பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, February 18, 2020

லக்ஷ்மி ராமாயணம் --- பாகம் 2


லக்ஷ்மி ராமாயணம்  (அயோத்யா காண்டம் தொடர்ச்சி)

               
                      3. கைகேயி சூழ்வினைப் படலம்

முடிசூட்டு நிகழ்ச்சியின் முன்னேற்பாடுகளை
முறையாக முடித்து விட்ட மாமன்னன்,
இன்சொல் பேசிடும் கைகேயி மாளிகையுள்
பின்னிரவு நேரத்தில் புன்னகையுடன் நுழைந்தார்.      37

பஞ்சணை துறந்தவள் படுத்திருந்த நிலைகண்டு,
நெஞ்சம் பதறிய தசரதனும் – சிறு
மானைத்தன் துதிக்கையால் தூக்கிடும் பெரிய
யானையைப் போலே அணைத் தெடுத்தார்.                38

அணைத்த கைகளை அப்புறப்படுத்தியே
துவண்டு விழுந்தாள் மின்னற்கொடியாள்.
துணுக்குற்ற தசரதன், துரிதமாய் வினவினான்,
“நிகழ்ந்தது என்ன? உனை இகழ்ந்தவர் யாரெ”ன?      39              

கண்ணீர் பெருகிய நெடுங்கண்ணுடனவள்,
‘என்பால் கருணை உளதென்றால் – நீ
முன்னம் அருளிய வரங்கள் இரண்டையும்
இன்றே பரிந்து அளித்திடு’ யென்றாள்.                        40

                        மன்னன் வாக்களித்தல்

கள்ளம் கொஞ்சமும் இல்லா மன்னனும்,
‘வள்ளலாம், நும்மகன் இராமன்மேல் ஆணையுடன்,
உள்ளமிசைந்திட அளிப்பேன் வரங்களை!’ என்ன,
‘இமையோர் சான்றாய் ஈன்ற வரம் ஈதி! யென்றவள்-   41

வரமொன்றால் தன்சேய் பரதனுக்கு நாடென்றாள்!
வரமிரண்டால் சீதையின் கணவனுக்கு வனமென்றாள்.
வேகமிழந்த வேழம் போலே தசரதனும்,
தேகமதிர, நெடிது வீழ்ந்தான் நிலம் மீதே!                    42

உலர்ந்து வெடித்த தவன் நாவு!
புலர்ந்து வாடிய தவன் உள்ளம்!
புலனைந்தும் பொறி கலங்கியது.
புலம்பிப் புழுங்கினர் தேவர்கள்.                                  43

                              மன்னரது வேண்டுகோள்

‘நின்மகன் பரதன் இவ்வரசு கொள்ளான்!
அன்னான் கொள்ளினும் இந்நிலம் நள்ளாது.
வனத்திடை இராமனை மூவுலகார் கொள்ளார்.
மண்ணை நீகொள்! மற்றது மற’வென்றான்.                 44

‘’தந்த வரங்களைத் தவிரென்பது,
தவறன்றி, அறமாமோ உரை’ கைகேயி உரத்துக் கூறிட,
இடிதாக்கிய மால்வரை போலே தசரதன்,
பொடிந்து உதிர்ந்தான் தரைமேலே!                              45

                      கைகேயி கூற்று

பசையற்ற கைகேயி, திசையினின்று வழுவாமல்
‘இசைந்திடுக இருவரம் ஈந்தேனென!
மசியாவிடில் உயிர் மாய்வேன் நானெ’ன்றதும்,
‘ஈந்தேன், ஈந்தேன்’ யென்றபடி மூர்ச்சித்தான்                 46

                      சூரியோதயம்

பொழுது புலர்ந்து, பறவைகள் ஒலித்ததும்,
அமிழ்து உண்டிட குமிழும் அமரர் போல்,
அரச வெள்ளம் நகரமெங்கும் பெருகிவர
பாரகர்கள் வந்தடைந்தார் வேத மோத!                           47

மண்டபமடைந்த வசிட்ட முனிவரும்,
மனமகிழ்வுடனே மகுடம் சூட்டிட,
மங்கலப் பொருட்களைச் சேகரித்தார். – பின்
மன்னனை யழைக்க சுமித்ரனைப் பணித்தார்.                 48

வேந்தனை எங்குமே கண்டிலா சுமித்ரன்,
தாதியை வினவியே விவர மறிந்தான் - பின்
கேகயி மாளிகை யடைந்ததும், அவளோ
‘இராமனை இவ்விடம் கொணரெ’ன்றாள்.                       49

அன்னை அழைத்ததும், அரசர்கள் தொடர்ந்திட,
அரண்மனைக்குள்ளே நுழைந்தான் இராகவன்
தேரினில் ஏறியே குமரன் சென்றதை,
குழுமிய மக்களும், மகிழ்ந்து பார்த்தனர்.                           50
.                    
தாயை வணங்கிய தமையனின் எதிரில்,
தனியளாய் வந்தாள் சிற்றன்னை!
நாயகன் ஆணை உனக்கென்றே
நயந்தா ளிரு வரங்களைப் பின்வருமாறு!                           51

“ஆழிசூழ் உலகெலாம் பரதனே ஆளவேண்டும் - நீ
தாழிரு சடைகளுடன் அருந்தவங்கள் புரிந்தவண்ணம்
புழுதியுடை கானகத்தில் புண்ணியத் துறைகளாடி,
ஏழிரு ஆண்டின்பின் வாவென்றான் அரசனெ”ன்றாள்.      52

‘மன்னவன் ஆணை’ தானென இல்லை!
நும் பணி ஏற்றலும் என் கடனே!
பின்னவன் பெற்றிடும் அரசென்றால் – அதை
எண்ணிட என்மனம் நிறைகின்றதே!                                   53

இருளுடை உலகினைத் தாங்கலி லிருந்து
அவிழ்ந்ததைப் போலே உணர்கின்றேன்!
நும்பணி தலைமேல் கொள்ளு கின்றேன்.
இப்போதே வனம் செல்வேன்" என்றான் இராமன்.            54

                    நகர் நீங்கு படலம்
வெண்கொற்றக் குடை தாங்கி, விண்ணதிர
பொன்மகுடம் தரித்தபடி தனை தரிசிக்க
அருமைந்தன் வருவானென கோசலைத்தாய்
அகமகிழ முகம்மலர்ந்து அமர்ந்திருந்தாள்                           55

இழைக்கின்ற விதி முன்னே சென்றிட
அறம் வருந்திப் பின்தொடர்ந்து வந்திட,
குழைகின்ற கவரியின்றி கொற்றமின்றித்,
தனியனாய் மைந்தன்வர பரிதவித்து வினவினாள்.             56

கரம்குவித்த ராமன், “நின் காதல் திருமகன்
பரதனேயின்று மாமுடிதரிக்க உள்ளான்’ யென்றதும்,
“நன்றே நீ நானிலம் நல்கிய தென்றும்,
ஒன்றி உடன்பட்டுப் பல்லாண்டு வாழெ”ன்றாள்.                57

‘மரவுரி தரித்து நான் மாதவத்தோருடன்,
காட்டிடை வாழ்ந்து ஏழிரு ஆண்டின்பின்
மீண்டு வருதலே அரசகட்டளை’ இராமன் சொன்னதும்,
ஏங்கி இளைத்தாள்; மனம் வீங்கித் தவித்தாள்.                     58

“தஞ்சமாக இப்புவியைத் தாங்கிடென அழைத்தபின்,
வஞ்சனையாய் உனைமட்டும் வனத்திடையே அனுப்புதல்,
நஞ்சன்றி வேறென்ன? அருமைந்தே! – இனி
அஞ்சும் என்னுயிர் தரியாதே!’ புலம்பினாள்.                         59

                    கோசலையை இராமன் தேற்றுதல்
‘அன்னையே!
ஐம் பூதங்களும் அழிந்து போயினும்,
அண்ணலின் ஏவல் மறுக்க லாகுமோ?
சிறந்த எந்தம்பி அரசுரிமை ஏற்கட்டும்!
குறித்த நேரத்தில் திரும்பி நான் வருவேன்.:                            60

“என்னையும் உன்னோடு கொண்டனை” அன்னை கூற,
“என்னை நீங்கி துயர் கடல் மூழ்கும்
மன்னர் மன்னனைத் தேற்றிடு நீ” யென்றவன்
சுமித்திரை அன்னையின் மாளிகை யடைந்தான்.                    61

                தசரதனைக் கண்ட கோசலையின் நிலை

‘நாடு காத்தல் பரதனது ஆகட்டும்! - இராமன்
காடு செல்லல் தடைபட வேண்டும்’ என
நாதனை வேண்டிட, கோசலை சென்றாள். – அங்கே
மூர்ச்சித்திருந்த மன்னனின் மார்பினில் மூர்ச்சித்தாள்.             62

தெளிவு பெற்றதும் கலங்கிப் புலம்பினாள்.
ஒளிகுன்றி நினைவின்றி மன்னன் கிடத்தலின்,
“இராமா, இராமா’ வென அழுகுரலில் உரத்தழைத்தாள்.
வாராய் மன்னன்தன்மை காண” வென ஓலமிட்டாள்.             63

                  வசிட்ட முனிவர் வருகை

மங்கலங்கள் நிகழவுள்ள அந்த வேளையில்
அமங்கலமாய் அழும் ஓசை காதில் அறைந்ததும்,
அரசர்களும் முனிவர்களும் அதிர்ச்சியுற்றனர்.
விபரமறிய வசிட்டமுனி விரைந்து வந்தனர்.                            64
                 
                  கைகேயி நிகழ்ந்தவை கூறுதல்

மயங்கித் தளர்ந்த கோசலையால்
விளக்கிச் சொல்லல் ஆகா ததனால்
மயங்கிய மாமன்னன் நிலையினைப் பற்றி,                       
கேகயர்கோன் மகள் நோக்கிக் கோரினார்.                               65

தன்னால் நிகழ்ந்த தனைத்து நிகழ்வையும்
தானே தெளிவாய் தெரிவித் தாள்;
தன்னுணர் வெய்திய தசரத மன்னனும்,
‘இராமா.. இராமா’ எனப் புகன்றான்.                                        66

                 முனிவன் கைகேயியை வேண்டுதல்

‘மனுவழி சென்றிடும் குலப்பெண்ணே! – நின்
புதல்வனுக் கரசினைப் பெற்றுக்கொள்.
வனத்திடை இராமனை அனுப்புதல் தவிர்த்து
ஏனையோர் உயிரை காத்துச் செல்’ இறைஞ்சினார்.                  67

அவளோ..
கொண்ட சொல் மாறாது வீம்பாயிருந்தாள்.
நயந்து கேட்டவர், கடிந்து கொண்டார்.
‘மன்னரும், பிறரும் மாண்டு போயிடின்,
உன்னைத்தான் உலகார் இகழ்வா’ரென்றார்.                             68




"லக்ஷ்மி ராமாயணம்", பாகம் 1


   ("லக்ஷ்மி ராமாயணம்", இது என்ன கம்ப ராமாயணம், வான்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம், இப்படி பல ராமாயணங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன லக்ஷ்மி ராமாயணம் எனும் எண்ணம் தோன்றலாம். ஆம்! இது திருமதி லக்ஷ்மி ரவி அவர்கள் எழுதிய ராமாயணம். இது கம்ப ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மிக எளிய வரிகளில் ராமாயணத்தின் சுவை குன்றாமல் எழுதப்பட்டது. இதன் பால காண்டம் ஏற்கனவே இந்த வலைப்பூவில் வெளிவந்து பல்லோரும் படித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இப்போது இந்த அயோத்யா காண்டம் வெளிவருகிறது. இதன் தொடர்ச்சி ஒருசில நாட்களில் இதே பகுதியில் வெளிவரும். தொடர்ந்து இதர காண்டங்களும் வெளிவரவிருக்கின்றன. புதிய முயற்சி, புதிய சிந்தனை, இதன் எதிர்வினை எப்படி என்பதை படிப்பவர்கள் தெரிவிக்க வேண்டுகிறோம். நன்றி.  --------------- "பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்."       

                                                  அயோத்தியா காண்டம்
                               (பிதுர் வாக்கிய பரிபாலனம் சொல்லும் படலம்)
                                      தந்தையின் வாக்கிற்கு கீழ்படிந்த படலம்

கௌசிக முனியிடம் வித்தைகள் கற்றதும்,
தாடகை வதைத்தான்; தனுசுவை முறித்தான்.
மாடத்தில் நோக்கிய நாயகி மணந்தான் - பின்
தாயகம் திரும்பினான் சீதா ராமனாய்.                                    1

அவ்வமையம் .......
கேகைய நாட்டில், பரதனின் பாட்டன்,
பேரனின் பொருட்டு நாட்டம் கொண்டே
பார்த்திடத் துடிப்பதாய் உரைத்திட வந்தான்
'உதாசித்' பெயர்கொண்ட பரதனின் மாமன்.                          2

மைத்துனனின் மொழிகேட்ட தசரதமா மன்னனும்,
வழியனுப்பி வைத்தனன் மைந்தனைத் தன்மாமனுடன் .
இணைபிரியா இளையவனாம் சத்ருக்ன இளவரசன்
துணையாகக் கிளம்பினான் துடிப்புடனே தமையனுடன்.      3

