பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, March 26, 2018

பெண்ணுரிமை காத்த பாஞ்சாலி.


                                   
மகாகவி பாரதியின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் நம் மனதில் தோன்றுகின்ற எண்ணம், அவனது தேசபக்தி, இறையுணர்வு, இலக்கியத் தேடல், சுதந்திரத்தில் நாட்டம், இவற்றோடு தனது மானசீக குருவாகப் போற்றிய சகோதரி நிவேதிதா தேவியின் சந்திப்பால் ஏற்பட்ட பெண் சமத்துவம் ஆகிய உணர்வுகளாம். தேச சுதந்திரம் அவன் வாழ்ந்த காலகட்டத்தில் எல்லா சுதேசிகளுக்கும் உண்டான இயல்பான உந்துதல். இறையுணர்வு பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தமிழ் மண்ணில் உதித்து இறைவனைத் துதித்துப் போற்றிய பெரியோர்களின் பாரம்பரியத்தின் தொடர்ச்சி. இலக்கியத் தேடல் அவனுடைய இயற்கையோடு ஒன்றிய இயல்பான வாழ்க்கை. பெண் சுதந்திரம் என்பது சகோதரி நிவேதிதா அம்மையார் அவன் மனதில் இட்ட ஒரு சிறு தீப்பொறி. அவன் பாடிய அந்த அக்னிக் குஞ்சை அவன் மனதில் விதைக்கக் காரணமாக இருந்தவர் சகோதரி நிவேதிதை. இந்தத் தாக்கத்தால்தான் பாரதியாரின் பாடல்களில் பெரும்பாலும் பெண்களை உயர்வு செய்யும் எண்ணங்களே பிரதிபலிக்கின்றன. அவன் எழுப்ப விரும்பிய பெருந்தீக்குத் தொடக்கமாக அவன் வைத்த அக்கினிக் குஞ்சுதான் அவனுடைய புதிய ஆத்திசூடி. அதில் “தையலை உயர்வு செய்” என்று அவன் விடுத்த செய்தி பெரியவர்களுக்கு அல்ல, குழந்தைகளுக்கு. பயிரை விதைக்க வேண்டிய இடம் பார்த்து விதைத்தான், எதிர்காலம் தையலர்க்குப் பெருமை சேர்க்கும் என்ற அவனது உள்ளுணர்வினால். “தையல் சொல் கேளேல்” எனும் அறிவுரை நிலவி வந்த காலத்தில் “தையலை உயர்வு செய்” என உரக்கக் குரல் கொடுக்கத் துணிந்தவன் மகாகவி பாரதி.

மகாகவியின் பெண்ணிய சிந்தனைகளை உற்று நோக்கினோமானால், அன்றைய காலகட்டத்தில் அடிமைகள் போலும், விலைப்படும் விலங்கினங்களைப் போலும் அடக்கி ஆளப்பட்ட மாதர்தம் விடுதலையில் அவன் காட்டிய ஆர்வம் புலப்படுகின்றது. மனதில் உறுதி வேண்டும் என்று பராசக்தியை வேண்டி பாடுகின்றபோதும், அவன் உள்ளத்தில் தோன்றிய கருத்து “பெண் விடுதலை வேண்டும்” என்பதும் அப்படி நிகழும் விடுதலையினால் இந்த மண் பயனுற வேண்டும், உண்மை நின்றிட வேண்டுமென்பதும் தான்.

அதோடு நிற்காமல் அவன் சொன்ன கருத்து நம் அறிவுக் கண்களைத் திறக்க வல்லதாக இருக்கிறது. ‘பெண்மை” எனும் தலைப்பில் அவன் சொல்கிறான் “பெண்மை அறிவு உயர பீடு ஓங்கும், அந்தப் பெண்மைதான் ஒண்மையுற ஓங்கும் உலகு” என்பது அவன் எண்ணம். “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா” என்று பொங்கி மகிழ்ந்தவன் பாரதி. ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்றால், இவ்வுலகம் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்பது அவன் முடிவு. நிமர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச் செருக்கு இவைகள் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என உறுதிபட எடுத்துரைக்கிறான் பாரதி.

பெண் கல்வி உயர்ந்தால், அவர் சாத்திரங்கள் பற்பல கற்பர், சவுரியங்கள் பற்பல செய்வர், மூத்த பொய்மைகள் யாவையும் அழிப்பர், மூடக் கட்டுகள் யாவையும் தகர்ப்பர், இப்பூமியில் ஆண் மக்கள் போற்றிட வாழ்வராம் என்பது பாரதியின் முடிபு. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று சொல்லி வந்த பழமையைச் சாடிப் பாடினான்.  வீட்டினுள் பெண்களைப் பூட்டி வைத்திடும் விந்தை மனிதரைத் தலைகுனிய வைத்தான்.

            கற்பு என்று சொல்லி அதைப் பெண்களுக்கு மாத்திரமே உரித்தானதாகச் சித்தரித்த போலி உலகில், அந்த கற்பினை இரு சாராருக்கும் பொதுவில் வைக்கக் குரல் கொடுத்தவன் பாரதி. பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை மாட்டை விற்பதைப் போல் கட்டிக் கொடுத்து அனுப்பும் வழக்கத்தையும் சாடியவன் பாரதி. பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும், எட்டும் அறிவினில் ஆணுக்கு நிகராக சிறந்து விளங்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கொக்கரித்தான்.

இந்த பெண் விடுதலை எண்ணங்கள் அவன் மனதில் தோன்றியபோது நமது புராண இதிகாசங்களில் சிறந்து விளங்கிய பெண் பாத்திரங்கள் அவன் மனத்தைக் கவ்வின. அதில் குறிப்பிடத் தக்கவள் மாபாரதத்தின் பாஞ்சாலி. அந்த பாஞ்சாலி ஒரு யுகப் புரட்சியைச் செய்து காட்டினாள். ஆம் துவாபர யுகம் முடிந்து, கலியுகம் தோன்ற காரணமாக இருந்தது மகாபாரத யுத்தம்; அந்த மாபாரத யுத்தத்துக்குக் காரணமாக விளங்கியவள் பாஞ்சாலி, ஆகவே பாஞ்சாலி செய்தது ஒரு யுகப் புரட்சிதான்.

மகாபாரதக் கதையின் உயிர்நாடி பாஞ்சாலி செய்த சபதம் தான். அண்ணன் தம்பிகளான திருதராட்டிரன், பாண்டு ஆகியோரின் மக்களிடையே ஏற்பட்ட சகோதர யுத்தம் தான் மகாபாரதப் போர். திருதராட்டிரனின் மகன் துரியோதனின் நெஞ்சில் கொழுந்துவிட்டெரிந்த பொறாமைத் தீ, சகுனி எனும் தீயவனின் சாமர்த்தியத்தால் தூண்டிவிடப்பட்டது. அதன் விளைவு சூதாட்டப் போர். சூதில், சூதினால் வென்ற சகுனி தர்மனின் செல்வம், சொந்தம், உரிமை அனைத்தையும் பறித்துக் கொண்டான். விளைவு பாண்டவர்கள் காடாளவும், தலைமறைவாய் வாழ்ந்திடவும் கடமைப் பட்டார்கள்.

ஐவரின் பத்தினியாய், சூதர்களின் வாழ்வுக்கு அக்கினியாய் வந்து வாய்த்தவள்தான் பாஞ்சாலி. தருமன் சூதில் அவன் விருப்பத்துக்கு மாறாக பங்கேற்கிறான். பணயம் வைத்த அனைத்தையும் இழந்து போகிறான். நாட்டை வைத்திழந்தான்; செல்வங்கள் அனைத்தையும் வைத்திழந்தான்,. அப்போதும் தீமனம் படைத்த சகுனி அவனை விட்டுவிட மனமின்றி, தருமனைத் தூண்டுகிறான். “தருமா! செல்வம் முற்றும் இழந்து விட்டாய், தேசமும் குடிகளும் சேர்ந்து இழந்தாய். புவிக்கெலாம் பார்த்திபன் இந்த தருமன் எனும் புகழையும் சேர்ந்தே இழந்தாய். நான் சொல்வதைக் கேள். எல்லாம் இழந்த பின்னர் நீயும், நின் இளைஞரும் எப்படிப் பிழைப்பீர்? தீங்கு தரும் சூதில் தோற்று நீங்கள் அனைவரும் பிச்சை புக விடுவதை நான் விரும்பவில்லை, எனவே சூதில் பணயம் என்று தகுதியான நின் இளைஞரைச் சூதில் பணயம் வை” என்கிறான்.

பாண்டவர் இளைத்த நிலை கண்டு கர்ணன் சிரிக்கிறான், அவையோர் கண்ணீர் சிந்தினர். அரவக்கொடியுடைய வேந்தன் துரியன் கெக்கெலி கொட்டிச் சிரிக்கிறான். தம்பிமார்களை வைத்து நீ வென்று விட்டால், முன்பு சூதில் நீ வைத்து இழந்ததனைத்தையும் திரும்பப் பெறலாம் என்று ஆசை வார்த்தைகள் புகன்றான். அது மட்டும் போதுமா? தருமனின் சுயமரியாதையையும் சுட்டிக் காட்டுகிறான். “தருமா! நாட்டை இழந்த பின்னர் உங்கள் ஐவரின் பத்தினி அந்த அம்பினொத்த விழியாள், அவள் இகழ்ந்திட மாட்டாளா? உன் கவலையைத் தீர்த்து வைப்போம் தருமா! உன் தம்பியரை வைத்து ஆடு” என்கிறான்.

பீமன் புற்றினில் சிக்கிய நாகம் போல சீருகிறான். பார்த்தன் முகக் களை இழந்து நிற்கிறான். ஏனையோர் ஊமைகளாயினர். தம்பியர் ஒவ்வொருவராய் சூதில் வைத்து தருமன் இழக்கிறான். ஒவ்வொருவனையும் இழக்கும்போது சூதர் கூட்டம் ஆர்ப்பரித்து முழங்குகிறது. அத்தனையும் இழந்த பின்னரும் சகுனி சளைக்கவில்லை. தருமா! இன்னும் பணயம் வைத்து ஆடுவோம், இன்னமும் நீ வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. சோர்வடைந்து விடாதே என்று தூண்டிவிடுகிறான்.

“தருமா, மின்னலைப் போன்றவள், அமுதம்போன்ற பேச்சையுடையவள், நின் தேவியாம் திரெளபதியை வைத்து ஆடினால், அவள் மிகுந்த அதிர்ஷ்டமுடையவள் அல்லவா? அவளால் நீ இழந்ததனைத்தையும் மீட்கலாம், ஆடு!” என்கிறான் சகுனி.

அதுவரை இந்த உலகம் காணாத துயர நிகழ்வு, வேள்விக்குரிய பொருளைத் தெரு நாய் முன் வைப்பதைப் போல, பொன்னால் மாளிகை கட்டி அதில் பேய்களைக் குடியமர்த்துவது போல, ஆளை விற்றுப் பொன் வாங்கி அதில் பூண் செய்து ஆந்தைக்குப் பூட்டுவது போல, தடுத்து நிறுத்த ஆளில்லாத நிலையில் தருமன் திரெளபதியைப் பணயமென்று சூதில் வைத்தான்.

தன் சொந்தக் குழந்தையைக் கொன்று அதன் தோலில் காலுக்குச் செருப்பு தைத்து அணிவரோ? வையகம் போற்றும் பாஞ்சாலியைக் கேவலம் சூதில் பணயமென்று வைப்பரோ? வைத்து விட்டான் தருமன். சகுனியின் சூட்சியால் அவன் கேட்ட பகடை விழுந்தது, அரக்கர் கூட்டம் ஆர்த்தெழுந்து ஆர்ப்பரித்தது. திக்குக் குலுங்கிடவே எழுந்தாடுகிறது தீயோர் கூட்டம்.

இந்த கேடுகெட்ட செய்தி பரவியதும், இயற்கை தனது செயல் இழந்ததாம். தருமம் அழிந்தது, சத்தியம் பொய்யாக மாறியது, பெருமை தரும் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாய் ஆகிப்போனது. மோன முனிவர்கள் வயிற்றில் தீப்பாய்ந்தாற்போல் இத்தீய செய்தி எட்டியது. வேதம் பொருளின்றி வெற்றுரையாகிப் போனது. நான்முகனார் பிரம்மன் நாவடைத்துப் போக, கலைமகளாம் நாமகள் புத்தி கெட, ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்த திருமாலும் அறிதுயில் போய் (யோக நித்திரை) ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்துவிட இவ்வுலகம் தலைகீழாய் மாறிப்போனதாய் காட்சியளித்தது.

சூதில் வைத்து இழந்த பாஞ்சாலியைத் தன் அவைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான் துரியோதனன். அவள் பலசொல்லி மறுத்தாள். தூதுவன் அஞ்சினான். அன்னையின் கோபத்துக்கு ஆளாக விரும்பாமல் அழுது பிரற்றினான். கோழையவன் தூதை விடுத்துத் தன் கொடுமை நிறைந்த தம்பியாம் துச்சாதனனை அனுப்பினான், கோதையவளைக் கொண்டு வந்து அவையில் சேர்க்க. அண்ணனின் ஆணையைக் கேட்டு மகிழ்ந்து கிளம்பினான் துச்சாதனன் எனும் அரக்க குணம் படைத்தோன். அவன் புத்தி விவேகமில்லாதவன், புலி போல் உடல் வலியுள்ளவன், சிவசக்தி வலி உணராதவன், விரும்பியே தவறுகள் செய்பவன், அவன் சென்று அன்னையை அவைக்குக் கொணர வெறி கொண்டு சென்றான்.

அரண்மனை சென்று பாஞ்சாலியை அவைக்குக் கொணர முயன்றான் துச்சாதனன். மறுத்தாள் அன்னை. அரக்கன் சொல்கிறான், “ஆடி விலைப்பட்ட தாதி நீ, உன்னை இப்போது ஆள்பவன் என் அண்ணன் சுயோதனன். மன்னர்கள் கூடி நிற்கும் சபைதனில் உன்னை கொண்டு செல்வேன் இப்போதே என்று இழுக்க முயல, அவள் “அச்சா, கேள், மாதவிலக்காதலால் ஒற்றை ஆடையில் இருக்கிறேன். தார் வேந்தர் சபை முன்னால் வந்து நிற்பது முறையில்லை” என்கிறாள் பாஞ்சாலி.

அது கேட்ட துச்சாதனன், கக் கக் கவென்று கனைத்தே அந்தப் பெரு மூடன், பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்துக் கையினால் பற்றிக் கர கரவென்று இழுத்தான். ஐயகோ என்று அலறி உணர்விழந்தாள் அன்னை. நீசன், அன்னையின் நீண்ட குழல் பற்றி, பாதி உயிரோடு தவித்து நிற்க, முன் இழுத்துச் செல்கிறான் தெருவோடு.

அப்போது தெருவெங்கும் வேடிக்கை பார்த்து நிற்கும் வீணர் கூட்டம், இன்று போல் அன்றும் இருந்தார் போலும். அத்தகையோர் கீழ்மை சொல்லத் தகுமாமோ? வீரமிலா நாய்கள் அன்னையின் சிகை பிடித்திழுக்கும் அரக்கனை அடித்து மிதித்துத் தரையில் வீழ்த்தி, அன்னையவளை அரண்மனைக்குக் கொண்டு சேர்க்காமல், நெட்டை மரங்கள் என பெட்டைப் புலம்பல் புலம்பிக் கொண்டு, “ஐயோ என்ன அநியாயம் இது!” என்று செயலற்று நின்று கொண்டிருந்தார்.

அன்னை விம்மி அழுதாள், “விதியோ, கணவரே, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என்னை வேதச்சுடர் முன்னால் வேண்டி மணம் புரிந்து இன்று இப்பாதகர் முன்பாக நான் பரிசழிதல் காண்பீரோ?” என்று கதறினாள்.

கல்மனம் படைத்த அரக்கர்கள் “தாதியடி, நீ தாதி” என்று கெக்கலித்தார். பெரியோர்கள் பார்த்திருந்தார், யாரும் எதிர்க்கவில்லை. இதையெல்லாம் இன்றைய தர்மம் ஏற்குமென்கிறார்கள் வீட்டுமன் முதலான பெரியவர்கள்.  அத்தனை பெரிய கூட்டத்தில் அன்னைக்கு ஆதரவாய் எழுந்தது ஒரேயொரு குரல். அது பாண்டவர் பக்கமிருந்தல்ல. துரியோதனின் தம்பியரில் ஒருவனான விகர்ணன் என்பான் இந்த செயலை எதிர்த்துப் பேசுகிறான்.

விகர்ணன் பேச்சைக் கேட்டு வில்வலான் கர்ணன் “தகுமடா, சிறியோய், அத்தனை தார்வேந்தரும் மெளனமாய் வீற்றிருக்க, சிறுவன் நீ, அதிகப் பிரசங்கம் செய்கிறாய். உனக்கு வீரமும் இல்லை, விவேகமும் இல்லை என்று பழித்துரைக்கிறான். செய்வதறியாராய் பாண்டவர் ஐவரும் திகைத்து நிற்கின்றார்.

அடிமையாய் ஆனவர்க்கு மார்பில் துணியைத் தாங்கும் வழக்கமில்லை என்று சொல்லி பணியாளை அழைத்துப் பாண்டவர் மார்பில் ஏந்தும் துணிதனைக் களைவாய் என்கிறான் துரியன். இவற்றையெல்லாம் கண்டு பாஞ்சாலி அச்சத்தில் உரைந்து போனாள்.

துச்சாதனன் எழுந்தான், அன்னையின் துகிலினை மன்றில் உரிதலுற்றான். பாஞ்சாலி எவ்வழி உய்வோம் என்று தியங்கினாள். கைகளைக் குவித்து அச்சோ தேவர்களே என்று மயங்கிச் சாய்ந்தாள். அந்தப் பேயன் துச்சாதனன் அன்னையின் துகிலில் கைவைத்தபோது அன்னையின் நினைவு உட்ஜோதியில் கலந்தது, உலகை மறந்தது, ஒருமையுற்று பேரொளியில் ஐக்கியமானாள். ஹரி! ஹரி! ஹரி! என்று அன்னையின் வாய் அலறியது. அபயம், அபயம் உனக்கு அபயம் என்றாள். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. பொய்யர்களுக்கு அடுக்கடுக்காக வரும் துன்பம் போல, புண்ணியம் செய்தோருக்குக் கிடைக்கும் அளவற்ற புகழைப் போல, தையலார்க்கெல்லாம் இருக்கும் அளவற்ற கருணையைப் போல, கடலில் ஓயாமல் மோதும் அலைகளைப் போல, பெண்மையைப் போற்றுவார்க்குக் கிடைக்கும் செல்வத்தைப் போல, கண்ணபிரான் அருளால் அந்த கொடியோன் கழற்றிடக் கழற்றிட வளர்ந்தன சேலைகள். அன்னையின் மானம் காப்பாற்றப்பட்டது. காணுதற்கரிய இக்காட்சியைக் கண்டு தேவர்கள் பூமாரிச் சொரிந்தனர். பீஷ்மன் எழுந்து கைகூப்பி அன்னையைத் தொழுதான். கூடியிருந்தோர் அனைவரும் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்றோதி கரம் குவித்து வணங்கினர்.

நடந்ததெல்லாம் பார்த்து அரவுயர்த்த வேந்தன் வெட்கத்தால் தலை கவிழ்ந்தான். அப்போது பீமன் எழுந்து சபதம் செய்கிறான். “நாய் மகனாம் இந்த துரியோதனின் தொடையைப் பிளந்து அவன் உயிரை மாய்ப்பேன், என்றும், துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன், அதில் ஊறும் குறுதியைக் குடிப்பேன் என்கிறான். கண்மூடி தியானம் செய்தபின் பராசக்தியை அழைத்து, “பராசக்தி! இது சாதனை செய்” என்கிறான்.

பார்த்தன் எழுந்து சபதமேற்கிறான். “இந்தப் பாதகனாம் கர்ணனைப் போரில் கொல்வேன். இது நான் வணங்கும் மகாவிஷ்ணு கண்ணன் கழலடி ஆணை” கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும், காண்டீப வில்லின் மீதாணை என்கிறான்.

அத்தனை கூட்டத்தின் மத்தியில் அவமானப்பட்ட அன்னை பாஞ்சாலி சபதம் செய்கிறாள். “ஓம் தேவி பராசக்தி ஆணை உரைத்தேன். பாவி துச்சாதனன் தோள்களை பீமன் பிய்த்ததும் பீச்சியடிக்கும் அவன் செந்நீரையும், பாழ்பட்ட துரியோதனின் தொடையைப் பிளந்ததால் பொங்கும் அவன் ஆக்கை ரத்தமும் மேவி இரண்டும் கலந்து குழலில் பூசி நறுநெய் குளித்த பின்பே சீவிக் குழல் முடிப்பேன்” என்கிறாள்.

