பாரதி பயிலகம் வலைப்பூ

Saturday, December 30, 2017

சிறுகதை -- நாற்பது வருஷ வாழ்வும் தாழ்வும்.


·         சிறுகதை

தஞ்சை வெ.கோபாலன்

பிரம்மச்சரியம் என்பது மிக உயர்ந்த சுயகட்டுப்பாடு. அனுமன், பீஷ்மர் போன்றவர்கள் நமது புராணங்களின்படி கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வந்தவர்கள் என்பது  தெரிகிறது. இது ஒரு தவம் போன்றது. பொறிகளின் வசம் மனத்தை ஒப்படைத்து அவை  போகும் திசையெல்லாம் போய் தடுமாறாமல், ஐம்புலன்களையும் அடக்கித் தன் வசம் வைத்துக் கொண்டு மனதை ஒருமைப்படுத்தி நல்வழியில் வாழ்பவன் மனிதருள் மாணிக்கமாகத் திகழமுடியும் என்பது நமது பாரத கலாச்சாரம் சொல்லும் நியதி.
இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன்   பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.
அந்த ஊரின் பெயர் அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் ஈசனின் பெயரால் வந்தது. அந்த  சுவாமியின் திருநாமம் காயாரோகணம். இது என்ன புரியாத புதிர் போன்ற பெயர் என்று  தோன்றுகிறதல்லவா. இந்தச் சொல்லை காயம் என்றும் ஆரோகணம் என்றும் இரண்டாகப்  பிரிக்க வேண்டும். காயம் என்பது நமது உடல், ஆரோகணம் என்பது மேல்நோக்கிச் செல்வது, இசையில் ஆரோகணம், அவரோகணம் என்பர். நாம் இந்த பூமியில் எடுத்திருக்கும் பூத   உடலோடு மேலுலகம் செல்வதையே காயாரோகணம் எனச் சொல்லலாம். இந்த ஊரையும்  திரு நாகைக்காரோகணம் எனத்தான் குறிப்பிடுவர், அதுதான் நாகைப்பட்டினம். இந்த  ஊரிலும் எப்படி மதுரையில் மீனாட்சியின் புகழோ, அப்படியே இங்குள்ள அம்மன்  நீலாயதாட்சியின் பெயரே முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஊரில் ஒரு சிலர் இந்த  காயாரோகணம் எனும் பெயரை ஆண் குழந்தைகளுக்கு வைத்திருப்பர்.
இங்கு ஒரு பெரும் செல்வந்தர் இருந்தார். கடல் வாணிபம் செய்து கோடீஸ்வரராக வாழ்ந்து  வந்தார். சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தும், கெளரவமும் அவருக்கு இருந்து வந்தது.  இவருடைய முக்கியமான வியாபாரம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்படும் தேக்கு மர  வியாபாரம் அதோடு பர்மாவிலிருந்து வரும் அரிசி. இந்த வகை அரிசி மலிவானது. ஏழை  மக்கள் இந்த அரிசியை அதிகம் வாங்கிப் பயன்படுத்துவர் என்பதால், கடற்கரையோரமாக  ஒரு பழைய கட்டடத்தில் கப்பலில் இறங்கிய மூட்டைகளை சேமித்து வைத்திருப்பார்.  இங்கிருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அவருக்குப் பல உப்பளங்கள் இருந்ததால் உப்பு மொத்த வியாபாரமும் இருந்தது. இவருடைய பெயர் காயாரோகணம்.
இந்த காயாரோகணம் செல்வாக்கு உள்ளவர். பிரிட்டிஷ் காலத்தில் இவருக்கு அதிகமான  செல்வாக்கு இருந்தது. அரசாங்க உயர் அதிகாரிகள் எல்லாம் இவரிடம் அதீத மரியாதை  செலுத்தி வந்தனர். அப்போதெல்லாம் நாகைப்பட்டினம் துறைமுகம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆப்பிரிக்கா, மொரீஷஸ், பிஜி, மற்ற கீழை நாடுகளுக்குப் போகின்றவர்கள் நாகப்பட்டினம் வந்து கப்பலில் ஏறித்தான் பயணத்தைத் தொடங்குவர். இது ஒரு முக்கிய  துறைமுக நகரமென்பதால் இங்கு வசதியாகவும் செல்வாக்கோடும் வாழ்ந்த இந்த  காயாரோகணம் என்பார் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து  வந்தார். அவர்களிடம் ராவ் பகதூர் என்ற விருதையும் பெற்றிருந்தார். சொந்த வாழ்க்கையில் சில விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகி சிலரை வெறுத்தும், சிலர் மீது அபாரமான மதிப்பும் வைத்திருந்தார். தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த கதர்க்குல்லாய் அணிந்த  காந்தி கட்சியாரை இவருக்கு அறவே பிடிக்காது, அதைச் சொல்லிலும் செயலிலும்  அதிகமாகவே காட்டி வந்தார்.
அவ்வூரின் பல சமூக அமைப்புகளில் அவர் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ  ஏதோவொரு பதவி இவருக்கு உண்டு. சாதாரண கூலிகளும், ஏழைகளும் இவரைக் கண்டால் உடலை வளைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இவர் பொதுவாக நடந்து போகும் வழக்கம்  இல்லை, ஏதாவதொரு வாகனத்தில்தான் இவரது பயணம் இருக்கும். ஓய்வு தினங்களிலும், பொது நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களிலும் இவர் தன்னுடைய மாளிகையின் முதல் மாடியின் பால்கனியில் நண்பர்களுடன் உட்கார்ந்து கொண்டு கடல் காற்றை அனுபவித்துக் கொண்டு வெளிநாட்டு பானங்களை அருந்திக் கொண்டிருப்பார். அதுபோன்ற சமயங்களில் அந்த பகுதியே வெடிச் சிரிப்பும் கும்மாளமுமாகவே இருக்கும். காயாரோகணம் சாதாரணமாகப் பேசும்  பேச்சில்கூட ஏதோ பெரிய நகைச்சுவை இருப்பது போல கூடியிருப்பவர்கள் ஓகோவென்று  சிரித்து மகிழ்வார்கள்.
இத்தனை செல்வத்தைப் படைத்திருந்த அவர் எந்த தர்ம காரியங்களும் செய்ததாக ஊரார்  சொன்னதில்லை. ஆனால் பிரிட்டிஷாரை ஆதரிக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள்  சிலவற்றுக்கும், ஆங்கில புத்தாண்டு, இங்கிலாந்து அரசியார் பிறந்த நாள் விழா, கவர்னர்  வந்தால் வரவேற்பு போன்றவற்றிற்கு இவருடைய பங்களிப்பு அதிகமாகவே இருக்கும்.
இவரிடம் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் குறைந்த ஊதியத்திலேயே  பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, தன் வியாபாரமே நஷ்டத்தில்  நடக்கிறது; இத்தனை ஆட்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது; பர்மா தனி  நாடாக ஆகிவிட்டதால் அங்கிருந்து மரமோ, அரிசியோ கொண்டு வருவது சிரமமாகப் போய்விட்டது. ஆகையால் இந்த ஊதியம் கட்டுப்படியாகவில்லையானால் அவர்கள் எல்லாம் நின்று கொள்ளட்டும், நானும் வியாபாரத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்றார் காயாரோகணம்.
ஏழை எளியவர்களுக்கு வேறு என்ன வழி. நல்லதோ கெட்டதோ இவரிடம் அடிமையாக  வாழ்ந்தாகிவிட்டது. உயிருள்ள வரை அடிமையாகவே வாழ்ந்து விடுவதே நல்லது எனும்  முடிவுக்கு வந்துவிட்டனர். அந்த ஊரில் மட்டும் அவருக்கு ஏகப்பட்ட வீடுகள்; சில  பங்களாக்கள் ஊரிலேயே மிகப் பெரியவை. அவர் மட்டும் சற்று பழமையான அவருடைய  தந்தையார் காலத்தில் கட்டப்பட்ட பங்களாவில் வசித்து வந்தார்.
ஒரு நாள் பிற்பகல் நேரம், காயாரோகணமும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரும்  அவர் பங்களா பால்கனியில் வழக்கம் போல உட்கார்ந்து கொண்டு பானங்களை அருந்திக் கொண்டும், தின்பண்டங்களை கொரித்துக் கொண்டும் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பால்கனியிலிருந்து பார்த்தால் அவர் பங்களா வாசலில் வருபவர்கள் நன்றாகத் தெரியும். அப்படி யார் வருகிறார்கள் என்பதையும் அவர் அவ்வப்போது கவனித்துக் கொண்டிருப்பார்.
அந்த நேரத்தில் ஒரு ஏழை மனிதன். இடையில் அழுக்குச் செங்காவி படிந்த நான்கு முழ  வேட்டி முழங்காலுக்குச் சற்று கீழ்வரை கட்டி, மேலே ஒரு துண்டை தோளில் போட்டுக்  கொண்டு சட்டை எதுவும் அணியாமல் வந்து நின்றார். அவர் முன் தலை முழுவதும் வழுக்கை, பின் தலையில் மட்டும் சிறிய குடுமி முடியப்பட்டிருந்தது. வந்து நின்ற அவர் மாடி  பால்கனியில் குரல்கள் கேட்டு அங்கே வாசலில் தயங்கி நின்று மாடியை அண்ணாந்து  பார்த்தார்.
தேவைக்கு மேலாகவே பானம் உள்ளே சென்றிருந்ததால் அவருக்கு போதை நன்கு  தலைக்கேறியிருந்தது. தன் வீட்டு வாசலில் வந்து நிற்கும் இந்த ஆண்டி யார் என்று  பார்த்துவிட்டுத் தன் குரலை கனைத்துக் கொண்டு, “யாரையா அது வாசலில்? என்ன வேண்டும்? இங்கே வந்து ஏன் நிற்கிறாய்?” என்றார்  அதிகாரம் தொனிக்கும் குரலில்.
வந்த அந்த எளிய மனிதன் மிக்க பணிவோடு “ஐயாவைப் பார்த்து சில வார்த்தைகள்  பேசலாமா? உங்க கிட்டே ஒரு உதவி நாடி வந்திருக்கேன்.” என்றார்.
“உனக்கு எந்த ஊர். என் கிட்டே என்ன உதவி எதிர்பார்த்து வந்தே? பசியா, சோறு  வேணுமா?” என்றார் காயாரோகணம்.
“ஐயா! என் பசிக்கு இல்லை ஐயா, ஊரார் பசியை தணிக்க நான் அன்னதானம் செஞ்சுண்டு  வரேன். அந்த பணிக்கு உங்களால ஆன அரிசியோ, பணமோ கொடுத்தா வாங்கிண்டு  போகலாம்னு வந்தேன். எனக்கு ஊர் கும்பகோணம் பக்கம்” என்றார் அந்த மனிதர்.
“நீ கும்பகோணமாயிருந்தா என்ன கொட்டையூரா இருந்த எனக்கென்ன ஐயா! பசியா இருந்த கொஞ்சம் நில்லு, சோறு போடச் சொல்றேன். பசியாற சாப்பிட்டுப் போ, ஊருக்கெல்லாம்  சாப்பாடு போட எங்கிட்ட எதுவும் கிடையாது. ஏன்யா! உனக்கு சோத்துக்கே வழியில்லை,  இந்த லட்சணத்துல ஊருக்கு சாப்பாடு போடப்போறே, அதுக்கு நான் அரிசி, பணம் கொடுக்கணுமா?” என்றார் காயாரோகணம் கேலியாக. அவருடைய இந்த கேலியைக் கேட்டு கூட  இருந்தவர்கள் ஓகோவென்று கைகொட்டி ஆரவாரம் செய்து கொக்கரித்துச் சிரித்தார்கள்.
