பாரதி பயிலகம் வலைப்பூ

Thursday, January 9, 2020

சத்ரபதி சிவாஜி


                                                    
            பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்திய வரலாற்றில், டெல்லி முகலாய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பல சிற்றரசர்கள் நாடெங்கும் பரவியிருந்தனர். டெல்லி சுல்தான்களுக்குக் கட்டுப் பட்டு தெற்கே நிஜாமும், வேறு பல தட்சிண சுல்தான்களும் ஆட்சி புரிந்து வந்தனர். மராத்திய வம்சத்தின் வீர பரம்பரையில் வந்த பல மாவீரர்களும் இவர்களில் எவராவது ஒருவரிடம் தளபதிகளாக, போர்ப்படையில் முக்கிய பதவிகள் வகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள். இவர்கள் நிலையாக ஓரிடத்தில் ஒருவரிடம் பணிபுரியாமல் அவ்வப்போது மாறுகின்ற சூழ்நிலைகளுக்கேற்ப தலைமையை மாற்றிக் கொண்டும், இன்றைய அரசன் நாளைய விரோதியாகப் போரிடுவது போன்ற பல நிகழ்ச்சிகள் தட்சிண சுல்தான்களிடையே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
            நாம் எடுத்துக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றுப் பதிவுகள் நடந்த காலத்தில் தேவகிரி எனுமிடத்தில் நிஜாம் பாதுஷாவும், விஜயதுர்க்கம் எனுமிடத்தில் இப்ராஹிம் பாதுஷாவின் புதல்வன் அலியடில்ஷா என்பாரும் ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். இவ்விரு சுல்தான்களுக்கிடையே போர் மூண்டது. அந்தப் போரில் நிஜாமின் பக்கம் மாலோஜி, விட்டோஜி எனும் இரண்டு மராத்திய வீரர்கள் நிஜாமுக்கு வெற்றிகளைத் தேடித் தந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சேவையைப் பாராட்டி நிஜாம் தான் வென்ற பகுதிகளில் நாலில் ஒரு பாகத்தை இவர்களுக்கென்று பகிர்ந்தளித்தார்.
            இவ்விருவரில் மாலோஜி என்பவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். முதல்வர் ஷாஜி, அடுத்தவர் சரபோஜி என்றும் பெயரிடப்பட்டனர். ஷாஜிக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவர் தந்தை மாலோஜி ஒரு போரில் இறந்து போனார். குழந்தைகள் சிறுவர்களாக இருந்ததால் அவ்விருவரையும் விட்டோஜியின் பாதுகாப்பில் வளர்ந்தனர்.
            ஷாஜி இளைஞனாக வளர்ந்த போது துக்காவுபாயி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் 1620இல் சதாராவின் மன்னராக ஆனார். அவர் சதாராவின் மன்னராக இருந்த போது இரண்டாவது மனைவியாக ஜீஜாபாயி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
            தேவகிரியின் பாதுஷா நிஜாம் விஜயதுர்கம் பாதுஷா அலியடில்ஷாவை மதிக்கவில்லை. காரணம் தன்னுடைய படையில் மாபெரும் மராத்திய வீரர்கள் ஷாஜி முதலானோர் இருக்கும் தைரியம் அவருக்கு. இந்த சூழலில் விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா தேவகிரி பாதுஷா நிஜாமுடன் டெல்லி சுல்தான் ஜஹாங்கீரின் உதவியுடன் போருக்குப் புறப்பட்டார். இந்தப் போரில் நிஜாமின் படைத் தளபதி ஷாஜியிடம் டெல்லி சுல்தான் படைகள் தோற்றுப் போயின. அதே போரில் ஷாஜியின் தம்பி சரபோஜி அலியடில்ஷாவின் படைத் தளபதியான ஜோகர்கான் என்பவரால் கொல்லப்பட்டார். அந்தப் போரில் வெற்றி ஈட்டித் தந்த ஷாஜியை நிஜாம் கெளரவித்துப் பாராட்டினார். பிறகு ஷாஜி சதாராவுக்குத் திரும்பிவிட்டார்.
            இந்த சூழ்நிலையில் நிஜாம் படைக்கு வெற்றி ஈட்டித் தந்த ஷாஜி தன் பக்கம் இழுக்க வேண்டுமென்று விஜயதுர்க்கம் பாதுஷா அலியடில்ஷா விரும்பினார். எதிரியின் படைத் தளபதி தன் பக்கம் வருவாரா என்றும் சந்தேகித்தார். ஆனால் நிஜாமுக்கும் ஷாஜிக்கும் இடையே ஏதோ மனவருத்தம் இருந்த காரணத்தால் அவர் தயக்கமின்றி எதிரியாக இருந்த அலியடில்ஷா பக்கம் சேர்ந்து விட்டார். ஷாஜி தன் பக்கம் வந்துவிட்ட தைரியத்தில் அலியடில்ஷா மீண்டும் நிஜாம் மீது போரிட ஷாஜி தலைமையில் பெரும் படையை அனுப்பினார். அப்போது நடந்த போரில் அலியடில்ஷாவின் படை ஷாஜி தலைமையில் பெரும் வெற்றியைப் பெற்றது. நிஜாம் தோற்றுப் போனார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அலியடில்ஷா தன்னுடைய ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் பாதியை ஷாஜிக்கு பகிர்ந்து அளித்து அவரை கெளரவப்படுத்தினார். தொடர்ந்து அலியடில்ஷா வின் தளபதியாக ஷாஜி தென்னிந்தியாவின் பல பகுதிகள் மீது போர் தொடுத்து இப்போதைய கேரளப் பகுதிகளையும் வென்று பெரும் புகழ் பெற்றார். அவர் வென்றெடுத்த பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள் எல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டவும் ஏற்பாடு செய்து விட்டார்.
            வெற்றி வீரராக ஷாஜி விளங்கி வருகையில் 1627 பிப்ரவரி 19இல் மனைவி ஜீஜாபாயிக்கு முதல் மகன் பிறந்தான், அந்த மகன் பெயர் சாம்பாஜி. இந்த சாம்பாஜி வளர்ந்து பெரியவனாக ஆன போது  சிவனேரி கோட்டையின் தலைவர் விசுவாசராவ் என்பவரின் பெண்ணான ஜெயந்திபாயி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு 1629இல் ஜீஜாபாயிக்கு இரண்டாவது மகன் பிறந்தார். அந்தக் குழந்தை பிறந்த ஊரான சிவனேரியின் நினைவாக அந்த மகனுக்கு “சிவாஜி” என்று பெயரிட்டனர். ஷாஜி பிறந்த குழந்தையுடன் சதாராவுக்குச் சென்றுவிட்டார். அங்கு 1630இல் ஷாஜியின் முதல் மனைவியான துக்காபாய்க்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
            ஷாஜி தேவகிரி பகுதியைச் சேர்ந்த எண்பது கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டார். அப்போதிருந்த பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மராத்தியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சூரிய வம்சம் என்றும் சந்திர வம்சம் என்று பிரித்து வாழ்ந்தனர். ஷாஜியின் வளர்ச்சியைக் கண்ட டெல்லி பாதுஷா அலியடில்ஷாவுடன் இணைந்து ஷாஜிக்கு எதிராக பீமா நதிக் கரையில் மூன்றாண்டு காலம் போரில் ஈடுபட்டார். ஷாஜி ஒரு சமாதான உடன்படிக்கையின்படி தான் வென்ற நிலப் பகுதிகளை டெல்லி பாதுஷாவுக்கும் அலியடில்ஷாவுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தான் சதாராவுக்குச் சென்று விட்டார்.
            அலியடில்ஷாவுக்கும் ஷாஜிக்கும் சமாதானம் ஏற்பட்டு விட்ட பிறகு அலியடில்ஷா அவரைத் தென் புறத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள சிற்றரசர்களிடம் சென்று கப்பம் தொகை பெற்று வரப் பணித்தார்.  அவரும் அவருடன் ரணதுல்லாகான் என்பவரும் இக்கேரி ராஜா வீரபத்ரர், கங்க நாயக்கர், காவேரிப்பட்டணத்து ஜெகதேவர், ஸ்ரீரங்கப்பட்டனம் கண்டீரவர், தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர், செஞ்சி வெங்கட்ட நாயக்கர், மதுரை திருமலை நாயக்கர் முதலான அரசர்களையெல்லாம் வென்று அந்த நாடுகளை கப்பம் கட்டச் செய்தார். இதனால் மகிழ்ந்த அலியடில்ஷா ஷாஜிக்கு பெங்களூர் ஜாகீரைக் கொடுத்து அனுப்பினார்.
            பெங்களூரு ஷாஜிக்குப் பிடித்தமான இடமாக இருந்தபடியால் ஷாஜி தன் மனைவியர்களுடன் சதாராவிலிருந்து கிளம்பி பெங்களூருக்குச் சென்று தங்கினார். மகன்கள் சிவாஜிக்கும் ஏகோஜிக்கும் கல்வி அங்குதான் கற்பிக்கப்பட்டது. மகன் சிவாஜிக்கு வயது பன்னிரெண்டாயிற்று. ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜிக்கு 1640இல் இவர் வயதில் சிறியவர் என்ற போதிலும் அவருக்கு இளவரசுப் பட்டம் சூட்டினார். பெங்களூருக்கும் அவரையே அதிபதியாக்கினார். மூத்த மகன் சிவாஜிக்கு சதாரா, புனே பகுதிகளுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி அங்கு அனுப்பி வைத்தார். சதாராவுக்குச் சென்ற சிவாஜி வீரத்தினால் பல சிறு சிறு கோட்டைகளையெல்லாம் பிடித்துத் தனதாக்கிக் கொண்டார்.
            இவ்வளவும் ஆன பிறகு அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஷாஜியை தன்னிடம் அழைத்துவருமாறு தூது அனுப்பியும் ஷாஜி போகவில்லை. அதனால் ஆத்திரமடைந்த அலியடில்ஷா முஸ்தபாகான் என்பவரின் தலைமையில் பல தளபதிகளையும் சேர்த்து ஒரு படையுடன் அனுப்பி ஷாஜியைக் கட்டாயமாகப் பிடித்து வரும்படி அனுப்பினார். ஆனால் அலியடில்ஷாவின் வஞ்சனை எண்ணத்தை அறிந்த ஷாஜி தன் மூத்த மகன் சாம்பாஜியைப் பெங்களூரில் ஏகோஜிக்குத் துணையாக இருக்கும்படி சொல்லிவிட்டு தான் தன்னுடைய படைத் தலைவர்களுடன் முஸ்தபாகானைப் பார்க்கப் போனார். தன்னைத் தேடி வந்த ஷாஜியை முஸ்தபாகான் அருகில் ஒரு கூடாரத்தில் தங்க வைத்து, ஒருநாள் இரவு தன் படைவீரர்களைக் கொண்டு அந்த கூடாரத்தைச் சூழ்ந்து கொண்டான். அப்போது நடந்த போரில் ஷாஜி காயம் பட்டுக் கீழே மூர்ச்சையாகி விழுந்தார். மூர்ச்சைத் தெளிந்த ஷாஜியை முஸ்தாபாகான் அவரை அலியடில்ஷாவைக் காண விஜயபுரத்துக்குச் செல்லுமாறு பணித்தான்.
            இதனைக் கேள்விப்பட்ட சாம்பாஜி ஒரு பெரும் படையுடன் புறப்பட்டு வந்து முஸ்தாபாகானுடன் போரிட்டார். நடந்த விஷயங்களையெல்லாம் கேள்விப்பட்ட சிவாஜி அலியடில்ஷாவோடு போருக்குத் தயாரானார். இவற்றையெல்லாம் அறிந்து அலியடில்ஷா மூன்று தளபதிகளின் தலைமையில் படைகளை அனுப்பி புரந்தர் கோட்டையில் இருக்கும் சிவாஜியைச் சிறைப்பிடித்து வருமாறு அனுப்பி வைத்தார். அந்த மூன்று தளபதிகளின் தலைமையில் சென்ற படை முதலில் சிரோபலம் எனும் கோட்டையைப் பிடித்து அங்கு தங்களில் ஒருவனான பல்லாளன் என்பவனை இருக்கச் சொல்லிவிட்டு, மற்ற இருவரான பத்தேகான், முசேகான் ஆகியோர் சிவாஜி இருந்த புரந்தர் கோட்டையை முற்றுகை யிட்டார்கள். சிரோபலக் கோட்டையை எதிரிகளிடமிருந்து மீட்க சிவாஜி பீமன் என்பவரின் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பினார். பீமன் அங்கு சென்று அங்கு முகாமிட்டிருந்த பல்லாளனைக் கொன்று, அந்தக் கோட்டையை மீட்டுக் கொண்டு சிவாஜியிடம் திரும்பினார். புரந்தர் கோட்டையை முற்றுகையிட்ட படைகளுடன் சிவாஜி தீரத்துடன் போரிட்டார். கோட்டையின் மீதேறி உள்ளே நுழைய முயன்ற வீரர்களைத் துரத்தினார். ஓடிய அவர்கள் மீண்டும் கோட்டையை நோக்கி வந்த போது சிவாஜி அந்த படைத்தலைவர்களில் ஒருவனான முசே கானைக் கொன்றார்.
