பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 18, 2010

ஒளி பிறக்குமா?

பாரத தேசத்துக்கு ஒளி பிறக்குமா?

1. சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள்
அரசியல் அமைப்பு உருவாகி 61 ஆண்டுகள்
சுதந்திரத்துக்கு முன்பிருந்த இந்தியாவும்
இன்றைய இந்தியாவுக்குமுள்ள மாற்றங்களை
உணர வேண்டும். அது முதியவர்களுக்குத்தான்
அதாவது 70க்கும் மேலானவர்களே உணர்வர்.

2. சிலருக்கு எதிர்மறைப் போக்கும் தோல்வி
மனப்பான்மையும்தான் வாழ்க்கை.
எதனையும் நேரடியாக ஏற்றுக் கொள்ள
மறுப்பார்கள். ”என்னத்தே கன்னையா” போல.
அது பெசிமிசம். அத்தகையோர் எழுதியது
'இரவில் பெற்றோம் சுதந்திரம் விடியவேயில்லை'
என்பது. இது தோல்வி குணம். இத்தகையோரால்
நாடு முன்னேறாது.

3. நாட்டில் எங்கும் லஞ்சம், ஊழல்.
அடிமட்டத்தில் நிலவிய இந்த நச்சுப்பழக்கம்
இன்று எல்லா மட்டங்களிலும் இருக்கிறது.
'ஜனநாயகத்தில்' மக்களே உயர்ந்தவர்கள்,
அரசில் பணிபுரிவோர் வேலைக்காரர்களே.
அவர்கள் வேலைக்கேற்ப கூலி பெறுகிறார்கள்.
எனில் அவர்களுக்கு ஏன் கையூட்டு?
ஒரு DRO கெசடட் பதவி வகிப்பவர்,
விரைவில் IAS பெறவிருந்தவர், அவர் லஞ்ச
ஊழலில் சிக்கினார். பிடிபட்டது கோடி கோடியாக
லஞ்சப் பணம். இது என்ன கொடுமை? இதுவா
ஜனநாயகம்? மக்கள்தான் கேட்க வேண்டும்.

4. அரசாங்கம் பலதரத்து மக்களுக்கு பல
சலுகைகளை அறிவிக்கிறது. அந்தச் சலுகைகளைப்
பெற அவர்களுக்குப் பல சான்றிதழ்கள் தேவை.
அவற்றைப் பெற கையூட்டு. இது என்ன நியாயம்?
இத்தகைய ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒளிந்து
கொள்ளும் இடம் அரசியல் புள்ளிகளின் பின்னால்.

5. ஊழலுக்கு என்ன காரணம்? முதலில் தேசபக்தி
இன்மை. இந்த தேசத்தின் சுதந்திரத்தின் விலையை
மக்கள் உணராத தன்மை. நமக்கு ஏன் வம்பு என்று
கண்டும் காணாமல் போகும் அலட்சியப் போக்கு.
இதனால் நஷ்டமடைவது மக்களே!

6. உலக நாடுகளில் நடைபெற்ற புரட்சிகள் எவை?
ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில்தான் சுதந்திரப் போர்.
இங்கெல்லாம் ஒரே மாதிரி போராட்டம் இல்லை.
இந்தியாதான் உலகத்துக்கு வழிகாட்டி.
இங்குதான் அகிம்சை முறையில் மகாத்மா காந்தி
வழிகாட்டிப் போராட்டம் நடந்தது.
மற்ற நாடுகளில் தென்னாப்பிரிக்கா தவிர மற்ற
இடங்களில் வன்முறை தான்.

7. இங்கெல்லாம் மக்கள் ஒருசேர எழுச்சியுற்று
போராடினர். உயிர்ப் பலி ஏராளமாக இருந்தது.
ரஷ்யப் புரட்சியில் Tsar மன்னனின் கொடுங்கோலை
எதிர்த்து லெனின் தலைமையில் ரத்தப் புரட்சி.
பிரான்சில் மன்னனின் கொடுங்கோலை எதிர்த்து
மக்கள் புரட்சி. ஆனால் இந்தியாவில் மட்டும்தான்
அகிம்சைப் புரட்சி. ஓரளவு தென்னாப்பிரிக்காவில்.

8. இந்தோனேஷியாவில்: சுகர்ணோ
பர்மாவில்: யு நு
கீன்யாவில்: ஜோமோ கென்யாட்டா
தெ.ஆப்பிரிக்காவில்: நெல்சன் மண்டேலா
இந்தியாவில்: மகாத்மா காந்தி

9. இந்திய சுதந்திரப் போரை நடத்தியது காங்கிரஸ்.
தலைமை வகித்தது மகாத்மா காந்தி.
கடைபிடித்த வழி: அஹிம்சை.
அறவழி பிறழ்ந்ததால் போராட்டம் வாபஸ் பெற்றார்
காந்தி. ஆகையால் போரில் ஈடுபட்டவர் காந்தி
அடிகளின் சீடர்களே. அவரது தொண்டர்களே.
மக்களுக்கு ஒட்டுமொத்த பங்கு இல்லை.

10. இந்த காரணத்தால் ஒவ்வொரு ஊரிலும்
ஒரு சிலர் மட்டுமே போராட்டம் செய்தனர்.
மற்றவர்கள் அவர்களை காந்தி கட்சி என்றும்,
வந்தேமாதரம் கட்சி என்றும் தூர இருந்து
பார்த்து நின்றனர். நேரடி பங்கு இல்லை.
எனவே சுதந்திரம் பெற்றதில் சிலர் தியாகம்
செய்ய, பலர் பலனை மட்டும் அனுபவித்தனர்.

11. சுதந்திரத்தின் விலை என்ன? தெரியாது.
தெரிந்த தியாகிகளின் காலம் முடிந்து விட்டது.
இன்றைய தலைமுறையினருக்கு சுதந்திரப் போர்
பற்றி சொல்லத் தொடங்கினால், 'bore' என்று
விலகிவிடுவர். நம் சுதந்திரத்தின் விலை தெரியாத
மக்கள் தேசபக்தி கொள்ள வாய்ப்பில்லை.
தேசபக்தியை ஊட்டுவது தேசபக்தர்கள் கடமை.

12. 150 ஆண்டுகள் இந்தியர்கள் இருளில் இருந்தனர்.
1858 சிப்பாய் கலகம் வட இந்திய சிப்பாய்கள் செய்தது.
வெள்ளையர் விழித்துக் கொண்டனர். இந்தியர்களுக்கும்
ஏதாவது நிர்வாகத்தில் பங்கு கொடுத்தால்தான் மறுபடி
ஒரு கலகம் வராமல் தடுக்க முடியும் என்று நினைத்தனர்.
லார்டு மெக்காலே கல்வித் திட்டமும், வெள்ளையர்க்கு
சேவை செய்ய இந்தியர்க்கு வாய்ப்பும் தரப்பட்டது.

13. 1885ல் காங்கிரஸ் மகாசபை ஒரு ஆங்கிலேயரால்
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப்
பட்டது. தொடர்ந்து வெள்ளைக்காரர்கள் தலைவர்.
இங்கிலாந்து மன்னருக்கு பல்லாண்டு பாடித்தான்
காங்கிரஸ் மகாநாடுகள் தொடங்கும். மரியாதையுடன்
ஆங்கில ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள்கள்
வைக்கப்படும்.