ஒரு ஏழை, ஒட்டிய வயிறு, ஒழுங்கான உடைகூட இல்லை, ஆனால் மனம் நிறைய  வறியவர்கள் வயிற்றுக்குச் சோறிட வேண்டுமென்பதற்காக, சுய கெளரவம் கூட பார்க்காமல் அன்னியர் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்பவனை எள்ளி நகையாடும் அந்த  வசதிபடைத்த செல்வச் சீமான்களின் நோக்கம், இந்த ஏழையைக் கேலி செய்வதல்ல,  அந்த செல்வந்தரை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகத்தான்.
வந்தவர் முகத்தில் ஏமாற்றமோ, வருத்தமோ, அவமானமோ இல்லை. வந்து நின்றபோது  இருந்த அதே எதிர்பார்ப்பு, அமைதி இப்போதும் இருந்தது. இதைப் போல இதற்கு முன்பும்  எத்தனை இடங்களில் இது போல அவமானப் பட்டிருப்பாரோ என்னவோ அதனால் அவர்  மனமொடிந்து போய்விடவில்லை. வீட்டுக்காரர் சொன்ன கடும் சொல்லை ஜீரணித்துக்  கொண்டாரோ இல்லை அவர் மனத்தைச் சுட்டதோ தெரியவில்லை, மேலும் சற்றுத் தயங்கி  நின்றார்.
அப்போது பால்கனியில் வீட்டு முதலாளியுடன் உட்கார்ந்து பானம் பருகிக் கொண்டிருந்த  ஒருவர் பேசினார். “இன்னும் ஏன்யா நிக்கறே! அதான் ஐயா சொல்லிட்டாருல்ல. போய் வேற இடம் பாரு, போ!” என்றார் அவர்.
“சரி” எனும் பாவனையில் அந்த முதியவர் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து மெல்ல  நகர்ந்தார். அப்படி அவர் போகும்போது முணுமுணுக்கவோ, வாய்க்குள் அவர்களை  சபித்துவிட்டோ போகவில்லை. மாறாக அவரோடு பிறந்த அந்தப் பணிவு, இரக்கம்,  அன்பு இவற்றால் உந்தப்பட்டு வலக்கையை உயர்த்தி வாழ்த்துவது போல அசைத்துவிட்டுப் போனார்.
“பாரய்யா! அவனுக்குள்ள திமிரை. இல்லைன்னு சொல்லிட்டாராம், அதுக்காக அவன் இவரை வாழ்த்தரானாம், கையை உயர்த்தி வாழ்த்தி விட்டுப் போறான்” என்றார் மாடிக்காரர் ஒருவர். வந்த ஏழை போய்விட்டார். அவர் வந்ததோ, அன்று நடந்த சம்பாஷணைகளோ அங்கிருந்த  அனைவருக்கும், காயாரோகணம் உட்பட அனைவருக்குமே மறந்து போய்விட்டது. காலம் ஓடிக்கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து சுதந்திர இந்தியா உதயமாகிவிட்டது. நம்  நாட்டை நம்மவர்களே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முன்பு பர்மா இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது பர்மா தேக்கும், பர்மா அரிசியும் இவருக்குச் செல்வத்தைக் கொண்டு வந்து குவித்தது. சுதந்திரத்துக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்பே பர்மா தனி நாடாகிவிட்டது.  நமது கதாநாயகர் காயாரோகணத்துக்கும் வியாபாரம் படுத்துவிட்டது. அதே ஊரில் முடிசூடா மன்னனாக இருந்த காலம் போய் இப்போது சுதந்திர இந்தியாவில் அமைந்த ஆட்சியோடு  ஒத்துப் போக முடியாமல், இவர் யாரையெல்லாம் கேலி பேசினாரோ, அவர்கள் எல்லாம்  இப்போது ஆட்சிபுரியும் பிரிவினரோடு சேர்ந்து விட்டதால், இவர் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தார்.
காயாரோகணத்துக்கு வியாபாரத்தில் சரிவும், தன்னுடைய சுய செல்வாக்கில் சரிவும், பண  வசதிக் குறைவும், வயதின் மூப்பும் சோர்வடையச் செய்திருந்தது. எதிலும் அதிக ஆர்வமின்றி வீடே கதியென்று முடங்கிக் கிடக்கத் தொடங்கினார். இவரை எந்த பொது நிகழ்ச்சிக்கும்  யாரும் அழைப்பதுமில்லை. இவர் காலத்தில் இவர் கொள்கைகளுக்காக இவரைக் கொண்டாடியவர்களுக்கும் இப்போது வயது மூப்பு வந்துவிட்டதால் இவரை யாரும் சீண்டுவாரில்லை.  பல காலம் போட்டுக் கழற்றிய ஆடையைப் போல இவர் கழற்றி ஒரு ஓரமாக  வீசப்பட்டிருந்தார்.
ஒவ்வொன்றாகத் தன்னுடைய பங்களாக்களை விற்றார். வியாபாரம் பிரிட்டிஷ் காலத்தோடு முடங்கிப் போய்விட்டது. ஒன்றிரண்டு மிச்சமிருந்த சொத்துக்களும் விற்கப்பட்டு விட்டன.  இவருடைய எப்போதும் குடியிருந்த அந்த பழைய பங்களாவையும் இப்போது விற்க  வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு விலை பேசவும் ஆட்கள் வந்திருந்தார்கள்.  முன்பு பால்கனியில் உட்கார்ந்து உத்சாக பானம் அருந்திய காயாரோகணத்தை இப்போது  பார்க்கமுடியவில்லை. நிமிர்ந்தே இருந்த அவரது தலை இப்போது குனிந்தே இருந்தது. பளபளவென்று காட்சியளித்த அவரது முகம் சுருங்கிக் குழி விழுந்து கண்கள் உள்ளே போய் எளிய தோற்றத்தில் இருந்தார். இந்த நிலையில் இவர் யார் வீட்டு வாசலிலாவது போய் நின்றால்,  ஒன்றும் இல்லை போய்யா என்பார்கள், அந்த நிலைமை அவருக்கு. என்ன கொடுமை?
இந்த வீடுதான் கடைசி சொத்து. இது விற்று வரப்போகும் பணமும் தற்போது அவருக்கு  இருக்கும் கடன்களைக் கொடுத்தால் சரியாகப் போய்விடும், கையில் ஒரு பைசாகூட மிஞ்சாது. அதன் பின் எங்கே போய் இருப்பது, எப்படி சாப்பிடுவது. உற்றார் உறவு எல்லோரும்  எப்போதோ விட்டுப் பிரிந்து போய்விட்டார்கள். உற்ற துணையாக இருந்த அவருடைய  மனைவியும் காலமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. யாரோ அருகிலுள்ள ஒரு குடிசை  வீட்டில் இருப்பவர், ஏதொவொரு காலத்தில் இவரிடம் வேலை செயதவராம் அவர்  பரிதாபப்பட்டு எங்க முதலாளி என்று சொல்லிக் கொண்டு இவருக்கு சாப்பாடு கொண்டு  வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இனி இவர் இந்த வீட்டைவிட்டுப் போய்விட்டால்  அதற்கும் இனி திண்டாட்டம் தான்.
வீட்டை வாங்குபவர்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். நாலைந்து பேர் வந்தனர், அதில் அனைவரும் நல்ல பளிச்சென்று கதர் வேட்டி, கதர் முழுக்கைசட்டை அணிந்து தோளில் கதர் துண்டுடன், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் போல காட்சியளித்தனர். அவர்களோடு சற்று  அழுக்கு வேட்டியை இடையில் கட்டிக் கொண்டு சட்டையில்லாமல் மேலே ஒரு துண்டு  அணிந்து கொண்டு படு கிழம் ஒன்றும் வந்தது. அவரைப் பார்த்ததும் காயாரோகணத்துக்கு  மனத்தில் சுரீர் என்று தைத்தது. முன்பு எப்போதோ, வாசலில் வந்து இதே கோலத்தில் வந்து  நின்ற ஒரு ஏழை மனிதரைத் தான் மனிதாபிமானம் இல்லாமல் துரத்திவிட்ட நிகழ்ச்சி நெஞ்சில் நிழலாடியது. அவர்தானோ இவர்? சேச்சே இருக்காது. இத்தனை வருஷம் கழித்து அந்த  பரதேசி வரமுடியுமா, நம் மனம் அப்படி சொல்கிறது என்று தேற்றிக் கொண்டார்.
வந்தவர்கள் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர்கள். நல்ல செல்வந்தர் வீட்டார். அவர்கள் நடத்தி  வரும் ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு அந்த ஊரில் ஒரு கட்டடம் பார்த்துக் கொண்டிருந்தனர்.  வயது முதிர்ந்த ஆதரவற்ற பெரியவர்களைத் தங்கவைத்து அவர்களுக்கு ஆதரவு தருவது அ ந்த தர்ம தாபனத்தின் நோக்கம். அவர்களுடன் வந்த அந்த ஏழைக் கிழவர் பல ஊர்களிலும் கோயில் திருவிழாக்கள் சமயத்தில் அன்னதானம் செய்யும் பெரியவர். அவர் மூலமாக மக்கள் வழிபடும் ஒரு மதத் தலைவரும் மடாதிபதியுமான பெரியவர் இந்த தர்ம கைங்கர்யத்தைச்  செய்யச் சொல்லி அனுப்பியிருக்கிறார். இந்த வீட்டை முதியோர் இல்லமாகத்தான் நாங்கள்  நடத்தப் போகிறோம். இந்த வேலை முடிந்து இல்லம் தயாராகிவிட்டது என்ற செய்தியை  இந்த முதியவர் அந்த மடாதிபதியிடம் போய் சொல்வார் என்ற விவரங்களையெல்லாம்  வந்தவர்கள் காயாரோகணத்திடம் சொன்னார்கள்.
வந்த அந்த ஏழை முதியவரை தலை நிமிர்ந்து பார்த்தார் காயாரோகணம். இவர்  அவராகத்தான் இருக்க முடியும், ஆனால் அவர் அந்த பழைய நிகழ்ச்சிகள் எதையும்  நினைவு வைத்திருப்பவர் போல காட்டிக் கொள்ளவில்லையே. அவரிடமே கேட்டு விடலாமா? மனது கேட்கவில்லை, கேட்டே விட்டார்.
“ஏன் சுவாமி? நீங்க இதுக்கு முன்பு ஒரு முறை பல வருஷங்களுக்கு முன்னால இந்த வீட்டு  வாசலுக்கு வந்து அன்னதானத்துக்கு அரிசி அல்லது பணம் வேணும்னு கேட்டிருக்கீங்களா.  உங்களைப் பார்த்த மாதிரி நினைவு” என்றார் காயாரோகணம்.
அந்த கிழவர் மெல்ல யோசித்துவிட்டு, எனக்கு நினைவில்லை. பல வருஷமா, நான் பல  ஊர்களுக்கும் போறேன், பல பேரைப் பார்க்கிறேன். அன்ன தானத்துக்கு அட்சதை கேட்பேன், காய் கறி, சாமான்கள், பணம் உதவி கேட்பேன். பல ஊர் கோயில் திருவிழா சமயத்துல  அன்னதானம் செய்வேன், பெரியவர் சொன்னதால அதை செஞ்சிண்டுருந்தேன். இப்பவும்  செய்யறேன். இவாளுக்கு இங்க ஒரு இல்லம் தொடங்கணும்னு சொன்னதால இவாளோடு  இங்கே வந்தேன். வேற எனக்கு எதுவும் நினைவில்லையே” என்றார் அவர்.
நாப்பது வருஷம் வாழ்ந்தவனுமில்ல, நாப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்ல என்று பொதுவாக மக்கள் சொல்லும் வாக்கு பொய்யில்லை போலிருக்கிறது என்று நினைத்து மனம் கசிந்தார்  காயாரோகணம்.


