பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 29, 2015

81. சமூகம் - உடம்பு


               உடம்பை வலிமை செய்வதற்கு மன வலிமை வேண்டும்.

               கஸரத் முதலிய பழக்கங்களில் உடம்பு பலமேறுவதற்கு மனவுறுதியும் ஆசையுமே முக்கிய காரணங்களாக வேலைசெய்கின்றன.

              ராமமூர்த்தி முதலிய நமது நாட்டு பலவான்களும் ஸாண்டோ முதலிய அன்னிய நாட்டு பலவான்களும் இவ்விஷயத்தை மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்கள். கையிலே தண்டு முதலிய வற்றை எடுத்துச் சுழற்றும் போது, வீமசேனனை நினைத்துக்கொள்ள வேண்டு மென்று எங்களூரிலே ஒரு பஹல்வான் சொல்லுவார். பிராணாயாமத்தை மாத்திரமே யன்றி 'தியானம்' முதலிய யோக முறைகளையும் ராமமூர்த்தி பெருந்துணை யென்று சொல்லுகிறார்.

              ஸாண்டோ தமது ''டம்பெல்ஸ்'' என்று சொல்லப்படும் இரும்புக் குண்டுகளை வைத்துப் பழகுவோர் வெறுமே கைகளில் குண்டுகளைத்  தூக்கி  அசைத்தால் பிரயோஜனமில்லை என்பதை மிகவும் தெளிவாக எழுதியிருக்கிறார்.

             குண்டைப் பிடித்து உறுதியுடன் முன்னே நீட்டிய கையை மடக்கும்போது, உனது மனோபலம் முழுதையும் கைத்தசைகளிலே செலுத்தி மெதுவாக மடக்கவேண்டும். கவனத்தை மற்றொரு பொருளிலே செலுத்தினால் தசைகளுக்கு சரியான வலிமை யேறாதென்று சொல்லுகிறார்கள்.

             உடம்பு, நாடிகளுக்கு வசப்பட்டது. நாடிகள் மனதின் வசமாகும், ஆகையால் உடம்பிலுள்ள நோய்களைத் தீர்த்து வலிமை யேற்றுவதற்கு, மனவுறுதி, நம்பிக்கை, உத்ஸாகம் முதலிய குணங்கள் பிரதானமாகக் கொள்ளத் தகும்.

                                                            உணவு
இந்திரப்ரஸ்த நகரத்தின் கடைசி க்ஷத்திரிய அரசனான  ப்ருதிவிராஜனுடைய ஸேனாதிபதிகளிலே சாமிண்டராய் என்று ஒருவன் இருந்தான். வடபக்கத்து முஹம்மதிய அரசர்க்கெல்லாம் அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் நடுக்க முண்டாகும்படி அவன் அத்தனை வீரமும் யுத்தத் திறமையும் கொண்டு விளங்கினான். அவனுடைய சரீர வலிமையை அக்காலத்தில் பாரத தேசம் முழுவதிலும் நிகரற்றதாகக் கொண்டாடினார்கள். அவனுக்குச் சாமுண்டி உபாஸனையுண்டு. விரதங்கள், கண் விழிப்புக்கள், தியானங்கள், வ்யாயாமங்கள் இவற்றிலேயே தனது காலமுழுதும் கழித்தான். அவன் உணவு கொள்ளும்போது வீமனைப்போல் அளவில்லாத பசியுடன் உண்பான் என்று சந்தகவி 'ப்ருதிவிராஜ்ராஸோ' என்னும் தமது காவியத்திலே எழுதியிருக்கிறார் வீமனுடைய பெயர்களில் வ்ருகோதரன் என்பதொன்று. அதாவது, ஓநாய் வயிறுடையவன் என்றர்த்தம். இது அவனுக்கிருந்த நேர்த்தியான பசியைக் கருதிச் சொல்லியது. இக்காலத்திலே குறைவாக உண்ணுதல் நாகரீகமென்று நம்மவர்களிலே சிலர் நினைக்கிறார்கள்.

பெருந்தீனிக்காரன் என்றால் அவமதிப்புண்டாகிறது. சிரார்த்தத்திலே சோறு தின்று முடிந்தவுடன் எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சில பிராமணார்த்தக்காரர்களைப் போல் சரியான பலமில்லாமல் உடம்பைக் கொழ கொழ வென்றுவைத்துக் கொண்டு நாக்கு ருசியை மாத்திரம் கருதிப் பெருந்தீனிதின்பவனைக் கண்டால் அவமதிப்புண்டாவது இயற்கையே யாம். சிங்கம் புலிகளைப்போல் உடல் வலிமையும் அதற்குத் தகுந்த தீனியும் உடையவனைக் கண்டால் யாருக்கும் அவமதிப்பு உண்டாகாது; சாதாரணமாகப் பயம் உண்டாகும். நானாவிதமான விலையுயர்ந்த உணவுப் பொருள்களைத் தின்றால்தான் உடம்பிலே பலம் வருமென்று சிலர் நினைக்கிறார்கள்.  இது தவறு. காரஸாரங்களும் வாஸனைகளும் உண்டாக்கி ருசியை அதிகப் படுத்தும் வஸ்துக்கள் தேக பலத்திற்கு அவசியமில்லை. கேப்பைக்களி, கம்பஞ்சோறு இவற்றால் பலமுண்டாவது போல் பதிர்ப்பேணியிலும், லட்டுவிலும், வெங்காய ஸாம்பாரிலும் உண்டாகாது.

                                                                 பசி
சரீரத்தை வியர்க்க வியர்க்க உழைத்தால் நல்ல பசியுண்டாகும். நல்ல பசியாயிருக்கும் போது கேப்பைக்களியை வேண்டுமளவு தின்று சுத்த ஜலத்தைக் குடித்தால் போதும். விரைவிலே  பலம் சேர்ந்து விடும். பிள்ளைகளை இஷ்டப்படி நீஞ்சுதல், மரமேறுதல், பந்தாட்டம் முதலிய விளையாட்டுக்களிலே போகவொட்டாதபடி தடுக்கும் பெற்றோர் தாமறியாமலே மக்களுக்குத் தீங்கு செய்கிறார்கள்.

                                                              வயது
மேலும் சரீர உழைப்பும் விளையாட்டுக்களும் மிகவும் வாலிபப் பருவத்திலே யிருக்கும் பிள்ளைகளுக்கு மாத்திரந்தான் பொருந்துமென்று ஒரு தப்பெண்ணம் சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது. மனிதனுக்கு இயற்கை வயது நூறு. ஆகையால் ஐம்பது வயதாகும்வரை ஒருவன் இளமை தீர்ந்தவனாக மாட்டான். பிஞ்சிலேயே உடம்பை நாசப் படுத்தினால் சீர்கெட்டுக் குலைந்துபோய் இருபது வயதாகுமுன் கிழத் தன்மை வந்துவிடும். எனினும், இயற்கை விதிப்படி ஐம்பது வயதுவரை இளமை நிற்குமாகையால், அதற்குள்ளே 'செயற்கைக் கிழத்தன்மை' பெற்றோர் தமதுடம்பைத் திருத்தி நல்ல நல்ல நிலைமைக்குக் கொண்டுவர முயற்சி செய்யலாம். ஐரோப்பாவிலே ஐம்பது வயதுக்காரர் ஆடியோடி விளையாடுவதும், பந்தடிப்பதும், கூட்டங்கூடிக் குதிப்பதும் சாதாரணமாகப் பார்க்கலாம். நமது நாட்டுக் கல்வியாளர் சிலர் முப்பது வயதிற்கு முன்னமே தம்மைக் கிழவர் களாகப் பாவனை செய்துகொண்டு, ஜீவகளை யில்லாமல் ஸஞ்சரிக்கிறார்கள்.

                                           பெரிய மனுஷத் தன்மை
இன்னுமொரு தொல்லை. பெரிய மனுஷத் தன்மைக்கும் சரீரவுழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலரின் மனதில் எந்தப் பிசாசோ எழுதி வைத்துவிட்டது. ஆகையால், சொற்பப் பணமுடையன்கூட, தனக்கு ஜலம் கொண்டு கொடுக்க ஓராளும், குளிப்பாட்ட ஓராளும், தலை துவட்ட ஓராளும் வைத்துக்கொண்டு, பாயோடே கிடக்கும் கிழவியைப் போல் நடந்துகொள்கிறான். மாதம் முப்பது ரூபாய் சம்பளம் வந்தால் போதும். வீட்டிலே அவன் பெரிய நவாப். கைகாலை அசைக்கமாட்டான். மேல் மாடத்திலே போய் ஒரு புஸ்தகம் அல்லது மேல் வேஷ்டி எடுத்துக்கொண்டு வரவேண்டு மானால் அவன் போகமாட்டான். பந்துக்களை ஏவுவான். வயதிலே சிறியவராக யிருந்தால் அவர்களை விலையடிமை போலே நடத்துவான். அற்பக் காரியங்களுக்கெல்லாம் ஒருவரை யொருவர் வேலையேவி வதைக்கும் தொல்லை நமக்குள்ளே மிகவும் அதிகம்.