                                        மந்திரப் படலம்
          (தசரதன் தன் மந்த்ராலோசனை சபையை அடைதல்)
ஒருநாள் -
கருமைகுன்றி காதருகில் வெளுத்ததொரு கேசத்தினைக்
கண்ணுற்று தெளிவுற்றார் களிறொத்த  தசரதரும்.
நண்ணும் மூப்பு தம்மை முந்திடுமுன் மூத்தோனுக்கு
மன்னனாய் முடிசூட்டி மகிழ்வமென  முடிவெடுத்தார்.           4

மூவகை தேவருக்கும் இணையான  குலகுருவாய்
தவமுனிவர் போற்றுகின்ற மாதவத்தோன் வசிட்டருடன்
அவையமைச்சர் பெருமக்கள் அறுபதாயிரம் பேர்களுடன்
சபைதனிலே கூடியங்கு ஆலோசனை மேற்கொண்டார்.       5

“என் உணர்வொத்த அவையோரே! – எந்தன்
எண்ண மதைக் கேட்பீரே! - எனைப்
போர்க்களம் ஏனோ மாய்க்கவில்லை.
துறவற தர்மம் நான் ஏற்கவில்லை.                                         6

அருமைந்தர் நால்வரை பெருமையுடன் ஈன்றெடுத்தேன்!
திருமகள் அனையோரை அவர்கட்கு மணமுடித்தேன்! - இனி
அரசபாரம்தனை இராமன் வசம் தந்துவிட்டு – பிறவா
வரம்பெறவே தவம்புரிய முடிவெடுத்தேன்!” என்ன                7

மந்திரக்கிழவர் வசிட்டமுனி  மொழியலுற்றார்,
தந்தையாய்நீ  தக்கதே செய நினைத்தாய்! – நின்றன்
கருமமும், தருமமும் ஓங்கி உய்ய விழைந்தாய்,
அறவழியில் நின்று அரசாள்வான் இராகவன்! ஐயமில்லை”   8

                 தசரதனின் மகிழ்ச்சியும் உரையும்

எண்ணியது நிறைவேறும் எண்ணமதில் மனமகிழ்ந்து                                                  பண்பமை புண்ணியனாம் சுமித்ரனை அழைத்து  
கண்ணின் கருவிழியாம் சீதையின் கொழுநனையே
ஈண்டுவர ஆணையிட்டான் அவைக்கு ஓர்நொடியில்              9

தம்பியும், தானுமாய் வந்தடைந்த இராமனும்,
மாதவத்தோன் வசிட்டனை கரங்கூப்பி வணங்கினான் - பின்
தந்தையின் தாள் பணிந்தோனைத், தந்தையும்,
பனித்த கண்ணுடன் குனிந்து அணைத்தான்.                        10

“ஐயனே!
மூப்பினா லிங்கு தளர்ந்துவிட்டேன் உன் தந்தை
உய்வதற்கு எனக்கு உதவிடுவாய் அருமைந்தே!
மாதவத்தின் பயன்களை  யான் இனிதே பெற்றிடவே
மாமுடி புனைந்து நீ நல்லறம் புரிந்திடுவாய் என்ன            11

‘பெற்றவர் இட்ட  கட்டளை மட்டுமின்றி - இது
கொற்றவன் சாட்டிய கட்டளை யென்பதால்
உற்றவன் ஏற்பது முறையென் றுணர்ந்தவன் 
’தருதி ஆணையினை’யென உரைத்தான் உறுதியாய்.       12

அவையில் கொலுவிருந்த அனைத்து வேந்தர்களும்
உவகை மொழிகளால் வாயுற வாழ்த்தினராம்.
விவரமறிந்த தாய் கோசலையும், சுமித்திரையும்,
அரங்கனைத் தரிசிக்க ஆலயத்துள் சென்றனராம்.           13

                   மந்தரை சூழ்ச்சிப் படலம்.
                தயரதன் கணிதருக்குக் கூறுதல்

முகமன் கூறியே கணிதரை யழைத்து,
முடிபுனை நாளினைக் கணித்திடக் கோரினான்.
‘மங்கல நாளது மறு நாளெ’ன்றதும்,
பொங்கிய மனதினால் புன்னகை சிந்தினான்.                  14

                      இராமனிடம் வசிட்டர் கூறுதல்

“மானிலம் போற்றிடும் புரவலன் நாளை
நானிலம் நினக்கு நல்கிட உள்ளான்.
நல்லன சொல்லுதல் என்னுடை கடமை – அதை
நினைவில் கொள்ளுதல் நின்றன் கடனே!                         15

நீதிமைந்த!
போர்புரிதல் புரவலர்க் கழகென்பார் – ஆயினும்
எவருடனும் பகை கொள்ளலன் நீயென்றால்
போர் ஒடுங்கும், நாட்டு வளம் பெருகும்!
புகழென்றும் ஒடுங்காது நிலைத்து நிற்கும்.                       16

மைந்தனே!
மன்னுயிரைத் தன்னுயிராய்க் கொண்டிடு!
இன்சொல் உதிர்த்தபடி வறியவர்க்கு ஈந்திடு!
வினைத்திட்பம் கொண்டபடி வென்றியன் ஆகிடு!
நடுவுநிலை குன்றிடாமல் கடுந்தவம்போல் ஆண்டிடு!”       17

அறிவுரைகள் கூறியபின் மாமுனிவர் வசிட்டரும்,
முறைப்படியே சடங்குகளை முற்றுவித்தார்.
முடிசூட்டல் நாளையென்றே நகரமெங்கும்
முரசறைய தசரதனும் ஆணையிட்டன்.                               18

சேதியைக் கேட்ட நகரத்து  மாந்தர்கள்
தேவமுது உண்டதைப்போல் மனமகிழ்ச்சி யெய்தினர்
பேருவகைப் பொங்கியெழப் பாசுரங்கள் பாடினர்
பெருமையுடன் பூரித்து வாழ்த்துக்கள் தூவினர்.                 19

                           கூனியின் தோற்றம்

இராவணனின் வன் செயல்கள் ஒன்றுகூடி
உருகொண்டு வந்ததுபோல் வெளிப்பட்டாள்,
உடலின் கூனலொடு உள்ளமும் கோணலுடை
‘மந்தரை’ யென்கின்ற கைகேயி சேடியவள்.                         20

அவள்-
துடிக்கும் நெஞ்சினள்; சினமெனும் தீ
வெடிக்கும் கண்ணினள், இராகவனின்
வில்லுமிழ் மண்ணுருண்டை யொன்றினால்
அடிபட்டு, வன்மம் கொண்டாள் முன்பொரு நாள்.                21

கோலமயிலனைய கைகேயி ராணியுடைய
கோட்டைக்குள் வேங்கையாய் விரைந்து எய்தினாள்!
துயில் கொண்ட அருட்கொடியை சினத்துடனே
கையில் தீண்டி அவசரமாய் எழுப்பினாள்.                          22

“அடி பேதையே! வரவிருக்கும் பெரும்துன்பம்
அறிந்திடாமல் உறங்கினையோ?” என்று வினவினாள்.
“அரு புதல்வர் நால்வருளர் எனைக் காக்க
இடரேதும் வருமோ எனக்கெதிராக!”  பதிலுரைத்தாள்.       23

“ராணி கோசலையின் திருமகன் நாளை
மணிமகுடம் தரிக்க உள்ளான் – அவள்
வாழ்க்கைத் தரம் சிறக்கும்! – நீயோ இனி
தாழ்வடைய இருக்கின்றாய்’ சினந்தாள் கூனி/                    24

                      கைகேயியின் மகிழ்ச்சி
ஆர்த் தெழுந்த பெரு மகிழ்ச்சி
கரை புரண்டு பொங்கி யெழ,
சேதி சொன்ன கூனி கையில்,
ஆரமொன்றப் பரிசளித்தாள்.                                            25

கருத்த மனத்தினளாம் கூனியோ
உறுத்துப் பார்த்தனளாம் ராணியை
வெறிகொண்ட சிறுத்தையாய் உருமாறி,
எறிந்தனளாம் தூரத்தில் ஆரத்தைத் வீசி.                          26             
                              
                             மந்தரை கூறுதல்

சினங்கொண்ட மந்தரை வெகுண்ட வேங்கையாய் – “நின்
பிறந்த சேயொடு பெருந்துயர் அடைவாய்!
உயர்ந்த ஆசனம் இராமனைத் தாங்கிட,
உவகை நீ கொள்ளல் உவந்ததாமோ?                              27

உரிமையுள்ள நின் மகனோ நாடிழப்பான்!
அரசுரிமை ஏதுமின்றித் தாழ்ந்திருப்பான்!
பற்றவரும் பயங்கரத்தை அறிந்திடுவாய் நீ!
அறிவுறுத்தும் எனதுரையை செவிமடுப்பாய் நீ!”              28

                        கைகேயி கூறுதல்
வாயெலாம் கசப்புற வார்த்தைகளாடிய கூனியிடம்
“தீயோய்! மூத்தவனுக்கே முடியென்றும் முறைமை!
போவாய் நீ இவ்விடத்தினின்று ! – நின்
நாவை அறுத்தெறிவேன் இன்று”. என்றாள்.                    29

                       கூனி மேலும் கூறுதல்

‘நற்குணம் பொருந்திய பரதனின் நலனெலாம்
புல்லிடை சிந்திய நல்லமுது போலாகும்.
பெருமையுடன் வாழுகின்ற நீயினிமேல்
பொருளொன்றும் உரிமையின்றிப் போய்விடுவாய்!           30

பெருஞ்செல்வம் பெற்றுவிடின் மாந்தர்க்கு
அருட்குணமும் அழிந்துவிடும் போலுமிங்கே!
இரப்பவர்க்குப் பொருள் ஈயும் நிலையிருக்க - இனி
இரந்துநீ வாழ்ந்திடல்தான் வேண்டுமிங்கே!                        31

இருவருக்கும் சமமாகப் பகிர்ந்திடாமால்
ஒருமகவுக் களித்திடல்தான் முறையாமோ?
அரும் புதல்வன் இராமனென்றே இருந்தாலும்,
பரதனென்றும் அருமையிலே குறைந்தவனோ?”                 32

                        கைகேயி மனம் திரிதல்

தீய மந்தரை செப்பிய உரைகளால்
தூய தேவியின் சிந்தையும் திரிந்தது.
“உவந்தனை நீயென்னை! – என் மகன்
நீள்முடி புனையும் வழியினைப் புகலுதி” யென்றாள்.         33

                          மந்தரை சொல்லுதல்

‘நளிர் மணி நகையாளே!
சம்பரா சுரனுடன் தசரதன் புரிந்த
மாபெரும் போர்தனில் தேரூர்ந்து,
பேருதவி நீசெய்து புரவலனைக் காத்த அன்று!
அருளினான் அவனுனக்கு இரு வரங்கள் தருவதாய்!         34

அவ்வரங்கள் இரண்டினையும், இப்போது கேட்டிடு!
ஒருவரத்தால் பரதனுக்கு மணிமுடியைச்  சூட்டிடு!
பிறிதொன்றால்  பருவங்கள் பதினான்கும் இராமனை நீ,
பெரும்வனத்தில்  தவம் புரிந்திட அனுப்பிடு!’                     35

               கைகேயியின் அலங்கோல நிலை

நயந்து கூறிவிட்டு அங்கிருந்து நழுவினாள் கூனி .
சிதைந்த மனத்தினளாய் பேதலித்தாள் ராணி!
வார்குழல் கலைத்து, வளையல்கள் அவிழ்த்து
நாடகமயில்போல தரையினில் கிடந்தாள்                        36

(லக்ஷ்மி ராமாயணம் தொடர்ந்து வரும். இதன் தொடர்ச்சி சில நாட்களில் இதே வலைப்பூவில் படித்து மகிழலாம். இதுவரை படித்த பகுதி பற்றி உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.)

Saturday, February 15, 2020

நாம் மாற வேண்டும்... மாறித்தான் ஆக வேண்டும்!


     பேராசிரியர் கே.காசிம்ஐ.பி.எஸ்., (ஓய்வு)சிந்தனையாளர்மதுரை94430 52721
                                “தினமலர்” 18 ஆகஸ்ட் 2018 இல் வெளிவந்தது.
                            நாம் மாற வேண்டும்... மாறித்தான் ஆக வேண்டும்!

இன்றைக்கு இவ்வுலகத்தின் ஜனத்தொகை 760 கோடி; இந்தியாவின் ஜனத்தொகை 125கோடி; தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.21 கோடி. அதில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல மதத்தினர் வாழ்கின்றனர். நம் நாட்டில் பல மாநிலங்களிலும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சண்டையும், சச்சரவும் நடந்து கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கட்சிகளிடையே கைகலப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்த்து வந்த ஜாதியும், மதமும் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து தெறித்த கண்ணாடி போல் ஆகிவிட்டது. முகம் பார்க்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணங்கள் என்ன என்று நம் எல்லோருக்கும் தெரியாமல் இல்லை. வானத்திலும், பூமியிலும் இருப்பவை யெல்லாம் இறைவனுக்கே சொந்தம் என்பதை மறந்து விட்டோம். நம்முடைய கண்களுக்கு தெரியாத, தொடமுடியாத, எரிக்க முடியாத, வெட்ட முடியாத, நனைக்க முடியாத எல்லையற்ற பேரானந்தத்தை மறந்து விட்டோம்.

தர்மம் காக்க
          தர்மத்தை காக்கவும் அதர்மத்தை அழிக்கவும் ஒவ்வொரு யுகத்திலும் எல்லாம் வல்ல இறைவன் ஏதோ ஒரு ரூபத்தில் பூலோகத்தில் அவதரித்து அல்லவை போக்கி நல்லவை நிலை நாட்டி நம்மில் மறைந்து நிற்கின்ற, எல்லையற்ற பேரானந்தத்தையும், சொர்க்க இன்பத்தையும் கொடுத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நாம் மறந்துவிட்டோம். பகவத்கீதையை முழுமையாகப் படிப்பதும் இல்லை. புரிந்து கொள்வதும் இல்லை. அதனை படித்து ஞானத்தை நோக்கிச் செல்வதற்கும், தன்னுள் கொண்டு வருவதற்கும் நமக்கு நேரம் இல்லை, அதுகுறித்து நினைப்பதும் இல்லை.''முற்புதர்களிலிருந்தும், முள்செடிகளி லிருந்தும்  திராட்சையையும், அத்திப்பழத்தையும் சேகரிக்க முடியாது'' என்கிறது புதிய ஏற்பாடு. ''வானத்திலும், பூமியிலும் இருப்பன எல்லாம் இறைவனுக்கே சொந்தம்” என்று திருக்குர்ஆனில் சொல்லியிருக்கிறது.
அரசியல் குழப்பங்கள்

          தமிழ் நாட்டில் சமீபகாலத்தில் நடந்துக் கொண்டிருக்கின்ற அரசியல் குழப்பங்கள் ஏராளம்! ஜாதியை முன்வைத்து, சமயத்தை முன்வைத்து அரசியல் நடத்துகிறார்கள். அரசியல் என்ன என்று புரியாதவர்கள்,படிப்பு வாசனையற்ற வர்கள், ஒரு காசு கூட வரிகட்டாதவர்கள், அரசியலுக்குள் நுழைந்து, வந்ததும் வராததுமாக அரசின் சொத்துக்களை அபகரிப்பதிலேயே முழுநேரத்தையும் செலவழிக்கின்றனர். நாட்டின் நலத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி கொஞ்சம் கூடக் கவலை கொள்வதில்லை. அதிகாரிகளும் தங்களுக்கு ஏற்றவாறு கைவரிசை காட்டுகிறார்கள். கேவலமாக இருக்கிறது. பாண்டிய,சேர,சோழ மன்னர்கள் கோலோச்சிய நாடுகள் அல்லவா இது ! நமது கலை, கலாசாரங்களை மறந்துவிட்டோம்.வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. தமிழகம் எங்கே போகிறது! எப்படி போகிறது ! என்னவாகுமோ என்று நாட்டின் நலத்திலேயே நாட்டம் கொண்டவர்கள் விழிக்கின்றனர்.

பிரெஞ்சு புரட்சி
          இக்கட்டுரையை எழுதுகின்ற நான் ஒரு அரசியல் வரலாறு படித்த பேராசிரியன்,பல நாடுகளுக்குச்சென்று வந்தவன். என் கண்களுக்கு தெரிகின்ற காட்சிகளில் பிரெஞ்சு புரட்சியே முன் நிற்கிறது. நல்ல காலமும் இதுதான்; கெட்ட காலமும் இதுதான்! நம்பிக்கை நிறைந்த காலமும் இதுதான்; நம்பிக்கையற்ற காலமும் இதுதான்! எல்லாம் முன்னே சென்று கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் எல்லாம் பின்னே வந்து கொண்டிருக்கின்றது. ''நாட்டைச் சுற்றியுள்ள காடுகள் காய்ந்து கருகி நிற்கின்றன.ஒரு தீப்பொறி போதும் காட்டுத் தீப் பற்றி, காடுகளும் சுற்றியிருக்கும் நாடுகளும் அழிந்து போக” என்று நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் 'பிரெஞ்சு புரட்சி' என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். இது தான் 1789ல் பிரான்ஸ் நாட்டின் நிலை. எதிர்பார்த்த தீப்பொறி பற்றிக் கொண்டு நாடு நகரங்களை அழிக்க வல்லதாயிற்று. பிரான்ஸ் நாட்டைக் கடைசியாக ஆண்டு வந்த போர்பன் மன்னர் 16வது லுாயியும்,அவர்தம் ஆங்கில பின்னணிப் பெற்ற ராணி (மனைவி) மேரி அண்டாய்நட்டும் செய்த அக்கிரமங்கள் பல. அவற்றில் குறிப்பாக 1789ஜூலையில் ஒரு சனிக்கிழமை மன்னரும், ராணியும் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தலைநகர் பாரிஸ் மாநகரத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர். எங்கும் மக்கள் கூட்டம். 'பசியால், பட்டினியால் துடிக்கிறோம். சாப்பிடுவதற்கு ரொட்டித்துண்டு கூட இல்லை. நாங்கள் என்ன செய்வது' என்று மக்கள் கூச்சலிட்டனர். அரசன் லுாயி எழுந்து பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது, ராணி அரசனை பேசவிடாது, முந்திக் கொண்டு மக்களைப் பார்த்து 'ரொட்டி இல்லை என்றால் வெண்ணைய்யை சாப்பிடுங்கள்' என்று திமிராக சொன்னார். ராணி இவ்வாறு சொன்னதும் மக்கள் பொறுமை இழந்தனர். புரட்சி வெடித்தது, மக்கள் மன்னரையும், ராணியையும் வீதி வீதியாக விரட்டினர். கடைசியில் அவர்கள் பிடிபட்டனர். வலியில்லாமல் கொல்லுவதற்கு என்று கண்டுபிடிக்கப்பட்ட 'கில்லட்டின்' என்ற ஆயுதத்திற்கு இரையாகினர். இந்த அகங்காரம் பிடித்த ராணியைக் கார்லைல் என்ற நாவலாசிரியர் 'ஜீவ சாஸ்திரத்தின் தவறு' (Biological error) என்றும், அரசனை 'இயற்கையின் பிழை' (Mistake of nature) என்றும் வர்ணித்துஉள்ளார். இயற்கையின் பிழையும், ஜீவசாஸ்திரத்தின் தவறும் சேர்ந்து பிரெஞ்சு, ஏன் ஐரோப்பா கண்டத்தையே நசுக்கி நாசமாக்கிவிட்டது. உலகமே ஸ்தம்பித்துவிட்டது! சமூகமும், அரசியலும் அடியோடு மாறியது. சமூகம் மறுமுகம் பெற்றது.

அமெரிக்காவில்
       ஐரோப்பாவில் நடந்த பிரெஞ்சு புரட்சி, ஏனைய நாடுகளில் எதிரொலித்தது! அதே ஆண்டு (1789) அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் புது அரசியல் அமைப்பு ஒன்றை பிரகடனம் செய்தார். இந்த அரசியல் அமைப்பில் 7 ஷரத்துகளும், 26 திருத்தங்களும் மட்டுமே இது வரைக்கும் நடந்துஉள்ளது. ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை அதாவது 329 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் மட்டுமே நடந்தேறியிருக்கின்றன. இந்திய அரசியல் அமைப்பின் (சுக்லா எழுதியது) எடை1.5 கிலோ; ஆனால் அமெரிக்க அமைப்பின் (சட்டப்படி வெளியிடப்பட்ட) அரசியல் சாசனத்தின் எடை 0.60 கிராம். இதற்கு காரணம், சுருங்கச் சொல்லி விளக்கம் கொடுக்கின்ற ஆற்றல், அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளுடைய மன நிலையை பொறுத்தது என்பர். நமது அரசியல் அமைப்பில் இதுவரைக்கும் 368 ஷரத்துகளும், 101 திருத்தங்களும் நடந்தேறி யிருக்கிறது. ஆகவேதான், அமெரிக்கா அப்படியிருக்கிறது! இந்தியா இப்படி யிருக்கிறது!  பதினெட்டாம் நுாற்றாண்டு கவிஞன் வோர்ட்ஸ்வொர்த் கூறுகிறார்... 'பழமை புதுமைக்கு இடம் விட்டுவிட வேண்டும்; ஆண்டவன் தன் விருப்பங்களை எத்தனையோ வழிகளில் பூர்த்தி செய்து கொள்கின்றான். ஒரு கலாசாரம் நல்லவையாக இருந்த போதும்,காலத்தால் அது துருப்பிடிக்காமல் இருக்க நல்லவை, கெட்டவையாக மாறாமல் இருக்க ஆண்டவன் தன் விருப்பங்களை எத்தனையோ வழிகளில் பூர்த்தி செய்து கொள்கிறான் 'நீதியும் நேர்மையும் இணைந்த சமுதாயம் உருவாக வேண்டும். ஊழலற்ற நிர்வாகம் வேண்டும். ஜாதியும், மதமும் மோதாத சமூகம் வேண்டும். நாம் மாறவேண்டும்; மாறித்தான் ஆகவேண்டும்.-  

    பேராசிரியர் கே.காசிம்ஐ.பி.எஸ்., (ஓய்வு)சிந்தனையாளர்மதுரை94430 52721