சிறுகதை -- எத்தனை முகங்கள்?

சிறுகதை
தஞ்சை வெ. கோபாலன்

அன்று சம்பள நாள். இப்போது போல் அப்போதெல்லாம் வங்கியில் செலுத்திவிட்டு அங்கு போய் பணம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை வரவில்லை. அலுவலக கணக்குப் பிரிவில் கணக்காயர் மேஜைக்குச் சென்று அங்குள்ள சம்பளப் பட்டியலில் ரெவின்யூ ஸ்டாம்பில் கையெழுத்திட்டுவிட்டு அவர் கொடுக்கும் சம்பள உறையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி தன்னுடைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவரில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான் சரவணன். அதில் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களும் அறுபது பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அப்பாடா, இன்றே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். வாடிக்கை வைத்துக் கொண்டிருக்கும் மளிகைக் கடைக்கு முதலில் நூற்றி முப்பது ரூபாயை வீட்டுக்குப் போகும் வழியிலேயே கொடுத்தால்தான் நாளைக்கு அடுத்த மாத சாமான்களை வாங்க முடியும். இதென்ன வெறும் முன்னூற்று சொச்சம் ரூபாய் சம்பளம் என்று திகைக்காதீர்கள். இது நடந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஊதியம் அவ்வளவுதான்.
சம்பள உறையை வாங்கி தன் சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டான். பின்னர் தன் இடத்தில் போய் முடிக்க வேண்டிய அன்றைய வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டுத் தன் பை, டிபன் கேரியர், குடை இவை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்டான். அப்போதே மாலை மங்கி இரவு படரத் தொடங்கிவிட்டது. மெல்லிய இருட்டு எங்கும் பரவிய போது ஆங்காங்கே விளக்குகளும் எரியத் தொடங்கின. வீதியில் இறங்கி வீடு நோக்கிக் கிளம்பினான்.
வழக்கம் போல சம்பள தினத்தில் மனைவிக்கு பம்பாய் இனிப்புக் கடையில் ஏதாவது இனிப்பும், வாசலில் உட்கார்ந்து கூடையில் வைத்துக் கொண்டு பூ விற்கும் பெண்மணியிடம் ஒரு முழம் மல்லிகைப் பூவையும் வாங்கிக் கொண்டான். தன் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான், பணக் கவர் பத்திரமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, அது அங்கு இருந்தது.
வழியில் ரயில்வே லெவல் கிராசிங். அப்போது எந்த ரயிலும் வரும் நேரமில்லை என்பதால் கேட் திறந்தே இருந்தது. சாலையில் நடந்து போவோர் அதிகம் இருந்தனர். சில வாகனங்களும் கேட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்குப் போகும் அவசரம் ஒரு புறம் இருந்தாலும் சரவணனுக்கு வழியில் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைக்குச் சென்று போன மாதம் வாங்கிய சாமான்களின் பில் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டும். சரவணனுடைய நாணயத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர் அண்ணாச்சி. அவரிடம் தன் கணக்கில் அவ்வப்போது தேவைப்படும் சாமான்களை வாங்கிக் கொண்டு கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவான், அந்த மாதம் முடிந்து சம்பளம் வாங்கிய அடுத்த கணம் கடைக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும். ஆகையால் சரவணன் எந்த பொருள் எப்போது கேட்டாலும் அண்ணாச்சி கடையில் கிடைத்துவிடும் அதனால் அவன் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவதும் சிரமம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.
சரவணனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவி தவிர அவனுடைய இரண்டு குழந்தைகள் வயதான விதவைத்தாயார் ஆகியோர் அவன் வீட்டில் இருந்தனர். குழந்தைகளில் முதல் பையன் கல்லூரியிலும், அடுத்த பெண் பள்ளிக் கூடத்திலும் படித்து வந்தனர். இவர்கள் படிப்புக்கும் சரவணன் செலவு செய்ய வேண்டியிருந்ததால் குடும்பம் சிரமமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.
அலுவலக வேலைக்கிடையே அவன் காலை மாலை வேளைகளில் பூஜைகளும் செய்து வந்தான். அது தவிர கைரேகை, நியுமராலஜி எனும் எண்கணிதம் ஆகியவற்றிலும் தேர்ந்தவனாக இருந்தான். இவனிடம் ஆரூடம் பார்க்கவும், கைரேகை சாஸ்திரம் பார்க்கவும், நாள் குறித்துக் கொடுக்கவும் அடிக்கடி பலர் வந்து விடுவார்கள். அவன் குறித்துக் கொடுத்த நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அவன் தோற்றமே அவனை ஒரு நல்ல ஆத்திகனாகவும், தவறிழைக்காத நல்ல மனிதன் என்பதையும் காட்டியது.
வரும் மாதத்தை எப்படிக் கழிப்பது எந்தெந்த செலவுகளைச் சரிக்கட்டுவது என்ற கவலையில் வீட்டை நோக்கி நடந்த போது ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்கும் போது எதிரில் வந்த யாரோ ஒருவன் அவன் மீது இடித்துவிட்டுச் சென்றான். இடது தோளில் சிறிது வலித்தது. தடவி விட்டுக் கொண்டு, இத்தனை வெளிச்சத்திலேயே இப்படி இடிக்கிறானே, கும்மிருட்டாக இருந்தால் நம்மைக் கீழே தள்ளிவிட்டே போய்விடுவான் போல் இருக்கிறதே என்று எண்ணியபடியே மேலே போய்க்கொண்டிருந்தான்.
அண்ணாச்சியின் கடை வந்துவிட்டது. கடையில் விளக்கு ஏற்றியாகிவிட்டது. கடையிலும் அதிகக் கூட்டம் இல்லை. அண்ணாச்சியின் முன்பு வந்து நின்றுகொண்டு இந்த மாதம் என்ன ஆயிருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள், சம்பளம் வந்து விட்டது, கொடுத்துவிட்டுப் போகிறேன் என்றான் சரவணன்.
அண்ணாச்சி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு நூற்று முப்பது என்றார். சரி என்று சொல்லிவிட்டு பைக்குள் கைவிட்ட சரவணன் அதிர்ச்சியில் துள்ளினான். என்ன ஆயிற்று என்றார் கடைக்காரர். என்ன சொல்வதென்று புரியாமல் சரவணன் திணறினான். பையில் இருந்த பணக் கவர் .. என்று இழுத்ததைத் தொடர்ந்து கடைக்காரர், “என்ன சாமி, கவர் காணலியா, எங்கே வச்சீங்க நல்லா கவனப்படுத்தி பாருங்க” என்றார்.
“இல்லை அண்ணாச்சி, பணக் கவரை பையில்தான் வைத்துக் கொண்டேன். வழியில் பூக்காரியிடம் பூ வாங்கும் போதுகூட பையில் இருந்ததே, இப்போது காணோமே” என்றான்.
“ஓகோ, வழியிலே ரயில்வே கேட் கிட்டே கூட்டமா இருந்திச்சா, அதில யாரும் உங்க மேல வந்து மோதினாங்களா?” என்றார் அண்ணாச்சி.
“ஆமாம், ஒரு ஆள் வந்து இடித்துவிட்டு நிற்காமல் போய்விட்டான்” என்றான் சரவணன்.
“அதுதான், அங்கே இதே வேலைதான். சாயங்காலம் ஆயிடுச்சின்னா கூட்டமா வந்து நின்னுகிடுவானுங்க. போற வர ஆளுங்களை நோட்டம் விட்டு யார் மடியில என்ன இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு சாமர்த்தியமா அடிச்சிட்டுப் போயிடுவானுங்க. அது சரி, போனது இனி திரும்ப வரவா போவுது. இந்நேரம் பணத்தை அடிச்சவன் எங்கேயாவது சாரயக் கடைக்குப் போயிருப்பான். போங்க சாமி, எனக்கு அடுத்த மாசம் சேர்த்து கொடுத்தா போதும், நான் உங்களை நெருக்க மாட்டேன்” என்றார் அண்ணாச்சி.
“நல்லதுங்க, எல்லாம் என் தலைவிதி, இந்த மாதம் எப்படி போகுமோ, அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்” என்று முணுமுணுத்துக் கொண்டே சரவணன் வீட்டுக்கு நடந்தான்.
வீடு போய்ச் சேர்ந்ததும், ஆவலோடு எதிர்பார்த்திருந்த மனைவி இவனுக்கு அன்று அதிகப்படி உபசாரம் செய்தாள். “சூடா காப்பி கொண்டு வரவா” என்றும் கேட்டாள். “ஏன் இன்னிக்கு முகம் வாடியிருக்கு, வேலை அதிகமா?” என்று விசாரித்துவிட்டு அவன் சம்பள கவரை எடுத்துத் தருவான் என்று எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தாள்.
சரவணன் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “அம்மா எங்கே?” என்றான்.
“அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, இன்னும் வரலை” என்றாள் அவன் மனைவி.
“சரி, சரி, அம்மாவுக்குத் தெரியவேண்டாம், தெரிஞ்சா பெரிசா ரகளை செய்துடுவா. இந்த மாச சம்பள கவர் வீட்டுக்கு வரும்போது யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான், போயிடுத்து” என்றான் சரவணன்.
“அடக் கடவுளே. என்ன கொடுமை இது. இந்த மாதம் என்ன பண்றது. நாளைக்கு பொழுது விடிஞ்சா அத்தனை பேரும் பாக்கிக்கு வந்து நிற்பாங்களே, எப்படிப் போச்சு, எங்கே போச்சு?” என்று பதறினாள்.
