்
இவர் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். காரணம் அமெரிக்காவிலுள்ள
சிகாகோ எனும் நகரத்தில் நடந்த ஒரு சர்வ மத மாநாட்டுப் பிரதிநிதியாக இவரை அனுப்ப முடிவு
செய்தார்கள். அதற்கு குழு முதற் காரணமாக இருந்தவர் ராமநாதபுரம் சேதுபதி அவர்கள்.
இனி சுவாமி விவேகானந்தர் பற்றிய வரலாற்றைச் சிறிது பார்க்கலாமா?
இந்திய இளைஞர்களுக்கு இப்போதைய ஆர்வம், எதிர்காலக் கனவு என்ன
தெரியுமா? ஒவ்வொருவரும் பெரும் பணக்காரர்களாக ஆகவேண்டும். ஆடம்பர வாழ்க்கை கிடைக்க
வேண்டும், உலக இன்பங்களையெல்லாம் எட்டிப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான். ஆனால்
130கோடி மக்கள் வாழும் நம் நாட்டில் இன்னமும் கோடிக்கணக்கான மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும்,
தினசரி வாழ்க்கையில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழி கிடைக்காமல் வாடுகின்ற நிலைமை இருந்து
கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும்
அவருடைய உபதேசங்களும் எதார்த்த வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படும் என்பதை முதலில் தெரிந்து
கொள்ள வேண்டும். அவர் காவி உடை அணிந்த சாதாரண சந்நியாசி அல்ல. பாழ்பட்டு நின்ற பாரதம்
தேசந்தன்னை வாழ்விக்க வந்த உத்தமர் என்பதை புரிந்து கொள்ளுதல் அவசியம். 152 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த பூமியில் அவதாரம் செய்தவர் சுவாமி விவேகானந்தர். அவர் வரலாற்றையும் அவரது
உபதேசங்கள் சிலவற்றையும் எளிமையாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
இவர் கல்கத்தா நகரில் 1863ஆம் வருஷம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி,
அதாவது இன்றைய தேதி ஆண்டு மட்டும் 1863 (153 வருஷங்களுக்கு முன்பு) பிறந்தவர். அப்பா
பெயர் விஸ்வநாத தத்தர், தாயார் புவனேஸ்வரி தேவி. சுவாமிஜியின் தாத்தா துர்காசரண் தத்தா
என்பவர் பன்மொழிப் புலவர். பெரிஷியன், சம்ஸ்கிருதம், வங்காளி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில்
வல்லவர். இவருக்கு விஸ்வநாத தத்தா மகனாகப் பிறந்த உடனேயே தன்னுடைய 25ஆம் வயதில் சந்நியாசியாகச்
சென்று விட்டார். ஆக, இந்தக் குடும்பத்தின் ரத்தத்தில் துறவறம் கலந்தே இருந்திருக்கிறது.
சுவாமிஜியின் தந்தையார் விஸ்வநாத தத்தா கல்கத்தா உயர்நீதி மன்றத்தில்
ஒரு தலைசிறந்த வழக்கறிஞர். இவரும் பாரசீக மொழியிலும், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளி
ஆகிய மொழிகளில் நல்ல புலமை உண்டு. பாரசீக மொழிக் கவிதைகளில் இவருக்கு ஆழ்ந்த ஞானம்
உண்டு.
நரேந்திரநாத் தத்தா அதாவது நமது சுவாமிஜி இளமைக் காலத்தில் மற்ற
மாணவர்களைப் போலத்தான் இருந்தார். வங்காளத்து இளைஞர்களுக்கு அப்போதெல்லாம் இருப்பதைப்
போன்ற இலக்கிய ஆர்வம் இவருக்கும் இருந்தது. விளையாட்டில் ஆர்வம், தத்துவ விசாரணை, இசை
இவைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் இவர் மாணவர்கள் மத்தியில் பிரபலமானவராகவே
இருந்திருக்கிறார்.
இவருக்கு நமது பூர்வீகமான பண்பாடு, இதிகாசங்கள், நல்ல பழக்க
வழக்கங்கள் இவைகள் மீது அசாத்திய ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் காலத்தில் பிரம்ம சமாஜம்
என்றொரு அமைப்பு இருந்து வந்தது. ராஜாராம் மோகன் ராய் கேள்விப் பட்டிருப்பீர்கள், அவரால்
துவக்கப்பட்டது இந்த பிரம்ம சமாஜம். இந்த பிரம்ம சமாஜிகளுக்கு சில அடிப்படை கொள்கைகள்
உண்டு. அதாவது கடவுளுக்கு உருவம் கிடையாது என்ற நம்பிக்கை. சிலைகளைக் கடவுள் என்று
வழிபடுவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. இப்படிப்பட்டவர்களோடு உறவு கொண்டாடிய நரேந்திரர்
எல்லோரிடமும் ஒரு கேள்வியைக் கேட்பது வழக்கம். அந்தக் கேள்வி மிகவும் முக்கியமான கேள்வி.
அவர் கேட்கிறார்: “கடவுள் இருக்கிறாரா? எங்கு இருக்கிறார், அவர் எப்படி இருப்பார்,
கடவுளைப் பார்த்தவர் எவரும் உண்டா?” இந்தக் கேள்வி அவர் மனத்தை எப்போதும் அரித்துக்
கொண்டே இருந்தது.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் தான் இவருடைய பேராசிரியர் ஒருவர்,
பெயர் வில்லியம் ஹேஸ்டி என்பார் சொன்னார், “நரேந்திரா உன்னுடைய சந்தேகங்களுக்கு விடையளிக்கக்
கூடிய ஒருவர் கல்கத்தா நகருக்கு வெளியே சற்று தள்ளி இருக்கும் தக்ஷணேஸ்வரர் கோயிலில்
பூசாரியாக இருக்கிறார். அவர் உன் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார் என்கிறார். வோர்ட்ஸ்வொர்த்
என்றொரு ஆங்கிலக் கவிஞர் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் எழுதிய தி எக்ஸ்கர்ஷன் எனும்
கவிதையில் சொல்லப்படும் அபூர்வமான தன்னை மறந்த கற்பனை நிலையில் அந்த பூசாரரி இருப்பார்.
அவரிடம் போ, உனக்கு விடை கிடைக்கும் என்றார் பேராசிரியர் ஹேஸ்டி.
அந்த வாய்ப்பு நரேந்திரருக்கு 1881இல் கிட்டியது. அது வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. நரேந்திரர் எனும் ஆர்வமும், அறிவாற்றலும், தேடலும்
உள்ள ஒரு மாணவர் தன்னை மறந்து ஒரு மோன நிலையில் அல்லது உன்மத்த நிலையில் வாழ்கின்ற
ஒரு கோயில் பூசாரியைச் சந்திக்கிறார். அந்த சந்திப்பில் மற்றவர்கள் என்னென்னவோ கேட்கிறார்கள்.
நரேந்திரர் மட்டும் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கேட்ட கேள்வி, “சுவாமி! நீங்கள் கடவுளைக்
கண்டதுண்டா?” என்பதுதான்.
பரமஹம்சர் பளிச்சென்று சொன்னார், “ஆமாம். நான் கடவுளைக் கண்டிருக்கிறேன்.
இங்கே, இப்போது உன்னை நான் எப்படிப் பார்க்கிறேனோ, அதைப் போலவே, நான் அவரை வெகு தெளிவாகப்
பார்த்திருக்கிறேன்” என்கிறார். இது என்ன இவர் கடவுளைப் பார்த்திருக்கிறார் என்றால்
இவரைத்தானே நான் பின்பற்ற வேண்டும். அன்றே நரேந்திரருக்கு பரமஹம்சர் மீது ஒரு நம்பிக்கை
பிறந்தது. உடனடியாக அவரைத் தன் குருவாக ஏற்கவில்லையென்றாலும், ஒரு சிறு நம்பிக்கை,
இவர் கடவுளைப் பார்த்திருக்கிறார் என்றால், இவரிடமிருந்த பல விஷயங்களை நாம் கேட்டுத்
தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் பிறந்தது.
ராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தான் தேடிக் கொண்டிருந்த சீடன் அகப்பட்டு
விட்டான் என்கிற மகிழ்ச்சி. நரேந்திரருக்கோ இதோ, நமக்கு உண்மைகளைக் காட்டக்கூடிய ஆற்றல்
படைத்த ஒரு குரு கிடைத்து விட்டார் என்கிற மகிழ்ச்சி.
இந்த நிலையில் 1884இல் நரேந்திரரின் தந்தையார் விஸ்வநாத தத்தர்
காலமாகி விடுகிறார். குடும்பத்தில் பல பிரச்சனைகள், சிரமங்கள். ராமகிருஷ்ணரிடம் சென்று
தன் நிலைமையை விளக்கிய போது அவர் சொல்கிறார், “நரேந்திரா, போ! போய் காளியிடம் முறையிடு.
அவள் உன் துன்பங்களைத் தீர்த்து வைப்பாள்” என்கிறார்.
“சரி” என்று சொல்லிவிட்டு நரேந்திரர் காளியிடம் சென்று வணங்கினார்.
ஆனால் தன் துன்பங்களைச் சொல்லி அதற்கு நிவாரணம் கேட்க இயலவில்லை; மாறாகத் தனக்கு கடவுள்
பால் நீங்கா பக்தியும், ஞானமும் வேண்டுமென்றுதான் கேட்க முடிந்தது. பலமுறை திரும்பத்
திரும்ப முயன்றும் தன் சொந்தக் காரியங்களுக்காக அவரால் வேண்டிக் கொள்ள இயலாமலே இருந்தது.
இது என்ன அதிசயம், நம் மனம் ஏன் சொந்த விஷயங்களில் வேண்டிக் கொள்ள இயலாமல் அறிவும்
ஞானமும் மட்டும் வேண்டும்படி அமைந்தது என்று சிந்தித்தார்.
படிப்படியாக குருநாதர் ராமகிருஷ்ண பரமஹசரின் பால் ஈர்க்கப்பட்டு
அவரைத் தன் குருநாதராக ஏற்றுக் கொண்டார் நரேந்திரன்.
இந்த நிலையில் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு உடல் நிலை கெட்டுப்
போய், கல்கத்தாவுக்கு அருகிலுள்ள காசிப்பூர் எனும் இடத்தில் தங்கி வைத்தியம் பார்த்துக்
கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் நரேந்திரருக்குத் தனது குருநாதருடன் அதிகமான நெருக்கம்
ஏற்பட்டு குரு சிஷ்ய உறவு மேம்பட்டது.
அப்போது நரேந்திரன் தனக்கு நிர்விகல்ப சமாதி நிலை அதாவது கண்மூடி
புற உலக நினைவுகளில் இருந்து விலகி சமாதி நிலையில் இருக்க விருப்பம் என்று தெரித்தார்.
அதற்கு குருநாதர் ராமகிருஷ்ணர் சொன்னார். “உன்னை இந்த உலகத்துத் துன்பங்களை நீக்குவதற்கு
மக்கள் பணியாற்றுவாய் என்று நினைத்திருந்தேன், நீயோ, கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்கிறேன்
என்கிறாய். உன் சேவை இந்த நாட்டு மக்களுக்குத் தேவைப்படுகிறது. போ! அவர்கள் துயரினை
துடைக்க வழிகளைத் தேடு, கண்மூடி சாமியாராக இருப்பது உன் வேலை அல்ல” என்று கடிந்து கொண்டார்.
இனியும் தாமதிக்க இயலாது என்ற நிலையில் ராமகிருஷ்ண பரமஹம்சர்
தான் உயிர்நீப்பதற்கு சில நாட்கள் முன்னதாக நரேந்திரனை அழைத்து அவரைத் தன் முன் உட்கார
வைத்து அவர் தலையில் கைவைத்து கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் மூழ்கினார். பரமஹம்சரின்
ஆன்ம பலம் அனைத்தையும் தன் சீடனிடம் இறக்கி வைத்துவிட்டுச் சொன்னார், “அப்பா! நரேந்திரா
என் தவ வலிமை அனைத்தையும் உனக்கே அர்ப்பணித்து விட்டேன். நாம் இப்போது மிக மிக சாமானியன்
அப்பா, இவ்வுலகில் நீ சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது. உன்னால் தான் இந்த நாட்டுக்கு
விடிவு காலம் பிறக்க வேண்டும். போ, உன் முயற்சிகளைத் தொடங்கு” என்று சொல்லிவிட்டு சில
நாட்களில் உயிர் நீத்தார் குருநாதர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அது 1886ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதம்.
குருநாதரின் மறைவுக்குப் பிறகு அவருடைய இளம் சீடர்கள் எல்லாம்
ஒன்றுகூடி இனி என்ன செய்வது, எப்படி குருநாதரின் ஆணைகளை நிறைவேற்றுவது, மக்களுக்கு
எந்த வகையில் உதவி செய்வது என்பதைப் பற்றியெல்லாம் விவாதித்தனர். பாராநகர் எனுமிடத்தில்
நரேந்திரன் தலைமையில் இந்தக் குழு கூடி விவாதித்தது. 1886இல் இவர்கள் அனைவரும் காவியுடை
அணிந்து சந்நியாசிகளாக ஆவது என்பது முடிவாகியது.
1888இல் நரேந்திரர் நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ஒரு சில ஆண்டுகள் தன்னை ஒரு நாடோடி போல பலவேறு பெயர்களைச் சூட்டிக் கொண்டு தன்னை அடையாளம்
காட்டிக் கொள்ளாமல் இந்திய நாடு முழுவதும் மக்கள் வாழ்க்கையைக் கவனித்துக் கொண்டு சுற்றுப்
பயணம் மேற்கொண்டார்.
