பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, December 14, 2016

புதுக்கோட்டை மன்னர்களின் திவான்கள்.


திவான் சர் அமராவதி சேஷையா சாஸ்திரி KCSI (1828 மார்ச் 22 – 1903 அக்டோபர் 29).

இவர் சேஷையா சாஸ்திரி என்று மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக அறிமுகமாகி இருந்தார். இவர் இந்திய நிர்வாகத் துறையில் சேர்ந்து திருவாங்கூர் சமஸ்தானத்து திவானாக இருந்து வந்தார். 1872 மே மாதம் முதல் 1877 மே மாதம் வரையில் இவர் திருவாங்கூரில் இருந்தார்.  
அங்கிருந்து இவர் புதுக்கோட்டைக்கு  வரவழைக்கப்பட்டு 1878 முதல் 1894 வரையிலும் பதவி வகித்தார். புதுக்கோட்டையை ஒரு முன்மாதிரி சமஸ்தானமாக ஆக்கி நிர்வாகத்தைச் சீர்படுத்தி, புதுக்கோட்டை நகரத்தைப் புதுப்பொலிவுடன் திகழச் செய்த பெருமை இவரையே சாறும். இன்றைக்கும் பார்த்து வியப்படையச் செய்யும் விதத்தில் நகரமைப்பு கொண்ட நகரம் புதுக்கோட்டை.

அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் அமராவதி எனும் கிராமத்தில் 1828ஆம் ஆண்டு ஒரு ஆசாரமான இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் சேஷையா சாஸ்திரி. அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது இவரது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அங்கு தன் பள்ளிக் கல்வியையும், கல்லூரிப் படிப்பையும் முடித்துக் கொண்டு 1848ஆம் வருஷம் பட்டதாரியானார். இவர் கல்வியில் தலைசிறந்த மாணவராகவே இருந்தார்.

படித்து முடித்த அதே 1848ஆம் ஆண்டில் இவர் ரெவின்யூ இலகாவில் ஒரு குமாஸ்தாவாகவே பணிக்குச் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து தாசில்தார், சிரஸ்ததார், தலைமை சிரஸ்ததார் ஆகிய பதவிகளை வகித்தார். 1872ஆம் ஆண்டு சேஷையா சாஸ்திரி திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு திவானாக நியமிக்கப்பட்டு அங்கு அவர் 1872ஆம் ஆண்டு முதல் 1877 வரை பணியாற்றினார். அப்போது அங்கு நிலவிய சில பிரச்சனைகளால் இவர் வேலையை விட்டு நீங்கினார். புதுக்கோட்டையில் இவர் திவானாக 1878 முதல் 1886 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றினார். திவான் எனும் பதவிப் பெயரிலும், பின்னர் திவான், ரிஜெண்ட் எனவும் 1886 முதல் 1894 வரையிலும் பணியாற்றினார். புதுக்கோட்டை நகரை நான்கு திசைகளிலும் முக்கிய வீதி என்றும், அடுத்தடுத்து முதல், இரண்டு, என்று வரிசைப்படுத்திய வீதிகளை அமைத்து நடுவில் அரண்மனை, ஆலயம், பல்லவன் குளம் இருக்கும்படியாக நகரமைப்பை உருவாக்கியதோடு, மேட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே அமைந்துள்ள குளங்களில் தேக்கி, அங்கிருந்து கால்வாய் அமைத்து மற்றொரு குளம், எல்லாம் நிரம்பிய பின் எஞ்சிய நீர் புதுக்குளம் எனும் மாபெரும் குடிநீர் குளத்துக்கு எடுத்துச் செல்லும் வடிவமைப்பைச் செய்தார். இந்த புதுக்குளம் என்பது மிகப் பெரியது, குடிநீருக்குப் பயன்பட்டது, அதை இவர் காலத்தில்தான் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. புதுக்குளம் என்பது அனைவரும் பார்த்து அதிசயிக்கத் தக்க வகையில் அமைந்த மாபெரும் ஏரி போன்றது. நான்கு புறமும் காவலர்கள் நியமிக்கப்பட்டு அதன் தூய்மை காப்பாற்றப்பட்டது, அதன் நீர் குடிநீராக பெருமையோடு புதுக்கோட்டை மக்கள் உபயோகிக்கவும் செய்தனர். இவருக்கு 1902ஆம் ஆண்டில் Knight Commander of the Order of the Star of India எனும் உயரிய விருதை அளித்து பிரிட்டிஷ் அரசாங்கம் இவரை கெளரவித்தது.

