பாரதி பயிலகம் வலைப்பூ

Friday, May 11, 2012

தனுசுவின் தோட்டம்


 புருனெய் கவிஞர் தனுசு தன் தோட்டத்தில் தனிமையில் ஆழ்ந்திருந்த சமயம் அங்கு வந்த பறவைகளும், அணிலும் அவருக்குப் பல சிந்தனைகளை உண்டாக்கின. நாம் பார்த்திருந்தால் ஒருக்கால் அவற்றை அப்போதே மறந்திருப்போம். மகாகவி பாரதிக்குக் குயிலின் பாடல் பொருள் புரிந்ததைப் போல் இந்த மாயப் புட்களும், அணிலும் செய்த செய்கைகளின் பொருள் அவருக்குப் புரிந்தது. அதுவே இந்தக் கவிதை. சுவைத்துப் பார்த்துச் சொல்லுங்கள் கவிஞர் தனுசுவின் கவித்துவத்தை.

என் தோட்டம்
++++++++++++++++

என் தோட்டத்து
த் 
தோழரே தோழியரே
இன்று
என்னை விட்டு விலகுவதேன்?
என் மீது கோபமா
மயக்கம் தரும்
இந்த வசந்தகாலமா?

பளபளன்னு பறக்கும் 
பட்டாம் பூச்சியே 
நீ
படபடன்னு போவதெங்கே?
கை படாத மலரை 
தேடுகிறாயா 
கன்னி பூஜைக்கு 

கரு கருன்னு மின்னும்
குயிலே
நீ 
குக்கூ.....என கூவுவது என்ன?
உன் ஜோடிக்குயிலை 
பாடி அழைக்கிறாயா
காதல் சந்திப்புக்கு.

சொட்ட சொட்ட நிற்கும்
பச்சைக்கிளியே 
நீ
திக்கி திக்கி சொல்வதென்ன? 
ஊர் அசரும் நேரம் 
விருந்து என்கிறாயா 
உன் இச்சைக்கிளிக்கு

சிட்டு சிட்டென்று தாவும் 
சிட்டுக் குருவியே
நீ
துரு துருன்னு ஓடுவதெங்கே? 
துணையை தேடி
ப் 
போகிறாயா 
ராத்திரி உலா போவதற்கு

மரம் விட்டு மரம் ஓடும்
அ
ணிலே
நீ
பயந்து பயந்து சிரம் தூக்குவதென்ன?
தனிமையை
த்  தேடுகிறாயா
கனிந்த காதலைத்  
தனித்துச்  சுவைப்பதற்கு 

தோப்புக்குள் துணைதேடும்
தோட்டக்காரன் உயிர்களே!
என்னை
தட்டிக் கழித்து போவதால்
கோபமில்லை!
துணையோடு சேராத இனமுமில்லை !- 
கொண்டாட வாழ்த்துகள்!

-தனுசு-

Thursday, May 10, 2012


திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயம்

பத்திரகிரியார் பாடல்கள் 
மெய்ஞ்ஞானப் புலம்பல்
காப்பு
முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல
அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்?

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?                           1

நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து
தேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்?               2

தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்கு
வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்?                     3

ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல்
மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்?                                4

மாயாப் பிறவி மயக்கத்தை ஊடறுத்துக்
காயா புரிக்கோட்டை கைக் கொள்வது எக்காலம்?                    5

காயா புரிக்கோட்டை கைவசமாய்க் கொள்வதற்கு
மாயா அனுபூதி வந்துஅடுப்பது எக்காலம்?                                  6

சேயாய்ச் சமைந்து, செவிடு ஊமை போல் திரிந்து
பேய்போல் இருந்து உன் பிரமை கொள்வது எக்காலம்?            7

பேய் போல்திரிந்து பிணம்போல் கிடந்து பெண்ணைத்
தாய்போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்?                       8

கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்?            9

பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து
கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்?                        10

வெட்டுண்ட புண்போல் விரிந்த அல்குல் பைதனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம்?                                11

ஆறாத புண்ணில் அழுந்திக் கிடவாமல்
தேறாத சிந்தைதனைத் தேற்றுவதும் எக்காலம்?                         12

தந்தை, தாய், மக்கள், சகோதரரும் பொய்யெனவே
சிந்தைதனில் கண்டு திருக்கறுப்பது எக்காலம்?                           13

மன்னுயிரைக் கொன்று வதைத்து உண்டு உழலாமல்;
தன்னுயிர்போல் எண்ணித் தவம் முடிப்பது எக்காலம்?              14

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல்;
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்?                     15

உளியிட்ட கல்லும், உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம்?                              16

வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம்?                             17

பட்டுடை பொற்பணியும் பாவனையும் தீவினையும்
விட்டுவிட்டு உன்பாதம் விரும்புவதும் எக்காலம்?                      18

ஆமைவரும் ஆள்கண்டு ஐந்தடக்கம் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம்?                        19

தண்டிகையும், சாவடியும், சாளிகையும், மாளிகையும்
கண்டு களிக்கும் கருத்தொழிவது எக்காலம்?                               20

அத்தன் இருப்பிடத்தை ஆராய்ந்து பார்த்து நிதம்
செத்த சவம்போல் திரிவதினி எக்காலம்?                                      21

ஒழிந்த தருமத்தினை வைத்துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்த பிணம்போல்இ ழிந்து காண்பதினி எக்காலம்?               22

அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து
கெர்ப்பத்தில் வீழிந்து கொண்ட கோளறுப்பது எக்காலம்?        23

கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக் கொள்ளாமுன்
உருப்படுத்தி ஆள உடன்படுவது எக்காலம்?                               24

தூண்டு விளக்கணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தாற்போல்
மாண்டு பிழைத்துவந்த வகை தெரிவது எக்காலம்?                    25

தூரியினில் மீன்போல் சுழன்று மனம் வாடாமல்
ஆரியனைத் தேடி அடிபணிவது எக்காலம்?                                 26

எண்ணூறு யுகமிருந்தும் எய்தாத விடுபெற
வெண்ணீறு பூசி விளங்குவதும் எக்காலம்?                                  27

அவவேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல்
சிவவேடம் பூண்டு சிறந்திருப்பது எக்காலம்?                               28

அண்டருக்காய் நஞ்சருந்தி அம்பலத்தில் ஆடுசிவன்
தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம்? 29

பன்றி வடிவெடுத்துப் பார் இடந்து மால்காணாக்
குன்றில் விளக்கொளியைக் கூறுவதும் எக்காலம்?                     30

தித்திக்கும் தெள்ளமிழ்தை சித்தாந்தத்து உட்பொருளை
முத்திக்கு வித்தை முதல் நினைப்பது எக்காலம்?                          31

வேதாந்தவேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே
ஏகாந்தமாக இருப்பதினி எக்காலம்?                                             32

மற்றிடத்தைத் தேடி என்றன் வாழ்நாளைப் போக்காமல்
உற்றிடத்தைத் தேடி உறங்குவதும் எக்காலம்?                            33

இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய்யெனவே
மன்றுளோர் சொல்லும் வகையறிவது எக்காலம்?                       34

கஞ்சா அபினியுடன் கள்ளுண்டு வாடாமல்
பஞ்சா மிர்தம் பருகுவதும் எக்காலம்?                                           35

செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்?                36

கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்?                               37

ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்?                38

நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?                               39

பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக்
கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்?              40

இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்? 41

உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்?                      42

சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம்?                43

காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்?                        44

சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்?                45

தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்?                            46

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?                          47

கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?                              48

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?                          49

தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?              50

பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்?                         51

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்?                52

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?                              53

பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?                             54

சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம்?              55

மருவும் அயல்புருடன் வரும் நேரம் காணாமல்
உருகுமனம் போல் என் உளம் உருகுவதும் எக்காலம்?              56

தன்கணவன் தன் சுகத்தில் தன்மனம்வே றானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம்?                   57

கூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்
தேடித் தவிப்பவன் போல் சிந்தை வைப்பது எக்காலம்?             58

எவ்வனத்தின் மோகம் எப்படி யுண்டப்படிபோல்
கவ்வனத் தியானம் கருத்து வைப்பது எக்காலம்?                        59

கண்ணால் அருவி கசிந்து முத்துப் போல் உதிரச்
சொன்ன பரம்பொருளை எண்ணுவது எக்காலம்?                       60

ஆகம் மிகவுருக அன்புருக என்புருகப்
போகஅனுபூதி பொருந்துவதும் எக்காலம்?                                  61

நீரில் குமிழிபோல் நிலையற்ற வாழ்வை விட்டுநின்
பேரின்பக் கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம்?     62

அன்பை உருக்கி அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடக்கறுப்பது எக்காலம்?                       63

கருவின் வழி அறிந்து கருத்தைச் செலுத்தாமல்
அருவி விழிசொரிய அன்பு வைப்பது எக்காலம்?                         64

தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்ததேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்?                  65

ஆதார மூலத்தடியில் கணபதியைப்
பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்?                                 66

மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
கண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்?             67

அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்?                 68

மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்?             69

வாயு அறுகோணத்தில் வாழும் மகேச்சுரனைத்
தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்?                   70

வட்டவழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக்
கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்?                           71

உச்சிக் கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி எக்காலம்?                    72

பாராகிப் பார்மீதில் பஞ்சவன்னம் தானாகி
வேராகி நீமுளைத்த வித்தறிவது எக்காலம்?                                73

கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதி எல்லாம்
சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவதும் எக்காலம்?                      74

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?                           75

அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?                      76

அறிவுக் கருவியுடன் அவத்தைபடும் பாட்டை எல்லாம்
பிறிவுபட இருத்திப் பெலப்படுவது எக்காலம்?                            77

பூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமாய்ப்
பேதம் பலவிதமும் பிரித்தறிவது எக்காலம்?                                78

தோன்றாசை மூன்றும் பிரிந்தறிவது எக்காலம்?
ஊன்றாசை வேரை அடிஊடறுப்பது எக்காலம்?                         79


புன்சனனம் போற்று முன்னே புரிவட்டம் போகில் இனி
என் சனனம் ஈடேறும் என்றறிவது எக்காலம்?                             80

நட்ட நடுவில்நின்று நல்திரோதாயி அருள்
கிட்டவழி காட்டிக் கிருபை செய்வது எக்காலம்?                         81

நானே நான் என்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி
நானே வெளிப்படுத்தித் தருவன் என்பதும் எக்காலம்?               82

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே
தொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவது இனிஎக்காலம்?         83

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?                      84

இனமாண்டு சேர்திருந்தோர் எல்லோரும் தாமாண்டு
சினமாண்டு போக அருள் தேர்ந்திருப்பது எக்காலம் ?                85

அமையாமனம் அமையும் ஆனந்த வீடுகண்டு அங்கு
இமையாமல் நோக்கி இருப்பது எக்காலம்?                                 86

கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்?           87

ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?                    88

கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்து
சுட்டுவிடுமுன் என்னைச் சுட்டிருப்பது எக்காலம்?                      89

தோல் ஏணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்
நூல் ஏணி வைத்தேறி நோக்குவதும் எக்காலம்?                         90

வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்
தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்?                              91

காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல்
வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்?                                     92

ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்?                93

இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்?                           94

மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்?                           95

ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல
ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்?                                    96

பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்?                           97

மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று
நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்?                      98

ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித்
தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்?                      99

அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு
மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்?                100

வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று
சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்?                       101

மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்?                            102

எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல்
கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் ?                103

என்னை அறிந்து கொண்டே எங்கோமானோடு இருக்கும்
தன்மை அறிந்து சமைந்திருப்பது எக்காலம்?                                104

ஆறு ஆதாரம் கடந்த ஆனந்தப் பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்?                        105

ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்?                   106

மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்?          107

முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்?                    108

கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?       109

கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம்?                      110

ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்?                   111

நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்?     112

முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்?                           113

சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்?                             114

வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?                 115

எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?    116

அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?      117

நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?                        118

என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?         119

ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?                      120

ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்?               121

காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?          122

பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்?                           123

ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்?          124

ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?                            125

சூதும் களவும் தொடர்வினையும் சுட்டிக் காற்று
ஊதும் துருத்தியைப் போட்டு உனை அடைவது எக்காலம்?     126

ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?                          127

கல்லாய் மரமாய்க் கயலாய்ப் பறவைகளாய்ப்
புல்லாய் பிறந்த சென்மம் போதும் என்பது எக்காலம்?               128

தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் நின் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?              129

தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்?                            130

பாகம் நடு மாறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏகநடு மூலத்து இருத்துவதும் எக்காலம்?                                     131

ஓரின்பம் காட்டும் உயர்ஞான வீதி சென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்பது எக்காலம்?                            132

காரணமாய் வந்து என் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாக் கண்டு புகழ்ந்திருப்பது எக்காலம்?                             133

ஆயும் கலைகள் எல்லாம் ஆராய்ந்து பார்த்ததன்பின்
நீ என்றும் இல்லா நிசம் காண்பது எக்காலம்?                             134

குறியாகக் கொண்டு குலம் அளித்த நாயகனைப்
பிரியாமல் சேர்ந்து பிறப்பறுப்பது எக்காலம்?                              135

மத்தடுத்து நின்ற மருள் ஆடு வார் போல
பித்தடுத்து நின் அருளைப் பெற்றிருப்பது எக்காலம்?                 136

சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?                      137

என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திரநின்
தன்னை அறிந்து தவம் பெறுவது எக்காலம்?                               138

உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?                        139

வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றாப் பொருள் காண்பது எக்காலம்?                   140

பன்னிரண்டு கால்புரவி பாய்ந்து சில்லம் தட்டாமல்
பின் இரண்டு சங்கிலிக்குள் பிணிப்பது இனி எக்காலம்?           141

நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய்
ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?       142

பாற்சுவைப் பூட்டிப் பதியில் வைத்துச் சீராட்டிக்
காற்பசுவை ஓட்டி அதில் கட்டி வப்பது எக்காலம்?                     143

பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல்
நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்?                   144

காமக் கடல்கடந்து கரைஏறிப் போவதற்கே
ஓமக் கனல்வளர்த்தி உள்ளிருப்பது எக்காலம்?                            145

உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டி லே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக்காண்பது எக்காலம்?                          146

வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்?                                        147

பட்டம் அற்றுக் காதற்றில் பறந்தாடும் சூத்திரம் போல்
வெட்டு வெளியாக விசும்பறிதல் எக்காலம்?                               148

அட்டாங்கயோகம் அதற்கப்பாலுக் கப்பாலாய்
கிட்டாப் பொருள் அதனைக் கிட்டுவதும் எக்காலம்?                  149

ஒட்டாமல் ஒட்டிநிற்கும் உடலும் உயிரும்பிரிந்தே
எட்டாப் பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம்?              150

பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்?                          151

ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்?                  152

பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்?              153

ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்?                            154

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?                       155

அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்?                         156

இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்?                        157

ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்?                                    158

என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?                     159

இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்?      160

மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்?                        161

என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்?          162

கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்?                    163

நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?                   164

பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்?              165

கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்?            166

கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்?                          167

அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்?                      168

பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்?                  169

நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?                   170

சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியந்தோற்றத்து அருள் பெறுவது எக்காலம்?                          171

இரும்பினில் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பில் சுவைரசத்தைக் கண்டறிவது எக்காலம்?                      172

கருக்கொண்ட முட்டைதனைக் கடல் ஆமைதான் நினைக்க
உருக்கொண்ட வாறதுபோல்உனை அடைவது எக்காலம்?       173

வீடுவிட்டு பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயும் குறிப்பறிவது எக்காலம்?                              174

கடைந்த வெண்ணய் மோரில் கலவாதவாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்பது எக்காலம்?                     175

இருளை ஒளி விழுங்கி ஏகஉருக் கொண்டாற்போல்
அருளை விழுங்கும்இருள் அகன்று நிற்பது எக்காலம்?               176

மின் எழுந்து மின்ஒடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள் நின்றதுஎன்னுள்ளே யான் அறிவது எக்காலம்?           177

கண்ட புனல்குடத்தில் கதிர் ஒளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவது எக்காலம்?                     178

பூணுகின்ற பொன் அணிந்தால் பொன்சுமக்குமோ உடலை
காணுகின்றஎன் கருத்தில் கண்டறிவது எக்காலம்?                     179

செம்பில் களிம்புபோல் சிவத்தைவிழுங்கி மிக
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம்?              180

ஆவியும் காயமும்போல் ஆத்துமத்தில் நின்றதனை
பாவிஅறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம்?                               181

ஊமை கனாக்கண்டு உரைக்கஅறியா இன்பம்அதை
நாம்அறிந்து கொள்வதற்கு நாள் வருவதுஎக்காலம்?                   182

சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடல்அகன்று போவதென்பது எக்காலம்?                     183

நிட்டைதனை விட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில்விரவி நிற்பது எக்காலம்?                                184

வெட்டவெளி தன்னில்விளைந்த வெறும் பாழ்
திட்டமுடன் கண்டு தெளிவது இனி எக்காலம்?                           185

எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க்
கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்?               186

உண்டதுவும் மாதருடன் கூடிச்சேர்ந்து இன்பம்
கண்டதுவும் நீயெனவேகண்டு கொள்வது எக்காலம்?               187

ஈம்என்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓம்என்று சொன்னதுவும் உற்றறிவது எக்காலம்?                        188

சத்தம் பிறந்த இடம் தன் மயமாய் நின்ற இடம்
சித்தம் பிறந்தஇடம் தேர்ந்தறிவது எக்காலம்?                             189

போக்கு வரவும் புறம்புள்ளும் ஆகிநின்றும்
தாக்கும் ஒரு பொருளைச் சந்திப்பது எக்காலம்?                          190

நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தைதனில் நேர்படுவது எக்காலம்?                          191

அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்?                           192

நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்?                           193

தித்தி என்ற கூத்தும் திருச்சிலம்பின் ஓசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவது இனி எக்காலம்?                       194

நயனத்திடை வெளிபோல் நண்ணும் பரவெளியில்
சயனித் திருந்து தலைப்படுவது எக்காலம்?                                  195

அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்?                        196

மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கதுபோல்
தேனைமிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம்?                        197

பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே
கல் ஆவின் பால்கறப்பக் கற்பது இனி எக்காலம்?                       198

வெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்
கிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம்?                          199

பேரறிவிலே மனதைப் பேராமலே இருத்தி
ஓரறிவில் என்னாளும் ஊன்றி நிற்பது எக்காலம்?                       200

அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து
முத்தி தர நின்றமுறை அறிவது எக்காலம்?                                   201