                                                         முடிவுரை
எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக் கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனி ருக்கும். மனத்தளர்ச்சிக்கும் இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

இயன்றவரை இந்திரிய இன்பங்கள் கூடாது என்று நான்சொல்லவில்லை. அவை பரமாத்மாவினால் நியமிக்கப் பட்டன. ராமன், கிருஷ்ணன் முதலிய அவதார புருஷர்கள் உலக இன்பங்களை நீக்கித் துறவு கொள்ளவில்லை. ஆனால் இந்திரிய சுகங்களுக்கு வசப்பட்டுப் போகலாகாது.  அதனால் தேகபலம் அழிந்து மேற்படி இந்திரிய சுகங்களை நீடித்து வனுபவிக்க வழியில்லாமற் போய்விடும். அறிவுதான் ராஜா; மனமும், இந்திரியங்களும் உடம்பும் அறிவுக்கடங்கி வாழவேண்டும்: இல்லாவிட்டால் அவற்றுக்கே கெடுதியுண்டாகும்.

எனவே, மனவுறுதி, ஸந்தோஷம், உலகை நடத்தும் சக்தி நமக்கு நன்மை செய்யுமென்ற நம்பிக்கை, சரீரவுழைப்பு முதலிய நற்குணங்களைக் கைக்கொண்டு ஊக்கத்தை வழக்கப்படுத்தவேண்டும்.

உடம்பிலே நோயில்லாமல் வலிமையுடன் இங்கே நூற்றாண்டு வாழலாம்.


80. சமூகம் - மாலை


                நமக்கு முடியாத காரியத்தைக் கைவிடலாகாது. நம்மைக்காட்டிலும் திறமையுள்ள ஒருவன் கையிலே கொடுத்து அவன் கீழே சிற்றாளாயிருந்து தொழில் பழகிக் கொண்டு, பிறகுநாமாகச் செய்ய வேண்டும். இதை நாட்டுக் கோட்டைச் செட்டிகளும் கவனிக்கலாம். காங்கிரஸ் சபையாரும் கவனிக்கலாம்.     
  
                 *                  *                *                 *               *                *                *

              ஒரு தரம் ஒரு வழக்கம் ஏற்பட்டுப்போனால் பிறகு அதை மாற்ற முடியாது. ஆதலால் புதிய வழக்கத்தைத் தொடங்குவோர் பின் வரக்கூடிய பலாபலன்களைத் தீர யோசனை செய்தபிறகு தொடங்க வேண்டும்.

             இது அனேகமாக எல்லா மனிதருக்கும் நினைப்பூட்டவேண்டிய விஷயம். மாறுதல் இயற்கை, நல்லபடியாக மாறிக்கொண்டுபோதல் புத்திமான்களுக்கு லக்ஷணம்.     

                  *                   *                 *                   *                 *                 *                 *

            மஹம்மதிய புஸ்தக சாலைகள், வாசகசாலைகள் கல்விச் சங்கங்கள் முதலியவற்றிலே ஹிந்து பண்டிதர்களும், ஹிந்துக்களின் கல்விக் கூட்டங்களிலே முஹம்மதிய வித்வான்களும் வந்து உபந்யாஸங்கள் செய்யும் காட்சி சில நாளாக நமது தேசத்தில் அதிகப்பட்டு வருகிறது. நமது ஜனங்களுக்குக் கொஞ்சம்கொஞ்சம் கண் திறக்கிறது. எல்லா வித்தைகளும் கலந்தால் தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். "ஒரு குழம்புக்குள்ளே இரண்டு "தான்" போட்டாளாம்; ''தான்'' தெரியாதா, குழம்புத் தான்; ஒன்று கத்திரிக்காய், ஒன்று உருளைக் கிழங்கு! இதிலே கத்திரிக்காய், உருளைக்கிழங்கைத் தின்று விட்டதாம்" என்றொரு பச்சைக் குழந்தைக் கதையுண்டு. கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம்.

                  முஹம்மதிய சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டால்ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.   
  
                      *                  *                   *                  *                *                  *

                 ஒரு விரதமெடுத்தால் என்ன வந்தாலும் அதை கலைக்கக் கூடாது. ஆரம்பத்தில் கலைந்து கலைந்துதான் போகும். திரும்பத்திரும்ப நேராக்கிக் கொள்ள வேண்டும். நமது தேசத்திலே (ஸயின்ஸ்) சாஸ்திரப் படிப்பு வளரும்படி செய்ய வேண்டும் என்று சில பண்டிதர்கள் அபேக்ஷிக்கிறார்கள். இதற்கு மற்ற ஜனங்களிடமிருந்து தக்க உபபலம் கிடைக்கவில்லை. இருந்தாலும் இந்த நோக்கத்தை மறந்து விடலாகாது. ஊதுகிறபோது ஊதினால் விடிகிறபோது விடியும். சாஸ்திரப்படிப்பு முக்கியம்.  அதிலேதான் நன்மை யெல்லாம் உண்டாகிறது. ஸயின்ஸ் மனித ஜாதியை உயர்த்திவிடும். அது இஹத்துக்கு மாத்திரமேயன்றி பரத்துக்கும் ஸாதனம் ஆகும். காசிக்கு வழி தெற்கே காட்டுகிற மனிதன் கைலாயத்திற்கு நேர்வழி காட்டுவானோ?

                நமது பூர்விகர் ஸயின்ஸ் தேர்ச்சியிலே நிகரில்லாமல் விளங்கினார்கள். அந்தக் காலத்து லௌகீக சாஸ்திரம் நமக்குத் தெரிந்த மாதிரி வேறு யாருக்குந் தெரியாது இந்தக் காலத்து ஸங்கதிதான் நமக்குக் கொஞ்சம் இழுப்பு.

               பசி வந்தால் கோபம் வருகிறது. பசியடங்கினால் கோபம் அடங்குகிறது. இதைக் கருதி அறிவுடைய தகப்பன்தன் பிள்ளைக்கு வயிறு நிறைய சோறு சேர்த்துக் கொடுத்த பிறகு தான் பக்ஷணம், பழம், மிட்டாய் இல்லாவிட்டால் ஊதுகுழாய் வாங்கிக் கொடுக்கவேண்டும். ஒருவன் ஊருடன் கூடி வாழ விரும்பினால் ஊருக்கு வயிறு நிறைய அன்னம் போட வேண்டும். சிற்சிலர் புதிய புதிதான தர்மங்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஏழைக்கு அன்னம் போடுவதுதான் உத்தம தர்மம். இது முற்பாட்டனாருடைய தீர்மானம். என்னுடைய தீர்மானமும் அப்படியே. ஜனங்களுடைய வயிற்றுக்குக் கஞ்சிகாட்ட  முடியாவிட்டால், அந்த தேசத்தில் எவ்வளவு பெரிய வித்வானிருந்தும் பிரயோஜனமென்ன?  நாகரீகம் உயர்வதினாலே போஜனம் குறைவாக இருந்தால் அந்த நாகரீகம் அவசியமில்லை.  சில நாட்டுக் கோட்டைச் செட்டிகள் நாகரீகமாகி இந்தக் காலத்தில் பணம் செலவு பண்ணும் மாதிரியைப் பார்க்கும்போது பழைய காலத்து அநாகரீகமே விசேஷமென்று தோன்றுகிறது. முன்பெல்லாம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோயில் கட்டுவார், சத்திரங்கள் வைப்பார், பள்ளிக்கூடம் வைப்பார். இதெல்லாம் அநாகரீகமென்று தள்ளிவிட்டுச் சில புது நாகரீகச் செட்டிகள் காட்டு நெருப்பிலே பசு நெய்யைக்கொண்டு கொடுக்கிறார்கள். வேசைக்கும், கூத்துக்கும், வீண் விருந்துக்கும் செலவிடுகிறார்கள். நாகரீகம் வேண்டியதில்லை; முதலாவது சகல ஜனங்களுக்கும் சோறு கண்டுபிடி. நாட்டுக்கோட்டையார் மாத்திரமில்லை. எல்லாச் செட்டியாரும் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

ஒரு விரத மெடுத்தால் அது கலையவிடக்கூடாது. இன்னொருதரம் எதற்காகச் சொல்ல வந்தேன் தெரியுமா?ஒருவன் யோக சாஸ்திரம் பழகப்போய் மௌனவிரதம் எடுத்தான். அப்போது அவனுக்கு வயிற்றுக் கடுப்பு வந்தது. பல கடன்காரர்கள் வந்தார்கள். ஒரு புது சிஷ்யன் வந்தான். இராத்திரியில் இரண்டு திருடர்கள் வந்தார்கள். இரண்டு விருந்துகள் வந்தன. ஒரு கல்யாணம் வந்தது, அவசியமாய்ப் போய்த் தீரவேண்டியது. இன்னும் பல விஷயங்கள் வந்தன, ஒரே நாளில்! அவன் மௌன விரதத்தைக் கலைத்துவிட்டான். உடனே வயிற்றுக் கடுப்பு திர்ந்து போய்விட்டது. கடன், சிஷ்யன், திருடன், கல்யாணம் தீர்ந்து போய்விட்டன. மறுநாள் ஒரு தொல்லையுமில்லை.