“கொஞ்சம் பேசாம இரு, என்னைக் கொஞ்சம் அமைதியா இருக்கவிடு, அப்புறமா பேசிக்கலாம். அம்மா வந்தா மூச்சு விடாதே, அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம். நாளைக்கு என் நண்பன் முத்துகிருஷ்ணன் கிட்ட போய் கொஞ்சம் பணம் கடன் வாங்கிட்டு வந்துடறேன். கவலைப் படாதே போ, போய் உன் வேலையைப் பாரு” என்றான் சரவணன்.
கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மனைவியும் சமயலறை நோக்கிப் போனாள். அப்போது வாயிலில் சைக்கிள் மணி அடிக்கும் ஓசை கேட்டது. சரவணன் போய் யார் என்று பார்த்தான். அங்கு அவனுக்கு ஏற்கனவே கடைத்தெருவில் அறிமுகமான சண்முகம் என்பவன் சைக்கிளில் வந்து காலை ஊன்றிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.
“என்ன சண்முகம்? என்ன இந்த நேரத்துல” என்றான் சரவணன்.
“ஒண்ணுமில்ல சாமி, உங்ககிட்ட ஒரு வேலையா வந்தேன். இப்போ கொஞ்சம் பேசமுடியும்னா வரேன்” என்றான்.
“வா, வா எனக்கு ஒண்ணும் அவசர வேலை எதுவும் இல்லை” என்றான் சரவணன்.
இந்த சண்முகம் ஒரு மாதிரியான பேர்வழி. கடைத்தெருவில் இவனை ஒரு போக்கிரி என்பார்கள். இவனைக் கண்டு பலரும் அஞ்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த விவரமும் சரவணனுக்குத் தெரியவில்லை. இவனுக்கு ஒரு தையல் கடை இருந்தது. அதில் ஐந்தாறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஊரில் பலரும் அந்தக் கடையில்தான் பேண்ட் சட்டை தைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் நாகரிகமாக இருக்க இவன் கடையில் தைத்துக் கொள்வது என்பது பல இளைஞர்களும் விரும்பிய ஒன்று. இவனை ஒரு டைலர் என்ற முறையில் சரவணன் அறிந்து வைத்திருந்தான்.
ஒரு சில முறை நாள் குறித்துக் கொள்ளவும், பெயர் வைக்கவும் இவனிடம் வந்து நியுமராலஜிப்படி கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான். சரவணன் முன்பு அவன் உட்கார்வதில்லை, பவ்யமாக நின்று கொண்டுதான் பேசுவான். சாமி சாமி என்று இவனை மரியாதையோடு அழைப்பான். சரவணனுடைய திருநீறணிந்த நெற்றியும் வம்பு தும்புக்குப் போகாத குணமும் அந்த சண்முகத்தை இவனிடம் அப்படி பணிவாக இருக்கும்படி செய்திருக்கிறது போலும்.
“சாமி முகம் ஏதோ வாடின மாதிரி இருக்கே. என் வேலைய வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம். உங்க பிரச்சினை என்னன்னு சொன்னீங்கன்னா என்னால முடிஞ்சத செய்யறேன், என் வேலைய அப்புறமா நாளைக்குக்கூட பார்த்துக்கலாம்” என்றான் சண்முகம்.
“ஒண்ணுமில்லை சண்முகம், ஆபீஸ்ல இன்னிக்கு சம்பளம். அந்த சம்பளப் பணத்தை வாங்கி சட்டைப் பாக்கெட்ல வச்சுகிட்டு வந்திகிட்டிருக்கும்போது எங்கோ காணாம போயிடுச்சி. எங்கேன்னு தெரியல” என்றான் சரவணன்.
“அட! அப்படியா? ரயில்வே கேட் வழியா வந்தீங்களா? என்றான் சண்முகம்.
“ஆமாம்பா, அந்த வழிலதான் வந்தேன்”
“அப்படின்னா கொஞ்சம் இருங்க, இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சண்முகம் அவசரமாகத் தன் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான்.
என்ன இது? இவன் போய் என்ன செய்யப் போகிறான், வைத்ததை எடுப்பது போல போகிறானே, என் பணத்தை ஏதாவது மீட்டுக் கொண்டு கொடுப்பானோ? அட, அப்படி செய்துவிட்டால் என் இந்த மாதக் கவலை போயிடுமே, கடவுளே அப்படி ஏதாவது நடக்கக் கூடாதா என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் சரவணன்.
அரை மணி கழித்து சண்முகம் இன்னொரு இளம் வயது பையனையும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். சரவணன் வாசலுக்கு வந்து நின்றதும், சண்முகம் அந்தப் பையனைக் கழுத்தில் கையை வைத்துத் தள்ளி, “போடா, போயி ஐயா காலில் விழுந்து மன்னிப்புக் கேளு, அதையும் அவர்கிட்ட கொடு” என்றான்.
அந்தப் பையனும் சரவணன் அருகில் வந்து காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சரவணனுடைய காணாமல் போன சம்பளக் கவரை அவன் கையில் கொடுத்துவிட்டு, “மன்னிச்சுடுங்க சாமி, உங்களைப் பற்றி தெரியாம உங்க பாக்கெட்ல கைய வச்சுட்டேன். இனிமே உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன் என்றான்.”
பையன் பார்க்க லட்சணமாக, நாகரிகமாக இருந்தான், இருந்தாலும் இப்படியொரு காரியத்தை இவன் எப்படி செய்தான், யார் இவன், இவனுக்கும் இந்த சண்முகத்துக்கும் என்ன சம்பந்தம், என் பணத்தை இவந்தான் எடுத்திருப்பான் என்று எப்படி இவனுக்குத் தெரிந்து அவனை இங்கு இழுத்து வந்திருக்கிறான் என்று மனம் குழம்பிக் கிடக்க சண்முகத்தை நோக்கினான்.
அப்போது சண்முகம் பேசினான். “ஐயா ஒண்ணும் நெனச்சுக்காதீங்க. இவன் நம்ம ஆளுதான். இவனைப் போல பல பசங்க நம்மகிட்ட வேலை பண்றானுங்க. நீங்க ரயில்வே கேட் வழியா வந்தபோது பணத்தைக் காணோம்னு சொன்னதுமே அந்த ஏரியாவுல நம்ம பசங்கதானே இருக்காங்கன்னுதான் ஓடிப்போய் விசாரிச்சேன். இந்தப் பயதான் எடுத்திருக்கான். எலே, யார் மடிலடா கை வச்சே, அவரு சாபம் கொடுத்தா நீ நாசமா போயிடுவேடா, ஓடிப்போய் பணத்தை அவர்கிட்டே கொடுன்னு சொல்லி அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றான் சண்முகம்.
இதென்ன கூத்து. இவனோ டைலர். அந்த பையனோ பிக்பாகெட். அவனுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?
சரவணன் விழிப்பதைப் பார்த்துவிட்டு சண்முகமே பேசினான். “ஐயா, உங்க குழப்பம் புரியுது. நான் செய்யற வேலை டைலர் வேலைதான். என் உள்வேலையை மறைக்க டைலர் ஷாப் எல்லாம் வச்சு அஞ்சாறு பேரை வேலைக்கு வச்சு நல்லபடியா கடையை நடத்தறேன். ஆனா எனக்கு பின்னால ஒரு கதை இருக்கு சாமி. என் தொழிலே இந்தப் பய செய்யற தொழில்தான். அதுலேர்ந்துதான் முன்னேறி இப்போ கொஞ்சம் கெளரவமா இருக்கத் தொடங்கிருக்கேன். நான் நேரடியா இதுல ஈடுபடலைன்னாலும், இவனைப் போல ஒரு பத்து பதினஞ்சு பேரைத் தயார் பண்ணி அவங்களுக்கு ஏரியாவ பிரிச்சுக் கொடுத்து இப்படி கொண்டு வரச் சொல்லிருக்கேன். அதுல மாசம் இத்தனைன்னு ஒவ்வொருவருக்கும் கொடுத்துட்டு, மிச்சத்தை நான் வச்சுக்குவேன்.”
சண்முகம் சொல்லச் சொல்ல சரவணனுக்குத் தலை சுற்றியது. ஒருவனுக்கு எத்தனை முகங்கள். இவன் நல்லவனா, கெட்டவனா? ஒரு பக்கம் நல்லவனாகவும், சிலருக்குக் கெட்டவனாகவும் இருக்கும் இவனது குணம்தான் என்ன?
சண்முகம் மேலும் பேசினான். “ஐயா, ஒண்ணுமே இல்லாத பிளாட்பாரமா இருந்தபோது பிழைக்க இப்படியெல்லாம் நடந்துக்க வேண்டியிருந்திச்சு. அப்புறம் கொஞ்சம் நிலைமை மாறினபிறகு, நானே நேரடியாகச் செய்யாம இவனைப் போல பசங்களை வச்சு செஞ்சிட்டிருந்தேன். இனிமே இதுவும் நான் நிறுத்திவுட்டு கெளரவமா நடந்துக்கப் போறேன். இவனுங்க இனிமே தனியா அவங்களே வேலையைப் பார்த்து முன்னேறிக்குவாங்க”
“அது சரி சண்முகம். நீ டைலர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இப்படியொரு வாழ்க்கை உன் பின்னால் இருக்குங்கறது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அது போகட்டும் இன்னைக்கு என்னைத் தேடி வந்த காரணம் என்ன” என்றான் சரவணன்.
“அது சாமி! நாந்தான் சொன்னேனில்ல. இனிமே திருந்தி நல்லபடியா கெளரவமா வாழப்போறேன்னு. அதுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எல்லா வேைலைகளும் செஞ்சு முடிச்சுட்டேன். இடம் எல்லாம் தயார். முதல்ல சின்ன புள்ளைங்களுக்கு வகுப்புங்க நடத்த பர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சி, டீச்சர் எல்லாம் கூட போட்டாச்சு. இந்த பள்ளிக்கூடத்தை நல்லபடியா நடத்தி, கொஞ்சம் கொஞ்சமா இதைப் பெரிசா ஆக்கிடணும். சமூகத்துல என்னையும் எல்லாரும் மதிக்கும்படியா நடந்துக்கணும். அதுக்காகத்தான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேரு வைக்கணும், ஆரம்பிக்க நாள் பார்க்கணும்னுதான் உங்ககிட்ட வந்தேன். நீங்க பணத்தைப் பறிகொடுத்திட்டு வந்து நிக்கறதைப் பார்த்து, அதை மீட்டுக் கொண்டு வந்து கொடுக்கணும்னு இவனைப் பிடிச்சு கொண்டுவந்தேன்.” என்றான் சண்முகம்.
அடடா, ஒரே ஆளுக்கு எத்தனை முகங்கள் என்று திகப்போடு சண்முகத்துக்கு பள்ளிக்கூடப் பெயரும், ஆரம்பத்துக்கு நாளும் குறித்துக் கொடுத்தான் சரவணன்.