நான்நின்ற பாசம்அதில் நான்இருந்து மாளாமல்
நீநின்ற கோலம்அதில் நிரவிநிற்பது எக்காலம்?                          202

எள்ளும்கரும்பும் எழில்மலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்று உற்றறிவது எக்காலம்?                             203

அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்பதுபோல்
என்னை வகுத்து உன்னை இனிக்காண்பது எக்காலம்?             204

அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தை வைத்துக் கொண்டு தெரிசிப்பது எக்காலம்?                   205

பிறப்பும் இறப்பும்அற்றுப் பேச்சும்அற்று மூச்சும்அற்று
மறப்பும் நினைப்பும்அற்று மாண்டிருப்பது எக்காலம்?                206

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்துஅறிவை
என்னுள் ஒருநினைவை எழுப்பிநிற்பது எக்காலம்?                     207

ஆசை கொண்ட மாதர் அடைகனவு நீக்கி உன்மேல்
ஓசை கொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம்?                       208

தன்உயிரைக் கொண்டு தான் திரிந்த வாறதுபோல்
உன்உயிரைக் கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம்?         209

சேற்றில் கிளை நாட்டும் திடமாம் உடலைஇனிக்
காற்றில்உழல் சூத்திரமாய் காண்பது இனி எக்காலம்?              210

என் வசமும்கெட்டு இங்கிருந்த வசமும் அழிந்து
தன்வசமும் கெட்டு அருளைச் சார்ந்து இருப்பது எக்காலம்?      211

தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம்?                                      212

என்னை என்னிலே மறந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம்?          213

தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே
உன்னை நினைந்துள்ளே உறங்குவதும் எக்காலம்?                    214

இணை பிரிந்தபோதல் இன்பமுறும் அன்றிலைப்போல்
துணை பிரிந்தபோது அருள் தூல்தொடர்ந்து கொள்வது எக்காலம்? 215

ஆட்டம்ஒன்றும் இல்லாமல் அசைவு சற்றும் காணாமல்
தேட்டம் அற்ற வான்பொருளைத்தேடுவதும் எக்காலம்?           216

முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின் மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்?                         217

கள்ளுண்டவர்போல் களிதரும் ஆனந்தம்அதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்?                      218

நான் அவனாய்க் காண்பதெல்லாம்ஞானவிழியா ல்அறிந்து
தான் அவனாய் நின்று சரண் அடைவது எக்காலம்?                   219

தான் அந்தம் இல்லாத தற்பரத்தின் ஊடுருவில்
ஆனந்தம் கண்டே அமர்ந்திருப்பது எக்காலம்?                            220

உற்ற வெளிதனிலே உற்றுப் பார்த்து அந்தரத்தே
மற்றமற மாய்கை மாள்வது இனி எக்காலம்?                               221

ஏடலர்ந்து பங்கயமும் இருகருணை நேத்திரமும்
தோடணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம்?                222

ஐயாறும் ஆறும் அகன்று வெறுவெளியில்
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம்?                 223

காட்டும்அருள் ஞானக்கடலில் அன்புக் கப்பல்விட்டு
மூட்டும் கருணைக் கடலில் மூழ்குவதும் எக்காலம்?                    224

நான் யாரோ நீ யாரோ நன்றாம் பரமான
தான் யாரோ என்றுஉணர்ந்து தவம்முடிப்பது எக்காலம்?          225

எவர் எவர்கள் எப்படிக் கண்டுஎந்தப்படி நினைத்தார்
அவர் அவர்க்குஅப்படி நின்றாய் என்பது எக்காலம்?                  226

உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தம்அதை
நெற்றிக்கு நேர்கண்டு நிலைப்பது இனி எக்காலம்?                    227

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தாற்போல்
களங்கமற உன்காட்சி கண்டறிவது எக்காலம்?                           228

என்னையே நான் அறியேன் இந்த வண்ணம் சொன்ன தெல்லாம்
முன்னையோர் கைக்கொள்ள முன்பணிவது எக்காலம்?            229

மாயத்தை நீக்கி வருவினையைப் பாழாக்கி
காயத்தை வேறாக்கி காண்பதுஉனை எக்காலம்?                       230

ஐஞ்சு கரத்தானை அடி இணையைப் போற்றிசெய்து
நெஞ்சில் பொருத்தி நிலைபெறுவது எக்காலம்?

பணம்


பணம்

எனக்கு வந்த மின்னஞ்சலில் இருந்த இந்தப் பகுதி ரசிக்கத்தக்கதாக இருந்தமையால் அதை உங்களுக்கும் தருகிறேன். அனுப்பியவருக்கு நன்றி.

Money
 
Workers earn it,
Spendthrifts burn it,
Bankers lend it,
Women spend it,
Forgers fake it,
Taxes take it,
Dying leave it,
Heirs receive it,
Thrifty save it,
Misers crave it,
Robbers seize it,
Rich increase it,
Gamblers lose it,
I could use it.
 
- Richard Armour

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) பாடல்கள்
அருட்புலம்பல் - முதல்வன் முறையீடு

கன்னிவனநாதா, கன்னிவனநாதா!

மூலமறியேன், முடியும் முடிவறியேன்
ஞாலத்துள் பட்டதுயர் நாட நடக்குதடா 1

அறியாமையாம் மலத்தால் அறிவுமுதற் கெட்டனடா !
பிரியா வினைப்பயனால் பித்துப் பிடித்தனடா. 2

தனுவாதி நான்கும் தானாய் மயங்கினடா
மனுவாதி சத்தி வலையி லகப்பட்டனடா 3

மாமாயை யென்னும் வனத்தில் அலைகிறண்டா
தாமாய் உலகனைத்தும் தாது கலங்கிறண்டா. 4

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதடா
பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே. 5

மக்கள்சுற்றத் தாசை மறக்கேனே யென்குதே
திக்கரசாம் ஆசையது தீரேனே யென்குதே. 6

வித்தைகற்கு மாசையது விட்டொழியே னென்குதே
சித்துகற்கு மாசை சிதையேனே யென்குதே. 7

மந்திரத்தி லாசை மறக்கேனே யென்குதே
சுந்தரத்தி லாசை துறக்கேனே யென்குதே. 8

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

கட்டுவர்க்கத் தாசை கழலேனே யென்குதே
செட்டுதலில் ஆசை சிதையேனே யென்குதே. 9

மாற்றுஞ் சலவை மறக்கேனே யென்குதே
சோற்றுக் குழியுமின்னந் தூரேனே யென்குதே. 10

ஐந்து புலனு மடங்கேனே யென்குதே
சிந்தை தவிக்கிறதுந் தேறேனே யென்குதே. 11

காமக் குரோதம் கடக்கேனே யென்குதே
நாமே அரசென்று நாடோறு மெண்ணுதே. 12

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

அச்ச மாங்கார மடங்கேனே யென்குதே
கைச்சு மின்னுமான் கழலேனே யென்குதே. 13

நீர்க்குமிழி யாமுடலை நித்தியமா யெண்ணுதே
ஆர்க்கு முயராசை அழியேனே யென்குதே. 14

கண்ணுக்குக் கண்ணெதிரே கட்டையில் வேகக்கண்டும்
எண்ணுந் திரமா யிருப்போமென் றெண்ணுதே. 15

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா !

அநித்தியத்தை நித்தியமென் றாதரவா யெண்ணுதே
தனித்திருக்கே னென்குதே தனைமறக்கே னென்குதே. 16

நரகக் குழியும்இன்னும் நான்புசிப்பே னென்குதே
உரகப் படத்தல்கு லுனைக்கெடுப்பே னென்குதே. 17

குரும்பை முலையுங் குடிகெடுப்பே னென்குதே
அரும்புவிழியு மென்ற னாவியுண்பே னென்குதே. 18

மாதருருக் கொண்டு மறலிவஞ்ச மெண்ணுதே
ஆதரவு மற்றிங் கரக்கா யுருகிறண்டா. 19

கந்தனை யீன்றருளுங் கன்னிவன நாதா!
எந்த விதத்தினா னேறிப் படருவண்டா. 20

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

புல்லாகிப் பூடாய்ப் புலர்ந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ? 21

கீரியாய்க் கிடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ? 22

பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
வேதனைசெய் தானவராய் வீழ்ந்தநாள் போதாதோ? 23

அன்னை வயிற்றி லழிந்தநாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்தநாள் போதாதோ? 24

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

தாயாகித் தாரமாய்த் தாழ்ந்தநாள் போதாதோ?
சேயாய்ப் புருடனுமாய்ச் சென்றநாள் போதாதோ? 25

நோயுண்ண வேமெலிந்து நொந்தநாள் போதாதோ?
பேயுண்ணப் பேயாய்ப் பிறந்தநாள் போதாதோ? 26

ஊனவுடல் கூன்குருடா யுற்றநாள் போதாதோ?
ஈனப் புசிப்பு லிளைத்தநாள் போதாதோ? 27
பட்ட களைப்பும் பரிதவிப்பும் போதாதோ?
கெட்டநாள் கெட்டே னென்றுகேளாதும் போதாதோ? 28

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நில்லாமைக்கே யழுது நின்றநாள் போதாதோ?
எல்லாரு மென்பார மெடுத்தநாள் போதாதோ? 29

காமன் கணையாற் கடைப்பட்டல் போதாதோ?
ஏமன் கரத்தால் நாலுமிடியுண்டல் போதாதோ? 30

நான்முகன் பட்டோலை நறுக்குண்டல் போதாதோ?
தேன்துளபத் தான்நேமி தேக்குண்டல் போதாதோ? 31

