மகாகவி
பாரதியார் பற்றிய பல்வேறு செய்திகள் புத்தக வடிவிலும், கட்டுரைகளிலும் வந்தவண்ணம் இருக்கின்றன.
1921 செப்டம்பர் 11இல் தனது 39ஆம் வயதில் மறைந்த பாரதியின் பெருமை பல ஆண்டுகளுக்குப்
பிறகுதான் மக்களின் கவனத்துக்கு வந்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை இப்போதுள்ள அளவுக்கு
மக்கள் போற்றவோ, புகழவோ, அவருடைய அருமையைப் புரிந்து கொள்ளவோ இல்லை என்பது வருத்தத்துக்குரிய
செய்திதான். பாரதியின் வாழ்க்கையை பல றிஞர் பெருமக்கள் ஆய்ந்து எழுதி வைத்திருக்கிறார்கள்.
அவர்களில் ரா.அ.பத்மநாபன் அவர்களுடைய பங்கு போற்றுதற்குரியது. அவர் பாரதி வாழ்ந்த நாட்களில்
நடந்த பல அரிய செய்திகளைப் பல்வேறு காலகட்டங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவைகள்
தான் இன்றளவும் பாரதியை மக்கள் மத்தியில் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாக இருந்து வருகிறது.
அவற்றில் சில செய்திகளைப் பார்க்கலாம்.
1902
முதல் 1904 வரையில் எட்டயபுரத்து சமஸ்தானத்தில் ஜகவீரராம வெங்கடேசுவர் எட்டப்ப நாயக்கர்
என்பவர்தான் மன்னராக இருந்தார். அவருடன் தான்
காசி வாசம் முடிந்து எட்டயபுரம் திரும்பிய பாரதியார் நண்பராக பழகி வந்தார். தந்தை காலமான
பின்பு தாயும் இல்லாத நிலமையில் பாரதிக்கு எட்டயபுரத்தில் எவரும் இல்லாமையால் காசியில்
வாழ்ந்த அவருடைய அத்தையுடன் அவர் காசிக்குச் சென்று விட்டார். அங்கு இருந்த சமயம் எட்டயபுரம்
மன்னர் டெல்லிக்குப் போய்விட்டுத் திரும்பும் சமயம் காசிக்கு விஜயம் செய்து, அங்கு
பாரதியாரைப் பார்த்து அவரை எட்டயபுரம் வந்து விட அழைப்பு விடுத்ததனால் பாரதி மீண்டும்
எட்டயபுரம் வந்து சேர்ந்தார்.
அப்படி
அவர் எட்டயபுரத்தில் ராஜாவுக்கு நண்பராக பழகி வந்த சமயம், ராஜாவினுடைய பழக்க வழக்கங்களுக்கும்,
பழைமை எண்ணங்களுக்கும், காசி சென்று விரிந்து பரந்த உலக அனுபவங்களை ஓரளவு புரிந்து
கொண்டு வந்திருந்த பாரதியின் பரந்த விசாலமான எண்ணங்களுடன் ஒத்துப்போகவில்லை.
பாரதிக்கு
அந்த காலகட்டத்தில் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி, மில்டன் ஆகியவர்கள் கவிதைகளில் ஈடுபாடு
உண்டாயிற்று. அவர்களுடைய ஆங்கிலக் கவிகளில் மிளிர்ந்த அழகு, நயம், உயர்ந்த இலட்சியம்,
சமத்துவம் ஆகியவை அவர் மனதைக் கவர்ந்தன.
எட்டயபுரம்
ராஜா, பழமையில் ஊறியவர், தனது அதிகாரங்கள் பற்றிய அதீத பற்றுடையவராக இருந்தார். அவரைச்
சுற்றியிருந்த புலவர்கள் அவரிடம் தரமுள்ள, நாட்டுக்கும், மக்களுக்கும் அவசியமான கருத்துக்களைப்
பற்றி விவாதிக்காமலும், பொழுதுபோக்கும் விதமாகவே பல பழைய கொச்சையான பாடல்களின் மீது
ஆர்வம் ஏற்படச் செய்து கொண்டிருந்தனர். விறலிவிடு
தூது, கூளப்பநாயக்கன் காதல் போன்ற பல சிருங்கார ரசப் பாடல்களைச் சொல்லி மன்னரை மகிழ்ச்சியில்
ஆழ்ந்தி வந்தனர். நேரடியாக மன்னரின் போக்கை விமர்சிக்க முடியாத சூழ்நிலைக் கைதியாக
இருந்த பாரதி நேரம் கிடைத்த போதெல்லாம் மன்னருடைய போக்கைக் கேலி செய்தும், நையாண்டியாக
எழுதியும் வந்திருக்கிறார். ஆனால் அப்படி அவர் பாடிய சில பாடல்கள் எதுவும் நமக்குக்
கிடைக்க வழியில்லாமல் போயிற்று.
பாரதியாருடைய
தாய் மாமன் ஆர்.சாம்பசிவய்யர் என்பவரும், குருகுகதாசப் பிள்ளை என்பவரும், பாரதியின்
உறவினர் கே.நடராஜன் என்பவரும் ரா.அ.பத்மநாபன் அவர்களுக்குத் தெரிவித்த சில கருத்துக்களின்
படி பாரதியார் அந்த காலத்தில் மன்னரை கேலி செய்து எழுதிய ஒருசில பாடல்களைப் பார்க்கலாம்.
