இன்று மக்கள் மத்தியில் கடவுள் பக்தி தழைத்து வளர்ந்திருப்பதைக் காண முடிகிறது. ஈ காக்கை வராத ஆலயங்களில் கூட மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். பிரார்த்தனைத் தலங்கள் என்ற பெயர்பெற்ற ஆலயங்களில் ஆண்டு முழுவதும் மக்கட் கூட்டம். என்ன ஆயிற்று மக்களுக்கு திடீரென்று, புரியவில்லை. நாத்திகப் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த காலமும் ஒன்று உண்டு. இராமன் விக்கிரகத்தை அவமதிப்பு செய்ததையும், விநாயகர் உருவ பொம்மைகள் உடைக்கப்பட்டதையும் கண்ணால் பார்த்தவர்கள் நாம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கியால் பிளக்கும் நாள் எந்நாளோ என்று கோஷமிட்ட காலமும் உண்டு. இத்தனை பேர் ஒன்றுகூடி செய்த நாத்திகப் பிரச்சாரம் என்னவாயிற்று. ஒரு தலைமுறை இந்த விஷமப் பிரச்சாரத்தால் மனம் மாறி நடக்கத் தொடங்கினாலும், அவர்களுக்கென்று தலைவலி கால்வலி வந்த நேரத்தில் கோயிலையும் கடவுளையும் இவர்கள் நினைக்கத் தொடங்கியது ஒரு புறம்; வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், சோதனைகள் இவற்றால் பனம் பதைபதைத்து ஜோசியர்களிடம் சென்று ஜாதகத்தைக் காட்டி பரிகாரம் கேட்கத் தொடங்கிய போது இந்த மாற்றம் ஏற்படத் தொடங்கியது. எப்படி? ஜோசியர்கள் சொன்னார்கள் உங்கள் ஜாதகப்படி இன்ன தோஷம் உங்களை வாட்டுகிறது, அதற்குப் பரிகாரம் வேண்டுமானால் இந்த ஊரில் உள்ள இந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தவுடன் தொடங்கியது அதிர்ஷ்டம் ஆள் வராத கோயில்களுக்கு எல்லாம்.
எங்கோ ஒரு கோடியில் கேட்பாரற்று தூங்கிக் கிடந்த ஆலயம் விழித்தெழுந்தது. பூஜை செய்ய ஆளில்லாமல் இருந்த இடத்தில் பசையோடு வாழ வழிவகுத்துக் கொடுத்தது பரிகாரம் தேடி வந்த மக்கட்கூட்டம். பக்தி என்பது தனக்கு என்றில்லாமல் 'இவ்வுலக மாந்தரெல்லாம் இடரின்றி வாழட்டும்; மாதம் மும்மாரி பொழியட்டும்; பயிர்கள் விளைந்து நாடு வளமாக ஆகட்டும்; இன்னல்கள் தீர்ந்து மக்கள் அமைதியாக வாழட்டும்' என்று வேண்டுவது பக்தி என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் .......
மாறாக என் மனைவியின் மாமா பிள்ளைக்கு வந்த வயிற்றுவலி தீரட்டும், என் வருமானம் அதிகமாக ஆகட்டும், வியாபாரத்தில் எனக்குப் போட்டியாக வளர்ந்து வரும் எதிரி வீழ்ச்சி அடையட்டும் என்றெல்லாம் மனதில் நினைத்து கோயில் கோயிலாகப் போனால் அதன் பேர் பக்தியா?
ஒரு கோயிலுக்குப் போயிருந்தேன். ஆண்டு முழுவதும் பிரார்த்தனை செய்துகொண்டு அங்கு வந்து முடி இறக்கி மொட்டை போட்டுக் கொள்வோரும், ஓராண்டு ஆன குழந்தைக்கு காது குத்தி மொட்டை போடுவோரும், மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வோருமாக அந்தக் கோயில் திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கும். விசேஷ தினங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கோயிலுக்குள் நுழைவதே சிரமம். அப்படிப்பட்ட கோயிலுக்கு ஒரு விசேஷ நாளில் சென்று விட்டேன். அங்குள்ள புஷ்கரணியின் நான்கு புறமும் மக்கட்கூட்டம். அத்தனை பேரும் இறங்கி முழுகி கால் நனைக்கக்கூட இடமின்றி அடைத்துக் கொண்டு நின்றனர். பரவாயில்லை தமிழகம் பண்டைய காலம்போல பக்தி பரவசத்தால் பரவிக் கிடக்கிறது என்று மனம் குதூகலித்தது.