            மராத்திய மாநிலத்தில் சித்திரக்கல் என்றொரு கோட்டை இருந்தது. அங்கு இருந்தவர்  மாபெரும் குதிரைப் படைகளுடன் வந்து பீஜப்பூர் கோட்டைக்குள் சென்று கொள்ளையடித்துக் கொண்டு போனார். இப்படி தனக்கு எதிராக எல்லாம் நடப்பதை அறிந்த அலியடில்ஷா தான் தணிந்து போக நிச்சயித்து தன்னிடம் வந்திருக்கும் ஷாஜிக்கு எந்தத் தீங்கும் இழைக்காமல் அவரை திரும்ப அனுப்புவதே சிறந்தது என்றெண்ணி அவரை விடுவித்தார். அப்படி அவரை அனுப்பும் போது அலியடில்ஷா ஷாஜியிடம் பெங்களுரில் இருந்து சாம்பாஜியையும், ஷாஜி குடும்பத்தார் அனைவரையும் சதாராவுக்குத் திரும்பிவிட வேண்டுமென்றும், சிவாஜி  சிம்ஹகட் கோட்டையை விட்டுவிட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். சித்திரக்கல் கோட்டையில் இருப்பவர் பீஜப்பூர் கோட்டையை கொள்ளை யடித்துச் சென்றதால் அங்கு ஷாஜி படையுடன் சென்று அவனைக் கொன்றுவிட்டு வருமாறு பணித்தார். ஷாஜியும் அவ்வண்ணமே சித்திரக்கல் சென்று போரிட்டு கொள்ளையடித்த பரமா என்பவனைக் கொன்று அவன் சேர்த்து வைத்திருந்த செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து அலியடில்ஷாவிடம் கொடுத்துவிட்டு, தான் சதாராவுக்குத் திரும்பினார்.
            சிவாஜி புரந்தர் கோட்டைக்குச் சென்றிருந்தார். அங்கு தன் அமைச்சரான சுவர்ணர் என்கிற சோஜாஜி பண்டிதரை அழைத்து அதுவரை நடந்தவற்றையெல்லாம் சொல்லி, டெல்லி பாதுஷா ஒளரங்கசீபையும், அலியடில்ஷாவையும் அடக்க வேண்டுமென்று ஆலோசனை கேட்டார். அவரும் அப்படிச் செய்வது சரியே என்று ஆலோசனை சொன்னார். டெல்லி பாதுஷாவோடும், அலியடில்ஷாவோடும் போரிடுவதற்கு சரியான இடம் எது என்பதை அமைச்சருடன் சிவாஜி ஆலோசனை செய்தார். மேலைக் கடற்கரைப் பக்கம் பிரதாபகெடி எனுமிடத்துக்கு அருகிலுள்ள ஜாவளி எனும் நகரத்தை முதலில் நம்மதாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், அங்கு செல்லுகின்ற வழியில் இருக்கும் சிற்றரசர்களெல்லாம் அலியடில்ஷாவுக்குக் கப்பம் கட்டுபவர்கள் என்பதால் முதலில் அவர்களை வென்று வழி ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்கு முதலில் சிம்மகெடி எனும் கோட்டையைக் கைப்பற்ற வேண்டும் என்று பெரும் படையைத் தயார் செய்தார். விஜயதசமி நாளில் படைகளுடன் சிவாஜி புறப்பட்டார். வழியில் எதிர்த்து வந்த அனைவரையும் வென்றார். பாசிராஜா, கிருஷ்ண ராஜா, ஜனகராஜா, சந்திரராஜா ஆகியோரின் கோட்டைகளைப் பிடித்து அவற்றுக்கு ராய்கட் என்று பெயர் சூட்டிவிட்டு ஜெயவலி நகரத்துக்கு வந்தார். அங்கு இருந்த சந்திரராஜாவை விரட்டிவிட்டு அங்கும் தங்கள் தளபதிகளை நிறுத்தினார். தொடர்ந்து சென்று மேலைக் கடற்கரையை அடைந்து அங்கே கடலையொட்டி ஒரு கோட்டையை எழுப்பி அதற்கு சிவலங்கை என்று பெயர் சூட்டினார்.  அந்தக் கோட்டையில் அரியணையேறிய சிவாஜி முதலாவதாக தன் பெயரில் ஒரு சகாப்தம் தொடங்க எண்ணி அதற்கு சிவசகம் என்று புதிய ஆண்டு வரிசை முறையை உருவாக்கினார். இந்த தகவல்களையெல்லாம் துரத்தியடிக்கப்பட்ட சந்திரராஜா அலியடில்ஷாவிடம் சொன்னார்.
            சிவாஜியை ஒழித்தால் தான் தனக்கு நிம்மதி என்று கருதி அலியடில்ஷா தன்னிடமிருந்த பல தளபதிகளில் அப்சல்கான் என்கிற அப்துல்லாகானை அழைத்து, சிவாஜி தனக்கு எதிராக செய்துவரும் செயல்களையெல்லாம் சொல்லி, உடனே அவருடன் பன்னிரெண்டு தளபதிகளையும் படைகளுடன் அழைத்துச் சென்று, சிவாஜியைச் சிறைப்படுத்தி கொன்டுவருமாறு ஆணையிட்டார். அந்த நேரத்தில் சிவாஜி புனே நகருக்கு வந்திருந்தார். அவர் புனேவில் இருக்கும் நேரத்தில் சந்திரராஜா படையுடன் சென்று ஜாவளிக்குச் சென்று  அதையும் பிரதாபகெடியையும் பிடித்துக் கொள்ள அனுப்பி வைத்தார். அப்சல்கானும் தனக்களிக்கப்பட்ட பணியை, சிவாஜியைப் பிடித்துக் கொண்டு வருவதற்காகப் படையுடன் புறப்பட்டான். பல சந்தர்ப்பங்கள் அப்சல்கானுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் அவன் சிவாஜியைப் பிடிப்பதே நோக்கம் என்று புறப்பட்டான்.
            சிவாஜி பவானி தேவி. குலதெய்வமான ஜெகதாம்பா துளஜா பவானியை மனத்தால் துதித்துக் கொண்டு எந்த காரியத்திலும் ஈடுபடுவார். அப்படி அவர் வழிபடும் அந்த பவானி சில நேரங்களில் அவர் மனதில் சொல்வதை அவர் உடனடியாகச் செய்து முடிப்பது வழக்கம். அது போல அப்போது பவானி அம்மன் சிவாஜியை உடனடியாக ஜாவளிக்குத் திரும்பச் சொல்வது போல உணர்ந்து, புனே உட்பட பல கோட்டைகளை வலுப்படுத்தி வைக்க ஆணையிட்டுவிட்டு, அந்த வழியாக அப்சல்கான் வரும்போது அவனைத் தடுக்காமல் மேலே போக அனுமதித்து விடுமாறும் பணித்தார். வழியில் அவரவர் படைகளை அப்சல்கான் கண்களில் படாமல் ஒளித்து மறைந்திருக்கச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். அப்சல்கானை தன்னுடைய இருப்பிடம் வரை வரவிட்டுவிட்டு அவனை அழித்தவுடன் நகரா அடித்து செய்தி பரப்பப்படும், அது ஒவ்வொரு கோட்டையாக பரவிவிடும். அப்போது அவரவர் படைகளை வெளிக் கொணர்ந்து அப்சல்கானுடன் வருகின்ற படையை அழிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுச் சென்றார்.
            அப்சல்கான் வழியில் உள்ள பிரபலமான ஆலயங்களைக் குறிப்பாக பண்டரிபுரத்துக்குச் சென்று விட்டோபா மூர்த்திக்கு ஊறு செய்துவிட்டுச் செல்ல விரும்பினார். ஆனால் அங்கு ஆலயத்தில் இருந்த விட்டோபா மூர்த்தியின் விக்ரகம் அங்கு இல்லாமல் போய் விட்டது. ஏமாற்றமடைந்த அப்சல்கான் துளஜாபுரம் சென்று அங்கு கோயில் கொண்டிருந்த துளஜா பவானி விக்ரகத்துக்கு கேடு விளைவிக்க எண்ணி அங்கு போனால், அங்கும் துளஜா பவானி விக்ரகம் காணாமல் போயிருந்தது. தொடர்ந்து விடாமல் அவன் செம்பு மகாதேவரின் ஆலயத்தை உடைக்க விரும்பி அங்கே சென்று தன் அழிவு வேலையைக் காட்டினான். அவன் படையில் இருந்த இதர மராத்திய சர்தார்கள் அப்சல்கானின் இந்த அடாத செயலைத் தடுத்தார்கள். பின்னர் அங்கிருந்து பல்லிவனம் எனும் இடத்துக்குச் செல்ல, அங்கு கோயில் கொண்டிருந்த விக்ரகமும் மறைந்து போய்விட்டது.
            தான் நினைத்தபடி சிவாஜி ராஜாவுக்கு தீங்கு விளைக்க எண்ணி அழிவு வேலைகளை நிறைவேற்ற முயன்றாலும் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. அப்சல்கான் தன் பக்கமிருந்த கிருஷ்ணாஜி பண்டிதரை அழைத்து சிவாஜியிடம் தூது அனுப்பினான். அவர் போய் சிவாஜியைச் சந்தித்து, அவர் தன் வசமுள்ள சிமாகெடி, பீமநதி, புரந்தரகெடி ஆகியவற்றை அப்சல்கான் வசம் ஒப்படைத்துவிட வேண்டுமென்றும், அவர் சிவாஜியை நேரில் சந்தித்துப் பேசும் போது வேறு எவைகளைச் செய்ய வேண்டுமென்று சொல்வார் என்று சொன்னார். சிவாஜி ராஜா இவர்களுடைய சதிகளை நன்கு உணர்ந்தவர் என்பதாலும் அப்சல்கான் என்ன எண்ணத்துடன் தன்னை நாடி வருகிறான் என்பதை உணர்ந்திருந்தாலும், அந்த அப்சல்கானைத் தான் ஜாவளியில் சந்திப்பதாக கிருஷ்ணாஜி பண்டிதரிடம் சொல்லி அனுப்பினார்.
            இதற்கிடையே அப்சல்கான் தன் பெரும் படையோடு வழிநெடுக எந்தவித எதிர்ப்புமின்றி படையை வழிநடத்திக் கொண்டு வந்து கொண்டிருந்தான். சிவாஜி ஒன்று நினைத்திருக்க அதற்கான திட்டங்களும் தயாராக இருக்க, இந்த விவரங்களையோ அல்லது அப்சல்கான் ஏதேனும் விளைவித்து விடுவானோ என்று சம்பாஜி ஒரு படையோடு வந்து அப்சல்கானை எதிர்த்தார். ஆனால் கொடு வெறி பிடித்த அப்சல்கான் அந்தப் போரில் சம்பாஜியை வீழ்த்தி அவரைக் கொன்று விட்டான். இந்த செய்தியைக் கேட்ட தந்தை ஷாஜி மனம் உடைந்து படுத்த படுக்கையானார். இரண்டு மாதங்கள் படுத்திருந்த அவர் மகன் இறந்த சோகத்தால் பீடிக்கப்பட்டு இறந்தார். அது கி.பி.1658ஆம் ஆண்டு. ஷாஜியின் இறுதிச் சடங்குகளை ஏகோஜி நடத்தினார். ஜீஜாபாய் தன் மகனான சிவாஜியைக் காண வந்திருந்தார். அவரைப் பிரதாபகெடியில் தங்க வைத்துவிட்டு சிவாஜி தன் அண்ணன் வீழ்த்தப்பட்ட ஆத்திரத்தில் அப்சல்கான் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
            ஜாவளிக்கு வந்த அப்சல்கானை ஊருக்கு வெளியில் ஒரு கூடாரம் அமைத்து அங்கே வந்து தங்கியிருந்து தன்னை அங்கேயே சந்தித்துப் பேசலாம் என்று சிவாஜி ராஜா சொல்லியனுப்பி யிருந்தார். அதன்படி அப்சல்கான் ஊருக்கு வெளியில் இருந்த அந்த முகாமில் தங்கினான். அவனை வரவேற்க பெருமளவில் ஏற்பாடுகளைச் செய்து அங்கே விருந்துக்கும், ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி, அப்சல்கானுக்கு  பானங்களையும் கொடுத்து சிவாஜி சரியான நேரத்துக்குக் காத்திருந்தார்.
            வரவேற்புகள் எல்லாம் முடிந்த பின்னர் சிவாஜி அப்சல்கானை வரவேற்றார். சிவாஜியின் அழைப்பை ஏற்று அவரை அப்படியே தழுவிக் கொள்வது போல கரங்களை அகல விரித்து அவரைக் கட்டிப் பிடித்தான், உடனே மடியில் இருந்த கட்டாரியை எடுத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் குத்தினான். இதுபோல வெல்லாம் நடக்குமென்று தெரிந்து வைத்திருந்த சிவாஜி ராஜா தான் புறப்படு போதே தன் உடையின் உட்பகுதியில் மெல்லிய இரும்பினால் ஆன கவச ஆடையை அணிந்திருந்தார். அதில் கத்தி இறங்காததால் அப்சல்கானின் கத்திக் குத்து சிவாஜி ராஜாவின் வயிற்றில் இறங்கவில்லை. எதற்கும் தயாராக இருந்த சிவாஜி ராஜா உடனே தன் பிச்சுவா கத்தியால் அப்சல்கானை அடித்து இடது கையில் அணிந்திருந்த புலி நகத்தால் அவன் வயிற்றைக் குத்தி இழுத்த வேகத்தில் அவன் வயிறு கிழிந்து உள்ளிருந்து குடல் வெளியே விழுந்தது. காட்டெருமை போல இருந்த அப்சல்கான் அதைப் பொருட்படுத்தாமல் வெளிவந்த தன் குடலை மேலே அணிந்திருந்த போர்வையால் மீண்டும் வயிற்றுக்குள் தள்ளி அது வெளிவரா வண்ணம் இறுகக் கட்டிக் கொண்டு தன் பட்டா கத்தியைக் கொண்டு சிவாஜியைத் தாக்க எத்தனித்தார். போரில் புலியான சிவாஜி அவனைத் தன் பட்டாக் கத்தியால் அடித்துத் தாக்கி வீழ்த்தினார். 1659இல் சிவாஜியின் வாளுக்கு இரையானான் அப்சல்கான்.
            இதெல்லாம் க்ஷத்திரியர்களுக்கிடையே யான விவகாரம் என்று அமைச்சர் கிருஷ்ணாஜி பண்டிதர் வேடிக்கைப் பார்க்க பார்ப்பதை விட்டு இவர் ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு சிவாஜி யோடு போரிட வந்தார். அவரை ஒரு பொருட்டாகவே கருதாத சிவாஜி, அந்தணர்களுக்குத் தீங்கு விளைப்பதை விரும்பாத அந்த மாபெரும் வீரன் , அவரை விலக்கிவிட்டு அலட்சியப்படுத்தி விட்டு  போய்க் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ராஜாவின் மெய்க்காவலன் ஒருவன் அந்த கிருஷ்ணாஜி பண்டிதரைத் தன் வாளால் ஒரே வெட்டில் வெட்டி சாய்த்து விட்டான். தர்மத்தை இழந்த அந்த பண்டிதன் பிணமாகி விழுந்தான்.
            முன்பே சிவாஜி தன்னுடைய தளபதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தபடிக்கு அவர்கள் அனைவரும் வரும் வழி நெடுக அப்சல்கான் படையை போகவிட்டு விட்டு மறைந்து கொண்டிருந்தார்கள். சிவாஜி அப்சல்கானைப் பழி தீர்த்தவுடன் நாகரா மூலம் தகவல் அனுப்பப்படும் என்று சொல்லியிருந்தபடி நாகரா ஒலிக்கப்பட்டது. ஓசை கேட்கும் தூரத்தில் இருந்த இன்னொரு இடத்தில் இந்த சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த நாகரா ஒலிக்கப்பட்டு, இப்படியே வழி நெடுக இருந்த கோட்டைகளுக்கெல்லாம் தகவல் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்சல்கான் விழுந்த உடனே அவனுடைய படைகளை சிவாஜியின் படை சூழ்ந்து கொண்டு அதை சின்னாபின்னப் படுத்திவிட்டது. சிறை பிடிக்கப்பட்ட அப்சல்கானின் சர்தார்களை சிவாஜி ராஜா மரியாதைகளோடு திரும்பச் செல்ல அனுமதித்தார். இந்த செய்திகள் எல்லாம் பிஜப்பூர் சுல்தான் அலியடில்ஷாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. தன்னுடைய சூழ்ச்சி பலிக்காததோடு தான் பெரிதும் நம்பியிருந்த அப்சல்கான் கொலையுண்டது அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. அவன் ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை. சிவாஜி ராஜாவின் அண்ணன் சம்பாஜியைப் போரில் கொன்ற போது சிவாஜி ராஜாவும் அப்படித்தானே வருந்தியிருப்பார். இதை உணராதவராக அலியடில்ஷா இப்போது தன் நம்பிக்கைக்குரிய தளபதி இறந்ததற்காக வருத்தப்படுவது எப்படி சரியாகும்.
            சிவாஜி புனேயில் இருக்கும் போதே அலியடில்ஷா தன்னை அழிக்க அப்சல்கானை அனுப்புகிறார் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு தன் உடனடியாக புறப்பட்டு வழிநெடுக தக்க ஏற்பாடுகளைச் செய்து விட்டு அப்சல்கானைத் தன்னுடைய இடத்தில் வைத்து ஒழித்து விட திட்டமிட்டார். அதன்படி எல்லாம் முடிந்தது. அவர் புனேயை விட்டு புறப்படும் முன்பாக அங்கு நேதாஜி என்பவரை அங்கு பார்த்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தார்.  அலியடில்ஷா தன் தளபதி அப்சல்கான் இறந்த கோபத்தில் பெரும் படையொன்றைத் திரட்டி வருகிறான் என்கிற செய்தி நேதாஜிக்குக் கிடைத்தது. உடனே அந்தத் தகவனை சிவாஜி ராஜாவுக்கு தெரியப்படுத்தினார்.
            இவற்றையெல்லாம் எதிர்பார்த்திருந்த சிவாஜி தன்னுடைய பெரும் படையுடன் புறப்பட்டு வழியில் அலியடில்ஷாவுக்குச் சொந்தமான பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார். அவர்களில் ஒருவனான ஹிலால்கான் என்பவன் சிவாஜியிடம் சரணடைந்து அவர் பக்கம் போய்விட்டான். கட்சித் தாவல் அப்போதே இருந்திருக்கிறது. சிவாஜி ராஜா தான் வென்ற இடங்களில் எல்லாம் கோட்டைகளைத் தன் தளபதிகள் வசம் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு பனால்கட் எனுமிடத்தில் இருந்த கோட்டையைக் கைப்பற்றி அங்கே தங்கினார். சிவாஜி இந்தக் கோட்டையைத் தாக்கக் கூடும் என்பதை அறிந்திருந்த அலியடில்ஷா ருஸ்தும்கான் என்பவரை அனுப்பி விவரம் தெரிந்து வர அனுப்பினார். அவர் சென்று சிவாஜி பனால்கட்கெடியைப் பிடித்துக் கொண்டு அங்கே தங்கியிருக்கும் விவரத்தை அலியடில்ஷாவுக்குத் தெரியப்படுத்தினார்.
            தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத அலியடில்ஷா இந்த விவரங்களையெல்லாம் டெல்லி பாதுஷா ஒளரங்கசீபுக்குச் சொல்லி அனுப்பினார். இதனைக் கேட்ட ஒளரங்கசீப் கோபமடைந்து ஜுல்ப்கர் கான் என்பவரின் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினார். இந்த டெல்லி படையுடன் ருஸ்தும்கான் படையும் சேர்ந்து கொண்டு சிவாஜி இருக்கும் பனால்கட் கோட்டையை நோக்கி வந்தன.  இப்படி டெல்லி பாதுஷா படையும், ருஸ்தும்கான் படையும் தன்னைத் தாக்க வரும் செய்தியறிந்து சிவாஜி தன் கோட்டையை விட்டு புறப்பட்டு எதிரியின் படைகள் வரும் வழியில் குறுக்கிட்டு அவர்கள் எதிர்பாராத படிதாக்கி அவர்களைத் தோற்கடித்து விரட்டியடித்தார். ஓடியவர்கள் திரும்பத் திரும்ப வந்து சிவாஜியைத் தாக்க முயன்றும் ஒன்றும் செய்யமுடியாமல் தோற்றுப் போயினர்.
            தன் படை, அலியடில்ஷாவின் சுல்ப்கர்கான் படையும் சிவாஜியிடம் தோற்ற செய்தியைக் கேட்டு ஒளரங்கசீப் கோபமடைந்து சிவாஜி இருக்குமிடத்தை விசாரித்தார். சிவாஜி எதிரிகளின் கோட்டைகளையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வென்று விட்டதையும், சிவாஜியின் படை நேதாஜி தலைமையில் மேலும் பல கோட்டைகளை வென்றெடுக்க முயல்வதையும் கேள்விப் பட்டார். உடனே ஒளரங்கசீப் தன் மாமனாரான சயிஷ்டாகான் என்பவரை அழைத்து பல தளபதிகளின் தலைமையில் பெரும்படையொன்றை அனுப்பி எப்படியாவது சிவாஜியைப் பிடித்து வருமாறு பணித்தார். அதன்படி சயிஷ்டாகான் பெரும் படையோடு சிவாஜி இருக்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். இதற்கிடையே அலியடில்ஷா சிவாஜியின் திறமைகள் சூழ்ச்சிகள் அனைத்தும் அறிந்தவனாக இருந்தமையால், சயிஷ்டாகான் வருவதை அறிந்தால் சிவாஜி அவரை வழிமறிக்க வாய்ப்பிருப்பதால், அவரை பனால்கட் கோட்டையிலிருந்து வெளிவராத படி கொட்டையை முற்றுகை யிடுமாறு ஜோகர்கான் என்பவர் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தார். அதன்படியே ஜோகர்கான் தன் படையுடன் சென்று பனால்கட் கோட்டையை கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முற்றுகையிட்டார்.
            ஒளரங்கசீபின் மாமனாரான சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகை யிட்டார். இப்படி தான் இருக்கும் கோட்டையையும், சக்ராபதி கோட்டையும் எதிரியின் படைகள் முற்றுகை இட்டிருப்பதைப் பற்றி சிவாஜி பொருட்படுத்தவில்லை. ஜீஜாபாய் தன் மகன் சிவாஜி பனாலகெடி கோட்டையில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிற செய்தியைக் கேள்விப் பட்டார். சயிஷ்டாகான் சக்ராபதி கோட்டையை முற்றுகையிட்டிருக்கும் செய்தியையும் கேள்விப் பட்டார். தன் மகனை எப்படியும் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் காப்பாற்றி வெளிக்கொணர வேண்டுமென்று ஜீஜாபாய் திட்டமிட்டார். சிவாஜியின் புனா தளபதி நேதாஜியும் இன்னொரு தளபதியான ஷிலால் கான் என்பவரும் அப்போது ஜீஜாபாயைச் சந்திக்க வந்திருந்தனர்.  அவர் கேட்டுக் கொண்டபடி சிவாஜியை மீட்பதற்காக அவ்விருவரும் பனால்கெடி கோட்டைக்குப் படையுடன் புறப்பட்டார்கள். அவர்களை சயிஷ்டாகான் வழிமறித்தான். அப்போது நடந்த போரில் சிவாஜிக்கு ஆதரவாகச் சென்ற தளபதி ஷிலால்கானின் மகன் இறந்து போனான். இதையெல்லாம் சிவாஜி ராஜா கேள்விப்பட்டு வருத்தமடைந்தார். துளசி பவானி அம்மனை வேண்டிக் கொண்டு படுத்தார். நள்ளிரவில் எழுந்து பனாலாகெடிக்கு திரயம்பக பாஸ்கர் என்பவரைக் காவலுக்கு வைத்துவிட்டு ஒருவரும் அறியா வண்ணம் இவர் கோட்டையை விட்டு வெளிப்போந்து ஐந்து காத தூரத்தில் இருந்த விசால்கட் கோட்டையைச் சென்றடைந்தார். இதை அறிந்த டெல்லி படைத் தளபதி சிவாஜியைப் பிடித்து வர படையை அனுப்பினான். இதற்கிடையே பல்லிவனத்தரசர் எசவந்த ராஜாவும், ஸ்ருங்கார்பூர் சூரியராஜாவும் விசால்கட் கோட்டையைப் பிடித்துக் கொள்ள முற்றுகை யிட்டனர். சிவாஜி அங்கிருந்தும் புறப்பட்டு ராஜகெடிக்குச் சென்று அங்கே இருந்த தாய் ஜீஜாபாயைச் சந்தித்து வணங்கினார். சிவாஜியைப் பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட டெல்லி தளபதி தன் இயலாமை குறித்து அவமானப் பட்டுத் திரும்பிப் போய்விட்டார்.
            சிவாஜியின் ஆணைப்படி திரயம்பக பாஸ்கர் பனாலகெடி கோட்டையை ஜோகர்கானிடம் ஒப்படைத்துவிட்டு சிவாஜியிடம் திரும்பி வந்தார். அலியடில்ஷாவுக்கு ஜோகர்கான் மீது சந்தேகம். இவன் சிவாஜிக்கு உடந்தையாக இருந்து கொண்டு அவரை விட்டுவிட்டான் என்று கருதினார். அதனால் அவனை அழைத்து சிவாஜியை விடுவித்ததற்காக உனக்கு என்ன கிடைத்ததோ அதை என்னிடம் கொடுத்துவிடு என்றார். தன் மீது சந்தேகம் கொண்டு இப்படிக் கேட்கிறார் அலியடில்ஷா என்பதறிந்து ஜோகர்கான் அங்கிருந்து புறப்பட்டு கர்னூலுக்குப் போய்விட்டான். இவன் இப்படித் தப்பிப் போய்விட்டான் என்று கருதிய அலியடில்ஷா ஒரு படையை அனுப்பி ஜோகர்கானுக்குத் தக்க பாடம் புகட்டும்படி சொல்லி அனுப்பினார். அவர்கள் சென்று ஜோகர்கானுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டனர்.
            சிவாஜிக்கு ஒரு ரகசிய செய்தி வந்தது. சயிஷ்டாகான், கரதலப் கான் என்பவனுடன் ஒரு படையை அழைத்துக் கொண்டு ராஜகெடி கோட்டைக்கு வந்திருப்பதாக சிவாஜிக்குத் தகவல் கிடைத்தது. அவர் ரகசியமாக ஒரு சிறிய படையை ஜெயவலி எனும் பகுதியில் காட்டில் மறைவாகப் பதுங்கியிருக்குமாறு அனுப்பி வைத்தார். இந்த கரதலப் கான் வழிநெடுக பல கோட்டைகளைப் பிடித்துக் கொண்டு சிவாஜியின் படை மறைந்திருக்கும் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தான். அப்போது கரதலப் கான் படைக்கும், சிவாஜி படைக்கும் கடும் போர் நிகழ்ந்தது. போரின் முடிவு தனக்கு சாதகமாக இருக்காது, தான் இறப்பதும் நிச்சயம் என்று தெரிந்த வுடன் அந்த கரதலப் கான் தான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்தையும் சிவாஜி படையிடம் ஒப்படைத்துவிட்டுத் தன்னைத் தூண்டி அனுப்பி வைத்த சயிஷ்டாகானிடம் போய்ச் சேர்ந்தான்.
            சிவாஜி தன்னுடைய நண்பன் நேதாஜியுடன் படைகளுடன் புறப்பட்டு வல்லிவனத்துக்குச் சென்றார். அங்கு ஜெயவந்தி ராஜா என்பவர் அரசாண்டு கொண்டிருந்தார். இவர்கள் வல்லிவனத்துக்குப் போயிருந்த சமயம் அதன் அரசர் சிருங்கார்ப்பூர் எனும் பிரதேசத்தின் அரசரான சூர்யராஜா என்பவரிடம் போயிருந்தார். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவாஜி ராஜா சித்ரபுளினம் எனுமிடத்துக்குச் சென்றார். அங்கிருந்து மேலைக் கடற்கரைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த சிற்றரசர்களை யெல்லாம் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து அங்கு வாணிபம் செய்ய வந்து இறங்கியிருந்த ஐரோப்பிய வெள்ளையின மக்களையும் தனக்குக் கப்பம் செலுத்தும்படி செய்துவிட்டு ஊர் திரும்பினார்.
            பிறகு சிவாஜி சித்ரதுர்க்கம் கோட்டையைப் பிடித்துக் கொண்டு அதற்கு மண்டன கட் என்று பெயர் சூட்டினார். பெங்களூர், செஞ்சி ஆகிய பகுதிகளையும் கைப்பறிக் கொண்டு அப்போது வியாபாரம் செய்ய வந்திறங்கியிருந்த பிரெஞ்சுக் காரர்களை 1680இல் சந்தித்து அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு புனேவுக்குத் திரும்பினார்.
