பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, December 13, 2016

புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு. பகுதி 2

ரகுநாதத் தொண்டைமான் புதுக்கோட்டை மன்னராக ஆன சமயம் தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்தார்கள். தஞ்சையை சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகிய நான்கு அரசர்கள் மட்டுமே சுமார் 130 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். புதுக்கோட்டையை ஆண்ட ரகுநாத தொண்டைமான் மதுரையில் ஆட்சி புரிந்து வந்த நாயக்க மன்னர்களுக்கு ஆதரவான நிலையை எடுத்ததோடு, அவர்களுக்கும் தஞ்சையை ஆண்ட நாயக்கர்களுக்குமிடையே நடந்த போர்களில் மதுரையின் பக்கம் சேர்ந்து கொண்டு போராடினார்கள். அப்படி நடந்த போரில் இவர்கள் திருக்காட்டுப்பள்ளிப் பகுதியை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து பிடித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக மதுரை தஞ்சை நாயக்கர்களுக்கிடையே நடந்த யுத்தம் தஞ்சை நாயக்கர்களுக்கும் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கும் இடையே யுத்தமாக மாறியது. இந்த யுத்தத்தில் தொண்டைமான் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் பிடித்துக் கொண்டார்கள்.

ரகுநாத தொண்டைமானை அடுத்து ஆட்சிக்கு வந்தவர் ராஜா விஜயரகுநாத ராய தொண்டைமான். இவர் மைசூரை ஆண்டு கொண்டிருந்த ஹைதர் அலிக்கு போரில் உதவி புரிந்தார். புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்தனர். சில காலம் கழிந்தபின் பிரிட்டிஷாரின் எதிர்களாகவே இருந்து வந்த ஹைதர் அலியின் படைகள் புதுக்கோட்டை மீது படையெடுத்து உட்புக முயன்றது. இந்த படையெடுப்பில் புதுக்கோட்டை படைகள் ஹைதர் அலியுடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்துத் திரும்பி ஓட வைத்து விட்டது. புதுக்கோட்டை தொண்டைமானின் படைகள் கீழாநிலை, அறந்தாங்கி ஆகிய பகுதிகளைப் பிடித்துக் கொண்டது. ஹைதரின் புதல்வன் திப்பு சுல்தான் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தார். அந்த போர்களில் புதுக்கோட்டை படைகள் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக திப்பு சுல்தானை எதிர்த்துப் போராடினார்கள். இதுபோன்ற உதவிகளால் பிரிட்டிஷார் புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தொடங்கினார்கள். புதுக்கோட்டை தொண்டைமான்கள் இப்படி சுதேச மன்னர்களான ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு எதிராக பிரிட்டிஷ் பக்கம் சேர்ந்தது ஒரு வழியில் பார்த்தால் நியாயமான, தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கைதான் என்றாலும், மற்றொரு புறம் மைசூரில் ஆண்டுவந்த இவ்விருவரும் சுதேச சமஸ்தானாதிபதிகளுக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர் என்பது தெரிகிறது.
   