பாரதி பாடியதாகத் தெரியவரும் ஒரு பாடல்:
“நித்த நித்தம் துயின்றெழுந்து புத்தியில்லாப் புல்லருடன்
போக்கி அத்தமித்தவுடன் விழு பணத்தை மண்ணைக் கல்லைத் தொழுதற்கோ யான் பிறந்தேன்?”
இதை ரா.அ.பத்மநாபன் தன் நூலில் வெளியிட்டிருக்கிறார்.
அதே கட்டுரையில் ரா.அ.பத்மநாபன் குறிப்பிடும் இன்னொரு செய்தி. 1904இல் பாரதியார் ஒரு
சிலேடை பாட்டைப் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் கிடைக்கவில்லையாயினும், அதன் கருத்தை
பாரதியாரின் மாமா சாம்பசிவ ஐயர் சொன்னதாக எழுதுகிறார். சுடுகாட்டுச் சாம்பலுக்கும்,
மன்னனுக்கும் ஒப்புமை காட்டி எழுதப்பட்ட பாட்டாம் அது.
இவை
தவிர சில நிகழ்ச்சிகள் பாரதியாரின் நண்பர்கள், ஆர்வலர்கள் மூலம் தெரியவந்த செய்தியாகக்
குறிப்பிடப்படுவை உண்டு. அதில் மன்னர் எட்டயபுரம் தெருவில் நகர்வலம் வருவாராம். அப்போது
அவர் வாகனத்துக்கு முன்பாக ஒரு கொம்பு வாத்தியத்தை ஊதிக் கொண்டு ஒருவன் முன்னால் மன்னர்
வருகையைப் பறை அறிவித்துச் செல்வானாம். இதைக் கேட்டு தெருவிலுள்ளோர் அனைவரும் எழுந்து
நின்று மரியாதை செய்வார்களாம். அப்படியொரு சமயம் மன்னர் வருகையை அறிவிக்க வாத்தியம்
ஊதிக்கொண்டு வரும்போது, ஆங்கொரு நண்பர் வீட்டுத் திண்ணையில் பாரதி நண்பர்களுடன் பேசிக்கொண்டு
இருந்தாராம். வாத்தியத்தின் ஓசைகேட்டு அனைவரும் எழுந்து நின்றிருந்த போது, பாரதியார்
மட்டும் அதனை கசப்போடு பார்த்து “முட்டாள்தனத்தின் முழக்கம்” எனும் பொருள்பட ஆங்கிலத்தில்
“ Proclamation of Stupidity என்று சொல்லிவிட்டு
உட்கார்ந்து விட்டாராம்.
இதை
அங்கிருந்த யாரோ ஒருவர் மன்னரிடம் போட்டுக் கொடுத்து விட, இதனால் கோபம் அடைந்த மன்னர்
உடனே பாரதியை வேலையிலிருந்து நீக்கி விட்டாராம். அன்றிரவு எட்டயபுரத்தில் யாரோ ஒருவருடைய
வீடு தீப்பிடித்து எரிந்து போயிற்றாம். அதனைக் காண அங்கு சென்ற பாரதியாரிடம் ஒருவர்
அவரை மன்னர் வேலையிலிருந்து நீக்கிவிட்ட செய்தியைக் கேட்டு துக்கம் விசாரித்திருக்கிறார்.
அதற்கு பாரதி சொன்னாராம், “ஆமாம். அன்று இலங்கையில் ஒரு ‘கவி’க்கு இராவணன் தீங்கி இழைத்தான்,
இலங்கையில் தீ மூண்டது. இன்று இங்கே ஒரு கவிக்கு எட்டயபுரம் ராஜா துன்பம் தந்தார்,
இங்கேயும் ஒரு தீ மூண்டது” என்று பதிலளித்தாராம். அனுமனைக் கவி என்று பாரதி சொல்லி
தன்னுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
1904இல்
தான் பாரதியார் எட்டயபுரத்தை விட்டு நீங்கி மதுரை சென்று அங்கு சேதுபதி உயர்நிலைப்
பள்ளியில் தமிழாசிரியராகத் தற்காலிக பணியில் அமர்ந்தார். அப்படி அவர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்
அவர் “மூட சிகாமணிகள் நட்சத்திரமாலை” என்ற பெயரில் ஒரு பாட்டை இயற்றினாராம். பாட்டு
அதில் இருந்த கிண்டலை ரசிக்கும்படி இருந்த போதிலும் நண்பர்கள் இதனால் துன்பம் வரும்
என்று கருதியதால் அதை கிழித்து எறிந்துவிட்டதாகவும் செய்தி உண்டு.
பாரதியார்
புதுச்சேரியில் வாழ்ந்த காலகட்டத்தில் 1910-11 இல் பாரதி “சின்னச் சங்கரன் கதை” என்ற
ஒரு கதையை எழுதினார். அது பின்னால் போலீசாரால் கைப்பற்றப்பட்டு காணாமல் போய்விட்டது.
பிறகு ஒரு கடையில் பழைய பேப்பர் சாமான்கள் மடிக்கப் பயன்பட்ட காகிதத்தில் அவர் கதை
இருந்து, அதன் ஒரு பகுதி மீட்கப்பட்டது என்றும், அந்தப் பகுதி வெளியிடப்பட்டு படிக்கக்
கிடைக்கிறது என்றும் தெரிகிறது. அந்த சின்னச் சங்கரன் கதை அவருடைய சுயசரிதம் போலத்தான்
இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment
You can give your comments here