|
ஒவ்வொருவனுக்கும் மூன்றுவிதச் சக்தி வேண்டும்:
1. அறிவு, 2. செல்வம், 3. தைரியம். இந்த மூன்றும் நமக்கு இஹலோகத்திலே
கிடைக்கும்படியாகவும் இதனால் பரலோக இன்பங்களுக்கும் சாத்தியமாகும்படியாகவும், நாம்
தெய்வத்தை வழிபடுகிறோம். முக்திக்கு, மாத்திரமே தெய்வத்தை நம்புவது சிலருடைய வழி;
இஹலோக இன்பங்களுக்கும் தெய்வமே துணை என்று நம்பி, இன்பங்கள் வேண்டுமென்று தெய்வத்திடம்
கேட்டுவாங்கிக் கொள்வது மற்றொரு வழி. சுந்தரமூர்த்தி நாயனாருக்குப் பரமசிவன் என்னவெல்லாம்
செய்தார்? அர்சுனன் தனக்குச் சுபத்திரையை வசப்படுத்திக் கொடுக்கும்படி யாரிடத்தில்
கேட்டான்?ஸ்ரீீகிருஷ்ணனிடத்திலே கேட்டான். ஸ்ரீகிருஷ்ணன் சுபத்திரையைக் கவர்ந்து
செல்வதற்கு வேண்டிய உபாயங்கள் காட்டினார். ஆம், தெய்வம் எல்லாம் செய்யும்.
இஹலோகத்தில் எல்லாவிதமான இன்பங்களும் நமக்கு வேண்டும். அவற்றை வசமாக்குவதற்கு
அவசியமான அறிவுத்திறனை நமக்குத் தரும்படி தெய்வத்தைக் கேட்கிறோம். "தெய்வமே,
நான் தூங்குகிறேன். நீ எனக்கு மாம்பழம் கொடு" என்று கேட்கவில்லை. "தெய்வமே
! தெய்வமே! மாம்பழ விஷயத்தில் எனக்கு இத்தனை ருசி ஏற்படுத்திக் கொடுத்த
தெய்வமே! உனக்குப் புண்ணிய முண்டு. மா விதை எங்கே அகப்படும்? ஒட்டு மாஞ்செடி
எப்படி வளர்ப்பது?சொல்லு. பாடுபடச் சம்மதம்; காத்துக் கொண்டிருக்கச் சம்மதம். ஆனால்
மாம்பழம் கொடுத்துத் தீரவேண்டும். நீ தானே இந்த ருசியை ஏற்படுத்தினாய்?" என்று
கேட்கிறோம். இது நியாயமான கேள்வி. தெய்வம் உதவி செய்யும்.
விக்கிரமாதித்யன் வணங்கிய தெய்வம்; காளிதாஸனுக்குக் கவிதை காட்டிய தெய்வம்;
பாரத நாட்டு மஹாஜனங்கள் இன்னும் தலைமையாகக் கொண்டாடும் தெய்வம்; ஸ்ரீ மந்நாராயண மூர்த்தியின்
சக்தியாக விளங்கும் லக்ஷ்மி தேவதை; சிவபிரானுடைய வலிமையாகத் திகழும் பார்வதி, பிரமதேவன்
தலைவியாகிய சரஸ்வதி; மூன்று மூர்த்திகள்; மூன்று வடிவங்கள்; பொருள் ஒன்று; அதன் சக்தி
ஒன்று; பொருளும் அதன் சக்தியும் ஒன்றே. இங்ஙனம் ஒன்றாக விளங்கும் சக்தி என்ற தெய்வத்தை
ஹிந்துக்கள் உபாஸனை செய்வதற்கு விசேஷப் பருவமாக இந்த நவராத்திரியின் காலத்தை வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
காரணம் என்ன?
பராசக்தி மழையருள் புரியும் சரத்காலத்தின் ஆரம்ப மென்று கருதியா? சரத்காலம்
நம் நாட்டில் ஒன்று போல எல்லாப் பகுதிகளிலும் தொடங்கவில்லை யாயினும், ஓரிடத்திலே
தோன்றிய திருவிழா நாடு முழுவதும் பரவியிருக்கலாம்.
'மஹாளய அமாவாஸ்யை' என்பது யோகாநுபவத்தில் மரணத்திற்குப் பெயர். அதைத்தப்பிய
புதிய உயிர் கொண்டவுடன், சேர்ந்தபடியாகப் பல நாள் பராசக்தியை இடைவிடாமல் உபாஸனை செய்ய
வேண்டுமென்ற கொள்கையின் அறிகுறியாக இருக்கலாம். "கும்பகோணம் சங்கராச்சாரிய மடத்திலிருந்து
பாரிகைகளுக்கு வந்த தந்தி ஒன்றிலே நவராத்திரி பூஜைக்குப் புராணப்படி முகாந்தரம் சொல்லப்பட்டிருக்கிறது.
நவராத்திரி காலத்தில் தேவி (யோகமாயை) லக்ஷ்மி, ஸரஸ்வதி, துர்க்கை என்று மூன்று விதமாக
அவதாரம் செய்து பல அசுரர்களை அழித்ததாகவும் அது முதல் வருஷந்தோறும் நமது தேசத்தில்
இந்தத் திருவிழா நடந்து வருவதாகவும் மடத்தார் தந்தியில் விளக்கப்பட்டிருக்கிறது.
இது புராண ஐதீகம். இதற்குப் பொருள் அத்யாத்மம். பராசக்தி எங்கும் இருக்கிறாள். எப்போதும்
அவள் இருக்கிறாள். தொழிலே உலகம். அவளே உலகம். குழந்தைகளும் ஸாமான்ய ஜனங்களும் அவளைச்
சிலையென்று நினைக்கிறார்கள். அவள் சிலையில்லை. உண்மையொளி. அது கோயிற் புறத்திலே மாத்திரம்
இல்லை:- அகத்திலும் இருக்கிறது. கடல் அசைப்பது; பாதாளத்தின் கீழே மற்றொரு பாதாளம்;
அதன் கீழே ஒன்று. அதன் கீழே ஒன்றாக எல்லையின்றிப் பரந்த திசை முழுதையும் கவர்ந்தது.
எப்படிப் பார்த்தாலும் ஆரம்பமில்லாமலும், எப்படிப் பார்த்தாலும் முடிவில்லாமலும்
இருக்கும் அற்புத வஸ்து.
கோடானகோடி அண்டங்களை ஒரு சிறு மூக்கினால் உடைப்பது.
ஒரு சிறிய மலரின் இதழிலே வர்ணம் தீட்டுவதற்குப் பல்லாயிர வருடங்கள்
இருந்து பழகும் நெடுநேர்மை கொண்டது; பெரிதும் சிறிதுமாகிய முதற்பொருள்; பராசக்தி.
இதனைத் தியானத்திலே நிறுத்துகிறோம். இதனை நாவிலே புகழ்ச்சி புரிகின்றோம்.
செய்கையில் இதனைப் பின்பற்றுகிறோம். நமது மதி தெய்வமாகின்றது. நமது நாவு புதிய வலிமையும்
மஹிமையும் பெறுகின்றது. நமது செய்வினை தர்மமாகின்றது. ஒரே வார்த்தை; சக்தியை வேண்டினால்
சக்தி கிடைக்கும். "கேட்டது பெறுவாய்" என்று யூத நாட்டு மரியம்மை பெற்ற
கிருஸ்து சித்தர் சொல்லுகிறார்.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
No comments:
Post a Comment
You can give your comments here