சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆராதனை
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை இவ்வாண்டு ஜனவரி 21 தொடங்கி, 25 வரை திருவையாற்றில்நடைபெறுகிறது. ஆராதனை 24ஆம் தேதி அவருடைய சமாதியின் முன்பாக நடைபெறுகிறது. கர்நாடக சங்கீத உலகில் முன்னணியில் இருக்கும் பல இசைக் கலைஞர்களும், ஸ்ரீ தியாகராஜருடைய இசையில் லயித்துப் போன இசை அபிமானிகளும் பல்லாயிரக் கணக்கில் இந்த ஆராதனையில் கலந்து கொள்கிறார்கள். தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ தியாகராஜரின் சமாதி அன்றைய தினம் அவருடைய இசையால் நிறைந்து அங்கு கூடியிருப்பவர்கள் பேச்சு மூச்சு அனைத்திலும் சங்கீதம் இழையோடுவதைக் காண முடியும்.
சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் உள்ளிட்ட சங்கீத மும்மூர்த்திகளாகப் போற்றப்படும் மற்ற இரு வாக்யேயக் காரர்களான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதரும், ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் இவர்களில் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு மட்டும் உலகளாவிய அளவில் புகழ்வாய்ந்த ஒரு ஆராதனை நடக்கிறது என்றால் அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். முதலாவது ஸ்ரீ தியாகராஜர் தன்னுடைய இறுதிக் காலத்தில் ஆபத் சந்நியாசம் வாங்கிக் கொண்டவர். சந்நியாசிகளுக்கு உரிய முறையில் அவரது உடல் திருவையாற்றில் காவிரிக் கரையில் சமாதி வைக்கப்பட்டுள்ளது. சந்நியாசிகளுக்கு உரிய குருபூஜையாக இந்த ஆராதனை நடைபெறுவது ஒன்று. மற்றொன்று ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு மற்ற இருவர்களைக் காட்டிலும் மிக அதிகமான சிஷ்யர்களும், அந்த சீடர்களுக்கு மாணவர்களும் என்று ஒரு பெரிய சிஷ்ய பரம்பரை உருவாகிவிட்டதும் ஒரு காரணம். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிஷ்ய பரம்பரையில், மிகப் பிரபலமான பல பெயர்களைக் கூறிப்பிட முடியும். வீணை குப்பையர், வாலாஜாபாத் வெங்கட்டரமண பாகவதர், சுப்பராய சாஸ்திரி (இவர் மற்றொரு குருவான ஸ்ரீ சியாமா சாஸ்திரி அவர்களின் மகன்), மகர்நோம்புச்சாவடி வெங்கடசுப்பையர், தில்லைஸ்தானம் ராம ஐயங்கார் என்று இந்த வரிசை பெருகிக் கொண்டே போகிறது. இந்த சீடர்கள் மூலம் ஸ்ரீ தியாகராஜரின் பாடல்கள் வெகுவாகப் பரவி, கர்நாட சங்கீத உலகில் ஸ்ரீ தியாகராஜருக்கென்று ஒரு நிரந்தரமான இடம் உருவாகி விட்டது.