சிறுகதை -- காந்தாரி கொடுத்த சாபம்!…

சிறுகதை
தஞ்சை வெ.கோபாலன்

மகாபாரதத்தில் மெளஸர பர்வம் என்ற பகுதி கதையின் இறுதிப் பகுதியில் உண்டு. அது சொல்லும் நீதி என்னவென்றால் ஒவ்வொருவரும் செய்யும் வினைகளின் பலன் அவரவர்க்கு வந்து சேரும் என்பதுதான். அதனால்தான் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நல்லதாகவே இருக்கும்படி பார்த்துச் செய்வது. இதைத்தான் வினைப்பயன் என்பார்கள். இது நம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமல்ல, புராண புருஷர்களையும் இந்த வினைப்பயன் பாடாய்ப் படுத்தியிருக்கிறது.
பெரியவர்கள் சாபம் கொடுத்தால் பலிக்கும் என்ற நம்பிக்கை உண்மைதான்; சாபமிட்டால் அது சாபத்தை ஏற்பவர்களின் வினைப்பயனை ஒட்டிதான் விளைவுகள் அமையும். நம் செயலுக்குப் பயன் இதுபோன்ற எதிர்பாராதவர்களின் சாபத்தினால் கிடைத்து விடுகிறது. பெரியவர்கள் வாழ்த்தோ அல்லது சாபமோ நம்மை எந்தெந்த விதங்களில் பாதுகாக்கும் அல்லது பாடாய்படுத்தும் என்பதற்கு மகாபாரதத்தில் மெளஸர பர்வத்தில் பதில் கிடைக்கிறது.
பாரத தேசத்தின் மாபெரும் காப்பியமான மகாபாரதத்தில் அந்த பதினெட்டு நாட்கள் பாரதப் போர் முடிந்த நேரம். கண்ணில்லாத தன் கணவன் திருதராஷ்டிரன் கண்களில் துயரத்தால் கண்ணீரும், நெஞ்சத்தில் தாங்கமுடியாத சோகமும் மண்டிக் கிடக்க அவன் மனைவி காந்தாரியோ தன் மக்கள் மாண்டு கிடந்த அந்த போர்க்களத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். குரு வம்சத்தின் புத்திரர்கள் வளைய வந்த பழைய நாட்களையும், அவர்கள் அனுபவித்த அரச போகங்களையும், இறுதியில் பிணங்களாக இந்த யுத்த பூமியில் விழுந்து கிடந்ததையும் அவள் எண்ணிப் பார்க்கிறாள். கண்களுக்குப் பார்வை இருந்தும், தன் கணவனால் பார்க்கமுடியாத இந்த உலகத்தைத் தானும் பார்ப்பதில்லை எனும் வைராக்கியத்தில் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு வாழ் நாளெல்லாம் அலைந்தவள், இப்போதும் கண்கட்டோடுதான் சுற்றுகிறாள்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அருளிய வரத்தினால் கண்கள் மூடப்பட்டிருந்தும், அந்த யுத்தகள காட்சிகளை அவள் மனக் கண்களால் பார்க்கமுடிகிறது. இந்த போரைத் தன் எண்ணம் போல நடத்தி முடித்துவிட்ட சாட்சாத் கண்ணனே அருகில் இருந்து அவளை வழிநடத்திக் கொண்டு வருகிறான். பாண்டவர் பக்கம் சேர்ந்து கொண்டு கெளரவர்களின் ஒட்டுமொத்த அழிவுக்கும் காரணமானவன் அல்லவா இந்த கண்ணன். என் வாரிசுகளை பூண்டோடு அழித்துவிட்டு, அழித்தவர்களுக்குத் துணை புரிந்துவிட்டு ஒன்றுமே தெரியாத நல்லவன் போல அல்லவா என்னோடு இந்த ரணபூமியைச் சுற்றிக் காட்டுகிறான் என்று காந்தாரியின் மனத்தில் தீப்பற்றி எரியத் தொடங்குகிறது
இவன் மட்டும் நினைத்திருந்தால் இந்த பேரழிவைத் தடுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் இவன் அப்படிச் செய்யவில்லையே. என் மக்கள் அழியவேண்டு மென்பதற்காகத்தானே அவனே பார்த்தனுக்குத் தேர் சாரதியாக இருந்து அவனை வழிநடத்தியிருக்கிறான். இப்படி யுத்த களத்தின் காட்சிகளை கண்ணன் எடுத்துச் சொல்லச் சொல்ல, அவள் மனக்கண்முன் வீராதிவீரர்கள் மாண்டுபோன காட்சிகள் தென்பட தென்பட அவள் நெஞ்சத்துத் தீ பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டு அந்தத் தீயின் கொதிப்பு வெளிப்படும்படி கண்ணனிடம் கேட்கிறாள். கண்ணன் எவ்வளவோ எடுத்துச் சொன்னான் தான் போர் வராமல் செய்ய அரும்பாடு பட்டதையும், ஒவ்வொரு முறையும் துரியோதனன் தன் பிடிவாதத்தினால் தன் அழிவைத் தானே தேடிக் கொண்டான் என்பதையும் காந்தாரிக்கு விளக்கமாக எடுத்துரைத்தான்.
“கண்ணா! எங்கள் குரு வம்சம் பூரணமாக அழிந்துபோன காட்சிகளைக் காண்கிறேன். என் மக்கள் போரில் மாண்டுபோன காட்சிகளைக் காண்கிறேன். இந்த யுத்தகளம் குருதியால் நனைந்ததைப் போல, இப்போது என் நெஞ்சமும் கோபத் தீயால் வெந்து போயிருக்கிறது. கிருஷ்ணா! எங்கள் வம்சம் இங்கு எப்படி நசிந்து போனதோ, அது போலவே உனது விருஷ்னி வம்சமும் அழிந்து போகட்டும்! அந்த அழிவையும் நீ பார்த்துவிட்டு அதனோடு நீயும் அழிந்து போ!” என்றாள் ஆத்திரம் பொங்க.
ஒன்றல்ல, இரண்டல்ல நூறு மக்களையும், சுற்றத்தார், நண்பர்கள், வீராதி வீரர்கள், குருமார்கள், வீரபுருஷர்கள் என்று அத்தனை பேரையும் இழந்து தவிக்கும் அந்தத் தாயின் வயிறு இப்படித்தான் எரியும், அந்தத் தாயின் வாயிலிருந்து புறப்பட்டு வந்து தன்னைத் தாக்கும் இந்த சாபம் நிச்சயம் பலிக்கத்தன் போகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்த கண்ணன் முகத்தில் சோகத்துடன் ஒரு புன்னகை படர்ந்தது.
அந்தத் தாயின் கரங்களை ஆதரவோடு பற்றிக் கொண்டான் கண்ணன். தனக்கு இப்படியொரு சாபத்தின் பலனாக முடிவு ஏற்படுவதாயின் அதுவும் ஏற்புடையதே என்று அவன் மனச்சாட்சி சொல்லியது. அவன் முகத்தில் சாந்தம் நிலவியது. காந்தாரியின் அந்தச் சாபம் விருஷ்ணிகளை எப்போது எப்படி சாய்த்தது?
ஒரு மனிதன் வாழ்விலும் தாழ்விலும் ஒரே மாதிரியான அடக்கம், பணிவு, பிறர்க்கு உதவும் பாங்கு இவற்றோடு இருந்தால் அவன் பிறவி எடுத்த பயன் உயர்ந்தது. ஆனால் மனிதன் உயர உயர அகந்தையும், செல்வச் செருக்கும் அவன் கண்களை மறைக்க, தான் சர்வ வல்லமைப் படைத்தவன் எனும் அகந்தை ஏற்படுமானால் அவனது முடிவு நெருங்கிவிட்டது என்பதைக் காட்டும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைச் சார்ந்த விருஷ்ணிகளுக்கு உலகில் தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு, கர்வம் ஏற்பட்டுவிட்டது. அது எல்லை கடந்து போய் விட்டது.
துவாரகையில் ஸ்ரீ கிருஷ்ணனின் தந்தை வசுதேவர் ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்தார். அதற்காக பாரதவர்ஷத்தின் பல பகுதிகளிலிருந்தும் ரிஷிபுங்கவர்கள் வரத் தொடங்கினர். விஸ்வாமித்திரர், துர்வாசர், வசிஷ்டர், நாரதர் முதலான பல ரிஷிகள் வரத் தொடங்கினர். தான் எனும் அகங்காரமும், செருக்கும் தலைக்கு மேல் போய்விட்ட விருஷ்ணிகள் இந்த ரிஷிகளை அவமானப்படுத்தும் நோக்கத்துடன், கிருஷ்ணரின் மகன் சம்பா என்பவனை ஒரு கர்ப்பமடைந்த பெண்போல வேடம் தரித்து அந்த ரிஷிகளின் முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி, “முனிவர்களே இந்தப் பெண்ணுக்கு என்ன குழந்தை பிறக்கும்?” என்று கேட்டனர்.
இவர்கள் தங்களை அவமதிப்பதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள் ஆத்திரத்துடன் சொன்னார்கள், “இவளுக்கு ஒரு இரும்புத் தடி பிறக்கும்; அதுவே உங்கள் விருஷ்ணி குலம் அழிவுக்குக் காரணமாகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர். உண்மையில் அந்த சம்பாவின் வயிற்றில் கட்டப்பட்டிருந்த துணிகளுக்குள் ஒரு இரும்புத் துண்டும் இருந்தது.