சேஷையா சாஸ்திரியார் முன்பே குறிப்பிட்டபடி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அமராவதி எனும் ஊரில் 1828 மார்ச் 22ஆம் நாள் ஒரு வைதீகக் குடும்பத்தில் ஆறு பிள்ளைகளில் கடைசி பிள்ளையாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் அந்நாளில் வைதீக பிராமணர்களுக்கே உரித்தான வறுமைச் சூழ்நிலையில் பிறந்து, வறுமையின் பிடியில் தவித்த குடும்பம் அது. இவரது இளமைக் காலத்தில் படிப்பதற்கே பொருளாதார நிலை இடம் கொடுக்காமல் இருந்த காலம். ஆகையால் இளம் வயதில் இவர் உறவினர் கோபால ஐயருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சென்னையில் இவர் தனி ட்யூஷன் வைத்து தமிழ் மொழியைப் பயின்றார். ஆங்கிலக் கல்விக்கு போர்த்துகீசியர்கள் நடத்திய ஃப்ரான்சிஸ் ரோட்ரிகோ பள்ளியில் சேர்ந்தார். 1837இல் இவர் ஸ்காட்லாந்துக் காரரான ஜான் ஆண்டர்சன் நடத்திய பள்ளியில் சேர்ந்தார். இந்தப் பள்ளிதான் பிற்காலத்தில் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜாக ஆனது.  1839இல் சென்னை கவர்னராக இருந்த லார்டு எல்பின்ஸ்டன் என்பார் சென்னையில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க முயற்சி எடுத்தார். இப்படி ஐரோப்பியர்கள் நடத்திய பள்ளிகளில் பயின்ற காரணத்தால் இளம் பருவத்திலேயே பைபிளின் பல பகுதிகளை மனப்பாடமாகச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இதன் காரணமாக ரெவரெண்ட் ஆண்டர்சன் என்பாருக்கு இவர் ஆதர்ச மாணவராகத் திகழ்ந்தார். 1840ஆம் வருஷம் ரெவரெண்ட் ஆண்டர்சன் மீது மதமாற்றத்தில் ஈடுபட்டமைக்காக ஒரு வன்முறை எதிர்ப்பு கிளம்பியபோது, சென்னை மாகாண அரசாங்கம் ஒரு குழுவினை அமைத்து, தொடக்கக் கல்விக்கும், உயர்நிலைக் கல்விக்குமான ஒரு அமைப்பை உருவாக்கியது. 1841இல் சேஷையா சாஸ்திரி இந்த தொடக்கக் கல்விப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பிந்நாளில் இந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றது. சேஷயா சாஸ்திரி இந்தப் பள்ளியில் 1848 வரை படித்தார். பின்னர் வசதியின்மையால் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். அப்போது அந்தப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர் ஈ.பி.பவல் என்பார் இவரிடம் இவர் திறமையைக் கண்டு அன்பு செலுத்தத் தொடங்கினார். பள்ளியில் பயின்ற காலத்தில் இவருடன் படித்தவர்கள் ராமய்யங்கார், டி.மாதவ ராவ் ஆகியோர். 1848ஆம் வருஷம் இவர் பச்சையப்பன் பள்ளியில் சேர்ந்து அரசாங்க உதவி தொகை மூலம் படித்தார்.

இதற்கிடையே சேஷையா சாஸ்திரியை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்த கோபாலய்யர் 1847இல் காலமானார். அதே ஆண்டில் இவர் கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த பெண்ணான சுந்தரி என்பாரைத் திருமணம் செய்து கொண்டு கிரஹஸ்தனாக ஆனார். தன்னுடைய நெருங்கிய நண்பரான ராமய்யங்காருடன் சேர்ந்து இவர் மேடைப் பேச்சையும், நாடக நடிப்பிலும் பழகத் தொடங்கினார். 1848 மே மாதம் இவர் பட்டப்படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1848 செப்டம்பரிலேயே இவருக்கு அரசாங்கத்தின் ரெவின்யூ இலாகாவில் குமாஸ்தா வேலை கிடைத்தது.

தான் செய்யும் தொழிலில் அக்கறையும், திறமையும் கொண்டவராதலால் இவருக்கு விரைவில் பதவி உயர்வுகள் கிடைத்தன. 1851இல் இவர் மசூலிப்பட்டினம் தாசில்தார் பதவிக்கு வந்தார் 1853இல் சிரஸ்ததார் எனும் பதவியிலும் அதே இடத்தில் தலைமைப் பதவியும் இவருக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் டெபுடி கலெக்டராகவும் இவர் 1858 முதல் 1865 வரையிலான காலகட்டத்தில் பணியாற்றினார். 1866இல் இவர் தஞ்சாவூர் முனிசிபாலிடிக்குத் துணைத் தலவராக ஆனார். இப்படி மாநிலத்தில் பல உயர் பதவிகளை வகித்த பின்னர் தன்னுடைய பள்ளிக்கால நண்பர் டி.மாதவ ராவ் வகித்த திருவாங்கூர் திவான் பதவியை 1872இல் இவர் பெற்றார்.

திருவாங்கூர் சமஸ்தானம் அரசியல் குழப்பங்களால் திணறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் அங்கு திவானாகப் போய் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் நண்பரும், இவருக்கு முன்பாக அங்கு திவானாகப் பணியாற்றியவருமான டி.மாதவ ராவ் திருவாங்கூர் மன்னரின் ஆணையை மீறி நடந்து கொண்டார் என்பதற்காகப் பதவியை விட்டு நீக்கப்பட்டார். அதே இடத்துக்குப் பணியாற்றச் சென்ற சேஷையா சாஸ்திரியும் மாதவ ராவைப் போலவே சுயேச்சையாகவும், தவறுகளுக்கு உடன்படாதவராகவும் நேர்மையாகவே நடந்து கொள்ளத் தொடங்கினார். இதன் காரணமாக திருவாங்கூர் மன்னருடன் இவருக்கு அடிக்கடி உரசல் ஏற்படத் தொடங்கியது. இப்படி இவ்விருவருக்குள்ளும் உள்ளடிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் கொச்சி அரசர் கேரள வர்மா இவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் ஆயில்யம் மகாராஜா குறித்து சில எச்சரிக்கைகளைத் தெரிவித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அந்தக் கடிதம் திருவாங்கூர் மகாராஜாவின் கைகளுக்கே போய்ச் சேர்ந்து விட்டது.

1877ஆம் வருஷம் ஆகஸ்டில் சேஷையா சாஸ்திரி தனது திவான் பதவியை ராஜிநாமா செய்தார். பதவி விலகிய அவர், நேராக திருச்சிக்கு வந்து சேர்ந்தார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு கவுரவமான பதவியும் கிடைத்தது. 1878இல் இவர் சென்னை சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு அங்கு 1878 ஆகஸ்ட் வரை பணியாற்றிக் கொண்டிருந்த சமயம், இவரை புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு திவானாக நியமித்து அனுப்பினர்.

இவர் 1878இல் புதுக்கோட்டைக்குத் திவானாகப் பதவியேற்க சென்ற சமயம் அங்கு ராமச்சந்திர தொண்டைமான் என்பார் மன்னராக இருந்தார்.  இவர் பதவி ஏற்றுக் கொண்ட சமயம் சமஸ்தானம் வறட்சியின் பிடியில் இருந்தது. மன்னர் ராமச்சந்திர தொண்டைமானைச் சுற்றி சரியான ஆட்கள் இல்லாமல் போனதால் அவரும் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தார். இதனால் அரசர் கடன் தொல்லையால் அவதிப் பட்டார். சமஸ்தானத்தின் நிதி நிலைமையும் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று விட்டது. அந்த சமயம் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்த டி.மாதவ ராவ் புதுக்கோட்டை வர நேர்ந்தது. அவர் வந்து புதுக்கோட்டையின் நிலைமையை ஆராய்ந்த போது, சமஸ்தானம் மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார். இந்த நிலைமையை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் தன்னுடன் படித்த சேஷையா சாஸ்திரியால் தான் உதவ முடியும் என்று சென்னை மாகாண அரசாங்கத்திடம் சிபாரிசு செய்தார். அதே நேரத்தில் சிரம தசையில் இருந்த ராமச்சந்திர தொண்டைமானிடமும், சேஷையா சாஸ்திரி போன்றதொரு திறமைசாலி இப்போது இந்த சமஸ்தானத்துக்குத் தேவை என்பதையும் உணர்த்தினார்.

சேஷையா சாஸ்திரிக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அவரும் புதிய பணியை ஏற்றுக் கொண்டு புதுக்கோட்டைக்கு வர சம்மதித்தார்.  முதலில் இவருக்கு அப்போதிருந்த அரசுப் பணியான “சர்க்கேல்” எனும் பதவி தரப்பட்டது. 1878 முதல் 1886 வரை அவர் இந்தப் பதவியில் அமர்ந்தார். இந்த சர்க்கேல் என்பது பின்னர் “திவான்” என்று மாற்றப்பட்டது, அதன் பின் “திவான் ரெஜண்ட்” எனவும் மாறியது.