இந்துக்கள் பெரிதும் செல்ல விரும்பும் வாரணாசி எனும் காசி நகருக்குச்
சென்றார். அங்கிருந்து லக்னோ, ஆக்ரா, பிருந்தாவன், ஹரித்துவார், ரிஷிகேஷ் இங்கெல்லாம்
சுற்றினார். ஹரித்வாரில் இவர் சரத் சந்திர குப்தா என்பவரை சந்தித்தார். அவர்தான் நமது
நரேந்திரரின் முதல் சீடராக சுவாமி சதானந்தா என்று பெயர் பெற்றார்.
1890இல் இவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பத்தினியும், தான் அன்னையாக
வழிபட்டவருமான சாரதா தேவி அம்மையாரைச் சென்று தரிசித்தார். அங்கு அன்னையிடமும், சக
சந்நியாசிகளிடமும் விடைபெற்றுக் கொண்டு இமாலய மலைக்குத் தனிமை நாடி சென்றுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ரோமன் ரோலண்ட் எனும் ஐரோப்பிய அறிஞர் சொல்வதைக் கேட்போம்.
அவர் சொல்கிறார் “இது ஒரு மாபெரும் பயணத்தின் தொடக்கம். திறமை மிக்க நீர் மூழ்கியைப்
போல இவர் இந்தியப் பெருங்கடலில் மூழ்கி விட்டார்; அந்தப் பெருங்கடல் இவரது பயணத் தடத்தை
மூடி மறைத்து விட்டது. இவர் யார் எத்தகைய ஆற்றலுள்ளவர் என்பது தெரியாதபடி எல்லா சந்நியாசிகளைப்
போல காவி அணிந்த ஒரு சந்நியாசி இவர் என்று காட்டிவிட்டுச் சென்று விட்டார். தலை மறைவாக
இருந்தாலும் இவர் அறிவின் ஒளியாகத் திகழ்ந்தார்” என்கிறார்.
Romain Rolland says: “This was the great departure. Like a diver, he plunged
into the Ocean of India and the the Ocean of India covered his tracks. Among
its flotsam (மிதப்பவை) and jetsam, (கரையொதுங்கிய
பொருள்) he was nothing more than one nameless
sanyasin in saffron robe among a thousand others. But the fire of genius burned
in his eyes. He was a prince despite all disguise.”
இந்தியத் திருநாட்டைத் தான் யார் என்பதை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் தனிமையில் சுற்றினார். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்ட்ரா,
மைசூர், கேரளம், சென்னை, ஐதராபாத் இங்கெல்லாம் பயணம் செய்தார். அங்கெல்லாம் அவருக்கு
ஏராளமான அனுபவங்கள், சிந்திக்க வைக்கும் பல நிகழ்ச்சிகள் இவைகளை எதிர் கொண்டார்.
இவரை ஆங்கிலம் தெரியாத ஒரு பரதேசி என்று நினைத்து
இவருடன் ரயிலில் பயணம் செய்த இருவர் ஆங்கிலத்தில் இவரைப் பற்றிக் கேவலமாக விமர்சனம்
செய்து கொண்டு வந்தனர். ஒரு ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இவர் யாரோ ஒருவரிடம் அழகான ஆங்கிலத்தில் உரையாடியபோது,
அவ்விருவரும் இவரிடம் மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி.
ஓரிடத்தில் கையில் பிரசாதத்துடன் வரும்போது ஒருவரை
குரங்குகள் பின் தொடர்ந்து விரட்ட, அவர் ஓட, சுவாமிஜி அவரை அழைத்து, நில், திரும்ப
அந்தக் குரங்குகள் நோக்கிப் போ, அவை உன்னை விட்டுவிட்டு ஓடிவிடும் என்றார். அது போலவே
நடந்தது. இப்படி எத்தனையோ சுவையான சம்பவங்கள்.
இந்தச் சுற்றுப் பயணத்தில் பல பெரியோர்களை அவர்
சந்தித்தார். அதில் கேத்ரி எனும் ஊரின் மகாராஜாவும் ஒருவர். அவர் பெயர் அஜித் சிங்.
பூனே நகருக்கு வந்தபோது மகரிஷி பால கங்காதர திலகரைச் சந்தித்தார். பெல்காம், அங்கிருந்து
பெங்களுரு இங்கெல்லாம் சென்றுவிட்டு மைசூர் சென்று மைசூர் மகாராஜாவைச் சந்தித்தார்.