ரிஷிகளின் கோபத்துக்கு ஆளான விருஷ்ணிகள் அச்சமுற்று உக்கிரசேன மகாராஜாவிடம் சென்று நடந்தவைகளை விவரித்தனர். அந்த ரிஷிகளின் சாபம் பலித்துவிடுமே. அந்த இரும்புத் துண்டைப் பொடிப்பொடியாக்கிக் கொண்டுபோய் கடலில் தூவிவிடுங்கள் என்று அரசன் சொன்னான். உடனே விருஷ்ணிகள் அந்த இரும்புத் துண்டை பொடியாக்கினார்கள். பெரும்பாலும் பொடியாகிப் போனாலும், ஒரு சிறு இரும்புத் துண்டு மட்டும் பொடியாகாமல் அப்படியே இருந்தது. அதைக் கொண்டுபோய் கடலில் போட்டுவிட்டு விருஷ்ணிகள் இந்த இரும்புத் துண்டுதானே நம் வம்சத்தை அழிக்கும் இப்போது அதைக் கொண்டு போய் கடலில் போட்டாகிவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நல்ல வேளை இந்த நிகழ்வுகள் எல்லாம் கிருஷ்ணனுக்குத் தெரியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ணன் இவை அத்தனையையும் நன்கு அறிவான். கடலில் போட்ட அந்த இரும்புத் துகள்கள் கரையொதுங்கி அங்கெல்லாம் வளர்ந்திருந்த நாணல் புதர்கள் மூங்கில் தடிகளைப் போல தடித்து வளர்த்தன.
குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது. தன்னுடைய யாதவ குலத்து விருஷ்ணிகளும் நாளாக ஆக அகந்தையின் உச்சிக்குச் சென்றுவிட்டதை கண்ணன் கவனித்தான். எவர் ஒருவருக்கு வேண்டிய செல்வமும், அதிகாரமும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறதோ அவன் அகந்தையின் உச்சத்துக்குச் சென்றுவிடுவான் என்பதுதான் இந்த உலக வாழ்க்கை சொல்லும் நியதி. ஒரு குலம் அல்லது இனம் அழிவதற்கு எவைகள் எல்லாம் காரணங்களாக அமையுமோ அவைகள் எல்லாம் அவர்களிடம் வந்து சேர்ந்தன. இதன் பயனாக துவாரகையில் மெல்ல மெல்ல தீமைகள் எல்லாம் நடக்கத் தொடங்கின.
கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.
தல யாத்திரை புறப்பட்டவர்களுக்குள் குருக்ஷேத்திர யுத்தம் பற்றிய விவாதம் தொடங்கி அவர்களுக்குள் கைகலப்பில் முடிந்தது. பாண்டவர்கள் பக்கம் போரிட்ட சாத்யகிக்கும் கெளரவர்கள் பக்கம் போரிட்ட கீர்த்திவர்மனுக்கும் தகறாறு மூண்டது. இந்த சண்டையில் கீர்த்திவர்மனை சாத்யகி கொன்று விடுகிறான். இவ்விருவரும் சண்டை செய்தபோது மீதமிருந்த யாதவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டு ஒருவரையொருவர் கடற்கரையில் உலக்கை அளவில் வளர்ந்திருந்த நாணல் தடிகளைக் கொண்டு தாக்கிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். இந்த போரின் உச்ச கட்டத்தில் கிருஷ்ணனின் மகன்களும், பேரப்பிள்ளைகளும், சகோதரர்களும் மாண்டு போனார்கள்.
இப்படி கோட்டைக்குள் குத்து வெட்டு என்று உருவெடுத்து யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்கத் தொடங்கியதும் பலராமன் காட்டுக்குள் தவம் செய்யச் சென்று விட்டார். இதற்கிடையே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு ஒரு செய்தி சொல்லி அனுப்பினார். பெண்களை ஜாக்கிரதையாக மீட்டுக் கொண்டு வந்து அத்தினாபுரத்தில் சேர்க்கும்படி அவர் அர்ஜுனனை கேட்டுக் கொண்டிருந்தார்.
கடற்கரை முழுவதும் முன்பு கடலில் கலக்கப்பட்ட இரும்புத் துகள்கள் படர்ந்து அங்கெல்லாம் முளைத்தெழுந்த புற்களின் இலைகள் கத்திகளாக மாறி இவர்களைக் கொன்று போட்டன. மீதமுள்ள பெண்களை ஒன்று திரட்டி கிருஷ்ணன் அவர்களிடம் உங்களையெல்லாம் அழைத்துச் செல்ல அர்ஜுனன் வருகிறான், அவன் உங்களைப் பத்திரமாக அத்தினபுரம் கொண்டு சேர்ப்பான் என்று சொல்லிவிட்டுத் தானும் கானகம் சென்று தவம் செய்யச் செல்கிறான். காட்டில் சென்ற பலராமனும் தன் பிறப்பின் நோக்கம் முடிந்துவிட்டதை உணர்ந்து வைகுண்டம் செல்கிறான்.
ரிஷிகள் விருஷ்ணிகளுக்கு சாபமிட்டபோது சம்பாவின் வயிற்றில் வைத்துக் கட்டப்பட்ட இரும்புத் தடியைப் பொடித்து கடலில் கலந்த போது ஒரு சிறிய துண்டு பொடிபடாமல் மிகுந்தது அல்லவா, அந்தச் சிறு துண்டை மீனொன்று விழுங்கிவிட்டது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மீனவனிடம் அந்த மீன் சிக்கிக் கொண்டது. அதன் வயிற்றில் ஒரு சிறு இரும்புத் துண்டு இருப்பதறிந்து அதை மீனின் வயிற்றைக் கிழித்து எடுத்தான் அவன். அதைக் கல்லில் நன்கு இழைத்து கூராக்கித் தன் அம்பின் நுனியில் அதைப் பொறுத்தி வேட்டைக்குப் புறப்பட்டான்.
தன் கண் முன்னாலேயே தன்னுடைய இனம் அழிவதை கிருஷ்ணன் பார்த்துக் கொண்டு வருத்தமடைந்தான். அவன் மனம் அமைதியை நாடியது. தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான். அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.
அத்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. துவாரகையில் ஆண்கள் எல்லாம் இறந்து போன நிலையில் மீதமிருந்த பெண்மணிகளை மீட்டுக் கொண்டு போகும் கடமை அர்ஜுனனுக்கு இருந்தது. ஆகவே அவன் அந்தப் பெண்மணிகளையும் குழந்தைகளையும் மீட்டுக் கொண்டு அத்தினபுரம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். துவாரகை நகரம் பாழ்நகரம் ஆகிவிட்டது. பெண்கள் கூட்டம் அர்ஜுனனின் பாதுகாப்போடு புறப்பட்ட பின்னர் துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது.
அர்ஜுனன் பாதுகாப்போடு சென்ற பெண்களையும் குழந்தைகளையும் வழியில் திருடர்கள் வழிமறித்தார்கள். அவர்களோடு போரிட அர்ஜுனன் தன் காண்டீபத்தை எடுத்து வளைத்தான். அந்தோ, அந்த காண்டீபம் இப்போது வீரியம் இழந்து செயலற்றதாகிவிட்டது. திருடர்களிடமிருந்து மீண்ட பெண்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் அத்தினாபுரம் சென்றடைந்தான்.
இந்த நிலைமையை வியாசருக்கு எடுத்துரைத்து அவருடைய ஆலோசனைகளைக் கேட்க அர்ஜுனன் வியாசரை அணுகினான். விருஷ்ணிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாண்டு போனதையும், பலராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வுலக வாழ்வை நீத்து வைகுந்தம் சென்று விட்டதையும், துவாரகை நிர்மூலமான செய்தியையும், தன்னுடைய அஸ்திரங்கள் எல்லாம் பயனற்று போனதையும் எடுத்துச் சொன்னான்.
அர்ஜுனன் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்ட வியாச பகவான் சொன்னார், “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.
பாண்டவர்கள் தருமன் தலைமையில் திரெளபதியுடன் தங்கள் தலைநகரைவிட்டுப் புறப்பட்டு சுவர்க்கம் செல்ல தீர்மானித்து இந்த புனித பாரத பூமியை வலம் வந்து வடக்கு நோக்கிச் சென்று பனிபடர்ந்த ஹிமாச்சலத்தைக் கடந்து சுவர்க்கம் செல்ல பயணத்தைத் தொடங்கினார்கள்.