ஸ்ரீ தியாகராஜரின் கிருதிகள் பலவும் பிரபலமாகப் பாடப்பட்ட போதிலும், அவருடைய திவ்ய நாமமும், உத்சவ சம்ப்ரதாய கீர்த்தனைகளும், பஜனைகள் மூலம் பிரபலமாகப் பாடப்பட்டன. அவருடைய சீடர்கள் பலர் ஸ்ரீ தியாகராஜருடைய கீர்த்தனைகளைப் பிரதியெடுத்து காப்பாற்றி வந்ததால், அவருடைய கீர்த்தனைகள் பலவும் முழுமையாக பின்னாளில் மக்களுக்குக் கிடைக்கும்படியாக அமைந்தன. ஸ்ரீ தியாகராஜர் தன் வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாடிய பலதரப்பட்ட பாடல்கள், பல்வேறு ராகங்களில் அமைந்த கீர்த்தனங்கள் இவைகளெல்லாம் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டதன் விளைவு, இன்று அவைகள் பிற்கால சங்கீத வித்வான்களும் வித்வாம்சினிகளும் பாடக் கிடைத்தன.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் 1847இல் சமாதி அடையும் முன்பாக ஆபத் சந்நியாசம் வாங்கிக் கொண்டார் என்பதைப் பார்த்தோம். சந்நியாசிகள் இறந்த பின் அவர்களது உடல் எரிக்கப்படுவதில்லை, சமாதி வைக்கப்படுவதற்காகப் புதைக்கப்படுகின்றன. அதைப் போலத்தான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பூதவுடல் திருவையாற்றில், பாவாசாமி அக்ரகாரம் எனும் பிராமணர்கள் வாழும் பகுதிக்கருகில் காவிரிக்கரையில் சமாதி வைக்கப்பட்டது. தனது உடல் எப்படி சமாதியில் வைக்கப்பட வேண்டும், எவ்வளவு உப்பு அந்தக் குழியில் இடப்பட வேண்டும் என்பன போன்ற விவரங்களைக் கூட ஸ்ரீ சுவாமிகள் முன்கூட்டியே தெரிவித்திருந்தார்.
சந்நியாசிகள் சமாதியடைந்த பின், அவர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு துளசி மாடம் எழுப்பி, அதில் துளசிச் செடியை வளர்த்து அதற்கு வழிபாடு நடத்துவதும், அத்தகைய இடங்களுக்கு பிருந்தாவனம் என்ற பெயர் வழங்குகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். துளசிக்குப் பதில் வில்வ மரம் நடும் பழக்கமும் உண்டு. ஸ்ரீ சுவாமிகளுக்கும் அதுபோன்ற ஒரு பிருந்தாவனம் அமைக்கப்பட்டது. தொடக்க காலத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஸ்ரீ சுவாமிகளின் சமாதிக்குச் சென்று குருபூஜை செய்யும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
இப்படி சுமார் ஐம்பது ஆண்டுகள் சென்ற பின் முதன் முதலாக 1905இல் சிதிலமாகிக் கிடந்த ஸ்ரீ சுவாமிகளின் சமாதியை உமையாள்புரம் சகோதரர்கள் கிருஷ்ண பாகவதர், சுந்தர பாகவதர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்தும், இசை அன்பர்களிடமிருந்தும் பொருளுதவி பெற்று, அதனை சீர்செய்து புனருத்தாரணம் செய்து அங்கு தினப்படி விளக்கேற்றி பூஜை செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து 1907 முதல் ஸ்ரீ சுவாமிகளின் நினைவு தினத்தில் அவருடைய சமாதியில், அவர் இயற்றிய தெய்வீகமான கீர்த்தனைகளைப் பாடி வணங்கு ஆராதனை செய்யும் வழக்கம் தொடங்கியது. அவர் வாழ்ந்த இல்லத்திலிருந்து, அவர் வாழ்ந்த காலத்தில் விசேஷ தினங்களில் உஞ்சவிருத்தி செய்து வந்ததைப் போல இசைப் பிரியர்களும் உஞ்சவிருத்தியும், ஊர்வலமும், ஏழைகளுக்கு அன்ன தானமும் அளித்து கொண்டாடத் தொடங்கினார்கள். இந்த முறையில் 1908 முதல் தில்லைஸ்தானம் நரசிம்ம பாகவதர், பஞ்சு பாகவதர், திருச்சிராப்பள்ளி கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் இணைந்து ஆராதனையை முறைப்படுத்தி பெரிய அளவில் சிறப்பாக நடத்தத் தொடங்கினார்கள்.