உருத்திரனார் சங்காரத் துற்றநாள் போதாதோ?
வருத்த மறிந்தையிலை, வாவென் றழைத்தையிலை 32

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

பிறப்பைத் தவிர்த்தையிலை; பின்னாகக் கொண்டையிலை,
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை; 33

பாச மெரித்தையிலை; பரதவிப்பைத் தீர்த்தையிலை
பூசிய நீற்றைப் புனையென் றளித்தையிலை. 34

அடிமையென்று சொன்னையிலை, அக்கமணி தந்தையிலை;
விடுமுலகம் நோக்கி யுன்றன்வேட மளித்தையிலை. 35

உன்னி லழைத்தையிலை, ஒன்றாக்கிக் கொண்டையிலை,
நின்னடியார் கூட்டத்தில் நீயழைத்து வைத்தையிலை 36

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஓங்கு பரத்துள் ஒளித்தவடி யார்க்கடியான்
ஈங்கோ ரடியா னெமக்கென்று உரைத்தையிலை; 37

நாமந் தரித்தையிலை, நானொழிய நின்றையிலை,
சேம வருளி லெனைச்சிந்தித் தழைத்தையிலை. 38

முத்தி யளித்தையிலை; மோனங் கொடுத்தையிலை;
சித்தி யளித்தையிலை; சீராட்டிக் கொண்டையிலை; 39

தவிர்ப்பைத் தவிர்த்தையிலை; தானாக்கிக் கொண்டையிலை;
அவிப்பரிய தீயாமென் னாசை தவிர்த்தையிலை; 40

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

நின்ற நிலையில் நிறுத்தியெனை வைத்தையிலை;
துன்றுங் கரணமொடு தொக்கழியப் பார்த்தையிலை; 41

கட்டவுல கக்காட்சிக் கட்டொழியப் பார்த்தையிலை;
நிட்டையிலே நில்லென்றுநீ நிறுத்திக் கொண்டையிலை; 42

கடைக்கண் ணருள்தாடா, கன்னிவன நாதா!
கெடுக்கு மலமொறுக்கிக் கிட்டிவரப் பாரேடா! 43

காதல் தணியேனோ! கண்டு மகிழேனோ!
சாதல் தவிரேனோ! சங்கடந்தான் தீரேனோ! 44

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

உன்னைத் துதியேனோ, ஊர்நாடி வாரேனோ,
பொன்னடியைப் பாரேனோ, பூரித்து நில்லேனோ ? 45

ஓங்காரப் பொற்சிலம்பி னுல்லாசம் பாரேனோ ?
பாங்கான தண்டை பலமணியும் பாரேனோ ! 46

வீரகண்டா மணியின் வெற்றிதனைப் பாரேனோ !
சூரர்கண்டி போற்றுமந்தச் சுந்தரத்தைப் பாரேனோ ! 47

இடையில் புலித்தோ லிருந்தநலம் பாரேனோ !
விடையி லெழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ ! 48

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

ஆனை உரிபோர்த்த அழகுதனைப் பாரேனோ !
மானைப் பிடித்தேந்து மலர்க்கரத்தைப் பாரேனோ ! 49

மாண்டார் தலைபூண்ட மார்பழகைப் பாரேனோ;
ஆண்டார் நமக்கென்று அறைந்து திரியேனோ ! 50

கண்டங் கறுத்துநின்ற காரணத்தைப் பாரேனோ !
தொண்டர் குழுவினின்ற தோற்றமதைப் பாரேனோ ! 51

அருள்பழுத்த மாமதியா மானனத்தைப் பாரேனோ !
திருநயனச் சடையொளிருஞ் செழுங்கொழுமை பாரேனோ ! 52

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

செங்குழியின் துண்டம்வளர் சிங்காரம் பாரேனோ ?
அங்கனியை வென்ற அதரத்தைப் பாரேனோ ! 53

முல்லை நிலவெறிக்கு மூரலொளி பாரேனோ !
அல்லார் புருவத் தழகுதனைப் பாரேனோ ! 54


அகரங் கிடந்தொளிரும் வள்ளைதனைப் பாரேனோ !
சிகர முடியழகுஞ் செஞ்சடையும் பாரேனோ ! 55


கங்கையோடு திங்கள் நின்றகாட்சிதனைப் பாரேனோ !
பொங்கு அரவைத்தான்சடையிற் பூண்டவிதம் பாரேனோ 56

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

சரக்கொன்றை பூத்த சடைக்காட்டைப் பாரேனோ ;
எருக்கறுகு ஊமத்தையணி யேகாந்தம் பாரேனோ ! 57