ஆற்றாது அல்லல் பட்ட அவ்வன்னையின் சபதம் பராசக்தி செய்த சபதமல்லவா. ஓம்! ஓம்! என்று தேவர்கள் கோஷமிட்டனர். ஓம்! ஓம்! என்று உறுமியது வானம். அப்போது உலகெங்கும் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று. விண்ணைப் பூழிப்படுத்தியது பெரும் சுழற் காற்று.” அன்னையின் சபதம் நிறைவேறியது, பாரதப் போரின் இறுதி நாளில். அன்று அவ்வரக்கர்களின் ஆக்கை ரத்தம் கலந்து நெய்பூசிக் குளித்துத் தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள் பாரத அன்னையாம் பாஞ்சாலி.

பாஞ்சாலியின் கதையைச் சொல்லவந்த பாரதி இப்பார் மீதில் பெண்மையின் பெருமையையும் சேர்ந்தே சொன்னார். பெண்மையைப் போற்றி பெருமை சேர்த்தது நமது பாரத தேசம், அதை வந்தே மாதரம் என்று சொல்லி வணங்குவோம்.








           

Friday, March 23, 2018

சுதந்திரப் போரில் சென்னை சதி வழக்கு!


               
மகாத்மா காந்தி அடிகள் தண்டியிலும், ராஜதந்திரி ராஜாஜி வேதாரண்யத்தை அடுத்த அகத்தியம்பள்ளியிலும் உப்பு எடுத்து சிறை சென்ற போராட்டம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. சட்ட மறுப்பு இயக்கம் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தது. சுதந்திர ஆவேசம் கொண்ட தேசபக்தர்கள் விரைவில் நாடு சுதந்திரம் அடைந்திட என்ன வழி என்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரம். ஆண்டு 1932.
சென்னையில் ஒரு இரகசிய இடத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அதில் பல முகங்கள் நமக்கு அறிமுகமான முகங்கள்தான். மதுரை சீனிவாசவரதன், பத்மாசனி அம்மாள், தஞ்சை ஹனுமந்த ராவ், பி.கே.நாராயணன், மாணவர் எஸ்.ரங்கராஜன் ஆகியோர் அதில் இருந்தனர்.

இவர்களது பணி, மக்கள் கூடுமிடங்களில் சுதந்திரம் வேண்டி உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் பேசுவது; தடைசெய்யப்பட்ட நூல்களைக் குறிப்பாக வீர சாவர்க்கரின் “முதல் இந்திய சுதந்திரப் போர்” போன்ற நூல்களை வினியோகம் செய்வது ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தனர். சாவர்க்கரின் ஆங்கில மூல நூலை தமிழில் மொழி பெயர்த்திருந்தவர் டி.வி.எஸ். சுந்தரம் ஐயங்காரின் மகள் டாக்டர் செளந்தரம் அவர்கள். அப்போது நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட தியாகிகளை திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த சமயம் வடக்கே லாகூரில் லாலா லஜபதி ராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சாண்டர்சை சுட்டுக் கொன்று தூக்கில் மாண்ட பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோருடைய கூட்டாளிகள் சிலரையும் திருச்சி சிறையில் அடைத்து வைத்திருந்தனர். தமிழ்நாட்டு சுதந்திரப் போர் கைதிகளுடன் அந்தப் புரட்சிக்காரர்களுக்கு நட்பு ஏற்பட்டு தங்களுடைய புரட்சி வித்தை அவர்கள் மனங்களிலும் விதைத்து விட்டனர் அவர்கள். அவர்கள் ஐரிஷ் விடுதலைப் போராட்ட வரலாற்றையும், வேறு சில புரட்சி நூல்களையும் தமிழ்நாட்டு தியாகிகளிடம் கொடுத்துப் படிக்கச் செய்தனர். விளைவு, இங்கும் புரட்சித் தீ பற்றிக் கொண்டது.

சிறைக்குள்ளே இந்த அரசியல் கைதிகள் கூடி விவாதிக்கத் தொடங்கினர். அவர்களில் சிலர், கம்யூனிஸ்ட் ப.ஜீவானந்தம், நெல்லை வீரபாகு பிள்ளை, தூத்துக்குடி சங்கரநாராயணன் (இவரும் கம்யூனிஸ்ட்) கொடுமுடி ராஜகோபாலன், கே. அருணாசலம் ஆகியோர் முக்கியமானவர்கள். சிறையிலிருந்த புரட்சிக் காரர்கள் இவர்களுக்கு வெடிகுண்டு செய்யும் விதத்தையும் சொல்லிக் கொடுத்தனர். அந்த சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சென்னை சிறையில் தங்கி உடல் நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்று வந்தார். இப்படி பல புரட்சிக்காரர்களின் கூட்டுறவால் சில இளைஞர்கள் சென்னை தங்கசாலைத் தெருவில் ஒரு வீட்டில் இரகசியமாகக் கூடித் தங்கள் எதிர்கால திட்டங்களைத் தயார் செய்து கொண்டார்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட காவல்துறையினர் ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த மூர் மார்க்கெட்டில் ஒரு தொண்டனை கைது செய்து விட்டனர். இந்தப் புரட்சிக் கூட்டத்தின் துரதிருஷ்டம், அப்போது அந்த இளைஞன் வசம் ஒரு துப்பாக்கி இருந்தது, ஆகையால் மொத்த கூட்டத்துக்கும் வலை விரிக்கப்பட்டது.

அப்போதைய போலீஸ் வழக்கப்படி மாட்டிக் கொண்டவனை நன்றாகத் துவைத்தெடுத்து பலரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் கூண்டோடு கைது செய்து விட்டனர். மொத்தம் பத்தொன்பது பேர், அதில் புரட்சிக்காரர் முகுந்தலால் சர்க்கார் என்பாரும் அடக்கம்.

ஏராளமான புரட்சிக்காரர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டனர். ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதற்கு நீதிபதியாக டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பார் இருந்தார். சிந்தாதரிப்பேட்டையில் இருந்த ஒரு நூலகம் தற்காலிக நீதிமன்றமாகச் செயல்பட்டது.  இதில் இரண்டு பேர் அப்ரூவராக மாறினர்; இல்லை இல்லை மாறும்படி கட்டாயப்படுத்தப் பட்டனர். குற்றவாளிகளுக்கு பல தேசபக்த வக்கீல்கள் வாதாடினர். குற்றவாளிகளுக்கு வழக்கு நடத்தவென்று ஒரு குழு அமைக்கப்பட்டது, அதன் செயலாளர் பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவரான பி.ராமமூர்த்தி.
வழக்கில் சுமார் 100 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றியது. 1934 ஜனவரி 8ஆம் நாள் சென்னை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி பர்க்கென்ஹாம் வால்ஷ் என்பார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராஜாங்க பிராசிகியூட்டர் கே.பி.எம்.மேனன் என்பார். எதிரிகள் சார்பில் ஆந்திர கேசரி டி.பிரகாசம், பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ப.ராஜகோபாலாச்சாரியார், பி.நாராயண குரூப் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போதெல்லாம் ஜூரிகள் முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி இந்த வழக்கில் ஜூரிகள் எதிரிகள் அனைவரும் குற்றவாளிகளே என்று கூறினர். நீதிபதி ஜூரிகளின் கருத்தை ஏற்றுக்கொண்டு அனைவரையும் குற்றவாளிகள் என்று கருதி தீர்ப்பளித்துவிட்டார். பலருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுத்து, ஒரு சிலரை விடுவித்து விட்டார். இந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் பலரும் பல சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் பட்ட துன்பம் சொல்லும் தரமன்று. கோபால சாஸ்திரி என்பார் சிறையில் இறந்தே போனார். பயில்வான் போலிருந்த அவர் வேலூர் சிறையில் கடுமையான வயிற்றுப் போக்கினால் இறந்தார். அதற்கு முன்பு வியாதியின் கொடுமை தாங்காமல் தற்கொலைக்கும் முயன்றார்.

கோவை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூட இயலாத நிலையில் தனித்து விடப்பட்டனர். வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் என்ற குற்றத்துக்காக ரங்கராஜன் என்பார் மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை அதிகப்படியாகப் பெற்றார்.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த சமயம் மகாத்மா காந்தி சென்னைக்கு விஜயம் செய்தார். இந்த வழக்கு விவரங்களை அவர் சேத் ஜெகந்நாத தாஸ் என்பவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த நேரத்தில் வங்கத்தைச் சேர்ந்த மிட்னாப்பூரில் ஒரு கொலை வழக்கில் ஆஜராகி வாதாடிக் கொண்டிருந்த பிரபலமான பாரிஸ்டர் ஒருவரை இந்த வழக்கில் வாதாடும்படி தான் ஏற்பாடு செய்வதாக காந்திஜி உறுதியளித்தார்.

மகாத்மா காந்தி அகிம்சை முறையில் போராடி வந்தவர். இந்த வழக்கில் கைதான இளைஞர்களோ, அகிம்சை முறைக்கு மாறாக புரட்சிக்காரர்களாக செயல்பட்டார்கள். புரட்சி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் மீதுதான் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்கள். இருந்தாலும் அவர்களது நோக்கம் இந்திய சுதந்திரம், அவர்களிடம் இருந்தது தேசபக்தி, ஆகையால் அவர்கள் வழிமுறை எத்தகையதாக இருந்த போதிலும் அவர்களைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று காந்திஜி செயலாற்றினார்.

ஆனாலும், மிட்னாப்பூர் கொலை வழக்கில் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த இளைஞனைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் கருதி, தங்களுக்கு அந்த பாரிஸ்டரை அனுப்ப வேண்டாம், ஆந்திர கேசரி தலைமையிலான வழக்கறிஞர் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று குற்றவாளி இளைஞர்கள் மறுத்து விட்டனர்.