            இப்படி சிவாஜி ராஜா எவருக்கும் அடிபணியாத, எந்தப் போரிலும் வெற்றி பெற்று, தேவையான இடங்களில் சூழ்ச்சி செய்து யாரிடமும் தோல்வியடையாமல் தொடர்ந்து தன் வீரப்பயணத்தைச் செய்வது கண்டு அலியடில்ஷாவும், ஒளரங்கசீபும் சிவாஜியின் போர்த்திறமை குறித்து வியந்து போனார்கள். திரும்பத் திரும்ப சிவாஜியோடு மோதி சண்டையிட்டு தோல்வியடைவதினும் சும்மா இருப்பதே சுகம் என்று தீர்மானித்தனர். இருந்தாலும் ஒளரங்கசீபுக்கு இந்த சிவாஜியை உயிரோடு பிடித்துக் கொண்டு வந்து நேரில் பார்க்க வேண்டுமென்கிற ஆசை ஏற்பட்டது. அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சிவாஜியின் ஒரு உருவப் படத்தையாவது பார்க்கவேண்டுமென்று ஒளரங்கசீப் சொல்ல, ஒரு சித்திரம் வரைவோன் போய் சிவாஜியைப் பல இடங்களிலும் தேடியும் அவர் இருக்குமிடம் மட்டும் தெரியவே இல்லை. அப்படி அந்தச் சித்திரக்காரன் அவர் படத்தை வரைய திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள் சிவாஜி ஒரு குதிரையின் மீதேறி படு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டே அருகில் விளைந்திருந்த சோளக் கதிர்களைப் பறித்துத் தின்றுவிட்டு அதன் சக்கையை குதிரைக்கு ஊட்டிவிட்டதை அவன் பார்த்தான். உடனே அதை மனதில் வாங்கிக் கொண்டு அவன் சிவாஜியை ஒரு படம் வரைந்து ஒளரங்கசீபுக்கு அனுப்பி வைத்தான். அந்தப் படத்தில் சிவாஜி பயணித்த வேகம், அவர் சோளக் கதிரை பறித்த லாவகம், அதைத் தின்றுவிட்டு சக்கையை குதிரைக்குக் கொடுத்தது கண்டு ஒளரங்கசீப் வியந்து போய், இந்த மாவீரனை வெல்வது என்பது இயலாது என்ற முடிவுக்கு வந்தார்.  
            இதன் பிறகு சிவாஜி தன் அண்ணன் சம்பாஜியின் மனைவி மக்களையெல்லாம் கூட்டிக் கொண்டு ராஜாபுரத்தில் கொண்டு போய்த் தங்க வைத்தார். சம்பாஜியின் மகன் உமாஜி, அவர் மனைவி சக்குபாயி, அவர்களுக்கு ஒரு மகன் ஆகியோர் இருந்தனர். அந்த குழந்தைக்கு பரசோஜி என்று பெயர்.
            ஷாஜியின் முதல் மனைவியின் மகன் ஏகோஜி என்பதால் ஷாஜியின் விருதுகள் அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. ஏகோஜி தன் மனைவியரான தீபா பாயி, சயி பாயி ஆகியோருடன் தன் படையுடன் பெங்களூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்த சமயத்தில் அலியடில்ஷா ஏகோஜியுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பி அவருடன் பேசி அவரைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதோடு அவரை பெங்களூரில் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
            இந்த காலகட்டத்தில் தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக்கருக்கும், மதுரை சொக்கநாத நாயக்கர் அவர் தம்பி அழகிரி நாயக்கர் ஆகியோருடன் பெண் கொடுத்தல் விஷயமாக விரோதம் உன்டாகி மதுரைக் காரர்கள் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்து விஜயராகவ நாயக்கரையும் அவர் மகனையும் போரில் கொன்று விட்டனர். விஜயராகவ நாயக்கர் தான் போருக்குப் போகும் முன்பாக தன் நம்பிக்கைக்கு உரிய ஆள் ஒருவரிடம் சொல்லி தான் போரில் மாண்டு போனால் தன் அந்தப்புரப் பெண்கள் யாரும் மதுரை நாயக்கர் வசம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அப்படி நேருமானால் அரண்மனையின் அந்தப் புரத்தை வெடிவைத்துத் தகர்த்துவிட வேண்டுமென்று சொல்லிவிட்டுப் போனார். அப்போது தஞ்சை கோட்டையின் வடக்கு வாசல் அருகில் ராஜகோபாலசாமி ஆலயத்துக்கு எதிரில் நடந்த போரில் விஜயராகவ நாயக்கரை மதுரை படைத் தளபதிகள் வெட்டிக் கொன்று விட்டனர். அதன்படி அவர் மாண்ட பின் அரண்மனை அந்தப்புரம் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது. எல்லா பெண்களும் உயிரிழந்தனர். அதில் விஜயராகவ நாயக்கரின் பேரக் குழந்தை ஒன்று மட்டும் தப்பிப் பிழைத்தது. அந்த செங்கமலதாஸ் எனும் குழந்தையை ஒரு ஆயா நாகைப்பட்டணம் கொண்டு போய் வளர்த்தாள். இந்த செய்தி அறிந்த ராயசம் வெங்கண்ணா எனும் அமைச்சர் அந்தப் பையனை வளர்ந்து இளைஞனாக இருந்த நேரத்தில் பல வீரர்களுடன் சென்று அலியடில்ஷாவிடம் முறையிட்டு இந்தச் சிறுவன் தான் தஞ்சைக்கு வாரிசு என்றும், மதுரை நாயக்கர்கள் தஞ்சையை ஆக்கிரமித்துக் கொன்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லி இந்த பையன் செங்கமலதாசுக்கு ஆட்சியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி அலியடில்ஷா பெங்களுரில் இருந்த ஏகோஜியை அழைத்து தன் தளபதிகள் ஏதில்ஷா, காதர் கலாஸ்கான் எனும் இருவரையும் அனுப்பி தஞ்சையை மீட்டுக் கொடுக்கச் சொன்னார். அவர்கள் ஏகோஜி தலைமையில் வந்து தஞ்சையை மீட்டு செங்கமலதாசுக்குக் கொடுத்தனர். வரும் வழியில் அவர்கள் ஆரணியை வென்று அங்கு வேதாஜி பாஸ்கர் என்பவர் வசம் கொடுத்துவிட்டு தஞ்சையை மீட்டுக் கொடுத்தனர். அப்படிச் செய்துவிட்டு ஏகோஜி ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திருமழபாடி எனும் இடத்தில்  1596இல் அவருடைய மனைவி தீபாபாயிக்கு ஒரு மகன் பிறந்தான். அவருக்கு சரபோஜி என்று பெயரிட்டார். மீட்டுக் கொடுத்த தஞ்சாவூரில் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஏகோஜியிடம் பஞ்சாயத்துக்குப் போன போது அவரையே தஞ்சையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டதால், அவர் அலியடில்ஷாவுக்குச் சொல்லி அவர் அனுமதியுடன் தஞ்சைக்குத் திரும்பி அரசராக ஆனார். அலியடில்ஷா அனுப்பி வைத்த சர்தார்களான இருவரையும் நிறைய பரிசுப் பொருட்களுடன் திரும்ப அனுப்பி வைத்தார் ஏகோஜி.
            சிவாஜிக்கு எட்டு மனைவியர், அவர்கள் சயிபாயி, காசிபாயி, சக்வராபாயி, புதுனாபாயி, சகுணாபாயி, சோயரிபாயி, மாளவோ, விசாரே குலத்திலிருந்து இரு பெண்கள்  ஆக எண்மர். இதில் மூத்த மனைவி சயிபாயிக்கு மூன்று பெண் குழந்தைகள். 1596இல் ஆண் குழந்தை சம்பாஜி பிறந்தார். சிவாஜியின் மூத்த பெண் சக்குவார்பாயியை நிம்பல்கர் குடும்பத்திலும், இரண்டாவது பெண் ராணு பாயியை ஜாதவ் குடும்பத்திலும், மூன்றாவது பெண் அம்பிகா பாயியை மாடிக் குடும்பத்திலும் திருமணம் செய்து கொடுத்தார். மாடிக் குடும்பத்தாருக்கு ஷாஜி செஞ்சிப் பகுதியில் சில பகுதிகளைக் கொடுத்தார்.
            சிவாஜியின் இன்னொரு மனைவியான சக்வராபாயிக்குக் கமலா பாயி என்றொரு பெண், இவளை சிவாஜி, நேதோஜி என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.  சுகுணா பாயிக்கு ராஜகுமாரா பாயி என்றொரு பெண் இருந்தாள். இவளை கேனோஜி சிற்கே என்பவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். சிவாஜியின் இன்னொரு மனைவி சோயரி பாயிக்கு ராஜராஜா என்ற ஒரு மகனும் தாது பாயி எனும் ஒரு மகளும் இருந்தனர். மற்ற மனைவியருக்கு மக்கட்பேறு இல்லை.
            சிவாஜி தன் மூத்த மகன் சம்பாஜிக்கு 1602இல் பட்டம் கட்டி புனே பகுதியையும், இன்னொரு மகன் ராஜா ராம் என்பவருக்கு செஞ்சி அரசையும் அளித்தார். அதன் பின் புனே, சுல்தான்கள் வசம் போய்விட்டது.  ராஜாராம் செஞ்சியை விட்டு நீங்கி மீண்டும் தந்தையிடம் சென்ற பிறகு அவருக்கு பனாலகெட் கோட்டை கொடுக்கப்பட்டது.
            ஒரு முறை சிவாஜி ராஜா ராமேஸ்வரம் யாத்திரை சென்று தனியொரு ஆளாகத் திரும்பி வந்து கொண்டிருந்த போது ஏகோஜியின் ஆட்சியின் கீழ் இருந்த தஞ்சாவூருக்கு வந்திருந்தார். இவர் வந்தது ஏகோஜிக்குக் கூட தெரியாது. சிவாஜி ராஜா ஊருக்குள் வந்து தஞ்சாவூர் கோட்டையை நன்கு சுற்றிப் பார்த்தார். தன் வழிப்பயணத்துக்கு பணம் தேவைப் பட்டதால், தன்னுடைய  தலைப்பாகை, மோதிரம் இவற்றை ஒரு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகையில் திருமானூர் அருகில் கொள்ளிட வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு அங்கிருந்த கிராம மக்களால் யார் என்றே இவ்ரைத் தெரியாமல் காப்பாற்றி கரை சேர்க்கப்பட்டார். இதில் சிவாஜி ராஜாவின் குதிரையும் ஆற்று வெள்ளத்தில் போனதை கிராம மக்கள் காப்பாற்றினர். சிவாஜி ராஜாவுக்கு காய்ச்சல் வந்து சில நாட்கள் அந்த கிராம மக்கள் பாதுகாப்பளித்து சுகப்படுத்தினர். உடல் நலம் பெற்றதும் இவர் விடை பெற்றுக் கொண்ட பொதும் அவர் தன்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்ளாமலே ஊர் திரும்பிய சமயம் அவ்வூர் மக்களுக்கு இரு குறுவாளையும் ஒரு கேடயத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றார். (ஒய்.பி.சவான் மகாராஷ்ட்ரா மாநில முதல்வராக இருந்த போது மும்பையிலிருந்து வந்த ஒரு ஆய்வுக் குழு, திருமானூர் அருகில் கொள்ளிடக் கரையருகில் இருந்த ஒரு பவானி அம்மன் ஆலயத்தில் சத்ரபதி சிவாஜி அந்த கிராம மக்களுக்குக் கொடுத்த இரு குறு வாட்களும் கேடயமும் அம்மன் விக்ரகத்துக்குப் பின்புறம் சுவற்றில் மாட்டப்பட்டிருந்ததை, சிவாஜியினுடையது என்பதைக் கண்டு பிடித்து எடுத்துச் சென்ற வரலாறு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் 1974இல் அவர் முடிசூடிய 300ஆம் ஆண்டு விழா மலரில் வெளிவந்தது).
சிவாஜி ராஜா ஊர் திரும்பிய பிறகு தஞ்சை ஏகோஜிக்கு ஒரு கடிதம் எழுதி தான் தஞ்சையில் ஓரிடத்தில் தன் தலைப்பாகை, மோதிரம் இவற்றை அடகு வைத்திருப்பதைச் சொல்லி அதனை மீட்டு தனக்கு அனுப்புமாறு கடிதம் எழுதினார் என்கிற செய்தி, இரண்டாம் சரபோஜி எழுதி தஞ்சை ஆலயத்தில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருக்கிற “போன்ஸ்லே வம்சத்து வரலாறு” எனும் பகுதியில் விவரங்கள் காணப்படுகின்றன. இது இப்போது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
            சத்ரபதி சிவாஜி தன்னுடைய வீரத்தினாலும், தட்சிண சுல்தான்களையும், டெல்லி பாதுஷாவையும் எதிர்த்துப் போரிட்டு மேற்குப் பகுதியில் பற்பல கோட்டைகளைத் தனதாக்கிக் கொண்டு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர், தனது 53ஆம் வயதில் 3-4-1680இல் காலமானார். சத்ரபதி சிவாஜியின் புகழும் வீரமும் காலம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும் வீர காவியம் ஆகும். வாழ்க சத்ரபதி சிவாஜி மகராஜ் புகழ்!!
            எத்தனையோ மாவீரர்கள், மகான்கள் இந்த பாரத புண்ணிய பூமியில் தோன்றி செயற்கரிய சாதனைகளைச் செய்திருக்கின்றனர். அவர்களைப் போற்றி வணங்குவோம். “நமது பூர்வீக மகான்களை போற்றி வணங்காத நாட்டில் புதிய மகான்கள் தோன்றமாட்டார்கள்” என்பது பாரதியின் வாக்கு.
           
           



Tuesday, January 7, 2020

வீரத் துறவி சுப்பிரமணிய சிவா


                                               
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த தேசபக்தர்கள் மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

இப்போது 'வீரமுரசு' எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும், காரணம் இவரைப் பற்றி இன்றைய சூழலில் எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. சுதந்திரப் போராட்டம் தொடங்கிய காலத்தில், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சர்வ வல்லமை பொருந்திய ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுக்க தென்னாட்டில் உருவான ஒருசில வீரர்களில் இவரும் ஒருவர். . இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்றால் “வீரத் துறவி” என்றழைக்கப்பட என்ன காரணம் எனும் ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே இவரது போராட்டம் அமைந்திருந்தது. 

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோல்வியுற்று, பின்னர் பிழைப்புக்காகத்  தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார்.

இவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டுத்  துறவியாக ஆனார்.அவர் நினைவாக வத்தலகுண்டு பேருந்து நிலையத்துக்கு  இவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் நாட்டில் எழுச்சியுற்று வரும் சுதந்திர உணர்வினால் இவருக்கும் தேசபக்தி வேகம் இயல்பாக உண்டாகியது. தேசபக்தியின் காரணமாக  இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிரித்த காரணத்தால் நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார். சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் இருந்த வேகமும் தேசபக்தியும் மக்களைக் கவர்ந்திழுத்தது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் செயல்பாடுகளும், சென்னையில் விபின் சந்திர பாலரின் சொற்பொழிவும் சேர்ந்து சிவாவின் உள்ளத்தில் சுதந்திர தாகம் ஏற்பட்டது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரத்துக்காக முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில்சில் வ.உ.சி. அறிவித்திருந்த  வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தேச விடுதலை வேட்கையோடு தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்', என்று முழக்கமிடுவார். தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வார். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை பெற்று  நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமையான பாதிப்பினால், இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக பிரபல காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஓராண்டு சிறைவாசம். தனது தண்டனையை எதிர்த்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவருக்கு மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தில் நம்பிக்கை இல்லை. பால கங்காதர திலகர் மீது நம்பிக்கை கொண்டவர்.

இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு, ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் துன்பத்தையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய நோய், ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியடிகளின் அகிம்சை வழியை  ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் மீது அக்கறை காட்டவில்லை. மனம் உடைந்து ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த சுப்ரமணிய  சிவா   1925 ஜூலை மாதம் 23ஆம் நாள் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

கப்பலோட்டிய தமிழன் என்று ம.பொ.சி. அவர்களால் புகழப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளையுடனான சிவாவின் தொடர்பு பற்றிய எரியும் சுதந்திரத் தீயின் வீரியத்தை அதிகரிப்பதாக அமைந்தது. வ.உசி.யுடன் இவர் தனது 23ஆம் வயதில் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த இளைய வயதில் இவர் துறவு மேற்கொண்டது இவருடைய மன உறுதியைக் காட்டுவதாக அமைந்தது. இவருடைய தீரமிக்க உரைகள் வ.உ.சியை மிகவும் கவர்ந்தது, அதனால் அவரைத் தன்னுடன் இருந்து காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடச் செய்தார்.

தூத்துக்குடியில் இருந்த வெள்ளைக்காரர்களின் கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடந்தது. அதை வ.உ.சியும் சிவாவும் ஒருங்கிணைத்துப் போராடி வெற்றி பெற்றனர். சுதந்திரப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய அந்த ஆரம்ப காலகட்டத்தில் இவ்விருவரும் இந்தியாவின் தென் கோடியில் பிரிட்டிஷ் அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தனர். இவர்களுடைய நடவடிக்கைகள் பிரிட்டிஷ் அரசுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது.

1908ஆம் ஆண்டில் வங்கத்து தேசபக்தர் விபின் சந்த்ர பால் சிறையிலிருந்து விடுதலையானார். அதனைக் கொண்டாடுவதற்காக தூத்துக்குடியில் வ.உ.சி அவர்கள் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே வ.உ.சி. அந்தக் கூட்டத்தைத் திருநெல்வேலியில் நடத்த ஏற்பாடுகள் செய்தார். அதில் சுப்ரமணிய சிவாவும் கலந்து கொண்டார். ஏற்கனவே பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்குப் போட்டியாக கப்பல் கம்பெனி தொடங்கிய வ.உ.சி. மீது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கோபம் இருந்தது. எனவே அவர்கள் வ.உ.சி. மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

            அவர்கள் எதிர்பார்த்தபடி வ.உ.சியும், சிவாவும் திருநெல்வேலியில் நடத்தவிருந்த பொதுக்கூட்டத்தைக் காரணம் காட்டி அவர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டு, இருவரையும் கைது செய்தனர். இதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்தனர். திருநெல்வேலி நகரம் முழ்வதும் போராட்ட களமாக மாறியது. கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, கடைகள் அடைக்கப்பட்டன, எங்கெங்கு பார்த்தாலும் மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துணை கலெக்டராக இருந்த ஆஷ் எனும் பிரிட்டிஷ்காரர் போலீஸ் படையுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டனர். கண்மூடித்தனமாக சுடப்பட்டதில் சிறுவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த வீர தீரச் செயலுக்காக ஆஷ் துணை கலெக்டர் பதவியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராகப் பதவி உயர்வு பெற்றார். வ.உ.சியும் சிவாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1908ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி மகாகவி பாரதியார் தனது “இந்தியா” பத்திரிகையில் கீழ்வருமாறு எழுதியிருந்தார்.

“திங்கட்கிழமை காலை பாளையன்கோட்டை சிறைக்குச் சென்று சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா ஆகியோரைக் கண்டு பேசினேன். முன்பு அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும், தேஜசுடன் விளங்கியதோ அதே போல இப்போதும் இருக்கக் கண்டேன். உடனே என் மனதில் தோன்றிய ஒரு கம்பராமாயணப் பாடல்:

“மெய்த்திருப் பதமே வென்ற  போழ்தினும்                                                                                   இத்திருத் துறந்து ஏகு என்ற காலையும்                                                                                     சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை                                                                                              ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவான்”

கம்ப ராமாயணத்தில் வரும் இந்தப் பாடல் சொல்லும் கருத்து, இராமனுக்கு முடிசூட்டல் என்று சொன்ன பொதும் சரி, இல்லை உனக்கு ராஜ்யம் இல்லை காட்டிற்குச் செல் என்றபோதும் சரி அவர் முகம் எந்த வருத்தத்தையும் காட்டாமல் அன்று புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் போல இருந்ததைப் போல, அவ்விருவர் முகமும் இருந்தது என்பதை எடுத்துக்காட்டாகச் சொல்லி போற்றியிருக்கிறார் பாரதியார்.

இவ்விருவர் மீதும் நடந்த நெல்லை சதி வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக காவல் துறை அதிகாரியாக இருந்த வேங்கடவரதாச்சாரியார் என்பவர் சாட்சியம் சொன்னார். அப்போது வேளாளரான வ.உ.சி. பிராமணரான சுப்ரமணிய சிவாவுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் என்று சொன்னதைக் குறித்து மகாகவி பாரதி தன் “இந்தியா” பத்திரிகையில் எழுதியிருந்த வரிகள் இவை:

“இன்னுமொரு போலீஸ்காரர், ஸ்ரீசிவம் தூத்துக்குடியில் ஸ்ரீசிதம்பரம் பிள்ளையோடு, ஒரே வீட்டில் வாசம் செய்துகொண்டு இருந்தாரென்றும், இது வர்ணாசிரம தர்மத்துக்கு விரோதமென்றும், இதன் பொருட்டு ஸ்ரீசிவம் ஜாதியினின்றும் பகிஷ்காரம் செய்யப்படுவதற்குத் தகுதியுடையவராவார் என்றும் சொல்லியிருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கு மனுதர்ம சாஸ்திரத்தில், இத்தனை தூரம் ஆழமான ஞானம் இருப்பது பற்றி சந்தோஷம் அடைகிறோம்! அதிவர்ணாசிரமியாக, சந்யாச நிலை பெற்றவர்களுக்கு வர்ணாசிரம பேதம் கிடையாதென்று இந்தப் போலீஸ்காரருக்குத் தெரியாது போலும்! போலீஸ் மனுநீதியில் மேற்படி விஷயம் சொல்லப்படவில்லையென்று தோன்றுகிறது. பிராமண ஜென்மம் எடுத்துப் போலீஸ் உடை தரித்துக் கொண்டு, ஒரு மிலேச்ச அதிகாரியின் கீழ் கைகட்டி நின்று காவல் வேலை செய்வது, சாஸ்திரத்துக்கு ஏற்றதுதானோ? இதைப் பற்றி இந்த வேங்கடவரதாச்சாரியார் என்ற போலீஸ்காரர் படித்திருக்கும் மனுதர்ம சாஸ்திரத்திலே, என்ன சொல்லியிருக்கிறதென்று அறிய விரும்புகிறோம்”.     

அதே காலகட்டத்தில் தூத்துக்குடியில் தலைமைக் காவலராக குருநாத ஐயர் என்பார் இருந்தார். இவர் போலீசில் இருந்தாலும் தேசபக்தி மிக்கவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் அதிக மரியாதை கொண்டவர். பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் இவர் தனது போலீஸ் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வெளியேறியவர்.  இவருடைய செயலைக் கண்டித்து அப்போதைய அரசாங்கம் இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவரையும் பாரதியார் சிறையில் சந்தித்துப் பேசிவிட்டு, அதுபற்றி தனது “இந்தியா” பத்திரிகையில் எழுதியுள்ள பகுதி.

“சிறையில் நான் தலைமைக் காவலராக இருந்த குருநாத ஐயரைச் சந்தித்தேன். அவர் என்னைக் கண்டவுடன் “வந்தேமாதரம்” என்று முழங்கினார். அவரது குரல் சிறைச்சாலை முழுவதும் எதிரொலித்தது. அவருக்கு இந்த சத்திரிய பார்வையும், சத்திரிய நடையும் எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை”  (இந்தியா 2-5-1908)

வ.உ.சி. அவர்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் 1908இல் ஒரு வழக்கைத் தொடுத்தது. அது இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ, 109 பிரிவுகளின்படியும், அந்தணரான சுப்ரமணிய சிவாவுக்கு தங்க இடமும், உணவும் அளித்து ஊக்குவித்தமைக்காக 153-ஏ பிரிவின்படியும், சிதம்பரம் பிள்ளை மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர்.  சிவா மீது ராஜத் துவேஷ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோர் சார்பில் தஞ்சையைச் சேர்ந்த வக்கீல் என்.கே.ராமசாமி, ஆர்.சடகோபாச்சாரியார், சி.நரசிம்மாச்சாரியார், வி.வெங்கட்டராமையர், மதுரை சோமசுந்தர பாரதியார், எஸ்.டி.கிருஷ்ண ஐயங்கார், டி.ஆர்.மகாதேவய்யர் ஆகியோர் ஆஜராகி வழக்கை நடத்தினர். அரசாங்கம் சார்பாக பாரிஸ்டர் பவல் ஆஜரானார். வழக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே என்பார் முன்பு நடைபெற்றது. இரண்டு மாத காலம் நடைபெற்ற இந்த வழக்கைப் பற்றி பாரதியார் தனது “இந்தியா” பத்திரிகையில் எழுதியது:

            “ஸ்ரீசிதம்பரம் பிள்ளை வழக்கு விசாரணையை ‘ஒரு கேலிக்கூத்து’ என்று சொல்லியது முழுவதும் ஒக்கும். கேஸ் நடவடிக்கைகளைப் படித்துப் பார்க்கும்போது வெகு ஆச்சரியமாக இருக்கிறது. ஸ்ரீசிதம்பரம் பிள்ளை பேசியதில் ராஜத் துவேஷம் ஒன்றும் இல்லாவிட்டாலும், இவரது பிரசங்கத்தினால்தான் கலகம் உண்டாயிற்று என்று ஸ்தாபிக்கப் பார்க்கிறார்கள். ஸ்ரீபிள்ளையின் அறிவையும் அவரது பெருந்தன்மையையும் கவனிக்கும் போது, அளவற்ற மனக் குழப்பம் ஒரு புறத்திலும், சந்தோஷம் ஒரு புறத்திலுமாக உதிக்கின்றன”.   (இந்தியா 18-4-1908)

இந்த வழக்கில் சுப்ரமணிய சிவா அளித்த வாக்குமூலத்தையும் “இந்தியா” பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதன் சுருக்கம் இதுதான்:

            “நான் ஒரு சந்நியாசி. ‘முக்தி’யின் விதிகளைப் பற்றியும், அதை அடைவதற்குரிய மார்க்கங்களைப் பற்றியும் பிரசாரம் செய்வதே என் பணியாகும். ஒரு ஆன்மாவிற்கு “முக்தி” என்பது அதற்கு அந்நியமான சகல கட்டுகளிலிருந்தும் விடுபடுவதாகும். ஒரு தேசத்திற்கு “முக்தி” என்றால் சகலவிதமான அந்நிய அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவது – அதாவது ‘பரிபூரண சுயராஜ்யம்’ என்றே பொருள். அதன் பிரகாரம் சுயராஜ்யத் தத்துவத்தையும், அதை அடைவதற்கான வழிவகைகளையும் பற்றியும் நான் எனது நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னேன். எனது நாடு சுயராஜ்யம் அடைவதற்கு தடங்கலாக நிற்கும் அனைத்தையும் பகிஷ்கரிக்கும்படி – மறியல் முறை – சாத்வீக எதிர்ப்பு – தேசியக் கல்வி இயக்கம் பற்றி பிரசாரம் செய்தேன்.

            எனது சொற்பொழிவுகள் அமைதியைக் குலைத்தன, ராஜபக்தியை சிதைத்தன, சர்க்காருக்கும், ஐரோப்பியருக்கும் எதிரான உணர்ச்சிகளை உண்டாக்கின என்று கூறுவது சிரிப்பிற்குரியதே!

            ஒரு மனிதன் உண்மையிலேயே ஒரு நோயினால் கஷ்டப்பட்டாலொழிய, அந்த நோயின் வேதனையை அவன் உணரும்படி மற்றவர்களால் செய்ய இயலாது. அதே மாதிரி, மக்களிடையே அமைதியின்மை முதலியற்றிற்கு உண்மையான காரணங்கள் இருந்தாலொழிய வாய்ப்பேச்சு மூலம் அவற்றை தூண்டிவிட முடியுமென்று சொல்வது மடத்தனம்.

            ஆங்கிலேயர்கள் இந்நாட்டைப் போர் புரிந்து வெற்றி மூலம் பெற்றாரில்லை. தானமாகவும் அடைந்தாரில்லை. ஆனால், அரசாண்டவர்களிடமிருந்து, தளபதிகளை வஞ்சகமாகப் பிரித்தும், பொய்ப் பத்திரங்கள் தயாரித்தும், கள்ளக் கையெழுத்திட்டும், எளிய மனம் படைத்தோரை ஏய்த்தும் இன்னோரன்ன தந்திரங்களும், துரோகங்களும் பலப்பல செய்ததன் பயனாகவே, இந்நாட்டை அடைந்துள்ளனர். இத அதிருப்தி மக்களின் உள்ளத்தில் அதிகமாக வளர்ந்து, 1857இல் எரிமலையாக வெடிக்கும் அளவிற்கு வளர்ந்தது.

            இம்மண்ணிலே பிறந்து வளர்ந்த மக்களுக்கு இல்லாமல், வாழவந்த ஐரோப்பியர்களுக்கே அதிகமான சலுகைகளையும், உரிமைகளையும் வழங்கும் சட்டங்கள் பல உருவாக்கப்பட்டன. பலவிதமான வரிகளின் பெயரால், மக்களின் ஜீவரத்தம் உறிஞ்சப்பட்டது. பஞ்சமும், கொடுநோயும், உள்நாட்டுக் குழப்பங்களும், இந்நாட்டையே தங்களது நிரந்தர குடியிருப்பாகக் கொண்டுவிட்டன.

            மக்களின் தலைவர்கள் பலர், சட்டத்தின் பொய்யான ஏமாற்றான, சில காரணங்களால் காட்டப்பெற்று, சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கிரிமினல் வழக்கு விசாரணைகள் வெறும் கேலிக் கூத்துகளாகி விட்டன.

            இத்தகைய மனிதத் தன்மையற்ற கொடிய நடவடிக்கைகளெல்லாம் சேர்ந்து, ஆட்சிப் பொறுப்பின் கொடுங்கோன்மையையும், அது மாற வேண்டிய அவசியத்தையும் மக்கள் உணரும்படி செய்தன. மக்கள் அவிவித உணர்ச்சி பெறுவது இயல்பேயாகும்.

            அநியாயத்தை அகற்றிவிட்டு, தர்மத்தை அதன் இடத்திலே நிலைநிறுத்தவே, நேர்மையான சிந்தனையாளன் ஒவ்வொருவனும் பாடுபடுவான். அவ்வாறே இந்திய நாட்டினரும் அந்நிய ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் சுயராஜ்யத்தை அமைப்பதற்காக, இப்பொழுது உழைத்து வருகிறார்கள்.”

            இதுதான் சிவா நீதிமன்றத்தில் எடுத்துரைத்த வாதம். இதனைத் தொடர்ந்து 1908 ஜூலை 7இல் நீதிபதி பின்ஹே தனது தீர்ப்பை வழங்கினார். வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இரண்டு ஜென்ம தண்டனை, அதாவது நாற்பதாண்டு கால சிறைவாசம், சிவாவுக்கு பத்தாண்டு காலம் தீவாந்திர தண்டனையும் வழங்கினார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே இதுபோன்ற நாற்பதாண்டு கால சிறை தண்டனை என்பது எவருக்குமே கொடுக்கப்பட்டதில்லை.

            நீதிமன்றத்தில் இந்த தண்டனை விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்த வ.உ.சியின் தம்பி மீனாட்சிசுந்தரம் என்பார் தனது சகோதரருக்கு அளிக்கப்பட்ட கொடிய தண்டனையைக் கேட்டு மனம் பேதலித்து வாழ்நாள் முழுவதும் மனம் கலங்கியவராகவே வாழ்ந்தார். இந்தத் தீர்ப்பை அந்நிய நாட்டு பத்திரிகைகள் உட்பட இந்திய பத்திரிகைகள் அமிர்தபஜார் பத்ரிகா, சுதேசமித்திரன், ஸ்டேட்ஸ்மென், ஸ்டாண்டார்டு போன்றவை கண்டித்து எழுதின. இந்த தீர்ப்பு அப்போது லண்டனில் இருந்த இந்தியா மந்திரியான லார்ட் மார்லியைக் கூட அதிர்ச்சியடைய செய்து விட்டது. இந்த தண்டனையைச் சிறிதும் ஆதரிக்க இயலாது, இந்த தவறு திருத்தப்பட வேண்டுமென்று கருத்து வெளியிட்டார். அதன் விளைவாக நீதிபதி பின்ஹே அங்கிருந்து மாற்றப்பட்டார். வ.உ.சியும் சிவாவும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தார்கள். அதில் இருவருக்கும் தலா ஆறாண்டுகள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

            வ.உ.சி. கோவை சிறையிலும், கண்ணனூர் சிறையிலும் வைத்திருந்தனர். சிறையில் அவருக்கு செக்கிழுக்கும் பணி கொடுக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை.  சிவா திருச்சி சிறையில் மாவு அறைத்தல், கல் உடைத்தல் போன்ற கடுமையான பணிகளைச் செய்து உடல் நலம் கெட்டார். சிறையில் தொழு நோய் உண்டாகி அவர்களுக்கான தனிச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

            இப்படி இவ்விருவரும் சிறைகளில் பட்ட பாடுகளைக் கேள்விப்பட்டுதான் மகாகவு பாரதியார் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” எனும் பாடலில் “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும், நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ!” என்று பாடினார். சிறைவாசம் சிவாவின் உடலை மிகவும் மோசமாக பாதித்து விட்டது. சிறையிலிருந்து வெளிவந்த பிறகு “ஞானபானு”, “பிரபஞ்சமித்திரன்” ஆகிய பத்திரிகைகளை நடத்தினார். சிறைவாசத்தின்போது இவர் பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

            1921ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் காரைக்குடியில் தனது ஆசிரமத்தில் இருந்த சிவாவை மீண்டும் கைது செய்தனர். வழக்கு நடந்து இவருக்கு ரூ.500 அபராதமும் கட்டத் தவறினால் ஆறுமாத தண்டனையும் அளித்தார்கள்.  அபராதத் தொகை கட்ட இயலாமல் அவர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருடைய உடல் நிலை மிகவும் அபாயகரமான நிலைமைக்குச் சென்றதால் மருத்துவர் சிபாரிசில் 1922 ஜனவரி 12இல் விடுதலை செய்யப்பட்டார்.

            பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் எழுப்ப அவர் எடுத்த முயற்சிகள் அவர் காலத்தில் நடைபெறவில்லை. நோயின் கடுமையினால் இவர் தனது 41ஆம் வயதில் 1925 ஜூலை 23ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். இப்போது பாப்பாரப்பட்டியில் சிவாவின் நினைவாக எழுப்பப் பட்டிருக்கும் மணிமண்டபம் அவர் நினைவை போற்றி பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

                                                                       


திருவாடனை சிறை உடைப்பு.


                          
            1942 ஆகஸ்ட் புரட்சி தமிழ்நாட்டின் உட்பகுதியிலும் தீவிரமடைந்திருந்தது. அந்த நாள் காங்கிரஸ் கட்சியில் சின்ன அண்ணாமலை நன்கு பிரபலமான பெயர். ராஜாஜி, கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, ம.பொ.சி. ஆகியோருடன் நெருங்கிய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் இவர். காரைக்குடி கம்பன் விழா நடத்தி வந்த திரு சா.கணேசன் அவர்களுடைய உறவினர் இவர். தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் பெயர் அண்ணாமலை என்பது, அதனுடன் “சின்ன” சேர்ந்த வரலாறு ஒன்று உண்டு. திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் கூட்டமொன்றில் ராஜாஜி தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திருவண்ணாமலையில் பிரபலமான காங்கிரஸ் தலைவராக இருந்தவர் திரு அண்ணாமலை பிள்ளை என்பவர், அவரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். ராஜாஜி எழுந்து இப்போது அண்ணாமலை பேசுவார் என்று அறிவித்தார். மக்கள் தங்கள் ஊர் அண்ணாமலை பிள்ளைதான் பேசப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இளைஞர் ஒருவர் வந்து மேடையில் மைக்கின் முன்பு நின்றார். மக்கள் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த ராஜாஜி மைக் முன்பு வந்து “நான் அறிவித்தது உங்கள் ஊர் அண்ணாமலை பிள்ளையை அல்ல, இதோ, இந்த “சின்ன” அண்ணாமலையைத்தான்” என்று சொன்னார். அது முதல் இந்த அண்ணாமலை சின்ன அண்ணாமலையாக அரசியல் களத்தில் தேசிய கூட்டங்களில் முழங்கிக் கொண்டிருந்தார்.

            இவருடைய உறவினர் திரு சா.கணேசன், காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்தி வந்தவர். நமது சின்ன அண்ணாமலை அந்த தீவிர காங்கிரஸ் தலைவருடனேயே சுற்றி வந்து கொண்டிருந்ததால், அவரும் சா.கணேசனைப் போலவே தீவிர தேசபக்தராக விளங்கி வந்தார். இளமைப் பருவத்தில் மலேயாவில் படித்துவிட்டு அவருடைய சொந்த கிராமமான சிறுவயலுக்கு வந்து சேர்ந்தார். தேவகோட்டையில் இருந்த இன்னொரு குடும்பத்திற்கு இவர் சுவீகாரம் கொடுக்கப்பட்டுச் சென்றவர்.

            இனி இவருடைய காங்கிரஸ் வரலாற்றுக்கு வருவோம். 1942 ஆகஸ்டில் பம்பாயில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் “க்விட் இந்தியா” எனும் வெள்ளை ஆட்சியே இந்தியாவை விட்டு வெளியேறு எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில்தான் காந்திஜி “செய் அல்லது செத்து மடி” (Do or Die) என்கிற கோஷத்தை எழுப்பினார். எப்போதுமி இல்லாத வகையில் அந்த தீர்மானத்தில் மகாத்மா காந்தி சொன்ன ஒரு கருத்து பின்னாளில் முக்கியத்துவம் பெற்றது. அது இந்த போராட்டம் நமது சுதந்திரத்தை நோக்கிய இறுதி போராட்டம். இதில் வெற்றி அல்லது வீர மரணம் என்பதைக் குறிக்கவே அந்த கோஷத்தை அவர் எழுப்பியதோடு, அவர் சொன்னார், இந்த முடிவினால் காங்கிரஸ் தலைவர்கள் சிறை செல்ல நேர்ந்தாலும், தொண்டர்கள் அவரவர்க்கு முடிந்த வகையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி யிருந்தார்.

            ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்றிரவே காந்திஜி உட்பட பல தலைவர்களும் கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பப் பட்டு சிறை வைக்கப்பட்டனர். நாடெங்கும் பெரும் எழுச்சி ஏற்பட்டு, இந்த அநியாய கைது நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவரவர்க்கு முடிந்த வகைகளில் எல்லாம் போராட்டம் நடைபெற்றதால், எங்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைகள் இல்லை. அதன் பாதிப்பு தமிழ்நாட்டிலும் ஏற்பட்டதன் விளைவு அதே நாள் இரவு தேவகோட்டையில் அப்போது பிரபலமான, இளம் காங்கிரஸ் தலைவராக இருந்த சின்ன அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார். இது குறித்து அவர் தன்னுடைய “சொன்னால் நம்பமாட்டீர்கள்” எனும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

            இவருடைய கைதுக்குக் காரணம் இவர் தேவகோட்டையில் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ் அதிகாரிகள் உள்புகுந்து அப்போது 144 தடை சட்டம் இருப்பதால் கூட்டம் நடக்கக் கூடாது என்று சொன்னார்கள். போலீசார் நீட்டிய அந்த காகிதத்தை சின்ன அண்ணாமலை வாங்கி கிழித்துப் போட்டு விட்டார். இதனைக் கண்ட மக்கள் கூட்டம் போலீசாரைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டனர். வேறு வழியின்றி போலீசார் வெளியேறி, அன்று நள்ளிரவில் சின்ன அண்ணாமலையைக் கைது செய்து விட்டனர். அவரைக் கைது செய்த ரிசர்வ் போலீசார் இவர் கையில் விலங்கை மாட்டி “இராம விலாஸ்” எனும் பஸ்சில் ஏற்றி பலத்த காவலுடன் தேவகோட்டையிலிருந்து 22 கி.மீ தூரத்திலுள்ள திருவாடனையில் இருந்த சப் ஜெயிலுக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

            மறுநாள் காலையில் கைது விஷயம் வெளியான பிறகு மக்கள் கொதித்தெழுந்து இவரை விடுதலை செய்யச் சொல்லி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஊரில் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. அன்று காலை இவரை திருவாடனைக்குக் கொண்டு சென்ற “இராமவிலாஸ்” பஸ் தீயிட்டு எரிக்கப்பட்டது. கலவரம் கட்டுக்கடங்காமல் போகவே போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் பலர் இறந்து போனார்கள். செய்தியறிந்து இதர கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கட் கூட்டம் தேவகோட்டைக்கு வந்து அங்கிருந்து திருவாடனையை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். பல்லாயிரம் மக்கள் ஒன்று திரண்டு திருவாடனைக்குச் சென்று அங்குள்ள சப் ஜெயிலை உடைத்து சின்ன அண்ணாமலையை வெளிக் கொண்டு வந்து விடவேண்டுமென்ற நோக்கத்துடன் வந்து கொண்டிருந்தனர். இந்த செய்தி அறிந்த திருவாடனை அரசாங்க அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் சப் ஜெயிலில் இருந்த சின்ன அண்ணாமலையிடம் நடந்து கொண்டிருக்கும் கலவரம் குறித்துச் சொல்லி, இப்போது என்ன செய்யலாம் என்று கலந்து ஆலோசித்தனர்.

            சின்ன அண்ணாமலை அவர்களிடம் வரும் கூட்டம் மிகப் பெரியது மட்டுமல்ல கோபத்தோடு வருகிறார்கள், அவர்களை அடக்குமுறையால் தடுத்துவிட நினைத்தால் அது மேலும் பெரும் கலவரமாக மாறிவிடும். ஆகவே மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தார் பாதுகாப்பு, அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி அவர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினார்.

            சின்ன அண்ணாமலை கொடுத்த உறுதியை ஏற்று தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு போலீஸ்காரர்கள் தங்கள் காக்கி சீறுடைகளைக் கழற்றி அங்கு வைத்துவிட்டு கோபத்துடன் வரும் மக்கட் கூட்டம் தங்களையோ, குடியிருப்பில் இருக்கும் தங்கள் குடும்பங்களையோ தாக்காமல் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் சென்றனர்.