                                           
தென் இந்தியாவில் பிரிட்டிஷார் ஒரு புறமும், பிரெஞ்சுக்காரர்கள் மறுபுறமும் இருந்து கொண்டு இந்திய பகுதிகளை வேட்டையாட முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்து வந்தார்கள்; ஆனால் மைசூரில் ஆட்சி புரிந்த ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் பிரெஞ்சுக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களை இந்த மண்ணில் காலூன்ற முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் புதுக்கோட்டை தொண்டைமான்கள் அருகிலிருந்த தஞ்சாவூர், திருவாங்கூர் ஆகிய சமஸ்தானங்களைப் போல பிரிட்டிஷ் ஆதரவு நிலையையே எடுத்தனர்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1686இல் முதன் முதலாக கிழவன் சேதுபதி காலத்தில் ஆளத்தொடங்கிய முதல் தொண்டைமான் அரசனான ரகுநாத தொண்டைமான் காலம் தொடங்கி, கடைசி ஒன்பதாவது தொண்டைமானான இராஜகோபால தொண்டைமான் தன் சமஸ்தானத்தை சுதந்திர இந்திய மைய அரசிடம் ஒப்படைத்த 1948 மார்ச் 4ஆம் நாள் வரை பிரிட்டிஷ் விசுவாசிகளாகவே இருந்து வந்திருக்கின்றனர். எட்டாவது தொண்டைமான் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணை மணந்து கொண்டு இவர்களுக்குப் பிறந்த மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் எனும் சிறுவனுடன் சமஸ்தானத்துக்கு வந்து அந்த சிறுவனுக்கு இளவரசு பட்டம் சூட்ட நினைத்த போது சமஸ்தானம் அதற்கு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானும் மோலி எனும் அவர் மனைவியும் மகன் சிட்னி தொண்டைமானுடன் இங்கிலாந்து சென்று மன்னரை சந்தித்த பின்னரும், பிரிட்டிஷ் அரசு இவர்களது திருமணத்தை ஏற்கவில்லை. அதனால் அவர் பதவி நீங்கி பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று விட்டார். அப்போது அடுத்த ராஜாவாக ராஜகோபால தொண்டைமானைத் தேர்ந்தெடுக்க பிரிட்டிஷாரே முழு முயற்சி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போது ராஜகோபால தொண்டைமானுக்கு வயது ஆறு.
                
                             இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டிவிழா நினைவு வளைவு 
1947இல் இந்தியா பிரிட்டிஷ் அடிமைத் தளையிலிருந்து விடுதலையாகி சுதந்திர நாடாக ஆனபின்பு 1948இல் ராஜகோபால தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இந்திய மைய அரசுடன் இணைத்து விட்ட பின்பு, புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக சிலகாலம் விளங்கியது. 1686இல் ஆரம்பமான புதுக்கோட்டை தொண்டைமான் ஆட்சி 1948 மார்ச் 4ஆம் நாளுடன் ஒரு முடிவுக்கு வந்தது. ஆக மொத்தம் ஒன்பது தொண்டைமான்கள் அரசு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் முறையே

1.    ரகுநாத ராய தொண்டைமான் 1686 முதல் 1730
2.    விஜய ரகுநாத ராய தொண்டைமான் 1730 முதல் 1769
3.    ராய ரகுநாத தொண்டைமான் 1769 முதல் டிசம்பர் 1789
4.    விஜய ரகுநாத தொண்டைமான் டிசம்பர் 1789 பிப்.1, 1807
5.    விஜய ரகுநாத ராய தொண்டைமான், பிப்1, 1807 முதல் ஜுன் 1825
6.    ரகுநாத தொண்டைமான், ஜூன் 1825 முதல் ஜூலை 13, 1839
7.    ராமச்சந்திர தொண்டைமான், ஜூலை 13, 1839 முதல் ஏப்ரல் 15, 1886
8.    மார்த்தாண்டை பைரவ தொண்டைமான், ஏப்.15 1886 முதல் மே 25, 1928
9.    ராஜகோபால தொண்டைமான் அக்.28, 1928 முதல் மார்ச் 4, 1948                           
                           
புதுக்கோட்டை தனி சுயேச்சை சமஸ்தானம்.
            பாரத நாட்டினுள் பிரிட்டிஷார் புகுவதற்கு முன்பு இங்கு ஏராளமான சுயேச்சை சமஸ்தானங்கள் இருந்தன. இங்கிருந்த ராஜ்யங்கள் சிறிதும் பெரிதுமாக பல ராஜ்யங்கள் இருந்தனவற்றுள் சிலர் தங்களுக்கென்று தனியாக உலோகத்தால் ஆன நாணயங்களை அச்சிடமும், தபால் அஞ்சல் முத்திரைகளை அச்சிடுவதும் சுயேச்சையாக செய்து வந்திருக்கின்றனர். அப்படித் தங்களுக்கென நாணயங்கள், தபால் முத்திரைகள் ஆகியனவற்றை வெளியிடும் உரிமை பெற்றிருந்தனர் இந்த புதுக்கோட்டை சமஸ்தானாதிபதிகள். புதுக்கோட்டை சமஸ்தானம் சுமார் 2000 சதுர மைல்கள் பரப்பு கொண்டது. சென்னை மாகாணத்தின் மையப் பகுதியில் அமைந்திருந்தது இந்த சமஸ்தானம். புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் புகழ் பெற்றது “அம்மன் காசு” என்பது.             
                              