சிறுகதை -- அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!

·         சிறுகதை

தஞ்​சை வெ. கோபாலன் 

“ரமா அக்கா!” எதிர் வீட்டில் இருந்த ரமாவை உரக்கக் கூவி அழைத்தாள் உமா.
இவ்விருவருக்குள்ளும் பல ரகசியங்கள் பரிமாரிக்கொள்ளப்படும். காலை, பகல், மாலை, இரவு எந்நேரத்திலும் இவ்விருவரின் கூவல் அக்கம்பக்கத்தாரை முகம் சுழிக்க வைக்கும்.
இவ்விருவருமே கணவனால் கைவிடப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கூடாதோ, சரி கணவனை உதறித் தள்ளியவர்கள்; சுதந்திரப் பறவைகள். காலையில் எழுந்து உணவு தயாரித்து வேளா வேளைக்கு அதனை உண்டு களித்த பிறகு மீதமுள்ள நேரங்களில் அக்கம் பக்கத்தார் பற்றிய ‘கிசு கிசு’க்கள் தான். ஒருத்திக்கு அவள் முன்னாள் கணவன் தரும் ஜீவனாம்சம் எனும் மாதாந்தர சம்பளம் வந்து விடுகிறது. பிழைப்புக்குக் கவலையில்லை. மற்றவளுக்கு அப்பப்போ கிடைக்கும் வேலைகளுக்குக் கிடைக்கும் கூலி. அதைக் கூலி எனலாமோ? ஊகூம் கூடாது. ஒரு சின்னஞ் சிறிய வேலைக்குக் கூட பெரிய தொகையை வசூலித்து விடுவாள், அதனால் அதனை கூலி என்பது தவறு, நல்ல வருமானம். இப்படி கவலை இல்லாமல் வாழ்வினை நடத்தும் இவர்களது பொழுது போக்கு, மற்றவர்களைப் பற்றிய வம்பு, பிறரது துன்பங்களைக் கண்டு மகிழ்வது. ஆனாலும் அவ்வப்போது பிறருக்கு உதவி புரிவதைப் போல சென்று நின்றுகொண்டு அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விவாதித்து மகிழ்வது. இது ஒரு நல்ல ஜோடி.
இவர்கள் தெருவில் பணி நிறைவு பெற்ற பெரியவர் ஒருவர். எழுபத்தி ஐந்து வயதைக் கடந்தவராயினும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் படித்துப் பொழுதை ஓட்டுபவர் அல்ல. பொழுதுக்கும் ஏதாவது படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பவர். பொதுக் காரியங்களில் ஆர்வம் கொண்டு பல இடங்களுக்கும் சென்று வருபவர். இத்தனைக்கும் இவர் தனிக்கட்டை. இவர் மனைவி காலமாகி பல காலம் ஆகிவிட்டது; பிள்ளை குட்டிகள் வேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை எப்போதாவது சென்று பார்த்து வருவார், அல்லது அவர்கள் வந்து பார்த்துச் செல்வார்கள்.
இந்த நிலையில் இவருடைய அக்காவின் பேத்தி அதே ஊரில் ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தவள், முனைவர் பட்ட ஆய்வுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம் அதே ஊரில் வேறு இடத்தில் இருந்தது. அவள் கணவன் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தார், வாரந்தோறும் ஊருக்கு வருவார். அந்தப் பெண்ணுடன் அவளுடைய தாய் மட்டும் இந்த ஊரில் வசித்தாள். அவள் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவள். நம் கல்வி முறையில் தமிழைப் பாடமாக எடுத்துக் கொண்டு படித்தவர்கள் தவிர மற்றவர்கள் தமிழில் வல்லமை பெறுவதில்லை. இவளுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புக்குச் சில தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து எழுத வேண்டிய சூழ்நிலை. அதற்காக அந்தப் பெண் அடிக்கடி இந்தப் பெரியவரிடம் வந்து தமிழில் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டு செல்வாள்.
இப்படி அந்தப் பெண் அடிக்கடி அந்தப் பெரியவரை வந்து பார்த்துச் செல்வதைக் கவனித்த இந்த ரமா, உமாவுக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு. இவ்விருவருக்குள்ளும் அப்படியென்ன உறவு? அவள் ஏன் அடிக்கடி இவரைத் தேடிக் கொண்டு வருகிறாள் என்பதை இவ்விருவரும் பல நாட்கள் விவாதித்து ஒரு முடிவான முடிவுக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருந்தனர்.
இந்த மர்ம முடிச்சை அவிழ்க்காத வரையில் அவர்களுக்கு உணவு இறங்கவில்லை, இரவில் படுத்தால் உறக்கம் வரவில்லை என்ன செய்வது? அவர் வீட்டுக்கு அருகிலுள்ள சிலரை நயிச்சியமாகப் பேசி ரகசியத்தை அறிந்து கொள்ள முயன்றனர். அவர்களோ தங்களுக்கு அது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாதே, எங்கள் கவலைகளே எங்களுக்குப் பெரிதாக இருக்கும்போது இப்படி ஊர் அக்கப்போ​ரை எப்படித் தெரிந்து கொள்ள முடியும் என்று கையை விரித்து விட்டனர்.
எப்படியும் இந்த இரகசியத்தைத் தெரிந்து கொண்டே ஆகவேண்டும், இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று இன்று அதற்கொரு முடிவு தெரிந்தாகணும் என்றுதான் உமா ரமாவை உரக்க சத்தமிட்டுக் கூப்பிட்டாள். இதுபோன்ற வம்புக்காகவே காத்துக் கொண்டிருந்த ரமா ஓடோடி வந்து என்ன என்ன என்று பதறிக் கொண்டு கேட்டாள்.
“அதுதான் அக்கா, அந்த பெரியவர் விஷயம். அந்தப் பொண்ணு அடுத்த தெருவிலேருந்து இங்கே வந்து இவரோடு என்ன பேச்சு. அப்படி இவங்களுக்குள்ள என்னதான் விஷயம் இருக்கு, அதை இன்னிக்குக் கண்டிப்பா தெரிஞ்சுகிட்டே ஆகணும்” என்றாள் உமா.
“சரி, சரி ஏதாவது செஞ்சு அதைத் தெரிஞ்சுக்கலாம், நீயே யோசனை பண்ணிச் சொல்லு” என்றாள் ரமா.
உமாவுக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. “இன்னிக்கு விடுமுறை நாள். அவள் கண்டிப்பா அவரைத் தேடி அவர் வீட்டுக்கு வருவாள். அப்போது நான் ஏதாவது சந்தேகம் கேட்பது போல போயி திடீர்னு அவங்க முன்னாலே போயி நின்னு, அவங்க என்னதான் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு பார்த்துட்டு வந்து சொல்றேன்னு” சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
ரமாவுக்கும் இருப்பு கொள்ளவில்லை. இன்று ஏதோவொரு பெரிய இரகசியம் உடையப் போகிறது. பெரியவர் வேஷம் போட்டு ஏமாத்திக்கிட்டு இருக்கிற இந்த ஆளோடு யோக்கியதை காத்துல பறக்கப் போகுது என்று மனம் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
இவ்விருவரும் எதிர்பார்த்ததைப் போல பெரியவரின் உறவுக்காரப் பெண் ஒரு பெரிய பையைச் சுமந்து கொண்டு பெரியவரின் வீட்டுக்குள் நுழைவதை இருவரும் பார்த்துவிட்டனர். உடனே இருவருக்கும் உடல் பரபரத்தது. உண்மை தெரிஞ்சாகணும் என்று அவர்கள் மனங்கள் எக்காளமிட்டுக் கொண்டிருந்தன.
உமா சொன்னாள், “சமயம் பார்த்து நான் சத்தமில்லாம அவங்க வீட்டுக்குள்ளே போய் பார்க்கிறேன். என்னன்னு கேட்டா ஏதாவது சந்தேகம் கேட்டுத் தெரிஞ்சுக்க வந்தது போல கேட்டு வைக்கிறேன். வந்து சொல்றேன், அங்க என்ன நடக்குதுன்னு” என்று சொல்லிவிட்டு, கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடிக்க ஆர்வத்தோடு போனதைப் போல ஓடினாள் உமா.
பெரியவரின் வீடு திறந்திருந்தது. கண்ணெதிரில் அவ்விருவரையும் காணவில்லை. ஒருக்கால் ஏதாவதொரு அறையில் இருப்பார்கள். உமா மெதுவாக வாசல் கேட்டைத் திறந்து கொண்டு ஓசைப்படாமல் உள்ளே சொன்றாள். வாயில் கதவும் தாழிடப்படாமல் பரக்கத் திறந்து கிடந்தது. மெதுவே உள்ளேயும் புகுந்தாள். வாயில் தாழ்வாரம் தாண்டியதும் பெரிய ஹால். அங்கும் ஒருவரையும் காணவில்லை. ஹாலின் இடது புறம் இருந்த ஒரு அறையில் பகலாயிருந்தாலும் வெளிச்சம் வேண்டுமென்பதற்காக மின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. மெல்ல அடிமேல் அடிவைத்து அந்த அறை வாயிலுக்குச் சென்று உள்ளே பார்த்தாள். அங்கு இருந்த கம்ப்யூட்டரின் முன்பு பெரியவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவள் ஏதோ புத்தகத்தைப் பார்த்து வரிவரியாகப் படித்துச் சொல்ல, இவர் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தார்.
அவ்விருவருக்குமிடையே நிறைய இடைவெளியும் இருந்தது. அவர் வேலையில் கவனமாக இருந்தார். அந்தப் பெண்ணோ புத்தகத்தில் ஆழ்ந்து புதைந்திருந்தாள். ஆகவே இருவருமே ஓசையின்றி வந்த உமாவை கவனிக்கவில்லை. அவர்கள் கவனிக்காதபோதே திரும்பிவிடலாமா என்று திரும்ப எத்தனித்த சமயம் அந்தப் பெண் தலை நிமிர்ந்து உமாவைக் கவனித்து விட்டாள்.
“வாங்க! என்ன விஷயம்? இவரைப் பார்க்கணுமா?” என்று எதார்த்தமாகக் கேட்டாள்.
பெரியவரும் அப்போதுதான் கம்ப்யூட்டரிலிருந்து தலை நிமிர்ந்து வந்திருக்கும் விருந்தாளி யார் என்பதைப் பார்த்தார். அவர் தெருவிலேயே அருகில் இருக்கும் ஒரு பெண்தான். இவளுக்கு என்ன வேண்டும் என்பது போல தலையை ஆட்டி சைகையிலேயே கேட்டார்.
மென்று விழுங்கிய உமா மெதுவாகச் சொன்னாள், “சார்! எனக்கு ஒரு ஹோமம் பண்ணனும். ராத்திரிலே படுத்தா தூக்கத்தில் கெட்ட கனவுகள் வருது. கருப்பா பேய் ஒண்ணு வந்து பயமுறுத்துது. எனக்கு அடிக்கடி வேலையும் கிடைக்கறதில்ல, அதனால வருமானமும் குறைஞ்சு போச்சு. யாரோ சொன்னாங்க ‘மகாலக்ஷ்மி ஹோமம்’ செஞ்சா சரியாயிடும்னு. உங்களுக்கு தெரிஞ்ச யாரையாவது சொல்லி அந்த ஹோமத்தைச் செய்யணும், அதுக்குத்தான் கேட்க வந்தேன்” என்று ஒருவாறு சமாளித்தாள்.
பெரியவர் அவள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொண்டு, “அப்படியா? அதுக்கு ஏதாவது ஹோமம் செஞ்சுடலாம். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரை ‘மஹாலக்ஷ்மி ஹோமம்’னு எதுவும் இது மாதிரியான விஷயங்களுக்குச் செய்யறதில்ல. இதுக்கெல்லாம் ‘சுதர்சன ஹோமம்’ செய்வாங்க” என்று சொல்லிக் கொண்டே தன் கம்ப்யூட்டரில் ஒரு வலைத்தளத்தைக் காட்டி அதில் சுதர்சன ஹோமம் பற்றி எழுதியிருந்ததைக் காட்டினார்.
உமாவும் அருகில் சென்று அதைப் படித்தாள். அதில் இவள் சொல்லும் பாதிப்புகள் எல்லாம் பட்டியலிட்டு இதுபோன்றவற்றுக்கு ‘சுதர்சன ஹோமம்’ செய்யவேண்டும் என்று இருந்தது.
உமா உடனே, “ஆமாம் சார், இதுதான், இதுதான், எனக்கு சுதர்சன ஹோமம் செய்யணும். யாரையாவது கேட்டு என்ன செலவாகும் எப்போது வச்சுக்கலாம் என்பதைக் கேட்டுச் சொல்லுங்களேன்” என்றாள்.
உடனே பெரியவர் யாருக்கோ போன் செய்து கேட்டுவிட்டு பத்தாயிரம் ஆகுமாம், தேதியை முடிவு செய்யுங்க, தேவையான சாமான்கள் லிஸ்ட் கொண்டு வந்து தரேன் என்று சொல்லி விட்டார் எனும் விஷயத்தை அவளிடம் சொன்னார் பெரியவர்.
“சரி சார், நான் பணத்தை உங்களிடம் தந்து விடுகிறேன், தேதியையும் பார்த்துச் சொல்கிறேன், பண்ணிவிடலாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
நாட்கள் ஓடின. ஹோமம் செய்ய வேண்டுமென்று சொன்ன பெண்ணைக் காணோமே என்று நினைத்தார் பெரியவர். ஆனால் உமாவும் ரமாவும் அவர்கள் வீட்டருகே நின்றுகொண்டு கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“கிழம் நான் சொன்னதை அப்படியே நம்பிவிட்டது. ஹோமத்துக்கு நாள் சொல்லப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கு. நான் போன விஷயம் அதுக்கு எப்படித் தெரியும். ஆனால் போன காரியம் தான் பழம் இல்லே. அதுங்க ரெண்டும் ஏதோ படிச்சுண்டு, டைப் பண்ணிண்டு இருந்துதுங்க. நான் எதிர்பார்த்துப் போனது போல எதுவுமே நடக்கல. ஒருக்கால் டைப் பண்ணி முடிஞ்சப்புறம் ஏதாவது நடக்குமோ என்னவோ, சமயம் பார்த்துப் போயிருக்கணும், பார்க்கலாம் அடுத்த தடவை எப்படியும் இதுங்களோடு இரகசியத்தைக் கண்டுபிடிக்காம விடப் போறதில்லை” என்று பேசிக் கொண்டார்கள்.
பாவம்! அவர்களுக்குத்தான் வேறு என்ன வேலை இருக்கிறது?