பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, August 22, 2014

வள்ளலார் பெருமானின் திருவருட்பா.


                             
வள்ளலார் பெருமானின் திருவருட்பாவைப் படிக்கத் தொடங்கினேன். தொடங்கிய அன்றே என் மனதில் தங்கிய சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இதோ அவை.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்க்வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     1.

ஈஎன்று நான்ஒருவர் இடம்நின்று கேளாத இயல்பும்என் னிடம்ஒருவர்ஈ
திடுஎன்ற போதவர்க் கிலைஎன்று சொல்லாமல் இடுகின்ற திறமும்இறையாம்
நீஎன்றும் எனைவிடா நிலையும்நான் என்றும்உள நினைவிடா நெறியும்அயலார்
நிதிஒன்றும் நயவாத மனமும்மெய்ந் நிலைநின்று நெகிழாத திடமும்உலகில்
சீஎன்று பேய்என்று நாய்என்று பிறர் தமைத்தீங்குசொல் லாததெளிவும்
திரம்ஒன்று வாய்மையும் தூய்மையும் தந்துநின் திருவடிக் காளாக்குவாய்
தாய்ஒன்று சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     2.

வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ வானைஒரு மான்தாவுமோ
வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய மலையைஓர் ஈச்சிறகினால்
துன்புற அசைக்குமோ வச்சிரத் துண்ஒரு துரும்பினால் துண்டமாமோ
சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை தோயுமோ இல்லைஅதுபோல்
அன்புடைய நின்அடியர் பொன்அடியை உன்னும்அவர் அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறு மோகாமம் வெகுளிஉறு மோமனத்தற்பமும்வி கற்பம்உறுமோ
தன்புகழ்செய் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தன்முகத் துய்யமணி உன்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                        3.

மனமான ஒருசிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச்சீர்
மகிழ்கல்வி கற்றிடான் சும்மாஇ ரான்காம மடுவினிடை வீழ்ந்துசுழல்வான்
சிவமான வெஞ்சுரத் துழலுவன் உலோபமாம் சிறுகுகையி னுட்புகுவான்
செறுமோக இருளிடைச் செல்குவான் மதம்எனும் செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சரிய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும்அந்தோ
என்சொல்கே ளான்எனது கைப்படான் மற்றிதற்கேழையேன் என்செய்குவேன்
தனநீடு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     4.

நீர்உண்டு பொழிகின்ற கார்உண்டு விளைகின்ற நிலன்உண்டு பலனும்உண்டு
நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட நெறிஉண்டு நிலையும் உண்டு
ஊர்உண்டு பேர்உண்டு மணிஉண்டு பணிஉண்டு உடைஉண்டு கொடையும்உண்டு
உண்டுண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும் உளம்உண்டு வளமும்உண்டு
தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள செல்வங்கள் யாவும்உண்டு
தேன்உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத் தியானமுண் டாயில்அரசே
தார்உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     5.

நான்கொண்ட விரதம்நின் அடிஅலால் பிறர்தம்மை நாடாமை ஆகும்இந்த
நல்விரத மாம்கனியை இன்மைஎனும் ஒருதுட்ட நாய்வந்து கவ்விஅந்தோ
தான்கொண்டு போவதினி என்செய்வேன் என்செய்வேன் தளராமை என்னும்ஒருகைத்
தடிகொண் டடிக்கவோ வலியிலேன் சிறியனேன் தன்முகம் பார்த்தருளுவாய்
வான்கொண்ட தெள்அமுத வாரியே மிகுகருனை மழையே மழைக்கொண்டலே
வள்ளலே என்இருகண் மணியேஎன் இன்பமே மயில்ஏறு மாணிக்கமே
தான்கொண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.                     6.


Friday, August 1, 2014

தமிழரசுக் கழகம்.