அம்மன் காசு என்றால் என்ன?
புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்களுக்குக் குலதெய்வமாக விளங்குபவர் பிரஹதாம்பாள் அம்பாள் என்கிற பெரிய நாச்சியார். புதுக்கோட்டை திருச்சி சாலையில் புதுக்கோட்டையை யொட்டி வெகு அருகில் அமைந்துள்ள இடம் திருக்கோகர்ணம் என்பது. இங்குள்ள பல்லவர் காலத்து ஆலயமான கோகர்ணீஸ்வரர் ஆலயத்தில் கோயில் கொண்டுள்ள அம்மனே பிரஹதாம்பாள் அம்பாள். இவர் பெயரால்தான் அந்த அம்மன் காசு வெளியிடப் பட்டது. இந்த நாணயத்தின் ஒரு பக்கம் அம்மனின் உருவமும், மறுபக்கம் தெலுங்கில் ஸ்ரீவிஜய எனும் எழுத்தும் பொறிக்கப்பட்டிருக்கும்.
                
புதுக்கோட்டை மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கீழ் இருந்த சமஸ்தானம். தெற்கே இருந்த அனைத்து நாயக்க மன்னர்களுமே விஜயநகர சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது துவங்கப்பட்டவைகள் தான். இவர்கள் ஆட்சிபுரிந்த இடத்தில் அவர்களுக்குக் கீழ்பட்டதாக இருந்ததால் இவர்கள் நாணயத்தில் தெலுங்கு எழுத்து காணப்படுகிறது. முதல் அம்மன் காசு 1738ஆம் ஆண்டில்தான் அச்சிடப்பட்டது. தொடக்க காலத்தில் இந்தக் காசு புதுக்கோட்டையிலேயே வடிவமைக்கப்பட்டு கைத்தொழிலாக உருவாக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற காசுகள் உருவாக்க லண்டனிலிருந்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு புதுக்கோட்டையில் நிறுவப்பட்டது.

அம்மன் காசு உருவில் சிறிதாக இருந்த போதும் அதன் மதிப்பு அதிகமாக இருந்தது. ஒரு அம்மன் காசைக் கொண்டு உணவு வகைகள், சிற்றுண்டிகள், பழங்கள் வாங்கி வந்தார்கள். புதுக்கோட்டை அம்மன் காசு என்றால் அந்த காலத்தில் மதிப்பு அதிகம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் காலணாவுக்கு பன்னிரெண்டு அம்மன் காசுகள். நான்கு காலணா ஒரு அணா. அப்போது 16 அணா என்பது ஒரு ரூபாய். இந்தக் காசுகள் நல்ல செம்பினால் ஆனது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய அரசுடன் இணைந்த போது ஏராளமான அம்மன் காசுகள் கொட்டிக் கிடந்தன. அவைகளைப் பொற்கொல்லர்களும், செப்பு உலை வைத்திருப்போரும் வாங்கிச் சென்றனர். அவர்கள் அதை உருக்கி செப்புப் பாத்திரங்கள் செய்தனர்.

புதுக்கோட்டை மன்னர்கள் பிரஹதாம்பாள் அம்மன் உருவத்தைத் தங்கள் காசுகளில் பதிப்பதன் காரணம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டாமா? பிரஹதாம்பாள் அம்பாளைத்தான் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் தங்கள் வம்சத்தைக் காக்கும் தெய்வமாக வணங்கி வந்தார்கள். மன்னர் குடும்பத்தார் அனைவரும் இந்த ஆலயத்தில் தான் இறைவனை வணங்கி வந்தார்கள். அரசர் சம்பந்தப்பட்ட முடிசூட்டுதல் முதல் அனைத்து விழாக்களும் பிரஹதாம்பாள் சந்நிதியில் தான் நடத்துவார்கள்.
                               
     ஒரு முறை புதுக்கோட்டையில் மன்னருக்கு எதிராக ஒரு கலகம் ஏற்பட்டதாம். ஆளும் உரிமை பெற்ற தொண்டைமான் மன்னருக்கு எதிராக அவருடைய உறவினர்களும், குடும்பத்துக்கு வேண்டியவர்களுமே இந்தக் கலகத்தில் ஈடுபட்டவர்கள். அவர்களுக்குத் தாங்களே மன்னராக ஆகிவிட வேண்டுமென்கிற பேராசை, கலகம் செய்யத் தூண்டியிருக்கிறது. இந்த சிக்கலை விடுவிக்க அப்போதைய சமஸ்தானத்து திவானாக இருந்த சேஷையா சாஸ்திரி என்பார் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.

அந்தத் திட்டத்தின்படி மன்னர் ஒரு பிரகடனம் வெளியிட்டார். அதன்படி இனி புதுக்கோட்டை சமஸ்தானம் பிரஹதாம்பாள் அம்பாளின் சொத்து என்று அறிவித்தார். தொண்டைமான் மன்னர்கள் பிரஹதாம்பாள் அன்னையின் பிரதிநிதிகளாக இருந்து இந்த சமஸ்தானத்தை நிர்வகிப்பார்கள் என்கிறது அந்தப் பிரகடனம். இந்த சமஸ்தானத்துக்கு எதிராக யார் செயல்பட்டாலும், அது அன்னை பிரஹதாம்பாள் அம்பாளுக்கு எதிராகச் செய்யப்படும் பாவம். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மன்னர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்பாக ஒரு அடைமொழியைச் சேர்த்துக் கொண்டார்கள். அது “ஸ்ரீ பிரஹதாம்பாள் அம்பாள் தாசன்” என்பது.                            
                      
எங்குமில்லாத வழக்கமாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசர்கள் நவராத்திரி காலங்களில் தங்கள் அரண்மனையில் நடைபெறும் கொலுவுக்கு வரும் பெண்களுக்கு ஒரு பை நிறைய அரிசி, இதர பரிசுப் பொருட்கள் இவைகளுடன் ஒரு அம்மன் காசும் கொடுக்கத் தொடங்கினர். இந்த வழக்கம் தொண்டைமான் ஆட்சி புதுக்கோட்டையில் 1948 மார்ச் வரை தொடர்ந்த காலம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்தது.

இராமநாதபுரம் மறவர் சமஸ்தானம் ரகுனாத கிழவன் சேதுபதி (1673 – 1708) என்பவரால் ஆளப்பட்டு வந்தது. அப்போது அவர் தொண்டைமானின் சகோதரியான காதலி நாச்சியார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்குப் பிறகு கிழவன் சேதுபதி தன் மைத்துனரான திருமெய்யத்துக்குப் பொறுப்பாளராக இருந்த ரகுநாத தொண்டைமானை புதுக்கோட்டைக்கு சுதந்திரமான மன்னராக நியமனம் செய்தார் என்பதை முன்பே பார்த்தோம். தொண்டைமானுடைய சேவையைப் பாராட்டி அவர் புதுக்கோட்டை மன்னராக முடிசூட்டிக் கொள்ள, சேதுபதி மன்னர் அனுமதி அளித்தார்.

அதுமுதலாக புதுக்கோட்டை ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு சிற்றரசாகவே விளங்கி வந்தது. ஆனால் புதுக்கோட்டை சமஸ்தானம், தங்களுக்கென்று வெளியுறவு போன்ற நிர்வாக விஷயங்களை அமைத்துக் கொண்டது.
                         
                      

1 comment:

Unknown said...

புதுக்கோட்டை வரலாறு பல விதமாக அவரவர் விருப்பமான செய்திகளை உண்மைகளை மறைத்து பதிவு இடுகின்றனர்.திருமயம் கோட்டை மறவன் கோட்டை என்பதையும், மறவர்களின் வரலாறு மறைக்கப்பட்டும் பதிவுகள் இட்டு என்ன பலன்களை பெற முயற்சிக்கிறனர் என தெரியவில்லை.