            சற்று நேரத்திற்கெல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக வந்து கைகளில் பல்விதமான ஆயுதங்களுடன் சிறையை உடைக்கத் தயாராக வந்து சேர்ந்தனர். அந்தக் கூட்டத்தில் சின்ன அண்ணாமலையின் நண்பர் ஒருவர் திருவேகம்பத்தூர் பாலபாரதி செல்லத்துரை என்பவரும் இருந்தார். அவர் மூலம் வந்த மக்களை சிறைக்கு முன்பாக இருந்த மைதானத்தில் அனைவரையும் உட்கார வைத்தார்கள். நண்பர் செல்லத்துரை சின்ன அண்ணாமலையிடம் இப்போது நாங்கள் சிறையை உடைத்து உங்களை வெளிக் கொண்டு வரப் போகிறோம் என்றார். அங்கிருந்த வார்டன் உடைக்க வேண்டாம் இதோ சிறையின் சாவிகள் என்று கொடுத்து விட்டுப் போய்விட்டார். ஆனால் மக்களோ சிறையை உடைத்தே உங்களை வெளிக் கொணர்வோம் என்று சொல்லி, பூட்டை உடைத்து கதவைத் திறந்து விட்டார்கள்.

            அன்று நண்பகலில் நடந்த இந்த களேபரத்தில் அருகில் இருந்த போலீஸ் குடியிருப்பில் இருந்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பயத்தில் வீட்டுக்குள் பதுங்கியிருந்தனர். அங்கு போகவிருந்த கூட்டத்தினரைப் பார்த்து சின்ன அண்ணாமலை அங்கு போய் அவர்களைத் துன்புறுத்த வேண்டாம், அவர்கள் அனைவரும் நமக்கு ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள், அவர்கள் விட்டுச் சென்ற சீருடை இங்கே இருக்கிறது பாருங்கள் என்றதும், அதை கூட்டம் தீ வைத்து எரித்தது.

            அனைத்தும் நடந்து முடிந்ததும் கூட்டத்தினர் இவரைத் தங்கள் தோளில் தாங்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அதற்குள் திருவாடனை சப் ஜெயிலும், அதனைச் சுற்றியிருந்த அரசாங்க அலுவலகங்களுக்கும் தீவைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. இந்த ஊர்வலம் ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்த சமயம் எதிரில் வெகு தூரத்தில் போலீஸ் லாரிகள் அணிவகுத்து வந்து கொண்டிருந்ததைக் கண்டனர். கூட்டத்தினர் இதனால் கோபாவேசம் கொண்டு, அவற்றைத் தாக்க வேண்டுமென்று கிளம்பிய போது சின்ன அண்ணாமலை அவர்களைத் தடுத்தார். போலீஸ் கலவரத்தை அடக்க வந்து கொண்டிருப்பதால், இப்போது போய் நீங்கள் அதனை எதிர்த்து ஏதேனும் செய்தால் அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வார்கள், நம்மில் பலரும் இறக்க நேரிடும், ஆகையால் அனைவரும் ஆங்காங்கே சாலையோரத்திலுள்ள புதர்களில் ஒளிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.  எதிரில் வரும் மக்கள் கூட்டத்தை லாரிகளில் வந்த போலீசாரும் பார்த்துவிட்டனர். ஆகவே அவை இவர்கள் பதுங்கியிருந்த இடத்தை அடையும்போது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அதில் ஒரு குண்டு சின்ன அண்ணாமலையின் இடது கையில் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற பலரும் அவருக்கு முன்பாக வந்து நின்றதால் அவர்கள் அனைவரும் குண்டடி பட்டு இறந்து விழுந்தார்கள்.

            கூட்டம் சின்னாபின்னம் அடைந்தது. போலீசார் கண்மூடித்தனமாகக் கூட்டத்தைப் பார்த்து சுட்டுக் கொண்டு போய்விட்டார்கள். சுற்றிலும் ஒரே பிணக் குவியல், உயிர் போன உடல்களும் குண்டடிபட்டு ரத்தம் ஓட மயக்கமடைந்து கிடப்பவர்களுமாக அந்த இடமே யுத்த களம் போல் காணப்பட்டது. ஒரு தேசபக்தனைக் காப்பதற்காக இத்தனை உயிர்கள் பலியாவதா என்று சின்ன அண்ணாமலை மன வேதனை அடைந்தார். அங்கே நடந்தவைகளை நினைத்துக் கொண்டு அவரும் சிலரும் அங்கேயே வெகு நேரம் நின்றிருந்து விட்டு, நன்கு இருள் பரவியதும் அங்கிருந்து மெல்ல நடக்கத் தொடங்கினர்.

            நல்ல இருள், மேடு பள்ளம் தெரியாத நிலை, கால்களில் முட்கள் குத்தி ரத்தம் வரத் தொடங்கியது. இவருக்குக் கையில் குண்டு பாய்ந்து அதிகம் ரத்தம் கசிந்ததால் இவருக்கு மயக்கம் உண்டாகி வீழ்ந்து விட்டார். உடன் இருந்தவர்களும் மயக்க நிலையில் ஆங்காங்கே படுத்துவிட்டனர்.

            அங்கு எத்தனை நேரம் மயக்க நிலையில் கிடந்தார்களோ தெரியாது, அவர்களை யார் யாரோ வந்து தட்டி எழுப்பிக் கொண்டிருந்ததைக் கண்டு விழித்து எழுந்தனர். அங்கு சுமார் பத்து பதினைந்து பேர் சூற்றிலும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் போலீசாரோ என்று இவர்களுக்குச் சந்தேகம், ஆனால் அவர்கள் போலீஸ் அல்ல. இறந்து போன அவர்களது உறவினர்க்கு பால் ஊற்றி அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அப்படியானால் அவர்கள் விழுந்து கிடந்த இடம் சுடுகாடு என்பதறிந்து அங்கேயா இரவு முழுவதும் விழுந்து கிடந்தோம் என்று அதிர்ச்சி அடைந்தார்கள்.

            இனி திருவாடனைக்கோ அல்லது தேவகோட்டைக்கோ, காரைக்குடிக்கோ சென்றால் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று இவர் திருச்சிக்குச் சென்று அங்கு இருந்த காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.அருணாசலம் என்பவரைச் சென்று சந்தித்து நடந்த விவரங்களைச் சொன்னார். இவருடைய குண்டடிபட்ட கையையும், ரத்தக் கறையோடு இவர் வந்து நிற்பதைக் கண்டு டி.எஸ்.அருணாசலம் இவரை டாக்டர் ஒருவரிடம் அழைத்துச் சென்று கையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டை வெளியே எடுத்துவிட்டு கைக்குக் கட்டுப்போட்டு தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். டாக்டரும் ஒரு தேசபக்தர் என்பதால் இதை ரகசியமாகச் செய்து அவர்களை அனுப்பி விட்டார்.

            இவரைத் தேடி போலீஸ் பல இடங்களிலும் அலைந்து இவரைக் காணாமல் ஒரு அறிக்கை வெளியிட்டது. இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது. அந்த சூழ்நிலையில் அவர் திருச்சியில் தன்னுடன் இருந்தால் அவருக்கும் ஆபத்து என்று இவரை இன்னொருவர் வீட்டில் ரகசியமாகத் தங்க வைத்து விட்டார் டி.எஸ்.அருணாசலம்.

            அப்படியிருந்தும் போலீஸ் திரு அருணாசலத்தைக் கைது செய்து விட்டனர். இனி அங்கிருப்பது தனக்கு ஆபத்து என்று தெரிந்து சின்ன அண்ணாமலை அங்கிருந்து தெரிந்தவர் ஒருவருடைய காரில் கரூர் சென்றடைந்தார். அங்கு அப்போது டி.கே.சண்முகம் சகோதரர்களின் நாடகங்கள் நடந்து கொண்டிருந்தன. அவர்களிடம் போய் சின்ன அண்ணாமலை அடைக்கலம் புகுந்தார், அவர்களும் இவரை ஜாக்கிரதையாகப் பாதுகாத்தனர்.

            பிறகு கரூரிலிருந்து சென்னைக்குச் சென்று அங்கு சா.கணேசனைப் பார்த்து நடந்தவைகளைச் சொன்னார். அவர் இங்கு இருந்தால் போலீஸ் உன்னைப் பிடித்து விடுவார்கள், ஆகையால் நீ போய் காசியில் தங்கிக் கொள் என்று  ஒரு நண்பரையும் உடன் அனுப்பி சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இவரை தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன், ஏ.கே.செட்டியார், ராம்நாத் கோயங்கா ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.

            இவர்கள் சென்ற ரயில் இட்டார்சி எனும் நிலையத்தோடு நின்றது. மறுநாள்தான் காசிக்கு ரயில் இருந்தது. அது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம், ஜப்பான் குண்டு போடும் என்று மக்கள் பயத்தில் இருந்த நேரம். ஆகையால் ராணுவத்தினரும், காவல் துறையினரும் அதிக நடமாட்டம் இருந்தது. இவர்கள் இட்டார்சி நிலையத்தில் இறங்கி அங்கிருந்த உணவு நிலையத்தில் போய் சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்களுக்கு உணவு பரிமாறியவர் ஒரு தமிழர். இவர்களைக் கண்டதும் அவர் மகிழ்ச்சியோடு தானும் ஒரு தமிழன் ராமநாதபுரம் மாவட்டம் என்று சொல்லி அங்கு பெரிய கலவரமாமே, ஜெயிலை உடைத்து அங்கிருந்தவர்களை விடுதலை செய்து விட்டார்களாமே என்றதும், அப்படி விடுதலையானவர் தான் தான் என்று சின்ன அண்ணாமலை அறிமுகம் செய்து கொண்டதும் அந்த ஊழியருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் திருவாடனை ஜெயிலை உடைத்து மக்களால் விடுதலை செய்யப்பட்டவர் நீங்கள்தானா என்று அவரைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தாராம் அந்த ஊழியர்.

            இவர்களை அந்த ஊழியர் தன் முதலாளியிடம் சென்று அறிமுகம் செய்து வைக்க, அவரும் ஒரு தேசபக்தர் என்பதால் இவர்கள் தங்குவதற்கு ஒரு அறையைக் கொடுத்து ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அப்படி அங்கு அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவுக்குப் பிறகு அந்த ஓட்டல் முதலாளியும், ஊழியரும் ஒரு போலீஸ் அதிகாரியுடன் உள்ளே நுழைந்தார்கள். அடடா! இவர்கள் நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார்களோ என்ற சந்தேகம் இவருக்கு.

            ஆனால் அங்கு வந்த போலீஸ் அதிகாரி தமிழில் பேசினார். “இந்தத் தம்பி எல்லாம் சொன்னான். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி அவர்களைத் தனது வீட்டுக்கு வந்து தமிழ்நாட்டுச் சாப்பாடு சாப்பிட அழைத்தார் அந்த அதிகாரி. அவர் தன் பெயர் சுந்தர்சிங் என்றும் மதுரையைச் சேர்ந்த தான் காசியில் வியாபாரம் செய்ய வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், சோமசுந்தரம் என்கிற தன் பெயரை சுந்தர்சிங் என்று வைத்துக் கொண்டதாகவும் சொன்னார் அவர். அந்த அதிகாரியின் வீட்டில் இவரை அவர் மனைவி “வணக்கம்” என்று தமிழில் சொல்லி வரவேற்றதும் இவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அந்த அதிகாரி இவர்களுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து காசிக்கு வழி அனுப்பி வைத்தாராம்.

            காசியில் இவர் இருக்கும் நேரத்தில் அங்கு தேவகோட்டையில் போலீஸ் இவருடைய குடும்பத்தாரைத் துன்புறுத்தி இவர் இருக்குமிடம் கேட்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். அவருடைய தாயையும் துன்புறுத்திய செய்தி கேள்விப்பட்டு இவர் தானாகவே காசியிலிருந்து கிளம்பி அங்கு வந்து போலீசிடம் சரணடைந்தார். பின்னர் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இவரும் சிறைவாசம் செய்த பின் தமிழ்நாடு அரசியலில் காங்கிரசில் ஒரு சிறந்த பேச்சாளராக, பத்திரிகையாளராக, புத்தக வெளியீட்டாளராக விளங்கி வந்த ஒரு தேசிய வாதி. சின்ன அண்ணாமலையைப் போன்ற தேசிய வாதிகளின் வரலாற்றை இளைய சமூகம் தெரிந்து கொண்டால்தான் தேசபக்தி என்பதை நன்கு உணர்ந்து கொள்ள இயலும். அவரைப் போன்ற தியாகசீலர்களின் தியாகத்தால்தான் நாம் இன்றைய சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்ற உணர்வு இருக்க வேண்டும்.