                                                                 தமிழரசுக் கழகம்.
 ம.பொ.சி

காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு படிப்படியாக முன்னேறி, பல போராட்டங்களில் கலந்து கொண்டு, சிறை சென்று அங்கு பெருந்தலைவர்களின் கூட்டுறவால் உயர்ந்து, இலக்கியங்களில் ஊறி, சிலம்புச் செல்வர் எனும் விருதினையும் பெற்ற ஐயா ம.பொ.சிவஞான கிராமணியார் காங்கிரசில் இருந்த போதே 1946இல் ஓர் இலக்கிய அமைப்பாக "தமிழரசுக் கழகத்தை" உருவாக்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு அந்தந்த பிரதேச மொழிகள் முக்கியத்துவம் பெற வேண்டுமெனும் கொள்கையுடைய ஐயா, தமிழகத்தில் தமிழே கல்வி, நிர்வாகம் ஆகிய எல்லா செயல்களிலும் பயன்பட வேண்டும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் கொள்கையோடு இந்த கட்சியைத் தோற்றுவித்தார். காங்கிரஸ் தேசிய கட்சி என்பதாலும், அது பெரும்பாலும் வட இந்தியத் தலைவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுவதாலும், இந்தி மத்தியில் ஆட்சிமொழி என்று அதற்கு ஆதரவளித்ததாலும், வட்டார மொழிகள் அழிந்துவிடக் கூடாதே எனும் ஆதங்கத்தில் தமிழ் மொழிப் பற்றோடு இந்த கட்சி உருவாகியது.

சின்ன அண்ணாமலை


21-11-1946இல் இது துவக்கப்பட்ட காலம் தொடங்கி 1954 வரையிலான காலகட்டத்தில் இது காங்கிரஸ் கட்சிக்குள் இயங்கி வந்த கலை, இலக்கிய, கலாசார இயக்கமாக இருந்து வந்தது. தமிழரசுக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் சுதந்திரம் கண்களில் தென்படத் தொடங்கிவிட்டதாலும், திராவிட இயக்கம் தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கி தேசியத்துக்கும் காங்கிரசுக்கும் எதிராக இருக்குமென்ற காரணத்தால் ஐயா தமிழரசுக் கழகம் சார்பில் திராவிட இயக்க எதிர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டார்.

கவி கா.மு.ஷெரீப்


தன் இளம் வயதிலேயே காங்கிரஸ் இயக்கத்திலும், கள்ளுக் கடை எதிர்ப்பிலும் தீவிர பங்கு கொண்ட ஐயா தமிழரசுக் கழகம் தொடங்கிய 1946 முதல் அவர் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட 1954 வரையிலும்கூட காங்கிரசின் நட்சத்திரப் பேச்சாளராகவும், உயர்மட்ட தலைவர்களில் ஒருவராகவும்தான் இருந்து வந்தார். ராஜாஜியின் அத்யந்த தொண்டராகவும், அவரது மனச்சாட்சி போலவும் இருந்தவர் ம.பொ.சி. 1954இல் காங்கிரஸ் மாநில தலைமை இவருக்கு இறுதி வாய்ப்பொன்றை கொடுத்து, கழகத்தைக் கலைத்துவிட்டு காங்கிரசில் இருக்க வேண்டும் அல்லது காங்கிரசை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்பதுதான் அந்தக் கட்டளை. தன் உயிரோடும் உணர்வோடும் வளர்த்து தானும் வளர்ந்த காங்கிரசை விட்டு வெளியேறுவதென்பது அவருக்கு உயிரைப் பிரிவது போன்ற உணர்வு கொடுத்தாலும், தமிழுக்காகத் தொடங்கிய கழகத்தை விட்டுவிட மனமின்றி காங்கிரசைவிட்டு வெளியேறுவதென முடிவு செய்தார். காங்கிரஸ் ஒரு பெரிய சக்தியை இழந்தது. தமிழும், இலக்கியமும் இவரால் வலுப்பெற்றது.

ஏ.பி.நாகராஜன்


1954இல் ஐயா தமிழரசுக் கழகத்தை ஒரு அரசியல் இயக்கமாக மாற்றினார். ஓரிடு ஆண்டுகளுக்குள் தமிழரசுக் கழகம் தமிழும், தமிழ் சார்ந்த பல விவகாரங்களிலும் பல போராட்டங்களை நடத்தியது. குறிப்பாக தலைநகர் சென்னையை ஆந்திராவுக்குப் போகும் நிலைமை உருவானபோது தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்று போர்க்களத்தில் குதித்தார். சித்தூர் ஆந்திரத்துக்குப் பிரிக்கப்பட்டபோது திருப்பதியை மீட்டெடுக்க போராட்டம் நடத்தினார். அதில் திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி உள்ளிட்ட சித்தூர் மாவட்டத்தின் பல பகுதிகளை தமிழகத்துக்குப் பெற்றுத் தந்தார். அவர் நடத்திய வடவெல்லை போராட்டமும், அதில் அவர் பட்ட அடிகளும் என்றென்றும் தமிழர்கள் மறக்கக்கூடாத நடவடிக்கைகள். தெற்கே திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட கன்னியாகுமரி முதலான தெற்கெல்லை பிரதேசங்களில் தமிழ் பேசும் பகுதிகள் தமிழகத்தில் இணைக்கப்பட வேண்டுமென்பதற்காக மார்ஷல் நேசமணி முதலானோர் நடத்திய தெற்கெல்லை போராட்டத்திலும் இவர் தீவிரமாக பங்கு கொண்டார். மேற்கு மலைத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இன்று பிரச்சினைக்குரியதாகப் பேசப்படும் நீர்தேக்கத்துக்கு நீராதாரமாக விளங்கிய தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் தமிழகத்தில் இணைக்கப்பட வேண்டுமெனவும் போராடினார். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் தமிழகத் தலைவர்களே இவரை குளமாவது, மேடாவது என்று கேலி செய்ததன் பலன் அவை கேரளாவுடன் இணைக்கப்பட்ட வரலாறும் உண்டு.