அவர் சுவாமிகள் ஐரோப்பா செல்வதானால் எல்லா உதவிகளையும் செய்வதாகச் சொன்னார். மைசூரிலிருந்து
திருவனந்தபுரம், கன்யாகுமரி ஆகிய இடங்கள் சென்றார். இப்படி கன்யாகுமரி சென்றபோதுதான்
தனது எதிர்கால திட்டங்கள் பற்றி சிந்தனையில் ஆழ்ந்து கடலுக்கிடையில் இருந்த ஒரு பாறையின்
மீதமர்ந்து இரவு முழுதும் ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தார். கன்யாகுமரி ஆலயத்தில்
தரிசனம் செய்தபின் கடலில் நீந்தி அங்கிருந்த பாறை மீதமர்ந்து தவத்தில் அமர்ந்தார்.
அங்குதான் இப்போது விவேகானந்தா பாறை ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. 1870களில் ரானடே
என்பவர் தலைமையில் அவ்வாலயம் கட்டப்பட்டது இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.
எனும் இயக்கத்தார்.
அங்கிருந்து ராமேஸ்வரம், மதுரை சென்று அங்கிருந்து
ரயில் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு அழகியசிங்க பெருமாள் என்பவர் தலைமையில் இரு
இளைஞர் பட்டாளம் அவரை வரவேற்றது. அந்த வரவேற்பின்போதுதான் அவர் தான் அமெர்க்காவில்
சிகாகோ நகரில் நடக்கும் சர்வமத மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளப்
போவதாக அறிவித்தார். சென்னையில் அப்போது நடந்த ஊர்வலத்தில் சுவாமிஜியை ஒரு ரதத்தில்
உட்காரவைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் இழுத்து வந்தனர். அந்த மாணவர்களில் ஒருவராக
இருந்தவர் நமது ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார், பின்னாளில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
இவர் சிகாகோ செல்வது அறிந்த சென்னை இளைஞர்கள் இவருக்கு
நிதி திரட்ட முடிவு செய்தனர். இவரும் தனது குருவான ராமகிருஷ்ண பரஹம்சரின் ஆசியையும்
சாரதா தேவியாரின் அனுமதியையும் வேண்டி அவர்களது ஆசியைப் பெற்றார். இவரை கேத்ரி மகாராஜா
தன் ஊருக்கு அழைத்து இவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார். அங்குதான் நரேந்திரன்
“சுவாமி விவேகானந்தர்” என பட்டம் சூட்டப்பட்டு
அழைக்கப்படத் தொடங்கினார். நாமும் இனி இவரை சுவாமி விவேகானந்தர் என்றே அழைப்போம்.
அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் சர்வமத மாநாடு நடைபெற்றதால்
அதில் இந்தியாவின் இந்துக்களின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள சுவாமி விவேகானந்தர் மும்பை
நகரில் 1893 மே மாதம் 31ஆம் தேதி கப்பல் ஏறினார். அவர் பயணித்த கப்பல் சீனா, ஜப்பான்,
கனடா வழியாகச் சென்று வட அமெரிக்காவின் மேலைக் கரையில் உள்ள சிகாகோ நகருக்கு 1893 ஜூலை
மாதத்தில் போய்ச்சேர்ந்தது.
குப்பை கூளங்களும், அழுக்கு உடைகளும், ஏழ்மையும்,
கல்வியின்மையும், வறுமையில் நிறைந்த இந்தியாவிலிருந்து அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து
வைத்த சுவாமிக்கு அந்த இடம் மிக சுத்தமாக, ஒழுங்கும் கட்டுப்பாடும் மிகுந்த மக்கள்
கூட்டத்தையும் பார்த்து ஒரு குழந்தையைப் போல திகைத்து நின்றார்.
சிகாகோவில் சர்வமத மாநாடு செப்டம்பர் மாதம் தான்
நடக்கப் போகிறது. இவரோ ஜூலை மாத மத்தியிலேயே அங்கு போய்ச் சேர்ந்து விட்டார். இன்னும்
இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, யாரைப் பார்ப்பது, செலவுக்குக் கையில் பணம் இல்லை
என்ன செய்வது என்பது போன்ற பல பிரச்சனைகள்.
அந்த சமயத்தில் சிகாகோவை விட போஸ்டனில் தங்குவது
சற்று செலவு குறைவாக இருக்குமென்பதால் ஒரு ரயிலைப் பிடித்து போஸ்டனுக்குச் சென்றார்.
வழியில் ரயிலில் இவருக்கு திருமதி கேத்தரின் சன்பர்ன் என்பவரின் நட்பு கிடைத்தது. போஸ்டனில்
இவர் அந்த மாதின் விருந்தாளியாகத் தங்கினார்.
அந்த அம்மையார் சுவாமிஜியை ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜான்
ஹென்ரி ரைட் என்பாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் சர்வமத மாநாட்டுத் தலைவருக்கு
ஒரு அறிமுகக் கடிதம் கொடுத்து அவரிடம் அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில் பேராசிரியர்
ரைட் எழுதியிருந்தது என்ன தெரியுமா? “இவர் நம் நாட்டு பேராசிரியர்கள் அனைவரையும் காட்டிலும்
அதிகம் கற்றுத் தேர்ந்த அறிஞர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
சுவாமி மறுபடி போஸ்டனிலிருந்து சிகாகோ வந்தார்.
மாநாட்டுக்கு இன்னும் சில நாட்கள் இருந்தன. ஒரு கொடுமை என்னவென்றால் அங்கு இவர் யாரைப்
பார்க்க வேண்டுமோ அந்த கமிட்டியின் முகவரியை இவர் தொலைத்து விட்டார்.
அங்கு போனது, தங்கியது இவைகள் எல்லாம் வியப்புக்குரிய
செய்திகள். சிகாகோவில் இவர் எங்கு தங்குவது, யாரைப் பார்ப்பது, மாநாடு எப்போது நடக்கிறது
என்பதெல்லாம் தெரியாத சூழ்நிலை. அங்கோ நல்ல கொடும் பனிப்பொழிவு. குளிர் தாங்கமுடியாத
நிலை. செய்வதறியாமல் இவர் ஒரு தெருவின் இடைப்பகுதியில் வரிசையாக இருந்த மரங்களுக்கிடையில்
ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து விட்டார். கடுங்குளிர் வீசுகிறது. குளிருக்கு அடக்கமான கம்பளி
உடைகள் இவரிடம் கிடையாது. தான் அணிந்திருந்த காவி உடையோடு அவர் அங்கு பனிப்பொழிவில்
மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் காட்சியை அருகில் ஒரு வீட்டின் மாடி ஜன்னல் வழியாக
ஒரு மாதரசி பார்த்தார். அவர் பெயர் திருமதி ஜார்ஜ் டபிள்யு.ஹேல்.
இவர் ஓர் இந்திய சந்நியாசியாச்சே. இங்கு இப்படி
பனியில் உட்கார்ந்திருந்தால் உயிர் இழக்க நேர்ந்துவிடுமே. என்று ஓடிவந்து சுவாமிகளைத்
தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்து மரியாதையும்
அவரை அங்கு தங்க வைத்தனர் அந்தப் பெண்மணியும் அவர் கணவரும். பிற் காலத்தில் இந்த ஹேல்
தம்பதியினர் சுவாமிகளின் நெருங்கிய சீடர்களாகத் திகழ்ந்ததோடு, சுவாமிகளுக்கு அமெர்க்க
முகவரியையும் அவர்கள்தான் கொடுத்து உதவினர்.
1893 செப்டம்பர் 11. பரந்து விரிந்த மாநாட்டு மண்டபம்.
7000 மக்கள் உலகின் மதத் தலைவர்களின் உரைகளைக் கேட்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர். உலகத்தில்தான்
எத்தனை நாடுகள், எத்தனை மதங்கள், எத்தனை கொள்கைகள், எத்தனை விதமான மக்கள், அவற்றின்
சிறப்புகள் அவை அத்தனையும் அங்கே விவாதிக்கக் கூடியிருந்த காட்சி சுவாமிகளை ஓர் உன்னத
நிலைக்குக் கொண்டு சென்றிருந்தது.
மாநாடு தொடங்கியது. இத்தனை பெரிய கூட்டத்தில் சுவாமிஜி
இதற்கு முன்பு உரையாற்றியதில்லை. அவர் மனத்தில் பயம் கெளவிக் கொள்ளத் தொடங்கியது. என்ன
பேசுவது, எப்படிப் பேசுவது, எப்படிப் பேச்சைத் தொடங்குவது இதுபோன்ற குழப்பங்கள். மேடை
நெடுகிலும் பல தேசத்து, பல மதத்துத் தலைவர்கள் உட்கார்ந்திருக்க சுவாமிகளும் ஒரு ஓரமாக
முகத்தில் சிந்தனை தேக்கி உட்கார்ந்தார்.
மாநாட்டுத் தலைவர் முதலில் இருந்தே சுவாமி இப்போது
பேசுகிறீர்களா என்று ஒவ்வொரு முறையும் கேட்க, இவரோ, பிறகு ஆகட்டும், அப்புறமாகப் பேசுகிறேன்
என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார். இறுதியாகத் தலைவர் சொன்னார், சுவாமிஜி, நீங்கள்
பேச இதுவே இறுதி வாய்ப்பு, இப்போது விட்டால், பின்னர் பேச முடியாமல் போகும் என்றதும்
சுவாமி எழுந்தார். மாபெரும் கூட்டத்தைப் பார்த்து சில விநாடிகள் பேச்சு வராமல் தவித்தார்.
தன் குருநாதரை மனதில் நினைத்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் கொடுத்த தைரியமோ என்னவோ, சுவாஜி
தன் உரையை, உலகம் போற்றும் அரியதொரு உரையைத் தொடங்கினார். என்னவென்று தெரியுமா? அதுதான்
இன்றுவரை அவர் பெயரை உலக நாடுகள் அனைத்திலும் உயர்வாக நினைக்கத் தூண்டும் வரிகள்.
அவர் தொடங்கினார்: “அமெரிக்க நாட்டின் எனதருமை சகோதரிகளே,
சகோதரர்களே!” இந்த முதல் வரி அமெரிக்க கூட்டத்தை மின்சாரம் போல தாக்கி கையொலி எழுப்பத்
தூண்டியது. காரணம் மேலை நாட்டு நாகரிகத்தில் கூட்டத்தில் பேசுவோர், மக்களை “லேடீஸ்
அன்டு ஜென்டில்மென்” என்று அழைத்துப் பேசுவதுதான் வழக்கம். பாரத தேசத்தின் பண்பாடு,
நமது சகோதரத் தன்மை, நாம் அனைவரும் ஒன்று எனும் தீர்க்கமான கொள்கை சுவாமிகளின் வாயிலிருந்து
“சகோதரிகளே, சகோதரர்களே” என்ற அழைப்பாக வந்த சமயம் உணர்ச்சி மிகுதியால் மக்கள் பல மணித்துளிகள்
கைதட்டலை நிறுத்தாமல் தொடர்ந்தனர். சுவாமிகளின் பேச்சு அன்று வெகு சில மணித்துளிகள்
தான் என்றாலும் அது அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது. அன்று தொடங்கி மாநாடு நடந்த
எல்லா நாட்களிலும் அவருக்குப் பேச அழைக்கு அளித்தார்கள், அவரும் பேசினார், உலகம் அவரை
உற்றுக் கவனிக்கத் தொடங்கியது. இந்தியாவின் பாரம்பரிய பெருமையை, கலாச்சாரத்தை, பண்பாட்டை
உலக அரங்கில் கொண்டு சேர்த்துப் பெருமைத் தேடித் தந்த மகான் சுவாமி விவேகானந்தர் என்பது
சத்தியமான வாக்கு.
இவர் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பேசிய பேச்சுக்கள்
செய்தித்தாட்கள் மூலம் உலகெங்கும் பரவின. இவர் புகழ் வானத்தைத் தொடுமளவுக்கு பெருகியது.
மாநாடு அமைதியாக முடிவடைந்தது. ஆனால் சுவாமிகளின் வாழ்க்கை இயந்திர கதியில் தொடர்ந்து
ஓய்வு ஒழிச்சலின்று தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் கூட்டங்கள், சந்திப்புகள்,
கேள்வி பதில் நிகழ்ச்சிகள். அமெரிக்க நாட்டு இளைஞர்கள் ஒரு புதிய ஞானியைக் கண்ட பிறகு
அவரிடமிருந்து பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள ஆவலுள்ளவர்களாக மாறினர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊர. அங்கெல்லாம் சுவாமிகளை
மொய்த்துக் கொண்ட அமெரிக்க இளைஞர் கூட்டம். இவர் எங்கு இத்தனை செய்திகளையும் படித்தார்,
இத்தனை நாள் இவற்றை எல்லாம் எங்கே வைத்திருந்தார் என்று வியக்கும் வண்ணம் அவருடைய கருத்தாழமிக்க,
ஆன்மீக, வேதாந்த, தத்துவார்த்த, சமயம் சார்ந்த அறிவுரைகளை அவர் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்ட ஒளி விளக்காகத் தென்படலானார்
சுவாமி விவேகானந்தர்.
அமெரிக்கா, முடிந்து இங்கிலாந்து மறுபடி அமெரிக்கா
இப்படி அவரது பிரச்சாரப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
ஒரு வழியாக 1896இல் டிசம்பர் 16ஆம் தேதி லண்டன்
நகரிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டார். வழியில் இத்தாலியில் இறங்கி ரோம் மாநகரம்
சென்று நேப்பிள்ஸ் முதலான இடங்களைப் பார்த்துவிட்டு டிசம்பர் 30இல் மீண்டும் பயணத்தைத்
தொடர்ந்தார்.
அவர் இலங்கையின் கொழும்பு நகரத்துக்கு 1897 ஜனவரி
15இல் கப்பல் மூலம் வந்து சேர்ந்தார். வெளிநாடு சென்று ஏராளமான புகழுடன் இந்தியா திரும்பும்
செய்தி எத்திசையும் பரவி இவரை வரவேற்க இந்திய மக்கள் தயாரானார்கள். கொழும்பிலிருந்து
இவர் படகு மூலம் ராமேஸ்வரம் வந்து இறங்கினார். அங்கிருந்து மதுரை, திருச்சி, கும்பகோணம்
வழியாக சென்னைக்கு ரயிலில் பயணம் செய்தார். வழிநெடுக இவரைக் காண, மரியாதை செய்ய ஏராளமான
கூட்டம். அங்கெல்லாம் இவர் உரையாற்றினார். அந்த உரைகள் அனைத்தும் “கொழும்பு முதல் அல்மோரா
வரை” எனும் நூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னையிலிருந்து இவர் கப்பல் மூலம் கல்கத்தா சென்றார்.
1897 பிப்ரவரி 20இல் கல்கத்தாவை அடைந்தார். அங்கு இவர் தன்னுடைய சக சந்நியாசிகளை அழைத்தார்.
பல்ராம் போஸ் என்பார் இல்லத்தில் சக சந்நியாசிகளுடன் சேர்ந்து இவர் “ஸ்ரீராமகிருஷ்ணா
மிஷன்” எனும் இயக்கத்தைத் தொடங்கினார். ஆன்மீகமும், மக்கள் தொண்டுமே இந்த மிஷனின் நோக்கங்கள்.
1898இல் கல்கத்தா நகரத்தில் பிளேக் நோய் பரவியது.
ராமகிருஷ்ணா மிஷன் மக்கள் உதவிக்கு விரைந்தது. இவை முடிந்ததும் தன் சகாக்களுடன் சுவாமி
நைனிட்டால், அல்மோரா நகரங்களுக்குச் சென்றார். அதே ஆண்டு ஜூன் 16இல் இவர் காஷ்மீர்
சென்றார். தனது சீடர்கள் நிவேதிதா உட்பட பலருடன் இவர் அமர்நாத் குகைக்கோயிலுக்குச்
சென்றார்.
1898 அக்டோபர் 18இல் இவர் உடல் நலம் சரியில்லாமல்
கல்கத்தா திரும்பினார். உடல் நலம் கெட்ட நிலையிலும் பேலூரில் சிறிய இடமொன்றை விலைக்கு
வாங்கி அங்கு ராமகிருஷ்ணர் பெயரால் ஒரு மடத்தைக் கட்டினார். 1899 ஜனவரியில் அந்த ராமகிருஷ்ண
மடம், தற்போதைய தலைமை பீடம் திறக்கப்பட்டது.
1899இல் இவர் மீண்டுமொரு முறை ஐரோப்பிய யாத்திரையை
மேற்கொண்டார். பல நாடுகளுக்கும் சென்று பல கூட்டங்களை நடத்திவிட்டு இந்தியா திரும்பிய
சுவாமிகள் உடல் நலம் மிகவும் மோசமடைந்தது.
1902 ஜூலை 4. காலை 8 முதல் 11 வரை சுவாமிஜி ஆழ்ந்த
தியானத்தில் அமர்ந்தார். மாலையில் சிறிது தூரம் நடைப்பயிற்சி செய்தார். முடிந்து மடத்துக்குத்
திரும்பிய சுவாமி தனது அறையில் அமர்ந்து ஒரு மணி நேரம் தியானம் செய்தார். அது முடிந்து
அங்கேயே தலை சாய்த்துத் தரையில் படுத்தார். சற்று நேரம் கழித்து அவரிடமிருந்து இரண்டு
முறை நீண்ட பெருமூச்சு எழுந்தது. உலகையே கண் விழித்து இந்தியாவைப் பார்க்கச் செய்த
அந்த வீரத் துறவியின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது.
உலகம் போற்றிய ஒரு உத்தம சந்நியாசி, செயற்கரிய சாதனைகளைச்
செய்து முடித்து இன்றும் சேவை என்றால் இராமகிருஷ்ண மிஷன் என்று உருவாக்கிய மகானுடைய
வரலாறும் முடிவுக்கு வந்தது.
ஆக்கம்: தஞ்சை
வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சை. #9486741885. E.mail:
privarsh@gmail.com