14. 1906க்குப் பிறகு திலகரின் காலத்தில்தான் இந்தப்
போக்கு மாறத் தொடங்கியது. அவர் சுதந்திரம்
எனது பிறப்புரிமை என்றார். பிறகு கராச்சி காங்கிரஸ்
மகாநாட்டில் ஜவஹர்லால் நேரு பூரண சுயராஜ்யம்
தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

15. இவ்வளவையும் மக்கள் வேடிக்கைப் பார்த்தார்கள்.
எங்கும் நேரடியாக மக்கள் இறங்கி வெகுஜன
இயக்கமாக நடத்தவில்லை. 1942 மட்டும் ஒரு
மாறுதல். காரணம் வழிநடத்த தலைவர்கள் வெளியில்
இல்லை. இதில் மக்கள் நேரடியாக இறங்கினர்.
அரசு பணிந்து வந்தது.

16. இன்று நம் மக்களுக்குத் தேவை தேசபக்தி.
ஊழலற்ற நிர்வாகம், நேர்மையான அரசு அதிகாரிகள்.
இந்த குறிக்கோளோடு தேசபக்தி கொண்டவர்கள்
இணைந்து செயல்படுதல் அவசியம்.
இந்த நாட்டை தேசபக்தி ஒன்றுதான் காக்க முடியும்.

17. அப்படியொரு நிலைமை வரக்கூடாது என்றுதான் சில
சக்திகள் முயற்சி செய்யும். அப்போதுதான் தங்கள்
தேட்டையை தொடரமுடியும் என்பதால். மக்கள் - சாதியால்,
மதத்தால், மற்ற பல ஏற்றத்தாழ்வுகளால் பிளவுபடாமல்
ஒன்றுபட்டு இந்த நாட்டைக் காப்போம். அப்படியொரு
சபதத்தை குடியரசு நாளில் ஏற்போம்.

18. கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பெற்றது
நமது சுதந்திரம். இதற்காக உடல் பொருள்
ஆவி அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்த
தியாகச் செம்மல்காள் ஏராளம்! ஏராளம்!!
பாரதத் திருநாடு சுதந்திர நாடாக
இந்தப் பூமியில் தலை நிமிர்ந்து நிற்கும்;
சேதமில்லாத இந்துஸ்தானம் உலகுக்கெல்லாம்
வழிகாட்டும், ஆம்! இந்தியா உலகுக்கு வழி காட்டும்
என்று எண்ணிய எண்ணங்கள் இன்று?
தூள் தூளாயின, துவண்டு போயின.

19. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், பதவி கிடைத்திட
பணம் கொடுத்து வாங்கி ஊழல், பின்னர்
அந்தப் பதவியின் துணை கொண்டு ஊரையடித்து
உலையிலிட்டு கோடி கோடியாய் சுருட்டி ஊழல்;
ஒப்பந்த வேலையில் ஊழைல், உழைத்தவனுக்கு
ஊதியம் தருவதில் ஊழல், கட்டடம் கட்டுவதிலும்
ஊழல், கட்டிய கட்டடம் கீழே விழுந்தாலும்
அதற்கு நஷ்ட ஈடு வாங்குகின்ற ஊழல்,
எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா!
இந்தத் துயர் நீங்க ஓர் வழியிலையோ இறைவா!!

20. வேலை கிடைத்திட ஊழைல், கிடைத்த வேலையில்
குறுக்கு வழியில் பொருள் ஈட்டிட ஊழல், கிடைத்த
பதவியில் மக்களுக்கு உதவி செய்வதில் ஊழல்;
ஊழலில் கைதானோர் எண்ணிக்கை கோடிக் கணக்கில்,
கிராம அதிகாரி முதல், மிக உயர்ந்த இடத்தில்
அமர்ந்திருக்கும் கோமான் வரை நம்மைச் சுற்றிலும்
ஒரே ஊழல் மயம்! நாற்றமெடுக்கிறது பாரத தேசத்தின்
புனிதமான பெயர், என்று மாறும் இந்த இழிநிலை
விடியுமா பாமர இந்தியனுக்கு, விடியலுக்கு இன்னும்
எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?

வாழ்க பாரத நாடு. வந்தேமாதரம்.

Friday, December 17, 2010

மக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்!

மக்கள் மனங்களைக் கெடுக்க வேண்டும்!

இந்திய சுதந்திரத்தின் ஆயுள் இப்போது 63 ஆண்டுகள். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயது. வாழ்வின் மேடு பள்ளங்களை நன்கு உணர்ந்து பண்பட்ட வாழ்க்கையை நடத்துகின்ற வயது. குறித்த வயதுக்குள் நல்ல கல்வி, நடுத்தர வயதில் தேடிய செல்வம், ஓய்வு பெறும் வயதில் நல்ல சேமிப்பு, குறைகளைக் களைந்து, வாழ்வாதாராத்துக்கு நல்ல வாய்ப்புக்களைக் கொண்ட வாரிசுகள், நல்ல வளமான வாழ்வு இதுதான் வாழ்க்கைத் தத்துவம். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்கு, நாட்டுக்குத் தேவையான வாழ்க்கைத் தத்துவம். இதனை இந்திய சுதந்திரம் பின்பற்றியிருக்கிறதா என்கிற கேள்வி நம்முள் ஏற்படுவது இயற்கைதானே.

கடந்த 63 ஆண்டுகளில் இந்திய நாடு முன்னேறவே இல்லை, நாட்டின் வளம் பெருகவே இல்லை, தனி நபர் வாழ்வு வளமானதாக ஆகவே இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு நாமெல்லாம் கருத்துக் குருடர்கள் அல்ல. முன்னேற்றம் அடைந்திருப்பது உண்மை, முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். அப்படி அடைந்த முன்னேற்றம் எல்லா மட்டங்களுக்கும் சரிசமமாகப் போய்ச்சேரவில்லை. செல்வம் ஓரிடத்தில் சேரவும், அடிமட்டத்தில் பலர் அவதிப்படவும் செய்திருக்கிறது. ஊழலும், தவறுகளும் நமது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருந்து சரிசமமான முன்னேற்றத்தை முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் குறையே தவிர, முன்னேற்றமே இல்லை என்பது நமது வாதம் அல்ல.

1944இல் இரண்டாம் உலகப் போரின் முழு அழிவுக்கு ஆளான ஜப்பான் அழிவிலிருந்து மீண்டு இன்று உலகப் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நாடாக இருப்பதைப் பார்க்கிறோமே. ஹிரோஷிமா நாகசாகியின் அழிவு உலகில் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக் குறிதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜப்பானைப் போல நாம் ஏன் முன்னேறவில்லை? இந்தக் கேள்விக்குச் சரியான விடையை நாம் கண்டுபிடித்து விட்டோமானால், நாம் விழித்துக் கொண்டு விட்டோம் என்று பொருள்.