பிறகு "ஹா! இந்த ஸங்கடங்களெல்லாம் இத்தனை விரைவாகத் தொலைந்து போமென்று தெரிந்தால் நான் மௌன விரதத்தைக் கலைத்திருக்கமாட்டேனே" என்று சொல்லி அந்த மனிதன் வருத்தப்பட்டான். எல்லா விரதங்களுக்கும் இதுதான் விதி. நாம் விரதம் எடுத்தவுடனே, அதை நிறைவேற்றத் தக்க மன உறுதி நமக்குண்டா என்று பார்ப்பதற்காக, இயற்கைத் தெய்வம் எதிர்பாராத பல ஸங்கடங்களைக் கொண்டு சேர்க்கும்.அந்த ஸங்கடங்களை யெல்லாம் உதறி யெறிந்து விட்டு நாம் எடுத்த விரதத்தை நிறைவேற்றவேண்டும். விரதம் இழந்தார்க்கு மானமில்லை. விரதத்தை நேரே பரிபாலனம் பண்ணினால் சக்தி நிச்சயம்.


79. சமூகம் - பருந்துப் பார்வை


                 1. ஒரு தேசத்தார் ராஜ்ய மஹிமை பெற வேண்டுமானால் அவர்கள் ஏகதேவ பக்தி யுடையவர்களாக இருக்க வேண்டும் என்று "மாடர்ன் ரிவ்யூ" பத்திரிகை சொல்லுகிறது. அதாவது, 'முஹம்மதியர், கிருஸ்துவர், யூதர் முதலியவர்களைப் போல் ஒரே கடவுளை நம்பித் தொழவேண்டும். கிறிஸ்துவர்களிலே ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவர்கள் பல ஞானி களையும் தாயையும் வணங்குகிறார்கள். அப்படியில்லாமல் ப்ரோதஸ் தாந்துக் கூட்டத்தாரைப் போல் ஒற்றைக்கடவுளைத் தொழவேண்டும். இல்லாவிட்டால், இராஜ்ய வலிமை உண்டாகாது' என்று அந்தப் பத்திராதிபர் நினைக்கிறார். இது பிழை. இதற்கு மனுஷ்ய சரித்திரத்திலே எவ்விதமான ஆதாரமும்கிடையாது. ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. எல்லா மதமும் உண்மைதான். ஹிந்து மதம் ஆழ்ந்த உண்மை. உண்மையாலேதான் எல்லா நன்மையும் உண்டாகும்.

              2. வைஸ்ராய் ஸபையிலே ஜனப்பக்கத்துப் பிரதிநிதிகள்22 பேரிலே 19 பேர் சர்க்காருக்கு ஒரு அறிக்கை யிட்டிருப்பதாகத் தங்கள் பத்திரிகையிலே பார்த்தேன், சண்டை முடிந்த பிறகு, பொருளாட்சியும் மாகாண ஆட்சியும் ஜனங்களை ஆயுதம்தரிக்க இடங் கொடுக்கவேண்டும் என்பதும் மேற்படி அறிக்கையின் சாரம் என்று தோன்றுகிறது.         போதும்; பிரதிநிதிகள் சரியாகக் கேட்கவில்லை; ஏதோ தங்கள் புத்திக்குத் தோன்றிய வரை செய்தார்கள். இருந்தாலும், பொதுவாக, அவர்கள் கேட்கிற அளவேனும் நிச்சயமாகக் கிடைத்துவிட வேண்டும். அப்போது தான் தேசத்து ஜனங்களுக்குச் சிறிது சந்தோஷம் ஏற்படும்.

                3. தக்ஷிணத்துப் பாஷைகளிலே - அதாவது தமிழிலும் தெலுங்கிலும், கன்னடத்திலும், மலையாளத்திலும் - சாஸ்திர (சயின்ஸ்) பாடம் கற்றுக் கொடுப்பதற்கு மேற்படி பாஷைகள் தகுதியில்லை யென்று பச்சையப்பன் காலேஜ் தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார். அவருக்கு இவ்விடத்துப் பாஷைகள் தெரியாது. ஸங்கதி தெரியாமல் விரிக்கிறார். சாஸ்திரபாஷை நமது பாஷைகளில் மிகவும் எளிதாகச் சேர்த்துவிடலாம். மேலும், இயற்கை நடையிலே இங்கிலீஷைக் காட்டிலும் தமிழ் அதிக நேர்மையுடையது. ஆதலால், சாஸ்திரப் பரவசனத்துக்குமிகுந்த சீருடையது. இந்த ஸங்கதி நம்மவர்களிலே கூடச் சிலஇங்கிலீஷ்ப் பண்டிதருக்குத் தெரியாது. ஆதலால் மிஸ்டர் ரோலோவை நாம் குற்றஞ் சொல்வது பயனில்லை.

              4. காசியிலே ஹிந்து ஸர்வகலா சங்கம் கட்டும் போது பல மாளிகைகள் ஹிந்து சிற்பத்தைத் தழுவியிருக்க வேண்டும். நவீன பாடசாலைகளுக்குரிய லக்ஷணங்கள் குறையக் கூடாது. ஆனால், சிற்பத்தின் மேனி சுதேசிய விஷயமாக இருக்க வேண்டும். பாரத தேசத்துச் சிற்பிகளிலே தமிழ் நாட்டு ஸ்தபதிகள் ஒரு முக்கியமான அங்கமாவர். வங்கத்திலே மஹா கீர்த்தியுடன் சோபிக்கும் நவீன சாஸ்திரிகளில் நாயகராகிய அவனீந்த்ர தாகூர் கூட இக்காலத்திலும் தமிழ் நாட்டில் வாழும் ஸ்தபதிகளிடம் உயர்ந்த தொழில் இருப்பதாக மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஆதலால், மேற்படி ஸர்வகலா சங்கத்தின் கூட்டங்களிலே கூடியவரை நமது தமிழ் ஸ்தபதிகளின் உதவியை நாடிக்கொள்ளும்படி தமிழ் நாட்டிலுள்ள பண்டிதர்களும் ஜனத்தலைவர்களும் மேற்படி சங்கத்திற்குப் பொருள் கொடுத்து உதவுந் தோறும் முயற்சி செய்ய வேண்டும்.

 5. ஜப்பானில் ஸம்ஸ்கிருத படிப்பு வளருகிறது. அங்கே ஸம்ஸ்கிருத படிப்பு எந்தக் காலத்தில் தொடங்கியது என்றுஇன்னும் நிச்சயமாய்ச் சொல்ல இடமில்லை. ஆறாம் நூற்றாண்டில்அந்த நாட்டுக்குள் பௌத்த மதம் நுழைந்த போதே ஸம்ஸ்கிருதமுங்கூட நுழைந்திருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஏழாவது நூற்றாண்டின் மத்தியிலே சீன தேசத்தில் மொழிபெயர்ப்புச்  சங்கம் நடத்திய ஹயலுக்தஸ்வ் என்ற பண்டிதரிடம் ஜப்பானிலிருந்து பலகுருக்கள் வந்து ஸம்ஸ்கிருதம் படித்ததாகச் சரித்திர ஆதாரத்தினால் தெரிகிறது.  735 (கி.பி.) - ஆம் வருஷத்தில் பாரத தேசத்திலிருந்து போதிஸேனன், யத்ரியத் என்ற இரண்டு பேர் ஜப்பானில் போயிறங்கினார்கள். சிறிது காலம் சீன ராஜதானியிலிருந்து விட்டு ஜப்பானிலிருந்து அங்கு வந்த மந்திரிகளுடனே அங்கிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். இதற்கப்பால் ஸமஸ்கிருதப் படிப்பு மிகுதிப்பட்டது. ஜப்பானிலிருந்து ஸம்ஸ்கிருத பண்டிதர் சீனத்திலே போய் மஹா கீர்த்தியடைந்தனர். திருஷ்டாந்தமாக 805(கி.பி.) - ஆம் வருஷத்தில் ரேய்ஸோன் என்ற ஜப்பானிய குரு சீனத்துக்குப் போய் அங்கே பௌத்தமொழி பெயர்ப்புச் சங்கத்தின் தலைமையை நடத்தினார். அப்போது ந்ராஸ்னா நன்றென்ற ஹிந்து பண்டிதர் அங்கிருந்தார். இருவருஞ் சேர்ந்து ஒரு பெரிய சாஸ்திரம் ஸம்ஸ்கிருதத்திலிருந்து பொழி பெயர்த்து வந்தார்கள். இப்போதும் அங்கே பௌத்த தர்மத்துக்கு அந்நூல் பெரிய ப்ரமாணமாக நிற்கின்றது. மேலும் அக்காலத்திலிருந்து ஜப்பானிலிருந்து பலர் பாரததேசத்துக்கு வந்துபோனதாகவும் தெரிகிறது. இப்போது ஜப்பானிலே பௌத்தமடங்களில் நூற்றுக்கணக்கான மனிதர் ஸமஸ்கிருதம் படிக்கிறார்கள்; ஒவ்வொரு ராஜாங்கத்து ஸர்வ கலாசாலையிலேயும் சங்கத்திலேயும் பெரிய தேர்ச்சி கொண்ட ஜப்பானிய ஸம்ஸ்கிருத பண்டிதர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்குள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்கள் ஜப்பானிலுள்ள ஸம்ஸ்கிருத பண்டிதர்களுடன் ஓலை எழுதிப் பழக்க மேற்படுத்திக் கொள்ளலாம். டோக்யோ ஸாம்ராஜ்யசர்வகலா சங்கத்தில் பண்டித் அநேஸாரி  (Anesari)  என்பவர் இருக்கிறார். அங்கிருந்து பழைய சுவடிகள் தருவித்துப் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஹிந்து ஸர்வகலா சங்கத்தார் இவ்விஷயத்தைக் கவனிப்பது நலமாகும்.


Thursday, May 28, 2015

78. சமூகம் - தொழிலாளர்



                             தொழிலுக்கும் செல்வத்துக்குமுள்ள சம்பந்தம்

                     கைத்தொழிலாலே செல்வம் விளைகிறது. அறிவுத் தொழிலால் அது சேகரிக்கப் படுகிறது. கைத்தொழில் செல்வத்தை ஏற்படுத்துகிறது. அறிவுத்தொழில் கைத்தொழிலை நடத்துகிறது. 'புத்தியில்லாத மூடர்கள் சக்ரவர்த்திகளாகவும், ராஜாக்களாகவும், பெரிய நிலஸ்வான்களாகவும், முதலாளிகளாகவும் இருந்து பெருஞ்செல்வங்களைக் கையாளுதல் காண்கிறோமே! எனவே, அறிவுத் திறமையாலும், அறிவு முயற்சியாலும் பெருஞ்செல்வம் திரட்டப்படுகிற தென்றுசொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?' என்று கேட்பீர்களாயின், அதற்கு உத்தரம் சொல்லுகிறேன்.

               பல இடங்களில் இப்போது மூடர்களிடம் செல்வமிருப்பது காண்கிறோமாயினும், இவர்களுக்கு இந்தச் செல்வம் ஏற்படுத்திக் கொடுக்க இவர்களுடைய முன்னோர்களில் அநேகர் அல்லது ஒருவனாயினும் மிகுந்த புத்திசாலியும், அந்த புத்தியைக் கொண்டு சோம்பலின்றி விடாமுயற்சியுடன் உழைப்பவனாகவும் இருந்திருக்கவேண்டும். புத்தி மாத்திரம் இருந்தால் போதாது. அதைக்கொண்டு சோம்பலில்லாமல் விடாமுயற்சியுடன் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் செல்வம் சேர இடமுண்டாகும். 'வெறுமே மிருகபலத்தால் ராஜாக்கள் ஸைந்யங்களின் மிகுதி காரணமாகப் பிற நாடுகளைக் கொள்ளையிட்டு அளவிறந்த பூமியும் செல்வங்களும் சேர்த்ததாகச் சரித்திரங்களில் படித்திருக்கிறோமே. அப்படியிருக்கையில், புத்தி நுட்பத்தால் செல்வம் சேர்வதாகச் சொல்லுதல் தகுமோ?' என்று கேட்பீர்களானால், அதற்கு விடை கூறுகிறேன். யுத்தம் மிருகத் தொழிலாக இருந்தபோதிலும், நல்லோர்களால் எவ்வகையாலும் வெறுக்கத்தக்க இழிதொழிலாக இருந்தாலும், அதற்கு மிருகபலம் மாத்திரம் இருந்தால் போதும் என்று நினைப்பது தவறு. யுத்தசாஸ்திரம் என்பது ஒரு பெரிய சாஸ்திரம், அதில் மிருகபலம் கருவு; அறிவு கர்த்தா. ஸாதாரணக் கொள்ளைக் கூட்டங்களிலே கூடத் தலைவனாக இருப்பவன் சிறந்த புத்தி நுட்பமுடையவனாக இருத்தல் இன்றியமையாதது. எத்தனையோ விதமான அறிவுப் பயிற்சிகள் ஆதிகால முதலாகவே யுத்தத்துக்கு அவசியமாக ஏற்பட்டிருக்கின்றன. அதிலும், தற்கால யுத்தங்களோ பல பலதுறைகளில் மிகச் சிறந்த அறிவுத் தேர்ச்சி கொண்ட பண்டிதர்களாலே நடத்தப்படுகின்றன.

                  வியபாரம், கைத்தொழில் முதலிய ஸமாதானநெறிகளில் செல்வம் சேர்ப்பதற்கு மிக உயர்ந்த புத்தி நுட்பம் எக்காலத்திலும் இன்றியமையாததாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இக்காலத்தில் இவை புத்தித் திறமையில்லாமல் போனால் ஒரு க்ஷணங்கூடத் தரித்து நிற்கமாட்டா.

                 இந்தச் செய்தியை உணர்ந்தே ஆதிகால முதல் அறிவுப் பயிற்சியுடைய வகுப்பினர் கைத்தொழிலாளிகளுக்குக் கல்வி ஏற்படாதபடியாக வேலை செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். 'எழுத்துத் தெரிந்த சூத்திரனை மிகவும் தொலைவில் விலக்கிவிட வேண்டும்' என்ற விநோத விதியொன்று மனு ஸ்ம்ருதியிலே காணப்படுகிறது. நம்முடைய தேசத்தில் மட்டுமே யன்று, உலக முழுமையிலும் எல்லா நாடுகளிலும் கைத்தொழிலாள ருக்குக் கல்விப் பயிற்சி உண்டாகாத வண்ணமாகவே ஜனக்கட்டுகள் நடைபெற்று வந்திருக்கின்றன.

               ஆனால், இந்த சூழ்ச்சியை மீறி, எல்லா நாடுகளிலும், முக்கியமாக, நமது பாரத தேசத்தில்,கைத்தொழில் புரியம் கூட்டங்களைச் சேர்ந்தோரில் பற்பலர்கல்வித் தேர்ச்சி யடைந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இங்ஙனம் கல்விப் பயிற்சி வாய்ந்தோர் பெரும்பாலும் தம்முடைய பரம்பரைத் தொழில்களில் இறங்காமல், சுத்த இலக்கியப் பயிற்சியிலேயே வாழ்நாள் கழிப்பாராயினர்.

              எனினும், சென்ற ஓரிரண்டு நூற்றாண்டுக்குள்ளே ஐரோப்பாவில் எல்லா வகுப்பினருக்கும் கல்வி பயிற்றும் முறைமை தொடங்கி வந்திருக்கிறது. இந்த ஸர்வ ஜனக்கல்வி யென்னும் கொள்கை ஐரோப்பாவிலிருந்து உலகத்தின் பிறபகுதிகளிலும் தாவிவிட்டது. இக்கொள்கையை நமதுநாட்டில் நிறைவேற்றிவிட  வேண்டுமென்று பல புண்ணியவான்கள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள். இங்ஙனம் எல்லா வகுப்புக்களையும் சேர்ந்த எல்லா மனிதரிடையேயும் கல்வியும் அதன் விளைவுகளாகிய பலவகைப்பட்ட அறிவுப் பயிற்சிகளும் பரவிவிடுமானால்,அதினின்றும், கைத்தொழிலாளிகள் கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய், அவரவர் தத்தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதினின்றும் இதுவரை உலகத்தில்கைத்தொழிலாளர் பரம ஏழைகளாக இருந்து வரும் நிலைமைநீங்கி மேன்மேலும் கைத்தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி பெற்று வர ஹேதுவுண்டாகும்.

இப்போது நமது நாட்டில் அங்கங்கே பலதொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன.இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய யத்தனங்கள் பல செய்துகொண்டு வருகிறார்கள். இந்தப் பிரயத்தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே. இதில் ஐயமில்லை.

ஆனால், இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலேமுயற்சி செய்வதுடன் தமது கார்யங்களை நிறுத்திவிடாமல்,அங்கங்கே பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்காக ஏற்படுத்தி அவற்றில் தம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வி யூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும். மேலும், பகற்பள்ளிக்கூடங்கள் மாத்திரமே யன்றி இராப் பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி அவற்றில் தொழிலாளிகள் - எல்லாப் பிராயத்தினரும் - சென்று படிப்பதற்குரிய காரியங்களைநடத்தவேண்டும்.

அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் மாமியும் மருமகளும் போல்வர் என்றும், கல்வியுள்ள இடத்தில் செல்வமும், செல்வமுள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கை யொன்று பரவிநிற்கிறது. வெறுமே வர்ணனைகளும், கற்பனைகளும் சமைத்து,யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச்செல்வம் சேர மார்க்கமில்லை யென்பது ப்ரத்யக்ஷம். இந்த அனுபவத்தை ஆதாரமாகக்கொண்டே மேற்படி கொள்கை ஆதிகாலத்தில் உற்பத்தியாயிற்று. ஆனால், அது இக்காலத்துக்குப் பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொதுஜனக் கல்வியும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும்.காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல், பலவகை வியாபாரங்களுக்கும், தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள் படித்து, அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு,மேன்மேலும் செல்வம் பெருகும். ஆதலால், தொழிலாளிகளே, கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்.
                                      தொழிலாளருக்குச் சில வார்த்தைகள்
சென்ற செவ்வாய்க்கிழமையன்று ''சுதேசமித்திரன்''தலையங்கத்தில் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றி மிகநேர்த்தியான வ்யாஸமொன்று எழுதப்பட்டிருந்தது.

அதன் ஆசிரியர் அதே விஷயத்தைக் குறித்துஇன்னும் தொடர்ச்சியாகப் பல வ்யாஸங்கள் எழுதுவதாகத்தெரிவித்திருப்பது தொழில் விஷயத்தில் சிரத்தையுடைய என்போன்றோருக்கெல்லாம் மிக மகிழ்ச்சி தரத்தக்க தொருசெய்தியாம்.