டி.கே.சண்முகம்


1957இல் அவர் காங்கிரஸ் அல்லாத தேசிய சக்திகளுக்குத் தேர்தலில் ஆதரவு கொடுத்தது. அதன்படி கம்யூனிஸ்ட் கட்சிகளும், திராவிட சார்பு இல்லாத பிற தேசிய சக்திகளுக்கும் அவர் ஆதரவு கொடுத்தார். அவரது தேசியம் ஒரு பக்கமாக நகர்ந்து போய் 1967இல் இவரே திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவு கொள்ள நேர்ந்தது. யாரை எதிர்த்து மாநிலம் முழுவதும் 'திராவிட எதிர்ப்பு மகாநாடுகள்' நடத்தினாரோ, அந்த திராவிட கட்சியுடன் கைகோர்த்துச் செல்லும் அவலம் நேரிட்டது. அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு எனும் உணர்வும் ஓர் உந்து சக்தியாக துணைபுரிந்தது.



சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை 'தமிழ்நாடு' என்று மாற்றுவதற்காகத் தொடர்ந்து போராடி வந்தார். இவர் அங்கம் வகித்த காங்கிரஸ் அந்த மாற்றத்தை ஏற்படுத்தாத நிலையில், இவர் யாரை எதிர்த்துப் போராடி வந்தாரோ அந்த தி.மு.க. பதவிக்கு வந்து அந்த மாற்றம் நிகழ்ந்தது. அரசியலில் மட்டுமல்ல இறைவழிபாட்டிலும் தமிழை முன்னிலைப் படுத்த இந்து கோயில்களில் அர்ச்சனைகளை சம்ஸ்கிருத மந்திரத்துக்குப் பதில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென்றும் போராட்டம் நடத்தினார். சம்ஸ்கிருதமும் தமிழும் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக இணை கோடுகளாக இருந்த நிலையில் மிகச் சிறந்த தமிழ் அறிஞரான ம.பொ.சி. எப்படி இந்த நிலைப்பாட்டை எடுத்தார் என்பது சற்று ஆச்சரியமளிக்கக் கூடியதாகத்தான் இருந்தது. காரணம் சம்ஸ்கிருதத்தில் புலமை பெறாமல் கம்பன் இராமாயண காப்பியத்தைப் படைத்திருக்க முடியாது. வில்லிபுத்தூரார் வியாசரைப் படித்து புலமை பெறாமல் வில்லிபாரதம் படைத்திருக்க முடியாது. நள வேண்பா போன்ற பல அரிய தமிழ் காப்பியங்கள், அறநூல்கள் வந்திருக்க முடியாது என்பதெல்லாம் நன்குணர்ந்த ஐயா, ஒருக்கால் திராவிட இயக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் எடுத்துக் கொண்ட போர் முழக்கத்தை இவர் எடுத்துக் கொண்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. போகட்டும் எது எப்படியிருந்தாலும் இதிலும் அவரது தாய்மொழிப் பற்றுதான் மேலோங்கியிருந்தது.




1967 தேர்தலில் ஐயாவும் இன்னொருவரும் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதுதான் மேலுமொரு வியப்பிற்கு வழிவகுத்தது. 1971இல் காங்கிரஸ் இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என்று பிரிந்து போட்டியிட்டபோது தி.மு.க. இந்திரா காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட போதும் தமிழரசுக் கழகம் தி.மு.க.வைத்தான் ஆதரித்தது. ஒருக்கால் ஸ்தாபன காங்கிரசில் பெருந்தலைவர் காமராஜ் இருந்ததால் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட முடிவை எடுத்தாரோ என்னவோ யார் கண்டார்கள்.