சீறிப்பாய்ந்து முன்னேற்றம் (Great Leap Forward) அடைந்தது சீனாவின் சாதனை. பழமையெனும் அடிமைத் தளையிலினின்றும் மாவோ வின் தலைமையில் சீனா சீறிப் பாய்ந்தது. நமக்குப் பின்னால் தவழ்ந்து வந்த அந்த நாடு இன்று அமெரிக்கா எனும் வல்லரசுக்கே அச்சுறுத்தலாக விளங்குவதைப் பார்க்கிறோம். இது எதனால் சாத்தியம் ஆயிற்று. நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற பல கிழக்காசிய நாடுகள் கூட செல்வத்திலும், தொழில் துறையிலும், தனி நபர் முன்னேற்றத்திலும் பல காத தூரம் முன்னேறிப் போய்விட்டதைப் பார்க்கிறோம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும், அளவிடற்கரிய இயற்கைச் செல்வ வளங்களும் நிறைந்த நாம் மட்டும் ஏன் அப்படிப்பட்டதொரு முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இதனை எப்போதாவது நாம் சிறிது சிந்திக்க வேண்டாமா.

இந்தியாவில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை. உழைக்க ஆட்களுக்குப் பஞ்சமில்லை. தோண்டி எடுக்க எடுக்கக் கொடுக்கும் இயற்கை வளங்களுக்கும் குறைவு இல்லை. மூலதனம் ஓரு சிலர் கரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் மட்டும் பல மடங்கு தொழில்களை அதிகரித்துக் கொண்டு மிகப் பெரிய தொழிலதிபர்களாக முடிகிறது. என்றாலும் சாதாரண உழைக்கும், அடிமட்ட, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் ஓரளவுதான் உயர்ந்ததே தவிர, மற்றவர்களுக்கு இணையாக வளர முடியவில்லையே ஏன்?

அன்று கிராமங்களில் கிராம அதிகாரிகள் பரம்பரையாக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்குக் கிடைத்த ஊதியம் எனப்படுவது ஒரு நாள் செலவுக்குக் கூட போதுமானதாக இருந்ததில்லை. இருந்தாலும் அவர்களுக்குத் தாங்கள் இருக்கும் இடத்தில் நல்ல மரியாதையும், தொழிலில் காட்டிய அக்கறை, நேர்மை இவற்றால் மக்களிடம் அன்பும் கிடைத்தன. ஊதியத்தை நம்பி வாழாமால் அவர்களது சொந்த வருமானத்தில் கெளரவமான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்தால் வெளியே தூக்கி எறியப்பட்டு விட்டனர். புதிது புதிதாக தாலுகா அலுவலகத்துக்கு ஆட்களை நியமிப்பது போல புதிய ஆட்களை கிராம அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். இது ஆர்.எம்.வீரப்பன் என்பவரின் மூளையில் உதித்த புதிய சிந்தனை என்பாரும் உண்டு. எது எப்படியோ, வழிவழி வந்த பாரம்பரியத் தொண்டு, செல்வத்தை அள்ளிக் குவிக்க ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்து விட்டது.

அன்றைய கணக்குப் பிள்ளைக்கு ஊரில் எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உண்டு. அவை எத்தனை ஏக்கர். கோயில் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு என்று அவைகளைப் பிரித்தும், அவை இருக்கும் இடங்களையும் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் யாரும் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமித்துவிட முடியாது. தன் வீட்டில் வறுமை இருந்தாலும், பொதுச்சொத்தை எவரும் அபகரித்துவிடக் கூடாது என்ற ராஜவிசுவாசம் அவர்களிடம் இருந்தது. இன்று லஞ்ச ஊழல் தடுப்புத் துறையால் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் கிராம அதிகாரிகள் என்ற செய்தி நம் நெஞ்சங்களை வாட்டுகிறது. காரணம் இந்த லஞ்ச ஊழல்களால் பாதிக்கப்படுவோர் சாதாரண ஏழை விவசாயி, உழைப்பாளிகள்தான். வசதியற்ற மக்களுக்குப் பல சலுகைகளை அரசு அறிவிக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குப் பல சான்றிதழ்கள், குறிப்பாகச் சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவை தேவைப் படுகின்றன. இவற்றைச் சர்வ சாதாரணமாக மக்களால் வாங்க முடிகின்றதா? ஒவ்வொன்றுக்கும் ஒரு 'ரேட்' உண்டு. நியாயமாகக் கிடைப்பதானால் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட தாமதம் ஆகும். ஆனால் கொடுப்பதைக் கொடுத்தால் வாங்குவது சுலபம். இந்த நிலை யாருக்கு? மேல் தட்டு மக்களுக்கா? அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் இந்த அவல நிலை. அவர்கள் கொடுக்க எங்கே போவார்கள். ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிட வசதி படைத்த, நல்ல வருமானம் உள்ளவர்கள் நினைப்பது சரியா. அல்லது அப்படி வாங்காமல் கொடுத்தால் இவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டு விடுமா? இல்லை, வெறி, மேலும் மேலும் பணம் காசு தேவை என்ற வெறி. ஆடம்பரம் தேவை என்பதால்தான் இதெல்லாம் நடக்கின்றன. லஞ்சம் வாங்குபவன் ஏழை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

1965இல், எனது 27ஆவது வயதில் எனக்குப் பிறப்புச் சான்றிதழ் தேவைப் பட்டது. அப்போது திருச்சி மாவட்டத்தில் ஒரு ஊரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பிறந்த, இப்போதைய நாகை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்து கர்ணம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மூன்றாவது நாள் எனக்குத் தபாலில் அந்தச் சான்றிதழ் வந்தது. தபால் செலவு கூட அவருடையது என்பதை கவனிக்க வேண்டும். இது சாத்தியப்பட்டது எங்கே? இங்கேதான், நமது தமிழ்த்திரு நாட்டில்தான். அன்று முடிந்தது, இன்று முடியுமா?

லஞ்சம் எனும் பேயை விரட்ட, அடியோடு ஒழிக்க நாமும் என்னென்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒரு வாரம் கொண்டாடி லஞ்சத்தை எதிர்ப்பதாக வானை எட்டுமளவுக்கு உரத்த குரல் எழுப்புகிறோம். அதன் பயன் எங்காவது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?

வறுமையின் காரணமாக ஒரு வேளை உணவுக்காகத் திருடியவனைப் பிடித்து அடித்து உதைத்து சிறையில் தள்ளி, வாழ் நாள் முழுவதும் அவனை திருடன் என்ற பெயர் சூட்டி சமுதாயத்தில் ஒரு புதிய சாதியை உருவாக்கும் நமக்கு, நமக்கு முன்னால், எல்லா வசதிகளோடும், நல்ல பதவியிலும், நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கி நாய்ப்பிழைப்புப் பிழைக்கும் சிலரை நாம் அப்படி இழிவாகப் பார்ப்பதில்லை. வாங்கும் லஞ்சத்தில், செய்யும் ஊழலில் எல்லை என்பதே இல்லை. கோடி ரூபாய் என்பதை ஒரு ரூபாயாக மாற்றிக் கொடுத்தால் எண்ணக்கூடத் தெரியாத சில தற்குறிகள் பெரிய பதவிகளில் உட்கார்ந்துகொண்டு பல லட்சம் கோடிகளைச் சுருட்டிக் கொள்வதை பொறுமையாக, எந்தவித எதிர்ப்புமின்றி இந்தச் சமுதாயம் பார்த்துக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்ல, அந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு மதிப்பு, மரியாதை கொடுத்து மாலை போட்டு பாராட்டிக் கொண்டிருக்கும் அசிங்கம் இந்த நாட்டில் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மக்களைச் சுரண்டும் சுதந்திரத்துக்காகவா மகாத்மா முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைத்தையும் இழந்து தியாகம் செய்தார்கள்? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா.

முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கும் மற்றொரு காரணம் மக்களிடையே பிரிவுகள், விரோதம், எதிர்ப்பு ஆகியவைகளாகும். இவற்றுக்கு யார் காரணம்? மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விட்டால் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை ஒன்றுபட்டு எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களைப் பல்வேறு காரணங்களைச் சொல்லி பிரித்து விட்டால் ஒற்றுமை ஏற்படாதே! அவர்களால் எந்த ஆபத்தும் எவருக்கும் ஏற்படாதே! இது பிரிட்டிஷார் கடைப்பிடித்து வந்த தந்திரம். வேறு எதைக் காப்பி அடித்தார்களோ இல்லையோ, இந்த பிரித்தாளும் சூழ்ச்சியை நம்மவர்கள் நன்றாகக் கடைப்பிடித்து கொண்டு வருகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சாதிகளுக்குள் விரோதம் இல்லை, வெறுப்பு இல்லை, சண்டை இல்லை. அப்படி இருந்தால் சரிவராது என்றோ என்னவோ, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சாதிப் பிரிவினைகளைச் சொல்லி பிளவுகள், விரோதங்கள், சண்டைகள். நல்ல பிள்ளை போல் சமத்துவம் பேசிக் கொண்டே பிரிவினைகளுக்குத் தூபம் போட்டுக் கொண்டு வருவது ஒரு சாமர்த்தியம். இரண்டு பூனைகளுக்குள் ரொட்டியைப் பிரித்துக் கொடுப்பதாக வந்த குரங்கு எப்படி அவற்றை ஏமாற்றி அனைத்தையும் தானே சாப்பிட்டதோ அது போல இன்றைக்கு மக்களைப் பிரித்து வைத்து ஆதாயங்களைத் தானே அனுபவிக்கும் மொள்ளைமாறித்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் விடிவு இல்லையா?

ஒன்றுமில்லாத விஷயத்துக் கெல்லாம் தோண்டித் துறுவி ஆராய்ச்சிகள் நடத்தும் இந்திய நாட்டின் பெரும் அறிவாளிகளுக்கு இமயமலை போல வளர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்கள் பற்றி தெரியவில்லையா, அல்லது இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? சரி, அறிவாளிகளுக்குத் தான் சிந்தனை இல்லை என்றால், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இவைகளெல்லாம் கவனத்துக்கு வரவில்லையா? வராமல் இருக்குமா! சரிதான் 'இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா' என்று கவுண்டமணி பாணியில் கண்டும் காணாமல் போய்விடுகிறார்களா? தெரியவில்லை.

தங்களது ஆடம்பரத்தேவைகளுக்காக, குறுக்கு வழியில் சம்பாதிக்க லஞ்சம் வாங்குகிறார்களா அல்லது வசதி பெருகப் பெருக மேலும் ஆடம்பரங்களை அதிகரித்துக் கொள்ளவும் தனக்கு மேலுள்ளவர்களுக்குக் கொடுப்பதற்காகவும் லஞ்சம் வாங்குகிறார்களா? இரண்டாவதாகச் சொன்ன வழிமுறைதான் லஞ்சத்துக்கு வழிவகுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேரம் கடந்தும் தங்களது பணிகளைச் செய்து முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில்தான் வீட்டில் மனைவி வாங்கி வரச்சொன்ன அரிசி அல்லது முக்கிய சாமான்களின் நினைவு வரும். அப்போது அருகிலுள்ள மற்ற நண்பர்களிடம் ஒரு பத்து ரூபாய் கடன் கேட்பார்கள். அவர்களிடமும் இருக்காது. யாரிடம் இருக்கிறதோ அவரிடம் போய் கேட்டு வாங்கி மறு நாள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்ட அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட நிலைமை இருந்ததற்குக் காரணம் அன்று லஞ்சம் வாங்குவோர் காளான் போல பெருகி இருக்கவில்லை. இன்று என்ன ஆயிற்று?

சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட ஒரு லஞ்சப் புகார். DRO என்ற கெசடெட் பதவியில் இருந்தவர். விரைவில் IAS அளிக்கப்படவிருந்தவர், லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் இவருக்கு ஏன் இந்த கீழ்மையான புத்தி? இவருக்கு வசதி குறைவா? சாப்பாட்டுக்கு இல்லையா? அரசாங்கம் இவருக்கு ஊதியம் வழங்கவில்லையா? மற்றொரு நிகழ்ச்சி. மருந்துகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் ஒரு அரசாங்க அதிகாரி. இவர் லஞ்சம் வாங்குகையில் பிடிபட்டார். இவருக்குச் சென்னையில் பல மாளிகைகள், கோடிக்கணக்கில் சொத்து, இவையெல்லாம் எப்படிக் கிடைத்தது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்களுக்கு இருக்கும் சொத்து அன்றைய டாட்டா, பிர்லாக்களுக்கோ, நமது மாநிலத்தில் உயர்ந்த அந்தஸ்த்திலிருந்த பல நிலப்பிரபுக்களுக்கோ கூட கிடையாது.

இப்படி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு அன்று முகங்களை மூடிக்கொண்டு போலீஸ் வண்டியில் ஏறிப் போனார்களே, அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள். சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்களா? அவர்கள் லஞ்சத்தில் சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா? ஒன்றும் தெரியவில்லையே. மக்களும் அன்றைய பரபரப்பை அன்றோடு மறந்து விடுகிறார்கள். இதையெல்லாம் நினைவு படுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லயா என்ன? இவ்வளவு ஆன பின்பும் அந்த ஊழல் பெருச்சாளிகள் சமூகத்தில் வெள்ளையும் சள்ளையுமாக நடமாடுவதைக் கண்டு நாம் தலை குனிவதா? அவமானப்படுவதா? தெரியவில்லை.

அரசியல் வாதிகள் மேடை ஏறி பேசும்போது நமக்கு மனமெல்லாம் பால் பொங்குவது போல மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இனி நமக்கு எந்தக் குறையுமில்லை. பாலும் தேனும் நாட்டில் பெருக்கெடுத்தோடப் போகிறது. தொழில் வளம் பெருகப் போகிறது. வேலையில்லா நிலை என்பதற்கு இனி வேலையே இல்லை. அவரவர்க்குச் சொந்தமாக வீடு, நிலம், வருமானம், கலர் டி.வி., காஸ் அடுப்பு, வீட்டு வாயிலில் மாப்பிள்ளைத் திண்டில் சாய்ந்து கொண்டு நிம்மதியான வாழ்க்கை என்று வண்ண வண்ணக் கனவுகளில் ஆழ்ந்து போகிறோம். அத்தனையும் கிடைத்து விடுகிறது. மக்களுக்கு அல்ல. வாய் கிழியப் பேசுபவர்களுக்கு. இத்தனைக்கும் இவர்கள் பதவிக்குப் போகும் முன்பு வரை அன்றாடம் காய்ச்சிகள். இன்று பணம் காய்ச்சிகள். ஜனநாயகம் என்பது இதுதானா?

