ராஜாஜியின் நினைவு தினம் வரும் புதன்கிழமை. அதையொட்டி அவர் வாழ்வில் நடந்த இரு நிகழ்ச்சிகள் நம் சிந்தனைக்கு:
1. ராஜாஜியின் வாதத் திறமை.
ஒரு முறை திருப்பதி ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பெருமாளை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அப்போது அவர் ஆலயத்துள் நுழைந்ததால் கோயில் அசுத்தமாகிவிட்டது என்று கோயில் நிர்வாகம் புகார் அளிக்க காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கு சித்தூர் நீதிமன்றத்தில் நடந்தது.
அந்த வழக்கு பற்றி கேள்விப்பட்ட ராஜாஜி அந்த வழக்கின் விவரங்களை அறிந்து கொள்வதற்காகப் சித்தூருக்குக் கிளம்பிப் போயிருந்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்டவருக்காக நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக தயாராக இருந்த வழக்கறிஞர், ராஜாஜி வந்திருப்பதைக் கண்டு அவரே இந்த வழக்கில் எதிரிக்காக ஆஜராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க ராஜாஜி ஆஜரானார். அரசாங்கத் தரப்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலம் பதிவான பின்பு ராஜாஜி அவர்களைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கினார்.
சாட்சிகளை ராஜாஜி கேட்டார், குற்றம் சாட்டப்பட்டவர் கோயிலுக்குள் வந்து சுவாமி தரிசனம் செய்தார் என்கிறீர்களே அப்படி அவர் வந்த போது ஸ்நானம் செய்துத் தன்னைத் தூய்மை செய்து கொண்டு வந்திருந்தாரா என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆம், அவர் தலை முழுகிவிட்டு ஈரத்தோடுதான் வந்தார் என்றனர். சரி, அவர் நெற்றியில் நாமம் அணிந்திருந்தாரா என்று கேட்டார்; அவர்கள் ஆமாம் அவர் தன் உடலில் துவாதச நாமங்கள் தரித்திருந்தார் என்றனர். சுவாமி தரிசனம் செய்த போது வேறென்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விக்கு அவர் 'கோவிந்தா', 'கோவிந்தா' என்று பக்தியுடன் உச்சரித்துக் கொண்டிருந்தார் என்றனர். இதே பதிலை அத்தனை அரசு தரப்பு சாட்சிகளும் சொன்னவை பதிவாகின.
கடசியாக ராஜாஜி தன் வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சொன்னர், ஆலயதினுள் சுவாமி தரிசனத்துக்கு வந்தவர் அதற்கான ஆசாரத்துடனும், பக்தி சிரத்தையுடனும், முறையாக ஸ்நானம் செய்து துவாதச நாமங்கள் தரித்து, நாவில் அந்த இறைவன் நாமத்தை 'கோவிந்தா' 'கோவிந்தா' என்று உச்சரித்துக் கொண்டு வந்தது எப்படி ஆலயத்தை அசுத்தம் செய்ததாக ஆகும்? அப்படி முறையோடும், நியதியோடும் வராமல், உடன் வருவோரிடம் அரட்டை அடித்துக் கொண்டும் வரும் மற்ற பிரிவினர் கோயிலை அசுத்தம் செய்கிறார்களா, இவரைப் போன்ற உள்ளார்ந்த பக்தியுடன், முறையோடு வழிபாடு நடத்துபவர் ஆலயத்தை அசுத்தம் செய்கிறாரா என்ற வினாவை எழுப்பினார்.
இவர் வாதம் முடிந்ததும் நீதிபதி அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
2. சிக்கலைத் தவிர்த்த ராஜாஜியின் பணிவான வாதம்.
சுதந்திரப் போராட்ட தொடக்க காலத்தில் அன்னிபெசண்ட் 'ஹோம்ரூல்' இயக்கத்தைத் தொடங்கினார். அந்த போராட்டத்தில் அன்னிபெசண்ட், வாடியா, அருண்டேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீலகிரியில் உள்ள குன்னூருக்கு ரயிலில் கொண்டு சென்றனர். அவர்கள் ரயில் சென்ற வழியெல்லாம் மக்கள்கூட்டம் கூடி அவர்களுக்கு வாழ்த்து சொல்லி கோஷங்களை எழுப்பியது.
வழி நெடுக எல்லா ரயில் நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலத்துக்கு அருகிலுள்ள சூரமங்கலம் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. சேலம் நகரத்திலிருந்தும் ஏராளமானோர் அங்கு வந்து குவிந்திருந்தனர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் பூட்டப் பட்டது. இரும்பு வேலியைத் தாண்டி மக்கள் உட்புகுந்து காத்திருந்தனர். பூட்டியிருந்த கேட்டை மக்கட் கூட்டம் உடைத்துவிட்டது. இருப்பு வேலிகள் தகர்க்கப்பட்டன. ரயில் தண்டவாளத்தில் ஏராளமானோர் உட்கார்ந்து ரயிலை மறிக்கத் தயாராகிவிட்டனர்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பலத்த போலீஸ் படையுடன் அங்கு வந்து சேர்ந்தார். மக்கட்கூட்டம் வன்முறையில் ஈடுபடுவது கண்டு அவர் கோபமடைந்தார். போலீசாருக்கு தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கவும், அப்படியும் முடியாவிட்டால் துப்பாக்கிச் சூட்டுக்குத் தயராக இருக்கும்படி ஏற்பாடுகள் நடந்தன. கலெக்டர் உத்தரவு தரவேண்டியது தான் அடக்குமுறை தாண்டவமாடத் தொடங்கிவிடும். துப்பாக்கி சூடு நடந்தால் எத்தனை பேர் இறப்பார்களோ, தடியடியில் எத்தனை பேர் காயமடைவார்களோ எனும் அச்சம் நிலவியது. மக்கள் அஞ்சாமல் "ஜே" கோஷம் போட்டபடி காத்திருந்தனர்.
பெரியோர்கள் தலைவர்கள் மத்தியில் அசம்பாவிதம் நடக்காமல் என்ன செய்யலாம் என்ற சிந்தனை. அப்போது ராஜாஜி மெல்ல மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினார். அவரிடம் மிகவும் பணிவாக மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார் ராஜாஜி. "கலெக்டரிடம் ஒரு விண்ணப்பம்" என்று தொடங்கினார்.
"என்ன? சொல்லுங்கள்" என்றார் கலெக்டர்.
ராஜாஜி பேசினார்: "இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கலெக்டரின் அதிகாரம் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். இங்கு நிலவும் சூழ்நிலையை நீங்கள் சற்று அமைதியாக எண்ணிப் பார்க்கணும். மக்களின் இந்த ஆவேசத்தை எப்படி அடக்குவது என்பது இருக்கட்டும்; தங்களுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் எது நன்மை பயக்கும், எது பெருமையளிக்கும் என்பது முக்கியம். அடுத்த விநாடி இங்கு நடக்கக்கூடிய விரும்பத்தகாத நிகழ்ச்சிகளை எப்படி சமாளிப்பது என்பதில்தான் மேன்மை விளங்கும். இந்த மக்கள் சுடப்பட்டு இறந்து வீழ்வதில் யாருக்கு என்ன பயன்? அதில் பெருமையோ, புகழோ என்ன இருக்கிறது என்பதை நீங்கள் சற்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மக்கள் இப்படி கூட்டமாகக் கூடிவிட்டால் அவர்களுக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை. அவர்கள் குழந்தைகள் போல ஆகிவிடுகிறார்கள். பெற்றோர்கள் நிலையில் அரசாங்கம் இருந்து சற்று விட்டுக் கொடுத்தால் யாருக்கும் துன்பம் இல்லை. பெருமை உண்டாகும், அதில் உங்கள் பெருந்தன்மையும் பிரகாசிக்கும். யோசித்து நல்ல முடிவு செய்யுங்கள்" என்றார் ராஜாஜி.
ராஜாஜியின் இந்த பணிவான பக்குவமான பேச்சு கலெக்டரின் கோபத்தை அடக்கிவிட்டது. அங்கு நடக்கவிருந்த பெரு விபத்து தடுக்கப்பட்டது; பல உயிர்கள் இழப்பு தவிர்க்கப்பட்டது.
ரயிலும் வந்தது, தண்டவாளத்தில் அமர்ந்திருந்த மக்கட்கூட்டத்தைப் பார்த்து ரயில் தூரத்தில் நின்றுவிட்டது. அன்னிபெசண்ட் ரயில் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தார். மக்கள் கூட்டம் அவரை நெருங்கி அவருக்கு மாலை மரியாதைகள் செய்தது. பின்னர் கூட்டம் நகர்ந்து வழிவிட ரயில் தொடர்ந்து சென்றது. அமைதி திரும்பியது. ராஜாஜியின் சமயோசிதமான பேச்சு ஒரு ரணகளம் நடப்பதை தவிர்த்துவிட்டது.