பாரதி பயிலகம் வலைப்பூ

Monday, January 15, 2018

வரலாறு பேசும் பயணம் பகுதி 28

                       வரலாறு பேசும் பயணம் பகுதி 28
கொடும்பாளூர்.   
     
கொடும்பாளூர் எனும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் விராலிமலைக்கருகில் கிழக்காக சில கி.மீ. தூரம் சென்றால் காணப்படும் சிறு கிராமம். இது ஒரு காலத்தில் சோழ மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாக விளங்கிய வேளிர்குலத் தலைவர்கள் ஆண்ட ஊர். பல வேளிர்கள் இருந்தார்கள், அவர்களில் இங்கிருந்த வேளிர் தலைவன் பெயர் பூதி விக்ரம கேசரி என்றும் அவர் மகள்தான் வானதி என்றும் பொன்னியின் செல்வனில் கல்கி எழுதுகிறார். அந்த ஊருக்குள் நுழையும்போதே ஒரு சிறு கோயில் அதன் வாசலில் ஒரு பெரிய நந்தி. இதென்ன அதிசயம் என்று கிட்டே போய் பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த கோயில் ஒரு நாயன்மாருக்கானது. நந்தி எங்கோ கிடைத்ததாம், அதைக் கொண்டு வந்து இங்கே வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து ஊருக்குள் சென்றால் அங்கு பரந்து விரிந்து கிடக்கும் வெட்ட வெளிக்கு நடுவில் நாங்களும் இருக்கிறோம் என்று இரு கற்றளிக் கோயில் காணப்படுகிறது. அது தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருபவை. தூரத்தில் தொல்லியல் துறை காவலர் ஆழ்துளைக் கிணற்றில் நீரெடுத்து நீராடிக் கொண்டிருந்தார். இரு பெண்கள் அங்கிருந்த புல்வெளியைச் சரிசெய்து கொண்டிருந்தனர். பாரதி இயக்கத்தினர் சென்று அவ்விரு கற்றளியையும் பார்த்தபின் அருகில் ஒரு கிணறு இருப்பதைப் பார்த்தனர். தண்ணீர் இல்லை, ஆனால் அருகில் ஒரு பள்ளம், அதில் படிகள் அந்தப் படிகள் வழியாக நுழைந்து சென்றால் கிணற்றின் அடிக்குச் செல்லலாம். பிரேமசாயியும் ரமேஷ் நல்லுவும் கூடவே வந்தவர்களைக் காணோம் என்று தேடினால், இருவரும் கிணற்றினுள் படிகள் வழியாக இறங்கி நிற்கின்றனர்.

அருகில் மிகப் பரந்து விரிந்த புல்வெளியுடன் கூடிய புதிய பூங்கா அமைத்திருக்கின்றனர். கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தினுள் இருக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். இந்த ஊர் எவ்வளவு பழமையான ஊர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த ஊரின் பெயர் சிலப்பதிகாரம் காப்பியத்திலும் வருகிறது. கோவலன் கண்ணகி இருவரும் கவுந்தி அடிகளுடன் பூம்புகாரிலிருந்து உறையூர் வந்து அங்கிருந்து மதுரை செல்லும் வழியில் கொடும்பை எனும் ஊரை அடைகின்றனர். அந்த கொடும்பைதான் கொடும்பாளூர். பெரிய புராணத்தில் இவ்வூர் கோநாட்டுக் கொடிநகரம் என்று குறிப்பிடப்படுகிறது.

இங்கு அரசாண்டவர்கள் வேளிர் என்றோமல்லவா? இந்த வேளிர் குலத்தை தமிழ் இலக்கியங்களில் இருக்குவேள் என்கின்றனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை புதுக்கோட்டையை அடுத்த திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களை முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். முத்தரையர்கள் வடக்கில் இருந்த பல்லவர்களோடும், தெற்கில் இருந்த பாண்டியர்களோடும் மாற்றி மாற்றி நட்பு கொண்டிருந்தனர்.
இவர்களுக்குள் நடந்த பல சண்டைகள் 8ஆம் நூற்றாண்டில் இந்த கொடும்பாளூரில் நடந்திருக்கின்றன. மதுரையை 740 முதல் 765 வரை ஆண்ட மாறவர்மன் ராஜசிம்மன் என்பான் பல்லவ மன்னன் நந்திவர்மனைப் போரில் தோற்கடித்தான். அந்தெ வெற்றி இந்த கொடும்பாளூரில் பெற்றதாகத் தெரிகிறது. முத்தரையர்களின் தலைவன் பெயர் பெரும்பிடுகு சுவரன்மாறன். இவன் பாண்டியர்களையும் சேரர்களையும் வென்றதாக வரலாறு இருக்கிறது.

கி.பி.880இல் திருப்புறம்பியம் எனுமிடத்தில் நடந்த பெரும் போரில் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் கடுமையான யுத்தம். அதில் பல்லவர்களுக்கு உறுதுணையாக இருந்த சோழ மன்னன் விஜயாலய சோழன். பாண்டியர்களுக்குத் துணையாக இருந்தவன் முத்தரையர் மன்னன். பல்லவன் முத்தரையர் ஆண்ட நாட்டைச் சோழர்களுக்குக் கொடுத்துவிடுகிறான். விஜயாலயன் முதலாகக் கடைச்சோழ மன்னர்கள் ஆளத் தொடங்குகிறார்கள். அதுவரை செந்தலையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முத்தரையர்கள் தோற்றுப் போகிறார்கள். அது முதல் வேளிர்கள் சோழர்களின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தலைநகரம் கொடும்பாளூர்.
கொடும்பாளூரை ஆண்ட வேளிர்களை இருக்குவேளிர் என்கின்றனர். இவர்களது பங்கு சோழ சாம்ராஜ்யத்தில் மிக முக்கியமாக இருந்திருக்கிறது. கர்நாடகத்திலுள்ள துவாரசமுத்திரத்திலிருந்து வந்த யாதவ வம்சம்தான் வேளிர்கள் என்கிறது ஒரு செய்தி. அறுபத்தி மூவரில் ஒருவரான இடங்கழி நாயனார் என்பார் இந்த வேளிர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய கோயில் வாசலில்தான் பெரிய நந்தியைப் பார்த்தோம் என்று சொன்னோம்.
                    
                             இடங்கழி நாயனார் கோயிலும், பெரிய நந்தியும்


கொடும்பாளூரில் கருங்கல்லால் ஆன பல சிறு கோயில்கள் இருக்கின்றன. பல கோயில்கள் இருந்ததற்கான அடையாளங்கள் இருந்தபோதும் மூவர் கோயில் எனப்படும் முசுகுந்தேஸ்வரர் கோயில் சிறப்பானதாக இருந்திருக்கிறது. ஐவர் கோயில் என்ற தொகுப்பும் அங்கே காணப்படுகின்றது. மூவர் கோயில், ஐவர் கோயில் ஆகிய இவ்விரண்டும் தான் இவ்வூரின் பழமையை, பெருமையை இன்றும் பறைசாத்திக் கொண்டிருக்கிறது.
                          To be continued...............

No comments: