கண்ணன் பாட்டு (முதல் பகுதி)
1.கண்ணன் - என் தோழன்.
ஒருவனுக்கு
அமைந்த உயிர்த்தோழன் அவனுக்கு எந்தெந்த விதங்களிலெல்லாம் உதவி செய்வானோ அங்ஙனமெல்லாம்
கண்ணன் தோழனாய் உதவி செய்கிறானாம். அப்படி கண்ணனைத் தோழனாய் அடைந்தவன் பார்த்தன் அல்லவா?
அவன் சுபத்திரையை மணம் செய்ய என்ன வழி, அண்ணன் பலராமன் தடையாக இருக்கிறாரே என்று கேட்டதற்கு
அவளை சிறையெடுத்துச் செல்ல ஓர் உபாயம் உடனே சொல்லி உதவி புரிகிறான். வில்வித்தையில்
அர்ச்சுனனுக்கு நிகரான கர்ணனைப் போரில் எப்படி வெல்வது, அவன் தர்மங்கள் அவனைச் சுற்றி
நின்று பாதுகாக்கின்றனவே இதற்கு நீதான் ஓர் உபாயம் சொல்லவேண்டுமென்று அவனைத் தஞ்சமடைந்தால்
கண்ணன் ஓர் கணத்தில் அதற்கு வழி சொல்லுகிறான்.
பாண்டவர்கள்
கானகத்தில் சுற்றித் திரிந்த நாட்களிலும், குருக்ஷேத்திர யுத்தத்திலும் உறுதுணையாக
நின்று உதவி செய்தவனல்லவா கண்ணன். அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக அமர்ந்து கீதை உபதேசம்
செய்து யுத்தத்தை மட்டுமல்ல வாழ்க்கையையும் வழிநடத்திக் கொடுத்தவன் கண்ணன். உடலுக்கு
நோய் வந்தால் உற்ற மருந்து சொல்வான், ஈனக் கவலைகள் நெஞ்சை வாட்டுகின்றபோது அதற்கு இதம்
சொல்லி ஆறுதல் கூறுவான். அவனை எப்போது அழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள்
வந்து சேர்வான்; மழைபெய்யும்போது குடை போலவும், பசி நேரத்தில் கிடைக்கும் உணவு போலவும்,
எங்கள் வாழ்வுக்குக் கண்கள் எங்கள் கண்ணன் என்று பார்த்தன் நயந்து சொல்வான்.
கேட்ட பொருளை
உடனே கொடுப்பான், கேலி செய்தால் பொறுத்துக் கொள்வான், மனம் துவண்டபோது ஆட்டங்கள் ஆடி,
பாட்டுக்கள் பாடி துயரம் தீர்ப்பான், மனதில் கொண்ட எண்ணத்தைக் குறிப்பறிந்து புரிந்து
கொள்வான், சுற்றிப் பழகும் அன்பர் கூட்டத்தில் இந்த கண்ணனைப் போல ஒரு தோழன் யாருக்குக்
கிடைப்பான்?
மனத்தில் கர்வம்
தோன்றினாலோ, அவன் சொல்லாலும் செயலாலும் நமக்கு ஓங்கி ஒரு அடி கொடுப்பான், நெஞ்சில்
கள்ளத்தைத் தேக்கி வஞ்சனை செய்தால், காறி உமிழ்ந்திடுவான், சின்னக் குழந்தையைப் போல
சிரித்து விளையாடிக் களித்திருப்பான், அவன் சொன்னபடி நடக்கவில்லை யென்றால் அவ்வளவுதான்
அவன் தரும் தொல்லைக்கு அளவே இருக்காது. அப்பேற்பட்ட கண்ணனின் நட்பு இல்லையேல் அவ்வளவுதான்
இந்த சகத்தினில் ஏது வாழ்வு?
கோபம் தலைக்கேறி
முகம் சிவக்க நிற்கும்போது ஏதோவொன்றைச் சொல்லி குலுங்கிச் சிரிக்கச் செய்திடுவான்;
ஏதோவொரு மனஸ்தாபம் ஏற்பட்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ஏதோ சொல்லி மனம் தளிர்க்கச்
செய்திடுவான்; பெரும் ஆபத்து நேரிடும் போது பக்கத்தில் நின்று அதனை விலக்கிடுவான்;
நமக்கு ஏற்படும் தீமைகளையெல்லாம் விளக்கில் விழும் பூச்சிகளைப் போல விழுந்து அழிந்திடச்
செய்திடுவான். உண்மை தவறி நடப்பவர்களை அவன் மன்னிக்கமாட்டான்; ஆனால் மற்றவர்கள் நன்மை
கருதி அவன் மட்டும் நிறைய பொய்களைச் சொல்லுவான்; பெண்மைக்குரிய இரக்கமும், எதிர்பாராத
காரியங்களைச் செய்வதால் பித்தனைப் போலும், பிறருக்கு இதந்தரும் தண்மை குணங்களும் கொண்டவன்
தான் என்றாலும் சில நேரங்களில் தழலைப் போல் சுட்டு எரிக்கவும் செய்வான்.
சூதுவாதறியாத
குழந்தை மனம் கொண்டவன்; நல்லவர்களுக்கு ஒரு தீங்கும் நேராது காப்பவன்; தீயோருக்கு விஷம்போல,
நோய்போல, தீயினைப் போல கொடியவனாவான். அப்பேற்பட்ட குணநலன்களையுடைய இந்த கண்ணன் யார்
தெரியுமா? வேதங்களை உணர்ந்து தவத்தில் சிறந்த முனிவர்களின் உணர்வில் இருக்கும் பரம்பொருளே
அவன்! கீதையெனும் அறவுரை தந்து கீர்த்தி பெற விளங்கியவன். அவன்தான் என் தோழன் என்கிறார்
பாரதியார் இந்தப் பாட்டில்.
2. கண்ணன் - என் தாய்.
கண்ணனே என்
தாயாக வந்தாள். அவளது விஸ்வரூபம்தான் என்னே! குழந்தையான என்னை வானம் எனும் தன்னிரு
கைகளிலே அள்ளியெடுத்துத் தூக்கிப் பின்னர் பூமி எனும் தனது மடியிலே வைத்துத் தாலாட்டிப்
உயிரும் உணர்வுமாய்ப் பாலூட்டி மனம் மகிழும் பற்பல கதைகளைச் சொல்லி அவள் மனம் களிப்பாள்.
அடடா! அவள் சொல்லுகின்ற கதைகள்தான் எத்தகையன? இன்பம் தரும் கதைகள், ஏற்றமும் வெற்றியும்
தரும் சில கதைகள், துன்பச்சுவை நிரம்பிய கதைகள், தோல்வி வீழ்ச்சி எனும் கதைகள், என்
வாழ்வின் பருவங்களுக்கேற்ப பொருத்தமான கதைகள் இப்படிப்பலப்பல சொல்லிக்கொண்டே யிருப்பாள்.
மனம் பரவசத்தில் திளைக்கும்.
குழந்தையாம்
எனக்கு அந்தத் தாய் காட்டும் விளையாட்டுகள்தான் எப்படி? சந்திரன் என்றொரு பொம்மை, அதிலிருந்து
தண்மையும் அமுதத்தின் சுவையும், பரந்து விரிந்த மேகக்கூட்டத்தோடு கூடிய மிக அழகான பொம்மை
அது. பூமிக்கு இனிமைதருவது மழை. அந்த மழையைக் கொடுக்கும் சூரியன் என்றொரு பொம்மை, அந்த
சூரியனின் முகத்தின் ஒளி அதனை விளக்க வார்த்தைகள் இல்லையே! வானவெளியெங்கும் வெள்ளி
மணிகளை வாரி இரைத்தாற்போல நட்சத்திரக் கூட்டங்கள், அவற்றை எண்ணி எண்ணி மாளாமல் விட்டுவிட்டேன்.
அடர்ந்த கானகத்தில் மோனத்தில் ஆழ்ந்தவைபோல் அசையாமல் அமர்ந்திருக்கும் மலைகளின் கூட்டம்.
நல்ல நல்ல நதிகள், அவை நாடெங்கும் ஓடி விளையாடி வரும். மெல்ல மெல்ல விளையாடிக்கொண்டே
விரிந்த கடலில்போய் விழும்; அந்த கடல் பொம்மையோ மிகப் பெரிது. அதற்கு எல்லையே காணமுடியவில்லை.
