நமது குடும்ப ஸ்திரீகளின் பாட்டிலே முக்கியமான குறை என்னவென்றால் இவர்களிலே
பெரும்பாலோருக்குத் தாள ஞானமில்லை.
பெண்களுக்குத் தாளஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும்
இயற்கையிலே அவர்களுக்கு "லயவுணர்ச்சி"கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாக
நினைக்கிறார்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள் 'டணீர், டணீர்' என்று
எப்படித் தாளம் விழுகிறது. நமது பெண்கள் கீர்த்தனங்கள் முதலியவற்றை தாளமில்லாமற் பாடுவதற்குக்
காரணம் பயிற்சிக் குறைவேயல்லாது வேறொன்றுமில்லை. அவர்களுக்கு நாம் சரியானபடி பாட்டுக்கற்றுக்
கொடுப்பதில்லை.
"தாஸிகளா? கச்சேரி நடத்தப் போகிறார்களா? தாளம் தவறாமல் பாடி என்ன
ஆகவேண்டும்?" என்று சிலர் பேசுவதுண்டு. தாளம் தவறிப் பாடினால் காதுக்கு விரஸமாக
இருக்கும். ஜனங்களுக்குப் பிரிய முண்டாகாது. வீட்டிலும் அதே காரணந்தான். எனதுமகள்
பிழையாகப் பாடினால், பக்கத்தில் இருந்து கேட்கும் எனதுகாதுக்கு ஸுகப்படாது. அவளுக்கும்
பாட்டில் நல்ல ருசி ஏற்படாது.
பெண்கள் பாடவே கூடாதென்று ஒரேயடியாக நிறுத்தி விட்டீர்களானால் ஒரு தொல்லையுமில்லை.
பிறகு உலக வாழ்வுமில்லை. கல்யாணப் பாட்டுக்களும், தாலாட்டுப் பாட்டுக்களும், காதற் பாட்டுக்களும்
நின்றுபோனால், பிறகு சுடுகாடுதான் மிச்சமிருக்கும். அப்படி நிறுத்த வேண்டுமென்று
எவனும் விரும்பமாட்டான். ஆண்களைப் போலவே பெண்களும் எப்போதும் பாடத்தான் செய்வார்கள்.
ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு ஸங்கீதத்திலே அதிகத் தொடர்பு உண்டு. "செய்வன திருந்தச்செய்."
பாட்டுப் பாட விரும்புவோர் நல்ல பாட்டிற் பழகவேண்டும். பாட்டுக் கேட்க வழி தேடவேண்டும்.
பாட்டினால் மகிழ்ச்சி உண்டாகிறது. லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படுகிறது; உபசாந்திபிறக்கிறது.
|
சுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.
No comments:
Post a Comment
You can give your comments here