புதுக்கோட்டையில் இவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். முதலாவதாக புதுக்கோட்டை நகரத்தை மறுசீரமைப்பு செய்யும் பணியை மேற்கொண்டார். நவீன நகரமயமாக்கல் அடிப்படையில் நகருக்குப் புதுப்பொலிவு கிடைக்கச் செய்தார். இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகரமைப்பு தான் இன்றும் கூட அந்த நகருக்கு அழகையும், பெருமையையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. புதுக்கோட்டைக்கு அழகு சேர்க்கும் பப்ளிக் ஆபீசஸ் கட்டடங்கள் எனப்படும் சிவப்பு நிற கட்டடங்கள், பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ளது. அதை அமைத்தவர் சேஷையா சாஸ்திரிகள் தான். புதுக்கோட்டை நகருக்கு அழகு சேர்க்கவும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவுமாக அமைக்கப்பட்ட புதுக்குளம் எனும் பெருமைக்குரிய ஏரி இவருடைய உருவாக்கம் தான். இவருடைய ஆலோசனையின் பேரில் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பல ஆலயங்களைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்வித்தார். மன்னர் ராமச்சந்திர தொண்டைமானின் மனைவி தஞ்சாவூரில் வாழ்ந்தவர். அவருடைய ஆலோசனையின் பேரில் மன்னர் தன் பெயருக்கு முன்பாக “பிரஹதாம்பாள் தாஸ்” எனும் அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார். இதற்கு திவான் சேஷையா சாஸ்திரியின் ஆசியும் கிடைத்தது.

சேஷையா சாஸ்திரி பதவி ஏற்றுக்கொண்ட சமயம் சமஸ்தானம் வறட்சியின் பிடியில் இருந்தமையால் முதலில் வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். ஊருக்கு நடுவில் அமைந்த பல்லவன் குளத்தைத் தூர்வாறி சுத்தம் செய்து நீர் நிரப்ப ஏற்பாடு செய்தார். பெரியம்மைக்கு எதிரான அம்மை ஊசி போடப்பட்டு பெரியம்மை தாக்காமல் இருக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார். நிலவரி வசூலை சீர்படுத்தி, ஒழுங்கான முறையில் வரி வசூலுக்கு ஏற்பாடுகள் செய்து சமஸ்தானத்தின் வருமானம் அதிகரிக்க வழி செய்தார். வழக்குகளை விரைந்து முடிக்கவும், மக்களின் சட்டப்பிரச்சனைகளை கண்டறிந்து ஒழுங்கு படுத்தவும் முதன்மை நீதிமன்றத்தை நிறுவினார். சிறைக் கைதிகளை ஆடுமாடுகளைப் போல் அடைத்து வைக்காமல் அவர்களுக்குச் சிறையில் பல கைத்தொழில்களுக்கு ஏற்பாடு செய்து அவர்களது சக்தியைப் பயன்படுத்தத் தொடங்கினார். 1883இல் பெண் கல்விக்காக ஒரு பெண்கள் பள்ளி தொடங்கப் பட்டு பெண்களுக்குக் கல்விக் கண்ணைத் திறக்க ஏற்பாடு செய்தார். இஸ்லாமியர்கள் கல்விக்காக ஒரு அரபிக் கல்லூரியும் தொடங்கப்பட்டது. 1884 அஞ்சல் துறைக்கு தபால், தந்தி அலுவலகம் தொடங்கப்பட்டது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை மார்க்கமாக ஒரு ரயில்வே லைன் அமைக்க சர்வே எடுக்கப்பட்டது. இதன் விளைவாக 1928இல் தான் இந்த ரயில்வே பாதை நிறைவு செய்யப்பட்டது. ஆக புதிய புதுக்கோட்டை, புதுப் பொலிவுடன் இருக்க வழிவகை செய்தவர் சேஷையா சாஸ்திரி என்றால் மிகையல்ல.

1886ஆம் வருஷம் மன்னர் ராமச்சந்திர தொண்டைமான் காலமானார். அவருக்குப் பிறகு சிறுவனாக இருந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அரசராக ஆனார். அந்த சமயத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை சிறுவனாக இருந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் சார்பில், அவர் மேஜராக ஆகும் வரையில் திவானே ரெஜண்டாக இருந்து ஆட்சியைக் கவனித்துக் கொண்டார். 1894இல் இவர் திவான் பதவியைக் கைவிட்டு சாதாரண பிரஜையாக ஆனார்.

1902ஆம் ஆண்டில் இவர் பிரிட்டிஷ் அரசால் விருது அளித்து கவுரவிக்கப் பட்டார். 1903ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் நாள் புகழ்மிக்க வாழ்க்கையை நடத்தி புதுக்கோட்டை திவானாகச் செயற்கரிய சாதனைகளை நிகழ்த்தி விட்டு இவ்வுலக வாழ்வை நீத்து அமரர் ஆனார்.

No comments: