பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, September 23, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 7

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 7

சேவப்ப நாயக்கர். (1532 - 1580)

தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கரின் காலம் 1532 முதல் 1580 வரையிலானது. இவருடைய தந்தையார் பெயர் திம்மப்ப நாயக்கர். இந்த திம்மப்ப நாயக்கர் ஆற்காடு பிரதேசத்தில் ராஜப்பிரதிநிதியாக இருந்தவர். இவரை திம்மப்பா என்றும் திம்மப்ப பூபதி என்றும் அழைப்பார்கள். ஆற்காடு பகுதியின் ஆளுகைக்குப் பொறுப்பான இவர் இப்போதைய வேலூர் மாவட்டம் நெடுங்குன்றம் எனும் ஊரில் இருந்து கொண்டு ஆட்சி புரிந்தார்.

விஜயநகர சாம்ராஜ்யம் இப்போதைய ஆந்திரப் பிரதேசத்தில் பரவியிருந்த ஒரு பெருமைக்குரிய இந்து சாம்ராஜ்யம். இதனை தெற்கே தமிழ்ப்பேசும் பகுதிகளுக்கு விரிவு படுத்த இந்த நெடுங்குன்றம் பகுதியிலிருந்து தான் தொடங்கினர். தென் தமிழகம் உட்பட அனைத்துப் பகுதிகளும் நாயக்கர் ஆட்சிக்கு அடிகோலியது இந்த நெடுங்குன்றம் ஆட்சிதான். அதற்கு வித்திட்ட பெருமை திம்மப்ப நாயக்கருக்கு உண்டு.

யார் இந்த திம்மப்பர்? நாம் முன்பே குறிப்பிட்டபடி விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் தங்கள் பகுதிகளை ஆள்வதற்கு கூடியமட்டும் தங்கள் உறவினர்களையே தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அப்படி உறவினர்கள் இல்லையென்றால், அவர்களது நம்பிக்கைக்குரிய ஊழியர்களை அனுப்புவார்கள். அப்படி இந்த திம்மப்பர் ஆற்காடு பகுதிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக இவர் மாமன்னர் கிருஷ்ணதேவராயரிடம் வாயில் காப்போனாகப் பணியாற்றி வந்தார். அந்தப் பணிக்கு "வாசல்" என்று பெயர். மன்னரின் வாசல் எனும் பதவியோடு இவர் தளவாய் எனும் படைத்தளபதியாகவும் இருந்தார். மன்னரின் தளவாயாக இருந்த காலத்தில் ரெய்ச்சூர் உட்பட பல பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்று போரிட்டிருக்கிறார் இவர். இவருடைய சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் நாகம்ம நாயக்கர். நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர்தான் மதுரைப் பகுதியை ஆள அங்கு அனுப்பப்பட்டு அவர் மூலம் தென் தமிழகம் முழுவதும் நாயக்கர் ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது.

நாகம்ம நாயக்கரும் திம்மப்ப நாயக்கரும் அண்ணன் தம்பி என்பதைப் பார்த்தோம். இதில் நாகம்ம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கும், திம்மப்பரின் மகன் சேவப்பர் தஞ்சைக்கும் அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவருமே மாமன்னர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இவர்களைப் பற்றியும் சிறிது விரிவாகத் தெரிந்து கொள்வது நல்லதுதானே!

திம்மப்ப நாயக்கருக்கு நான்கு பிள்ளைகள். இவர்கள் பெத்தசேவா, சின்னசேவா, பெத்தமல்லா, சின்ன மல்லா என்ற பெயர் உடையவர்கள். இவர்களில் சின்னசேவா என்பவர்தான் நமது கதாநாயகனான சேவப்ப நாயக்கர். இவர் திம்மப்ப நாயக்கருக்கும் பையாம்பிகா எனும் ராணிக்கும் மகவாகப் பிறந்தவர். சேவா என்பது சேவப்பர் என்பதன் சுருக்கம். தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பிறகு இவருடைய பெயரைத் தமிழில் "சிறு சேவா" என்று குறிப்பிட்டனர். சரி மற்ற பிள்ளைகள் என்னவானார்கள்? அது பற்றிய விவரம் தெரியவில்லை. சரித்திர ஆசிரியர்களும் இது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. சேவப்பருக்கு முன்னதாக சோழ தேசத்துக்கு விஜயநகர சாம்ராஜ்யத்தின் கவர்னராக இருந்த செல்லப்பா என்கிற வீரநரசிம்மரைத் தொடர்ந்து இவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். "தஞ்சாவூரு ஆந்திர ராஜ்யலு சரித்திரமு" எனும் தெலுங்கு இலக்கியம் சேவப்பருக்கு அவருடைய திருமணம் மூலம் கிடைத்த வரதட்சிணை என்கிறது. ஆனால் வேறு சில செய்திகள் சேவப்பர் தன் வீரத்தினால் போரிட்டு இந்த தஞ்சாவூர் ஆட்சியைக் கைப்பற்றினார் என்கிறது. இப்படி தொடங்குகிறது இந்த நாயக்கர் வம்சத்தின் வரலாறு. 

திம்மப்பர் ராஜாங்க பணியில் இருந்த காரணத்தால், முதலில் அவருடைய குமாரர்களும் ராஜாங்கத்தில் பணி அமர்த்தப்பட்டனர். தஞ்சைக்கு அனுப்பப்பட்ட சேவப்ப நாயக்கர் முதலில் கிருஷ்ணதேவராயரிடம் பணிபுரிந்து வந்தார். ஒரு காலகட்டத்தில் திம்மப்பரும் அவர் மகனான சேவப்பரும் விஜயநகர சாம்ராயப் படையில் பணிபுரிந்து பல போர்களில் பங்கு கொண்டிருக்கின்றனர். இவருடைய பணி சிறப்பாக இருப்பதை உணர்ந்து மன்னர் இவரிடம் அக்கறை காண்பித்து இவருக்கு உரிய அந்தஸ்தையும் கொடுத்திருந்தார். சேவப்ப நாயக்கர் நல்ல நிர்வாகியாகவும் பெயர் பெற்றிருந்தார். 

கிருஷ்ணதேவராயரின் சகோதரர் அச்சுததேவராயர். அண்ணனுக்குப் பிறகு அச்சுததேவராயர்தான் விஜயநகர சக்கரவர்த்தியாகப் பதவிக்கு வந்தார். இவருடைய மனைவியின் பெயர் திருமலாம்பா. அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சிறந்த நிர்வாகியுமாகத் திகழ்ந்த சேவப்பருக்கு இந்தத் திருமலாம்பாவின் சகோதரியைத் திருமணம் செய்து வைத்தனர். அந்தப் பெண்ணின் பெயர் மூர்த்திமாம்பா. இந்தத் திருமணத்தின் மூலம் சேவப்பர், ராஜாவின் சகலையாக ஆகிவிட்டார். சேவப்பர் தஞ்சாவூரின் அரசராக ஆனதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ராஜாவின் குடும்பத்தில் அல்லவா பெண் எடுத்திருக்கிறார் சேவப்பர். அதற்கு வரதட்சிணையாக தஞ்சாவூரைப் பெற்றார் என்றும் சொல்பவர்கள் உண்டு. 

முதலில் சேவப்பர் அச்சுததேவராயருக்கு அடப்பக்காரனாக பணிபுரிந்தார். அது என்ன அடப்பக்காரன்? அடப்பக்காரன் என்றால் மன்னருக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கும் பணி. அட இது என்ன? மன்னருக்கு தாம்பூலம் மடித்துக் கொடுப்பது என்பது அவ்வளவு உயர்ந்த பணியா? அதை இவரைப் போன்ற ஒருவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றுகிறதல்லவா? இது ஒன்றும் அப்படிப்பட்ட எளிய, தாழ்ந்த பணி அல்ல. அடப்பக்காரனாக மன்னர் வைத்துக் கொள்கிறார் என்றால், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான, உறுதியான பாதுகாவலராக இருப்பவரைத்தான் வைத்துக் கொள்வார். காரணம் வெற்றிலை மடித்துக் கொடுப்பவன் அதில் ஏதாவது விஷம் கலந்து கொடுத்துவிட்டால் மன்னரின் கதி? ஆகவே மிகவும் நம்பிக்கை உள்ளவராகத்தான் இந்த பதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். அந்தப் பதவியிலும் இருந்தவர் நமது சேவப்பர். நம்பிக்கை, நாணயம், மன்னரை பாதுகாக்கும் உணர்வு அதற்கான வீரம் அத்தனையும் இருந்ததால்தான் சேவப்ப நாயக்கர் மன்னரிடம் இந்த பணியைச் சிறப்பாக செய்து வந்தார். சுருக்கமாகச் சொல்வதென்றால் மன்னரின் அந்தரங்க பாதுகாவலராகப் பணி புரிந்தவர் சேவப்ப நாயக்கர்.

சேவப்ப நாயக்கருக்கு ராஜப்பிரதிநிதியாக பதவி உயர்வு கொடுத்து முதலில் ஆற்காட்டுக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும் அனுப்பக் காரணமாக இருந்தவர் மன்னர் அச்சுததேவராயர் என்பதால்தான், பின்னாளில் சேவப்ப நாயக்கர் தனது மகனுக்கும் மன்னரின் பெயரையே வைத்தார். அந்த மகனின் பெயர் அச்சுதப்ப நாயக்கர். சேவப்ப நாயக்கர் தஞ்சாவூருக்கு மன்னராக வந்து பதவியேற்ற காலம் தொட்டே அவருடைய மகன் அச்சுதப்ப நாயக்கரும் இளவரசராக இருந்து கொண்டு தந்தைக்கு உதவி செய்து வந்தார்.

சேவப்ப நாயக்கரின் ஆட்சியில் சொல்லிக்கொள்ளும்படியான எந்த பெரிய நிகழ்ச்சியோ அல்லது போரோ நடைபெறவில்லை. பொதுவாக நாடு அமைதியாகவும் வளமானதாகவும் இருந்திருக்கிறது. இவர் காலத்தில் கட்டப்பட்ட மாளிகைகள், அரண்மனைகள், நகரங்கள் இவைகளே நாடு அமைதியாக இருந்ததற்கான அடையாளங்கள். விஜயநகர அரசர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தங்கள் பார்வையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அறியாமல் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது அத்தனை பாதுகாப்பு.

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூரைத் தலைநகரமாக ஆக்கிக் கொண்டு பாண்டியர்களால் அழிக்கப்பட்ட தலைநகருக்கு அருகிலேயே புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கிக் கொண்டு அங்கு நீர்நிலைகளையும், ஆலயங்களையும், மாளிகைகளையும் உருவாக்கி ஒரு புதிய ராஜ்யத்தை உருவாக்கினார். அவர் பெயரைச் சொல்லிக் கொண்டு இன்றும்கூட 'சேவப்பநாயக்கன் ஏரி' இருக்கிறது. அங்கு ஏரியும் இல்லை, தன்ணீரும் இல்லை, அதனை சமப்படுத்தி அங்கு வீடுகளைக் கட்டிக் கொண்டு மக்கள் ஒரு குடியிருப்பாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூருக்கு ஒரு விளையாட்டு அரங்கம் (Stadium) தேவை என்பதை உணர்ந்து இந்த சேவப்ப நாயக்கன் ஏரி பகுதியில் அன்றைய அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அடிக்கல்கூட நாட்டினார். பின்னர் ஸ்டேடியம் இப்போது இருக்கும் கணபதிநகர் பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டது.

சேவப்ப நாயக்கன் ஏரியில் சுற்றுப்புற மேட்டுப் பகுதிகளிலிருந்து மழைநீர் வந்து தேங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த நீர் ஏரிக்கு வந்த பிறகு அதை பெரிய குழாய்கள் மூலம் சிவகங்கைக் குளத்துக்குக் கொண்டு சென்று, அது நிரம்பியதும் நகரின் மற்ற குளங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் நீர்நிலைகள் பாதுகாப்பை உருவாக்கி யிருந்தார். இதுபோன்ற அமைப்புகள் புதுக்கோட்டையிலும் திவான் சேஷையா சாஸ்திரி காலத்தில் உருவாக்கப்பட்டு நகரின் பல நீர்நிலைகள் மழைக்காலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நிரம்பி கடைசியில் புதுக்குளம் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறோம். தஞ்சாவூரிலும் நீர்நிலைகளுக்கு பூமிக்கு அடியில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் அமைப்பு இருந்திருக்கிறது.

சேவப்ப நாயக்கரைப் பற்றிய ஆதாரபூர்வமான கல்வெட்டுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சோழ தேசத்தில் இவர் ஆட்சி புரிந்தது மட்டும் வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது. இவருடைய காலத்தில் திருச்சினாப்பள்ளி தஞ்சாவூர் ராஜ்யத்திற்கு உட்பட்டும், வல்லம் மதுரை நாயக்கர்களிடமும் இருந்திருக்கிறது. இவர் திருச்சியை மதுரை நாயக்கர்களிடம் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக வல்லத்தை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. 

இனோரு வரலாற்றுச் செய்தியும் இவர் காலத்தைப் பற்றி சொல்லப்படுகிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதி ராமராஜ விட்டலர் தன்னுடைய படைகளோடு திருச்சினாப்பள்ளியில் தங்கிக்கொண்டு *திருவடி (திருவிதாங்கூர்) ராஜாவோடும், தென்னிந்திய கடற்கரை பரவர்களோடும் 1545இல் போரிட்டுக் கொண்டிருந்த போது சேவப்பர் தளபதி ராமராஜருக்கு படைகளைக் கொடுத்து உதவியும், மற்ற உதவிகளையும் செய்ததாகத் தெரிகிறது. (திருவாங்கூர் ராஜாக்கள் அவ்வூரிலுல்ள பத்மநாபசுவாமியின் திருவடி என்று தங்களைச் சொல்லிக் கொள்வதால் அவர்களை 'திருவடி' என்பது வழக்கம்).

சேவப்ப நாயக்கர் தஞ்சாவூர் ராஜ்யத்தில் பல கோயில்களைக் கட்டியிருக்கிறார். இடிந்து சிதிலமான பல கோயில்களைப் புதுப்பித்திருக்கிறார். அவர் காலத்திற்கு முன்பு இங்கு படையெடுத்து வந்த வட இந்திய சுல்தான்கள் படைகளினால் நாசமாக்கி இடிக்கப்பட்ட பல கோயில்களையும் சரிசெய்ய முடியாவிட்டாலும், பல கோயில்களின் இடிபாடுகளிலிருந்த பொருட்களைக் கொண்டு ஏதாவதொரு கோயிலையாவது புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்கள். அப்படிக் கட்டப்பட்ட கோயில்களில் செந்தலை கோயிலும் ஒன்று. 

முன்பே குறிப்பிட்டபடி தஞ்சையில் நீராதாரத்தைப் பெருக்கியதைப் போல நாட்டின் பல இடங்களிலும் பல குளங்களை வெட்டி தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடு செய்தார். வேதங்கள் ஓதிய பிராமணர்களுக்கென்று பல அக்ரஹாரங்களை அமைத்துக் கொடுத்து அவற்றை வேத பண்டிதர்களுக்கு சர்வமான்யமாகக் கொடுத்துதவினார். 

தஞ்சை சிவகங்கைக் கோட்டையை சீர்செய்து செம்மை படுத்தியிருக்கிறார் சேவப்ப நாயக்கர். திருவண்ணாமலையில் பதினோரு அடுக்கு கோபுரம் ஒன்றைக் கட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படியொரு கோபுரத்தைக் கட்டித்தரும்படி சேவப்ப நாயக்கரிடம் கேட்டுக் கொண்டவர்கள் பெயர்கள் தெரிய வருகின்றன, அவர்கள் சிவநேசன் அவர் தம்பி லோகநாதன் ஆகியவராவர். இவை தவிர விருத்தாசலம் எனும் திருமுதுகுன்ற ஆலயத்துக்கும், காஞ்சிபுரத்தில் சில ஆலயங்களுக்கும் சுற்றுப் பிரகாரங்களை இவர் அமைத்துத் தந்திருக்கிறார். 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் வெளிப்பிரகார மதிற்சுவற்றை சீர்படுத்தி ஒழுங்காக்கிக் கட்டிக் கொடுத்தார். சிதம்பரம் நடராஜா கோயிலின் கோபுரத்தைக் கட்டிக் கொடுத்தார். திருப்பதி பெருமாளின் மூலத்தானத்துக்கும், ஸ்ரீசைலம் ஆலயத்தின் விமானத்துக்கும் தங்கத் தகடுகள் வேய்ந்து உதவினார். இவை தவிர 1550இல் நாஞ்சிக்கோட்டைக்கருகில் ஒரு இஸ்லாமிய மசூதிக்கு என ஏழு வேலி நிலத்தை நன்கொடையாக அளித்தார். 1574இல் மாத்வ ஆச்சார்யரான விஜயேந்திர தீர்த்தருக்காக ஒரு கிராமத்தை கொடையாக வழங்கினார். தவிரவும் 1579இல் திருவிளந்துறை எனும் இடத்தில் இருந்த ஒரு புத்த விஹாரத்துக்காக நிலங்களை வழங்கியிருக்கிறார். இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் அனைவருக்கும் தேவையான உதவிகளை இவர் செய்து வந்திருக்கிறார். 

இவருடைய காலத்தில் போர்த்துகீசியர்கள் நம் நாட்டுக்கு வியாபாரம் செய்ய வந்திருந்தார்கள். இவர்கள் தவிர, ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று பல ஐரோப்பிய நாட்டவர்களும் தாங்கள் கால்பதிக்க இடம் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தனர். போர்த்துகீசிய வியாபாரிகளுக்கு இவர் ஆதரவு கொடுத்து இடம் கொடுத்து உதவியிருக்கிறார். பிரான்சிஸ் சேவியர் என்பார் எழுதியுள்ள சுயசரிதையில் சேவப்பர் போர்த்துகீசியர்களுக்குச் செய்த உதவிகளைக் குறித்து எழுதியிருக்கிறார். 

தன்னை தஞ்சாவூருக்கு அரசனாக அனுப்பிய விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு இவர் எப்போதுமே நம்பிக்கைக்குப் பாத்திரராகவே இருந்து வந்தார். அச்சுதப்ப தேவராயருக்கு மட்டுமல்ல, அவருக்குப் பின் பதவிக்கு வந்த சதாசிவ ராயருக்கும் அவருடைய படைத் தளபதியான ராமராஜ விட்டலதேவ மகாராயருக்கும் இவர் உண்மை விசுவாசியாக இருந்தார். இந்தப் படைத் தளபதி திருவாங்கூரை வென்றபின் திருவரங்கம் வந்து மன்னரோடு ஐந்து ஆண்டுகள் வரை இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையை கவனிக்கும்போது சேவப்ப நாயக்கர் விஜயநகர சாம்ராஜ்யப் படைகளுக்கு அவர்களது தெற்கு படையெடுப்பின்போது எல்லா உதவிகளையும் செய்திருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

சேவப்ப நாயக்கர் ஆட்சி பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாவிடினும் அவர் செய்த பொது நன்மைக்கான கொடைகள், தர்ம காரியங்கள் இவை அனைத்தும் காணக் கிடைக்கின்றன. இவர் காலத்தில் நிறைய கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. பல நீர்நிலைகள் செப்பனிடப்பட்டு நீரைத் தேக்க வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. பல ஊர்கள் தானமாகக் கொடுக்கப்பட்டு அங்கெல்லாம் மக்கள் குடியமர்த்தப் பட்டிருக்கின்றனர். தஞ்சை சிவகங்கைக் குளத்தை இவர் செப்பனிட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளித்த வரலாறு தெரியவருகிறது. 

சேவப்ப நாயக்கர் நீண்ட நெடுங்காலம் தஞ்சையை ஆட்சி புரிந்திருக்கிறார். வயது முதிர்ந்துதான் இவர் காலமானார். இவர் வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தான் ஆண்ட தஞ்சாவூர் ராஜ்யத்தில்தான் கழித்தார். இவர் ஆட்சி கி.பி.1532இல் தொடங்கி 1563 வரையில் நடைபெற்றிருக்கிறது. இவர் காலமானது 1580 இவர் பதவி விலகிக் கொண்டு தன் மகன் அச்சுதப்ப நாயக்கரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி நிர்வகிக்கச் செய்த தொண்டு பாராட்டுக்குரியது.

சேவப்பர் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய மகனை யுவராஜாவாக வைத்துக் கொண்டு அவரும் ராஜ்ய பரிபாலனத்தில் முழுமையா ஈடுபட வைத்ததைத் தொடர்ந்து 1563இல் தான் தர்ம காரியங்களைக் கவனிக்க முடிவு செய்து மகனையே ராஜ்யத்தை ஆளும்படி ஏற்பாடு செய்துகொண்டார்.

ராஜ்யத்தை நல்ல முறையில் 1532 முதல் 1563 வரையில் 21 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட திருப்தியில் மன்னர் சேவப்பர் தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியில் ஒரு தொண்டனாக இருந்து செயல்பட்டுவிட்டு 1580இல் காலமானார். இவருடைய அந்திம காலத்தில் இவர் கர்நாடகத்திலிருந்து வந்த வேத பிராமணர் கோவிந்த தீக்ஷிதர் என்பாரை ஒரு அமைச்சராக நியமித்தார். இந்த கோவிந்த தீக்ஷிதர் தஞ்சை நாயக்கர் ஆட்சியில் எத்தகைய மேலான இடத்தைப் பிடித்திருந்தார், என்னென்ன சாதனைகளைப் புரிந்தார் என்பதையெல்லாம் பின்னால் பார்க்கலாம். அச்சுதப்பர் தந்தை நிழலில் இருந்து கொண்டு ஆண்ட நிலை மாறி இப்போது தனித்து ஆட்சிபுரியலானார்.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 6

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள்

தஞ்சாவூர் சோழ நாட்டின் தலைநகராகச் சிறப்புற்று விளங்கிய இடம். கடைச் சோழர்களான விஜயாலயன் பரம்பரை தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுடைய பாரம்பரிய ஆட்சி சோழ நாட்டில் நிலை பெற்றிருந்தது. கடைச்சோழர்கள் வம்சம் 1279இல் முடிவுக்கு வந்துவிட்டது. பிறகு சில காலம் பல்லவர்களின் கீழும், பின்னர் பாண்டியரிடமும் இருந்த சோழ மண்டலம் பல காலம் சரியான ஆட்சி அமையாமலே இருந்தது. அதன் பின் ஹொய்சாளர், நாயக்கர், மராத்தியர் என பலர் ஆண்டபின் 1855 முதல் ஆங்கிலேயர்களின் அதிகாரத்தின்கீழ் வந்தது என்பது வரலாறு கூறும் செய்தி. 

14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சிய சமயம் இங்கு நாயக்கர்களின் ஆட்சி பரவி நிலைத்தது. அது குறித்த சில விவரங்களை இப்போது பார்ப்போம்.

தஞ்சாவூருக்கு இந்தப் பெயர் வரக்காரணமாகக் கூறப்படும் புராண செய்தியொன்று இருக்கிறது. தஞ்சன் எனும் அசுரன் ஆனந்தவல்லி அம்மன் சமேதரான ஸ்ரீ நீலமேகப்பெருமாளால் வதம் செய்யப்பட்டதாகவும், அந்த அசுரன் இறக்கும் தறுவாயில் இவ்வூருக்குத் தன் பெயரையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதனால் இவ்வூர் தஞ்சபுரி அல்லது தஞ்சாவூர் என அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பழைமையை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் மகாபாரதப் போரின் போது பாண்டிய மன்னன் குருக்ஷேத்திரப் போரில் சண்டையிட்ட இரு பிரிவினருக்கும் உணவளி த்ததாகச் சொல்லப்படும் செய்தியொன்று போதும். சோழ நாடு பல தலைநகர்களைப் பல்வேறு காலகட்டத்தில் பெற்றிருந்ததாகத் தெரிகிறது. மனுநீதிச் சோழன் காலத்தில் சோழ நாட்டின் தலைநகர் திருவாரூர். பின்னர் பூம்புகார், உறையூர், பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகியவைகளும் சோழர்களின் தலைநகரங்களாக இருந்து வந்திருக்கின்றன. 

பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பல்லவன் பக்கம் போராடிய சிற்றரசன் விஜயாலயன் போரில் வென்றபிறகு தஞ்சையை ஆண்ட பெரும்பிடுகு முத்தரையனிடமிருந்து தஞ்சையை மீட்டு ஆட்சிபுரியலானான். அப்போது விஜயாலயன் தனது தலைநகரை பழையாறையிலிருந்து தஞ்சைக்கு மாற்றிக் கொண்டான். தன்னுடைய குலதெய்வமான நிசும்பசூதனிக்குத் தஞ்சாவூரில் ஒரு கோயில் எழுப்பி வழிபட்டான். விஜயாலயனின் காலம் கி.பி.846 முதல் 880 வரை. ராஜராஜ சோழன் காலம் வரை தஞ்சை தலைநகரமாக இருந்து, பின்னர் அவரது புதல்வர் ராஜேந்திர சோழன் காலத்தில் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழர்கள் ஆதிக்கம் முடிவடைந்து பாண்டியர்கள் வசம் தஞ்சாவூர் போய்விட்டது. அதன்பின் பல்வேறு ஆட்சியாளர்கள் சிதறிப்போய் ஆங்காங்கே ஆட்சிபுரிந்து வரும் நிலையில் கிருஷ்ணதேவராயரின் விஜயநகர சாம்ராஜ்யம் கோலோச்சத் தொடங்கியது. தென்னாடு முழுவதும் கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சி பரவத் தொடங்கியது. விஜயநகர சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட தென்னிந்தியா முழுவதும் பரவிக் கிடந்தது. ஆங்காங்கே இருந்த பகுதிகளை ஆள நாயக்க மன்னர்கள் தங்கள் ராஜப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். அப்படி அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதிகள் அனைவருமே மன்னரின் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், ராஜ வம்சத்தினரின் உறவினர் களாகவும் பார்த்து அனுப்பப்பட்டனர். உறவினர்களை ஊக்குவிக்காமல் வெளியாரை நம்பினால் என்ன ஆவது, அதனால்தான் உறவினர்களுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு அரசியலில்.

அப்படி அனுப்பப்பட்டவர்கள் விஜயநகரப் பேரரசின் பெயரால் தமிழ்ப் பகுதிகளான மதுரை, தஞ்சாவூர், திருச்சினாப்பள்ளி, செஞ்சி முதலான பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். நாயக்க மன்னர்கள் தாங்கள் ஆண்ட பகுதிகளுக்குத் தங்களுடன் படை வீரர்கள் தவிர, மகா பண்டிதர் களையும், கலை வல்லுனர்களையும் கூட அழைத்துச் சென்றனர். இசையும், கலைகளும் இவர்கள் காலத்தில் செழித்து வளர்ந்தன. இந்தக் குறுநில மன்னர்களும் கலை ஆர்வலர்களாகவும், நன்கு கற்றுத் தேர்ந்த பண்டிதர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

பழைய ஆலயங்களை, சிதிலமடைந்தவற்றை மீண்டும் புதுப்பித்துக் கட்டியும், புதிய பல ஆலயங்களை நிர்மாணித்தும் இவர்கள் அரிய சேவைகளைப் புரிந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்கள், ஆற்றில் மக்கள் இறங்கி நீராட அரிய படித்துறைகள் முதலியன இன்றளவும் அவர்கள் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவரது குமாரர் ரகுநாத நாயக்கர் ஆகியோருடைய காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய சாதனைகளை இன்றும் மக்கள் போற்றிப் பாராட்டுகின்றனர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் ஆட்சி குறித்தும், அவர்கள் செய்த பொதுமக்களு க் கான தொண்டுகள் குறித்தும், நிர்வாகம் இவை பற்றியெல்லாம் விரிவாக முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியிருக்கிறார். தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீடு இது. தஞ்சாவூரின் வரலாற்றைப் பற்றி 'தஞ்சாவூர்', 'திருவாரூர்', தஞ்சை நாயக்கர்கள் வரலாறு, மராத்திய மன்னர்கள் வரலாறு போன்ற செய்திகளை அதிகம் வெளிக் கொணர்ந்தவர் என்கிற முறையில் முனைவர் குடவாயில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

16, 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை சோழ மண்டலம் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின்கீழ் வந்த பகுதிகளுக்கெல்லாம் ராஜப்பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் விஜயநகர மன்னர் பெயரால் ஆட்சி புரிந்தனர். அப்படி தமிழ்ப் பேசும் பகுதிகளில் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், செஞ்சி, மதுரை, திருச்சினாப்பள்ளி ஆகிய பகுதிகள் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவர்களில் மதுரை நாயக்க மன்னர்களும், தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும் சிறப்புக்குரியவர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் காலத்தில் நாடு கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்புற்று விளங்கியிருக்கிறது. சில மன்னர்களும் சிறந்த கலைஞர்களாக இருந்திருக்கின்றனர். பல அற்புதமான கட்டுமான பணிகளையும், ஆலயங் களையும் கட்டுவித்திருக்கின்றனர். சோழ மண்டலத்தில் பரவிக்கிடந்த பல ஆறுகளில் பாலங்களையும், படித்துறைகளையும், பல மண்டபங்களையும் கட்டி வைத்தவர்கள் இவர்கள். நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் செய்த செயற்கரிய பணிகள் என்றென்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். தற்போதைய தஞ்சை அரண்மனை நகரமைப்பு இவை அனைத்தும் நாயக்க மன்னர்களின் கொடை என்றால் மிகையல்ல. அதனைப் பின்னர் மராத்திய மன்னர்கள் விரிவு படுத்தி, புதுப்பித்து வந்திருக்கின்றனர். 

நாயக்கர் வகுப்பில் பலிஜா பிரிவினைச் சேர்ந்தவர்கள் தஞ்சைக்குக் குடியேறிய நாயக்க வம்சத்து மன்னர்கள். முதலில் தஞ்சைக்கு அனுப்பப்பட்ட ராஜப்பிரதிநிதி சேவப்ப நாயக்கர். விஜயநகர த்தை ஆண்ட அச்சுத தேவராயர் என்பவர் கிருஷ்ணதேவ ராயரின் தம்பி. இந்த அச்சுத தேவராயரின் மைத்துனியின் கணவர் இந்த சேவப்ப நாயக்கர். இவரைத் தஞ்சாவூருக்கு ராஜப் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார் மன்னர். ஆரணியில் இருந்த இந்த சேவப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசராக நியமித்து அச்சுததேவராயர் இவரைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார். ஆக, 1535ஆம் ஆண்டில் தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சி வெற்றிகரமாக சேவப்ப நாயக்கர் தலைமையில் தொடங்கியது.

கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே விஜயநகர சாம்ராஜ்யத்தின் சோழ நாடு உள்ளிட்ட கிழக்குப் பிரதேசங்கள் அனைத்துக்கும் வீர நரசிங்கராய சாளுவ நாயக்கர் பொறுப்பில் இருந்து வந்தது. கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு அச்சுததேவ ராயர் காலத்திலும் இந்த வீர நரசிங்கராயர் இருந்திருக்கிறார். சோழ தேசத்துக்கு இவர் பொறுப்பாளராக இருந்திருக்கிறார் என்றால் அச்சுததேவ ராயர் தன்னுடைய சகலையான சேவப்ப நாயக்கரை எதற்காகச் சோழ நாட்டை ஆள, தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கிற ஐயம் எழுவது நியாயம்தான் அல்லவா?

இந்த சந்தேகத்துக்கு "அச்சுதரயாப்யுதயம்" எனும் தெலுங்கு இலக்கியம் பதிலளிக்கிறது. சோழ தேசத்துக்கு பொறுப்பான வீர நரசிங்கராயர் தன்னுடைய இடத்தை வலுப்படுத்திக் கொண்டு அவரே ஒரு சக்கரவர்த்தியைப் போல பலம் பொருந்தியவராக ஆவது விஜயநகர சாம்ராஜ் யத்துக்கே ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கி விட்டது. கிருஷ்ணதேவ ராயரின் ஆணைகளையே பொருட்படுத்தாத அளவுக்கு இந்த வீர நரசிங்கராயர் பலம் பெற்றுவிட்டார். ஆனால் இவரை வழிக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக கிருஷ்ணதேவராயர் காலமாகிவிட்டார். அவருக்குப் பின் அவரது இளைய சகோதரர் அச்சுததேவ ராயர் பதவிக்கு வந்துவிட்டார். அச்சுததேவ ராயரிடமும் வீரநரசிங்கராயர் அடங்கிப் போகவில்லை. அச்சுததேவ ராயரின் ஆணையை இவர் மீறலானார். குறிப்பாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கும், ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும் சமமாக நிலங்களைப் பிரித்து இறையிலியாகக் கொடுக்கச் சொன்னதை இவர் சிவாலயத்துக்கு மட்டும் கொடுத்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. இதனால் ஆத்திரமடைந்த அச்சுததேவ ராயர் வீர நரசிங்கரை பிரதானி பதவியிலிருந்து 1531இல் நீக்கிவிட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வீர நரசிங்க ராயருக்குப் பின்னர் போகையதேவர் எனும் உறையூர் சோழ மன்னர்களின் வாரிசு ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் விஜயநகர மன்னருடைய ஆணைகளை உண்மையாக நிறைவேற்றி அரசரின் அன்புக்குப் பாத்திரமானார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட வீர நரசிங்கராயர் செய்வதறியாது தனித்து விடப்பட்டார். சமயம் பார்த்திருந்து விஜயநகர சாம்ராஜ்யத்துக்கும் அச்சுததேவ ராயருக்கும் எதிராகக் கலகம் செய்து தன்னை ஒரு சுதந்திர மன்னனாக ஆக்கிக் கொள்ளவேண்டுமென்கிற வெறி அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அதற்காக அவர் பல சின்னஞ்சிறு பிரதேச ராஜாக்களிடமெல்லாம் சென்று ஆதரவு திரட்டலானார். மதுரையில் அரசாண்ட விஸ்வநாத நாயக்கர், திருவாங்கூரை ஆண்ட மூத்த திருவடி என அழைக்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா, பரமக்குடியை ஆண்ட தும்பிச்சி நாயக்கர் ஆகியோரை இவர் அணுகினார். இதில் மதுரை விஸ்வநாத நாயக்கர் வீர நரசிங்கருக்கு உதவ மறுத்துவிட்டார். அதனால்தான் மற்ற அரசர்களை அணுகி உதவி கேட்கலானார். 

வீர நரசிங்கராயருக்கு செல்லப்பா என்ற ஒரு பெயரும் உண்டு. தெற்குப் பிரதேச அரசர்களின் ஆதரவைத் திரட்டிய பின்னர் இவருக்கு தெம்பு வந்துவிட்டது. தென்காசியை ஆண்ட பாண்டிய ராஜாவைத் தோற்கடித்தார் இவர். இவருடைய போராட்டம் இப்படி இருந்த போதிலும், பொதுவாக வீர நரசிங்கராயர் சேர நாட்டுக்குத் தப்பியோடியதாகத்தான் பலரும் எழுதுகிறார்கள்.

இந்த விவரங்கள் எல்லாம் விஜயநகரத்துக்குச் சென்று மன்னர் அச்சுததேவ ராயர் காதில் போடப்பட்டுவிட்டன. பார்த்தார் ராயர், இவனை இப்படியே விட்டுவைத்தால் ஒரு நேரத்தில் தமக்கே எதிராகப் போராட இவன் துணிந்தாலும் துணிந்துவிடுவான்; இந்த விவகாரத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டுமென்று எண்ணி ஒரு பெரும் படையோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டுவிட்டார் அச்சுததேவ ராயர். அந்தப் படைக்கு தன்னுடைய சொந்த மைத்துனன் சாளுக்கராஜு திருமலைராயன் என்பவரை தலைவராக நியமித்தார். அந்தப் படை வீரநரசிங்கராயரைத் துரத்திக் கொண்டு சென்றாலும், சாம்ராஜ்யப் படையிடம் அகப்படாமல் தப்பிச் சென்று திருவாங்கூரை அடைந்தார். 

அச்சுததேவ ராயரின் சாம்ராஜ்யப் படை தெற்கு நோக்கி வந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டது. மேலும் தொடர்ந்து அந்தப் படை திருவாங்கூரை நோக்கிச் சென்றது. ஆனால் ராஜா அச்சுததேவ ராயர் திருவரங்கத்திலேயே தங்கிக் கொண்டு அங்கு மகா பண்டிதர்களோடு உரையாடிக் கொண்டு இருந்துவிட்டார், படைகளை மட்டும் தெற்கே அனுப்பிவிட்டு. தெற்கே சென்ற சாளுக்கராஜு திருமலைராயனின் படைகள் அனைவரையும் வென்று வீர நரசிங்கராயரையும், சேர மன்னனையும் கைது செய்து திருவரங்கம் திரும்பியது. சேர மன்னனை பதவி நீக்கம் செய்துவிட்டு மீண்டும் பாண்டியர்களுக்கு ஆட்சியை மீட்டுக் கொடுத்தது. இந்த படுதோல்விக்கு ஆளான திருவாங்கூர் மகாராஜாவின் பெயர் உதயமார்த்தாண்ட வர்மன் என்பதாகும். வீர நரசிங்கராயர் அதன் பின்னர் எந்த பதவியையும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் பெறமுடியவில்லை. அவன் ஆண்ட தஞ்சாவூர் ராஜ்யம் என்னவாகும்? மதுரையில் இருப்பவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரர்களாக இல்லை; தாங்கள் தனி சுதந்திர மன்னர்களாக இருக்க ஆசை கொண்டிருக்கிறார்கள். தஞ்சையும் ஆள்வதற்கு ஆளில்லாமல் இருக்கிறது. இந்த நிலையில்தான் மன்னர் அச்சுததேவ ராயர் தன்னுடைய சகலையான சேவப்ப நாயக்கரைத் தஞ்சைக்கு அனுப்புகிறார். அவர் தஞ்சையில் மதுரையின் நடவடிக்கைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், சாம்ராஜ்யத்துக்கு எதிராக வீர நரசிங்கன் போல எவரும் கலகத்தில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக, வீரத்தில் சிறந்த சேவப்பரை தஞ்சைக்கு நாயக்க மன்னராக அனுப்புகிறார். 

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 5

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 5

அச்சுத தேவ ராயர்.

கிருஷ்ணதேவ ராயரின் மறைவுக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யாதிபதியாக 1529இல் அச்சுத தேவ ராயர் பதவிக்கு வந்தார். இவர் கிருஷ்ணதேவ ராயரின் இளைய சகோதரர். கர்நாடக சங்கீத உலகின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த புரந்தரதாசரின் தந்தையார் இவர் காலத்தில் வாழ்ந்தி ருந்தார். அச்சுத தேவராயருக்குப் பிறகு வாரிசுரிமைப் போர் விஜயநகரத்தில் உருவானது. இறுதியில் இவருடைய தம்பியின் மகன் சதாசிவ ராயர் மன்னராக ஆனார். சதாசிவ ராயர் பதவிக்கு வந்தபோது அவர் சிறுவனாக இருந்தபடியால் ராமராயர் என்பவரின் மேற்பார்வையில் ஆட்சி நடைபெற்றது. இந்த ராமராயர் என்பவர் கிருஷ்ணதேவ ராயரின் மாப்பிள்ளையாவார்.

அச்சுத தேவ ராயர் பதவியேற்ற காலம் ஒன்றும் அவருக்குச் சாதகமாக இல்லை. கிருஷ்ண தேவராயர் காலத்திய நாடு போல இப்போது இல்லை. அமைதி குலைந்து, நிர்வாகம் கலகலத்துப் போயிருந்தது. சாம்ராஜ்யத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகளும், கலகங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. எதிரிகள் இவரது வீழ்ச்சியை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். இந்த சூழ் நிலையில் சாம்ராஜ்யத்தைத் திறமையுடன் வழிநடத்திச் சென்றவர் ராமராயர்.

இவருடைய காலத்தில் பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷா ஏற்கனவே கிருஷ்ணதேவ ராயரிடம் இழந்த தனது நாட்டையும், ரைச்சூர் கோட்டையையும் போரிட்டுத் திரும்பப் பிடித்துக் கொண்டார். எனினும் அவரைப் போலவே தங்கள் நாட்டைப் போரிட்டு மீட்டுவிட துடித்த ஒடிஷா கஜபதி ராஜாவும், கோல்கொண்டா சுல்தானும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை. இந்த நிலையில் அச்சுத தேவ ராயர் தன்னுடைய தளபதி சலகராஜு திருமலை என்பவரின் தலைமை யில் தன்னுடைய படைகளை தெற்கு நோக்கி செலுத்தினார். தெற்குக் கோடிவரை சென்று திருவாங்கூர், உம்மாத்தூர் ஆகிய இடங்களில் போர் செய்து அந்தப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டார். திரும்ப வந்து துங்கபத்திரை நதிக்கு வடக்கிலுள்ள பல இடங்களையும் பீஜப்பூர் சுல்தானிடம் இழந்த ரெய்ச்சூரையும், முட்கலையும் மீண்டும் பிடித்தார்.

இவருடைய ஆட்சி பற்றியும், போர்களில் பெற்ற வெற்றிகள் பற்றியும் சம்ஸ்கிருதத்தில் 'அச்சுதாப்யுதயம்' எனும் நூலும் 'வரதாம்பிகாபரிணயம்' எனும் நூலும் வெளிவந்திருக்கின்றன. அச்சுத தேவ ராயர்தான் மன்னர் எனினும் நிர்வாகத்தைக் கவனித்து வந்த கிருஷ்ணதேவ ராயரின் மருமகன் ராமராயர்தான் உண்மை அரசனைப் போல இருந்து வந்தார். ராம ராயரின் நம்பிக்கைக்கு உகந்தவர்கள் அரசில் பல உயர்ந்த நிலைகளில் அமர்த்தப் பட்டனர். மன்னர் அச்சுத தேவ ராயருக்கும், அண்ணன் மாப்பிள்ளை ராமராயருக்கும் ஏற்படும் சச்சரவுகளைச் சில சமயங்களில் பாமனி சுல்தான்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்கள் எனும் செய்திகளும் கிடைக்கின்றன. இப்படி உள்நாட்டு நிலவரங்களால் நாடு சில சங்கடங்களை எதிர் கொள்ள நேர்ந்தது. ராஜ்யம் வலுவிழக்கத் தொடங்கியது. இவற்றின் உச்ச கட்டமாக 1540இல் ராமராயர் தன் இளைய மாமனாரும், நாட்டின் சக்கரவர்த்தியுமான அச்சுத தேவ ராயரைக் கைது செய்து சிறையிலிட்டு விட்டார். சிறைப்பட்ட அச்சுத தேவ ராயர் இரண்டு வருஷங்கள் கழித்து 1542இல் இறந்து போனார்.

வேங்கடா எனும் வெங்கடராயர்.

அச்சுத தேவ ராயரின் மரணத்தையடுத்து அவருடைய மகன் வேங்கடா எனும் வெங்கடராயர், வெங்கடாத்ரி ராயர் என அழைக்கப்பட்டவர் பதவிக்கு வந்தார். பதவிக்கு வந்த சில காலத்துக்குள் இந்த வேங்கட ராயர் கொலை செய்யப்பட்டார். இதன் பின் அச்சுத தேவ ராயரின் மகன் சதாசிவ ராயர் புதிய அரசராகப் பதவி ஏற்றார். இவருக்கும் ராம ராயரே அமைச்சராக இருந்து ஆட்சி புரிய உதவி செய்தார். மன்னராக இருந்த சதாசிவ ராயர் பொம்மை அரசராக மட்டுமே இருக்க முடிந்தது ராம ராயரே ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தன் கைகளில் எடுத்துக் கொண்டார்.

அச்சுத தேவ ராயர் காலத்தில் விஜயநகரத்தில் திருவேங்கலநாதப் பெருமாளுக்கு ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. இது அச்சுத ராயர் கோயில் என்றே அழைக்கப்பட்டது. 

திருமலை தேவ ராயர்.

1565இல் சதாசிவ ராயருக்குப் பிறகு ராமராயரின் இளைய சகோதரன் திருமலை தேவ ராயர் பதவிக்கு வந்தார். இந்த ராமராயர்தான் கிருஷ்ணதேவ ராயரின் மாப்பிள்ளை என்பதை ஏற்கனவே பார்த்தோமல்லவா, அவருடைய தம்பிதான் இந்த திருமலை. இவர் பதவிக்கு வருவதற்கு முன்பாக அதிகாரத்தில் இருந்த ராமராயர் 1565இல் தலைக்கோட்டை யுத்தத்தில் இறந்து போய்விட்டார். அவர் இறந்த செய்தி அறிந்ததும் விஜயநகரத்து அரச செல்வங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு திருமலை ராயர் குழந்தை குட்டிகளுடன் ஊரை விட்டு ஓடிவிட்டார். அப்படிப் போகும்போது தன்னுடைய குழந்தையான சதாசிவன் என்பனையும் தூக்கிக் கொண்டு போய்விட்டார்.

ஊரைவிட்டு ஓடிய திருமலை பல ஆண்டுகள் பலவிதமான சிரமங்களுக்கு ஆளானார். பின்னர் சிறுகச் சிறுகத் தன் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டு மீண்டும் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆந்திரத்திலுள்ள பெணுகொண்டா எனுமிடத்தில் துவக்கினார். சாம்ராஜ்யத்தின் தலைமை அகமான விஜயநகரத்தில் நடக்கும் இந்த சலசலப்புகளைச் சாக்காகக் கொண்டு தெற்கே மதுரையிலும், செஞ்சியிலும் அரசாண்ட நாயக்கர்கள் தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்து விட்டனர். மற்ற சில நாயக்க மன்னர்கள் விஜயநகர பேரரசின் மேலாண்மைக்குச் சவால் விட்டனர்.

1567இல் திருமலை ராயர் மீது மீண்டும் பீஜப்பூர் சுல்தான் படையெடுத்தார். இந்த முறை பேராசி கொண்ட சுல்தானுக்குத் தோல்விதான் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பீஜப்பூர் ராஜ்யத்தின் சில பகுதிகளையும் இழக்கும்படி நேர்ந்தது. இந்த நேரத்தில் திருமலை ராயர் மிகவும் சாமர்த்தி யமாகத் தங்கள் மேலாதிக்கத்துக்குச் சவால் விட்டுச் சுதந்திர நாடாக இருக்க அறிவிப்பு செய்த சில தெற்கு நாயக்க மன்னர்களை சமாதானப் படுத்தி அவர்களிடம் கப்பம் செலுத்தச் சொல்லி வாங்கிவிட்டார். அப்படி கப்பம் கட்டிய நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்கள், மைசூர் மன்னர் ஆகியோராவர். இவர்களைப் பின்பற்றி மதுரை, செஞ்சி நாயக்கர்களும் தயக்கத்தோடு கப்பம் கட்டத் தொடங்கினர். 

இப்படி திருமலை ராயர் ஓரளவுக்கு விஜயநகரம் இழந்த பெருமைகளை மீட்டெடுத்தார். மன்னர் திருமலை ராயருக்கு மூன்று குமாரர்கள். முதல் மகன் ஸ்ரீரங்கன் பெணுகொண்டாவில் இருந்தான். இரண்டாவது ராம ராயர் இவர் கன்னட ராஜ்யத்துக்கு பொறுப்பு வகித்தார். மூன்றாவது மகன் வெங்கடா 2 இவர் தமிழகத்தில் இருந்த சந்திரகிரிக்குப் பொறுப்பு வகித்தார். இவை அத்தனைக்கும் பெண்கொண்டாதான் தலைநகரம். 1572இல் திருமலை தேவ ராயர் பதவி விலகினார். தனக்கு மிகவும் வயதாகிப் போனதால் இனி ஆட்சி செய்ய முடியாது இனி ஆன்மீகத்தில் ஈடுபட்டு வாழ விரும்பி அதுபோலவே வாழ்ந்து 1578இல் இறந்து போனார்.

இப்படி கிருஷ்ணதேவ ராயரால் புகழின் உச்சிக்குச் சென்ற விஜயநகர சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. திருமலை தேவ ராயருக்குப் பிறகு 14 ஆண்டுகள் ஸ்ரீரங்க ராயரும், 28 ஆண்டுகள் 2ஆம் வெங்கட ராயரும், 1614 ஒரு வருஷம் 2ஆம் ஸ்ரீரங்க ராயரும், 15 ஆண்டுகள் ராம தேவ ராயரும், 10 ஆண்டுகள் 3ஆம் வெங்கட ராயரும், இறுதியாக 4 ஆண்டுகள் 3ஆம் ஸ்ரீரங்க ராயரும் ஆட்சி செய்த பின் விஜயநகர சாம்ராஜ்யம் முற்றிலுமாக முடிவுக்கு வந்தது.

விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையும் காலகட்டத்தில் ஆண்ட முக்கியமான அரசர் 2ஆம் வெங்கட ராயர். இவர் 1586 முதல்1614 வரை ஆண்டவர். இவர் முதலாம் ஸ்ரீரங்க ராயரின் தம்பி. வெங்கட ராயரின் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் சிறப்பாக விளங்கியது. இவர் காலத்தில் தக்ஷிண சுல்தான்களான பிஜப்பூர், கோல்கொண்டா சுல்தான்களுக்குச் சவாலாக விளங்கினார். உள்நாட்டு அமைதியை நிலைநாட்டியவர் இவர். நாட்டின் பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் இவர் பங்கு அதிகம். தமிழ்நாட்டுப் பகுதிகளில் விஜயநகர சாம்ராஜ்யத்துக்கு எதிராகக் கிளம்பிய நாயக்கர்களை அடக்கியதோடு, தெலுங்கு பேசும் பகுதிகளில் பலவற்றைத் தம் ராஜ்யத்தினுள் சேர்த்துக் கொண்டார். இவர் 1592இல் தன்னுடைய சாம்ராஜ்யத்தின் தலைநகரை பெனுகொண்டாவிலிருந்து சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டார். இந்த இடம் திருப்பதிக்கும் தெற்கே சில காத தூரத்தில் உள்ளது. பெனுகொண்டா என்பது இப்போது அனந்தப்பூர் ஜில்லாவில் இருக்கிறது. வேலூர் கோட்டையை இவர் தன்னுடைய இரண்டாவது தலைநகராக வைத்துக் கொண்டிருந்தார். 


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 4

தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 4

கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சி:

ராயர் பழகுவதற்கு இனியவராயினும் நடைமுறையில் நிர்வாக விஷயங்களில் மிகக் கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர். அவருடைய அமைச்சர்களின் பணிகளில் ராயர் கவனமாகப் பார்த்துக் கொண்டார். யாராவது ஏதேனும் தவறு இழைப்பாரானால், கிடைக்கக்கூடிய தண்டனை மிகக் கடுமையானதாக இருந்தது. அவர் காலத்திற்கு முன்பு, திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் வரி செலுத்த வேண்டும் என்று கூட இருந்தது. பல அநியாயமான வரிகளை, இந்தத் திருமண வரி உட்பட பலவற்றை ராயர் நீக்கினார். மக்கள் பட்டினியால் வருந்தக் கூடாது என்பதற்காகவும், விவசாயத்தில் மேலும் ஏராளமானவர்கள் ஈடுபட வேண்டுமென்பதற்காகவும் விளை நிலங்களை அதிகரித்தார். இதற்காக பல புறம்போக்கு நிலங்களையும், காடுகளையும் அழித்து அங்கெல்லாம் விவசாயம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்தார். நீர்ப்பாசன முறைகளை முறைப்படுத்தி எங்கும் எப்போதும் விவசாயத்துக்கும் மக்களின் அன்றாட உபயோகத்துக்கும் பயன்படும்படியாக தன்ணீர் விநியோகம் அமைய வழிவகுத்தார். இதுபோன்ற விஷயங்களில் மன்னரே நேரடியாக கவனித்து ஆகவேண்டிய பணிகளைச் செய்து முடிக்க முன் நின்றார்.

இவர் வைணவ பக்தர் என்றபோதிலும் எல்லா மதத்தினரிடமும் பரிவும் அன்பும் கொண்டி ருந்தார். அந்நிய மண்ணில் தோன்றிய மதவழிபாடுகளான போதிலும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதவழிபாடுகளையும் இவர் போற்றி ஆதரித்தார். இவர் காலத்தில் இங்கு விஜயம் செய்த அந்நிய நாட்டு சுற்றுலாப்பயணிகள் பார்போஸா உட்பட பலரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைப் பற்றியும், மன்னர் கிருஷ்ணதேவ ராயர் பற்றியும் மிக உயர்வாக எழுதியிருக்கிறார்கள். நிர்வாகத் திறமையை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். மக்கள் வளத்தோடும், அமைதியோடும், திருப்தியாகவும் வாழ்ந்ததாக எழுதுகிறார்கள்.

வாழ்நாள் முழுவதுமே போர், வெற்றி பெற்ற பகுதிகளில் நிர்வாகத்தை முறைப்படுத்துதல், மக்களின் நலன்களைக் காத்தல் போன்ற பல கடுமையான பணிகளில் ஈடுபட்டிருந்தபோதும், கிருஷ்ணதேவ ராயர் தான் போரிட்டு வெற்றி பெற்ற பிரதேசங்களை ஒருங்கிணைத்து நாகலாபுரம் எனும் நகரத்தை நிர்மாணிப்பதில் மும்முரம் காட்டினார். ஒரு அயல்நாட்டு பயணி இவருடைய நாட்டில் நிலவிய சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறார். பெரிய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது மிகக் கடுமையாக அமல்படுத்தப் பட்டிருக் கிறது என்பதை அயல்நாட்டுப் பயணிகள் புகழ்ந்து பேசுகின்றனர். மேலும் சில கடுமையான குற்றங்களுக்குக் கால், கைகளை வெட்டுதல், கொலைக்கு மரணம் போன்ற பல தண்டனைகள் இருந்ததாக எழுதுகின்றனர். கொலைக் குற்றத்துக்குத் தலையை வெட்டுதல் என்பது மரண தண்டனை.

விஜயநகரம் மிகப் பெரிய நகரமாக விளங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ரோம் நகரத்தைப் போன்றது என்பது பலரது கருத்து. தலைநகரத்தில் சுமார் ஐந்து லட்சம் ஜனங்கள் வசித் திருக்கிறார்கள். விஜயநகர சாம்ராஜ்யம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாக வசதிக்காக அங்கெல்லாம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜ்யத்தின் அரசாங்க மொழியாக கன்னடமும் தெலுங்கும் இருந்திருக்கிறது. தமிழ் பேசும் பகுதிகளில் கூட அங்கெல்லாம் நாயக்க மன்னர்கள் ஆட்சி தொடங்கிய பின்னர் முதலில் கன்னடம், தெலுங்கு, மராத்தியர் வருகைக்குப்பின் மராத்த்தி ஆகிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருந்திருக்கின்றன. இவர்கள் காலத்தில் தெலுங்கு மொழியில் பல அற்புதமான இலக்கியங்கள் உருவாகியிருக்கின்றன. தெலுங்கு மொழியை உச்சத்துக்குக் கொண்டுபோன பெருமை மாமன்னர் கிருஷ்ணதேவ ராயருக்கே உண்டு.

கிருஷ்ணதேவ ராயர் ஒரு சாம்ராஜ்யாதிபதி மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் அசாத்தியமான அதிகாரமும், மக்கள் மத்தியில் பெரும் புகழும் பாராட்டும் பெற்றவர். நிர்வாகத்தை முழுமையாகக் கவனித்துக் கொண்ட திம்மருசு என்பார் ராஜ்ய நிர்வாகம் மிகச் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். பொதுவாக எல்லா வரலாற்று ஆசிரியர்களும் சொல்லக்கூடிய சிறப்புகள் என்னவென்றால் கிருஷ்ணதேவ ராயர் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு தன் ஆட்சியை நடத்தி வந்தார் என்பதாகும். மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்ட வர் கிருஷ்ணதேவ ராயர். தன்னுடைய ராஜ்யம் முழுவதும் பல முறை சுற்றிச்சுற்றி வந்து மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு நிர்வாகம் செய்தவர் ராயர் என்பது அவர்கள் முடிவு. மக்கள் இவரை சுலபமாக அணுகமுடியும், தங்கள் குறைகளை, வேண்டுகோளை அவரிடம் தெரிவிக்க முடியும், அப்படியொரு எளிமையைக் கடைப்பிடித்திருக்கிறார் இவர். எந்த மதத்தைப் பின்பற்றுபவராயினும் அவரவர் மத வழிபாடுகளை செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு, அது குறித்து யாருக்கும் எந்த தொந்தரவும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவர் கடுமையான விதிமுறைகளை விதித்திருந்தார். மீறுபவர்கள் யாராயிருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். 

ராயர் காலத்தில் கலை இலக்கிய வளர்ச்சி.

விஜயநகர சாம்ராஜ்யம் கிருஷ்ணதேவ ராயர் ஆண்ட காலத்தில் கலைகளும், இலக்கியங்களும் வளர்ச்சி யடைந்தன. குறிப்பாக தெலுங்கு மொழிக்கும், தெலுங்கு இலக்கியங்களுக்கும் அது ஒரு பொற்காலம். தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், தமிழ் புலவர்கள் அவருடைய அவையை அலங்கரித்திருக்கிறார்கள். மன்னர் கிருஷ்ணதேவ ராயரும் பல மொழிகளைப் பேசவும், இலக்கியங்கள் குறித்து விவாதிக்கவும் தெரிந்தவர். அப்படி அவர் பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த காரணத்தால் அவருடைய தாய்மொழி என்பதில்கூட விவாதம் நடைபெற்றி ருக்கிறது, தெலுங்கா, கன்னடமா, துளுவா என்று. அவருடைய அவையை அலங்கரித்த பன்மொழிப் புலவர்கள் ஏராளம் அவர்களில் சிலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அஷ்ட திக் கஜங்கள் எனும் பெயரில் பெரும்புலவர்கள் இருந்ததாகச் சொல்வர். அந்த எட்டு பேர் யாவர் என்பதில் முழுமையான விடை இல்லை. எனினும் சிலரின் பெயர்கள் கிடைக்கின்றன. அவை அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, மாடவியாகரி மல்லண்ணா, துரியாதி, அவ்வால ராஜு ராமபத்ருடு, பிங்களி சுரானா, ராமராஜ பூஷனுடு, தெனாலி ராமகிருஷ்ணா ஆகியோரைச் சொல்லலாம்.

இவர்களில் ஆந்திரா கவிதா பிதாமஹா எனப் பெயர் பெற்றவர் அல்லசானி பெத்தண்ணா என்பவர். நந்தி திம்மண்ணா என்பவர் 'பாரிஜாத அபஹரணமு' எனும் இலக்கியத்தைப் படைத்தவர். 

ஆலய விஜயங்கள்.

ஒரு முறை ராயர் கலிங்கத்துப் போரின்போது விஜயவாடா வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார். விஜயவாடா, கொண்டபள்ளி கோட்டை இவற்றைப் போரிட்டு பிடித்திருந்தார். அப்போது ஸ்ரீகாகுளம் பற்றியும் அங்கிருந்த விஷ்ணு ஆலயம் பற்றியும் கேள்விப்பட்டு அங்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது ஸ்ரீ ஆந்திர விஷ்ணு மன்னருக்குக் காட்சி கொடுத்ததாக ஒரு செய்தி உண்டு. அவர் கண்ட காட்சி பற்றி அவரே சொல்லுகின்ற செய்தி, 'ஸ்ரீகாகுளத்தில் ஆந்திரா விஷ்ணு எனக்குக் கனவில் காட்சி தந்தார். அவர் கருமேகம் போன்ற கருத்த வண்ணத்துடன், கண்கள் இரண்டும் பிரகாசிக்க, முகம் அன்றலர்ந்த தாமரைப் போல விளங்கினார்" என்கிறார். இவர் சிம்மாசலம், அகோபிலம் ஆகிய இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 3


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 3

கிருஷ்ணதேவ ராயர். 

கிருஷ்ணதேவ ராயர் காலம் ஒரு பொற்காலம். இவர் 1509 முதல் 1529 வரை அரசாண்டார். துளவ சாம்ராஜ்யத்தின் மூன்றாவது சக்கரவர்த்தி இவர். இந்த ராஜ்யம் உச்ச கட்ட புகழில் இருந்த காலத்தில் இவர் அரசாண்டார் என்பது கவனிக்க வேண்டிய அம்சம். இந்திய வரலாற்றில் மிகச் சிறந்த சக்கரவர்த்திகள் வரிசையில் வைத்துப் போற்றப்படும் மன்னர்களுள் இவரும் ஒருவர். இவருக்குத்தான் எத்தனையெத்தனை விருதுகள், பட்டங்கள்? "கன்னட ராஜ்யாதிபதி" (Lord of Kannada Empire), மூன்று மன்னர்களுக்கு மன்னர் (Andhra Bhoja and Mooru Rayara Ganda) இப்படிப் பல.

தென்னாட்டில் அப்போது சிறு சிறு ராஜ்யங்களை ஆண்டுகொண்டிருந்த தட்சிண சுல்தான்கள் என அழைக்கப்பட்ட பீஜப்பூர், கோல்கொண்டா, பாமினி சுல்தான்கள், ஒடிஷா ராஜா ஆகியோரை வெற்றி கொண்டு வீராதிவீரராகச் சிறப்போடு விளங்கினார். இவருடைய ராஜ்யத்தில்தான் பெருமைக்குரிய தென்னிந்திய கணிதமேதை நீலகண்ட சோமையாஜி என்பவர் வாழ்ந்திருந்தார். தென்னிந்தியாவில் அரசாண்ட ஹிந்து மன்னர்களில் வலிமை மிக்கவராகக் கிருஷ்ணதேவ ராயர் விளங்கிவந்தார். இவர் காலத்தில் போர்த்துகீசிய பயணிகளாகப் பல வந்திருக்கின்றனர். இவருடைய நிர்வாகத் திறமைக்கு உறுதுணையாக சிறந்த அமைச்சர்கள் விளங்கிவந்தார்கள். 