1908இல் உமையாள்புரம் பஞ்சாபகேச ஐயர் தலைமையில் மிக அதிக அளவில் சங்கீத வித்வான்கள் கலந்து கொண்டு ஆராதனையைச் சிறப்பாகச் செய்தனர். இப்படி ஒவ்வோர் ஆண்டும் ஆராதனை நடந்து கொண்டு வரும் கால கட்டத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் ஆராதனைக் குழிவினருக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்து நடத்தத் தொடங்கினர். இதில் ஒரு பிரிவுக்கு 'சின்ன கட்சி' என்றும் மற்றொன்றுக்கு 'பெரிய கட்சி' என்றும் பெயர். சின்ன கட்சிக்கு சூலமங்கலம் வைத்தியநாத பாகவதரும், பெரிய கட்சிக்கு திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரியும் திருச்சி கோவிந்தசாமி பிள்ளையும் தலைமை தாங்கினர். இதில் சின்ன கட்சியார் தினப்படி பூஜை வகையறாவோடு ஆண்டுதோறும் ஆராதனையையும் நடத்தத் தொடங்கினர். இதற்கிடையே திருமதி நாகரத்தினம்மாள் என்பவர் மைசூரைச் சேர்ந்த பிரபலமான இசையரசியும், நாட்டியமணியுமாக இருந்தவர் ஸ்ரீ தியாகராஜர் மீது கொண்ட பக்தியால் அவரது சமாதியைப் புதுப்பித்து புனருத்தாரணம் செய்திட தனது நகை, சொத்துக்கள் அனைத்தையும் விற்று இங்கு வந்து தங்கி கைங்கர்யம் செய்யத் தொடங்கி யிருந்தார்.
1925இல் திருமதி நாகரத்தினம்மாள் அவர்களுடைய முயற்சியால், அதுவரை படங்களிலும், சுவற்றில் எழுதப்பட்ட ஸ்ரீ தியாகராஜர் படங்களை மட்டுமே பார்த்து வந்தவர்கள் புதிதாக அவருடைய திருவுருவச் சிலையொன்றை அவருடைய சமாதியில் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ தியாகராஜருக்கு அமைக்கப்பட்ட முதல் சிற்ப வடிவம் இதுதான். இப்படி இவர் முயற்சிகளை மேற்கொண்ட சமயம், அவரது சமாதியில் அமைந்திருந்த துளசி மாடம் இடம் பெயர்ந்துவிட்டது என்று ஸ்ரீ தியாகராஜ பக்தர்கள் சிலர் குறைப்பட்டுக் கொண்டனர். புதிதாக துளசி மாடம் அமைத்து, அந்த துளசி கொண்டு பூஜைகள் செய்யவும் தொடங்கினர்.
1920 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் சின்னக் கட்சியார் என அழைக்கப்பட்டவர்களான சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர், ஹரிகதா விற்பன்னர் பண்டிட் லக்ஷ்மணாச்சார், புல்லாங்குழல் வித்வான் பல்லடம் சஞ்சீவி ராவ் ஆகியோர் திருவையாற்று காவிரிக் கரையில் அமைந்துள்ள புஷ்ய மண்டபத் துறையில் ஐந்து நாட்கள் தியாகராஜ ஆராதனையைக் கொண்டாடத் துவங்கினர். வயலின் வித்வான் திருச்சி கோவிந்தராஜ பிள்ளை, மிருதங்க வித்வான் அழகுநம்பியா பிள்ளை ஆகியோர் தலைமையிலான பெரிய கட்சியார் திருவையாறு சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்தில் கூடி ஸ்ரீ தியாகராஜர் ஆராதனையை ஆராதனை தினத்திலிருந்து நான்கு நாட்கள் கொண்டாடி வந்தனர்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலகட்டத்தில் இசை, நாட்டியம் இவை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்குத்தான் உரிமை, மற்ற ஜாதியார் இவைகளை மேற்கொள்ளக் கூடாது என்பது போன்ற சமூகச் சிந்தனை நிலவி வந்தது. ஆகையால் இசையையும், நாட்டியத்தையும் 1930க்கு முந்தைய காலத்தில் எல்லோரும் கைக்கொள்வது என்பது அபூர்வமாக இருந்து வந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி திருவையாற்றில் இசைக் கலைஞர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனைகள் செய்து கொண்டு வரும் காலகட்டத்தில், மற்ற எல்லா ஜாதியினரும் சிறிது சிறிதாக இசை, நாட்டியம் இவைகளைப் பயின்று அதில் நன்கு பயிற்சி பெற்று வித்வத் அடைந்தனர். அதை ஒரு சமூகப் புரட்சி என்றுகூடச் சொல்லலாம். அபூர்வமான இந்த கலைகள் பரவலாக்கப்பட்டு எல்லோரும் பாகுபாடின்று கற்கவும், அவற்றில் சிறப்பிடம் பெறவும் முடிந்தது இந்த காலகட்டத்தில்தான்.
1940க்கு முன்பு வரை ஆராதனை நடக்கும் நாட்களில் ஏராளமான மக்களுக்கு அன்னதானம் வழங்கும் முறை இருந்து வந்தது. இதில் மாறுபட்டு பிரிந்திருந்த இரு கட்சியினருமே தனித்தனியாக அன்னதானம் வழங்கி வந்தனர். ஸ்ரீ சுவாமிகள் சமாதியடைந்த புஷ்ய பகுள பஞ்சமியன்று மாலை சுமார் ஐந்து மணி நேரம் சங்கீத ஆராதனைகளும், இரவு ஒரு மணி நேரம் அன்னதானம், இரவு பத்துக்குப் பின் பல மணி நேரம் ஹரிகதா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் அரிசிப் பஞ்சம் நேர்ந்ததால் அன்னதானம் கைவிடப்பட்டது.
இப்படி இரு கட்சிகள் பிரிந்து உத்சவம் நடத்திய காலத்தில் திருமதி நாகரத்தினம்மாள் தலைமையில் சுவாமிகளின் சமாதிக்கு எதிர்ப்புறத்தில் மூன்றாவது கட்சியாக ஆராதனை நடைபெறத் தொடங்கியது. முந்தைய இரு கட்சி நிகழ்ச்சிகளிலும் பெண்கள் கலந்து கொண்டு பாடும் வழக்கம் இல்லை. ஆனால் நாகரத்தினம்மாள் கட்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு பாடினார்கள். முந்தைய இரு நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கிடைக்காத ஆண் பாடகர்களும் நாகரத்தினம்மாளிடம் சென்று வாய்ப்பு கேட்க, அவர்களை அங்கே சேர்த்துக் கொண்டார்கள். இந்த மூன்றாவது அணியில் பிரதான நிகழ்ச்சியாக பன்னிபாய் எனும் பிரபலமான ஹரிகதா விற்பன்னருடைய நிகழ்ச்சி இடம்பெறும். மூன்று கட்சிகளாக இவர்கள் பிரிந்திருந்த போதிலும் ஆராதனை நடைபெறும் நாளன்று மட்டும் மூவரும் ஒருங்கிணைந்து ஆளுக்கு இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டு ஆராதனையைச் சிறப்பாகச் செய்தனர்.
1940இல் ஒரு ஐ.சி.எஸ். அதிகாரியும், சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஜெயராம ஐயர் என்பவரும் ஆராதனையில் ஆர்வம் காட்டினர். அவர்கள் நிதியுதவி செய்து ஆராதனை சிறப்பாக நடத்த துணை நின்றனர். அதனையொட்டி "ஸ்ரீ தியாகராஜ ஆரதனா மகோத்சவ சபா" தொடங்கப்பட்டது. பின்னர் நடந்த ஆராதனைகள் இந்த சபாவின் ஆதரவில் நடக்கத் தொடங்கியது. நாகரத்தினம்மாள் டிரஸ்ட் மூலம் ஆராதனைக்கான வைதீகச் செலவுகள் கவனித்துக் கொள்ளப் பட்டன. அப்போது முசிறி சுப்பிரமணிய ஐயர், டைகர் வரதாச்சாரியார், சங்கீத ஆய்வாளர் எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி மற்றும் சில பிரபல சங்கீத வித்வான்களும் சேர்ந்து, பிரிந்திருந்த மூன்று கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றாக ஆராதனைகளைச் செய்ய வழிவகுத்தனர்.
சமாதியைச் சுற்றி மார்பிள் கற்களில் சுவாமிகளின் கீர்த்தனைகள் வடிக்கப்பட்டு பதிக்கப்பட்டன. சமாதிக்கு முன்புறம் 'வான்மீகி மண்டபம்' கட்டப்பட்டது. "தியாகையா" எனும் திரைப்படத்தில் ஸ்ரீ தியாகராஜராக நடித்த நடிகர் நாகையா இந்த மண்டபம் கட்ட நிதி உதவி அளித்தார். இந்த ஆண்டில்தான், அதாவது 1940இல்தான் ஆராதனையைக் குறிக்கும் விதமாக ஸ்ரீ தியாகராஜரின் மிக உயரிய பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி ஆராதனை செய்யும் வழக்கம் தொடங்கியது. அது முதல் ஆராதனை ஒரு முறையோடு நடக்கத் தொடங்கியது. இந்த பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடுவதற்கு முன்பாக புல்லாங்குழல் இசை வழங்கும் பழக்கத்தையும் பல்லடம் சஞ்சீவி ராவுக்கு வழங்கப்பட்டது.
முறைப்படுத்தப்பட்ட இந்த வடிவத்தில் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை ஒவ்வோர் ஆண்டும் பகுள பஞ்சமி திதியில் மிகச் சீரோடும் சிறப்போடும் நடக்கத் தொடங்கியது. அதற்கு முன்பு வழக்கத்திலிருந்த பல பழைய முறைகள் கைவிடப்பட்டன. ஆண், பெண் பாடகர்களும், வாத்தியக்காரர்களும் ஒருங்கிணைந்து மிக நேர்த்தியாக பஞ்சரத்ன கீர்த்தனைகள் வழங்கி, அதன் பின் தீபாரதனை என்று ஒழுங்கு படுத்தப்பட்ட ஆராதனையை இன்று வரை நாம் பார்த்துக் களித்து வருகிறோம்.
இப்போது ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கும், அதன் எதிர்ப்புறம் பல மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருமதி நாகரத்தினம்மாள் சமாதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அழகிய பந்தல் அமைக்கப்பட்டு, அதில் இரண்டு மேடைகள் அமைத்து, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு, மாறி மாறி அடுத்தடுத்த மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் சீராக அமைக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான இசை ரசிகர்கள் பந்தலுக்குள்ளும், வெளியிலும் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை ரசிக்கிறார்கள். பந்தலையொட்டி ஒரு புறம் காவிரி ஆறு சலசலத்து ஓட, மறுபுறம் ஏராளமான கடைகள், புத்தக விற்பனை, மத்திய மாநில அரசு நிருவனங்களின் ஸ்டால்கள், ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் என்று அனைத்தும் அங்கு இருக்கின்றன.
இப்போது ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்சவ ஆராதனைக் குழுவுக்கு கபிஸ்தலம் திரு ரங்கசாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் அனுபவமும், ஆர்வமும் உள்ள ஒரு குழு பொறுப்பு ஏற்று மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்கள் தலைமையில், அவரை செயலாளராகக் கொண்டு நிகழ்ச்சிகள் மிக அருமையாக, கட்டுப்பாடோடு அமைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிகளை வானொலி மூலமும், தொலைக்காட்சிகள் மூலமும் ஒலி, ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும், இசை விற்பன்னர்களும், இசை ரசிகர்களும் இந்த விழாவுக்கு திருவையாற்றுக்கு வந்து குவிகின்றனர். ஸ்ரீ தியாகராஜரே சொன்னதாகச் சொல்லுவார்கள். தான் சமாதியடைந்து அறுபது ஆண்டுகள் கழிந்தபின் தன்னுடைய பாடல்கள் மிகப் பிரபலமாகப் பாடப்பெறும் என்று. அந்த மகானின் வாக்கு பலித்துவிட்டது. இன்று உலகம் முழுவதும் தியாகராஜர் இசை விழா நடைபெறுகிறது.
கட்டுரை ஆக்கம்:- தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.
ஆதார நூல்கள்: Sri Thyagaraja & the Renewal of Tradition
by William J.Jackson
ஸ்ரீ தியாகராஜோபநிஷத் by ராமசாமி பாகவதர்
"திருவையாற்று வரலாறு" written by me.
and few other books.