இவ்வளவு நடந்தும் எங்காவது ஒரு சிறு முணுமுணுப்பு. அந்த ஊழல் பெருச்சாளிகள் வரும்போது ஒரு அலட்சியம். ஊகூம். கிடையாது. அவர்களுக்குத்தான் ராஜ மரியாதை. ஊர்வலம், மாலை மரியாதைகள். அட என்ன இது கேவலம். அநீதி கோலோச்சினால், நேர்மையும் நியாயமும் சவக் குழிக்குள் படுக்க வேண்டியதுதானா? மக்களுக்கு மனச்சாட்சி இல்லாமல் போனது ஏன்? ஊழலைக் கண்டு கொதிக்க முடியாமல் போனது ஏன்? எதிர்ப்புத் தெரிவிக்க அச்சப்படுவது ஏன்? சிந்தித்துப் பாருங்கள். எதிர்ப்பைத் தெரிவிக்கவும் ஓர் தார்மிக உணர்வு வேண்டும். நாமே தப்பு செய்பவராக இருந்தால் யாருடைய தப்பை எதிர்த்துத் தட்டிக் கேட்க முடியும்?

நம்மைச் சுற்றி நடக்கும் ஊழலுக்கும், தவறுகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாக ஆகிப் போகிறோம். இலவசமாக ஏதாவது ஒரு மிட்டாய் பொட்டலத்தைக் கொடுத்தால் வாய் நிறைய பல்லாக அதனை வாங்கித் தின்று மகிழ்கிறோம். இலவசம் என்பது இழிவு என்ற உணர்வு இல்லை. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. யார் ஒருவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லையோ, யார் ஒருவர் பிறருக்காகவே அனவரதமும் இறைவனை வேண்டி பிரார்த்தனை நடத்திக் கொண்டு தன் வயிற்றுப் பாட்டைப் பற்றி கவலைப் படாமல் பிறருக்காக மட்டும் வாழ்கிறார்களோ, அத்தகைய உத்தமர்களுக்குத்தான் யாசகம்/இனாம்/இலவசம் வாங்கிக் கொள்ளும் உரிமை உண்டு.

மாற்றான் உழைப்பில் வயிறு வளர்க்கும் எத்தர்கள், தன் தவற்றை மறைக்க இனாம் கொடுக்க முன்வரும்போது, அதனை வேண்டாம் என்று மறுக்கும் மனத் திண்மை நமக்கு வேண்டும். அது இல்லாமல் கொடுக்கும் இனாமுக்காக அலையோ அலையென்று அலைந்து, அவர் இவர் என்று எவர் காலிலும் விழுந்து, வாங்கும் போதே நாம் நம் சுயமரியாதையை இழந்து விடுகிறோம். எல்லாவற்றிலும் மேலான இழிவு ஜனநாயகம் நமக்களித்திருக்கும் மிகப் பெரும் உரிமையான "வாக்களித்தல்" எனும் உரிமைக்குப் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளித்தல். இது போல ஒரு கேவலமான போக்கு வேறு எதுவும் கிடையாது. இதற்கு என்னதான் வழி? முரசொலி மாறன் ஒரு திரைப்படத்தில் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது. அதில் புத்த பிட்சு ஒருவர் அசோக சக்கரவர்த்தியிடம் உரையாடிக் கொண்டிருக் கிறார். அசோகர் சொல்கிறார். "தெளிந்த நீரோடை போன்ற என் மனத்தை அறிவு எனும் கல்லெறிந்து கெடுத்துவிடாதீர் பிட்சுவே" என்று. அதற்கு பிட்சு சொல்கிறார், "உலகில் கெடுக்க முடியாத நபர்களே இல்லையப்பா. கேவலம், வெள்ளிப் பணத்துக்காக உடலின்பத்தை அள்ளி அள்ளி வீசும் ஒரு விலைமாதைக் கூட கெடுத்து விடலாம், ஒருவன் நல்ல உள்ளத்தோடு அவளைத் திருமணம் செய்து கொள்வதால்" என்று. இது ஒரு புதிய பார்வை. கெடுத்தல் என்பது நல்லவனைத் தீயவனாகக் கெடுப்பது மட்டுமல்ல. தீயவனை நன்மை செய்து நல்லவனாக மாற்றுவதும், அவன் போக்கிலிருந்து கெடுப்பதும்தான். இன்று நமக்குத் தேவை இந்த உணர்வுதான். தீைமையே வாழ்க்கை, தவறுகளே தங்கள் வழி என்று இருக்கும் மக்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டு நல்லவர்களாக நேர்மையாளர்களாக மாறி நல்ல வழி நடப்பதுதான் நாட்டின் கேடுகளுக்கெல்லாம் அருமருந்து.

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்

தன்மானத் தமிழன் விவசாயி விஜயகுமார்
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில் மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதாதுறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது.

எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.

நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் ஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான். இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார். டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார். அந்தக் கடிதத்தில் கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

யார் இந்த நிர்ரா ராடியா?

யார் இந்த நிர்ரா ராடியா?

2G அலைக்கற்றை ஊழல் ஊடகங்களில் வெளியான பிறகு ஆண்டிமுத்து ராசாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய அளவில் பேசப்படும் பெயர் நிர்ரா ராடியா என்பதாகும். யார் இந்தப் பெண்மணி? மிகப்பெரிய தொழிலதிபர்களுக்கும், பெரிய அரசியல் வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தில் பெரும் புள்ளிகளுக்கும், ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் பல பிரபலங்களுக்கும் இவர் எப்படி இந்த அளவுக்கு நெருக்கமாக ஆனார்? நூறு கோடிக்கும் அதிகப்படியான மக்கட் தொகையுள்ள இந்திய அரசியலில் இந்த ஒரு பெண்மணி குறுக்குச்சால் ஓட்ட முடிந்தது எப்படி? இப்படி எதையெல்லாமோ நினைத்து மக்கள் பெருமூச்சு விடுவது தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரண மக்கள் எல்லா மட்டங்களிலும் மேலோட்டமாகத் தெரியும் விஷயங்களை மட்டும் பார்த்தும், கேட்டும், புரிந்து கொள்கிறோம். அதற்குப் பின்னணியில் ஆழப் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் நமக்கு அத்தனை சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை. அது போலத்தான் இந்த நிர்ரா ராடியா எனும் பெண்ணின் வரலாறும்.

இந்த அம்மையாரின் தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட போது மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய குடியரசில் பிரதம மந்திரிக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையான மந்திரிசபை அமைப்பதில் பல வெளியுலக சக்திகள், பெரு முதலாளிகளின் சதுரங்க ஆட்டம், அரசியல் வாதிகளின் செல்வாக்கு இவையெல்லாம் தான் இந்திய மந்திரிசபை அமைப்பதில் முக்கியத்துவம் வகிக்கின்றன என்பது நமக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசியல் சட்டம் எனும் ஆல விருட்சத்தின் ஆணி வேர் அறுக்கப்படுகிறதோ; மக்கள் ஜனநாயகம் சில முதலாளிகளின் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக ஆக்கப்படுகின்றனவோ என்றெல்லாம் அச்சம் தோன்றுகின்றது. பல கோடி ரூபாய் செலவில் தேர்தல்களை நடத்தி, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்வதாகவும்; அதன்பின் அவர் தன்னுடன் பணியாற்ற ஒரு அமைச்சரவையை அமைக்கிறார் எனவும்தான் இதுநாள் வரை நம்பியிருந்தோம். ஆனால் இப்போது பெரு முதலாளிகள் தான் இந்த வேலைகளைச் செய்கிறார்களோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. அப்படியானால் அவர்கள் தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்களா என்கிற ஐயப்பாடும் நமக்குத் தோன்றுவது இயற்கையானது அல்லவா?

இதற்கெல்லாம் காரணமாக இருந்த பெயர் இந்த நிர்ரா ராடியா? இவரைப் பற்றி எதுவும் தெரியாமலே இவரது குரலை பதிவு செய்த ஒலிநாடா மூலமாக பலருடன் பேசுவதைக் கேட்க முடிந்தது. இவரது புகைப்படம் பல பத்திரிகைகளில் வெளியானது. ஐம்பது வயதானவராகத் தோன்றும் இந்த அழகிய பெண்மணிக்கு புது டில்லியில் ஒரு ஆடம்பர தோட்ட பங்களாவும், அங்கு அடிக்கடி நடக்கும் பெரும் விருந்துகளும் பற்றியெல்லாம் இப்போது செய்திகள் வெளியாகின்றன. இவரது தொலைபேசி உரையாடல்கள் வெளியானவுடன் ஒரு இந்திய பெரு முதலாளி உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார். தங்களது உரிமை பாதிக்கப்படுகிறது என்பது அவரது வாதம். அது நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியதாகையால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் இந்த ரகசியங்களையெல்லாம் வெளியிட்டு இந்த வழக்கில் பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பத்திரிகை "அவுட்லுக்" எனும் ஆங்கிலப் பத்திரிகை. புது டில்லியிலிருந்து வெளியாகும் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வினோத் மேத்தா என்பவர். இந்தப் பத்திரிகையின் 6-12-2010 இதழில் இந்த நிர்ரா ராடியா குறித்த ஒரு கட்டுரையை சுனித் அரோரா என்பவர் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் அவர் இந்த நிர்ரா ராடியாவின் பின்புலம் பற்றியும், அவரது கடந்த கால வரலாறு குறித்தும் சில தகவல்களைக் கொடுத்திருக்கிறார். அவை படிக்கவும், அந்த அம்மையாரைப் புரிந்து கொள்ளவும், இப்போது நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பல நிகழ்வுகளில் இந்த அம்மையாரின் பங்கு பற்றியும் அறிந்து சிறிது தெளிவு பெற முடிகிறது. அதன் சுருக்கத்தை இப்போது பார்க்கலாம்.

முதலில் ஒரு சுருக்கமான முகவுரை:

ஒரு காலத்தில் நிரா ஷர்மா என அழைக்கப்பட்ட இந்த இந்திய வம்சாவளிப் பெண் 1970இல் கென்யா நாட்டிலிருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்து வடக்கு லண்டன் பள்ளியொன்றில் படித்துப் பின்னர் வார்விக் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

இவருக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர். தந்தை விமானப் போக்குவரத்துடன் சம்பந்தப்பட்டவர். நிர்ரா ராடியாவுக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உண்டு. திருமணம் முறிந்துவிட்டது. கணவர் இங்கிலாந்திலுள்ள தொழிலதிபர் ஜனக் ராடியா.

1995இல் இவர் சஹாரா விமானக் கம்பெனியின் பொதுஜன தொடர்பாளராக இந்தியாவுக்குள் நுழைந்தார். இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் பிரதிநிதியாகவும், கே.எல்.எம்., யு.கே. ஏர் ஆகிய கம்பெனிகளிலும் சம்பந்தம் உண்டு.

2000த்தில் கிரெளன் ஏர் எனும் கம்பெனியைத் தொடங்கினார். இவருடைய சகோதரிகளில் ஒருவரான கருணா மேனன் என்பவர் இதில் பங்குதாரர். ரூ.100 கோடி முதலீட்டில் தொடங்குவதாக ஆரம்பித்துத் தோல்வியில் முடிந்தது.

2001இல் புது டில்லியில் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட்டன. டாடா குழுமத்தின் 90 கம்பெனிகளின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் பொறுப்பு கிடைத்தது. 2008இல் அம்பானியின் ரிலையன்ஸுக்கும் இவருடன் தொடர்பு ஏற்பட்டது.

மேஜிக் ஏர் எனும் கம்பெனி தொடங்கும் முயற்சியிலும் 2005இல் தோல்வி. இவரிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருக்கிறது.

டாடாவின் "நானோ" மினி கார் உற்பத்திக்காக 2008இல் சிங்கூரிலும், பின்னர் 2010இல் 2G அலைக்கற்றை விவகாரங்களிலும் தலையிட்டுப் பெரும் பிரச்சினைக்குரியவராக மாறியிருக்கிறார்.

சரி! இனி, இவர் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைத் தெரிந்து கொள்வோமா? "அவுட்லுக்" பத்திரிகையில் சுனித் அரோரா தருகின்ற தகவல்கள் இதோ!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிரா ஷர்மா. ஆகாய விமான உதிரி பாகங்களை விற்கும் முகவராக இருந்த ஷர்மாவின் குடும்பம் கென்யா நாட்டிலிருந்து 1970இல் லண்டனுக்குச் சென்றது. ஷர்மா 2002-03இல் காலமாகிவிட்டார். லண்டனில் நிரா பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டும், பிறகு இந்திய வம்சாவளி என்கிற சான்றிதழும் பெற்றார். வடக்கு லண்டனில் உள்ள ஹேபர்டேஷர் அஸ்கே பெண்கள் பள்ளியிலும் வார்விக் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து லண்டன் தொழிலதிபர் ஜனக் ராடியா எனும் குஜராத்திக்காரரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் திருமணம் தோல்வியில் முடிந்தது. அதனால் இவர் தன் குழந்தைகளுடன் இந்தியாவில் குடியேற விரும்பினார். இந்தியா வந்தபின் இவரது மூன்று பிள்ளைகளில் ஒருவரான 18 வயதான கரன் என்பவர் 2003இல் நிராவின் தொழில் கூட்டாளியான தீரஜ் சிங் என்பவரால் கடத்தப்பட்ட செய்தி அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தீரஜ் சிங் யார் தெரியுமா? காலம் சென்ற முன்னாள் ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சர் ராவ் பிரேந்திர சிங் என்பவரின் பேரன். நிராவின் மகன் கடத்தப்பட்ட வழக்கில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் பேரன் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தார் என்றால் இந்தப் பெண்மணிக்கு இருந்த செல்வாக்கு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நிராவின் மற்ற உடன்பிறந்தார் பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஒரு சகோதரி கருணா மேனன் மட்டும் 2001இல் நிராவோடு கிரெளன் எக்ஸ்பிரஸ் எனும் விமானக் கம்பெனியின் பங்குதாரராக அறிவிக்கப்பட்டார். இந்தக் கம்பெனி தோல்வியடைந்தது. இங்கிலாந்தில் இந்த கம்பெனியின் பாகஸ்தர்களாக அறிவிக்கப்பட்ட மற்ற இருவர் இக்பால், சைரா மேனன் ஆகியோர், இவர்கள் ஒரே விலாசத்தில் இருப்பதாக முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் சுதேஷ் பவுண்டேஷன் எனும் நிறுவனத்தின் தலைவராக கருணா மேனனின் பெயர் இருக்கிறது. இதன் அறங்காவலர் நிர்ரா ராடியா.

இந்த சுதேஷ் பவுண்டேஷனுக்கு நிர்ரா ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் மூலதனம் அளித்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் டாடா டெலி சர்வீசஸ் அலுவலகங்கள் இருக்கும் கோபால்தாஸ் டவர்சில் இருக்கிறது. இதே கட்டடத்தின் 5ஆவது மாடியில் ரிலையன்சின் அலுவலகம் இருக்கிறது. இந்த சுதேஷ் பவுண்டேஷன் அறப்பணிகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஸ்ரீ ராம விட்டல அறக்கட்டளையோடு சம்பந்தமுடையது. இது கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆயூர்வேத கல்லூரியைத் தொடங்குவதாக இருந்தது. இது நன்கொடைகளை பெற்று வந்தது. குழந்தைகள் பராமரிப்பு, மிருகங்கள் பாதுகாப்பு, இளைஞர்கள் முன்னேற்றம், பேரிடர் துயர் துடைப்பு போன்ற பணிகள் இவர்களது நோக்கம். இப்போதைய நிலவரப்படி இந்த கருணா மேனன் டில்லியில் தனது சகோதரி நிர்ராவுக்கு உதவியாக இருந்து கொண்டிருக்கிறார்.

1990களின் மத்தியில் நிர்ராவுக்குச் சொந்தமான டில்லியில் அமைந்துள்ள சத்தர்ப்பூர் தோட்டபங்களா பல பெரிய மனிதர்கள், விமான தொழிலதிபர்கள் பங்கேற்பால் பிரபலமடைந்து வந்தது. ஏற்கனவே விமான கம்பெனி தொடங்க வேண்டுமென்கிற நிர்ராவின் ஆசை இங்கு மறுபடி துளிர்விடத் தொடங்கியது. அதன் பயனாக இவர் சஹாரா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய கம்பெனிகளின் ஆலோசகராக ஈர்க்கப்பட்டார். இந்திய வான்வெளி புதிய கொள்கையின் பயனாகப் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியிலும் பங்கு பெற்றார். விமான கம்பெனி அதிபர்கள் மத்தியில் இவருக்கு பிரமாதமான பெயர் கிடைத்தது. இவரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடத்தொடங்கியது. இவரது ஆடை அலங்காரங்களும், தோட்ட விருந்துகளும், அங்கு நடைபெறும் பூஜைகளும் இவருக்குத் தன்னை உயர்த்திக்கொள்ள பல வாய்ப்புக்களைத் தந்தன.

இந்த காலகட்டத்தில்தான் நிர்ரா ராடியாவுக்கு ஒரு முக்கியமான நண்பரும், அதே நேரம் பரம எதிரியும் கிடைத்தார். அவர்தான் பா.ஜ.க.வின் அனந்தகுமார். இவர் அப்போது 1998-99இல் தேசிய முற்போக்குக் கூட்டணியில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அமைச்சர் அனந்தகுமாரோடு இவருக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது அப்போது. அவர் மூலம் மற்ற கேபினட் அமைச்சர்களின் அறிமுகமும் கிடைத்தது. பெஜாவர் மடத்தின் அதிபர் சுவாமி விஸ்வேஷ் தீர்த்தருடன் அறிமுகம் செய்து வைத்ததும் அனந்தகுமார்தான். இந்த சுவாமிதான் உமா பாரதியின் குரு. பெங்களூரிலிருந்து வெளியான லங்கேஷ் பத்திரிகா எனும் கன்னட பத்திரிகையில் பெஜாவர் மட சுவாமியுடன் வாஜ்பாய், நிர்ரா ராடியா ஆகியோர் இருக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதன் பிறகு பெஜாவர் மட சுவாமிகளுடனான உறவு நிர்ராவுக்கு விட்டுப் போனாலும், இந்தத் தொடர்பு மூலம் வாஜ்பாய் அவர்களின் மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவின் நட்பு கிடைத்தது.

இதன் பிறகு NDA ஆட்சியில் அனந்தகுமார் நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்ட போது, நிர்ரா ராடியா தனது பண்ணை இல்லத்தில் நடத்திய விருந்துகளுக்கெல்லாம் அரசுடமையான அசோகா ஓட்டலிலிருந்துதான் இந்திய சுற்றுலாத் துறை மூலம் உணவுகள் கொண்டுவரப்பட்டன. அனந்தகுமாருடன் இவ்வளவு நெருக்கமாக இருந்த போதும், நிர்ரா ராடியா தனது சொந்த விமான கம்பெனியைத் தொடங்கும் கனவு 2001இல் நிறைவேறவில்லை. சிங்கப்பூர் ஏர்லைன்சை பின்புற வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரும் முயற்சிதான் நிர்ராவின் இந்த விமான கம்பெனி தொடங்கும் முயற்சி என்று சொல்லுகிறார்கள்.

2004இல் அமைச்சர் பிரபுல் படேல் காலத்திலும் இவர் மேஜிக் ஏர் கம்பெனியைத் தொடங்க முயற்சிகள் மேற்கொண்டதும் நடக்கவில்லை. சமீபத்தில் ரத்தன் டாட்டா தான் விமான கம்பெனி தொடங்க விரும்பிய போது யாரோ ஒருவர் ரூ,.15 கோடி லஞ்சம் கேட்டதாக ஒரு புகாரைத் தெரிவித்திருந்தார் அல்லவா? மூன்று முறை சிங்கப்பூர் ஏர்லைன்சுடன் கூட்டு முயற்சி செய்தும், அவரது முயற்சி தோல்வி அடைந்ததாக அவர் கூறியிருந்தார். ஒரு தனி நபர்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார். அது யார்? அது ஜெட் ஏர்வேஸ் கம்பெனி என்று கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர்கள் தான் தலைகீழாக நின்று டாட்டாவின் முயற்சிகளை முறியடித்ததாகவும் கூறுகிறார். இந்த பலமான எதிர்ப்புக்களால்தான் நிர்ரா ராடியாவின் சொந்தக் கம்பெனி கனவு தகர்ந்தது என்றும் அவர் கூறுகிறார்.