அதன் மீது வீசுகின்ற அலை பாட்டு இசைக்கின்றது, அந்தப் பாட்டு 'ஓம்' என்று என் காதில்
ஒலிக்கின்றது.
பூமியின் மீதுதான்
எத்தனை சோலைகள்; காடுகள்; அவைகளில்தான் எத்தனையெத்தனை வண்ண மலர்கள்; மரங்களிலெல்லாம்
கனிவகைகள் இப்படி எத்தனை பொம்மைகள் எனக்கு. தின்பதற்குப் பண்டங்கள், செவிகளுக்கு நல்ல
பாடல்கள்; பழகுதற்கு நல்ல தோழர்கள் அதுமட்டுமா "கொன்றிடுமென இனிதாய், இன்பக் கொடு
நெருப்பாய், அனற் சுவையமுதாய் நன்றியல் காதலுக்கே இந்த நாரியர் தமை எனைச் சூழவைத்தாள்".
வானில் திரியும்
பறவைகள்; நிலத்தில் திரியும் விலங்குகள், கடல் முழுதும் மீன் வகைகள் இப்படி எத்தனை
வகை தோழர்கள் அன்னை எனக்களித்தாள். எங்கெங்கு காணினும் இன்பமடா! அதை நினைத்துப் பார்க்கவும்
கூடுவதில்லை. கோடி வகை சாத்திரங்கள் வைத்தாள் அன்னை அவைகளை அறிந்திடும் வகை ஞானம் வைத்தாள்,
இவைகளுக்கிடையே நான் வேடிக்கையாய் சிரித்து மகிழ்ந்திடவே இடையிடையே பொய் வேதங்களையும்,
மதக் கொலைகளையும், அரசர்கள் செய்யும் கோமாளிக் கூத்துக்களையும், வயதில் முதிர்ந்தோர்
சிலர் செய்யும் பொய்க்காரியங்களும், இளையோர் தம் கவலைகளையும் அன்னை இங்கே படைத்து வைத்தாள்.
வேண்டியதனைத்தையும்
அன்னை கொடுத்திடுவாள்; அவை வேண்டுமென நான் நினைக்குமுன்பாக அவை எனக்குக் கிடைத்திட
வகை செய்வாள்; அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பாள்; அர்ச்சுனனைப் போல என்னை ஆக்கிடுவாள்;
அந்த அன்னையை அவளது அருளை என்றென்றும் நான் பாடுகின்ற தொழிலைச் செய்வேன்; அப்படிச்
செய்துகொண்டேயிருக்கும் எனக்கு அவள் நீண்ட புகழ்மிக்க வாழ்க்கையையும், நிகரற்ற பெருமைகளையும்
அள்ளியள்ளித் தருவாள்.
3. கண்ணன் - என் தந்தை.
என்னை இந்த
பூமிக்கு அனுப்பியவன் யார் தெரியுமா? என் தந்தை. எனக்கு தம்பிமார்கள் உண்டு. அவர்கள்
புத மண்டலத்திலே இருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில்தான் எத்தனை யெத்தனை கிரகங்கள்.
அவைகள் நியமித்த வரைமுறையோடு நித்தநித்தம் உருண்டு கொண்டிருக் கின்றன. இங்கெல்லாம்
எங்கள் இனத்தார் இருக்கின்றார்கள். இவர்களையெல்லாம் படைத்த சாமியாம் என் தந்தையைப்
பற்றிய வரலாற்றைச் சிறிது சொல்லுகின்றேன்.