மறுபடி ஒரு அரசியல் மாற்றம் 1972இல் ஏற்பட்டது. ஐயா ம.பொ.சி. அரசியலில் நுழைந்த காலம் முதல், தன்னுடைய உறவு, நட்பு அனைவரையும் விரோதித்துக் கொண்டு, கள்ளுக்கடையில் நல்ல ஊதியத்தில் கிடைத்த வேலையையும் தன் மதுவிலக்குக் கொள்கை காரணமாக உதறித் தள்ளிவிட்டு மதுவுக்கு எதிரான கருத்தில் ஊறித்திளைந்திருந்த நேரத்தில், தி.மு.க. கள்ளுக்கடைகளை, சாராயக் கடைகளை திறக்கு முயற்சி செய்ததை எதிர்த்து இவர் வெளியேறி, எம்.ஜி.ஆர். துவக்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை ஆதரிக்கத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் காந்தியத்தின் மீதான பற்றும், அவரால் ஊழலற்ற அரசை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் ஐயா ம.பொ.சி. அ.தி.மு.கவுக்கு ஆதரவை நல்கினார்.



அதன் பிறகு ஐயா நேரடியாக தேர்தலில் தன் கட்சியையோ, தானோ போட்டியிடவில்லை; என்றாலும் 1972இல் இவர் மாநில சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று தொடங்கி தமிழகத்தில் சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்ட 1986 ஆண்டுவரை அவர் அதில் உறுப்பினராக இருந்து பல அரிய கருத்துக்களை அவையில் பேசியிருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய நாட்டுப் பற்று, தியாகம் இவற்றைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இவரை சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக 1930இல் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம் நடந்த அகஸ்தியம் பள்ளிக்குச் சென்று அங்கு புனித மண் எடுத்துக் கொண்டு டெல்லியில் மகாத்மா காந்தி சமாதிக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுத்தினார். வயது முதிர்ந்து தள்ளாமையிலும் ஐயா இந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்தார். ராஜாஜியோடு நூறு தொண்டர்களும், ஆயிரமாயிரம் ஆதரவாளர்களும் இருந்தார்கள். ஆனால் ஐயா ம.பொ.சி புனித மண் எடுத்த போது காங்கிரசார் யாருமே உடன் இல்லை, ஒரேயொரு வலது கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தார் எனும் செய்தி மனதைக் கலக்கமடையச் செய்யும் செய்தியாகும்.



1995இல் தனது முதிய வயதில் ஐயா காலமான பின்னர் தமிழரசுக் கழகம் செயலிழந்து போயிற்று. அந்தக் கட்சியில் பல பெரிய தலைவர்கள் இருந்தார்கள். சொல்லின்செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரம், கவி கா.மு.ஷெரீப், ஜி.உமாபதி, சின்ன அண்ணாமலை, ஏ.பி.நாகராஜன், கு.மா.பாலசுப்பிரமணியன். கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி வி.கே.குப்புசாமி, கே.விநாயகம், டி.கே.சண்முகம் இப்படி பல நட்சத்திரத் தலைவர்கள் இருந்தும் இந்தக் கட்சி தமிழுக்காக உருவான கட்சி, அவரோடு முடிந்து போயிற்று என்பது வருத்தமளிக்கும் செய்தி. அவருடைய தமிழரசுக் கழகத்துக்கு மட்டும் அன்றைய காங்கிரசும், தேசபக்தியுடைய கட்சிகளும், சக்திகளும் ஆதரவாக இருந்திருந்தால் இன்று அசுர வளர்ச்சியடைந்து நிற்கும் திராவிட இயக்கத்துக்குப் பதிலாக தமிழ் தேசிய இயக்கம் ஐயா ம.பொ.சியின் தலைமையில் ராட்சச வளர்ச்சி அடைந்திருக்கும். ஆனால் ஐயகோ! தமிழத்தின் தலைவிதி, உடன் இருந்தவர்களே இவருடைய வேரை அறுத்து வெந்நீர் ஊற்றி அழித்துவிட்டார்கள்.

காலங்கள் மறைந்தாலும், வாழ்ந்த பெருந்தலைவர்கள் மறைந்தாலும் ஐயா ம.பொ.சி. போன்று சாதனை படைத்த தலைவர்களைத் தமிழகம் என்றென்றும் மறக்காது.