இவ்வளவுக்கும் பிறகும் நிர்ரா ராடியாவின் செயல்பாடுகள் தோல்வி கண்டும், காரியங்களை முடித்துத் தருவதில் இவர் வல்லவர் எனும் பெயர் நிலைபெறலாயிற்று. டாட்டாவின் கவனத்தை இவர் கவர்ந்தார். டாட்டா குழுமத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக மாற்றி அமைத்தார். நிர்ரா ராடியாவை டாட்டா குழுமத்தில் சேர்த்துவிட பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியாவின் சிபாரிசும் இருந்ததாகத் தெரிகிறது. அது தவிர டாட்டா கம்பெனியின் ஆர்.கே.கிருஷ்ணகுமாரின் முயற்சியும் இருந்திருக்கிறது. 2001இல் டாட்டா குழுமங்களின் 90க்கும் மேற்பட்ட கம்பெனிகளின் விவகாரங்கள் நிர்ரா ராடியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

2001இல் டாட்டா ஃபைனான்சின் குளறுபடிகளை சீர்செய்து தனது திறமையை உறுதி செய்து கொண்டார். பாஜக அரசின் உச்சகட்ட காலத்தில் இவர் அரசியல்வாதிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும், பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகத்துறை பெருந்தலைகளுடனும் தொடர்பு கொண்டார். இந்த காலகட்டத்தில் டாட்டா குழுமம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையுடன் உரசலைக் கடைப்பிடித்தது. அந்தப் பத்திரிகைக்கு டாட்டா குழுமம் விளம்பரங்களை நிறுத்திவிட்டது. அந்தப் பத்திரிகையையும் தனது செய்திகளில் டாட்டா குழுமச் செய்திகளை உதாசீனம் செய்தது. இதன் மூலம் பத்திரிகை உலகத்துக்கு நிர்ரா ராடியா டாட்டா குழுமத்தை விரோதித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதைக் காண்பித்தார்.

2004இல் பாஜக அரசு வீழ்ந்த பிறகு அரசியல் அரங்கில் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள நிர்ரா ராடியா விரும்பினார். சமீபத்திய 2G அலைக்கற்றை ஊழல் மூலம் அவரது சாமர்த்தியங்கள் மறுபடியும் வெளிப்படத் தொடங்கிவிட்டன. 2006இல் தி.மு.க.வின் ஆ.ராசாவுடனான உறவு தொடங்கியது. அப்போது அவர் சுற்றுச்சூழல் அமைச்சர். 2007இல் அவர் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆனபிறகு, டாட்டா டெலி சர்வீசஸ் மூலம் நிர்ராவுக்கு நல்ல பலன் கிடைக்கத்தொடங்கியது. இப்போது ஆ.ராசா ராஜிநாமா செய்துவிட்டதால் பல தகவல்கள் கசியத் தொடங்கிவிட்டன. ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறையில் பதவி ஏற்ற முதல்நாளே முதல்கட்டப் பலனை பெற்றார் என்று ஒரு உயர்மட்ட தொலைத்தொடர்பு அதிகாரி தெரிவிக்கிறார். அதிசயித்துப் போன ராசா உடனடியாகச் சென்னைக்குப் பறந்து சென்று திமுக பெருந்தலைகளுக்கு அதனை அர்ப்பணம் செய்தார். அவர்களுக்கு இதற்கு முன்பிருந்த அமைச்சர் ஏன் இதுபோல நடந்துகொள்ளவில்லையே ஏன் என்று சந்தேகத்தின் நிழல் படியத் தொடங்கிவிட்டது.

2007இல் ரத்தன் டாட்டா தமிழ்நாடு முதல்வர் கருணாநிதிக்கு கையால் எழுதிய ஒரு கடிதத்தில் அமைச்சர் ராசாவை ஓகோவென்று புகழ்ந்திருந்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பெரு முதலாளிகளுக்கிடையே நடக்கும் யுத்தம் துவங்கிவிட்டது. ஏர்டெல்லின் அதிபர் சுனில் மிட்டலுக்கு ராஜாவின் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. இந்த முதலாளிகள் போரில் முகேஷ் அம்பானி சிங்கூர் விவகாரத்தில் டாட்டாவை ஆதரித்ததால் பிரச்சினை மேலும் சிக்கலாகியது. 2008இல் நிர்ரா ராடியா முகேஷ் அம்பானியின் தொழில்துறை தொடர்பாளராக ஆனதால் அனில் அம்பானியின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்டார். தொலைத் தொடர்புத் துறையில் அண்ணன் தம்பிகளுக்குள் போட்டி இருக்கிறதல்லவா?

ராடியாவின் பொதுத் தொடர்பு சேவைகளுக்காக டாட்டாவிடமிருந்தும், முகேஷ் அம்பானியிடமிருந்தும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் முப்பது கோடி ரூபாய் நிர்ரா ஊதியமாகப் பெற்றதாகத் தெரிகிறது. இந்தத் தொழிற்போட்டி காரணமாக டாட்டா-முகேஷ் கூட்டணிக்கும் அனில் அம்பானி கோஷ்டிக்கும் பூசல் நிலவி வருகிறது.

சிங்கூரில் நானோ கார் உற்பத்தி தொடர்பாக நிர்ரா ராடியா முயற்சி எடுத்த காலத்தில் இடதுசாரிகளுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால் இவர் தொடர்பை உறுதி செய்து பயனடைவதற்குள் நானோ உற்பத்தி மே.வங்கத்திலிருந்து குஜராத்துக்குச் சென்றுவிட்டது. நிர்ராவின் தொலைபேசி உரையாடல்களிலிருந்து இவருக்கு ஐக்கிய ஜனதா தள தலைவர் என்.கே.சிங், உத்தவ் தாக்கரே இவர்களுடன் இருந்த நட்பு தெரிகிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மது கோடாவுடனும் இவருக்கு தொழில் முறையில் நட்பு உண்டு. மது கோடாவின் எதிர்பார்ப்பு அதிகமென்பதால் டாட்டா கம்பெனிக்கு மதுகோடா சுரங்க உரிமைகளைக் கொடுக்கவில்லை.

நிர்ரா ராடியாவுடனான தொடர்பு காரணமாக இப்போது ஓய்வுபெற்ற சில உயர்மட்ட அதிகாரிகளும் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். நிர்ரா ராடியா என்னதான் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் இவரது செல்வாக்கு பெரிதும் அடிபட்டுப் போய்க்கிடக்கிறது. இந்த தொலைபேசி உரையாடல் நாடாக்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை என்கின்றனர் சிலர். இதில் பலம்பொருந்திய பலர் மாட்டியிருப்பதால் இவையெல்லாம் நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும் என்பது இவர்களது கருத்து. ஆனால் இனி வரப்போகும் காலம் நிர்ரா ராடியாவுக்கு பெரும் சவாலாக இருக்குமென்பதில் ஐயமில்லை. வெகு நீண்ட காலம் வரை அவர் இப்போது பட்ட அடியிலிருந்து மீண்டு வருவது சிரமமாக இருக்கும். அவரது சேவைகளைப் பெற்று வந்த பெரும் தொழில்துறை முதலாளிகளுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்காது என்பது தெளிவாகிறது.

நன்றி: "அவுட்லுக்" சுனித் அரோரா.
தமிழில்: தஞ்சை வெ.கோபாலன்