சந்நிதி நோக்கிப் போனேன். உள்ளே மூச்சு முட்டக் கூட்ட நெரிசல். நெருக்கியடித்துக் கொண்டு கூட்டத்தினூடே உள்ளே புகுந்து கிடைத்த இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்துகொண்டேன். தீபாராதனைத் தட்டில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தோடு குருக்கள் வெளியே வந்து பக்தர்களுக்குக் காட்டி கையில் திருநீற்றையும் கொடுத்துக் கொண்டு வந்தார். வெறுங்கையோடு கும்பிடுவோருக்கு ஒரு சிட்டிகை விபூதி கையில் விழுந்தது. சில்லரை போட்டு கும்பிடுவோருக்கு சற்று அதிகமான திருநீறு. கரன்சி நோட்டு விழுந்தால் பொட்டலமாக கட்டி வைத்த திருநீற்றோடு ஒரு சிறு தொடுத்த புஷ்பமும் கையில் விழுந்தது. நல்ல பக்தி வியாபாரம் என்று நினைத்தேன்.
என் அருகில் கற்பூரத் தட்டு வருவதற்காகக் காத்திருந்தேன். அப்போது திடுதிப்பென்று சிலர் முண்டி அடித்து என்னை ஒரு எக்கு எக்கித் தள்ளிவிட்டுத் தங்கள் கைகளை நீட்டி திருநீறு வாங்கிக் கொள்ள முண்டியடித்து வந்தனர். நான் பின்னுக்குத் தள்ளப் பட்டேன். பின்னே என்ன இன்றைய வழக்கப்படி பக்தி செய்யத் தெரியாத எனக்கு பகவான் வேறு என்ன தருவார் என்று திரும்ப வந்துவிட்டேன். சரி, அடுத்த தீபாராதனையாவது பார்த்துவிட்டுப் போகலாம் என்று சற்று கூட்டத்திலிருந்து ஒதுங்கி ஒரு ஓரமாக நின்று கொண்டேன். தீபாராதனை சமயம் சுவாமியும் தெரியவில்லை, சந்நிதியும் தெரியவில்லை, மக்கள் முண்டியடித்துக் கொண்டு சாமியை வேறு யாரேனும் கொண்டு சென்றுவிடுவார்களோ, அவர் தங்களுக்கு மட்டுமே என்ற எண்ணத்தில் பம்மிக் கொண்டு அடைத்துக் கொண்டு நின்றனர். போகட்டும் மக்கள் பய பக்தியோடு சுகமாக வாழட்டும், ஆண்டவனின் கருணா கடாட்சம் அவர்களுக்கே கிடைக்கட்டும், 'சர்வே ஜனஹா சுஹினோ பவந்து: என்று ஆசீர்வதித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு பேருந்தைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன்.
வீடு வந்து சேர்ந்ததும் அடுத்த வீட்டுக் காரர் கேட்டார், என்ன சார், புண்ணிய ஸ்தல யாத்திரை போனீங்களே சுவாமி தரிசனம் எல்லாம் நன்றாக ஆச்சா? என்றார். ஆமாம் ஆச்சு ஆச்சு. அதெல்லாம் விடுங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்த விஷயம் என்ன தெரியுமா? மக்கள் கிட்டே பக்தி அதிகமாயிடுச்சிங்க, அடே அப்பா, அந்த பக்தி பரவசத்தைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கணும். ஒரு முறை நீங்களும் போயி பார்த்து அந்த கோலாகலத்தை அனுபவிச்சிட்டு வாங்க அப்பதான் தெரியும், என்னால் வார்த்தைகளால சொல்ல முடியலை என்றேன். அவரும் திருப்தியாகத் தலை அசைத்துவிட்டு, சரி சரி, போயிட்டு வரேன் என்று சொல்லி புறப்பட்டு விட்டார்.