தொழிலாளிகள் என்போர் சரீரத்தால் உழைத்து"வேலை செய்கிறவர்களே என்று சிலருக்கு எண்ணமிருக்கலாம்.அது தப்பு. சரீரத்தாலாகட்டும், புத்தியாலாகட்டும், முதலாளிக்குட்பட்டு வேலை செய்கிறவர்கள் எல்லாருமேதொழிலாளிகள் என்று அந்த வ்யாசம் எழுதியவர்சொல்லுகிறார். இது நம்முடைய தேசத்தார் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். ஏனெனில், நம்மவருடைய மனதில் இந்த விஷயம் பதிவு பெறுதல் மிகவும் சிரமம்.

குமாஸ்தாக்கள், உபாத்தியாயர்கள் முதலியவர்களும் தொழிலாளிகளே என்று அந்த வ்யாஸ மெழுதியவர்சொல்லுகிறார். எனவே, என்போன்ற நூலாசிரியர்களும் தொழிலாளிகளே. முதலாளிகூட, ஆள் நியமித்தல், வேலையைமேற்பார்த்தல், வியாபார சம்பந்தமான கணக்குகளைக்கவனித்தல் முதலிய செய்கைகளால் தொழிலாளி ஆகிறான்.

முதலாளி, தொழிலாளி என்னும் இந்தக் கக்ஷி பேதமே நமது நாட்டுக்குப் புதிது. நூலாசிரியரும் வீதிபெருக்குவோரும் ஓரினமாகச் சேர்ந்து வைசியருக்கு விரோதமாகப் போராடுதல் நமது தேசத்தில் நேற்றுவரை நினைக்கொணாததோர் செய்தியாக இருந்தது; இன்று ஸாத்யமாகிவிட்டது. இது ஐரோப்பிய தொழில் முறைமைகளும் கொள்கைகளும் நம்முடைய தேசத்தில் பரவுவதால் ஏற்படும் இன்றியமையாத விளைவாகும்.

நம்முடைய தேசத்தில் நெடுங்காலமாக நடைபெற்றுவரும் அனுஷ்டானப்படி நூலாசிரியரும் உபாத்தியாயரும் தலைமை வர்ணம். அரசர் அதற்கடுத்தபடி. முதலாளிகள் எனப்படும் வைசியர் மூன்றாம் ஜாதி. சரீரபலத்தால் மாத்திரமேசெய்வதற்குரிய தொழில்களைச் செய்வோர் நான்காம் வர்ணம்.மற்ற தேசங்களில் நமது நாட்டைப்போல் இந்த வகுப்புக்குக் குறிப்பிட்ட நாமங்களும் விதிகளும் இல்லையெனினும், உலக முழுமையிலும் ஒருவாறு இந்த சாதுர்வர்ணயம்  (அதாவது,நான்கு வர்ணங்களென்ற வகுப்பு) நெடுங்காலமாக நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. சில இடங்களில் மாத்திரம் குருக்களைக் காட்டிலும் அரசர் உயர்ந்தவகுப்பினராகக் கருதப்பட்டனர்; சில நாடுகளில் அரசரே குருக்களாகவுமிருந்தனர். மற்றப்படி உலக முழுமையிலும்குருக்களும், சாஸ்திரிகளும் தலைமைப் பகுதியாகவும், அரசர்,வணிகர், கைத்தொழில் செய்வோர் என்பார் முறையே தனித்தபகுதிகளாகவுமே கருதப்பட்டு வந்தனர்.

               ஆனால், சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் ஸகல ஜனங்களும் ஸமானமென்றும், ஆதலால் பிறப்புப் பற்றியேனும், உடைமை பற்றியேனும்,தொழில் பற்றியேனும், மனிதருக்குள்ளே எவ்விதமேன்மை தாழ்வுகளேனும் உணவு உடை முதலியஅவசியப் பொருள்களின் அனுபவத்தில் வேற்றுமைகளேனும் பாராட்டக் கூடாதென்றும் ஒருபுதிய கொள்கை தலைப்பட்டு நடந்துவருகிறது. சென்றசில வருஷங்களாக இக் கொள்கை அந்தக் கண்டத்தில்மிகவும் வலிமையுடையதாய் விட்டது. ஆரம்பமுதலாகவே இக் கொள்கை ஐரோப்பாவில்தொழிலாளருக்குள்ளே அதிகம் செல்வாக்குப்பெற்றுவந்தது.

நூலாசிரியர்களும், உபாத்தியாயர்களும், மாஸம் 1,000 ரூபாய் வாங்கும் குமாஸ்தாக்களும், மாஸம் 2,000ரூபாய் ஸம்பாதிக்கும் பத்திராதிபர்களும், இவர்களைப் போன்ற பிறரும் தொழிலாளிகளுடன் சேர்த்து கணக்கிடுவதற் குரியவரென்ற கொள்கை ஐரோப்பாவிலேயே ஆரம்ப முதல் கிடையாது. இது சமீபகாலத்திலே நேர்ந்ததொரு புதிய கொள்கை. ஆதியில், தொழிலாளரின் கிளர்ச்சி ஐரோப்பாவில் வேரூன்றியது. முக்கியமாக யந்திரசாலைகளின் ஸ்தாபனத்தினாலேயாம். அதற்கு முன்னர், அங்குள்ள தொழிலாளர் பெரும்பாலும் ஜமீன்தார்களிடமும் எண்ணற்ற சிறு சிறு தொழிற்கூடங்கள் வைத்து வேலை செய்த தொழிலாளரிடமும், சிறு சிறு முதலாளிகளிடமுமே வேலை செய்துகொண்டிருந்தனர். தத்தம் வீட்டிலேயே தறி முதலியனவைத்து தாமே முதலாளிகளாகவும் தொழிலாளி களாகவும் வேலை செய்தோர் பலர். இப்படியிருக்கையிலே, துணி நெய்யவும், இரும்பு தறிக்கவும், மர மறுக்கவும், எண்ணெயாட்டவும், பாத்திரங்கள் செய்யவும், முக்கியமான தொழில்களுக் கெல்லாம் யந்திரங்கள் ஏற்பட்டன. அதாவது மனித சக்தியால் செய்து கொண்டு வந்த காரியங்கள் நீராவியின் சக்தியாலும், மின்சார சக்தியாலும் செய்யப்படலாயின. நீராவியும் மின்சாரமுமோ அபாரவலிமை கொண்ட பூத சக்திகள். அவற்றின் திறமைக்குவரம்பே கிடையாது. ஆயிரம் மனிதர் சேர்ந்து ஆயிரம் நாட்களிலே செய்தற்குரிய தொழிலை இந்த இயந்திரங்கள் ஒரு தினத்தில் செய்து முடிக்கத் தொடங்கின. எனவே, பெருஞ் செல்வமுடையோர் தம்முள்ளே கூட்டுகள் கூட்டிக்கொண்டு யந்திரங்களை ஏராளமாகத் தயார் செய்து அவற்றின் மூலமாக நெசவு முதலிய தொழில்களைச் செய்யத் தலைப்பட்டனர். இதனால் ஏககாலத்தில் பதினாயிரம் லக்ஷக்கணக்கான தொழிலாளருக்குத் தொழிலில்லாமற் போய் பட்டினி கிடக்க நேர்ந்தது. இதுதான் ஐரோப்பாவிலே தொழிலாளர் கக்ஷி வேரூன்றி பலப்படத் தொடங்கியதின் காரணம்.

அதற்கு முன்பு தனித்தனி ஜமீன்தார்களிடத்திலும் சிறு சிறு முதலாளிகளிடத்திலும் வேலை செய்த தொழிலாளிகள் தத்தமக்கு நேரும் குறைகளை தத்தம் இடத்துக்கும் ஸ்திதிக்கும் தக்கபடி கெஞ்சியும் முணுமுணுத்தும் சில ஸமயங்களில் சிறு கலகங்கள் நடத்தியும் தீர்த்துக்கொண்டார்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேதான் யந்திரங்களின் சக்தியால் தொழில் செய்யும் முறைமை மிகுதியுற்றது. அப்போதுதான் அங்குள்ள தொழிலாளிகள் முதலாளிகளுக் கெதிராகக் கிளர்ச்சி நடத்தும் வழக்கத்தை கைக்கொள்ளலாயினர். நாட்பட நாட்பட, யந்திரங்களில் உற்பத்தி செய்யப்பட்ட துணி முதலியன ஐரோப்பாவினின்றும் ஆசியா முதலிய இதர கண்டத்து ஜனங்களினிடையே அதிகமாக விற்கப்படலாயின. இங்கிலாந்து முதலிய தேசத்தார் தம் நாடுகளுக்கு வேண்டிய துணிகள் முதலியனவே யன்றி உலக முழுமையிலும் கொண்டு விற்க வேண்டுமென்ற நோக்கத்துடனும் தாம் புதுமையாய்க் கண்டுபிடித்த பூத சக்திகளாகிய நீராவியையும் மின்சாரத்தையும் கொண்டு வேலை செய்வாராயினர். இதனால் உலகத்துச் செல்வம் மேன்மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல இடமுண்டாயிற்று. அதினின்றும் ஆரம்பத்திலே பல தொழிலாளிகள் வேலையிழந்து அங்கு பட்டினிகிடக்க நேர்ந்த துன்பத்துக்குத் தக்க நிவாரணமுண்டாய் அந்த நிவர்த்தி மேன்மேலும் மிகுதிப்பட்டு வந்தது.

                அதற்கு முன் இருந்த ஜன ஸமூக வரம்புகளும் நியதிகளும் சிதறிப்போய் விட்டனவே யெனினும் பெரும்பாலும் தொழிற் கூட்டத்தாருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆசியாவிலும் பிற கண்டங்களிலும் லக்ஷம் கோடிக்கணக்கான ஜனங்களுக்கு ஐரோப்பியத் துணி முதலியன ஏற்றுமதியாகத் தலைப்பட்டதினின்றும் ஐரோப்பிய தொழிற் கூட்டத்தாரிடையே தொழிலற்றவராய் வருந்திய ஜனங்களின் தொகை மேன்மேலும் குறையலாயிற்று. எனினும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட கக்ஷி பேதங்கள் தீரவில்லை; அவை மிகுதிப்பட்டுக் கொண்டே வந்தன. இதற்குக் காரணம் அங்கு தொழிலாளருக்குள்ளே சங்க சக்தி அபாரமாக அதிகப்பட்டு விட்டது. ஒவ்வொரு ஆலையிலும் பதினாயிரம் லக்ஷக்கணக்கான தொழிலாளிகள் வேலைசெய்தனர். இவர்களுக்குள்ளே பலர் கல்வி கற்றோர்ஆயினர்.

இதனிடையே மேற்கூறப்பட்ட ஸமத்துவக் கொள்கை, அதாவது, குற்றங்களுக்குத் தண்டனை விதிப்பதில், செல்வருக்கும் எளியோருக்கும், மேற்குலத்தாருக்கும் கீழ்க்குலத் தாருக்கும், சட்டம் ஸமானமாக வேலை செய்ய வேண்டுமென்றும், உணவு முதலிய ஸௌகரியங்களிலும் லௌகீக மரியாதைகளிலும் மானிடருக்குள்ளே எக்காரணம் பற்றியேனும் யாதொரு வேற்றுமையும் நடைபெறக் கூடாதென்றும், உலகத்தில் எல்லா மனிதரும் எல்லா வகைகளிலும் ஸமானமாவாரென்றும் பிரான்ஸ் தேசத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுச்சி பெற்று நாட்பட நாட்பட  ஐரோப்பா முழுவதிலும் வியாபித்துக் கொண்டு வந்ததொரு கொள்கை தொழிலாளரிடையே மிகுதியாகப் பரவலாயிற்று. அதன் மேல் இத் தொழிலாளர்  நாம் பாடுபட்டு உற்பத்தி செய்யும் பொருள்களை விற்று இந்த முதலாளிகள் இத்தனை பணம் ஸம்பாதிக்கிறார்கள். நாமோ பெரும்பாலும் குடியிருக்கக் குடிசைகளும் சாக்கடைகளும் தின்பதற்குப் பழைய ரொட்டியும் பழைய மீனுமாக வாழ்ந்து வருகிறோம். இவர்கள் மாளிகைகளில் வாழ்ந்து குபேரஸம்பத்தை அனுபவிக்கிறார்கள். இது ஸமத்துவக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் முதல் போட்டார்களே யெனில், நாம் பாடுபட்டோம். எல்லோருக்கும் லாபம் ஸமானமாகவே இருக்க வேண்டும் என்றுவிரும்பலாயினர். எனினும் திடீரென்று ஸமபாகம் கேட்க துணியாமலும் அதனைப் பெறுதல் சாத்யமில்லை யென்று நிச்சயமாகத் தெரிந்தபடியாலும் சிறிது சிறிதாக கூலி உயர்வுக்குக் கலகம் பண்ணிக்கொண்டு வந்தார்கள்.

வாஸத்திற்கு ஸௌகரியமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றார்கள், தொழிலாளிகள் கிழவரானஇடத்திலும் நோயாளிகளான இடத்திலும் இனாம் சம்பளம் கொடுக்க வேண்டு மென்றார்கள், தங்களுக்கும் தம்முடைய மக்களுக்கும் படிப்புச் செரல்லி வைப்பதற்குரிய சாதனங்கள் செய்யவேண்டு மென்றார்கள். தொழில் நோக்கத்தைக் குறைக்க வேண்டு மென்றார்கள், படிப்படியாக இவ் வேண்டுதல்களை முதலாளிகள் தெரிந்து கொண்டே வந்திருக்கிறார்கள் எனினும் இத்தகைய போராட்டங்களில் இன்றுவரை தொழிலாளிகளே வெற்றியடைந்து கொண்டு வருகிறார்கள். இதற்குரிய காரணங்கள் பல. இவற்றைக் குறித்து பிந்திய பகுதிகளில் விஸ்தாரமாக எழுதுகிறேன்.

                                            தொழிலாளர் பெருமை
ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட வேற்றுமைகள் இப்போது மிகவும் முற்றிப் போய்விட்டன. இந்நிலையில் அவ்விரண்டு கக்ஷியாருக்கு முள்ள மனஸ்தாபங்களை யெல்லாம் தீர்த்து அவர்களில் ஒரு திறத்தாரால் மற்றொரு திறத்தாருக்கு விளையும் பரஸ்பரமான கஷ்ட நஷ்டங்களைப் போக்கி அவர்களுக்குள்ளே ஸமாதானமும் ஒற்றுமையுணர்வும் ஏற்படுத்துதல் மிகவும் சிரமமான காரியம். இஃது வெறுமே சாதாரண மனிதயத்தனத்தால் நிறைவேறக் கூடியதாக தோன்றவில்லை. உலகத்தில் இதுவரையில்லாத புதிய தெய்வீக சக்திகள் கொண்ட அவதார புருஷர்கள் தோன்றினால் அவர்களே ஐரோப்பாவில் மூண்டிருக்கும் இந்தப் பெரிய விபத்துக்கு ஸமாதான வழிகளிலே நிவர்த்தி செய்யக்கூடும்.  சென்றஇரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பியத் தொழிலாளர் சிறிது சிறிதாக சம்பாதித்துக் கொண்டு வந்திருக்கும் உரிமைகளுடனே அவர்கள் திருப்தி கொண்டு இருக்கவேண்டும். இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளே மிகவும் அதிகம். இவற்றைக் கூட இன்னும் குறைத்தால் நல்லது. இப்படியிருக்க,தொழிலாள்ளர் இன்னும் அதிகமான உரிமைகள் கேட்பதற்கு நாம் கொஞ்சமேனும் செவி சாய்க்கக்கூடாது என்று பெரும்பான்மையான முதலாளிகள் நினைக்கிறார்கள். தொழிலாளரோ, அங்கு ராஜாங்க அதிகாரத்தை தமது வசமாகச் செய்து கொண்டாலன்றி, அதாவது, தங்கள் இஷ்டப்படி சட்டம் போட்டு, முதலாளிகளினுடைய பணத்தை தங்கள் இஷ்டப்படி விநியோகிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டாலன்றி, தங்களுக்கு முதலாளிகளிடமிருந்து நியாயம் கிடைக்க இடமில்லை என்று நினைக்கிறார்கள்.

எனவே, இங்கிலாந்து முதலிய தேசங்களிலுள்ள தொழிலாளிகள் பார்லிமெண்ட் சபையில் தாம் ஆதிக்கம்பெற்று, அதன் மூலமாக தம்முடைய கட்சியாரே மந்திரிகளாகும் படியான நிலைமையை ஏற்பாடு செய்துகொண்டு, இவ்வழியாலே ராஜ்யாதிகாரத்தையும் தம்முடையதாகச் செய்து கொள்ளும்படி மும்முரமான முயற்சிகள் செய்து வருகின்றனர். ஆனால், மேற்படி தேசங்களில் ராஜ்யாதிகாரம் இப்போது பெரும்பாலும் முதலாளிகளுக்குச் சார்பாக இருப்பதால், அந்தமுதலாளிகள் தம்மால் இயன்ற வழிகளிலெல்லாம் தொழிலாளிகளைத் தலை தூக்க ஒட்டாமல் அழுத்திவிட முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் அவ்விரு திறத்தாருக்குள்ளே சமாதானமும் சிநேகிதத் தன்மையும் ஏற்படுவதற்கு வழியில்லாமல், நாளுக்கு நாள் மனஸ்தாபங்களும், அவநம்பிக்கையும், வயிற்றெரிச்சல்களும் மிகுதிப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன.

                 இந்தியாவில் இந்த விபரீதமான நிலைமை ஏற்பட வேண்டுமென்பது நம்முடைய விருப்பமன்று. ஐரோப்பாவில் ஆரம்ப முதலாகவே தொழிலாளரும்,முதலாளிகளும் தொழிலின் பெருமையையும் அவசியத் தன்மையையும் நன்கு கருதியிருப்பார்களாயின், இப்போது அங்கே இவ்வளவு பயங்கரமான நிலைமை ஏற்பட்டிராது. எனவே இந்தியாவில் முதல் முதலாகத்தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்திலே, நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள், தொழிலாளிகள் என்று இரு திறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏற வொட்டாதபடி முளையிலேயே கிள்ளிவிட முயற்சி செய்ய வேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற் குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்.தொழிலின் மஹிமையையும் இன்றியமையாத் தன்மையையும் எல்லா ஜனங்களும் அறியுமாறு செய்யவேண்டும்.

ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்தஏற்பாடுகள் செய்யாவிடின், நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்.

ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் பல புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும் பகுதியார் தொழிற் கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதினின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற் கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதி யனைத்தையும் சகல ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து, எல்லாரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கிறார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வ ஜனங்களுக்கும் தேசத்துச் செல்வம் பொது என்பதுஉண்மையாய் விடின், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமற் போகும்படி ஸகலரும் தொழில் செய்து தான் ஜீவிக்கவேண்டும் என்ற விதி வழங்குமானால், தேசத்துத் தொழில்மிகவும் அபிவிருத்தி யடைந்து ஜனங்களின் க்ஷேமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும்.

எனவே, ருஷ்யாவிலுள்ள அபேதவாதிகளுடையகொள்கைகள் அவ்வளவு தீங்குடையன வல்ல. ஆனால், அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச் சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருஷ்யக் கொள்கைகளை இப்போது அனுஷ்டிக்கப்படும் ருஷ்ய முறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெறவேண்டுமானால், அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்து அன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும் ஏழைகளும் ஒருவரை ஒருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் தூக்கு மரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?

இந்தியாவில் இந்த நிலைமை நேரிடாத வண்ணம், ஜனத்தலைவர்கள் இப்போதே தீவிரமாகவும் பலமாகவும் வேலை செய்யத் தொடங்கவேண்டும். தொழிலாளரிடம் பொது ஜனங்களும் முதலாளிகளும் மிகுந்த மதிப்புச்  செலுத்தும்படி ஏற்பாடு செய்வதே இந்த வேலையில் முதற்படியாம்.  தம்முடைய காரியத்தைச் செய்ய வேண்டியதே தொழிலாளியின் ஆத்மாவுக்கு ஈசனால் விதிக்கப்பட்ட புருஷார்த்தம்  என்று முதலாளிகளில் பலர் நினைக்கிறார்கள். யந்திரங்களைப் போலவே இவர்கள் மனிதரையும் மதிக்கிறார்கள். பொதுவாக ஏழைகளிடம் செல்வருக்கு உள்ள அவமதிப்பு அளவிடும் தரம் அன்று. இவ்விதமான எண்ணம் நம்முடைய தேசத்திலும் செல்வர்களிடத்து மிகுதியாகக் காணப்படுகின்றது. இவ்வெண்ணத்தை உடனே மாற்றித் தொழிலாளிகளையும் மற்ற ஏழைகளையும் நாம் ஸாதாரண மனிதராக நடத்தவேண்டும். அதிலும் தொழிலாளிகளின் விஷயத்தில் நாம் உயர்ந்த மதிப்புச் செலுத்த வேண்டும். இவ்வித மதிப்பினால் நாம் தொழிலாளிகளின் விஷயத்தில் என்னென்ன கடமைகள் செலுத்த நேரும் என்பதை பின்னொரு வியாசத்திற் பேசுகிறேன்.


77. சமூகம் - வருங்காலம்


              உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக்கொண்டு வருகிற தென்பதை தமிழ்நாட்டார் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.ஒவ்வொரு வரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக்கொண்டு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்திசெலுத்தாமல் அற்ப விஷயங்களிலும், அற்பச் செய்கைகளிலும் நாளையெல்லாம் கழியவிட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல்வாழ்வதிலே பயனில்லை.

            வர்த்தகஞ் செய்வோர் கோடிக்கணக்கான பணப்பழக்கம் ஏற்படும்படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேடவேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்யவிவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்துகொண்டு, மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ் பெறவேண்டும். கைத்தொழில்களின் விஷயத்திலே நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந் தருகின்றன.

           திருஷ்டாந்தமாக, நேர்த்தியான சித்திரங்களும் வர்ணங்களும் சேர்த்துப் பட்டிலும் பஞ்சிலும் அழகானஆடைகள் செய்யவல்ல தொழிலாளிகள் நமது நாட்டில்இருக்கிறார்கள் இவர்களுக்குப் படிப்பில்லை; வெளியுலக நிலை தெரியாது. கையிலே முதற் பணமுமில்லை. நமக்குள்ளே கல்வியும் செல்வமும் உடையோர் கூடி ஆராய்ச்சிகள் செய்து வெளிநாடுகளில் ஆவலுடன் வாங்கக்கூடிய மாதிரிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து அவற்றை நமது தொழிலாளிகளைக் கொண்டு செய்வித்தால் மிகுந்த லாபமுண்டாகும்.

           இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வமுங் கொடுப்பது. எல்லாவிதமான கைத்தொழில்களும் தற்காலத்தில் இரும்பு யந்திரங்களாலே செய்யப்படுகின்றன. ஆதலால், நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பலவிதங்களிலே அறிவு விருத்தியும் ஜீவன ஸௌகர்யங்களும் ஏற்பாடு செய்துகொடுத்து இடத்துக்கிடம் இயன்றவரை இரும்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

              இனி, வர்ணப்படம், தையல் வேலை, மைத்தொழில் முதலிய சித்திர வேலைகளில் நமது ஜனங்களின்அறிவு மிகவும் சிறந்தது. கொஞ்சம் சிரமப்பட்டால், இந்தத் தொழில்களை மறுபடி உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விடலாம். சிறிது காலத்துக்கு முன்பு சீனத்திலிருந்தும் ஜப்பானிலிருந்தும் பல சித்திர வேலை களைக் கொண்டு போய் அமெரிக்காவில் காட்டியபோது, அங்கே அவற்றிற்கு மிகுந்த புகழ்ச்சியும் பிரியமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

               இதை நாமேன் செய்யக்கூடாது?

              வெளி நாட்டுக்குக் கப்பலேறிப் போங்கள், புறப்படுங்கள், புறப்படுங்கள். தொழிலாளிகளே, வியாபாரிகளே, வித்வான்களே, புத்திமான்களே, எப்படியேனும் யாத்திரைச் செலவுக்குப் பணம் தயார் செய்துகொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்துவிட்டு வாருங்கள் நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் யோசனைகளுக்கும் வெளி நாடுகளில் ஏராளமான உதவி கிடைக்கும். சந்தேகப்படவேண்டாம்.

பரோடாவிலிருந்து  இநாயத்கான் என்ற சங்கீத வித்வான் சில வருஷங்களுக்கு முன்பு தென் ஜில்லாக்களில் யாத்திரை செய்து வந்தது நம்மிலே சிலருக்கு ஞாபகமிருக்கலாம். அங்கே அவர் சாதாரணமாக இருந்தார். பின்னிட்டு அவர் பல தேசங்களில் சஞ்சாரம் செய்து, பிரான்ஸ் தேசத்திலே போய் நல்ல கீர்த்தியடைந்திருக்கிறார். அங்கே பல பெரிய வித்வான்களும் பிரபுக்களும் அவருடைய தொழிலை அற்புதத்திலும் அற்புதம் என்று கொண்டாடுகிறார்கள். சங்கீத ஞானமுடைய தமிழ்ப் பிள்ளைகள், முதலாவது கொஞ்சம் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். இது மிகவும் சுலபமான காரியம். தமிழருடைய அறிவுக்கு எந்தவித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால், பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும்படி செய்தல் எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் பெறலாம்.

எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவிய மில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும், மன வுறுதியினாலும், பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வத்துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பிவாருங்கள். உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.


76. சமூகம் - மதிப்பு


                   நூறு மனிதர் சேர்ந்து ஒருவனை நாயகன் என்று தீர்மானம் செய்தால் அவனுக்கு மிகுந்த வலிமை ஏற்படுகிறது. அங்ஙனம் தீர்மானிக்கப்பட்ட நாயகர்கள் பத்துப்பேர் சேர்ந்து தமக்குள்ளே ஒரு தலைவனை நியமித்துக் கொண்டால், அந்தத் தலைவனுடையசொல்லை தேசத்தார் அனைவரும் மதிக்கும்படி நேரிடும்.

                 கூட்டத்திற்கு வலிமையுண்டு. இது ஹிந்துக்களுக்குக் கூடத் தெரிந்த விஷயம்.    ஒரு பெரிய கூட்டத்தின் தலைவனுக்கு மதிப்புண்டு என்பதை ஹிந்துக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். என்றாலும், புதிது புதிதாகக் கூட்டம் சேர்க்கும் யுக்தி ஹிந்துக்களுக்கு இன்னும் நன்றாகத் தெரியவில்லை. ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் புதிய வலிமையும் அதனால் புதிய அனுகூலங்களும் பெறுகின்றான். பிச்சைக்காரர் கூடத் தனித்தனியே பிச்சையெடுப்பதைக் காட்டிலும் நூறுபேர் கூட்டங் கூடிப்பிச்சைக்குப் போனால் அதற்கு மதிப்பு மிகுதியுண்டு.

               ஹிந்துக்களை உலகத்தார் பாமர அநாகரீக முக்காற்காட்டு ஜனங்கள் என்று நினைக்கும்படி நாம் இதுவரை இடங்கொடுத்து விட்டோம்.

             இந்தியாவை வெளி யுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிகள் பல.

            முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும்ஐரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் மதவிஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்து பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படித் தாழ்ந்துபோய் மஹத்தான அநாகரீக நிலையிலிருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மதத்திலே சேர்த்து மேன்மை படுத்தும் புண்ணியத்தைச் செய்வதாகச் சொல்லுகிறார்கள். ஹிந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும் ஸ்திரீகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷரை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறார்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப்பிரிவுகளிலே இருக்கும் குற்றங்களை யெல்லாம் பூதக் கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை.

                  இரண்டாவது, அந்நிய தேசப் பண்டிதர்ச ரித்திரக்காரர் முதலானவர்கள். ஹிந்துக்களை அன்னிய தேசத்தார் போர் செய்யும் தந்திரத்தாலும் வென்று ஹிந்துக்களின் மீது அன்னிய ராஜ்யம் நடைபெற்று வருவதை யொட்டி, வெளிதேசத்துச் சரித்திரக்காரர் நமதுநாட்டு வீரம் ஒற்றுமை முதலிய குணங்களையும் நமதுபொது அறிவையும் மிகவும் இழந்த நிலைமையிலே இருப்பதாகக் காட்டுதல் வழக்கமாக நடைபெற்று வந்திருக்கிறது.

                நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப்படுத்தி மதிப்பில்லாமல் செய்துவிட்ட புறக்கருவிகள் பல. அவற்றை விரிவாக எழுத வேண்டுமானால் தனிப் புத்தகம் போடவேண்டும்.

             ''போனது போகட்டும், இனிமேலாயினும் புத்தியாய் பிழை மனமே" என்று ஒரு பண்டாரப்பாட்டு உண்டு. அது போலே, நடந்ததெல்லாம் நடந்து போய்விட்டது. இனிமேலாயினும், ஹிந்துக்கள் தம்மை மதிப்புடையோராகச் செய்து கொள்ள வழிதேட வேண்டும். வெளி தேசங்களில் நமக்கு மதிப்பு உண்டாக்க வேண்டுமானால், அதற்கு மூலம் இங்கே வலிமை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இங்ஙனம் வலிமை சேகரிப்பதற்கு கூட்டம் ஒன்றே உபாயம் என்பதை இந்த வியாசத்தின் தொடக்கத்திலே சொன்னோம். நம்முடைய ராஜரீக நிலைமையைச் சீர்திருத்துவதற்குப் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள் மேன்மேலும் வளர்ந்து வெற்றிபெற வேண்டுமானால், அதற்குக் கூட்டங்களை அதிகப்படுத்துவதே வழி. கூட்டங்கள் கூடி யோசனை பண்ணுகிற விஷயம் கைகூடும். ஓயாமல் கூட்டங்கள் சேர்த்து திரும்பத் திரும்ப உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாகக் கைகூடும். நமது ராஜாங்கக் கூட்டங்களில் இதுவரை சரியானபடி சக்தி ஏற்படாத காரணம் யாதெனில், இந்தக் கூட்டங்களில் உண்மையாகவே தேசத்துக்கு அனுகூலம் செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மிகச் சிலராகவேஇருந்தனர். தேச பாஷைகளிலே பேசுவது கிடையாது. அதாவது, பொய் அதிகப்பட்டுத் தலைதூக்கி நின்றது. இப்போது நாட்டில் உண்மையான தேசாபிமானிகள் தொகைஅதிகப்பட்டிருக்கிறது. தேச பாஷைப் பேச்சு வழக்கப்பட்டு வருகிறது. ராஜ்ய விஷயங்களுக்கு மாத்திரம் நான் பேசவில்லை. நான் பொதுப்படையாகச் சொல்லுகிறேன். எவ்விதமான வலிமைக்கும் கூட்டம் ஆதாரம். சபை சேர்ந்து பேசினால் மாத்திரம் போதாது. எப்போதுமே எங்கும் நம்மில் ஒவ்வொருவரும் நாம் இன்ன பெருங்கூட்டத்தைச் சேர்த்திருக்கிறோம் என்பதையும் நமது வாழ்க்கையின் நோக்கம் இன்னதென்பதையும் மறவாதிருக்க வழி தேடவேண்டும்.

   இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பியதேசங்களில், கோடானு கோடியாக மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுதுமே ஒரு ஸைன்யம் போல ஆகும்படி செய்யவேண்டும் என்று அங்குள்ள சிலதலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை,ஸமாதானக்காரன் இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரேகூட்டமாகச் செய்து,  சண்டைக்கன்று, ஸமாதானமாக மனிதன் ஸாதனை செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றும் பொருட்டாக, உபயோகப்படுத்த வேண்டுமென்பது என்னுடையநோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மற்ற ஹிந்துக்களின் உதவி வேண்டும். தெய்வபலம் வேண்டும். இவ்விரண்டும் கைகூடும்.

இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம்போலே செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால், அவன் ராஜாங்கம் முதலிய ஸகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், வேதத்தை நிலைநிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான் நினைக்கிறேன். ஹிந்துக்களைத் திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிடவேண்டும் இதற்குரிய உபாயங்களை சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.


75. சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை


             நமது தேசத்தில் வறுமை அதிகம்.

            முன்னே யிருந்தவர்களின் கோழைத்தன்மை, ஒற்றுமைக் குறைவு, சாஸ்திர ஞானமில்லாமை, பல தேச விவகாரங்கள் தெரியாமை, மூட கர்வங்கள் முதலிய வற்றால் லக்ஷ்மியை இழந்தோம். மேற்படி குணங்கள் இன்னும் நம்மைவிட்டு நன்றாக நீங்கவில்லை. நாளொன்றுக்கு சராசரியாக நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு முக்காலணா வரும்படி யென்று கணக்காளிகள் சொல்லுகின்றார்கள்; அதாவது, நரகத் துன்பம் உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இப்படி இல்லை.

           இந்த நிலையில் நமக்குள்ளே பலர் பலவிதமான இகழ்ந்த காரியங்கள் செய்வது வியப்பில்லை. மிகுந்த செல்வமுடைய நாடுகளிலே கூட மனிதர் பணத்துக்காக எத்தனையோ மானங்கெட்ட காரியங்கள் செய்கிறார்கள்.  ஏழைத் தேசத்தாராகிய நாம் இவ்வளவு மானத்துடன்பிழைப்பதே பெரிய காரியம்.

          பணம்,  பொதுக் கல்வி, விடுதலை  மூன்றும்  இல்லாவிட்டால்  அந்த  நாட்டில் மானமேது?

         பிராமணருக்குள் விவாஹ காலங்களிலே எதிர்ஜாமீன் கேட்கும் வழக்கத்தை நிறுத்தி விடவேண்டும் என்றும் சில வருஷங்களாகப் பலர் பேசி வருகிறார்கள். மானமுடைய தேசங்களிலே சீதனம் கொடுத்தல் பெண்களின் பெற்றோர் செய்வது சாதாரணமேயாம். ஆனால்,மாப்பிள்ளைகளுக்கு விலைத்தரங்கள் போட்டு, இன்ன பரீக்ஷை தேறினவனுக்கு இத்தனை ரூபாய் கிரயம் என்றுமுடிவு செய்து வைத்து, அதன்படி விவாஹங்கள் நடத்தும் வழக்கமில்லை.

           சீனா, ஜப்பான், நவீன பாரசீகம் முதலிய எல்லா மனுஷ்ய தேசங்களிலேயும் விவாஹம் அன்பையே ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகிறது. இங்கே, பணத்துக்காக விவாஹங்கள் செய்து கொள்ளுகிறார்கள். சாதாரணமாகப் பெண்களுக்கு விலை கூறி விற்பது வழக்கமாகவே இருந்தது. இப்போது 'பூசுரர்' (பூமண்டலத்திலேதேவர்) ஆகிய பிராமணக் கூட்டத்தார் மாப்பிள்ளைக்கு விலைபோட்டு விற்கத் தொடங்கி இருக்கிறார்கள். புண்ய பூமி!பணம் கொடுக்கச் சொல்லி ஏழைக் குடும்பத்தாரை வதைசெய்யும் போது தான் துன்பம் அதிகப்படுகிறது. பெண்கள் ருதுவாகு முன்பு விவாகம் நடந்து தீரவேண்டும். ஒரு ஜாதியிலே, ஒரு பிரிவிலே, ஒரு சாகையிலே, ஒரு கிளையிலே, ஒரு பகுதியிலே, ஒரு வகுப்பிலே, ஒரு கோணத்திலே, ஓரோரத்துக்குள்ளே தான் ஸம்பந்தங்கள் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் 'ஸநாதன அதர்மம்' முட்ட வருகிறது. மாப்பிள்ளைகளோ உயர்ந்த கிரயங்கள் கொடுத்தாலொழிய அகப்படுவதில்லை. முக்கால்வாசிக் குடும்பத்தார் நித்திய ஜீவனத்துக்கு வழியில்லாத ஏழைகள். நாலைந்து பெண்களைப்பெற்று விட்டால், இந்த ஏழைகள் என்ன செய்வார்கள்? திருநெல்வேலி ஜில்லாவில் எனக்குத் தெரிந்த ஒரு கிராமத்திலே ஒரு பெண்ணுக்கு விவாஹம் நடந்தபோது, அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளைக்குப் பணங் கொடுத்தார்கள். பிறகு ருது சாந்தியின்போது, அந்த மாப்பிள்ளை, 'ஐந்நூறு ரூபாய் கொடுத்தால்தான் ருதுசாந்திசெய்து கொள்வேன். இல்லாவிட்டால் பெண் உங்கள்வீட்டோடே இருக்கட்டும்' என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் தண்டம் வாங்கிக் கொண்டான்.