கிருஷ்ணதேவ ராயர் ஒரு கிருஷ்ண ஜெயந்தியன்று முடிசூட்டு விழாவை வைத்துக் கொண்டார். தலைநகரமாக விஜயநகரம் சீரும் சிறப்போடும் விளங்கியது. அருகிலேயே நாகலாபுரம் எனும் நகரத்தையும் அமைத்துக் கொண்டார். மன்னர் கிருஷ்ணதேவராயர் ஒன்றும் ஆஜானுபாகுவான உடல்வாகு கொண்டவரல்ல. நம் திரைப்பட கதாநயகர்களைப் போல சாதரண தோற்ற முடையவர். எளிதில் அணுகக் கூடியவர், இன்முகமும், உபசரிப்பும் இவருடைய சிறப்புத் தகுதிகள். நாட்டில் குற்றங்களைத் தடுப்பதிலும், குற்றவாளிகளைத் தண்டிப்பதிலும் அதிகப்படியான கடுமையைக் காட்டியவர். சில நேரங்களில் அடக்கமுடியாத கோபத்தையும் இவர் வெளிக்காட்டுவார். 

உடல் ஆரோக்கியத்தை இவர் மிக கச்சிதமாகப் பேணிக் காப்பாற்றி வந்தார். தினமும் நல்ல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எப்போதும் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்ந்தார். நிர்வாகத் திறமை மட்டுமல்லாமல், போர் என்றால் புலிக்குணமும் உடையவராக இருந்ததால் இவரைப் போரில் புலி என்றே புகழ்ந்து வந்தனர். போர் என்றால் தன்னை மட்டும் காத்துக் கொள்ளும் குணமுள்ளவரல்ல இவர், போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களை யெல்லாம் சென்று பார்த்து அவர்களை சிகிச்சைக்கு அனுப்பிவைத்து குணமாகும்வரை கவனித்துக் கொள்ளும் பண்பு உள்ளவர்.

விஜயநகர மன்னர்களிலேயே கிருஷ்ணதேவ ராயர் காலத்தில்தான் அதிகமான போர்களில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவருடைய போர்த் தந்திரம் பற்றி விரிவாகவே எழுதுகிறார்கள். இவர் எந்தவிதமான போர்தந்திரத்தைக் கடைப்பிடிப்பார் என்று சொல்ல முடியாதாம். தோற்கும் நிலையை மாற்றி வெற்றி பெற வைக்கும் சாமர்த்தியம் படைத்தவர் இவர் என்கிறார்கள். இவர் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து ஆண்டுகள் வரை போர்க்களம்தான் இவருடைய இருப்பிடம். சதா போர், முற்றுகை, வெற்றி இப்படிப் போயிற்று அவரது வாழ்க்கை. பாமனி சுல்தான்கள் எனப்படும் தென்னக சுல்தான்கள்தான் இவருடைய பிரதான எதிரிகள். இவர்கள் தவிர ஒடிஷா பகுதியில் ஆட்சி புரிந்து வந்த கஜபதி வம்சத்தாரும் இவரோடு சதாகாலம் போரில் ஈடுபட்டு வந்தார்கள். உள்ளூர் எதிரிகள் போதாதென்று இவர்களுடன் போரிட அப்போது கடல் வழியாக வியாபாரம் செய்ய வந்த போர்த்துகீசியர்களும் சேர்ந்து கொண்டார்கள். கொண்டவீடு ரெட்டிகள் என்போரும் வேறு சிலரும் கூட விஜயநகர மன்னரோடு மோதித் தோற்றுப் போனார்கள்.

தட்சிண சுல்தான்கள் செய்த கொடுமை என்னவென்றால் சமயம் வாய்க்கும் போதெல்லாம் இவர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் எல்லைக்குள் இருக்கும் ஊர்களுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது என்பது அவர்களுடைய பொழுது போக்காக இருந்து வந்தது. இந்த கொடுமை கிருஷ்ணதேவ ராயர் காலத்தில் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 1509இல் அப்படியொரு முறை பீஜப்பூர் சுல்தான் மகமூது விஜயநகர சாம்ராஜ்ய எல்லைக்குள் புகுந்து திவானி எனுமிடத்தில் கொள்ளை அடிக்கும்போது கிருஷ்ணதேவராயரின் படை அவர்களை எதிர்த்துப் போரிட்டு தோற்று ஓடவைத்தார்கள். அந்தப் போரில் சுல்தான் கடுமையாகக் காயமடைந்து தோற்று ஓடிப்போனார். ரெய்ச்சூர் ராயர் வசமானது அங்கு ஆட்சிபுரிந்த யூசுப் அடில்கான் போரில் கொல்லப்பட்டான். இப்படி காலமெல்லாம் கைகள் ஓங்கியிருந்த பாமனி சுல்தான்கள் இந்த தோல்விகளைக் கண்டு கலகலத்துப் போயிருந்த சமயம் பார்த்து கிருஷ்ணதேவராயர் பீடார் மீது படையெடுத்துச் சென்றார். கோல்கொண்டா சுல்தான் ராயரின் அமைச்சர் திம்மருசுவால் தோற்கடிக்கப்பட்டார்.

அடிக்கிற காற்றில் அம்மியும் குழவியுமே பறக்கும்போது, சின்னஞ்சிறு ஆட்சியாளர்கள் ராயர் முன்பு எம்மாத்திரம்? ஒடிஷா கஜபதி ராஜாக்களின் சிற்றரசர்களாக இருந்தவர்கள் அனைவரும் தோற்றோடிப் போனார்கள். கிருஷ்ணா நதிக்கரை வரையிலும் ராயரின் ஆளுமை பரவிக் கிடந்தது. உம்மாத்தூர் ராஜா கங்கராஜு என்பார் ராயரிடம் போரிட்டுத் தோற்றுப் போனார். தோல்வி தந்த அவமானம் 1512இல் அவர் காவிரி நதியில் வீழ்ந்து உயிர் நீத்தார். அவருடைய ராஜ்யம் ஸ்ரீரங்கப்பட்டணத்துடன் இணைக்கப்பட்டது. 1516-17 காலகட்டத்தில் ராயரின் ஆட்சி கோதாவரி நதிக்கரை வரை பரவியது.

ஆந்திர ராஜ்யத்தின் பெரும்பகுதியை ஒடிஷாவின் சூர்யவம்சி கஜபதி ராஜாக்கள் ஆண்டு வந்தனர். ஆந்திரா தெலுங்கானா ஆகிய பகுதிகள் இவர்களுடைய ஆளுமையின் கீழ் அப்போது இருந்தது. ஒடிஷா பகுதி முழுவதும், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் ஆகிய பிரதேசங்களும் அப்போது கஜபதி ராஜாக்கள் வசம் இருந்து வந்தது. உம்மாத்தூர் வெற்றிகளையடுத்து கிருஷ்ணதேவராயர் தன்னுடைய பார்வையை இந்த கஜபதி ராஜா மீது திருப்பினார். அப்போது ராஜாவாக இருந்தவர் கஜபதி பிரதாப ருத்ர தேவ். விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெரும்படை 1512இல் உதயகிரியை முற்றுகையிட்டது. இந்த முற்றுகை சுமார் ஒரு வருஷ காலம் நீடிக்கவே, கஜபதி ராஜாவின் படைகள் உண்ண உணவின்றி பட்டினி கிடக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர். படை வீரர்கள் அவரவர் போரைவிட்டுவிட்டு ஓடத் தொடங்கி விட்டார்கள். ராயரின் அமைச்சர் திம்மரசு கஜபதி ராஜா கோட்டைகளுக்குச் செல்லும் இரகசிய சுரங்கப் பாதைகளைக் கண்டறிந்து உள் நுழைந்து, எதிர்த்து வந்த அந்தக் காலத்திய வாட்போரில் தீரர்களான இளவரசர் வீரபத்ரனோடு போர் புரிந்து வென்றார். தாங்கள் வென்ற பகுதிகளுக்கு திம்மரசுவே கவர்னராக அமர்த்தப்பட்டார். இந்த வெற்றிகளையடுத்து ராயர் கலிங்கத்தின் இதயப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டார்; அத்தோடு கஜபதி ராஜாவின் ஆளுகை முடிவுக்கு வந்தது.

கிருஷ்ணதேவ ராயருக்கு திருப்பதி ஏழுமலையான் மீது பக்தி. தன் மனைவிகளான திருமலாதேவி, சின்னமதேவி ஆகியோருடன் அங்கு சென்று பெருமாளை வழிபட்டிருக்கிறார். தன் மனைவிகளோடு பெருமாளை ராயர் வழிபடுவதுபோன்ற சிற்பத்தை இப்போதும் திருப்பதியில் காணலாம். அந்தக் கால வழக்கப்படி மன்னர்கள் போர் புரிந்து பக்கத்து ராஜ்யங்களுடன் நட்புறவு கொள்வார்கள்; இல்லையென்றால் எதிரிகளாயிருந்தாலும் அவர்களது மகளை, எத்தனை மனைவியர் இருந்தாலும் மேலும் ஒரு மனைவியாகத் திருமணம் செய்து கொண்டு விடுவார்கள். அப்படித்தான் கஜபதி வம்சத்து ராஜா பிரதாபருத்ரன் என்பவர் கிருஷ்ணதேவ ராயருடன் போரிட்டு வெல்ல முடியாமல் தன் மகள் அன்னபூர்ணா தேவியை அவருக்கு மூன்றாவது மனைவியாகத் திருமணம் செய்துவைத்து நட்புறவு கொண்டுவிட்டார். அத்துடன் ஒடிஷாவுடன் நடந்த போரில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு கிருஷ்ணா நதிக்கு அப்புறம் கஜபதி ராஜாக்களும், தென்புறம் விஜயநகர சாம்ராஜ்யமும் நிர்வகித்துக் கொள்வது என்று முடிவாகியது. இந்து மன்னர்கள் இருவருக்கிடையே கடுமையான போர்கள் நடந்த நிலைமை மாறி இருவரும் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்கி நட்பு கொண்டது தெற்கே இந்து அரசர்கள் அரசாள வழிவகை செய்துவிட்டது.

போர்த்துகீசியர்கள் ஐரோப்பாவிலிருந்து இந்த நாட்டுக்கு வாணிபம் செய்து பிழைக்க வந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அனைத்துமே இந்திய மன்னர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். வெடி மருந்துகள், பீரங்கி என்று அவர்களது போர் ஆயுதங்களும், கடற்படையும் இவர்களுக்கு சற்று பயத்தைக்கூட ஏற்படுத்திவிட்டது எனலாம். வீரத்துக்காக அப்படியெல்லாம் இந்திய மன்னர்கள் பயப்படவில்லை என்று வாதம் செய்தாலும் உண்மை அதுதான். அதனால்தானோ என்னவோ கிருஷ்ணதேவ ராயரும் இந்த அன்னிய தேசத்தவர்களை நட்புறவு கொண்டு போரைத் தடுத்துவிட்டனர். இந்தியாவின் மேற்குக்கடற்கரைப் பிரதேசத்தில் ஓரிடத்தை 1510இல் இந்த போர்த்துகீசியர்கள் வந்து தங்கிக் கொண்டு வாணிபம் செய்ய தாரைவார்த்தனர். அந்த இடம்தான் கோவா.

இந்த போர்த்துகீசியர்களிடமிருந்து ராயர் நல்ல அரேபிய குதிரைகளையும், பீரங்கிகள், வெடி மருந்துகள் இவற்றைப் பெற்றுக் கொண்டு தன் படைகளை வலுப்படுத்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய நாட்டில் இருப்பதைப் போல நல்ல சுத்தமான தண்ணீரை மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் வழிவகைகளையும் அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு அவற்றைத் தன் விஜயநகரத்தில் அறிமுகம் செய்தார். 

இப்படி வெளிநாட்டு உறவு ஒரு புறமும், உள்நாட்டுப் போர்கள் தட்சிண சுல்தான்களுடனும் நடந்து கொண்டிருந்தது. கோல்கொண்டா படைகளை ராயர் வெற்றி கொண்டார் அவர்களின் படைத் தளபதியைச் சிறைபிடித்தார். பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷாவைத் தோற்கடித்தார். ராயருடைய போரில் சிகரம் வைத்தாற்போல் அமைந்தது 1520 மே மாதம் 19ஆம் தேதி பீஜப்பூர் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷாவுடன் நடந்த போர்தான். இந்த போரில் விஜயநகரப் படைகள் 16000 வீரர்களை இழந்தது. கடுமையான முற்றுகைக்குப் பின் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூர் கோட்டை பிடிபட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் விஜயநகரப் படைகளின் தளபதியாக இருந்த பெம்மசானி ராமலிங்க நாயுடு என்பவர். இந்த சாதனைக்காக ராமலிங்க நாயுடு விஜயநகர மன்னரால் விருதுகள் முதலியன அளித்து கெளரவிக்கப்பட்டார். இந்த ரெய்ச்சூர் முற்றுகையில் விஜயநகரப் படையில் ஏழு லட்சம் காலாட்படை வீரர்களும், முப்பத்தி இரண்டாயிரத்து சொச்சம் குதிரைப் படையினரும், ஐநூத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட யானைகளும் பங்கு பெற்றனவாம். இந்த யுத்தத்தின் முடிவில் குல்பர்கா கோட்டை தரைமட்டமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. இந்த குல்பர்க்காதான் பாமினி சுல்தான்களின் தலைநகராக விளங்கிய இடம். இந்த வெற்றியை அடுத்து விஜயநகர சாம்ராஜ்யம் தென் இந்தியா முழுவதும் ஏகசக்ராதிபதியாக விளங்கியது.

1524இல் கிருஷ்ணதேவ ராயர் தன்னுடைய மகன் திருமலைராயரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்வித்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அதிக நாட்கள் அவர் உயிரோடு இல்லை, இளமையிலேயே மரணமடைந்து விட்டார். இயற்கை மரணமல்ல, யாரோ விஷம் வைத்து அவரைக் கொன்று விட்டார்கள். யார் இதனைச் செய்திருப்பார்கள் என்று தீர விசாரித்தபின் அமைச்சர் திம்மருசுதான் செய்திருக்க வேண்டுமென எண்ணி மன்னரின் நம்பிக்கைக்கு உகந்த அந்த அமைச்சரின் கண்கள் குருடாக்கப்பட்டன. 

இதற்கிடையே மன்னர் கிருஷ்ணதேவராயர் பீஜப்பூர் சுல்தான்கள் வசம் இருந்த பெல்காமைக் குறிவைத்தார். அதன் மீது படையெடுத்து பெல்காமைத் தங்கள் ராஜ்யத்தோடு இணைத்துக் கொள்ள மன்னர் விரும்பினார். ஆனால் மனிதன் ஒன்று நினைக்க, இறைவன் வேறொன்று நினைக்கிறான். கிருஷ்ணதேவராயர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு வந்த உடல்நலக்கேடு அவர் உயிரை 1529இல் பறித்துக் கொண்டுவிட்டது. காலமெல்லாம் பல மன்னர்களாலும், வீராதி வீரர்களாலும் செய்ய முடியாத காரியத்தை அவருக்கு வந்த வியாதி செய்து முடித்துவிட்டது. இளமையிலும், புகழின் உச்சியிலும், வீரர்கள் போற்றும் இடத்திலும் இருந்த ராயர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

கிருஷ்ணதேவ ராயரின் மறைவுக்குப் பின் அவருடைய இளவல் அச்சுததேவ ராயர் ஆட்சிக்கு வந்தார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீரம் செறிந்த வரலாற்றில் கிருஷ்ணதேவ ராயரின் பங்கு மகத்தானது. அவருடைய ராஜ்யத்தின் பெருமையையும், கலை, கலாசாரம், ஆலயம் ஆகிய வற்றின் மகோன்னதம் இன்றும்கூட ஹம்பி நகரின் இடிபாடுகளில் நம்மால் காணமுடிகிறது.


தஞ்சை நாயக்க மன்னர்கள் பகுதி 2.

                 தஞ்சை நாயக்க மன்னர்கள்  பகுதி 2.

வரலாறு:

விஜயநகர சாம்ராஜ்யம் தோற்றுவிக்கப்பட்டது குறித்து மாறுபட்ட விவரங்கள் சொல்லப் படுகின்றன. கன்னட தேசத்து வரலாற்று அறிஞர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் ஹொய்சாள தேசத்துப் படையில் தளபதியாக இருந்தவர்கள் என்றும் துங்கபத்ரா நதிக்கரையில் வட இந்தியாவிலிருந்து வந்த இஸ்லாமிய படையெடுப்பு களைத் தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்டவர்கள் என்றும் கூறுகிறார்கள். இவர்கள் கன்னட மொழி பேசுபவர்கள் என்பது இவர்களின் கருத்து. ஆனால் வேறு சில வரலாற்றாசிரியர்கள் இவர்களைத் தெலுங்கு மொழி பேசுவோர் என்றும் காகாத்திய வம்சத்தைச் சேர்ந்த இவர்கள் ஹொய்சாளர் களின் வடக்குப் பிரதேசங்களைப் போரிட்டு வென்று ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் என்றும் சொல்கிறார்கள். இவ்விரு பிரிவினரின் கருத்து எத்தகையதாக இருப்பினும் ஒரு விஷயத்தில் இவ்விரு தரப்பாரும் ஒப்புக்கொள்ளும் செய்தி இவர்களை ஊக்குவித்து ஆதரவு கொடுத்தவர் சிருங்கேரி ஆச்சார்ய பீடத்தில் குருவாக இருந்த வித்யாரண்யர் என்பார் என்பதுதான். சிருங்கேரி ஆச்சார்யார் வடதேசத்து அந்நிய படையெடுப்பை தடுத்து நிறுத்த இவ்விரு வீரர்களையும் பயன்படுத்தியதாக இவர்கள் நம்புகிறார்கள். தற்காலத்தில் அகழாராச்சித் துறையினர் இந்தப் பகுதிகளில் கண்டுபிடித்திருக்கும் சான்றுகளிலிருந்து பல அரிய செய்திகள் இந்த ஹரிஹர புக்கர் ஸ்தாபித்த புதிய சாம்ராஜ்யம் பற்றி நமக்குத் தெரியக் கிடைக்கின்றன.

விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து தமிழகமெங்கும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திய நாயக்க மன்னர்கள் பற்றி பார்ப்பதற்கு முன்னதாக இப்போதைய ஆந்திரப் பகுதியில் 14ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை வியாபித்திருந்த பல அரச வம்சங்களைப் பற்றிய மேலோட்ட மான செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் 1336ஆம் ஆண்டு தொடங்கி 1485 வரையில் சங்கம வம்சம் ஆட்சி புரிந்து வந்தது. அவர்கள் ஆட்சி விவரங்களைப் பார்க்கலாம்.

சங்கம வம்சம்
முதலாம் ஹரிஹர ராயர்                  1336 முதல் 1356 வரை
புக்க ராயர்                                         1356 முதல் 1377 வரை
2ஆம் ஹரிஹர ராயர்                       1377 முதல் 1404 வரை
விரூபாக்ஷ ராயர்                              1404 முதல் 1405 வரை
2ஆம் புக்க ராயர்                              1405 முதல் 1406 வரை
தேவ ராயர்                                        1406 முதல் 1422 வரை 
ராமச்சந்திர ராயர்                             1422 மட்டும்
வீரவிஜயபுக்க ராயர்                        1422 முதல் 1424 வரை
2ஆம் தேவராயர்                              1424 முதல் 1446 வரை
மல்லிகார்ஜுன ராயர்                      1446 முதல் 1465 வரை
2ஆம் விரூபாக்ஷ ராயர்                   1465 முதல் 1485 வரை
பிரவுத்த ராயர்                                  1485

சாளுவ வம்சம்
சாளுவ நரசிம்ம தேவ ராயர்            1485 முதல் 1491 வரை
திம்ம பூபாலர்                                    1491
2ஆம் நரசிம்ம ராயர்                         1491 முதல் 1505 வரை

துளுவ வம்சம்
துளுவ நரச நாயக்கர்                        1491 முதல் 1503 வரை
வீர நரசிம்ம ராயர்                            1503 முதல் 1509 வரை
கிருஷ்ணதேவ ராயர்                        1509 முதல் 1529 வரை
அச்சுதேவ ராயர்                               1529 முதல் 1542 வரை
முதலாம் வெங்கட ராயர்                 1542
சதாசிவ ராயர்                                   1542 முதல் 1569 வரை

அரவீடு வம்சம்
அலிவ ராம ராயர்                             1542 முதல் 1565 வரை
திருமலை தேவ ராயர்                      1565 முதல் 1572 வரை
முதலாம் ஸ்ரீரங்கா                            1572 முதல் 1586 வரை
2ஆம் வெங்கடா                               1586 முதல் 1614 வரை
2ஆம் ஸ்ரீரங்கா                                 1614
ராமதேவ ராயர்                                 1617 முதல் 1532 வரை
3ஆம் வெங்கடா                               1632 முதல் 1642 வரை
3ஆம் ஸ்ரீரங்கா                                 1642 முதல் 1646 வரை

14ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றிலிருந்து கிடைக்கும் பல செய்திகளின்படி தக்ஷிணப் பிரதேசத்து சாம்ராஜ்யங்களான தேவகிரியில் இருந்த யாதவர் சாம்ராஜ்யம், வாரங்கலில் இருந்து ஆட்சிபுரிந்த காகாத்திய ராஜ்யம், மதுரை பாண்டிய சாம்ராஜ்யம், இவை தவிர காம்பிலி பிரதேசங்கள் இவைகளின் மீது வட நாட்டிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லாமியப் படையினர் போரிட்டு நாடுகளை அபகரித்துக் கொண்டனர். டில்லியில் அரசோச்சிய அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் ஆகியோர் இத்தகைய படையெடுப்புகளை நடத்தி தெற்கே தங்கள் ஆதிக்கத்தை விஸ்தரித்துக் கொண்டனர். பொதுவாக வடக்கிலிருந்து படையெடுத்து வரும் இவர்களைப் போன்றவர்கள் பிடித்த நாட்டை வைத்து அரசாளும் நோக்கத்தில் வருவதில்லை. இங்குள்ள அளவற்ற செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதுதான் அவர்களின் நோக்கம். ஆனால் முகமது பின் துக்ளக் மட்டும் தனது தலைநகரையே டில்லியிலிருந்து மாற்றி தெற்கே கொண்டு வந்து, பின்னர் மறுபடியும் வடக்கே சென்ற வரலாறு இருக்கிறது.

இப்படி தென்னாடு முழுவதும் டில்லி சுல்தான்கள் வசம் போய்க்கொண்டிருந்த நேரத்தில் இந்த புயலிலும் தப்பிப் பிழைத்துத் தலை நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது கன்னட பிரதேசத்து ஹொய்சாள சாம்ராஜ்யம். ஹொய்சாளர்களின் ஆட்சி, ஆலயங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் இவைகள் இன்றும் இந்த ஹொய்சாள மன்னர்களின் பெருமைகளைப் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களில், 3ஆம் வீர வல்லாள தேவன் காலத்தில் அப்போது மதுரையை ஆண்டுகொண்டிருந்த சுல்தானுடன் போரிட்டுத் தோற்று, போர்க்களத்தில் உயிரையும் விட்டபின் ஹொய்சாள ராஜ்யம் விஜயநகர பேரரசுடன் இணைக்கப்பட்டது.

விஜயநகர சாம்ராஜ்யம் தொடங்கப்பட்டு இருபது வருஷ காலத்திற்குள் முதலாம் ஹரிஹரர் தென்னகத்தில் துங்கபத்திரை நதிக்குத் தென்புறமுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் வென்று தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் காரணமாக "பூர்வபஸ்சிம சமுத்ரதிஷாவர" அதாவது மேலை மற்றும் கிழக்குக் கடல்களின் நாயகன் எனும் விருதினைப் பெற்றார். அதாவது தென் இந்தியாவின் கிழக்குப் பகுதி கடலுக்கும், மேற்குப் பகுதிக் கடலுக்கும் இடைப்பட்ட எல்லா பகுதிகளுக்கும் தலைவன் என்று புகழப்பட்டார்.

கி.பி.1374இல் ஹரிஹர ராயரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த முதலாம் புக்கராயர் ஆற்காட்டு மன்னரையும், கொண்டவீடு ரெட்டிகளையும், மதுரை சுல்தானையும் போரிட்டு வென்றதோடு மேற்கே கோவாவையும், வடக்கே துங்கபத்ரா கிருஷ்ணா நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டினார். இவருடைய முதலாவது தலைநகராக விளங்கிய நகரம் அனகொண்டி என்பது. இது இப்போதைய கர்நாடக மாநிலத்தில் துங்கபத்ரா நதியின் வடகரையில் அமைந்த நகரம். அங்கிருந்து பிறகு அருகிலிருந்த விஜயநகரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த இடம் துங்கபத்திரையின் தென் கரையில் அமைந்துள்ளது. எந்தவொரு சாம்ராஜ்யமும் ஒரு மாபெரும் நதிக்கரையில் அமைந்திருக்கும், அதைப்போல இந்த விஜயநகர சாம்ராஜ்யத்துக்குப் பெருமை சேர்த்தது துங்கபத்ரா நதி.

முதலாம் புக்கராயரின் மகன் இரண்டாம் ஹரிஹர ராயர் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் கிருஷ்ணா நதியையும் தாண்டி தென்னகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தனது சாம்ராஜ் யத்தில் இணைத்துக் கொண்டார். இவருக்குப் பின் பதவிக்கு வந்த முதலாம் தேவராயர் ஒடிஷா பிரதேசத்து கஜபதிகளை வென்று தாங்கள் வென்ற பகுதிகளில் எல்லாம் கோட்டை கொத்தளங் களைக் கட்டியும், விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகளை விரிவு படுத்தியும் பல பணிகளை செய்து வைத்தார்.

இந்த முதலாம் தேவராயரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த 2ஆம் தேவராயர் 1434இல் பதவி ஏற்றார். இவரைச் சங்கம வம்சத்து அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதலாம். இவருடைய காலத்தில் ஆட்சிக்கும் அரசருக்கும் எதிராக நிலப்பிரபுக்கள் உருவாக்கிய புரட்சியையும், கள்ளிக்கோட்டை கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு வந்து குடியேறியிருந்த ஸமோரியர்களையும் அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவர் இலங்கை மீதும், பர்மாவில் ஆட்சி புரிந்து வந்த மன்னர்களையும் படையெடுத்து வென்று தன் ஆளுமையை விரிவுபடுத்தினார். அதன் பிறகு 15ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யம் மெள்ள பலமிழக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விஜயநகர சேனைத் தலவராக இருந்த சாளுவ நரசிம்ம தேவராயர் காலத்திலும், துளுவ நரச நாயக்கர் காலத்திலும் மீண்டும் விஜயநகரம் தலைநிமிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்ந்து இருபது ஆண்டுகள் வரை போராடி விஜயநகரப் படைகள் தங்களுக்கு எதிரான புரட்சிகளைச் சமாளித்து கலகக்காரர்களை அடக்கி வெற்றி கண்டது. முடிவில் துளுவ நரச நாயக்கர் என்பவருடைய மகன் கிருஷ்ணதேவராயர் என்பவர் தலைமையில் விஜயநகர சாம்ராஜ்யம் தென்னாடு முழுவதற்கும் ஏக சக்ராதிபதியாக விளங்கியது. இந்த நிலை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நீடித்தது. இந்த காலகட்டத்தில் இவர்கள் தக்ஷிண சுல்தான்களுடன் அவர்களுடைய படையெடுப்புகளை எதிர்த்துப் பலமுறை போரிடும்படி நேர்ந்தது. கிருஷ்ண தேவராயரின் காலத்தில் விஜயநகர சாம்ராஜ்யம் உன்னத நிலையை எட்டியது. இவர் போரிட்ட அனைத்துப் போர்களிலும் வெற்றி தேவதை இவரையே முத்தமிட்டாள். இவர் தக்ஷிணப் பிரதேசத்தின் வடக்குப் பகுதிகளையும், தெற்குப் பகுதிகளையும் ஆண்ட சுல்தான்களைப் போரில் தோற்கடித்து அதோடு கலிங்கத்தையும் வென்று அதனால் கிடைத்த பரந்த விரிந்த சாம்ராஜ்யத்தை சிறப்பாக ஆண்டுவந்தார். இவர் காலத்தில் பல அரிய நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டன.


Monday, September 22, 2014

தஞ்சை நாயக்க மன்னர்கள் Part 1.

     தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் எனும் தலைப்பில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகளாகத் தஞ்சை மண்ணை ஆண்ட நாயக்க மன்னர்களைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து அளிக்கத் தொடங்குகிறேன். இவர்கள் காலம் சோழ நாட்டுக்குப் பொற்காலம் எனலாம். மகான் கோவிந்த தீக்ஷிதரை அமைச்சராகக் கொண்டு இந்த மன்னர்கள் நான்கே பேர், அதாவது சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆக இந்த ஐந்து பேரும் செயற்கரிய செயல்களை இங்கு செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இவர்களது சாதனைகள் வெளிச்சத்துக்கு வராத காரணம் தெரியவில்லை. இந்த தொடரில் ஓரளவு அவர்களுடைய சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டவிருக்கிறேன்.                               

                                     
    தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் (1532 – 1673) 
                                Part 1.
                                                             
பாரத தேசத்தில் தக்ஷிணப் பிரதேசத்தில் ஒரு மாபெரும் இந்து சாம்ராஜ்யமாக உருவான விஜயநகர சாம்ராஜ்யம் 1336இல் ஹரிஹரர் புக்கர் எனும் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. சங்கம வம்சத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள். தெற்கே இஸ்லாமிய படையெடுப்புகளை எதிர்த்து 13ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தியதன் விளைவாக உருவானதுதான் இந்த சாம்ராஜ்யம். குறுகிய காலத்தில் பல அரிய சாதனைகளைப் படைத்துவிட்டு 1646இல் தக்ஷிண சுல்தான்கள் நடத்திய மாபெரும் படையெடுப்புக்குப் பின் முடிவுக்கு வந்து பிறகு இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. 

விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்ட இதற்கு அதே பெயர் சூட்டப்பட்டது. அது எங்கே எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி எனுமிடத்தில் காணப்படும் வரலாற்று அழிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த இடம் இப்போது உலக பாரம்பரிய இடமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப் பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. நமக்குத்தான் நமது வரலாற்றை உரிய முறையில் பதிவு செய்து வைக்கும் வழக்கம் கிடையாதே. அதனால் நம்மவர்கள் உண்மையான வரலாற்றை எழுதி வைக்காவிட்டாலும், அயல் நாட்டிலிருந்து இங்கு வந்த பயணிகள் சிலர் எழுதி வைத்த வரலாறு இப்போது நமக்குக் கிடைக்கிறது. நம் பாரம்பரிய பெருமைகளை அயல்நாட்டார் எழுதி வைத்த ஆவணங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவலம் நமக்கு ஏற்பட்டது குறித்து நாம் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை. நல்ல காலம் நமது இலக்கிய கர்த்தாக்கள் அப்படி அலட்சியமாக இருந்துவிடவில்லை. அவர்கள் படைத்த இலக்கியங்களில் குறிப்பாக கன்னட மொழி இலக்கியங்களிலிருந்து ஓரளவு இந்தப் பெருமைகள் நமக்குத் தெரிய வருகின்றன. இந்திய அரசு மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் மூலமும் இங்கு தலைதூக்கி நிமிர்ந்து இருந்த ஒரு அரிய சாம்ராஜ்யத்தின் வளத்தையும் செல்வச் செறுக்கையும் வெளிக் கொணர முடிந்திருக்கிறது.

தென்னாடு முழுவதும் இந்த சாம்ராஜ்யத்தின் சுவடுகள் காணக்கிடைக்கின்றன. ஹம்பி எனும் இடமே ஒட்டுமொத்தமாக இவர்களின் பெருமையைப் பறை சாற்றுவதாக உள்ளது. தென்னக மெங்கும் பரவிக் கிடந்த கற்றளி மற்றும் ஆலய கட்டடக் கலை அனைத்தும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் கையாளப்பட்டிருக்கிறது. மற்ற பகுதிகளிலிருந்து பல்வேறு தரப்பட்ட கட்டடக் கலையை ஸ்வீகரித்துக் கொண்டு, மக்களின் பக்தி, இறைவழிபாடு இவற்றையும் ஏற்றுக் கொண்டு ஹிந்து ஆலயங்கள் இவர்களால் எழுப்பப்பட்டன. முற்றிலும் கருங்கற்களால் ஆன ஆலயங்களில் சிற்பங்கள், கலைவடிவங்களைத் தாங்கிய தூண்கள், மரத்திலும், செப்புப் படிமங்களிலும் காணப்படுவன போன்ற நன்கு வழுவழுப்பாக இழைத்த கருங்கற் படிமங்கள் இவர்களது சிறப்புக் கலையம்சமாக பெருமிதத்தோடு காலத்தை வென்று இன்றும் காணக்கிடைக்கின்றன. 

சிறப்பான நிர்வாக முறைகளைக் கையாண்டதாலும், வெளிநாட்டு வர்த்தகங்களைப் பெருக்கி நாட்டின் செல்வத்தைப் பெருக்கியதாலும் இவர்கள் நிர்வாகத் திறமையில் முன்னணியில் இருந்திருக்கும் செய்திகளையும் அறிய முடிகிறது. அனுபவம் தந்த பாடமாக இவர்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பதிலும், விவசாயத்துக்கு நீரைப் பயன்படுத்தும் முறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்த அனுபவத்தின் தொடர்ச்சியாகத்தான் தஞ்சையை அரசாளத் துவங்கிய நாயக்க மன்னர்களில் முதல் அரசரான சேவப்ப நாயக்கர் முதன்முதலாக தஞ்சையில் நீர் மேலாண்மையை நடைமுறைப்படுத்தி நீர்வளத்தைப் பாதுகாத்திருக்கிறார். தஞ்சை நகரம் மேல் திசை மேடாகவும் பிறகு சரிந்து கீழ் திசை பள்ளமாகவும் இருந்ததால், மேற்கில் பெய்யும் மழை நீரைத் தேக்கி வைக்க ஒரு ஏரியைத் தன் பெயரால் நிறுவி, அது நிறைந்ததும் அங்கிருந்து சிவகங்கைக் குளம், பின்னர், ஐயன் குளம், தொடர்ந்து சாமந்தன் குளம் என்று பல குளங்களை நிரப்பியபின் வடவாற்றில் கலக்கும்படி பூமிக்கு அடியில் மண்குழாய் களைப் பதித்து நீரைக் கொண்டு செல்லும் முறையை அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

விஜயநகர அரசர்களும், அவர்களால் நியமிக்கப்பட்ட தென்னாட்டின் மற்ற பல அரசர்களும், கலை உள்ளம் கொண்டவர்களாகவும், இயற்கையின் வசீகரத்தால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் இருந்ததால் இந்த சாம்ராஜ்யத்தில் கலைகளும், இலக்கியமும் தழைத்து வளர்ந்தன. தென்னக சாம்ராஜ்யம் என்று சொல்லுக்கேற்ப இவர்களால் கன்னட, தெலுங்கு, தமிழ், சம்ஸ்கிருத மொழி இலக்கியங்கள் சிறப்புற இருந்தன. கர்நாடக இசை மேம்பட பாடுபட்டு கலைஞர்கள் ஊக்கு விக்கப்பட்டனர். தற்போதைய கர்நாடக இசையின் வடிவம் இவர்களது உழைப்பினால் வெளியானது என்பது சிறப்புக்குரிய அம்சம். இன்னும் சொல்லப்போனால், கர்நாடக இசையைக் கற்றுக் கொள்ளும் பாலபாடத்தை வரையறை செய்ததே ஒரு கன்னட பக்திக் கவியான புரந்தரதாசர் என்பது அறிந்து கொள்ள வேண்டிய செய்தி. தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கர் வீணை இசைப்பதில் வல்லவர். இசை நூலொன்றையும் இவர் இயற்றியிருக்கிறார். இவர் காலத்தில் அமைச்சராக இருந்த கோவிந்த தீக்ஷிதர் சகலகலா வல்லவர். அவருடைய பெருமைகளைத் தனியொரு அத்தியாயத்தில் பார்க்கலாம். இவர்கள் காலத்திய செயல்களும் நடவடிக்கைகளும் இந்தியா முழுவதையும் இணைந்த இந்துக்களின் கலைகள் ஒன்றுபட்டு விளங்குவதற்குக் காரணமாக விளங்கின.