பாரதி பயிலகம் வலைப்பூ

Tuesday, October 13, 2015

தமிழ் நகைச்சுவை நடிகை “ஆச்சி” மனோரமா.

                              
                                        
தமிழ் திரையுலகில் ஒரு நடிகையின் மரணம் பொதுமக்களை இதற்கு முன்பு இந்த அளவுக்கு சோகத்தில் தள்ளியிருக்கிறதா என்பது தெரியவில்லை. நடிகையர் திலகம் சாவித்ரி திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்பட்டவர். அவர் இறந்த போதும் ரசிகர்கள் பெரிதும் வருந்தினர் என்பது உண்மைதான் என்றாலும், நகைச்சுவை நடிகை ஆச்சி மனோரமாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அல்ல அல்ல மக்கட் சமுத்திரம் போல இருந்ததா என்பதை பார்த்தவர்கள்தான் தீர்மானிக்க முடியும். அந்த அளவுக்கு மக்கள் மனங்களை ஆச்சி மனோரமா கொள்ளை கொள்ள என்ன காரணம், அவர் யார், எங்கிருந்து வந்தார், எப்படி மக்களைக் கவர்ந்தார் என்பதைச் சிறிது பார்க்கலாமே.

இன்று அனைவரும் ‘ஆச்சி’ என்றழைக்கும் மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா என்பதுதான். இவர் நாடகங்களில் நடிக்கும்போது இவரது பெயரை அதே நாடகத்தின் கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கத் தொடங்கினர். இவர் சுமார் 1500 திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றார். பல்லாயிரம் நாடகங்களிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது, பிலிம் பேஃர் பத்திரிகை விருது ஆகியவற்றை பெற்றவர் ஆச்சி மனோரமா.  இத்தனை பெருமைக்குரிய இவர் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே இவரையும் இவர் தாயாரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். இவர்கள் காரைக்குடிக்கு அருகிலுள்ள செட்டிநாடு பள்ளத்தூரில் சென்று வசித்தனர். தாய் வீட்டு வேலைகள் செய்து மகளை வளர்த்தார்.

இவரது 12ஆம் வயதிலிருந்து ஒரு நாடகக் குழுவில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். அப்போதுதான் இவரது பெயரை மனோரமா என்று மாற்றினர் நாடக இயக்குனர்கள். நாடகங்களில் நடிப்பதோடு பாடுவதையும் தொழிலாகக் கொண்டார். இப்படியே வளர்ந்து வந்த இவரை பருவமடைந்த பின் ஒரு நாடகக்குழு நிர்வாகியான ராமநாதன் என்பார் 1964இல் இவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்; அவர்தான் பூபதி.

1966இல் இவ்விருவரும் பிரிந்தனர். இவர் வைரம் நாடக சபையில் சிறு பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த நிலையில் புதுக்கோட்டையில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் அறிமுகம் கிடைத்தது.  அதைத் தொடர்ந்து அவருடைய எஸ்.எஸ்.ஆர்.நாடக மன்றத்தில் நடிக்கத் தொடங்கினார். அவர் மேடையேற்றிய நாடகங்களில் “மணிமகுடம்”, “தென்பாண்டிவீரன்”, “புதுவெள்ளம்” போன்றவை குறிப்பிடத் தக்கவை. அதன் பின் இவர் திரைத் துறையில் நுழைந்து நடிக்கத் தொடங்கினார்.

1958இல் இவர் “மாலையிட்ட மங்கை” எனும் தமிழ்ப் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தை கவிஞர் கண்ணதாசனும் “பாம்பே மியூச்சுவல்” கம்பெனி அம்பி எனும் அவர் நண்பரும் தயாரித்தனர். இவர் கதாநாயகியாக நடித்த முதல் படம் கொஞ்சும் குமரி, இது 1963இல் வெளிவந்தது. தொடர்ந்து இவர் பிரபலமான நகைச்சுவை நடிகர் நாகேஷுடன் காமெடி பாத்திரங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தங்கவேலு, சோ, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, சுருளிராஜன் போன்ற பிரபலமான நகைச்சுவை நடிகர்களுடனும் நடித்துப் புகழ் பெற்றார். நடிப்பு தவிர இவர் திரைப்படங்களில் பாடவும் செய்தார். அப்படி இவர் பாடிய முதல் பாடல் “மகளே உன் சமர்த்து” படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வெங்கடேஷ் இசையில் பாடியது. இவர் பாடி பட்டி தொட்டிகளெல்லாம் பரவிய பாடல் சோவுடன் நடித்த படத்தில் இவர் பாடிய “வா வாத்தியாரே வூட்டாண்ட, நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்” எனும் சென்னைத் தமிழ்ப் பாடல்.

இவர் எம்.ஜி.ஆருடனும், சிவாஜி கணேசன் அவர்களுடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். அப்போது திரைப்படத் துறையில் சிறந்து விளங்கிய சிவாஜி, எம்.ஜி.ஆர். பத்மினி, பாலையா போன்றவர்களோடு இவரும் புகழ் பெற்று விளங்கினார். ஏ.பி.நாகராஜன் அவர் எடுத்த படமான கொத்தமங்கலம் சுப்புவின் “தில்லானா மோகனாம்பாள்” எனும் அதிஅற்புதமான கதைப் படத்தில் ஜில்ஜில் ரமாமணி எனும் வேடத்தில் நடித்ததை ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள். இவர் நடிக்கும் வேடத்துக்குத் தக்கவாறு அந்தந்த பிராந்திய மொழி நடையைப் பேசி அசத்துவது இவர் வழக்கம். அப்படி அவர் பேசிய செட்டிநாட்டுப் பேச்சை தில்லானாவிலும், கொங்கு மொழியை சின்ன கவுண்டரிலும் கேட்டு மகிழாதார் யார்? இவர் ஒரு பிறவி நடிகை என்பதை உலகுக்குக் காட்டியவர் மனோரமா.

மிக நீண்ட இலக்கியத் தரமான வசனங்களை மூச்சு விடாமல் பல மணித்துளிகள் பேசி அவையொரை அசர வைத்தவர் மனோரமா. அவரது இறுதிக் காலத்தில்கூட அதுபோன்ற பெரிய வசனங்களைப் பேசிக் காண்பித்து வியப்பில் ஆழ்த்தியவர் இவர்.

மிகத் திறமை வாய்ந்த இந்த அரிய வகை நடிகை காலமானது தமிழ்த் திரைப்படத் துறைக்கு மட்டுமல்ல, நகைச்சுவைப் பிரியர்களுக்கும் பேரிழப்பு ஆகும். இவரது சில வசனங்களை மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் சொல்லி வரும் வழக்கமும் உருவானது இவரது திறமையினால்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. வாழ்க ஆச்சி மனோரமா புகழ்!!




1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கலையுலகிற்குப் பேரிழப்பு என்று ஒரே சொல்லில் சொல்லி இவரது மறைவைப் பகிர்ந்துவிடமுடியாது. இவர் என்றும் வாழ்ந்த, வாழும் வரலாறு. தங்களின் பதிவிற்கு நன்றி.