தண்டனை பெற்ற அனைவரும் அவரவர்க்குக் கிடைத்த தண்டனை காலத்தை சிறைக் கொடுமைகளுக்கிடையில் தாங்கிக் கொண்டு, சிலர் உயிர் தியாகம் செய்தும், சிலர் உடல் நலம் கெட்டும், இறுதியில் தண்டனைக் காலம் முடிந்து 1937ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலையாகினர். பின்னரும் இந்த தேச சேவையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டனர். இந்த வழக்கு “சென்னை சதி வழக்கு” என்ற பெயரால் அந்த காலகட்டத்தில் பிரபலமாகப் பேசப்பட்டது. இந்த வழக்கில் சிறைப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி சிலர் தண்டனை பெற்றும், ஒரு சிலர் விடுதலை பெற்றும் தங்கள் பெயர்களை இந்திய சுதந்திரப் போர் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்று விட்டனர். அவர்கள் அத்தனைக் பேரையும் நாம் தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அவர்களது பெயர்களையாவது ஒரு முறை உச்சரித்துப் பெருமை கொள்வோம். அவர்கள்:
முகுந்தலால் சர்க்கார், கே.அருணாசலம் (இவர் திருமுல்லைவாயில் சதிவழக்கிலும் பங்கெடுத்தவர், பிந்நாளில் ஆனந்த விகடனில் கட்டுரைகள் எழுதியவர்), டி.கோபால சாஸ்திரி (சிறையில் இறந்து போனவர்), டி.ஆர்.சுப்ரமணியம், பி.ஜோசப், ஜி.லோகநாதன், டி.கண்ணன், சபாபதி, கண்ணாயிரம், எஸ்.ரங்கராஜன், டி.ராமச்சந்திரா, கே.நாராயண நம்பியார், பலராம ரெட்டி, தசரதராம ரெட்டி, ஜி.பாலகிருஷ்ண ரெட்டி, ஜி.காலய்யா ரெட்டி, பட்டணம் பாலி ரெட்டி, பி.பாபிராஜு, சி.ஜகந்நாதன், கானூர் ராமானந்த சவுத்திரி ஆகியோர். வாழ்க இந்தத் தியாகிகளின் புகழ்!


(ஆதாரம்: அரியலூர் சபாபதி எழுதிய திருச்சி மாவட்ட சுதந்திரப் பொன்விழா மலர், கைதிகளில் ஒருவரான எஸ்.ரங்கராஜன் சொல்ல கொடுமுடி ராஜகோபாலன் அவர்களால் எழுதப்பட்டது)



பாஞ்சாலி சபதம்.


                               
          

                        
    (மகாபாரதத்தில் ஒரு காட்சி மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தின் சாரம்)

(துரியோதனன் அவையில் திரெளபதியை துச்சாதனன் கொண்டு வந்து நிறுத்துகிறான். அப்போது அவள் நிலை)

அறிமுகக் குரல்: 
திருதராஷ்டிரன் அவையில் ஐவரின் பத்தினி பாஞ்சாலி கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கிறாள். அவள் ஆடை குலைவுற்று நிற்கிறாள்; அழுது கண்ணீர் வடிக்கிறாள்: ஆவென்று பதறித் துடிக்கிறாள். மாடு போன்ற துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான். கதறி அழுகின்ற அம் மாதரசியின் ஆடையைப் பிடித்து இழுக்கிறான். இதைக் கண்டு பீமனுக்கு வெஞ்சினம் உண்டானது. துயர் மிகுந்து அண்ணன் தருமனை நோக்கிச் சொல்கிறான்)

                                   காட்சி 1.

         (பாத்திரங்கள்:  திரெளபதி, பீமன், தருமன், சகாதேவன், அர்ச்சுனன்)

பீமன்: 
(தருமனைப் பார்த்து) அண்ணே! சூதாட்டம் என்பது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு தீமைதான். அப்படி சூதாட்டம் நடக்கும் விடுதிகளில் பணிபுரிய பல பெண்கள் இருப்பதுண்டு. ஆனால் சூதாட்டத்தில் பணயப் பொருளாக ஒரு பெண்ணை வைத்ததுண்டா? பெண்களை வைத்துச் சூதாடும் வழக்கம் இங்கே உண்டா? சொல்.
என்ன கருதி திரெளபதியைச் சூதில் பணயமென்று வைத்தாய்? அண்ணே! யாரைப் பணயம் வைத்தாய் தெரிகிறதா? மாதர் குல விளக்கு, அன்பே வாய்ந்த வடிவழகு, பூமி அரசரெலாம் போற்றி வணங்கும் திறலுடையாள்; போரில் புலி போன்ற பாஞ்சால மன்னனின் சுடர் மகளை அண்ணே! நீ சூதில் ஆடி இழந்து விட்டாய்.
அண்ணே! நீ தவறு செய்துவிட்டாய், தர்மத்தைக் கொன்று விட்டாய்.

தருமன்:  
பீமா நான் சொல்வதைச் சற்று கேள்!

பீமன்:  
இந்த மாதரசியை நாம் எப்படிப் பெற்றோம் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? பிறர் அறியாமல் நாம் கவர்ந்து கொண்டு வரவில்லை. சூதாடி இவளை நாம் பெறவில்லை. மாறாக நம் வீரத்தினால் பெற்றோம். கடும் போரில் வெற்றி பெற்று இவளை அடைந்தோம்.

தருமன்:  
எனக்குப் புரிகிறது, பீமா, சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேள்!
பீமன்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாம் சக்கரவர்த்திகளாக வாழ்ந்தோம். அந்த பெருமையையும், செல்வாக்கையும் ஒரு கணத்தில் பொக்கென இழந்து நிற்கின்றோம்.
தருமன்: பீமா! உன் கோபம் சரிதான், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறேன் கேள்.
பீமான்: கேட்க இனி என்ன இருக்கிறது. நாட்டையெல்லாம் சூதில் தொலைத்தாய், அண்ணே! நாங்கள் பொறுத்திருந்தோம், மீட்டும் எமை அடிமைகளாக ஆக்கினாய், அதையும் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அண்ணே! ஒன்றை மட்டும் நாங்கள் மறக்கவில்லை. துருபத ராஜாவின் மகளை, திருஷ்டத்யும்னன் உடன் பிறப்பை சூதாட்டத்தில் இரு பகடையென்று பணயம் வைத்தாய். ஐயோ! இந்த தீயவருக்கு அடிமை என்றாய். அதைப் பொறுப்பது என்னால் இயலாது.

(தம்பி சகாதேவனை நோக்கி:)  
தம்பி! சகாதேவா, எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்து இழந்த நம் அண்ணன் கையை எரித்திடுவோம்.

               (அப்போது இதனைக் கேட்டு அர்ச்சுனன் சொல்கிறான்)

அர்ச்சுனன்: 
பீமா! நீ சொன்ன சொற்களை மனமாரச் சொன்னாயோ? என்ன வார்த்தை சொன்னாய்? எங்கு சொன்னாய்? யாவர் முன்னே? கனமாரும் துருபதனார் மகளைச் சூதுக் களியிலே இழந்திடுதல் குற்றமென்றாய். உன் மனதில் உருவான கோபம் உன் அறிவைப் புகைத்துவிட்டதோ, திரிலோக நாயகனாம் நம் அண்ணன் தருமனிடம் சினம் கொள்ளல் முறையோ? உனக்கு ஒன்று சொல்வேன். கேள்! நன்றாக நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கை நெறி இதுதான். “தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்; தருமம் மறுபடி வெல்லும்” எனும் மருமத்தை நம்மாலே இவ்வுலகம் கற்கும். வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான். கருமத்தை மேன்மேலும் காண்போம். இன்று கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

(தன் கை வில்லைக் காட்டி பீமா! இது என்ன தெரியுமா” தனு. வில். இதன் பெயர் காண்டீபம், உனக்குத் தெரியாதா?
                         
                                      காட்சி 2.

                    துரியோதனனின் தம்பி விகர்ணன் சொல்கிறான்:

விகர்ணன்:  
பெண்ணரசி பாஞ்சாலியை சூதில் இழந்தது சரிதான் என்கிறார் பாட்டனார் பீஷ்மர். பெண்ணை அடிமைப்படுத்தலாம் என்ற பாட்டன் பீஷ்மன் கருத்தை நான் ஏற்கமுடியாது. நம் மன்னர் பரம்பரையில் மனைவியரை விலைக்கு எவரும் விற்றதுண்டோ? அல்லது சூதில்தான் எவரும் இழந்ததுண்டோ? விலைமாதர்க்குரிய நீதியை தெய்வத்துக்குப் பொருத்தி பேசுதல் வேண்டா.

கர்ணன்: 
(விகர்ணனை கோபமாகப் பார்த்து) ஏய்! சின்னப் பயலே! உனக்குத்தான் எத்தனைத் துணிச்சல். விவேகம் இல்லாதவனே, அறிவிழந்து பேசுகிறாய். மன்னர் முன்னே எப்படிப் பேசவேண்டுமென்பதைப் புரிந்து கொள்.

கர்ணன்: 
(யாரங்கே! சேவர்களே. அடிமைகள் மார்பில் துணி போர்த்தியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. வந்து பாண்டவர்கள் மேல் அணிந்த அங்கிகளை நீக்குங்கள். தையலாள் பாஞ்சாலி சேலையையும் களைந்திடுவாய் உடனே.

(உடனே பாண்டவர்கள் தங்கள் மேலங்கிகளைக் கீழே போட்டனர். துச்சாதனன் பாஞ்சாலியின் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.)

பாஞ்சலி: 
தீயவனே! என்ன காரியம் செயிறாய். இதற்கான தண்டனையை நீ நிச்சயம் பெறுவாய். (கண்ணனை நினைத்து கைகூப்பி) ஹரி, ஹரி ஹரி கண்ணா அபயம் அபயம் உனக்கு, என் மானத்தைக் காத்து அருள்புரி.

கண்ணா! காளிங்கன் தலைமீது நடனம் புரிந்த கிருஷ்ணா! வேதப் பொருளே! கையில் சக்கரம் ஏந்திய வீரனே, என் கண்ணீரைத் துடைத்திடுவாய். கண்ணா, விண்ணகப் பொருளே, சோதிக்கெல்லாம் ஜோதியே என் சொல்லைக் கேள், வா என் மானத்தைக் காப்பாற்று. ஹரி, ஹரி, ஹரி, ஹரி.

(துச்சாதனன் துகில் உரிய உரிய அவள் சேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் கை சோர்ந்து மயக்கமடைகிறான்) 

தேவர்கள் பூமாரி சொரிந்தார். ஓம் ஓம் ஜய ஜய பாரத சக்தி ஜய ஜய பாரத சக்தி என்ற ஒலி கேட்கிறது.
                               காட்சி 3.
                        திருதராஷ்டிரன் அவை

பீமன்: 
தேவர்களே! கேளுங்கள். உங்கள் மீது ஆணை. பராசக்தி மீது ஆணை, தாமரைப் பூவில் வாழும் பிரம்ம தேவன் மீதாணை. எங்கள் தேவன் கண்ணன் மீது ஆணை. காமனைக் கண்ணால் எரித்த சிவபெருமான் கழல் மீதாணையிட்டுச் சொல்கிறேன்.
எங்கள் பெருமைக்குரிய திரெளபதி தேவியைத் தன் தொடை மீது வந்து இரு சொன்னானே துரியோதனன் அந்த நாய் மகனை இந்த அவையில் இருக்கும் மன்னர்கள் முன்னிலையில் என் தோள் வலியால் யுத்த ரங்கில் அவன் தொடையைப் பிளந்து கொல்வேன்.

அவன் தம்பி சூரத் துச்சாதனன் கடைப்பட்ட தோள்களைப் பிய்ப்பேன். அங்கு பீச்சியடிக்கும் அவன் ரத்தத்தைக் குடிப்பேன். உலகோரே, இவை நடக்கும் காண்பீர்! இது நான் சொல்லும் வார்த்தை இல்லை. தடையற்ற தெய்வத்தின் வார்த்தை. தேவீ! இதனை சாதனை செய்க பராசக்தீ!

அர்ச்சுனன்:  
தேவர்கள் சாட்சியாக நான் செய்யும் சபதம் கேட்பீர் அவையோரே. இந்தப் பாதகக் கர்ணனைப் போரில் கொல்வேன். இது விஷ்ணு மேல் ஆணை. எங்கள் சீரிய நண்பன் கண்ணன் கழலடி ஆணை. கார்த்தடங் கண்ணி எம் தேவி அவள் கண்ணிலும், என் காண்டீப வில்லின் மீதும் ஆணை. ஹே! பூதலமே அப்போது போர்த்தொழில் விந்தைகள் அனைத்தையும் காண்பாய்! இது சத்தியம்.

திரெளபதி:  
(ஓம்! ஓம்! ஓம்! ஒலி பரவிட)  
பராசக்தி மீது ஆணையிட்டு உரைப்பேன். என் துகில் உரிய முயன்ற அந்தப் பாவி துச்சாதனன் உடலினின்றும் பீச்சியடிக்கும் செந்நீர், அந்தப் பாழ் துரியோதனன் தொடை பிளந்து ஊற்றும் குருதி இவை இரண்டையும் கலந்து நெய்யாக என் குழலில் பூசி நறுநெய் குளித்தபின்னேதான் என் குழலை முடிப்பேன், அதுவரை என் கூந்தலை முடியேன் நான். கண்ணன் மீது ஆணை இது.

பின்னணிக் குரல்:  ஓம் ஓம் என்கின்றனர் தேவர். வானமும் ஓம் ஓம் என்று உறுமியது. பூமி அதிர்ச்சி உண்டாச்சு. விண்ணைப் பூழிப் படுத்தியதாம் சுழற்காற்று. தொடர்ந்து நிகழ்ந்த பல காரியங்களால் பாரதப் போர் நிகழ்ந்தது. தீயோர் மாள, நல்லோர் வாழ, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அருள் கிட்டிய பாண்டவர் நாட்டை பலகாலம் மகிழ்வோடு ஆண்டனர்.
                 பாஞ்சாலி சபதக் காட்சி நிறைவு பெற்றது.



மனோரா கோட்டை.


                       

        

       தஞ்சாவூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தூரத்தில் வங்கக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது மனோரா எனும் கோட்டை வடிவ நினைவுச் சின்னம். 1814-15இல் தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னன் 2ஆம் சரபோஜி கட்டிய நினைவுச் சின்னம் இது. ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டுக்கும் இடையே நடந்த கடற்படைப் போரில் இங்கிலாந்தின் நெல்சன் தன் உயிரை பலிகொடுத்து நெப்போலியனைத் தோற்கடித்ததை நினைவுகூரும் வகையில் ஆங்கிலேயர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் சரபோஜி இதைக் கட்டி முடித்தார். அந்த போர் ஸ்பெயினின் கடற்கரைப் பகுதியான டிரஃபால்கர் எனுமிடத்தில் நடந்தது. அந்தப் போரில் 33 கப்பல்கள் கொண்ட இங்கிலாந்து பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கப்பல் படையுடன் போரிட, போரில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருணத்தில் ஒரு பீரங்கிக் குண்டு தாக்கி நெல்சன் வீரமரணம் அடைந்தார். எனினும் அவருடைய இங்கிலாந்து படை வெற்றி பெற்றது. அதன் விவரங்கள் இதோ:

        21 அக்டோபர் 1805. இந்த நாள் ஐரோப்பிய வரலாற்றில் மிக முக்கியமான நாள். அன்றுதான் வரலாற்றில் மிக முக்கியமான யுத்தம் இங்கிலாந்தின் கடற்படை தளபதி நெல்சன் தலைமையில் இங்கிலாந்தின் கப்பற்படை பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கூட்டுக் கடற்படைகளை ஸ்பெயின் கடற்கரையோரமுள்ள டிரஃபால்கர் எனுமிடத்தில் போரில் வெற்றி கண்ட நாள்.

       நெப்போலியன் போனபார்ட் பிரான்சின் மாவீரனாகத் திகழ்ந்தவர். இவரை எதிர்த்து ஆங்கிலக் கடற்படை லார்டு நெல்சன் என்பார் தலைமையில் பலமுறை வெற்றி பெற்றது. நெப்போலியன் பிரான்சின் சார்பில் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர். இங்கிலாந்தின் நெல்சன் அடைந்த கடைசி வெற்றி இந்த டிரபால்கர் யுத்த வெற்றிதான். வரலாற்றில் மிகவும் சிறப்பாகப் பேசப்படும் யுத்தம் டிரபால்கர் யுத்தம்.  ஐரோப்பிய கடல் பகுதியில் பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளுக்குச் சொந்தமான 33 கப்பல்களை நெப்போலியன் பார்த்துவிட்டார். இந்த மாபெரும் கப்பல் அணிவகுப்பைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு அவர் அக்டோபர் 21ஆம் தேதி தன்னுடைய 27 கப்பல்களை இரு பிரிவுகளாகப் பிரித்து வீரர்களுக்குத் தன் தலைமை கப்பலில் இருந்து ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். அது வரலாற்றில் பிரபலமாக ஆன வரி அது. “ஒவ்வொரு வீரனும் தன் கடமையைச் செய்ய வேண்டுமென்று இங்கிலாந்து எதிர்பார்க்கிறது” என்பதுதான் அது. (England expects that every man will do his duty)

       யுத்தம் தொடங்கியது. ஐந்து மணி நேர போராட்டத்தின் முடிவில் எதிரிகளின் கப்பல் படைகளில் 19 முழுவதுமாக அழிக்கப்பட்டது. ஒரு பிரிட்டிஷ் கப்பல்கூட சேதமடையவில்லை. ஆனால் பிரிட்டிஷ் கடற்படை வீரர்களில் 1500 பேர் யுத்தத்தில் காயமடைந்தோ அல்லது மாண்டு போனார்கள். வெற்றி கட்டத்தை அடையும் நேரத்தில் யுத்தம் கடுமையாக நடந்தது. பிரெஞ்சுக்காரர்களின் பீரங்கிக் குண்டுகளின் துண்டுகள் நெல்சனின் தோள்பட்டையிலும் மார்பிலும் பாய்ந்தன.  உடனடியாக அவரைக் கப்பலின் கீழ்த்தளத்துக்குக் கொண்டு போனார்கள்; அங்கு அரை மணி நேரம் கழித்து போர் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது. அவர் இறக்கும் தருவாயில் தளபதிகள் அவரிடம் தங்கள் படை வெற்றியை நெருங்கிவிட்டது, விரைவில் தங்கள் படை வெற்றியடைந்து விடும் என்று சொன்னார்கள். அதனைக் கேட்டு நெல்சன் சொன்னார்: “இப்போது நாம் திருப்தியடைகிறேன். இறைவன் சித்தம், நான் என் கடமையைச் செய்து விட்டேன்”.

        டிரபால்கர் யுத்தத்தின் முடிவில் இனி நெப்போலியனால் இங்கிலாந்தின் மீது படையெடுக்க முடியாது என்கிற நிலைமை உருவானது. நெல்சனை மாவீரனாகவும், இங்கிலாந்தின் மானத்தைக் காப்பாற்றியவராகவும் மக்கள் புகழாரம் சூட்டினார்கள். அவருடைய சவ ஊர்வலம் லண்டனில் உள்ள செயிண்ட் பால் கதீட்ரலில் நடந்தது. பிரம்மாண்டமான அணிவகுப்பு அது. இங்கிலாந்தில் லண்டன் மாநகரின் மத்தியில் ஒரு முக்கியமான இடத்துக்கு “டிரபால்கர் ஸ்கொயர்” (டிரபால்கர் சதுக்கம்) என்று பெயரிடப்பட்டது. அது தவிர இங்கிலாந்து எங்கும் பல தெருக்களுக்கு அவருடைய பெயர் இடப்பட்டது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகத்தான், பிரிட்டிஷ் விசுவாசியான மன்னர் சரபோஜி நம் தென்னிந்திய கடற்கரையில் மனோரா எனும் கட்டடக் கோட்டையைக் கட்டி நினைவுத் தலமாக உருவாக்கினார். 

       இந்த மனோரா கோட்டை எட்டடுக்கு கொண்ட அறுகோண வடிவ கோபுரம். இதன் உயரம் 23 மீட்டர். வங்கக் கடலின் அலைகளுக்கிடையில் கரையில் இந்த கோட்டை பசுமை நிறைந்த கடற்கரையில் நிமிர்ந்து நிற்கிறது. காண்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் அழகான சூழ்நிலை. மனோரா எனும் பெயர் “மினரெட்” எனும் சொல்லில் இருந்து வந்தது. மினரெட் (Minaraet) என்றால் மசூதியின் மெல்லிய உயர்ந்த கோபுரம் அல்லது ஸ்தூபி என்பதாகும். அந்த வடிவத்தில் இது அமைந்திருப்பதால் இதனை “மனோரா” என்றனர்.
தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஏன், தென்னகத்து சுதேச சமஸ்தானாதிபதிகள் அனைவருமே ஆங்கிலேயர்களின் பக்தர்கள். அவர்கள் வெற்றியை இவர்கள் கொண்டாடுவதும், தோல்விகளைக் கண்டு இவர்கள் துவண்டு போவதும் வழக்கமான செயல்பாடுகள் தான். அப்படிப்பட்ட நிலையில் ஆங்கிலேயர்கள் வலிமை மிக்க பிரான்சின் நெப்போலியன் போனபார்ட்டைத் தோற்கடித்தார்கள் என்றால் தஞ்சை மராத்தியர்களும் அந்த வெற்றியைக் கொண்டாடமல் இருக்க முடியுமா. அவர்களுக்குப் பாராட்டாக, அல்லது நன்றிக்கடனாக இவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு உட்பட்ட இந்த கடற்பகுதியில் இப்படிப்பட்டதொரு கோபுரத்தை நிர்மாணித்தார்கள்.

       2004ஆம் வருஷம் அடித்த சுனாமியில் கடற்கரையோரமிருந்த பல இடங்கள் அழிந்து போயின. அப்போது இந்த மனோராவும் சேதமடைந்து போயிற்று. 2007இல் சுற்றுலாத் துறை இந்த நினைவுச் சின்னத்தை சீர்படுத்தி மேம்படுத்தவும், சில அதிகப்படியான வசதிகள், குறிப்பாக பூங்கா, குழந்தைகள் விளையாடுமிடம் ஆகியவைகளை இங்கே அமைத்திட தீர்மானித்தார்கள். அதன்படி இப்போது மேம்பாடு அடைந்த மனோராவை நீங்கள் பார்க்கிறீர்கள். தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் 1814-15 காலகட்டத்தில் ஆங்கிலேயர்கள் நெப்போலியனைத் தோற்கடித்து வெற்றி பெற்றனர். ஆண்டு 1815. இந்த கட்டடத்தில் மராத்திய மன்னர் வந்தால் வந்து தங்கவும், கடற்கரை ஓரத்தில் ஒரு லைட் ஹவுசாகவும் பயன்பட்டது. இங்குள்ள கல்வெட்டில் இந்த வீர தீர வெற்றியைக் கொண்டாடும் வாசகங்கள் உள்ளன.
இந்த நினைவுச் சின்னம் இருக்குமிடம் மல்லிப்பட்டினம். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. சரபேந்திரராஜபட்டினம் என்பது. மினார் அல்லது மினரட் எனும் ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் கோபுரம் எனலாம். இந்த கோபுர அமைப்பைச் சுற்றி ஒரு சுற்றுச் சுவரும் அதற்கடுத்து அகழியும் அமைந்து ஒரு கோட்டையைப் போல தோற்றமளிக் கிறது. இங்கு வளைந்த மேற்பகுதியுடன் கூடிய ஜன்னல்கள், வட்டமாய் சுற்றி ஏறும் மாடிப்படி, ஒரு தளத்துக்கும் மறு தளத்துக்குமிடையே தாழ்வாரம் ஆகியவை உண்டு.

        இதன் புனரமைப்பு 2000இல் தொடங்கி 2003இல் முடிந்தது. சுற்றுலாப் பயணிகள் முதல் இரு தளங்கள் வரைதான் செல்லலாம். தஞ்சை மாவட்டத்தில் இரு ஒரு முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.


Thursday, March 22, 2018

காஞ்சி சுவாமிகளின் மறைவுக்கு இரங்கல்


                            
                (தஞ்சை வடக்கு வீதி ஜெயேந்திரர் பள்ளியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசியது)

       ஆச்சார்யாளைப் பற்றி பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தபோது ஒன்று நினைவுக்கு வந்தது. நம் ஊரில் ஸ்ரீவாஞ்சிநாத ஐயர் என்பவர் “தஞ்சை வைதீகஸ்ரீ” என்றொரு மாதப்பத்திரிகை நடத்தி வந்தார். அதில் நான் காஞ்சி மடத்தை அலங்கரித்த பெரியோர்கள் வரலாற்றை “காஞ்சி மடத்தை அலங்கரித்த மகான்கள்” என்ற தலைப்பில் 70 பேரைப் பற்றியும் எழுதியது நினைவுக்கு வந்தது. இங்கு இரங்கல் கூட்டத்தில் பேசவும் வந்துவிட்டேன். 

        நான் சிறந்த பக்திமான் அல்ல. ஆச்சார்யாளிடம் அதீத பக்தி கொண்ட மடத்தின் தீவிரமான சீடனுமல்ல. ஆனால் விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் காஞ்சி மடாதிபதியாக இருப்பவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதைகளைத் தவறாமல் செய்துகொண்டு, திருமண பத்திரிகைகளில் அவர்கள் ஆசியோடு என்றும் போட்டுக் கொண்டு செயல்படும் ஒரு சாதாரணன் – சாமானியன். ஒரு சாமானியனால்தான் எதார்த்த நிலையைக் காணவோ, கண்டதை விண்டுரைக்கவோ முடியும். இதில் விருப்பு வெறுப்பு இருக்காது; உள்ளதை உள்ளபடி சொல்ல முடியும். அந்த நிலையில்தான் காஞ்சி மடத்தின் 69ஆம் ஆச்சார்யாரான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை ஒரு பாமரனின் பார்வையில் நான் கண்டவற்றைச் சொல்ல விழைகிறேன்.

      காஞ்சி ஆச்சார்யார் 69ஆவது மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த ஊரின் பெயர் “இருள்நீக்கி”. இவர் வாழ்க்கையில் பிறருக்கு இருள் நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைந்த பகுதிக்கு வழிகாட்டவிருக்கிறார் என்பதை உணர்ந்தே இறைவன் இவரை அந்தப் பெயர் உடைய ஊரில் பிறக்க வைத்தாரோ என்னவோ? இருக்கலாம். இறைவன் லீலைகளை யாரே உணர்வார்!

      1935 ஜூலை 18இல் அவதரித்த இவருடைய மாவட்டத்திலேயே 1937 ஜூலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த எனக்கு இவரது 19ஆம் வயதில் மகாபெரியவர் சந்நியாசம் வழங்கி காஞ்சி மடத்தின் வாரிசாக நியமித்த நாளில் இருந்து இவரைப் பற்றி ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் சொல்வார்கள், இவரது இளமைப் பருவத்தில் இவருக்கு தீக்ஷை கொடுக்குமுன்பாக மகாபெரியவர் இவரிடம் இருந்த மூன்று சக்திகளை உணர்ந்திருந்தார் என்று, அவை ஜன ஆகர்ஷணம், தன ஆகர்ஷணம், ஜல ஆகர்ஷணம் என்பார்கள். ஜன ஆகர்ஷணம் என்பது மக்களைக் கவரும் சக்தி, தன ஆகர்ஷணம் என்பது மடத்தின் சொத்துக்களைக் காவந்து செய்து அதனை மேலும் வளரச் செய்வது, ஜல ஆகர்ஷணம் என்பது, மழை பெய்யாத இடங்களுக்கு இவர் சென்றால் அங்கெல்லாம் மழை பெய்யும் என்பது. இந்த மழை ராசி பலருக்கு உண்டு. நம் வரலாற்றில் மராத்திய ராஜா சரபோஜிக்குப் போட்டியாக பதவிக்கு வந்த அமரசிம்மனுக்கு இந்த ராசி உண்டு. மழை இல்லாத இடங்களுக்கு அவர் போனால் அங்கு போதும் போதும் என்கிற அளவுக்கு மழை பெய்யும் என்கிறது மராத்தியர் வரலாறு.

      மடாதிபதிகள் கால்நடையாக ஊர் ஊராகச் சென்று பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், இவருக்கிருந்த அதிக பணிகள் காரணமாக இவர் காரில் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதை சிலர் விமர்சனம் செய்த போதும், வளர்ந்து வரும் நமது சமுதாய அமைப்பில் கார்ப்பயணம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. கால் நடையில் செல்வதாக இருந்தால் இவர் பயணம் செய்திருக்கும் தூரத்தில் நூற்றில் ஒரு பங்குகூட பயணம் செய்திருக்க முடியாது. இவர் புகழுக்கு ஆசைப்பட்டவர் இல்லை; ஆனால் இவர் ஆற்றிய தொண்டுகள் காரணமாக புகழ் இவர் இருக்குமிடம் தேடி வந்து அடைந்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

      மொழிப் பிரச்சனையில் இவரது வெளிப்படையான அறிவிப்பு வியந்து பாராட்டத் தக்கது. பன்மொழி பேசும் மக்கள் மத்தியில் பழகவேண்டிய சூழல் அமைந்த இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு, உரக்கச் சொன்னார், சம்ஸ்கிருதம் என் தந்தை மொழி, தமிழ் என் தாய் மொழி என்று. இதையெல்லாம் நாம் கூர்ந்து கவனித்திருக்கிறோமா என்று எனக்குத் தெரியவில்லை.

      1994 மார்ச் 22ஆம் நாள் இவர் 69ஆவது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இமயம் போன்ற புகழின் மலையாக பெரியவர் இருந்த இடத்தில் இவர் பீடத்தில் அமர்ந்தபோது இவரது செயல்பாடுகள் எப்படியிருக்கும், பெரியவரின் நிழலில் இவர் ஒளி மங்கித்தான் தெரிவாரோ என்றெல்லாம் சிலர் எதிர்பார்த்திருந்த நேரத்தில், சற்றும் குறைவின்று இவரும் அந்த பீடத்தின் பெருமைகளைக் கட்டிக் காப்பாற்றியதோடு, அதன் வீச்சையும் அதிக மக்களுக்கு, அதிகமான இடங்களுக்கு, அதிகமான துறைகளுக்கு விரிவடையச் செய்ததைக் கண்டோம்.

      மடம் என்பது ஆன்மீகத்தோடு நின்றுவிடுவதல்ல; மக்களின் ஆதாரப் பிரச்சினையான சமூக சூழல் இவருக்கு முக்கியமாகப் பட்டது. அங்குதான் இவர் மடத்தையும் சமூகத்தையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டார். ஜன் கல்யாண், ஜன் ஜாக்ரன் எனும் அமைப்புகளை ஏற்படுத்தி சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உதவிக் கரம் நீட்டத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் நான் நேரில் பார்த்த ஒரு நிகழ்ச்சியை சமீபத்தில் அவர் அமரரான அன்று “முகநூலில்” பதிவிட்டிருந்தேன். பலர் படித்தனர். அது: சுவாமிகள் பட்டுக்கோட்டை விஜயம் என்ற செய்தி கேட்டு, நானும் இன்னும் சில நண்பர்களும் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டை சென்றடைந்தோம். அங்கு சின்னக்கடைத்தெருவில் இருந்த மணிக்கூண்டு அருகே மக்கட்கூட்டம் பூர்ணகும்பம் ஆகியவைகளோடு காத்திருந்தார்கள். விசாரித்ததில் சுவாமிகள் மதுக்கூரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார் என்றார்கள். நாங்கள் கண்டியன் தெரு வழியாக மதுக்கூர் சாலையில் நடந்து சென்றோம். எதிரில் ஒரு வண்டியில் சுவாமிகளை உட்காரவைத்து சீடர்கள் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த கூட்டத்தோடு சேர்ந்து வந்தோம். ஊரின் எல்லையில் கண்டியன் தெருவுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக சாலையில் பெருங்கூட்டம் கூடி தாரை தப்பட்டை வாத்திய முழக்கத்தோடு காத்திருந்தார்கள். அதில் “நாடிமுத்து” என்பவர் நிறைய திருநீறு பூசி, மேல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பயபக்தியோடு சுவாமிகளை எதிர்கொண்டு வரவேற்றார். அது தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி. அந்த நாடிமுத்துவை எனக்கு முன்பே தெரியும். அவர் சுவாமிகளின் பரிவாரத்தை நிறுத்திவிட்டு அவரை வணங்கி “சாமி, எங்க தெருவுக்கு வந்து ஆசி வழங்கணும். நாங்க கட்டப்போகிற பிள்ளையார் கோயில் வேலைய தொடங்கி வைக்கணும்” என்று வேண்ட, சுவாமிகள், ஆகா, பேஷா செய்யலாமே என்று விறுவிறுவென்று அங்கு செல்லத் தொடங்கினார். நாங்களும் சென்றோம். அங்கு தெருவெல்லாம் நீர் தெளித்து கோலம் போட்டு, தோரணங்கள் கட்டி, பெண்கள் தலைக்கு நீராடி தலையில் துண்டால் கட்டியிருந்ததைக் கண்டோம். தெருக்கோடியில் ஓரிடத்தில் பிள்ளையார் கோயில் கட்ட செங்கற்கள். ஜன் கல்யாண் இயக்கத்தில் அங்கெல்லாம் சுவாமியை யார் வேண்டுமானாலும் தொட்டு பூஜை செய்யவும், தீப ஆரத்தி எடுக்கவும் அனுமதி உண்டு. அதை சுவாமிகள் தொடங்கி வைத்துவிட்டு, அவ்வூரின் பெரிய தலைவரான நாடிமுத்துப் பிள்ளை அவர்களின் எஸ்டேட் பங்களா எனுமிடத்தில் தங்குவதற்கு சுவாமிகள் சென்றார். அப்போது சுவாமிகளின் இந்த செயல் ஒரு புரட்சியாகவே பட்டது.

      2000ஆம் ஆண்டில் நான் குடும்பத்தோடு காசிக்குச் சென்றிருந்தேன். அங்கு அனுமான்காட் எனுமிடத்தில் ஒரு கணபாடிகள் இல்லத்தில் தங்கி இருந்தோம். அருகிலுள்ள சங்கர மடத்துக்கு ஸ்ரீசுவாமிகள் வந்திருப்பதாக அறிந்தேன். அங்கு வடநாட்டு மக்கள் அளித்த வரவேற்பையும், மரியாதையும் நேரில் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் ஒரு காமாட்சி அம்மன் கோயில் கட்டப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

      1987இல் இவர் சமுதாயப் பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டுமென்கிற எண்ணத்தில் மடத்தின் பணிகள் தன்னைக் கட்டிப்போட்டு விடும் என்று எண்ணியோ என்னவோ, மடத்தை விட்டு நீங்கிச் சென்றார். அவரை தலைக்காவேரியில் கண்டு அவரை மீண்டும் காஞ்சி மடத்துக்கு அழைத்து வந்தவர் என்னுடைய தாய்மாமா அரக்கோணம் ராஜகோபால ஐயர் என்பார், அவர் வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்தார்.

      2004இல் சுவாமிகளுக்கு ஒரு மிகப்பெரிய சோதனை நேர்ந்தது. ஒரு வழக்கில் இவர் கைதான சமயம் இந்து சமுதாயமே அச்சத்தில் உறைந்து போனது. ஆனால் முகத்தில் எந்தவித சலனமோ, அச்சமோ, முணுமுணுப்போ இல்லாமல் சிறைப்பட்ட போதுமட்டுமல்ல, அதன் பிறகு தீர்ப்பு வரும் வரையிலும், அவர் இருந்த காட்சி அவரது நிலைத்த ஆழ்மனத்தின் வெளிப்பாடகவும், மன உறுதியின் எடுத்துக் காட்டாகவும் பார்க்க முடிந்தது.

      1980இல் சென்னை தாம்பரத்தில் இந்து மிஷன் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டது இவருடைய சமுதாயப் பணிகள் அதுமுதல் விரிவடையத் தொடங்கியது. இப்போது இதன் கீழ் 44 மருத்துவ மனைகள், சாதாரணமான விஷயமா? ஒரு அரசு செய்யவேண்டிய செயல், அல்லது ஒரு கார்ப்போரேட் நிறுவனம் செய்யவேண்டிய செயலை ஒரு இந்து மடம் செய்கிறது என்றால் அது நமக்குத்தான் பெருமை. இது தவிர Child Trust Hospital, ஆயுர்வேத டீம்டு யுனிவர்சிட்டி, ஐம்பதுக்கும் மேற்பட்ட வேத பாடசாலைகள் இவைகள் எல்லாம் அசாதரணமான செயல்பாடுகள். அத்தனையும் இவருடைய Brain Child என்று சொல்லலாம். எத்தனை இசைக் கலைஞர்கள் காஞ்சி மடத்தின் ஆஸ்தான வித்வான்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் அவரவர் தொழிலில் முன்னேற்றத்துக்கான வழிமுறைகள்.

      பொதுவாக மதத் தலைவர்கள் உள்ளுணர்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ மக்கள் மனங்களில் வாழ்ந்திருந்தார். ஆன்மீகவாதிகள் ஸ்பிரிச்சுவல் வாழ்வில் ஆழ்ந்திருப்பார்கள், இவரோ சமுதாய நல்வாழ்வில் ஆர்வம் காட்டி செயல்பட்டார். யாரும் தொடத் தயங்கும் அயோத்யா பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டு பேச்சு நடத்தினார்.  ஆதி சங்கரருக்குப் பிற்கு வேறு எவரும் செய்திராதபடி இவர் கைலாஷ், மானசரோவர் யாத்திரை செய்து வந்தார்.    
 
      அவருடைய மறைவு இந்து சமுதாயத்துக்கு, கீழ்தட்டு மக்களுக்கு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பின்தங்கியிருக்கும் பிரிவினர்களுக்கு, அத்தனை ஏன் நம் எல்லோருக்குமே பேரிழப்பு என்று சொல்லி அவருடைய நினைவுக்கு மனமாற அஞ்சலி செய்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
     
     
     


Friday, January 26, 2018

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.





                                          
இரண்டாம் உலகப் போரை ஜெர்மனியின் ஹிட்லர் தொடங்கி வைத்து ஐரோப்பிய நாடுகளை வென்று தன்னகப் படுத்திக் கொண்ட அதே நேரத்தில் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ஆப்பிரிக்க நாடுகளை பிடித்துக் கொண்டு முன்னேறிய நேரம். ஜப்பான் பெர்ள் துறைமுகத்தில் குண்டு வீசி கிழக்கு முனையில் யுத்தத்தைத் தொடங்கியது. ஹிட்லர் மேற்கிலிருந்து முன்னேறி வரும் நேரத்தில் ஜப்பான் கிழக்கத்திய நாடுகளையெல்லாம் மின்னல் வேகத்தில் பிடித்துக் கொள்ள, அங்கெல்லாம் ஆக்கிரமித்திருந்த பிரிட்டன் அந்தந்த நாட்டை ஜப்பான் வசம் விட்டுவிட்டு தனது ஆங்கில படைகளுடன் பின்வாங்கத் தொடங்கி விட்டது. தங்கள் தலை தப்பினால் போதும் என்ற பிரிட்டனின் எண்ணம் சுபாஷ் சந்திர போசுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. பிரிட்டனின் சுயநலம், துரோகம் இவற்றைக் கண்டு பொங்கினார். பிரிட்டனால் கைவிடப்பட்ட ஆசிய நாடுகளின் படைகளில் இருந்த இந்தியர்களைக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதற்கு அவரே தலைவரானார். ஜெர்மனியிலிருந்து புறப்பட்ட நேதாஜி ஜப்பான் சென்றார், அங்கு அவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அங்கிருந்து அவர் மலேயா, பர்மா, சிங்கப்பூர் ஆகியவிடங்களில் ஏராளமானோர் ஐ.என்.ஏ.வில் சேர்ந்தது மட்டுமல்லாமல், ஏராளமான பணம், நகைகள் இவற்றையும் கொண்டு வந்து குவித்தனர். இந்தியர்கள் கொடுத்த பணத்தில் அவர் ஒரு வங்கியையும் தொடங்கினார். ஒரு இஸ்லாமிய நண்பர் அவருக்கு ஐம்பது லட்சம் ரூபாய் வங்கிக்கு நன்கொடையாகவும், சில பெண்கள் அவரவர் எடைக்கு எடை பொன்னும் கொடுத்தார்கள்.

     ஐ.என்.ஏ. எனும் இந்த்ய தேசிய ராணுவத்தில் காந்தி பிரிவு, நேரு பிரிவு, ஆசாத் பிரிவு, ஜான்சி ராணி பிரிவு என்றெல்லாம் ராணுவப் பிரிவுகளைக்குப் பெயரிட்டார். அவரும் ராணுவ உடை அணிந்து ஒட்டு மொத்த ஐ.என்.ஏ.வுக்கும் தலைமை தளபதியாக விளங்கினார்.

1943 அக்டோபர் மாதம் நாட்டுக்கு வெளியே சுதந்திர இந்திய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்தார். அதற்கு அவர்தான் பிரதம மந்திரியும் பிரதம தளபதியுமாவார். இந்த சுதந்திர இந்திய அரசு அடுத்த சில தினங்களில் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தது. நேதாஜி உருவாக்கிய சுதந்திர இந்திய அரசு வெளி மண்ணில் இயங்கி வந்த போதே ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. சுதந்திர இந்திய அரசாங்கத்தின் தலைமையகம் முதலில் சிங்கப்பூரில் இருந்தது, பின்னர் பர்மாவுக்கு மாற்றப்பட்டது.

ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் தீவுகள் நேதாஜியின் சுதந்திர இந்திய அரசு வசம் அளிக்கப்பட்டது. 1943 டிசம்பர் 30 அன்று நேதாஜி அந்தமான் தீவிற்கு விஜயம் செய்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இந்திய நாடு இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அது இன்றளவும் நமக்கு ஒலிவடிவத்திலும் கிடைக்கிறது. நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட எண்ணற்ற தியாகசீலர்களைச் சிறையில் அடைத்து வைத்து கொடுமைகள் புரிந்த இடம் அந்தமான். அந்த பூமியில் முதல் சுதந்திர இந்திய அரசு பிறந்தது மகிழ்ச்சிக்குரியது.

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கிழக்காசிய நாடுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். பெருமைப் படுத்தினார்கள். இவர் அணிந்த மாலையொன்று 12 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் ஏலத்தில் எடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1945இல் இவர் தொடங்கிய வங்கியின் மூலதனம் 36 கோடியைத் தாண்டியது (இது அந்த காலத்தில்). சிங்கப்பூர் வானொலியிலும், பர்மாவிலிருந்தும் நேதாஜி வானொலி மூலம் உரையாற்றினார்.

இந்திய தேசிய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்களை இவர் ஜப்பானிடமிருந்து விலைக்கு வாங்கினார். சிலர் நினைப்பது போல ஜப்பான் இவ்வுதவிகளைச் செய்து நேதாஜியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பது பொய். ஐ.என்.ஏ.வின் போர்க்கள கோஷம் “டெல்லி சலோ” என்பதுதான்.

1944ஆம் வருஷம் ஜனவரி 26ஆம் தேதி (அப்போதெல்லாம் தேசியவாதிகள் ஜனவரி 26ஐ சுதந்திர தினம் என்றே முடிவு செய்து வைத்திருந்தனர்) நேதாஜி ஐ.என்.ஏ.வின் ராணுவ அணிவகுப்பைப் பார்வை யிட்டார். அதில் “ஜெய்ஹிந்த்” கோஷமும் “டெல்லி சலோ” சூளுரையும் வானைப் பிளந்தன.1944 பிப்ரவரி 4 அன்று ஐ.என்.ஏ. மேஜர் மிஸ்ரா என்பவர் தலைமையில் இந்தியாவின் பிரிட்டிஷ் படைகளை அரக்கான் மலைப் பகுதியில் தோற்கடித்தது. தொடர்ந்து வெற்றிகள் பல பெற்று, அந்த போரில் தோற்ற பிரிட்டிஷ் இந்திய படைகளில் இருந்த இந்திய வீரர்கள் ஐ.என்.ஏ.வில் இணைத்துக் கொள்ளப் பட்டனர். இந்தியாவின் பகுதிகளாக விளங்கிய மணிப்பூர், அசாமின் கொஹிமா போன்ற இடங்களுக்குள்ளும் நேதாஜியின் படை நுழைந்து விட்டது.

இந்த காலகட்டத்தில் போரில் ஜப்பான் ஆயுதங்கள் சப்ளை செய்யாததால் நேதாஜி தன் ஐ.என்.ஏ.படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டார். அமெரிக்கா ஜப்பான் மீது ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகளைப் போட்டு பேரழிவை உண்டாக்கியது. ஜப்பான் கையொடிந்த நிலைமையில் தவித்த நேரத்தில் இந்திய பிரிட்டிஷ் படைகள் பர்மாவின் உட்புகத் தொடங்கியது. நேதாஜி தன் படைகளைப் பின்வாங்கச் சொல்லிவிட்டு தான் ஜப்பான் செல்வதற்காக 1945 ஆகஸ்ட் 16ஆம் தேதி விமானத்தில் ஏறிப் பயணம் மேற்கொண்டார்.

அவர் பயணம் செய்த விமானம் பார்மோசா தீவிற்கருகில் பறக்கும் போது தீப்பற்றி கடலில் விழுந்தது. நேதாஜிக்கு பலத்த தீக்காயங்களுடன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிர் நீத்தார்.. இந்த செய்தியை அவருடன் பயணம் செய்த காயத்துடன் உயிர் பிழைத்த ஐ.என்.ஏ.கர்னல் ஹபிபுர் ரெஹ்மான் உறுதி செய்தார்.



Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 28

                       வரலாறு பேசும் பயணம் பகுதி 28
கொடும்பாளூர்.   
     
கொடும்பாளூர் எனும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலைக்கருகில் கிழக்காக சில கி.மீ. தூரம் சென்றால் காணப்படும் சிறு கிராமம். இது ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாக விளங்கிய வேளிர்குலத் தலைவர்கள் ஆண்ட ஊர். பல வேளிர்கள் இருந்தார்கள், அவர்களில் இங்கிருந்த வேளிர் தலைவன் பெயர் பூதி விக்ரம கேசரி என்றும் அவர் மகள்தான் வானதி என்றும் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதுகிறார். அந்த ஊருக்குள் நுழையும்போதே ஒரு சிறு கோயில் அதன் வாசலில் ஒரு பெரிய நந்தி. இதென்ன அதிசயம் என்று கிட்டே போய் பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த கோயில் ஒரு நாயன்மாருக்கானது. நந்தி எங்கோ கிடைத்ததாம், அதைக் கொண்டு வந்து இங்கே வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து ஊருக்குள் சென்றால் அங்கு பரந்து விரிந்து கிடக்கும் வெட்ட வெளிக்கு நடுவில் நாங்களும் இருக்கிறோம் என்று இரு கற்றளிக் கோயில் காணப்படுகிறது. அது தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருபவை. தூரத்தில் தொல்லியல் துறை காவலர் ஆழ்துளைக் கிணற்றில் நீரெடுத்து நீராடிக் கொண்டிருந்தார். இரு பெண்கள் அங்கிருந்த புல்வெளியைச் சரிசெய்து கொண்டிருந்தனர். பாரதி இயக்கத்தினர் சென்று அவ்விரு கற்றளியையும் பார்த்தபின் அருகில் ஒரு கிணறு இருப்பதைப் பார்த்தனர். தண்ணீர் இல்லை, ஆனால் அருகில் ஒரு பள்ளம், அதில் படிகள் அந்தப் படிகள் வழியாக நுழைந்து சென்றால் கிணற்றின் அடிக்குச் செல்லலாம். பிரேமசாயியும் ரமேஷ் நல்லுவும் கூடவே வந்தவர்களைக் காணோம் என்று தேடினால், இருவரும் கிணற்றினுள் படிகள் வழியாக இறங்கி நிற்கின்றனர்.

அருகில் மிகப் பரந்து விரிந்த புல்வெளியுடன் கூடிய புதிய பூங்கா அமைத்திருக்கின்றனர். கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தினுள் இருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இந்த ஊர் எவ்வளவு பழமையான ஊர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த ஊரின் பெயர் சிலப்பதிகாரம் காப்பியத்திலும் வருகிறது. கோவலன் கண்ணகி இருவரும் கவுந்தி அடிகளுடன் பூம்புகாரிலிருந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழியில் கொடும்பை எனும் ஊரை அடைகின்றனர். அந்த கொடும்பைதான் கொடும்பாளூர். பெரிய புராணத்தில் இவ்வூர் கோநாட்டுக் கொடிநகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

இங்கு அரசாண்டவர்கள் வேளிர் என்றோமல்லவா? இந்த வேளிர் குலத்தை தமிழ் இலக்கியங்களில் இருக்குவேள் என்கின்றனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையை அடுத்த திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். முத்தரையர்கள் வடக்கில் இருந்த பல்லவர்களோடும், தெற்கில் இருந்த பாண்டியர்களோடும் மாற்றி மாற்றி நட்பு கொண்டிருந்தனர்.
இவர்களுக்குள் நடந்த பல சண்டைகள் 8ஆம் நூற்றாண்டில் இந்த கொடும்பாளூரில் நடந்திருக்கின்றன. மதுரையை 740 முதல் 765 வரை ஆண்ட மாறவர்மன் ராஜசிம்மன் என்பான் பல்லவ மன்னன் நந்திவர்மனைப் போரில் தோற்கடித்தான். அந்தெ வெற்றி இந்த கொடும்பாளூரில் பெற்றதாகத் தெரிகிறது. முத்தரையர்களின் தலைவன் பெயர் பெரும்பிடுகு சுவரன்மாறன். இவன் பாண்டியர்களையும் சேரர்களையும் வென்றதாக வரலாறு இருக்கிறது.

கி.பி.880இல் திருப்புறம்பியம் எனுமிடத்தில் நடந்த பெரும் போரில் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் கடுமையான யுத்தம். அதில் பல்லவர்களுக்கு உறுதுணையாக இருந்த சோழ மன்னன் விஜயாலய சோழன். பாண்டியர்களுக்குத் துணையாக இருந்தவன் முத்தரையர் மன்னன். பல்லவன் முத்தரையர் ஆண்ட நாட்டைச் சோழர்களுக்குக் கொடுத்துவிடுகிறான். விஜயாலயன் முதலாகக் கடைச்சோழ மன்னர்கள் ஆளத் தொடங்குகிறார்கள். அதுவரை செந்தலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்தரையர்கள் தோற்றுப் போகிறார்கள். அது முதல் வேளிர்கள் சோழர்களின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தலைநகரம் கொடும்பாளூர்.
கொடும்பாளூரை ஆண்ட வேளிர்களை இருக்குவேளிர் என்கின்றனர். இவர்களது பங்கு சோழ சாம்ராஜ்யத்தில் மிக முக்கியமாக இருந்திருக்கிறது. கர்நாடகத்திலுள்ள துவாரசமுத்திரத்திலிருந்து வந்த யாதவ வம்சம்தான் வேளிர்கள் என்கிறது ஒரு செய்தி. அறுபத்தி மூவரில் ஒருவரான இடங்கழி நாயனார் என்பார் இந்த வேளிர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய கோயில் வாசலில்தான் பெரிய நந்தியைப் பார்த்தோம் என்று சொன்னோம்.
                    
                             இடங்கழி நாயனார் கோயிலும், பெரிய நந்தியும்


கொடும்பாளூரில் கருங்கல்லால் ஆன பல சிறு கோயில்கள் இருக்கின்றன. பல கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தபோதும் மூவர் கோயில் எனப்படும் முசுகுந்தேஸ்வரர் கோயில் சிறப்பானதாக இருந்திருக்கிறது. ஐவர் கோயில் என்ற தொகுப்பும் அங்கே காணப்படுகின்றது. மூவர் கோயில், ஐவர் கோயில் ஆகிய இவ்விரண்டும் தான் இவ்வூரின் பழமையை, பெருமையை இன்றும் பறைசாத்திக் கொண்டிருக்கிறது.
                          To be continued...............