கணக்கற்ற செல்வம்
படைத்தவன் என் தந்தை, அவன் சேமித்து வைத்திருக்கும் பொன்னுக்கோர் அளவில்லை. கல்வியில்
மிகச் சிறந்தவன், அவன் படைக்கின்ற கவிதையின் இனிமைக்கோர் அளவில்லை. இவ்வளவு பெருமைகள்
இருந்தாலும் அவனுக்கு அடிக்கடி ஒரு கிறுக்குப் பிடித்து விடும். நல்ல வழியில் நேர்மையாக
நடப்பவர்களை மனம் நொந்து போய் மனம் தளரும் அளவுக்கு சோதனைகள் செய்துவிடுவான். அவன்
பெயரைச் சொல்ல நா தயங்குகிறது. எங்களுக்கு ஈசன் எனலாமா? அல்லது கண்ணன் எனலாமா? அவனுடைய
பெயரை மூன்று வகையாகச் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வகைக்காகவும் சிலர் சேர்ந்து சண்டைகள்
செய்வார்கள். அவன் பிறந்தது தேவர் குலம் என்பர் சிலர். பிறந்தது மறக் குலத்தில், பேதமற
வளர்ந்தது இடைக்குலத்தில், ஆனால் அவன் மேன்மையானவன் மிக உயர்ந்தவன் என்று பெயர் பெற்றது
பார்ப்பன குலத்தில். அவனுக்கு செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு. அவன் நிறம் நல்ல
கருமை, ஆனால் நேயத்தோடு அவன் பழகுவது பொன் நிறப் பெண்களொடு. பொய்யான சாத்திரங்களைக்
கண்டு எள்ளி நகையாடுவான்.
அவனது தோழர்கள்
ஏழை மக்கள்; செல்வம் படைத்த காரணத்தால் செறுக்குடையார் பால் சீறி விழுவான். எத்தனை
துன்பம் வந்தாலும் மனம் தளராமல் அதனை எதிர்த்துப் போராடுவோர்க்கு செல்வங்களை அள்ளிக்
கொடுப்பான். நேரத்துக்கு நேரம் அவனது புத்தி மாறும். ஒரு நாள் இருந்தது போல் மறு நாள்
இருக்க மாட்டான். ஒருவரும் இல்லாத இடம் தேடி ஓடிவிடுவான், பாட்டு கேட்பதிலும் கதை கேட்பதிலும்
தன் நேரத்தைச் செலவிடுவான்.
இன்பமே நன்று,
துன்பம் இனியதல்ல என்று அவன் பேதப்படுத்திப் பார்ப்பதில்லை. அன்பு மிகுந்தவன், உயிர்க்குலம்
முழுவதும் தெளிந்த அறிவு பெற அன்பாக செயல்புரிவான்; அவனுக்கு ஒரு அமைச்சன் உண்டு அவன்
பெயர் விதி. முன்பு என்ன விதித்திருந்தானோ அதனை தவறாமல் நடக்கச் செய்வான் அவன். அவன்
ஒரு மாலை கோர்த்து வைத்தான், அவை வேதங்கள் எனப்படும். அந்த வேதங்கள் மனிதர் பேசும்
மொழியில் இல்லை. ஆனால் இப்புவியில் சிலர் சொல்லுகின்ற வெட்டிக் கதைகளில் வேதம் இல்லை.
பூமியில் நான்கு குலங்களை அமைத்தான் நல்ல நோக்கத்தோடு, ஆனால் அவற்றை மூட மனிதர்கள்
நாசப்படுத்தி விட்டனர். சீலம், அறிவு, கருமம் இவைகளில் சிறந்தோர் குலத்தில் சிறந்தவராம்;
மேலோர் கீழோர் என்று பிறப்பினால் பிரிக்கப்படும் போலிச் சுவடிகளை தீயிலிட்டுப் பொசுக்கிவிட்டால்
எவர்க்கும் நன்மை உண்டாம்.
அவனுக்கு வயது
முதிர்ந்தாலும் வாலிபக் களை மாறவில்லை. அவனுக்குத் துயரம் கிடையாது, மூப்பு கிடையாது,
சோர்வு என்பது அவனுக்கு இல்லை, நோய்கள் அவனைத் தீண்டுவதில்லை; பயம் என்பதே இல்லை அவனுக்கு,
அவன் யாருக்கும் பரிவதில்லை. எவர் பக்கமாவது நின்று எதிர்ப்பக்கம் துன்பம் தருவதில்லை.
நடுநிலையோடு நடந்துகொண்டு அனைவருக்கும் நன்மை செய்து எல்லாம் விதிப்படி நடப்பதைக் கண்டு
மகிழ்ந்திடுவான். துன்பப்படுபவர்களை அரவணைத்து அன்பு காட்டுவான், அன்பைக் கடைப்பிடி
துன்பங்கள் பறந்து போகுமென்பான். எல்லோரும் இன்பம் அடைந்திட விருப்பமுறுவான்.
(கண்ணன் பாட்டு - தொடரும்)
No comments:
Post a Comment
You can give your comments here