கொக்கிறகுக் கூடிநின்ற கொண்டாட்டம் பாரேனோ !
அக்கினியை யேந்திநின்ற ஆனந்தம் பாரேனோ ! 58

தூக்கிய காலுந் துடியிடையும் பாரேனோ !
தாக்கு முயலகன் தாண்டவத்தைப் பாரேனோ ! 59

வீசும் கரமும் விகசிதமும் பாரேனோ !
ஆசை அளிக்கு மபயகரம் பாரேனோ ! 60

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அரிபிரமர் போற்ற அமரர் சயசயெனப்
பெரியம்மை பாகம்வளர் பேரழகைப் பாரேனோ ! 61

சுந்தர நீற்றின் சொகுகதனைப் பாரேனோ !
சந்திர சேகரனாய்த் தயவுசெய்தல் பாரேனோ ! 62

கெட்டநாள் கெட்டாலுங் கிருபையினிப் பாரேடா !
பட்டநாள் பட்டாலும் பதமெனக்குக் கிட்டாதோ ? 63

நற்பருவ மாக்குமந்த நாளெனக்குக் கிட்டாதோ ?
எப்பருவ முங்சுழன்ற ஏகாந்தங் கிட்டாதோ ? 64

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

வாக்கிற்து நின்ற மவுனமது கிட்டாதோ?
தாக்கிறந்து நிற்குமந்தத் தற்சுத்தி கிட்டாதோ ? 65

வெந்துயரைத் தீர்க்குமந்த வெட்டவெளி கிட்டாதோ ?
சிந்தையையுந் தீர்க்குமந்தத் தேறலது கிட்டாதோ ? 66

ஆன அடியார்க் கடிமைகொளக் கிட்டாதோ ?
ஊனமற வென்னை வுணர்த்துவித்தல் கிட்டாதோ ? 67

என்னென்று சொல்லுவண்டா? என்குருவே? கேளேடா !
பின்னை எனக்குநீ யல்லாமற் பிறிதிலையே . 68

கன்னி வனநாதா! - கன்னி வனநாதா!

அன்ன விசாரமது வற்றவிடங் கிட்டாதோ?
சொன்ன விசாரந் தொலைந்தவிடங் கிட்டாதோ? 69

உலக விசார மொழிந்தவிடங் கிட்டாதோ?
மலக்குழுவின் மின்னார் வசியாதுங் கிட்டாதோ? 70

ஒப்புவமை பற்றோ டொழிந்தவிடங் கிட்டாதோ?
செப்புதற்கு மெட்டா தெளிந்தவிடங் கிட்டாதோ? 71

வாக்கு மனாதீத வசோகசத்திற் செல்லவெனைத்
தாக்கு மருட்குருவே, நின்தாளிணைக்கே யான்போற்றி. 72


 திருவேகம்பமாலை 

அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1

கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2

கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3

நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4

நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5

பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7

அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9

மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10

வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12

ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13

சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14

பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15

பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16

பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17

வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18

ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19

அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20

நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21

ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22

பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23

நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24

கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25

வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26

ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27

சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28

முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29

பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30

பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31

நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32

சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33

நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34

சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35

விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36

எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37

பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38

கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39

கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40

ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41

வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42

திருவேகம்பவிருத்தம்

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?

2. திருத்தில்லை 
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1

சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2

அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3

ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4

பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6

முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7

காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8

ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9

ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10

ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11

அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12

தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13

உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14

வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15

பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16

தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17

நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18

ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19

அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20
முதலாவது கோயிற்றிருவகவல்
(திருமண்டில ஆசிரப்பா) 
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
அலகைத் தேரி னலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15

தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20

இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25

பீளையு நீரும் புலப்படு மொருபொறி;
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;
சளியு நீருந் தவழு மொருபொறி;
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;
வளியு மலமும் வழங்கு மொருவழி 30

சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,
எனதற நினைவற இருவனை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபர மறஒரு 40

முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45

சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!
இரண்டாவது கோயிற்றிருவகவல் 
காதள வோடிய கலகப் பாதகக்
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10

நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15

மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20

ஈமக் கனலி லிடுசில விருந்து;
காமக் கனலிற் கருகுஞ் சருகு;
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை, காலைக்
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30

அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;
அமையு மமையும் பிரானே, யமையும் 35

இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38

மூன்றாவது கோயிற்றிருவகவல் 
பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5

இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10

ஆண மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15

இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30

புலராக் கவலை விளைமரப் பொதும்பை,
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45

அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50

எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!

நான்காவது கச்சித் திருவகவல் 

திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென வியம்பும்
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமும் சலமும் வழும்புந் திரையும்
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்
வெய்ய வதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
சொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லு நரக வாயில்
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி, கருவிளை கழனி
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70