பாரதி பயிலகம் வலைப்பூ

Sunday, June 4, 2017

"நன்னெறி" Part VI

"நன்னெறி" பாடலின் 26ஆம் பாடல் முதல் 30ஆம் பாடல் வரையில் பாடல்களையும் அதற்கான விளக்கங்களையும் இந்தப் பதிவில் படிக்கலாம். தொடர்ந்து மீதமுள்ள பாடல்களும் வெளிவரும்.

26. உருவத்தால் சிறியவரும் அறிவினால் பெரியவராவார்
உடலின் சிறுமைகண்டு ஒண்புலவர் கல்விக் 
கடலின் பெருமை கடவார்; - மடவரால்!
கண்ணளவாய் நின்றதோ?  காணும் கதிரோளிதான்
விண்ணள வாயிற்றோ?  விளம்பு.

இளங்காரிகையே! ஆகாயத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் கதிரவனின் ஒளி கண்களுக்கு மட்டுமா தெரிகிறது? அல்லது பரந்த வெளிகொண்ட ஆகாயம் முழுவதுக்கும் தெரிகிறதா? சொல்.

அதுபோல நன்குக் கற்றுத் தேர்ந்த புலவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் சிறிய உருவம் படைத்தவரேனும் அவரை உருவம் சிறியது என்பதால் அவர் அறிவிலும் குறைந்தவர் என்றா எண்ணமுடியும்? அப்படிப்பட்டவர்கள் தங்கள் அறிவினால் சிறந்து விளங்குவதோடு பெரியவர்களாகக் கருதப்படுவார்கள், உருவம் போல சிறியவர் என்று எண்ணுதல் பேதமை.

27. அறிஞர்கள் கைம்மாறு வேண்டாமல் உதவுவார்கள்
கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தித் 
தம்மால் இயலுதவி தாம்செய்வர்; - அம்மா!
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
விளைக்கும் வலியனதாம் மென்று.

குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்தே பற்கள் முளைக்கின்றன. ஆனால் வாயில் சுவை அறியும் சக்தி நாவுக்குத்தான் உண்டே தவிர பற்களுக்குக் கிடையாது. ஆனால் அந்தப் பற்கள் வாயிலிடும் உணவுப்பொருட்களை நன்குக் கடித்து, அரைத்துத் தூளாக்கி நாவுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. அதற்காக நாவிடமிருந்து அது எந்த பதிலுதவியையும் எதிர்பார்க்கவில்லை அல்லவா? அதாவது பல் சுவையைத் தான் உணராவிட்டாலும் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் நாவுக்கு சுவையை அளிப்பதுபோல் கற்றறிந்த பெரியோர்கள் தன்னை வருத்திக் கொண்டாவது தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது பிறரிடம் இருந்து எந்தவித பதில் உதவிகளையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

28. அறிவுடையோர் கோபத்திலும் உதவுவார்
முனிவிலும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவிலும் நல்கார் கயவர்;  - நனிவிளைவில் 
காயினும் ஆகும் கதலிதான்;  எட்டிபழுத்து
ஆயினும் ஆமோ அறை.

வாழை மரத்தில் காய்த்துப் பழமாக ஆனாலும் உண்ணப் பயன்படும், அது காயாக இருந்தாலும் கறி சமைத்து உண்ணப் பயன்படும். ஆனால் எட்டி இருக்கிறதே அது காயாக இருந்தாலும் சரி, அல்லது அது பழுத்திருந்தாலும் சரி, உண்ணப் பயன்படாது காரணம் அதன் கசப்புச் சுவை அப்படிப்பட்டது.

மேலோர்கள் மூதறிஞர்களாக இருப்பவர்கள் மனமகிழ்ச்சியோடு இருந்தால்தான் கொடுப்பர் என்பதில்லாமல் அவர்கள் கோபமாக இருந்தாலும், பிறருக்குத் தேவையை மகிழ்வோடு நல்குவர். ஆனால் கீழோர் மனமகிழ்ச்சியில் இருந்தாலும்கூட எதையும் பிறருக்குத் தந்து உதவ மாட்டார்கள்.

29. ஆண்டவனின் அடியார்கள் எதற்கும் அஞ்சார்
உடற்கு வருமிடர் நெஞ்சோங்கு பரத்துற்றோர்
அடுக்கும் ஒருகோடியாகநடுக்கமுறார்; 
பண்ணின் புகலும் பனிமொழியாய்!  அஞ்சுமோ
மண்ணில் புலியைமதி மான்.

இனிய இசைபோல பேசுகின்ற பெண்ணே!  பூமியில் புலியொன்று நின்று கொண்டிருக்கிறது. வானத்திலுள்ள நிலவு பூமியெங்கும் பார்க்கக்கூடியது அல்லவா? அந்த நிலவில் இருக்கும் மான்போன்ற உருவம் பூமியில் நிற்கும் இந்தப் புலியைக் கண்டா பயப்படும்?

அதுபோல இறைவனிடம் தன் உடல் பொருள் ஆவி நெஞ்சம் அனைத்தையும் ஒப்புவித்துவிட்ட அடியார்கள் தன் உடலுக்கு கோடிக்கணக்கில் துன்பங்கள் வந்தாலும் அதற்காக அஞ்சுவார்களா என்ன? மாட்டார்கள் அல்லவா.

30. உயிர் நீங்குமுன்பாக அறம் செய்திடுக.
கொள்ளுங் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன்
உள்ளம் கனிந்தறம்செய் துய்கவே - வெள்ளம் 
வருவதற்கு முன்னர் அணைகோலி வேயார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.

மழைகாலம், ஆற்றில் நீர் நிரம்பப் போய்க்கொண்டிருக்கிறது. ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் வெள்ளம் அதிகமாகி பெருவெள்ளமாக வரப்போகிறது. அப்படி வரும் வெள்ளம் கரையை உடைத்து ஊருக்குள் வந்துவிட்டால் குடியிருக்கும் மக்கள் நிலை என்னவாகும்? அதனால் சூழ்நிலையை உணர்ந்து வெள்ளம் வருகின்ற அறிகுறிகள் தென்படும்போதே கரை உடையா வண்ணம் அணைபோட்டுத் தடுப்பதே புத்திசாலித்தனம். அதைவிட்டு வெள்ளம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் என்ன நேரிடும்? வெள்ளத்தில் அனைவரும் போகும்படி ஆகிவிடும்.


அதுபோல பிறந்தோர் அனைவரும் ஒரு நாள் இறந்தே தீரவேண்டும். அப்படி உயிர் போகும் நாள் வரை ஒரு தர்ம காரியமும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதை விட, ஒரு நாள் நாம் போகத்தான் போகிறோம், அதற்கு முன்பாக பிறர் வாழ நல்ல தர்மங்களைச் செய்து நற்கதியடைய முயற்சி செய்ய வேண்டும்.

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தொடர்ந்து வாசிக்கிறோம். பயனுள்ள பதிவு. நன்றி.